இந்தியாவில் விதவைகளின் நிலைமையும் காந்தி சொல்லும் உபாயமும்

-மகாகவி பாரதி

ஸ்ரீமான் மோஹனதாஸ் கரம்சந்திர காந்தி (மகாத்மா காந்தி)யால் நடத்தப்படும் ‘நவஜீவன்’ என்ற பத்தரிகையில் ஒருவர் பாரத தேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம் செய்திருக்கிறார்.

அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின் வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வயது      மணம்புரிந்த மாதர்    கைம்பெண்கள்
0-1                13,212                              1,014
1-2                17,753                                856
2-3                49,787                              1,807
3-4             1,34,105                              9,273
4-5             3,02,425                             17,703
5-10           22,19,778                            94,240
10-15       1,00,87,024                          2,23,320

இந்தக் கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகு முன்னரே விதவைகளாய் விட்ட மாதர்களின் தொகை 1,014! 15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின் தொகை 3 1/2 லக்ஷம்! இவர்களில் சற்றுக் குறைய 18000 பேர் ஐந்து வயதுக்குட்பட்டோர்!

இப்படிப்பட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டு அவற்றின் இறுதியில் மேற்படிக் கடிதம் எழுதியவர். ”இக்கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதைப் படிக்கும்போது எந்த மனிதனுடையமனமும் இளகிவிடும். (இந்நாட்டில்) விதவைகள் என்றபாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?” என்று சொல்லிவருத்தப்படுகிறார்.

இந்த வியாசத்தின் மீது மகாத்மா காந்தி பத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார். அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி ”மேலே காட்டிய தொகையைப் படிப்போர் அழுவார்கள் என்பது திண்ணம்” என்கிறார். அப்பால், இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும் உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறார். அவற்றின் சுருக்கம் யாதெனில், 1.பால்ய விவாகத்தை நிறுத்திவிட வேண்டுமென்பதும் 2. 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுடைய கைம்பெண்களும் புனர் விவாகம் செய்துகொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமே யாகும்.

ஆனால் இந்த உபாயங்கள் விருப்பமுடையோர் அநுசரிக்கலாமென்றும், தமக்கு இவற்றை அநுசரிப்பதில் விருப்பமில்லையென்றும், தம்முடைய குடும்பத்திலேயே பலவிதவைகள் இருக்கலாமென்றும், அவர்கள் புனர்விவாகத்தைப்பற்றி யோசிக்கவே மாட்டார்களென்றும், தாமும் அவர்கள் மறுமணம் செய்துகொள்ளும்படி கேட்க விரும்பவில்லை என்றும் ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார்.

”ஆண்மக்கள் புனர் விவாகம் செய்துகொள்ளுவதில்லை என்ற விரதம் பூணுதலே விதவைகளின் தொகையைக் குறைக்கும் அருமருந்தாகும்” என்று ஸ்ரீமான் காந்தி அபிப்பிராயப்படுகிறார். இந்த விநோதமான உபாயத்தை முதல் முறைவாசித்துப் பார்த்தபோது எனக்கு ஸ்ரீமான் காந்தியின் உட்கருத்து இன்னதென்று விளங்கவில்லை. அப்பால், இரண்டு நிமிஷம் யோசனை செய்து பார்த்த பிறகுதான், அவர் கருத்து இன்னதென்பது தெளிவுபடலாயிற்று. அதாவது, முதல் தாரத்தை சாககொடுத்தவன் பெரும்பாலும் கிழவனாகவே யிருப்பான். அவன் மறுபடி ஒரு சிறுபெண்ணை மணம் புரியுமிடத்தே அவன் விரைவில் இறந்துபோய் அப்பெண் விதவையாக மிஞ்சி நிற்க இடமுண்டாகிறது. ஆதலால் ஒரு முறை மனைவியை இழந்தோர் பிறகு மணம் செய்யாதிருப்பதே விதவைகளின் தொகையைக் குறைக்க வழியாகும் என்பது ஸ்ரீமான் காந்தியின் தீர்மானம்.

சபாஷ்! இது மிகவும் நேர்த்தியான உபாயம்தான். ஆனால் இதில் ஒரு பெரிய சங்கடம் இருக்கிறது. அதுயாதெனில், இந்த உபாயத்தின்படி ஆண்மக்கள் ஒருபோதும் நடக்கமாட்டார்கள். மேலும், பெரும்பாலும் கிழவர்களே முதல்தாரத்தை இழப்பதாக ஸ்ரீமான் காந்தி நினைப்பதும் தவறு. ‘இந்தியாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சராசரி 25-ம் பிராயத்தில் மரணம் நேருகிறது’ என்பதை ஸ்ரீமான்காந்தி மறந்துவிட்டார். எனவே, இளம்பிராயமுடைய பலரும் மனைவியாரை இழந்துவிடுகிறார்கள். அவர்கள் ஸ்ரீமான் காந்தி சொல்லும் சந்நியாச மார்க்கத்தை ஒருபோதும் அநுஷ்டிக்கமாட்டார்கள். அவர் அங்ஙனம் அநுஷ்டிப்பதினின்றும் தேசத்துக்குப் பல துறைகளிலும் தீமை விளையுமேயன்றி நன்மை விளையாது. ஆதலால்அவர்கள் அங்ஙனம் துறவு பூணும்படி கேட்பது நியாயமில்லை.

ஸ்திரீ-விதவைகளின் தொகையைக் குறைக்க வழி கேட்டால், ஸ்ரீமான் காந்தி ”புருஷ-விதவை” களின் (அதாவது: புனர் விவாகமின்றி வருந்தும் ஆண்மக்களின்) தொகையை அதிகப்படுத்த வேண்டுமென்கிறார்! இதினின்றும், இப்போது ஸ்திரீ-விதவைகளின் பெருந்தொகையைக் கண்டு தமக்கு அழுகை வருவதாக ஸ்ரீமான் காந்தி சொல்லுவது போல், அப்பால் புருஷ விதவைகளின் பெருந்தொகையைக்கண்டு அழுவதற்கு ஹேது உண்டாகும்.

மேலும், ஆணுக்கேனும், பெண்ணுக்குகேனும் இளமைப் பிராயம் கடந்த மாத்திரத்திலே போக விருப்பமும் போக சக்தியும் இல்லாமற் போகும்படி கடவுள் விதிக்கவில்லை. உலகத்தின் நலத்தைக் கருதி கடவுளால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் போக இச்சையை அக்கிரமமான வழிகளில் தீர்த்துக்கொள்ள முயல்வோரை மாத்திரமே நாம் கண்டிக்கலாம். கிரமமாக ஒரு ஸ்திரீயை மணம் புரிந்துகொண்டு அவளுடன் வாழ விரும்புவோர் வயது முதிர்ந்தோராயினும் அவர்களைக் குற்றம் சொல்வது நியாயமன்று. சிறிய பெண் குழந்தைகளை வயது முதிர்ந்த ஆண்மக்கள் மணம் புரியலாகாதென்பதை நாம் ஒருவேளை பேச்சுக்காக ஒப்புக் கொண்டபோதிலும், வயதேறிய பெண்களை வயதுமுற்றிய ஆண்மக்கள் மணம் புரிந்துகொள்ளக் கூடாதென்றுதடுக்க எவனுக்கும் அதிகாரம் கிடையாது. எனவே, எவ்வகையிலே நோக்குமிடத்தும் ஸ்ரீமான் காந்தி சொல்லும் உபாயம் நியாய விரோதமானது; சாத்தியப்படாதது; பயனற்றது.

விதவைகளின் தொகையைக் குறைப்பதற்கும் அவர்களுடைய துன்பங்களைத் தீர்ப்பதற்கும் ஒரேவழிதான் இருக்கிறது. அதை நம்முடைய ஜனத்தலைவர்கள் ஜனங்களுக்கு தைர்யம் போதிக்கவேண்டும். அதை ஜனங்கள் எல்லோரும் தைர்யமாக அனுஷ்டிக்க வேண்டும். 

அதாவது யாதெனில்:- இந்தியாவில் சிற்சில ஜாதியாரைத் தவிர மற்றப்படியுள்ளோர், நாகரீக தேசத்தார் எல்லோரும் செய்கிறபடி, விதவைகள் எந்தப் பிராயத்திலும் தமது பிராயத்துக்குத் தகுந்த புருஷரைபுனர் விவாகம் செய்துகொள்ளலாம். அப்படியே புருஷர்கள் எந்தப் பிராயத்திலும் தம் வயதுக்குத் தக்க மாதரை மறுமணம் செய்துகொள்ளலாம். இந்த ஏற்பாட்டை அனுஷ்டானத்திற்குக் கொண்டுவரவேண்டும். 

வீண் சந்தேகம், பொறாமை, குருட்டுக்காமம், பெண்களை ஆத்மாவில்லாத, ஹ்ருதயமில்லாத, ஸ்வாதீனமில்லாத அடிமைகளாக நடத்தவேண்டுமென்ற கொள்கை இவற்றைக் கொண்டே நம்மவர்களில் சில புருஷர்கள் ‘ஸ்திரீகளுக்கு புனர் விவாகம் கூடாது’ என்று சட்டம் போட்டார்கள். அதனாலேதான், மனைவியில்லாத கிழவர்கள் சிறு பெண்களை மணம் புரிய நேரிடுகிறது. அதனாலேதான், ஹிந்து தேசத்து விதவைகளின் வாழ்க்கை நரக வாழ்க்கையினும் கொடியதாய் எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகிறது.

பால்ய விதவைகள் புனர் விவாகம் செய்துகொள்ளலாமென்று ஸ்ரீமான் காந்தி சொல்லுகிறார். ஆனால் அதைக்கூட உறுதியாகச் சொல்ல அவருக்குத் தைரியம் இல்லை.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s