-மகாத்மா காந்தி

இரண்டாம் பாகம்
16. நானொன்று நினைக்கத் தெய்வமொன்று நினைத்தது
வழக்கு முடிவடைந்துவிட்டதால் நான் பிரிட்டோரியாவில் இருப்பதற்கு எந்தவிதமான காரணமும் இல்லை. ஆகவே, நான் டர்பனுக்குத் திரும்பினேன். தாய்நாட்டுக்குப் புறப்படுவதற்கான ஏற்பாடுகளைச் செய்யலானேன். ஆனால், அப்துல்லா சேத் பிரிவுபசாரம் எதுவும் இல்லாமல் என்னை அனுப்பிவிட இசைபவர் அல்ல. சைடன்ஹாமில் அவர் எனக்கு ஒரு பிரிவுபசார விருந்து நடத்தினார்.
அன்று நாள் முழுவதையும் அங்கேயே கழிப்பது என்பது ஏற்பாடு. அங்கே கிடந்த பத்திரிகைகளை நான் புரட்டிக் கொண்டிருக்கையில், அதில் ஒன்றின் ஒரு மூலையில், ‘இந்தியரின் வாக்குரிமை’ என்ற தலைப்பில் ஒரு சிறு செய்தி என் கண்ணில் பட்டது. அப்பொழுது சட்டசபை முன்பிருந்த ஒரு மசோதாவைப் பற்றியது, அச்செய்தி. நேட்டால் சட்டசபைக்கு மெம்பர்களைத் தேர்ந்தெடுக்க இந்தியருக்கு இருந்த உரிமையைப் பறிப்பதற்கென்று கொண்டு வரப்பட்டது, அந்த மசோதா. அம்மசோதாவைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. விருந்துக்கு வந்திருந்தவர்களுக்கும் தெரியாது.
அதைக் குறித்து அப்துல்லா சேத்தை விசாரித்தேன். அவர் கூறியதாவது: “இந்த விஷயங்களைப் பற்றியெல்லாம் எங்களுக்கு என்ன தெரிகிறது? எங்கள் வியாபாரத்தைப் பாதிக்கும் விஷயம் மாத்திரமே எங்களுக்குப் புரிகிறது. ஆரஞ்சு பிரீ ஸ்டேட்டில் எங்கள் வியாபாரம் எல்லாம் அடியோடு போய்விட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள், அதைக் குறித்துக் கிளர்ச்சி செய்தோம், ஒன்றும் பயனில்லை. எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக இருப்பதால் நாங்கள் முடவர்களாகத்தான் இருக்கிறோம். அன்றாட மார்க்கெட் நிலவரம் போன்றவைகளைத் தெரிந்து கொள்ளுவதற்கு மாத்திரமே பொதுவாக நாங்கள் பத்திரிகைகளைப் பார்க்கிறோம். சட்டங்கள் செய்யப்படுவதைக் குறித்து எங்களுக்கு என்ன தெரியும்? எங்களுக்கு கண்களாகவும் காதுகளாகவும் இருப்பவர்கள் இங்கிருக்கும் ஐரோப்பிய அட்டர்னிகளே.”
“இங்கே பிறந்து, படித்தும் இருக்கும் வாலிப இந்தியர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் உங்களுக்கு உதவி செய்வதில்லையா?” என்று கேட்டேன். “அவர்களா?” என்று மனம் சோர்ந்து அப்துல்லா சேத் கேட்டார். “அவர்கள் எங்களைப் பொருட்டாக நினைத்து எங்களிடம் வருவதே இல்லை. உங்களிடம் உண்மையைச் சொல்லுகிறேன். அவர்களை நாங்களும் சட்டை செய்வதில்லை. அவர்கள் கிறிஸ்தவர்களாதலால் வெள்ளைக்காரப் பாதிரிகளின் கைக்குள் இருக்கின்றனர். அப்பாதிரிகளோ, அரசாங்கத்திற்கு உட்பட்டவர்கள்” என்றார்.
அவர் இவ்விதம் கூறியது என் கண்களைத் திறந்தது. இந்த வகுப்பினரை நம்மவர்கள் என்று நாம் உரிமை கொண்டாட வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. கிறிஸ்தவம் என்பதற்குப் பொருள் இதுதானா? அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆகிவிட்டதனால் இந்தியர்களாக இல்லாது போய்விட்டனரா?
ஆனால், நானோ தாய்நாட்டுக்குத் திரும்பும் நிலையில் இருந்தேன். அகவே, இவ் விஷயத்தில் என் மனத்தில் தோன்றிய எண்ணங்களை வெளியில் கூறத் தயங்கினேன். “இந்த மசோதா சட்டமாகிவிட்டால், நமது கதியை அது இன்னும் அதிகக் கஷ்டமானதாக்கி விடும். நமது சவப்பெட்டியில் அடிக்கப்படும் முதல் ஆணி இது. நமது சுயமதிப்பின் வேரையே இது தாக்குகிறது” என்று மாத்திரம் அப்துல்லா சேத்திடம் கூறினேன்.
உடனே அவர் கூறியதாவது: “நீங்கள் சொன்ன நிலைமை ஏற்படலாம். வாக்குரிமை வரலாற்றை உங்களுக்குக் கூறுகிறேன். அதைப்பற்றி எங்களுக்கு எதுவுமே தெரியாது. எங்களுடைய சிறந்த அட்டர்னிகளில் ஒருவரான ஸ்ரீ எஸ்கோம்புதான் இதைப்பற்றி எங்களிடம் சொன்னார். அது நடந்த விதம் இதுதான். அவர் தீவிரமாகப் போராடுகிறவர். அவருக்கும் கப்பல் துறை இன்ஜினீயருக்கும் பரஸ்பரம் பிடிக்காது. இன்ஜினீயர், தமக்கு வோட்டுகள் இல்லாதபடி செய்து, தம்மைத் தேர்தலில் தோற்கடித்துவிடுவார் என்று ஸ்ரீ எஸ்கோம்பு நினைத்தார். ஆகையால், எங்களுடைய நிலைமையை எங்களுக்கு அவர் எடுத்துச் சொன்னார். அவர் கூறிய யோசனையின் பேரில் நாங்களெல்லோரும் வாக்காளர்களாகப் பதிவு செய்து கொண்டு. அவருக்கு வோட்டுப் போட்டோம். நீங்கள் அந்த வாக்குரிமை முக்கியமானது என்கிறீர்கள். ஆனால், அது எங்களுக்கு எவ்விதம் முக்கியமல்ல என்பதை நீங்கள் இப்பொழுது அறியலாம். என்றாலும், நீங்கள் கூறுவது. எங்களுக்குப் புரிகிறது சரி, அப்படியானால் நீங்கள் கூறும் யோசனை தான் என்ன?”
விருந்துக்கு வந்திருந்த மற்றவர்களும் நாங்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர், “செய்ய வேண்டியது என்ன என்பதை நான் சொல்லட்டுமா? இந்தக் கப்பலில் நீங்கள் புறப்படுவது என்பதை ரத்துச் செய்துவிடுங்கள். இன்னும் ஒரு மாதம் இங்கே இருங்கள். நீங்கள் கூறுகிறபடி நாங்கள் போராடுகிறோம்” என்றார்.
மற்றவர்கள் எல்லோரும் “அதுதான் சரி, அதுதான் சரி அப்துல்லா சேத் காந்தியை நிறுத்திவையுங்கள்” என்றனர்.
சேத் மிகவும் சாமர்த்தியம் உள்ளவர். அவர் கூறியதாவது: “இப்பொழுது நான் அவரை நிறுத்தி வைப்பதிற்கில்லை. அவரை நிறுத்திவைப்பதற்கு எனக்கு இருக்கும் உரிமை இப்பொழுது உங்களுக்குத்தான் இருக்கிறது. ஆனால், நீங்கள் சொல்லுவது என்னவோ முற்றும் சரியானதே. இங்கே இருக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் அவரைக் கேட்டுக் கொள்ளுவோம். அவர் ஒரு பாரிஸ்டர் என்பது உங்களுக்கு நினைவிருக்க வேண்டும். அவருக்குக் கொடுக்க வேண்டிய கட்டணத்திற்கு என்ன ஏற்பாடு?”
கட்டணம் என்று சொல்லப்பட்டது எனக்கு வேதனை அளித்தது. எனவே, நான் குறுக்கிட்டுச் சொன்னதாவது: “அப்துல்லா சேத், என் கட்டணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பொது ஜன ஊழியத்திற்கு கட்டணம் இருக்க முடியாது. நான் தங்குவதாயின் உங்கள் சேவகன் என்ற முறையில் தங்க முடியும். இந்த நண்பர்கள் எல்லோருடனும் எனக்குப் பழக்கம் இல்லை என்பதையும் நீங்கள் அறிவீர்கள். ஆனால் அவர்கள் ஒத்துழைப்பார்கள் என்று நீங்கள் நம்பினால் மேற்கொண்டு ஒரு மாதம் தங்குவதற்கு நான் தயாராக இருக்கிறேன். என்றாலும் ஒரு விஷயம் இருக்கிறது. எனக்கு நீங்கள் எதுவும் கொடுக்க வேண்டியதில்லையென்றாலும், நாம் எண்ணுவதைப் போன்ற வேலையை, ஆரம்பத்திலேயே ஏதாவது ஒரு நிதி இல்லாமல் செய்ய முடியாது. நாம் தந்திகள் அனுப்ப வேண்டி வரலாம், சில பிரசுரங்களையும் அச்சிட வேண்டிவரும். கொஞ்சம் சுற்றுப் பிரயாணமும் அவசியமாவதோடு உள்ளூர் அட்டர்னிகளையும் கலந்து ஆலோசிக்க நேரலாம். இங்குள்ள சட்டங்களைக் குறித்து எனக்கு ஒன்றும் தெரியாதாகையால் அவைகளைப் பார்க்கச் சில சட்டப் புத்தகங்களையும் வாங்க வேண்டியிருக்கும். இவற்றை எல்லாம் பணம் இல்லாமல் செய்ய முடியாது. மேலும் இந்த வேலைக்கு ஒருவர் மாத்திரம் போதாது என்பதும் தெளிவானது. எனக்கு உதவி செய்யப் பலர் முன்வர வேண்டும்.”
உடனே ஏககாலத்தில் பல குரல்கள் எழுந்தன. “அல்லாவின் மகிமையே மகிமை! அவன் அருளே அருள்! பணம் வந்துவிடும் உங்களுக்கு. எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு ஆட்களும் இருக்கிறார்கள். தயவு செய்து நீங்கள் தங்குவதற்கு ஒப்புக் கொள்ளுங்கள். எல்லாம் நன்றாகிவிடும்.”
இவ்விதம் பிரிவுபசார கோஷ்டி, காரியக் குழுவாக மாறியது. விருந்து முதலியவைகளைச் சீக்கரமாக முடித்துக் கொண்டு வீடு திரும்பிவிடுவோம் என்று யோசனை கூறினேன். இந்தப் போராட்டத்திற்கு என் மனத்திற்குள்ளேயே ஒரு திட்டம் போட்டுக் கொண்டேன். வாக்காளர் ஜாபிதாவில் யார் யாருடைய பெயர்கள் இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டேன். மேற்கொண்டும் ஒரு மாத காலம் தங்குவதென்றும் தீர்மானித்தேன்.
இவ்விதம் தென்னாப்பிரிக்காவில் என் வாழ்க்கைக்குக் கடவுள் அடிகோலியதோடு தேசிய சுயமரியாதைக்காக நடத்திய போராட்டத்திற்கு விதையையும் ஊன்றினார்.
$$$
17. நேட்டாலில் குடியேறினேன்
1893-இல் சேத் ஹாஜி முகமது ஹாஜி தாதா, நேட்டால் இந்தியரிடையே தலைசிறந்த தலைவராகக் கருதப்பட்டார். செல்வ விஷயத்தில் பார்த்தால் இந்தியரில் முதன்மையானவர் சேத் அப்துல்லா ஹாஜி ஆகும். ஆனால், இருவரும் மற்றவர்களும் பொதுக் காரியங்களில் சேத் ஹாஜி முகமதுவுக்கே முதலிடம் அளித்து வந்தனர். ஆகவே, அவருடைய தலைமையில் அப்துல்லா சேத்தின் வீட்டில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. வாக்காளர் மசோதாவை எதிர்ப்பது என்று அதில் தீர்மானமாயிற்று.
தொண்டர்கள் சேர்க்கப்பட்டனர். நேட்டாலில் பிறந்தவர்களான இந்தியர் அதாவது பெரும்பாலும் இந்தியக் கிறிஸ்தவ இளைஞர்கள் அக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டனர். டர்பன் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரான ஸ்ரீ பாலும், ஒரு மிஷன் பாடசாலை ஆசிரியரான ஸ்ரீ சுபான் காட்பிரேயும் இக்கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஏராளமான கிறிஸ்தவ இளைஞர்கள் அக்கூட்டத்திற்கு வருவதற்குப் பொறுப்பாளிகளாக இருந்தவர்கள் இவர்கள் இருவருமே. இவர்கள் எல்லோரும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள். உள்ளூர் வர்த்தகர்கள் பலரும் தொண்டர்களாகப் பதிவு செய்து கொண்டார்கள்.
சேத்துக்கள் தாவூது முகமது, முகமது காசிம் கம்ருதீன் ஆதம்ஜி மியாகான், ஏ.குழந்தைவேலுப் பிள்ளை, ஸி.லச்சிராம், ரங்கசாமிப் படையாச்சி, ஆமத் ஜீவா ஆகியவர்கள் பதிவு செய்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். பார்ஸி ருஸ்தம்ஜியும் அவர்களுள் ஒருவராக இருந்தார். சேர்ந்து கொண்ட குமாஸ்தாக்களில் ஸ்ரீமான்கள் மாணேக்ஜி, ஜோஷி. நரசிங்கராம் முதலியவர்களும், தாதா அப்துல்லா கம்பெனி முதலிய பெரிய கம்பெனிகளில் வேலை பார்த்தவர்களும் இருந்தனர். பொது வேலையில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்ளுவதைக் குறித்து இவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியடைந்ததோடு, ஆச்சரியமும் அடைந்தார்கள். இவ்விதம் பங்கு கொள்ள அழைக்கப்படுவது, அவர்களுடைய வாழ்க்கையிலேயே ஒரு புது அனுபவம். சமூகத்திற்கு ஏற்பட்டிருக்கும் ஆபத்தானதோர் வேளையில் உயர்வு, தாழ்வு; சிறியவர்கள், பெரியவர்கள்; எஜமான், வேலைக்காரன்; ஹிந்து, முஸ்ஸிம்; பார்ஸி, கிறிஸ்தவர்; குஜராத்திகள், மதராஸிகள், சிந்துக்காரர்கள் என்ற பாகுபாடுகளையெல்லாம் மறந்து விட்டனர். எல்லோரும் ஒரே மாதிரியாக தாய்நாட்டின் குழந்தைகள்; சேவகர்கள்.
மசோதா இரண்டாம் முறையாகச் சட்டசபையில் நிறைவேறி விட்டது. அல்லது நிறைவேற இருக்கும் தருணத்தில் இருந்தது எனலாம். இத்தகைய கடுமையான மசோதாவுக்கு இந்தியர், தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவிக்காததிலிருந்தே, வாக்குரிமைக்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்பது ருசுவாகிறது என்று சட்டசபையில் மசோதாவின் மீது பேசியவர்கள் கூறினர்.
நிலைமையைப் பொதுக் கூட்டத்திற்கு விளக்கிக் கூறினேன். நாங்கள் செய்த முதல் காரியம், சட்டசபையின் சபாநாயகருக்குத் தந்தி கொடுத்ததாகும். மசோதா மீது மேற்கொண்டும் விவாதிப்பதை ஒத்தி வைக்குமாறு அவரைக் கோரினோம். அதே போன்ற தந்திகளை பிரதமர் ஸர் ஜான் ராபின்ஸனுக்கும், தாதா அப்துல்லாவின் நண்பர் என்ற முறையில் ஸ்ரீ எஸ்கோம்புக்கும் அனுப்பினோம். மசோதாவின் விவாதம் இரண்டும் தினங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் என்று சபாநாயகர் உடனே பதில் அனுப்பினார். இதனால் மகிழ்ச்சியடைந்தோம்.
சட்டசபை முன்பு சமர்ப்பிப்பதற்கு மகஜரைத் தயாரித்தோம். அதற்கு மூன்று பிரதிகள் தயாரிக்க வேண்டி இருந்ததோடு பத்திரிகைகளுக்கும் தனியாக ஒரு பிரதி வேண்டியிருந்தது. மகஜரில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு கையெழுத்துக்களையும் வாங்கிவிடுவதென்றும் உத்தேசிக்கப்பட்டது. இந்த வேலைகளை எல்லாம் ஒரே இரவில் செய்து முடிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் தெரிந்த தொண்டர்களும் மற்றும் பலரும் இரவெல்லாம் வேலை செய்தனர். ஸ்ரீ ஆர்தர் வயதானவர், அழகாக எழுதுவதில் பெயர் பெற்றவர். முக்கியப் பிரதியை அவரே எழுதினார். மற்றவைகளை ஒருவர் படித்துச் செல்ல, மற்றவர்கள் எழுதினர். இவ்விதம் ஒரே சமயத்தில் ஐந்து பிரதிகள் தயாராகிவிட்டன. தொண்டர்களான வர்த்தகர்கள் மகஜரில் கையெழுத்து வாங்க தங்கள் சொந்த வண்டிகளில் சென்றனர், வாடகை வண்டிகளில் போனவர்கள் தாங்களே வாடகையைக் கொடுத்து விட்டார்கள். இவைகளெல்லாம் வெகுசீக்கிரத்தில் செய்து முடிக்கப் பெற்றன. மகஜரையும் அனுப்பிவிட்டோம். பத்திரிகைகளும் அதைப் பிரசுரித்து ஆதரவான அபிப்ராயங்களை எழுதின. இவ்விதம் அது சட்டசபையிலும் சிறிது ஆதரவான அபிப்பிராயத்தை உண்டாக்கியது. மகஜரைக் குறித்துச் சட்டசபையில் விவாதித்தனர். மசோதாவைக் கொண்டு வந்திருந்தவர்கள், மகஜரில் கூறப்பட்டிருந்த வாதங்களுக்குப் பதிலாக நிச்சயமாக நொண்டிச் சமாதானங்களையே கூறினர் என்றாலும் மசோதா நிறைவேறிவிட்டது.
இப்படித்தான் நடக்கப்போகிறது என்பதை நாங்கள் எல்லோரும் அறிவோம். ஆனால், அக்கிளர்ச்சி சமூகத்தினர் இடையே ஒரு புத்துயிரை அளித்தது. இந்தியர் யாவரும் பிரிக்க முடியாத ஒரே சமூகத்தினர். வர்த்தக உரிமைக்காகப் பேராடுவதைப் போலவே தங்கள் ராஜிய உரிமைக்காகவும் போராடியே தீருவர் என்பதை எல்லோரும் உணரும்படியும் இக்கிளர்ச்சி செய்தது.
அச் சமயம் லார்டு ரிப்பன் குடியேற்ற நாட்டு மந்திரியாக இருந்தார். அவருக்குப் பிரம்மாண்டமான மகஜர் ஒன்றை அனுப்புவது என்று முடிவு செய்தோம். இது சின்ன விஷயமன்று; ஒரே நாளில் செய்துவிடக் கூடியதும் அல்ல. தொண்டர்களைத் திரட்டினோம். இவ் வேலையில் எல்லோரும் அவரவர்கள் பங்கைச் செய்தனர்.
இந்த மகஜரைத் தயாரிப்பதில் நான் அதிகச் சிரமம் எடுத்துக் கொண்டேன். இவ் விஷயத்தைக் குறித்துக் கிடைக்காத புத்தகங்களையெல்லாம் படித்தேன். ஒரு கொள்கையையும் உசிதத்தையுமே முக்கியமாகக் கொண்டவை மகஜரில் நான் கூறியிருந்த வாதங்கள். இந்தியாவில் ஒரு வகையான வாக்குரிமை இருந்து வருவதால் நேட்டாலிலும் வாக்குரிமை பெற எங்களுக்கு உரிமை உண்டு என்று வாதித்தேன். வாக்குரிமை உபயோகித்துக் கொள்ளக் கூடிய இந்தியரின் தொகை மிகக் குறைவேயாகையால், அந்த உரிமை தொடர்ந்து இருந்து வரும்படியாகப் பார்த்துக் கொள்வதே உசிதமானது என்றும் வற்புறுத்தினேன்.
இரண்டு வாரங்களுக்குள் பத்தாயிரம் கையெழுத்துக்களை வாங்கினோம். இந்த வேலையில் ஈடுபட்டவர்கள், இத்தகைய வேலைக்கே முற்றும் புதிதானவர்கள். இதைக்கொண்டு கவனித்தால், மாகாணம் முழுவதும் போய், அவ்வளவு ஏராளமான கையெழுத்துக்களை வாங்கியதும் அற்ப சொற்பமான வேலையல்ல என்பது விளங்கும். விண்ணப்பத்தின் கருத்தை முற்றும் புரிந்து கொள்ளாதவர்கள் யாரிடமும் கையெழுத்து வாங்கக் கூடாது என்று முடிவு செய்திருந்தோம். ஆகையால், விசேஷத் தகுதி பெற்றிருந்த தொண்டர்களையே இந்த வேலைக்குத் தேர்ந்தெடுத்தோம். கிராமங்களோ, ஒன்றுக்கொன்று தொலைதூரத்தில் இருந்தன. அநேக ஊழியர்கள், தங்கள் முழு மனத்தையும் இவ் வேலையில் செலுத்தினால்தான் இவ் வேலை சீக்கிரத்தில் முடியும். அவ்வாறே பலர், முழுமனத்துடன் வேலை செய்தனர். இவ் வரிகளை நான் எழுதும்போது சேத் தாவூது முகமது, ருஸ்தம்ஜி, மியாகான், ஆமத் ஜீவா ஆகியவர்கள் தெளிவாக என் கண் முன்பு தோன்றுகின்றனர். அதிகப்படியான கையொப்பங்களை வாங்கி வந்தவர் இவர்களே. தாவூது சேத் நாளெல்லாம் வண்டியில் சென்றவண்ணம் இருந்தார். அவ்வேலையில் இவர்களுக்கு இருந்த அன்பினாலேயே இதையெல்லாம் செய்தனர். இவர்களில் ஒருவர் கூடத் தங்கள் செலவுக்குப் பணம் வேண்டும் என்று கேட்டதில்லை. தாதா அப்துல்லாவின் வீடு, உடனே ஒரு சத்திரமாகவும் பொதுக் காரியாலயமாகவும் மாறிவிட்டது. எனக்கு உதவி செய்த படித்த நண்பர்கள் பலரும், மற்றும் பலரும், அங்கேதான் சாப்பிட்டார்கள். இவ்விதம் உதவி செய்த ஒவ்வொருவருக்கும் பணச் செலவு அதிகமாயிற்று.
முடிவாக, மகஜரைச் சமர்ப்பித்துவிட்டோம். எல்லோருக்கும் அனுப்புவதற்கும் வினியோகிப்பதற்குமாக அம்மகஜரின் ஆயிரம் பிரதிகளை அச்சிட்டோம். நேட்டாலில் இருந்த தங்கள் நிலைமையைப் பற்றி இந்திய மக்கள் முதன்முதலாக அறியும்படி இது செய்தது. எனக்குத் தெரிந்த எல்லா பத்திரிகைகளுக்கும் பிரமுகர்களுக்கும் மகஜரின் பிரதிகளை அனுப்பினேன்.
டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை, இம்மகஜரைக் குறித்து எழுதிய ஒரு தலையங்கத்தில் இந்தியரின் கோரிக்கையைப் பலமாக ஆதரித்தது. இங்கிலாந்தில் பல கட்சிகளைச் சேர்ந்த பத்திரிகைகளுக்கும் பிரமுகர்களுக்கும் மகஜரின் நகலை அனுப்பினேன். லண்டன் டைம்ஸ் பத்திரிகை எங்கள் கட்சியை ஆதரித்தது. மசோதா நிராகரிக்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையைக் கொள்ளலானோம்.
இச் சமயத்தில் நான் நேட்டாலை விட்டுப் போய்விடுவது என்பது முடியாத காரியம் ஆகிவிட்டது. இந்திய நண்பர்கள் நாலா பக்கங்களிலும் என்னைச் சூழ்ந்து கொண்டிருந்தனர். நிரந்தரமாக அங்கே தங்கிவிடுமாறும் மன்றாடினர். எனக்கு இருந்த கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். பொதுஜனத் செலவில் அங்கே தங்குவதில்லை என்று முடிவு கட்டிக் கொண்டேன். தனியாக ஒரு ஜாகையை அமர்த்திக் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் எண்ணினேன். வீடு நல்லதாக இருக்க வேண்டும், அதோடு நல்ல இடத்திலும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். சாதாரணமாக பாரிஸ்டர்களுக்கு உரிய அந்தஸ்தில் நான் வாழ்ந்தாலன்றி இந்திய சமூகத்திற்கு நான் மதிப்பைத் தேடிக் கொடுத்தவன் ஆக முடியாது என்ற எண்ணமும் எனக்கு இருந்தது. வருடத்திறகு 300 பவுனுக்குக் குறைத்து அத்தகைய குடித்தனத்தை நடத்துவது இயலாது என்றும் எனக்குத் தோன்றியது. ஆகவே, குறைந்தபட்சம் அந்த அளவுக்குச் சட்ட சம்பந்தமான வேலையை எனக்குத் தருவதாக இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எனக்கு உத்தரவாதம் அளித்தால் மாத்திரமே நான் அங்கே தங்க முடியும் என்று முடிவு செய்தேன். இந்த முடிவை அவர்களுக்கு அறிவித்தேன். “நீங்கள் செய்யும் பொது வேலைக்காக அத்தொகையை உங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புவோம். இதை நாங்கள் எளிதாக வசூலித்துவிட முடியும். இதுவல்லாமல் தனிப்பட்டவர்களுக்காக நீங்கள் செய்யும் வக்கீல் வேலைக்கு, நீங்கள் தனியாகக் கட்டணம் பெற்றுக் கொள்ளலாம்” என்று அவர்கள் கூறினர்.
“அது முடியாது. பொதுஜன ஊழியத்திற்கு உங்களிடம் பணம் வாங்க முடியாது. இந்த வேலைக்குப் பாரிஸ்டர் என்ற வகையில் என் திறமை. அதிகமாகத் தேவையில்லை. உங்களையெல்லாம் வேலை செய்யும்படி செய்வதே முக்கியமாக என் வேலையாக இருக்கும். அப்படியிருக்க, இந்த வேலைக்குப் பண உதவி செய்யுமாறு உங்களிடம் நான் அடிக்கடி கேட்டுக்கொள்ள வேண்டிவரும். என் சொந்தச் செலவுக்கும் உங்களிடமிருந்து நான் பணம் வாங்குவதாக இருந்தால் பெருந்தொகை கொடுக்கும்படி உங்களைக் கேட்பது எனக்குச் சங்கடமாக இருக்கும். முடிவாக அதனால் நம் வேலை நின்றுவிடும் நிலைக்கு வந்துவிடுவோம். இத்துடன் பொது வேலைக்கு ஆண்டுக்கு 300 பவுனுக்கு மேல் நம் சமூகம் பணம் திரட்ட வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன்” என்று கூறினேன்.
“கொஞ்ச காலமாக உங்களுடன் பழகி உங்களை நன்றாக நாங்கள் அறிந்து கொண்டிருக்கிறோம். உங்களுக்குத் தேவை இல்லாதது எதையும் நீங்கள் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்பது எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். நீங்கள் இங்கே இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பும்போது உங்கள் செலவுக்கு நாங்கள் ஏற்பாடு செய்ய வேண்டாமா?” என்றும் கேட்டார்கள்.
அதற்கு நான் கூறியதாவது, “நீங்கள் என்னிடம் கொண்டிருக்கும் அன்பும், இப்பொழுது உங்களுக்கு இருக்கும் உற்சாகமுமே நீங்கள் இவ்விதம் பேசும்படி செய்கின்றன. இந்த அன்பும் உற்சாகமும் எப்பொழுதும் இப்படியே இருந்து வரும் என்று நாம் எவ்விதம் நிச்சயமாக நம்ப முடியும்? உங்கள் நண்பன், ஊழியன் என்ற வகையில், சில சமயங்களில் உங்களை நான் கடிந்து பேசவும் நேரலாம். அப்பொழுதும் என்னிடம் நீங்கள் அன்புடையவர்களாகவே இருப்பீர்களா என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். ஆனால் உண்மை என்னவெனில், பொது வேலைக்காக நான் சம்பளமாக எதுவும் வாங்கிக் கொள்ளக் கூடாது என்பதுதான். நீங்கள் எல்லோரும் உங்களுக்கு இருக்கும் சட்ட வேலையை என்னிடம் ஒப்படைத்தால் இதுவே எனக்குப் போதுமானது. அதுவும்கூட உங்களுக்குக் கஷ்டமானதாக இருக்கலாம். நான் வெள்ளைக்காரப் பாரிஸ்டர் அல்ல. கோர்ட்டு என்னை மதிக்கும் என்று நான் எப்படி நிச்சயமாகக் கூற முடியும்? வக்கீல் தொழிலில் நான் எவ்வளவு தூரம் திறமையாக நடந்து கொள்ளுவேன் என்பதும் எனக்கு நிச்சயமாகத் தெரியாது. ஆகையால், என்னை உங்களுடைய வக்கீலாக அமர்த்திக் கொள்வதிலும் உங்களுக்குச் சில ஆபத்துக்கள உண்டு. அந்த வேலையை எனக்குக் கொடுப்பதைக் கூட உண்மையில் என்னுடைய பொது வேலைக்குச் சன்மானம் என்றே நான் கருத வேண்டும்.”
இந்த விவாதத்தின் பலனாகச் சுமார் இருபது வர்த்தகர்கள் ஓர் ஆண்டிற்கு என்னைத் தங்கள் வக்கீலாக அமர்த்திக்கொண்டு, அதற்காக எனக்குப் பணம் கொடுத்தார்கள். நான் தாய்நாடு திரும்பும்போது எனக்கு ஒரு பண முடிப்பு அளிப்பதென்று, தாதா அப்துல்லா தீர்மானித்திருந்தார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர், எனக்குத் தேவையாயிருந்த மேஜை, நாற்காலி முதலியவைகளை வாங்கிக் கொடுத்தார்.
இவ்வாறு நான் நேட்டாலில் குடியேறினேன்.
$$$
18. நிறத் தடை
புத்தி கூர்மையுள்ள ஒரு பெண். அவளுக்குக் கண் பார்வை இல்லை. பாரபட்சமற்றவள். ஒரு தட்டுக்கு மற்றொரு தட்டு ஏற்றத்தாழ்வின்றி நடுநிலையாக வைத்து, ஒரு தராசைக் கையில் ஏந்தியிருப்பாள். இதுவே ஒரு நீதிமன்றத்திற்குச் சின்னம். ஒருவேளை அவனுடைய வெளித் தோற்றத்தைக் கொண்டு அவள் மதித்துவிடக் கூடாது, அவனுடைய உண்மையான உள் யோக்கியதையைக் கவனித்தே முடிவு கூற வேண்டும் என்பதற்காக, வேண்டுமென்றே விதி அவளைக் குருடாக்கியிருக்கிறது. ஆனால், நேட்டால் வக்கீல்களின் சங்கமோ, இந்தக் கொள்கைக்கு முற்றும் மாறாக அந்தச் சின்னத்தைப் பொய்யாக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட்டு நடக்கும்படி செய்ய முனைந்தது.
சுப்ரீம் கோர்ட்டில் அட்வகேட்டாகத் தொழில் நடத்த என்னை அனுமதிக்க வேண்டும் என்று மனுச் செய்தேன். பம்பாய் ஹைகோர்ட்டில் நான் வக்கீலாக இருந்ததற்குரிய அத்தாட்சி என்னிடம் இருந்தது. இங்கிலாந்தில், பாரிஸ்டரானதற்கு எனக்குக் கொடுத்த அத்தாட்சிப் பத்திரத்தை பம்பாய் ஹைகோர்ட்டில் நான் வக்கீலாகப் பதிவு செய்து கொண்டபோது அங்கே தாக்கல் செய்து விட்டேன். சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மனுப் போடும்போது, அத்துடன் நன்னடத்தை அத்தாட்சிப் பத்திரங்கள் இரண்டும் தாக்கல் செய்ய வேண்டியது அவசியம். இந்த அத்தாட்சிப் பத்திரங்களை ஐரோப்பியர்கள் கொடுத்ததாக இருந்தால் அவற்றிற்கு அதிக மதிப்பிருக்கும் என்று எண்ணி, சேத் அப்துல்லாவின் மூலம் எனக்குத் தெரிந்தவர்களான இரு பிரபல ஐரோப்பிய வர்த்தகர்களிடம் அந்த அத்தாட்சிப் பத்திரங்களை வாங்கினேன். வக்கீலாக இருப்பவர் ஒருவர் மூலமாக இம்மனுவைக் கொடுக்க வேண்டும். எத்தகைய கட்டணமும் வாங்கிக் கொள்ளாமல் அட்டர்னி ஜெனரல் இத்தகைய மனுக்களைச் சமர்பிப்பதுதான் வழக்கம். ஸ்ரீ எஸ்கோம்பு, தாதா அப்துல்லா கம்பெனிக்குச் சட்ட ஆலோசகராக இருந்தார் என்பதை முன்பே படித்தோம். அவரே இப்பொழுது அட்டர்னி ஜெனரல். அவரிடம் சென்றேன். அவரும் என் மனுவைக் கோர்ட்டில் சமர்ப்பிக்க மனம் உவந்து ஒப்புக்கொண்டார்.
நான் எதிர்பாராத விதமாக வக்கீல்கள் சங்கத்தினர் எதிர்க்கக் கிளம்பினர். என்னைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் கொடுத்திருந்த மனுவை எதிர்த்து, எனக்கு ஒரு தாக்கீது அனுப்பினார்கள். நேட்டாலில் வக்கீல் சங்கத்தினர் வெளிப்படையாகக் கூறிய ஓர் ஆட்சேபம், இங்கிலாந்தில் பெற்ற அசல் அத்தாட்சிப் பத்திரத்தை மனுவுடன் நான் தாக்கல் செய்யவில்லை என்பது. ஆனால் அவர்களுக்கு இருந்த முக்கியமான ஆட்சேபம், ஒரு கருப்பு மனிதனும் அட்வகேட்டாகப் பதிவு செய்துகொள்ள மனுப்போடக் கூடும் என்பதை அட்வகேட்டுகளை அனுமதிப்பது சம்பந்தமான விதிகளைச் செய்தபோது சிந்தித்திருக்க முடியாது என்பதுதான். ஐரோப்பியரின் முயற்சியால்தான் நேட்டால் இன்று வளம் பெற்று வளர்ந்திருக்கிறதாகையால், வக்கீல் தொழிலிலும் ஐரோப்பியர்களே ஆதிக்கம் செலுத்த வேண்டும். வெள்ளையர் அல்லாதவரையும் இத்தொழிலுக்குள் வர விட்டுவிட்டால், நாளாவட்டத்தில் அவர்கள் தொகை ஐரோப்பிய வக்கீல்களின் தொகையைவிட அதிகமாகிவிடும். அவர்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் அரண் தகர்ந்துவிடும். இதுவே அவர்களுடைய முக்கியமான ஆட்சேபம்.
தங்களுடைய எதிர்ப்பை ஆதரித்து வாதாட ஒரு பிரபலமான வக்கீலை, வக்கீல்கள் சங்கத்தினர் அமர்த்தியிருந்தார்கள். அந்த வக்கீலும் தாதா அப்துல்லா கம்பெனியுடன் தொடர்புள்ளவர். ஆகவே, தம்மை வந்து பார்க்குமாறு சேத் அப்துல்லா மூலம் அவர் எனக்குச் சொல்லியனுப்பினார். நான் போனேன். அவர் என்னிடம் மனம் விட்டுப் பேசினார். என்னுடைய பூர்வோத்தரங்களை விசாரித்தார். சொன்னேன். பிறகு அவர் கூறியதாவது:
“உமக்கு விரோதமாக நான் சொல்லக் கூடியது எதுவும் இல்லை. குடியேற்ற நாட்டில் பிறந்த, எதற்கும் துணிந்துவிடும் ஓர் ஆசாமியாக நீர் இருப்பீரோ என்றுதான் நான் பயந்தேன். அசல் அத்தாட்சியை உம்முடைய மனுவுடன் நீர் அனுப்பாதது என் சந்தேகத்தை அதிகமாக்கியது. மற்றவர்களுடைய அத்தாட்சிப் பத்திரங்களைத் தங்களுடையவை எனக் காட்டி ஏமாற்றுபவர்களும் உண்டு. ஐரோப்பிய வியாபாரிகளிடம் வாங்கி, நீங்கள் அனுப்பிருக்கும் நன்னடத்தை அத்தாட்சிகள் என்னைப் பொறுத்த வரை பயனற்றவை. உங்களைக் குறித்து அவர்களுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு உங்களிடம் எவ்வளவு பழக்கம் இருக்க முடியும்?”
“இங்கே எனக்கு எல்லோருமே புதியவர்கள்தான். சேத் அப்துல்லாவும் இங்கேதான் முதன்முதலாக என்னை அறிவார்” என்றேன்.
“ஆனால், அவர் உங்கள் ஊரைச் சேர்ந்தவர் என்கிறீர்களே? உங்கள் தகப்பனார் அங்கே முதல் மந்திரியாக இருந்தார் என்றால், சேத் அப்துல்லாவுக்கு உங்கள் குடும்பம் தெரிந்தே இருக்க வேண்டும். அவரிடமிருந்து உறுதிமொழிப் பத்திரத்தை நீங்கள் தாக்கல் செய்வதாக இருந்தால், எனக்குக் கொஞ்சமும் ஆட்சேபமே இல்லை. அப்பொழுது உங்கள் மனுவை நான் எதிர்த்துப் பேசுவதற்கில்லை என்று வக்கீல்கள் சங்கத்திற்குச் சந்தோஷமாகவே அறிவித்து விடுவேன்” என்றார்.
அவருடைய இந்த பேச்சு எனக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஆனால் என் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டேன். என்னுள்ளேயே பின்வருமாறு சொல்லிக் கொண்டேன்: ‘தாதா அப்துல்லாவின் அத்தாட்சியை நான் தாக்கல் செய்திருந்தால் அதை நிராகரித்திருப்பார்கள்; ஐரோப்பியரிடமிருந்து அத்தாட்சி வேண்டும் என்றும் கேட்டிருப்பார்கள். நான் அட்வகேட்டாகப் பதிவு செய்து கொள்ளுவதற்கும் என் பிறப்புக்கும் பூர்வோத்தரங்களுக்கும் என்ன சம்பந்தம்? என் பிறப்பு எளிமையானதாகவோ, ஆட்சேபகரமானதாகவோ இருக்குமாயின், அதை எப்படி எனக்கு எதிராக உபயோகிக்க முடியும்?’ ஆனால் என் கோபத்தையெல்லாம் அடக்கிக் கொண்டு அமைதியாக அவருக்குப் பின்வருமாறு பதில் சொன்னேன்:
“அந்த விவரங்களையெல்லாம் கேட்பதற்கு வக்கீல்கள் சங்கத்திற்கு எந்தவிதமான அதிகாரமும் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ளாவிட்டாலும், நீங்கள் விரும்பும் அத்தாட்சிப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தயாராக இருக்கிறேன்.”
சேத் அப்துல்லாவின் அத்தாட்சியைத் தயாரித்து வக்கீல்கள் சங்கத்தின் ஆலோசகரிடம் சமர்ப்பித்தேன். தாம் திருப்தியடைந்து விட்டதாக அவர் சொன்னார். ஆனால் வக்கீல்கள் சங்கத்தினர் திருப்தியடையவில்லை. சுப்ரீம் கோர்ட்டில் என் மனுவை எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்புக்குப் பதில் சொல்லுமாறு என் மனுவைத் தாக்கல் செய்த ஸ்ரீ எஸ்கோம்பைக் கூட அழைக்காமலே, கோர்ட்டு, அச்சங்க எதிர்ப்பை நிராகரித்து விட்டது. பிரதம நீதிபதி கூறியதாவது: “மனுதாரர், தம்முடைய மனுவுடன் அசல் அத்தாட்சிப் பத்திரத்தையும் தாக்கல் செய்யவில்லை என்ற ஆட்சேபம் அர்த்தம் இல்லாதது. அவர் பொய்ப் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தால், அவர் மீது வழக்குத் தொடுத்து, அவர் குற்றம் செய்திருப்பதாக நிரூபிக்கப்பட்டால் வக்கீல் பட்டியலிலிருந்து இவர் பெயரை நீக்கிவிடலாம். வெள்ளையருக்கும் வெள்ளையர் அல்லாதவர்களுக்கும் இடையே எந்தவிதமான பாகுபாட்டையும் சட்டம் கற்பிக்கவில்லை. ஆகவே ஸ்ரீ காந்தி அட்வகேட்டாகத் தம்மைப் பதிவு செய்து கொள்ளுவதைத் தடுக்கக் கோர்ட்டுக்கு எந்த அதிகாரமும் இல்லை. அவருடைய மனுவை ஏற்றுக் கொள்ளுகிறோம். ஸ்ரீ காந்தி, இப்பொழுது நீர் பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம்.”
நான் எழுந்துபோய் ரெஜிஸ்டிரார் முன்பு பிரமாணம் எடுத்துக் கொண்டேன். நான் பிரமாணம் எடுத்துக் கொண்டதும் பிரதம நீதிபதி என்னைப் பார்த்துக் கூறியதாவது:
“ஸ்ரீ காந்தி, நீர் உம்முடைய தலைப்பாகையை இப்பொழுது எடுத்துவிட வேண்டும். தொழில் நடத்தும் பாரிஸ்டர்கள் சம்பந்தமாக உள்ள கோர்ட்டின் விதிகளை அனுசரித்து நீங்கள் நடக்க வேண்டும்.”
எனக்குரிய வரம்புகளை நான் உணரலானேன். ஜில்லா மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் நான் எடுக்க மறுத்த தலைப்பாகையைச் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்குப் பணிந்து எடுத்து விட்டேன். இந்த உத்தரவை நான் எதிர்த்திருந்தால், அந்த எதிர்ப்பு நியாயமானதாக இருந்திருக்காது என்பதல்ல. ஆனால் என் பலத்தைப் பெரிய விஷயங்களில் போராடுவதற்காகச் சேமித்து வைக்க நான் விரும்பினேன். தலைப்பாகையை வைத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை வற்புறுத்துவதில் என்னுடைய ஆற்றலையெல்லாம் நான் செலவிட்டுவிடக் கூடாது. அது, சிறந்த லட்சியத்திற்காகப் பாடுபடுவதற்கு உரியதாகும்.
நான் பணிந்துவிட்டது (அல்லது என் பலவீனமோ என்னவோ?) சேத் அப்துல்லாவுக்கும் மற்ற நண்பர்களுக்கும் பிடிக்கவில்லை. கோர்ட்டில், வக்கீல் தொழிலை நடத்தி வரும்போது என் தலைப்பாகையை வைத்துக்கொள்ள எனக்குள்ள உரிமையை விடாமல் வற்புறுத்தியிருக்க வேண்டும் என்று அவர்கள் கருதினர். என் நியாயத்தை எடுத்துக் கூறி அவர்களுக்குத் திருப்தியளிக்க முயன்றேன். ரோமில் இருக்கும்போது ரோமர்கள் செய்வதைப் போலவே நீயும் செய் என்ற பழமொழியினை அவர்கள் உணரும்படி செய்ய முயன்றேன். “இந்தியாவில் ஓர் ஆங்கில அதிகாரியோ, நீதிபதியோ உங்கள் தலைப்பாகையை எடுத்து விடுமாறு சொன்னால் அதற்கு உடன்பட மறுத்துவிடுவது சரியானதாக இருக்கும். ஆனால், நேட்டால் மாகாணத்தில் கோர்ட்டில் இருக்கும் ஒரு வழக்கத்தை அந்தக் கோர்ட்டில் தொழில் செய்யும் நான் மதிக்க மறுப்பது நேர்மையானதல்ல” என்று சொன்னேன்.
இவ்வாறும், இது போன்ற வாதங்களினாலும் நண்பர்களை ஒருவாறு சமாதானப்படுத்தினேன். ஆனால், வெவ்வேறான விஷயங்களை வெவ்வேறான நோக்குடன் கவனித்து முடிவு செய்ய வேண்டும் என்ற கொள்கைகளை இக்காரியத்திலும் அனுசரிப்பது என்பதில், அவர்களுக்கு நான் திருப்தி உண்டாக்கிவிட்டதாகக் கருதவில்லை. எனினும், சத்தியத்தை நான் விடாப்பிடியாகப் பின்பற்றியதால், சமரசத்திலுள்ள அழகை என் வாழ்நாள் முழுவதிலுமே உணரும் சக்தியை அது எனக்கு அளித்துவிட்டது. இந்தச் சமரச உணர்ச்சி, சத்தியாக்கிரகத்தில் ஓர் அத்தியாவசியமான பகுதி என்பதை என் வாழ்க்கையில் நான் பின்னால் கண்டேன். இதனால் அடிக்கடி என் உயிருக்கே ஆபத்தைத் தேடிக் கொள்ளவும், நண்பர்களின் வருத்தத்திற்கு ஆளாகவும் நேர்ந்திருக்கிறது. ஆனால், சத்தியமானது பூத்த மலர்போல் மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானதும் ஆகும்.
$$$
19. நேட்டால் இந்தியர் காங்கிரஸ்
வக்கீல் தொழில் எனக்கு இரண்டாம் பட்சமான வேலையாக இருந்து வந்தது. நேட்டாலில் நான் தங்கியது நியாயம் என்றால் பொதுஜன வேலையில் நான் அதிகக் கவனம் செலுத்துவது அவசியம். வாக்குரிமையைப் பறிக்கும் மசோதா சம்பந்தமாக மகஜரை அனுப்பியது மாத்திரம் போதாது. குடியேற்ற நாட்டு மந்திரி, இதில் கவனம் செலுத்தும்படி செய்வதற்கு இடைவிடாது கிளர்ச்சி செய்து கொண்டிருப்பது அத்தியாவசியம் ஆகும். இக்காரியத்திற்காக ஒரு நிரந்தரமான ஒரு பொது ஸ்தாபனத்தை ஆரம்பிப்பது என்று நாங்கள் எல்லோரும் முடிவுக்கு வந்தோம்.
இந்தப் புதிய ஸ்தாபனத்திற்கு என்ன பெயர் கொடுப்பது என்பது சதா என் மனத்தை அலட்டி வந்தது. எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிச் சார்பும் உள்ளதாக இது இருக்கக் கூடாது. காங்கிரஸ் என்ற பெயர், இங்கிலாந்தில் இருக்கும் கன்ஸர்வேடிவ்களுக்கு வெறுப்பானதாக இருந்தது என்பதை அறிவேன். என்றாலும் இந்தியாவுக்கு ஜீவனாக இருப்பதே காங்கிரஸ்தான். நேட்டாலில் அப்பெயரைப் பிரபலப்படுத்த விரும்பினேன். அப்பெயரை வைக்கத் தயங்குவது கோழைத்தனம் என்று எனக்குத் தோன்றிற்று. ஆகையால், அந்த ஸ்தாபனத்திற்கு நேட்டால் இந்தியர் காங்கிரஸ் எனப் பெயரிட வேண்டும் என்று விரிவான விளக்கத்துடன் நான் சிபாரிசு செய்தேன். மே மாதம் 22-ஆம் தேதி நேட்டால் இந்தியர் காங்கிரஸ் பிறந்தது.
சேத் அப்துல்லாவின் விசாலமான அறை முழுவதிலும் அன்று ஒரே கூட்டம் நிறைந்துவிட்டது. வந்திருந்தவர்கள் எல்லோரும் காங்கிரஸைக் குதூகலமாக வரவேற்றனர். அதன் அமைப்பு விதி எளிதானது. சந்தா மாத்திரம் அதிகம். மாதம் ஐந்து ஷில்லிங் கொடுப்பவர் மாத்திரமே அங்கத்தினராகலாம். பண வசதி உள்ளவர்கள், தங்களால் இயன்ற வரையில் தாராளமாகக் கொடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். மாதம் இரண்டு பவுன் தருவதாக அப்துல்லா சேத் முதலில் கையெழுத்திட்டார். நானும் என் சந்தா விஷயத்தில் தாராளமாக கொடுக்க நினைத்து மாதத்திற்கு ஒரு பவுன் என்று எழுதினேன். என்னைப் பொறுத்தவரை இது சின்னத்தொகை அல்ல. நான் சம்பாதித்து, என் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போவதெனில், இத் தொகை என் சக்திக்கு மிஞ்சியதென்று எண்ணினேன். கடவுளும் எனக்கு உதவி செய்தார். மாதம் ஒரு பவுன் சந்தா செலுத்தும் உறுப்பினர்கள் பலர் சேர்ந்தனர். மாதம் 10 ஷில்லிங் தருவதாக முன் வந்தவர்களின் தொகையோ இன்னும் அதிகம். இவையெல்லாம் போக நன்கொடையாகக் கொடுக்கப்பட்டதையும் நன்றியுடன் ஏற்றுக்கொண்டோம்.
கேட்ட மாத்திரத்திலேயே யாரும் சந்தாவைச் செலுத்தி விடுவதில்லை என்பது அனுபவத்தில் தெரியலாயிற்று. டர்பனுக்கு வெளியிலிருந்த உறுப்பினர்களிடம் அடிக்கடி போய்க் கேட்பது என்பது முடியாதது. ஒரு சமயம் இருக்கும் உற்சாகம் இன்னுமொரு சமயம் இருப்பதில்லை. டர்பனில் இருந்த உறுப்பினர்களிடம் கூடப் பன்முறை விடாமல் கேட்டுத் தொந்தரவு செய்துதான் சந்தா வசூலிக்கக வேண்டியதிருந்தது.
நானே காரியதரிசியாகையால், சந்தா வசூலிக்கும் வேலை என்னுடையதாயிற்று. என் குமாஸ்தா, நாளெல்லாம் சந்தா வசூலிக்கும் வேலையிலேயே ஈடுபட்டிருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது. அவரும் அலுத்துப் போனார். இந்த நிலைமை மாற வேண்டுமானால், மாதச் சந்தா என்பதற்குப் பதிலாக அதை வருடச் சந்தாவாக்கி, அந்தச் சந்தாவைக் கண்டிப்பாக முன்பணமாகச் செலுத்திவிடச் செய்துவிட வேண்டும் என்று கருதினேன். ஆகவே காங்கிரஸின் கூட்டத்தைக் கூட்டினேன். மாதச் சந்தா என்பதற்குப் பதிலாக, அதை வருடச் சந்தாவாகச் செய்துவிடுவது என்பதையும், குறைந்தபட்ச சந்தா 3 பவுன் என்று நிர்ணயிப்பதையும் எல்லோரும் வரவேற்றனர். இவ்விதம் வசூல் வேலை அதிக எளிதாயிற்று.
கடன் வாங்கி, அந்தப் பணத்தைக் கொண்டு பொது வேலையைச் செய்யக் கூடாது என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து கொண்டிருந்தேன். மக்களின் வாக்குறுதியை எல்லாவற்றிலும் நம்பலாம், ஆனால் பண விஷயத்தில் மாத்திரம் நம்பக் கூடாது. கொடுப்பதாகத் தாங்கள் ஒப்புக்கொண்ட பணத்தைச் சீக்கிரத்தில் கொடுக்கக் கூடியவர்களை நான் பார்த்ததே இல்லை. நேட்டால் இந்தியர்களும் இதற்கு விலக்கானவர்கள் அல்ல. எனவே, பணம் இருந்தால் ஒழிய எந்த வேலையையும் செய்வதில்லையாகையால், நேட்டால் இந்தியர் காங்கிரஸ் கடன் பட்டதே இல்லை.
அங்கத்தினர்களைச் சேர்ப்பதில் என் சக ஊழியர்கள் அதிக உற்சாகத்துடன் வேலை செய்தார்கள். அந்த வேலை அவர்களுடைய மனத்திற்குப் பிடித்ததாக இருந்ததோடு, அது அதிகப் பயனுள்ள அனுபவமாகவும் இருந்தது. ஏராளமானவர்கள் ரொக்கமாகச் சந்தா கொடுத்துச் சேர முன்வந்தனர். தொலைவாக, உள்நாட்டில் இருந்த கிராமங்களின் விஷயத்தில்தான் வேலை கஷ்டமானதாக இருந்தது. பொது வேலையின் தன்மையை மக்கள் அறியவில்லை என்றாலும் தொலை தூரங்களில் இருந்த இடங்களிலிருந்தும் எங்களுக்கு அழைப்புக்கள் வந்தன. ஒவ்வோர் இடத்திலும் முக்கியமான வியாபாரிகள் எங்களை வரவேற்று, வேண்டிய உதவிகளைச் செய்ய முன்வந்தார்கள்.
இந்த சுற்றுப் பிரயாணத்தின் போது ஒரு சமயம் நிலைமை சங்கடமானதாகிவிட்டது. நாங்கள் யாருடைய விருந்தினராகச் சென்றிருந்தோமோ, அவர் ஆறு பவுன் கொடுப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவரோ மூன்று பவுனுக்கு மேல் எதுவும் கொடுக்க மறுத்துவிட்டார். அவரிடமிருந்து அத்தொகையை வாங்கிக் கொண்டோமாயின் மற்றவர்களும் அது மாதிரியே கொடுப்பார்கள். எங்கள் வசூல் கெட்டுவிடும். அன்று இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. எங்களுக்கோ பசி. ஆனால், அவரிடம் வாங்கியே தீருவது என்று நாங்கள் முடிவு கட்டிக்கொண்ட தொகையை அவரிடம் வாங்காமல் அவர் வீட்டில் நாங்கள் எப்படிச் சாப்பிடுவது? என்ன சொல்லிப் பார்த்தும் பயனில்லை. அவரோ பிடிவாதமாக இருந்தார். அவ்வூரின் மற்ற வர்த்தகர்களும் அவருக்குச் சொல்லிப் பார்த்தார்கள். இரவெல்லாம் அப்படியே எல்லோரும் உட்கார்ந்திருந்தோம். அவரும் பிடிவாதமாக இருந்தார். நாங்களும் பிடிவாதமாக இருந்தோம். என் சக ஊழியர்களில் பலருக்குக் கோபம் பொங்கிற்று. ஆனால், அடக்கிக்கொண்டார்கள். கடைசியாகப் பொழுதும் விடிந்து விட்ட பிறகு அவர் இணங்கி வந்தார். ஆறு பவுன் கொடுத்து, எங்களுக்கு விருந்துச் சாப்பாடும் போட்டார். இது தோங்காத் என்ற ஊரில் நடந்தது. ஆனால் இச் சம்பவத்தின் அதிர்ச்சி, வடக்கில் கடலோரம் இருக்கும் ஸ்டான்கர் வரையிலும் மத்தியப் பகுதியில் இருக்கும் சார்லஸ் டவுன் வரையிலும் பரவி விட்டது. அது எங்கள் வசூல் வேலை துரிதமாக முடியும்படியும் செய்தது.
ஆனால் செய்ய வேண்டிய வேலை, நிதி வசூல் செய்வது மாத்திரம் அன்று. உண்மையில், அவசியமானதற்கு மேல் பணம் இருக்கக் கூடாது என்ற கொள்கையை வெகு காலத்திற்கு முன்னாலிருந்தே நான் கற்றுக் கொண்டிருந்தேன்.
கூட்டங்கள் மாதம் ஒரு முறை நடக்கும். அவசியமானால், வாரத்திற்கு ஒரு முறையும் நடப்பது உண்டு. முந்திய கூட்டத்தின் நிகழ்ச்சிகள் அடுத்த கூட்டத்தில் படிக்கப்படும். பல விஷயங்களும் விவாதிக்கப்படும். பொது விவாதங்களில் பங்கெடுத்துக் கொள்ளுவதிலும், விஷயத்தை ஒட்டிச் சுருக்கமாகப் பேசுவதிலும் மக்களுக்கு அனுபவமே இல்லை. எழுந்து பேச ஒவ்வொருவரும் தயங்கினர். கூட்டங்களின் நடைமுறை விதிகளை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். அவற்றை மதித்து, அவர்களும் நடந்து கொண்டார்கள். அது தங்களுக்கு ஒரு படிப்பு என்பதை உணர்ந்தார்கள். ஒரு கூட்டத்திலும் இதற்கு முன்னால் பேசியே பழக்கம் இல்லாதவர்கள். சந்தித்துப் பொது விஷயங்களைச் குறித்துப் பகிரங்கமாகப் பேசவும் பழகிக் கொண்டனர்.
பொதுவேலைகளில், சில்லரைச் செலவே சமயத்தில் பெருஞ் செலவாகிவிடும் என்பதை அறிவேன். ஆகையால், ஆரம்பத்தில் ரசீதுப் புத்தகங்களைக்கூட அச்சிடுவதில்லை என்று முடிவு செய்திருந்தேன். என் காரியாலயத்தில் பிரதிகள் எடுக்கும் சைக்ளோஸ்டைல் யந்திரம் ஒன்று இருந்தது. அதிலேயே ரசீதுகளுக்கும் அறிக்கைகளுக்கும் பிரதிகளைத் தயாரித்துக் கொண்டேன். காங்கிரஸினிடம் நிதி அதிகம் சேர்ந்து அங்கத்தினர்களும் அதிகமாகி, வேலையும் பெருகிய பிறகே அவைகளையெல்லாம் அச்சிட ஆரம்பித்தேன். ஒவ்வொரு ஸ்தாபனத்திற்கும் இத்தகைய சிக்கனம் அவசியம், என்றாலும் அதுதான் அனுசரிக்கப்படுவதில்லை என்பதையும் அறிவேன். இதனாலேயே, சிறிய ஆனால் வளர்ந்து வருகிற ஒரு ஸ்தாபனத்தின் விஷயத்தில் ஆரம்பத்தில் இந்தச் சிறு விவரங்களையெல்லாம் கவனிப்பதே சரி என்று எண்ணினேன்.
தாங்கள் கொடுக்கும் பணத்திற்கு ரசீது பெற வேண்டும் என்பதைக் குறித்து மக்கள் கவலைப்படுவதே இல்லை. ஆனால் நாங்கள் வற்புறுத்தி ரசீதுகளைக் கொடுத்து வந்தோம். இவ்விதம் ஒவ்வொரு தம்படிக்கும் சரியாகக் கணக்கு வைக்கப்பட்டது. 1894-ஆம் ஆண்டின் கணக்குப் புத்தகங்களை இன்று கூட நேட்டால் இந்தியர் காங்கிரஸ் தஸ்தாவேஜூக்களில் காணலாம் என்று நான் தைரியமாகக் கூற முடியும். கணக்குகளைச் சரியாக வைத்திருக்க இல்லையானால் அந்த ஸ்தாபனத்திற்குக் கெட்ட பெயர் ஏற்பட்டு விடும். சரியானபடி கணக்கு வைத்திருக்காவிட்டால், உண்மையை அதனுடைய அசல் தூய்மையுடன் வைத்து இருப்பதென்பது இயலாத காரியம்.
காங்கிரஸின் மற்றோர் அம்சம், தென்னாப்பிரிக்கா விலேயே பிறந்தவர்களான, படித்த இந்திய இளைஞர்களின் சேவையாகும். அங்கே பிறந்த இந்தியரின் கல்வி சங்கம் ஒன்று காங்கிரஸின் ஆதரவில் அமைக்கப் பெற்றது. இந்தப் படித்த இளைஞர்களே பெரும்பாலும் அச் சங்கத்தின் அங்கத்தினர்கள். பெயருக்கு அவர்கள் ஒரு தொகையைச் சந்தாவாகச் செலுத்த வேண்டும் அவர்களுடைய தேவைகளையும் குறைகளையும் எடுத்துக் கூறுவதற்கும், அவர்களிடையே புதிய எண்ணங்களை எழுப்புவதற்கும், இந்திய வர்த்தகர்களுடன் அவர்களுக்குத் தொடர்பை உண்டாக்கிக் சமூகத்திற்குச் சேவை செய்யும் வாய்ப்பை அவர்களுக்கு அளிப்பதற்கும் இச்சங்கம் பயன்பட்டது. அது ஒரு வகையான விவாதசபை போன்றது. அங்கத்தினர்கள் அடிக்கடி கூடுவார்கள். பல விஷயங்களைக் குறித்துப் பேசுவார்கள்; எழுதியும் படிப்பார்கள். இச்சங்க சம்பந்தமாக ஒரு சிறு புத்தகசாலையும் ஆரம்பமாயிற்று. காங்கிரஸின் மூன்றாவது அம்சம், பிரசாரம். நேட்டாலில் இருந்துவரும் இந்தியர் சம்பந்தமான உண்மையான நிலையை தென்னாப்பிரிக்காவில் மக்களும் அறியும்படி செய்வதே இக்காரியம். அந்த நோக்கத்தின் பேரில் நான் இரு துண்டுப் பிரசுரங்களை எழுதினேன். அவற்றுள் ஒன்று, ‘தென்னாப்பிரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பிரிட்டானியருக்கும் வேண்டுகோள்’ என்பது. அது, நேட்டால் இந்தியரின் பொதுவான நிலைமையை ஆதாரங்களுடன் கூறுவதாகும். மற்றொரு பிரசுரம், ‘இந்தியரின் வாக்குரிமை – ஒரு கோரிக்கை’ என்ற தலைப்புடையது. நேட்டால் இந்தியரின் வாக்குரிமையைப்பற்றிய சரித்திரம், உண்மை விவரங்களுடனும், புள்ளி விவரங்களுடனும் அதில் சுருக்கமாகக் கூறப்பட்டது, இந்த துண்டுப் பிரசுரங்களைத் தயாரிப்பதற்கு நான் அதிகம் படிக்க வேண்டியிருந்ததோடு அதிக சிரமம் எடுத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. ஆனால், இதில் உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைத்தது. அவைகளை எல்லா இடங்களுக்கும் அனுப்பினோம்.
இத்தகைய நடவடிக்கைகளின் பயனாக தென்னாப்பிரிக்காவில் இந்தியருக்கு ஏராளமானவர்கள் நண்பர்கள் ஆயினர். இந்தியாவில் இருந்த எல்லாக் கட்சியினரின் தீவிரமான அனுதாபமும் கிடைத்தது. அத்துடன் தென்னாப்பிரிக்க இந்தியர், திட்டமான நடவடிக்கையில் இறங்குவதற்கு ஒரு வழியும் ஏற்பட்டு, வேலைத் திட்டமும் உருவாயிற்று.
$$$
20. பாலசுந்தரம்
மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறி விடுகிறது. இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் நான் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதே என் உள்ளத்தின் ஆசை. அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டு போய்ச் சேர்த்தது. அதனால் அவர்களில் ஒருவனாக என்னை ஆக்கிக் கொள்ளவும் முடிந்தது.
தென்னாப்பிரிக்காவிலேயே பிறந்த இந்தியரும், குமாஸ்தாக்கள் வகுப்பினரும், நேட்டால் இந்தியர் காங்கிரஸில் அங்கத்தினர்களாக இருந்த போதிலும், நுட்பப் பயிற்சி பெறாதவர்களான சாதாரணத் தொழிலாளரும், ஒப்பந்தத் தொழிலாளரும் அதில் இன்னும் இடம் பெறாமலேயே இருந்து வந்தனர். சந்தா கொடுத்துச் சேர்ந்து அதன் அங்கத்தினர்கள் ஆகிவிட அவர்களால் இயலாது. அவர்களுக்குச் சேவை செய்வதன் மூலமே, காங்கிரஸ் அவர்களுடைய அன்பைப் பெற முடியும். அதற்கு நானோ காங்கிரஸோ தயாராக இல்லாத தருணத்தில் அதற்கான வாய்ப்பு, தானே வந்து சேர்ந்தது. நான் வக்கீல் தொழிலை நடத்த ஆரம்பித்து மூன்று, நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை. காங்கிரஸும் இன்னும் அதன் குழந்தைப் பருவத்தில் தான் இருந்தது. அப்பொழுது ஒரு தமிழர், கந்தை அணிந்து, முண்டாசுத் துணியைக் கையில் வைத்துக்கொண்டு, முன்னம் பற்கள் இரண்டும் உடைந்துபோய், ரத்தம் வழியும் கோலத்தில் நடுங்கிக்கொண்டும், அழுது கொண்டும் என் முன்னே வந்து நின்றார். அவர் தம்முடைய எஜமானால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார். என் குமாஸ்தா ஒரு தமிழர். அவர் மூலம் எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்து கொண்டேன். வந்தவரின் பெயர் பாலசுந்தரம் டர்பனில் குடியிருப்பவரான ஒரு பிரபலமான ஐரோப்பியரின் கீழ் அவர் ஒப்பந்தத் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவருடைய எஜமான் அவர் மீது கோபம் கொண்டார். அத்து மீறிப்போய், பாலசுந்தரத்தைப் பலமாக அடித்து, அவருடைய முன்னம் பற்கள் இரண்டை உடைத்துவிட்டார்.
அவரை ஒரு டாக்டரிடம் அனுப்பினேன். அந்த நாளில் வெள்ளைக்கார டாக்டர்களே உண்டு. பாலசுந்தரத்திற்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மையைக் குறித்து, டாக்டரிடமிருந்து ஓர் அத்தாட்சி வேண்டுமென்று கேட்டேன். அத்தாட்சியைப் பெற்றேன். காயமடைந்தவரை நேரே மாஜிஸ்டிரேட்டிடம் அழைத்துச் சென்றேன். அவரிடம் பாலசுந்தரத்தின் பிரமான வாக்குமூலத்தைச் சமர்ப்பித்தேன். அதைப் படித்ததும் மாஜிஸ்டிரேட் எரிச்சலுற்றார். எஜமானுக்கு சம்மன் அனுப்பினார்.
அந்த எஜமான் தண்டிக்கப்பட வேண்டும் என்பதன்று என் விருப்பம். அவரிடமிருந்து பாலசுந்தரம் விடுதலை பெற வேண்டும் என்றே நான் விரும்பினேன். ஒப்பந்தத் தொழிலாளரைப் பற்றிய சட்டங்களைப் படித்தேன். சாதாரண வேலைக்காரன் ஒருவன் முன்கூட்டி அறிவிக்காமல் வேலையை விட்டுப் போய் விடுவானாயின், எஜமான் அவன் மீது சிவில் கோர்ட்டில் வழக்குத் தொடரலாம். ஆனால் ஒப்பந்தத் தொழிலாளியின் விஷயத்திலோ இம் முறை முற்றும் மாறானது. அதே போன்ற நிலையில் முன்கூட்டி அறிவிக்காமல் ஓர் ஒப்பந்தத் தொழிலாளி போய்விட்டால், எஜமான் அத்தொழிலாளி மீது கிரிமினல் கோர்ட்டில் வழக்குத் தொடுத்துத் தண்டித்துச் சிறையில் இடலாம். இதனாலேயே இந்த ஒப்பந்த முறை, அடிமைத் தனத்தைப் போல் மிக மோசமானது என்று, ஸர் வில்லியம் ஹண்டர் கூறினார். ஓர் அடிமையைப் போன்றே ஒப்பந்தக் கூலியும் எஜமானனின் சொத்து.
பாலசுந்தரத்தை விடுவிப்பதற்கு, இருந்த வழிகள் இரண்டுதான். ஒப்பந்தத் தொழிலாளரின் பாதுகாப்பாளரைக் கொண்டு, பாலசுந்தரத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி செய்யலாம். அல்லது வேறு ஓர் எஜமானிடம் அவரை மாற்றிவிடச் செய்யலாம். இல்லையாயின் பாலசுந்தரத்தின் எஜமான் அவரை விடுவித்து விடுமாறு செய்யலாம். அந்த எஜமானிடம் சென்று பின்வருமாறு கூறினேன்: “உங்கள் மீது வழக்குத் தொடுத்து, நீங்கள் தண்டனை அடைய வேண்டும் என்று நான் விரும்பவில்லை. அவரைப் பலமாக அடித்துவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணருகிறீர்கள் என்றே நம்புகிறேன். அவருடைய ஒப்பந்தத்தை மற்றொருவருக்கு நீங்கள் மாற்றி விடுவீர்களாயின் நான் திருப்தியடைவேன்.” இதற்கு அவர் உடனே சம்மதித்து விட்டார். பிறகு ஒப்பந்தத் தொழிலாளரின் பாதுகாப்பாளரைப் போய் பார்த்தேன். புதிய எஜமான் ஒருவரை நான் கண்டுபிடிப்பதாக இருந்தால் அதற்குத் தாமும் சம்மதிப்பதாக அவர் கூறினார்.
எனவே, ஓர் எஜமானைத் தேடிப் புறப்பட்டேன். ஒப்பந்தத் தொழிலாளியை இந்தியர் யாரும் வேலைக்கு வைத்துக் கொள்ளக் கூடாதாகையால், நான் தேடும் எஜமான் வெள்ளைக்காரராகவே இருக்க வேண்டும். அப்பொழுது எனக்கு மிகச் சில ஐரோப்பியர்களையே தெரியும். அவர்களில் ஒருவரைச் சந்தித்தேன். பாலசுந்தரத்தை வைத்துக் கொள்ள அவர் மிக அன்புடன் ஒப்புக் கொண்டார். அவருடைய அன்பை நன்றியறிதலோடு ஏற்றுக் கொண்டேன். பாலசுந்தரத்தின் எஜமான் குற்றஞ் செய்திருப்பதாக மாஜிஸ்டிரேட் முடிவு கூறினார். ஒப்பந்தத்தை வேறு ஒருவருக்கு மாற்றிவிட அவர் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் பதிவு செய்தார்.
பாலசுந்தரத்தின் வழக்கு, ஒப்பந்தத் தொழிலாளர் ஒவ்வொருவருடைய காதுக்கும் எட்டிவிட்டது. அவர்கள் என்னைத் தங்களுடைய நண்பனாகக் கருதினார்கள். இந்தத் தொடர்பைக் குறித்து, நான் அளவற்ற மகிழ்ச்சியடைந்தேன். ஒப்பந்தத் தொழிலாளர்கள், ஓயாமல் என் காரியாலயத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுடைய இன்ப துன்பங்களை அறிந்து கொள்ளுவதற்கு எனக்குச் சிறந்த வாய்ப்பு அதனால் ஏற்பட்டது.
பாலசுந்தரம் வழக்கின் எதிரொலி, தொலை தூரத்தில் இருக்கும் சென்னையிலும் கேட்டது. அம்மாகாணத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஒப்பந்தத் தொழிலாளராக நேட்டாலுக்கு வந்திருந்தவர்கள் தங்கள் சகோதரத் தொழிலாளர்களின் மூலம் இவ்வழக்கைக் குறித்து அறியலாயினர்.
அவ் வழக்கைப் பொறுத்த வரையில் அதில் விசேஷமானது எதுவும் இல்லை. ஆனால், தங்கள் கட்சியை எடுத்துப் பேசுவதற்கும் நேட்டாலில் ஒருவர் இருக்கிறார் என்பது ஒப்பந்தத் தொழிலாளருக்கு ஆனந்தத்தோடு கூடிய அதிசயமாக இருந்ததோடு அதனால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் உண்டாயிற்று.
முண்டாசுத் துணியைக் கையில் வைத்துக்கொண்டு, பாலசுந்தரம் என் காரியாலயத்திற்குள் வந்தார் என்று ஆரம்பத்தில் கூறினேன். இதில் நமது மானக்கேட்டைக் காட்டும் துக்ககரமான அம்சம் ஒன்று இருக்கிறது. என் தலைப்பாகையை எடுத்துவிடும்படி தலையில் வைத்திருப்பது குல்லாயாக இருந்தாலும் தலைப்பாகையாக இருந்தாலும், தலையில் சுற்றிய ஒரு துண்டாக இருந்தாலும் ஓர் ஐரோப்பியரைப் பார்க்கப் போகும்போது ஒவ்வோர் ஒப்பந்தத் தொழிலாளியும், புதிதாக வந்த ஒவ்வோர் இந்தியரும், அதைத் தலையிலிருந்து எடுத்தாக வேண்டும். இரண்டு கைகளால் சலாம் போட்டாலும் போதாது. இந்தப் பழக்கம் நிர்ப்பந்தமாகச் சுமத்தப்பட்டு வந்திருக்கிறது. என் விஷயத்திலும் அதே பழக்கத்தை அனுசரிக்க வேண்டும் என்று பாலசுந்தரம் கருதியிருக்கிறார். அதனாலேயே முண்டாசுத் துணியைக் கையில் எடுத்துக் வைத்துக்கொண்டு என்னிடம் வந்தார். என் அனுபவத்தில் இவ்விதம் நிகழ்ந்தது இதுவே முதல் தடவை. அவமானத்தினால் என் மனம் குன்றியது. தலையில் முண்டாசைக் கட்டும்படி அவரிடம் கூறினேன். கொஞ்சம் தயங்கிக்கொண்டே அவர் கட்டினார். என்றாலும், அவருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியை அவர் முகத்தில் நான் காண முடிந்தது.
மனிதர்கள் தங்களுடைய சகோதர மனிதர்களை அவமானப் படுத்துவதன் மூலம் தாங்கள் கௌரவிக்கப்படுவதாக எப்படி நினைக்கிறார்கள் என்பது, எனக்கு என்றுமே புரியாத மர்மமாக இருந்துவருகிறது.
$$$