–பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
49. முக்திப்பழம் தரும் பக்திக்கொடி
.
ஆனந்தாம்ருத பூரிதா ஹரபதாம்போஜால வாலோத்யதா
ஸ்தைர்யோபக்ன-முபேத்ய பக்திலதிகா சா’கோபசா’கான்விதா/
உச்சைர்மானஸ காயமான படலீ மாக்ரம்ய நிஷ்கல்மஷா
நித்யாபீஷ்ட பலப்ரதாபவதுமே ஸத்கர்ம ஸம்வர்திதா//
.
களியமுத நீருற்றி சிவனடியில் முளைவிட்டு
திடச்சித்தக் கழிசுற்றி கிளைவிட்ட பேரன்பு
உயர்மனதாம் படலேறி உறுகலியாம் குறைநீங்கி
வளர்செயலால் மிகவோங்கி வீடுபேறாம் கனிதருமே.
.
தோட்டத்திலே பாத்தி கட்டி, அதற்குள் நீருற்றி, ஒரு கம்பை (கழியை) நட்டு கொடியை வளர்ப்பார்கள். அந்தக் கழிமீது கொடி படர்ந்து, மேலே பந்தல் மீதேறி வளர்ந்து, பூப்பூத்து, காய் காய்த்து, கனி தரும். அதுபோல சிவ பக்தியாகிய கொடி, முக்தியாகிய பழத்தை, பக்தனுக்குத் தருகின்றது என்பதை விளக்குகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
சிவபெருமானின் திருவடியாகிய பாத்தியிலே, அவர் குறித்த தியானமாகிய எப்போதும் மகிழ்ச்சி தருகின்ற நீர் ஊற்றப்படுகின்றது. அதனால் சிவனடியில் பக்தியாகிய கொடி முளைவிடுகிறது. திடச் சித்தம் (உறுதியான நம்பிக்கை) என்ற கழியினிலே அந்த பக்திக் கொடி பற்றிப் படர்கின்றது. பேரன்பாகிய கிளைகளும், துணைக்கிளைகளும் அந்தக் கொடியினிலே தோன்றி, உயர்ந்த பண்புகளுடைய மனதாகிய பந்தலைப் பற்றி மேலே உயர்ந்து வளர்கிறது அந்த பக்திக்கொடி.
.கொடியை அரிக்கின்ற பூச்சிகள் எவ்வாறு களையப்பட்டு கொடி காப்பாற்றப்படுகிறதோ, அதனைப்போல பக்தனைப் பாடாய்ப்படுத்தும் கலியாகிய (வினைப்பயனால் தோன்றிய பாவங்களாகிய) குறைகள் சிவனருளால் அகற்றப் படுகின்றன. அதனால் புண்ணியச் செயல்களால் பக்திக் கொடி மென்மேலும் நன்கு வளர்கிறது. இவ்வாறு வளர்ந்த பக்திக் கொடி, இறுதியில் வீடுபேறாகிய முக்தி என்னும் பழத்தையும் நல்குகிறது.
$$$