-எஸ்.எஸ்.மகாதேவன்

11. சமர்ப்பணமோ சமர்ப்பணம்!
“சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய குடும்பம் – எண்ணிக்கையில்தான் – சென்னை பார்த்தசாரதி கோயிலைப் பார்க்கச் சென்றது. அந்தக் கூட்டத்தில் ஒரு குழந்தை. சற்று புஷ்டியான குழந்தை. அதைச் சுமந்து கொண்டு கோயிலைச் சுற்றிப் பார்ப்பது சிரமமாகத்தான் இருந்திருக்கும். அந்தக் கூட்டத்தில் சற்று நோஞ்சானாக இருந்த அத்தைக்கும் கோயிலைச் சுற்றி வருவது சிரமமாக இருந்தது போலும். தான் அந்தக் குழந்தையை வைத்துக்கொண்டு பிரகாரத்தில் ஓரிடத்தில் காத்துக் கொண்டிருப்பதாக அவள் சொன்ன யோசனையை மற்றவர்கள் ஏற்றுக்கொண்டு, குழந்தையை ஒரு பெரிய வெள்ளைத் துவாலையில் கிடத்திவிட்டு அத்தையையும் உட்கார வைத்துவிட்டுப் போய் விட்டார்கள். அத்தை, குழந்தையின் அருகில் உட்கார்ந்திருந்தவள், ஏதோ யோசனையில் ஆழ்ந்து விட்டாள். பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்த பக்தர்கள் நோஞ்சானாக ஒரு பெண்ணையும் புஷ்டியான ஒரு குழந்தையையும் பார்த்துவிட்டு, ஏதோ நேர்த்திக்கடனைக் கழிக்கத்தான் குழந்தையை இப்படி போட்டுவிட்டு உட்கார்ந்திருக்கிறாள் என்று நினைத்து ஒவ்வொருவரும் அந்தத் துவாலையில் காசைப் போட்டுவிட்டுப் போக ஆரம்பித்தார்கள். ஒருவர் போட, அதைப் பார்த்துவிட்டு இன்னொருவர் போட, கொஞ்ச நேரத்தில் நிறைய காசு குழந்தையைச் சுற்றி சேர்ந்துவிட்டது. இந்த உலகச் சிந்தனையே இல்லாமல் உட்கார்ந்திருந்த அத்தைக்கு இது எதுவும் உறைக்கவில்லை. சற்று நேரம் கழித்து திரும்பிய குடும்பத்தினர் இதைக் கண்டதும் ஆச்சரியப்பட்டுப் போய், காசை கோயில் உண்டியலில் போட்டு விட்டதாக செய்தி. அந்தக் குழந்தை நான் தான். இப்போது இந்த அகராதி நிறைவு பெற்றிருக்கும் இந்தத் தருணத்தில் திரும்பிப் பார்க்கும் போது, அந்தக் குழந்தையின் இடத்தில் இந்த அகராதியைப் பார்க்கிறேன். இந்த அகராதியை யாரோ ஒருவரின் நேர்த்திக்கடனாக நினைத்து கேட்கப்படாமல் மனமுவந்து மகிழ்ச்சி நிறைந்த பங்களிப்பை செய்தவர்கள் அநேகர். இவர்களில் ஒருவர் இல்லாதிருந்தாலும் இந்த அகராதி முழுமை அடைந்திருக்காது. இவர்கள் ஒவ்வொருவரையும் நான் கை கூப்பி வணங்குகிறேன்”.
‘நான்’ என்று தன்னைக் குறிப்பிட்டுக் கொள்பவர் காலஞ்சென்ற பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன். அகராதி என்று அவர் குறிப்பிடுவது அவரது வாழ்நாள் சாதனையான ’தற்காலத் தமிழ் அகராதி’யின் முதல் பதிப்பு. அதில் ’நன்றி’ என்று தலைப்பிட்டு அவர் எழுதியிருந்த கட்டுரையின் தொடக்கம்தான் இங்கே நீங்கள் வாசித்த சுவாரஸ்யமான சம்பவம்.
முப்பது ஆண்டுகளுக்கு முன் அவரது நிறுவனம் நடத்திய மூன்று நாள் பயிலரங்கில் அவருடன் சற்றே பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ஒரு கல்லூரி தமிழ் விரிவுரையாளர், ஒரு பள்ளித் தமிழாசிரியர், ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர் (அதாவது இந்தியா டுடே தமிழ் இதழில் பணிபுரிந்து கொண்டிருந்த நான்) என்று ஒரு சிலர் அந்த பயிலரங்கில் இருந்தோம். மதிய உணவு உண்டு. ஒருநாள் சாப்பிட்டுவிட்டு அகராதிக் குழுவின் முதன்மை ஆசிரியரான டாக்டர் பா. ரா.சுப்பிரமணியன் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். “’தற்காலத் தமிழ் அகராதி’யில் மத வழக்கு என்ற தலைப்பில் கிறிஸ்தவ வழக்கு, முஸ்லிம் வழக்கு என்று சொற்களை குறிப்பிடுகிறீர்களே, அந்த வரிசையில் ஹிந்து மத வழக்கில் உள்ள சொற்கள் என தனி தலைப்பு இல்லையே, ஏன்?” என்று கேட்டேன். பரிசம், உபநயனம் என்று இந்து மதத்தில் சில சமூகத்தினரிடையே புழங்கும் சொற்களை சமூக வழக்கு என்ற தலைப்பில் தந்திருப்பதை சுட்டிக்காட்டியதுடன், “பொதுவாக எல்லாச் சொற்களுமே ஹிந்து சூழலில் தானே புழங்குகின்றன?” என்று எதிர்க்கேள்வி கேட்டார். அதாவது ஹிந்து என்ற சொல்லை மதமாக அல்லாமல், சமுதாயமாக, கலாச்சாரமாகப் பார்க்கிறார் என்று புரிந்து கொண்டேன். (க்ரியா ராமகிருஷ்ணன் 2020 ல் கொரோனாவுக்கு பலியான செய்தி சென்ற வாரம்தான் என் கண்ணில் பட்டது. நோய்ப் படுக்கையில் இருந்தபடியே தற்காலத் தமிழ் அகராதியின் மூன்றாவது பதிப்பு வேலைகளை அவர் கவனித்தார் என்றும் கேள்விப்பட்டேன்).
சுவாரஸ்யமாகத் தொடங்கிய க்ரியா ராமகிருஷ்ணனின் ’நன்றி’ கட்டுரை போல பத்து ஆண்டுகளுக்கு முன் தினமலரில் ஒரு செய்திக் கட்டுரை, எந்தெந்த நூலாசிரியர்கள் என்னென்ன விதத்தில் யார் யாருக்கு தங்களது நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார்கள் என்று பட்டியலிட்டது. அதிலிருந்து ஒரு சில:
# ‘மனப்பத்தயம்’ என்ற புத்தகத்தை எழுதிய யுகபாரதி அதை, “படித்துவிட்டுத் தருகிறேன் என இரவல் பெற்று, தொலைந்துவிட்டதாய் தர மறுக்கும் புத்தகப் பிரியர்களுக்கு” சமர்ப்பணம் செய்துள்ளார்.
# ’குடகு’ என்ற புத்தகத்தை எழுதிய ஏ.கே. செட்டியார், அதை, “கருணை பொழியும் காவிரி அன்னையின் திருவடிகளுக்கு” காணிக்கையாக்கியுள்ளார்.
# ‘காவிரி மண்ணின் நேற்றைய மனிதர்கள்’ என்ற நூல் எழுதிய கூத்தங்குடி அழகு. ராமானுஜன், “உலக மனிதர்களின் பசித்துயர் களைய வாய்க்கால் நீரை, வயலில் நிரப்பிப் பயிர்கள் வளர்க்கும் மடை வயல்களுக்கு” அதை சமர்ப்பணம் செய்துள்ளார்.
# ‘கதைகள் தீர்ந்தபோது அம்மா சொன்ன கதைகள்’ என்ற புத்தகத்தை எழுதிய செந்தில்பாலா “இன்றைக்கும் ஆல இலை பொறுக்கி வரப் போயிருக்கும் பாட்டி பட்டம்மாளுக்கும், உலர்த்தி படிய வைத்து தைத்து, ’கோட்டை’யாக்கி விற்கும் தாத்தா தனபாலுக்கும்” தனது புத்தகத்தைச் சமர்ப்பித்துள்ளார்.
# வளரிளம் பருவ பிள்ளைகளுக்காக ஆங்கில நாவல்கள் எழுதித் தள்ளும் சோமன் சைனானி என்ற இந்திய-அமெரிக்க நாவலாசிரியர், The School For Good And Evil என்ற தலைப்பிலான தன் நாவல் வரிசையில் A Crystal Of Time என்ற நாவலை For Uma And Kaveen என்ற இருவருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். இருவரும் நாவலில் வரும் பாத்திரங்கள். உமாவாவது அரசியாக வரும் கதாநாயகி. கவின் வில்லனின் மெய்க்காப்பாளன்; அவ்வளவுதான். கவினுக்கு சமர்ப்பணம் செய்தது ஏன்? சோமனைத்தான் கேட்க வேண்டும்!
“மொழிபெயர்ப்பில் வழிகாட்டிய எஸ்.எஸ்.மகாதேவனுக்கு” (அதாவது எனக்கு!) தன் மொழிபெயர்ப்பு சிறுகதைகள் தொகுப்பு நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார் மூத்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான டி.ஐ.அரவிந்தன். காரணம்? சோமனைக் கேட்பது போல அரவிந்தனையும்தான் கேட்போமே!
கடந்த எழுபது ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் லட்சோப லட்சம் ஸ்வயம்சேவகர்கள் தேசியப் பெருமித உணர்வுடன் பாடும் நூற்றுக்கணக்கான தமிழ்ப் பாடல்களின் தொகுப்பிற்குப் பெயர் ’பாமாலை’; இந்தத் தொகுப்பு பத்துப் பதிப்புகளாவது கண்டிருக்கும். எப்போதும் அதன் சமர்ப்பணப் பக்கத்தில் காணப்படும் வாசகம் ஏறக்குறைய இதுதான்: “பெயர், புகழ் விரும்பாத தேசிய உள்ளம் கொண்ட கவிஞர்கள் பாரத மாதாவின் திருவடிகளுக்கு பக்தியோடு சூட்டிய பாமாலை”
’பாஞ்சாலி சபத’த்திற்கு பாரதியார் எழுதிய சமர்ப்பணத்தின் பின்வரும் பகுதி, தமிழின் சிரஞ்சீவித் தன்மையில் அவருக்கு இருந்த நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது: “தமிழ் மொழிக்கு அழியாத உயிரும் ஒளியும் இயலுமாறு இனிப் பிறந்து காவியங்கள் செய்யப் போகிற வரகவிகளுக்கு”.
இந்தக் கட்டுரையை இனி நான் தைரியமாக சேக்கிழானுக்கு சமர்ப்பணம் செய்யலாம்; ஒருவழியாக கட்டுரைக்குள் பாரதியைக் கொண்டு வந்துவிட்டேனே!
$$$