-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
52. மேகமும் மேலோனும் (சிலேடை)
.
காருண்யாம்ருத வர்ஷிணம் கனவிபத் க்ரீஷ்மச்சிதா கர்மடம்
வித்யாஸஸ்ய பலோதயாய ஸுமனஸ்ஸம்ஸேவ்ய- மிச்சாக்ருதிம்/
ந்ருத்யத்பக்த மயூர மத்ரிநிலயம் சஞ்சஜ்ஜடா மண்டலம்
ச’ம்போ வாஞ்சதி நீலகந்தர ஸதா த்வாம் மே மனச்’சாதக://
.
கருணைமழை பொழிந்து கடுங்கோடை போக்கியே
வித்தைப்பயிர் விளைய நல்லுழவர் விருப்பமே
விருப்புருவே பக்தராம் மயிலாட மலைதங்கியே
கதிர்சடை கருங்கண்டமே மனச்சாதகம் நாடிடுதே!
.
இந்த ஸ்லோகத்தில் மேகத்தோடு சிவபெருமானை இணைத்து சிலேடை புனைந்துள்ளார் ஸ்ரீ ஆதிசங்கரர்.
.முதலில் மேகம்: மேகம்தான் கருணை கொண்டு அமுதம் போன்ற மழையைப் பொழிகிறது. அதனால் கிடைக்கும் நீரால், கோடைக்காலத்தின் கடுமையான துன்பம் போக்கப்படுகிறது. வித்து, விதைகளில் இருந்து பயிர் விளைவதற்கு மேகம் பொழியும் மழையைத்தான் நல்ல மனம் கொண்ட உழவர்கள் விரும்பி நிற்கிறார்கள். வானில் திரிகின்ற மேகம், அதன் விருப்பம்போல பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. மேகத்தின் மீது பக்தி (மிகுந்த கொண்ட) மயில்கள் அதனைப் பார்த்தவுடன் ஆடுகின்றன. மேகம் மலைகளின் சிகரங்களைத் தழுவி அங்கே தங்கியிருக்கிறது. மேகத்தில் இருந்து மின்னல் கீற்றுகள் அதன் சடைகளைப் போல் தோன்றுகின்றன. கருப்பு நிறம் கொண்ட பகுதியாக (கண்டமாக) கார்மேகம் காட்சியளிக்கிறது. அந்த மேகத்தை சாதகப் பறவையான மனம் நாடி நிற்கிறது.
இப்போது இதே ஸ்லோகம், சிவபெருமானுக்குரிய துதியாக எப்படி அமைந்துள்ளது என்பதைக் காண்போம்:
.கருணைமழையாகிற அமுதத்தைப் பொழிபவர் சிவபெருமான். அவரது அருளால் கடும் கோடை போன்ற நமது கொடிய துன்பங்கள் போக்கப்படுகின்றன. வித்தை (கல்வியும் பல்வேறு தொழில் திறனும்) பயிராக வளர்ந்து நல்ல பலன்களைத் தர, நல் மனங்கொண்ட பக்தர்களால் சிவபெருமான் விரும்பி துதிக்கப்படுகிறார். பக்தர்கள் விரும்புகின்ற வடிவங்களை எடுத்து காட்சி தருபவர் அவர். பல்வேறு செயல்களுக்காக பல்வேறு உருவங்களையும் தாங்கி நிற்கிறார். அவரைக் கண்டதும் பக்தர்கள் ஆனந்த நடனம் ஆடுகிறார்கள். மலைகளில் விரும்பி வசிக்கிறார் சிவபெருமான். அவரது சடைமுடி சூரியக்கதிர்கள்போல விரிந்திருக்கிறது. கரிய கழுத்தை (கண்டத்தை) உடைய நீலகண்டர் அவர். அப்பேர்ப்பட்ட சிவபெருமானை எனது மனதாகிய சாதகப் பறவை நாடி நிற்கிறது.
$$$