–திருநின்றவூர் ரவிகுமார்

10. பெருநாரை சகோதரி: பூர்ணிமா தேவி பர்மன்

அந்த இளம் தாய் ‘நிறுத்து, நிறுத்து, வெட்டாதே’ என்று கூவினாள். ஆனால் அவர்கள் நிறுத்தவில்லை. தொடர்ந்து ஓங்கி வளர்ந்த கடம்ப மரத்தை வெட்டிக்கொண்டே இருந்தனர். பொத்தென்று அவள் கண் முன்னே அந்த பெருநாரையின் கூடு விழுந்து அதிலிருந்து குஞ்சுகள் செத்தன. தொடர்ந்து வெட்ட மற்றொரு கூடு விழுந்து முட்டைகள் சிதறின.
அவளுக்கு இரட்டைப் பெண் குழந்தைகள். பிறந்து மூன்று மாதமேயான அவர்களை தன் பெற்றோரிடம் விட்டுவிட்டு முனைவர் பட்ட களஆய்வுக்கு வந்த இடத்தில் கண்முன்னே இளம் குஞ்சுகள் சிதறி சாவதைப் பார்த்தாள். முனைவர் பட்டம் பெறும் எண்ணத்தை ஒத்தி வைத்தாள். அழிந்து வரும் அரிய வகை பெருநாரை பறவை இனத்தைக் காக்க களப் பணியாளராக மாறினாள். அவள்தான் முனைவர் பூர்ணிமா தேவி பர்மன்.

அஸ்ஸாம் மாநிலத்தில் காமரூப் மாவட்டத்தில் பிரம்மபுத்திரா நதிக் கரையில் அவர் தன் பாட்டியுடன் வளர்ந்தார். அவரது பாட்டி பதுமி தேவி, பேத்திக்கு, நம்மூரில் குருவி, காக்கா, குயில் பற்றிய பாடல்களைப் போல, உள்ளூர்ப் பறவையான நாரை பற்றிய பாடல்களைப் பாட சொல்லித் தந்தார். விலங்கியலில் முதுகலைப் பட்டம் பெற்ற பின் தனக்கு அறிமுகமான பறவையான பெருநாரை பற்றி மேலும் தெரிந்துகொள்ள முனைவர் பட்டத்திற்கு அதையே ஆய்வு பொருளாகக் கொண்டார்.
பெரு நாரை என்ற பறவையினம் அருகி வரும் பறவை இனமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2005-இல், உலகில் மொத்தமே ஆயிரம் பறவைகள்தான் இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதில் சுமார் 700 பறவைகள் அஸ்ஸாம் மாநிலத்தில் காமரூப் மாவட்டத்தில் உள்ள பச்சாரியா, சிங்கிமாரி, தாதாரா ஆகிய கிராமங்களில் இருப்பதாகக் கண்டறியப்பட்டன. பிஹாரில் சில பகுதிகளிலும் அஸ்ஸாமிலும் கிழக்கு ஆசிய நாடான கம்போடியாவிலும் இந்தப் பறவை இனம் வசிக்கிறது.

சுமார் 60 அங்குலம் உயரமும் 54-55 அங்குலம் நீளமும் கொண்ட இந்த பறவை, சிறகுகள் விரிந்த நிலையில் 100 அங்குலம் இருக்கும். சிகப்பு நிறக் கழுத்தும் முடிகள் அற்ற சிவந்த தலையும் கொண்டது. நெஞ்சில் மஞ்சள் நிற பை ஒன்று தொங்கும். அது காற்றுப்பை. அது ராணுவ வீரன் போல மிடுக்குடன் நடப்பதால் இதை ‘சிப்பாய் நாரை’ என்றும் அழைப்பார்கள். காக்கை, கழுகுகளுடன் சேர்ந்தே காணப்படும். செத்த எருமையை முழுதாக ஒரே பறவை தின்றுவிடும்; எலி, பாம்புகளைத் தின்னும். பொதுவாக குப்பைமேடுகளில் பார்க்கலாம். மிக உயரத்தில் தான் கூடு கட்டும். செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை இதன் இனப்பெருக்கக் காலமாகும்.
மனித நடமாட்டம் உள்ள பகுதிகளிலேயே வசிக்கும். சதுப்பு நிலச் சேற்றிலும் குப்பையிலும் இருப்பதால் இதன் கால்கள் சேறு அப்பி இருக்கும். செத்த விலங்குகள், மனித கழிவுகளைச் சாப்பிடுவதால் உடலில் ஒருவித துர்நாற்றம் வீசும். பெரிய எலும்புகளைக் கூட இது கடித்து விழுங்கிவிடும் என்பதால் அதை எலும்புத் தின்னி – ஹார்ஜிலா – என்று மக்கள் அடையாளப்படுத்தினர். வீட்டைச்சுற்றி எச்சமிடும் என்பதாலும் அதன் நாற்றத்தாலும் அழுக்கினாலும் மக்களுக்கு இதை பொதுவாகப் பிடிக்காது. குறிப்பாக அஸ்ஸாமில் அதை கெட்ட சகுணமாகவே கருதினார்கள்.

பூர்ணிமா தேவி இந்தப் பறவையைப் பற்றியும் சூழலியலுக்கு அதன் பங்களிப்பைப் பற்றியும் மக்களிடையே எடுத்துச் சொன்னபோது, கேலி செய்யப்பட்டார்; அவமதிக்கப்பட்டார். மக்களின் பங்களிப்பு, குறிப்பாக பெண்களின் பங்களிப்பு, இல்லாமல் இந்த பெரு நாரை இனத்தைக் காப்பாற்ற முடியாது என்று அவருக்கு புரிந்தது.
அவர் பெண்களுக்கென பாரம்பரிய சமையல் போட்டி, நடனப் போட்டி, விளையாட்டுப் போட்டி ஆகியவற்றை நடத்தி அதன்மூலம் அவர்களை ஈர்த்தார். பின்பு அவர்களுக்கு தையல், எம்பிராய்டரி போன்ற தொழில் பயிற்சிகளை அளித்தார். அவர்களிடையே பெருநாரை இனம் எப்படி அழிந்து வரும் அரிய வகை இனம் என்பதையும், அது சூழலியலுக்கு எப்படி தேவைப்படுகிறது என்பதையும், அதைப் பாதுகாப்பது நமது கடமை என்பதையும் புரிய வைத்தார்.

பெருநாரையைக் காக்க பெண்கள் அணி திரண்டது. அதன் பெயர் ‘ஹார்ஜிலா ஆர்மி’. 2008-இல் அது தொடங்கப்பட்டது பத்தாயிரம் பெண்கள் இன்று அந்த அமைப்பின் மூலம் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமன்றி, பெருநாரைப் பாதுகாவலராகச் செயல்படுகின்றார்கள். கோயில் திருவிழாக்களில் இந்தப் பறவையைப் புகழ்ந்து பாடல்கள் பாடுகிறார்கள். இனப்பெருக்கக் காலத்தில் அதற்கென வளைகாப்புப் பாடல்கள் பாடப்படுகின்றன. படையல் சமர்ப்பிக்கப்படுகிறது. இதற்கெல்லாம் காரணமான பூர்ணிமாதேவி பர்மனை அவர்கள் ‘பெருநாரை சகோதரி’ என்று அன்புடன் அழைக்கிறார்கள். உலகில் அழிந்து வரும் அரிய வகை பறவை இனமான பெருநாரை இன்று செழித்து, பெருகி வருகிறது.
இன்று மக்கள் இந்தப் பறவையை வெறுப்பதில்லை. இதை தங்கள் சமூகத்தின் தெய்வங்களில் ஒன்றாகத் துதிக்கிறார்கள். பெருநாரையின் சிறகுகளை தங்கள் பாரம்பரிய ஆடையில் பொருத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்ட ஆடைகளுக்கு இப்போது அஸ்ஸாமில் மவுசு. தீநுண்மி பெரும் தொற்றுக் காலத்தில் அந்தப் பெண்கள் முகக் கவசம் தயாரித்து மாநிலம் முழுக்கவும் அனுப்பினார்கள். மக்கள் உயர்ந்த மரங்களை வெட்டிய காலம் போய் பறவையினப் பெருக்கத்திற்காக செயற்கையான உயர்ந்த மூங்கில் கோபுரங்களை இப்போது அமைக்கிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு வித்திட்ட பூர்ணிமா தேவி அஸ்ஸாம் மட்டுமன்றி மேற்கு வங்கம், பிகார் மாநிலங்களிலும் இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பல கீழ்த்திசை நாடுகளிலும் இதுபற்றி பயிற்சி அளிக்க அந்நாட்டு அரசுகள் அவரை அழைக்கின்றன. இயற்கையை பாதுகாப்பதற்கான சர்வதேச அமைப்பான IUCN (International Union for Conservation of Nature) அவருக்கு 2016-இல் விருது வழங்கி கௌரவித்தது. சினிமாவுக்கு ஆஸ்கர் விருது போல பச்சை ஆஸ்கர் எனப்படும் சூழலியலுக்கான விட்லே விருது இங்கிலாந்து இளவரசி ஆன் 2017-இல் இவருக்கு வழங்கினார். இந்திய அரசு மகளிருக்கான உயரிய விருதான நாரி சக்தி விருதை 2018-இல் இவருக்கு வழங்கியுள்ளது.
$$$