-பத்மன்

(ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய ‘சிவானந்த லஹரீ’யின்
தமிழ் வடிவமும் விளக்கமும்)
*
43. உள்ளக் காட்டில் உறைபவன்
.
மா கச்ச த்வமிதஸ்ததோ கிரிச’ போ மய்யேவ வாஸம் குரு
ஸ்வாமின்னாதிகிராத மாமகமன: காந்தார ஸீமாந்தரே/
வர்தந்தே பஹுசோ’ ம்ருகா மதஜுஷோ மாத்ஸர்ய- மோஹாதய-
ஸ்தான் ஹத்வா ம்ருகயா-வினோத ருசிதாலாபம் ச ஸம்ப்ராப்ஸ்யஸி//
.
மலைவாழும் தலைவேடா அலையாதீர் அங்குமிங்கும்
நிலையாக வசித்திடுவீர் என்னுடை மனவனத்தே
பொறாமை மோகமென்னும் கொடுமாக்கள் உலவிடுதே
கொன்றிடுவீர் வேட்டையாடி நன்றாய் மகிழ்வீரே!
.
சிவபெருமான் கைலாஸ மலை மீது வசிப்பவர். இன்னும் பிற மலைகளிலும், வனங்களிலும் வாசம் செய்பவராகப் புராணங்களும், இதிகாசங்களும் உரைக்கின்றன. மேலும், மலைமகளையே தமது மனையாளாகக் கொண்டவன் அந்த மகேசன், கிரீசன். மகாபாரதத்திலே அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரத்தை தந்தருள, வேடனாகத்தான் அவன் முன்னர் சிவபெருமான் காட்சி தருகிறார். அவருக்கு கிராதமூர்த்தி என்றும் பெயருண்டு. அப்பேர்பட்ட சிறந்த வேடனாகிய சிவபெருமான் வசிப்பதற்கு, உண்மையிலேயே சிறந்த வனம் எது தெரியுமா? பக்தனின் மனம்தான். எப்படி? இதோ, ஆதிசங்கரரின் வாய்மொழியைக் கேட்போமே!
மலையிலே வசிக்கின்ற கிரீசா, நீர் மலைக்கு மலை அலைந்து திரிய வேண்டாம். நிலையாக, என்னுடைய மனதாகிய வனத்திலேயே வசித்திடுவீர். காட்டிலே எப்படி உம்மால் வேட்டையாடப்படுவதற்காகக் கொடிய விலங்குகள் திரிகின்றனவோ, அதுபோல என் மனதாகிய வனத்திலும், பொறாமை, மோகம் போன்ற பல கொடிய மிருகங்கள் உலவுகின்றன. ஆகையால் எனது மனத்திலேயே தங்கியிருந்து, இந்தக் கொடிய விலங்குகளைக் கொன்று குவித்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் இருங்கள் சிவபெருமானே என்று பக்தன் சார்பில் கேட்டுக்கொள்கிறார்.
.மனத்திலே தோன்றுகின்ற தீய எண்ணங்களை, சிவபெருமான் குறித்த சிந்தனையே வேட்டையாடி அழித்துவிடும் என்பதை கவித்துவமாக இப்படிக் கூறுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
$$$