-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
58. கோடிக் கதிரவன்
.
ஏகோ வாரிஜபாந்தவ: க்ஷிதிநபோ வ்யாப்தம் தமோ மண்டலம்
பித்வா லோசன-கோசரோபி பவதி த்வம் கோடிஸூர்ய ப்ரப
வேத்ய:கிந்ந பவஸ்யஹோ தனதரம் கீத்ருக்பவேன்- மத்தமஸ்
தத்ஸர்வம் வ்யபனீய மே பசு’பதே ஸாக்ஷாத் ப்ரஸன்னோ பவ//
.
ஓர்கதிரோன் பூமியொடு வான்சூழும் காரிருளைக்
கூர்பிளந்து கட்புலமே ஆகின்றான் நீர்கோடி
ஏனையே தெரிகிலையே என்னிருள் கனந்தானோ?
தானாகத் தோன்றிடுவீர் அஃதனைத்தைக் களைந்தெறிந்தே!
.
இறைவனுடைய திருக்காட்சி தெரிந்தும்கூட, கண்ணிருந்தும் குருடர்களாய் சிலர் வீழ்ந்து கிடப்போம். மாயை இருளால், அவன் தெரிந்தும், தெரியாமல் இருக்கிறான். ஆகையால், காட்சியைக் கொடுக்கின்ற அவனே, அதற்குரிய கருத்தையும் கொடுக்க வேண்டும் என்று நம் போன்றோருக்காக சிவபெருமானிடம் இறைஞ்சுகிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
வானில் தோன்றுகின்ற ஒரு கதிரவன், பூமிக்கு வெளிச்சம் தருவதோடு மட்டுமின்றி, வானைச் சூழ்ந்திருக்கின்ற கருமையைான இருளையும் பிளந்துகொண்டு, அவனது கதிர்களால் நமது கண்களுக்குத் தெரிகின்றான். ஆனால், எல்லாம் வல்ல இறையான சிவபரம்பொருளோ ஆயிரம் கோடி சூரியனுக்கு நிகரான பிரகாசம் உடையவராக இருந்தபோதிலும், நமது கண்களுக்கு ஏன் தெரிவதில்லை? அதற்கு, அஞ்ஞானிகளாகிய நமது அறியாமை இருள், ஒளி புக முடியாத அளவுக்கு மிகவும் கனமாக இருப்பதுதான் காரணமா? அப்படி கனமான இருள் சூழ்ந்திருந்தாலும், அவற்றையெல்லாம் கிழித்து, களைந்தெறிந்து, உயிர்களுக்கெல்லாம் தலைவராகிய சிவபெருமானே, உனது விருப்பத்தினாலேயே எங்கள் முன் தோன்றிடுவாய் என்று வேண்டுகிறார்.
$$$