-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
62. பக்தனைக் காப்பாற்றும் பக்தித் தாய்
.
ஆனந்தாச்’ருபி– ராதனோதி புலகம் நைர்மல்யதச்’- சாதனம்
வாசா ச’ங்கமுகே ஸ்திதைச்’ச ஜடராபூர்த்திம் சரித்ராம்ருதை:/
ருத்ராக்ஷைர்- பஸிதேன தேவ வபுஷோ ரக்ஷாம் பவத்பாவனா பர்யங்கே
வினிவேச்’ய பக்திஜனனி பக்தார்பகம் ரக்ஷதி//
.
பக்தியாம்தாய் களிநீரால் குளிப்பித்துப் புல்லரித்து
களங்கமில் மனத்தாடை அணிவித்து சொற்சங்கால்
நின்சரித அமுதூட்டி நீற்றாலே காப்பிட்டு
நின்தியானத் தொட்டிலிட்டு காத்திடுவாள் பக்தனையே!
.
ஒரு குழந்தையை அதனது தாய், வாஞ்சையுடன் கண்ணும் கருத்துமாய் காப்பாற்றுகிறாள். பக்தனுக்கு இறைவன் தகப்பனாய் இருக்க, அவர் மீதான பக்தியே, தாய்போல் பக்தனைக் காப்பாற்றுகிறதாம். எப்படி?
.பக்தியாகிய தாய், ஆனந்தக் கண்ணீர் என்ற களிப்பான நீரால், பக்தனாகிய குழந்தையைக் குளிக்க வைக்கிறாள். மயிர்க்கால் தோறும் புல்லரிப்பு என்னும் பொடியைத் தடவுகிறாள். பக்தித்தாய், களங்கமில்லாத மனம் என்ற ஆடையை பக்தனாகிய குழந்தைக்கு அணிவிக்கிறாள். குழந்தைக்கு ஒரு தாய், சங்கால் பாலூட்டுவதைப்போல, மகாதேவனைத் துதிக்கும் பாடல்கள், உரைகள் ஆகிய சொற்களைக் கொண்ட சங்காலே, அவனது திவ்ய சரித்திரமாகிய அமுதை வயிறார ஊட்டுகிறாள் பக்தித் தாய். திருநீற்றாலே உடலெங்கும் காப்புக் கட்டுகிறாள். பின்னர், சிவபெருமான் குறித்த தியானம் என்கிற தொட்டிலில் பக்தனை இட்டுத் தாலாட்டி, எப்போதும் காப்பாற்றுகிறாள் பக்தித்தாய்.
சிவபெருமான் மீதான இந்த பக்தியின் பெருமையைத்தான், “காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி, ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது, வேதம் நான்கினு மெய்ப்பொரு ளாவது, நாதன் நாமம் நமசிவாயவே” என்று திருஞான சம்பந்தர் தமது தேவாரப் பாடலில் எடுத்துரைத்துள்ளார்.
$$$