பாரதியின் தனிப்பாடல்- 14

-மகாகவி பாரதி

இன்பமே இவ்வுலகம் என்பது போகியின் கட்சி. சிவநாட்டமே உலகம் என்பது யோகியின் கட்சி. இருவரும் வாதிடுகிறார்கள். சதுரங்கக் களத்தின் இருபுறமும் நின்று போகியாகவும் யோகியாகவும் மகாகவி பாரதியே கவித்துவமாக விளையாடுகிறார். 

இடையே நுழைகிறார் நடுவரான ஞானி. அதுவும் மகாகவி பாரதியே. இவ்வுலக இன்பங்கள் மாயையல்ல; அவையும் சிவனின் லீலைகள் என்கிறார். பிறகு மூவரும் இணைந்து இதனைப் பிரகடனம் செய்கிறார்கள். 

இந்த உலகம் மாயை என்பதை எக்காலத்திலும் பாரதி ஏற்கவில்லை. இந்தத் தத்துவத்தால்தான் நமது நாடு அடிமைப்பட்டது என்ற எண்ணம் அவருக்குண்டு. எனவேதான், வாய்ப்பு நேர்கையில் எல்லாம் மாயைச் சிந்தனையாளரை எள்ளியும், உலக இன்பங்கள் அனைத்தையும்  வேண்டியும் கவிதை புனைகிறார் மகாகவி. 

14. மது

போகி

பச்சை முந்திரித் தேம்பழங் கொன்று
பாட்டுப் பாடிநற் சாறு பிழிந்தே
இச்சை தீர மதுவடித் துண்போம்;
இஃது தீதென் றிடையர்கள் சொல்லும்
கொச்சைப் பேச்சிற்கை கொட்டி நகைப்போம்;
கொஞ்சு மாதரும் கூட்டுணும் கள்ளும்
இச்சகத்தினில் இன்பங்க ளன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறொன்று முண்டோ? 1

யோகி

பச்சை முந்திரி யன்ன துலகம்;
பாட்டுப் பாடல் சிவக்களி எய்தல்;
இச்சை தீர உலகினைக் கொல்வோம்;
இனிய சாறு சிவமதை உண்போம்;
கொச்சை மக்களுக் கிஃதெளி தாமோ?
கொஞ்சு மாதொரு குண்டலி சக்தி
இச்சகத்தில் இவையின்ப மன்றோ?
இவற்றின் நல்லின்பம் வேறுளதாமோ? 2

போகி

வெற்றி கொள்ளும் படைகள் நடத்தி
வேந்தர் தம்முட் பெரும்புகழ் எய்தி
ஒற்றை வெள்ளைக் கவிதை உயர்த்தே
உலகம் அஞ்சிப் பணிந்திட வாழ்வோம்;
சுற்று தேங்கமழ் மென்மலர் மாலை
தோளின் மீதுறப் பெண்கள் குலாவச்
சற்றும் நெஞ்சம் கவலுத லின்றித்
தரணி மீதில் மதுவுண்டு வாழ்வோம். 3

யோகி

வெற்றி ஐந்து புலன்மிசைக் கொள்வோம்;
வீழ்ந்து தாளிடை வையகம் போற்றும்;
ஒற்றை வெள்ளைக் கவிதைமெய்ஞ் ஞானம்
உண்மை வேந்தர் சிவநிலை கண்டார்;
மற்றவர் தம்முட் சீர்பெற வாழ்வோம்;
வண்ம லர்நறு மாலை தெளிவாம்!
சுற்றி மார்பில் அருள்மது வுண்டே
தோகை சக்தியொ டின்புற்று வாழ்வோம். 4

போகி

நல்ல கீதத் தொழிலுணர் பாணர்
நடனம் வல்ல நகைமுக மாதர்
அல்லல் போக இருடன் கூடி
ஆடி யாடிக் களித்தின்பங் கொள்வோம்;
சொல்ல நாவு கனியுத டாநற்
சுதியிலொத்துத் துணையொடும் பாடி
புல்லும் மார்பினோ டாடிக் குதிக்கும்
போகம் போலொரு போகமிங் குண்டோ? 5

யோகி

நல்ல கீதம், சிவத்தனி நாதம்,
நடன ஞானியர் சிற்கபை யாட்டம்;
அல்லல் போக இவருடன் சேர்ந்தே
ஆடி யாடிப் பெருங்களி கொள்வோம்;
சொல்ல நாவில் இனிக்கு தடா! வான்
சுழலும் அண்டத் திரளின் சுதியில்
செல்லும் பண்ணொடு சிற்சபை யாடும்
செல்வம் போலொரு செல்வமிங் குண்டோ? 6

ஞானி

மாத ரோடு மயங்கிக் களித்தும்
மதுர நல்லிசை பாடிக் குதித்தும்
காதல் செய்தும் பெறும்பல இன்பம்,
கள்ளில் இன்பம் கலைகளில் இன்பம்,
பூத லத்தினை ஆள்வதில் இன்பம்
பொய்மை யல்ல இவ்வின்பங்க ளெல்லாம்
யாதுஞ் சக்தி இயல்பெனக் கண்டோம்,
இனைய துய்ப்பம் இதயம் மகிழ்ந்தே. 7

இன்பந் துன்பம் அனைத்தும் கலந்தே
இச்ச கத்தின் இயல்வலி யாகி
முன்பு பின்பல தாகியெந் நாளும்
மூண்டு செல்லும் பராசக்தி யோட
அன்பில் ஒன்றிப் பெருஞ்சிவ யோகத்
தறிவுதன்னில் ஒருப்பட்டு நிற்பார்,
துன்பு நேரினும் இன்பெனக் கொள்வார்
துய்ப்பர் இன்பம் மிகச்சுவை கொண்டே. 8

இச்சகத்தோர் பொருளையுந் தீரர்
இல்லை யென்று வருந்துவதில்லை;
நச்சி நச்சி உளத்தொண்டு கொண்டு
நானிலத்தின்பம் நாடுவதில்லை;
பிச்சை கேட்பது மில்லை; இன்பத்தில்
பித்துக் கொண்டு மயங்குவ தில்லை;
துச்ச மென்று சுகங்களைக் கொள்ளச்
சொல்லு மூடர்சொற் கேட்பதும் இல்லை. 9

தீது நேர்ந்திடின் அஞ்சுவ தில்லை.
தேறு நெஞ்சினொ டேசிவங் கண்டோர்;
மாதர் இன்பம் முதலிய வெல்லாம்
வைய கத்துச் சிவன் வைத்த வென்றே
ஆத ரித்தவை முற்றிலும் கொள்வார்;
அங்கும் இங்குமொன் றாமெனத் தேர்வார்;
யாது மெங்கள் சிவன்திருக் கேளி;
இன்பம் யாவும் அவனுடை இன்பம். 10

வேத மந்திர நாதம் ஒருபால்
வேயி னின்குழல் மெல்லொலி ஓர்பால்,
காதல் மாதரொ டாடல் ஒருபால்,
களவெம் போரிடை வென்றிடல் ஓர்பால்,
போத நல்வெறி துய்த்திடல் ஓர்பால்,
பொலியுங் கள்வெறி துய்த்தல்மற் றோர்பால்;
ஏதெ லாம்நமக் கின்புற நிற்கும்
எங்கள் தாய்அருட் பாலது வன்றே. 11

சங்கீர்த்தனம்
மூவரும் சேர்ந்து பாடுதல்

மதுநமக்கு, மதுநமக்கு, மதுநமக்கு விண்ணெலாம்,
மதுரமிக்க ஹரிநமக்கு, மதுவெனக் கதித்தலால்;
மதுநமக்கு மதியுநாளும், மதுநமக்கு வானமீன்,
மதுநமக்கு, மண்ணுநீரும் மதுநமக்கு, மலையெலாம்,
மதுநமக்கொர் தோல்விவெற்றி, மதுநமக்கு வினையெலாம்,

மதுநமக்கு, மாதரின்பம், மதுநமக்கு மதுவகை;
மதுநமக்கு, மதுநமக்கு, மதுமனத்தொடாவியும்
மதுரமிக்க சிவநமக்கு மதுவெனக் கதித்தலால். 12

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s