-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
61. பக்தியின் இலக்கணம்
.
அங்கோலம் நிஜபீஜஸந்ததி- ரயஸ்காந்தோபலம் ஸூசிகா
ஸாத்வீ நைஜவிபும் லதா க்ஷிதிருஹம் ஸிந்துஸ்ஸரித்வல்லபம்/
ப்ராப்னோதீஹ யதா ததா பசு’பதே: பாதாரவிந்த– த்வயம்
சேதோவ்ருத்தி- ருபேத்ய திஷ்டதி ஸதா ஸா பக்திரித்யுச்யதே//
.
அழிஞ்சலை விதைகளும் காந்தத்தை ஊசியும்
அகத்தோனை நாயகியும் மரத்தினைக் கொடியும்
ஆழ்கடலை நதியும் அடைந்திடுமே நாட்டத்தால்
அதுபோல்நின் மலரடிகள் மனம்நிலைத்தல் பக்தியாமே!
.
இறைவனது அருளாகிய கற்பக விருட்சத்தின் பலன் கிடைக்க, பக்தியே வித்து. பக்தியை விதைத்துத்தான் முக்தியை அறுவடை செய்ய முடியும். முக்தி என்பது இறப்புக்குப் பின் கிடைக்கும் நிலை மாத்திரம் அல்ல. உயிரோடு இருக்கும்போதே அனைத்துவித துன்பங்களில் இருந்தும் விடுதலை பெறுவதும் முக்திதான். இம்மைக்கும் மறுமைக்கும் சேர்த்துத்தான் சிவபெருமான் முக்தி தருகிறான். அப்படிப்பட்ட முக்தியைத் தந்தருள்கின்ற பக்திக்கு ஒரு இலக்கணம் உண்டு. அது எப்படி இருக்க வேண்டும்?
அங்கோலம் எனப்படும் ஏறழிஞ்சல் மரத்தினுடைய விதைகள், எவ்வளவு தொலைவு போனாலும், தாய் மரம் இருக்கும் இடத்தைத் தேடி வந்துவிடுமாம். காந்தக்கல்லை நோக்கி இரும்பு ஊசி தானாகவே ஈர்க்கப்படுகிறது. தன்னுடைய மனத்தினில் வரித்துக்கொண்ட நாயகனை, நாயகி தேடி இணைகிறாள். மரத்தினைக் கொடி, விருப்பத்துடன் தழுவிக் கொள்கிறது. எங்கு தோன்றி, எங்கெங்கோ ஓடினாலும் ஆழ்கடலை நதி தேடி அடைகிறது. அதுபோன்ற ஆவலுடன், ஈர்ப்புடன், ஆர்வத்துடன், காதலுடன் இறைவனாம் சிவபெருமானின் மலர்ப்பாதங்களை மனத்தினுள் நிலைக்கச் செய்வதே, சதா நினைத்துக்கொண்டிருப்பதே பக்தியாகும் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
$$$