பாரதியின் தனிப்பாடல்- 13

-மகாகவி பாரதி

மகாகவி பாரதி கவிதையின் ஊற்றாய்ப் பிறந்தவர். சென்ற கவிதையில் மனைவியாக கவிதையைக் கொண்டாடிய பாரதி, இக்கவிதையில் ‘மணிப்பெயர்க் காதலி’ என்று கொண்டாடுகிறார். ஆனால், இந்த மாய உலகில் வாழ்வதற்கான போராட்டத்தில் கவிதையாம் காதலியை மறந்தாக வேண்டி வருகிறது. 

வாழ்க்கைப்படகு தத்தளிக்கும் போது, சாபத்தால் பன்றியாக மாறிய முனிவரின் நிலை ஏற்பட்டு விடுகிறது என்று தன்னிரக்கத்துடன் முனிவரின் கதையை இக்கவிதையில் கூறுகிறார். 

அத்தகைய “அருந்தவப்பன்றி”யாக வாழ்ந்த சில நாட்களை இக்கவிதையின் வேதனையுடன் ஒப்பிடுகிறார் மகாகவி.

13. கவிதைக் காதலி

வாராய்! கவிதையாம் மணிப்பெயர்க் காதலி!
பன்னாள் பன்மதி ஆண்டுபல கழிந்தன.
நின்னருள் வதனம் நான் நேருறக் கண்டே
அந்தநாள் நீயெனை அடிமையாக் கொள, யாம்
மானிடர் குழாத்தின் மறைவுறத் தனியிருந்து 5
எண்ணிலா இன்பத்து இருங்கடல் திளைத்தோம்;
கலந்துயாம் பொழிலிடைக் களித்தவந் நாட்களிற்
பூம்பொழிற் குயில்களின் இன்குரல் போன்ற
தீங்குரலு டைத்தோர் புள்ளினைத் தெரிந்திலேன்;
மலரினத் துன்றன் வாள்விழி யொப்ப 10
நிலவிய தொன்றினை நேர்ந்திலேன்; குளிர்புனற்
சுனைகளில் உன்மணிச் சொற்கள் போல் தண்ணிய
நீருடைத் தறிகிறேன்; நின்னொடு தமியனாய்
நீயே உயிரெனத் தெய்வமும் நீயென
நின்னையே பேணி நெடுநாள் போக்கினேன். 15
வானகத் தமுதம் மடுத்திடும் போழ்து
மற்றத னிடையோர் வஞ்சகத் தொடுமுள்
வீழ்ந்திடைத் தொண்டையில் வேதனை செய்தன.
நின்னொடு களித்து நினைவிழந் திருந்த
எனைத்துயர்ப் படுத்தவந் தெய்திய துலகிற் 20
கொடியன யாவுளும் கொடியதாம் மிடிமை
அடிநா முள்ளினை அயல்சிறி தேகிக்
களைந்து பின்வந்து காண்பொழுது, ஐயகோ!”
மறைந்தது தெய்வ மருந்துடைப் பொற்குடம்
மிடிமைநோய் தீர்ப்பான் வீணர்தம் முலகப் 25
புன்தொழில் ஒன்று போற்றுதும் என்பாள்
தென்திசைக் கண்ணொரு சிற்றூர்க் கிறைவனாம்
திருந்திய ஒருவனைத் துணையெனப் புகுந்து, அவன்
பணிசெய இசைந்தேன், பதகிநீ! என்னைப்
பிரிந்துமற் றகன்றனை பேசொணா நின்னருள். 30
இன்பமத் தனையும் இழந்துநான் உழன்றேன்,
சின்னாள் கழிந்தபின் – யாதெனச் செப்புகேன்!
நின்னொடு வாழ்ந்த நினைப்புமே தேய்ந்தது.
கதையிலோர் முனிவன் கடியதாஞ் சாப
விளைவினால் பன்றியா வீழ்ந்திடு முன்னர்த் 35
தன்மக னிடை “என் தனயநீ யான்புலைப்
பன்றியாம் போது பார்த்துநில் லாதே!
விரைவிலோர் வாள்கொடு வெறுப்புடை யவ்வுடல
துணித்தெனைக் கொன்று தொலைத்தலுன் கடனாம்.
பாவமிங் கில்லையென் பணிப்பிஃ தாகலின்!” 40
தாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.
முனிவனும் பன் றியா முடிந்தபின்,மைந்தன்
முன்னவன் கூறிய மொழியினை நினைந்தும்,
இரும்புகழ் முனிவனுக்கு இழியதா மிவ்வுடல்
அமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும், 45
வாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்,
ஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி
இனையது கூறும். “ஏடா! நிற்க!
நிற்க! நிற்க! முன்னர்யாம் நினைந்தவாறு
அத்துணைத் துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை 50
காற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்
இனையபல் லின்பம் இதன் கணே யுளவாம்;
ஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்
பின்னெனைக் கோறலாம்” பீழையோ டிவ்வுரை
செவியுறீஈ முடிசாய்த் திளையவன் சென்றனன். 55
திங்கள்பல போனபின் முனிமகன் சென்ற
தாதைப் பன்றியோர் தடத்திடைப் பெடையொடும்
போத்தினம் பலவொடும் அன்பினிற் பொருத்தி
ஆடல்கண் டயிர்த்தனன், ஆற்றொணா தருகுசென்று
“எந்தாய்!எந்தாய்!யாதரோ மற்றிது! 60
வேதநூ லறிந்த மேதகு முனிவரர்
போற்றிட வாழ்ந்தநின் புகழ்க்கிது சாலுமோ?”
எனப்பல கூறி இரங்கினன்; பின்னர்
வாள்கொடு பன்றியை மாய்த்திடல் விழைந்தான்.
ஆயிடை முனிவன் அகம்பதைக் துரைக்கும் 65
“செல்லடா! செல்க தீக்குணத் திழிஞ!
எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்;
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ்
வாளினின் நெஞ்சை வகுத்து நீ மடிக
என்றிது கூறி இருந்தவப் பன்றிதன் 70
இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.
இன்னது கண்ட இளையவன் கருதும்:
“ஆவா! மானிடர் அருமையின் வீழ்ந்து
புன்னிலை யெய்திய போழ்ததில் நெடுங்கால்
தெரு மரு கின்றிலர் சிலபகல் கழிந்தபின் 75
புதியதா நீசப் பொய்மைகொள் வாழ்வில்
விருப்புடை யவராய் வேறுதா மென்றும்
அறிந்திலரேபோன் றதிற்களிக் கின்றார்.
என்சொல்கேன் மாயையின் எண்ணரும் வஞ்சம்”.
திமிங்கில வுடலும் சிறியபுன் மதியும் 80
ஓரேழ் பெண்டிரும் உடையதோர் வேந்தன்
தன்பணிக் கிசைந்தென் தருக்கெலாம் அழிந்து
வாழ்ந்தனன் கதையின் முனிபோல் வாழ்க்கை! 83

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s