-வ.உ.சிதம்பரம் பிள்ளை

3. ஆன்ம வலிமையை அடைதல்
இன்பத்தையும் உற்சாகத்தையும் புதுமையையும் நாடுகிற, எப்பொழுதும் நகைத்தற்கோ அழுதற்கோ நாடுகிற, பலத்தையும் நிலைப்பையும் வலிமையையும் நாடாத, ஆனால் பலஹீனத்தைப் பின்பற்றித் தம்மிடமுள்ள பலத்தைத் தொலைப்பதில் ஈடுபட்டிருக்கிற, ஆடவரும் மகளிரும் உலகத்தில் நிறைந்திருக்கின்றனர்.
உண்மையான வலிமையையும் செல்வாக்கையுமுடைய ஆடவரும் மகளிரும் சிலரே; ஏனெனில், வலிமையை அடைவதற்கு அவசியமான தியாகத்தைச் செய்தற்குச் சிலரே தயாராயிருக்கின்றனர்; பொறுமையோடு ஒழுக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராயிருப்பவர் அவரினும் சிலரே.
உங்களுடைய நிலையற்ற நினைப்புக்களாலும் மனோவெழுச்சிகளாலும் ஆளப்படுதல், நீங்கள் பலஹீனமாயும் வலிமையற்றும் இருத்தற்கே; அச் சக்திகளைச் சரியாக அடக்கியாள்தல் நீங்கள் பலமாயும் வலிமையுற்றும் இருத்தற்கே. பலத்த மிருகக் காமக் குரோதங்களையுடைய மனிதர் மூர்க்கத் தனத்தைக் கொண்டிருக்கின்றனர்; ஆனால், அது வலிமையன்று, அங்கு வலிமையின் தாதுக்கள் இருக்கின்றன; ஆனால், உயர்ந்த அறிவைக் கொண்டு மூர்க்கத்தைப் பழக்கிக் கீழ்ப்படுத்திய போதுதான் உண்மையான வலிமை ஆரம்பமாகின்றது; அறிவினுடையவும் ஞானத்தினுடையவும் உயர்ந்த நிலைகளைத் தாம் அடைந்தபோதுதான், மனிதர் வலிமையுடையவராகக் கூடும்.
ஒரு பலஹீனனுக்கும் ஒரு பலவானுக்குமுள்ள வித்தியாசம் அவனுடைய விருப்பத்தின் பலத்தைப் பொறுத்ததன்று; (ஏனெனில், பிடிவாதமுள்ள மனிதன் வழக்கமாக பலஹீனனாயும் மடையனாயும் இருக்கிறான்.) ஆனால், அவனுடைய அறிவுடைமையின் நிலைமைகளைக் காட்டும் மனச்சான்றின் கூர்மையைப் பொறுத்தது.
இன்பத்தை நாடுகின்றவர்களும், உற்சாகத்தை நேசிக்கின்றவர்களும், புதுமையின் பின்செல்கின்றவர்களும், மனோவெழுச்சிக்கும் மனோவுணர்ச்சிக்கும் ஆளாகின்றவர்களும், சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும், செல்வாக்கையும் கொடுக்கும் கொள்கைகளைப் பற்றிய அறிவில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
தன் மனோவெழுச்சிகளையும் சுயநய விருப்பங்களையும் தடுத்து, தன்னுள்ளிருக்கிற மிக உயர்ந்ததும் மிக அமைதி வாய்ந்ததுமான தன் அறிவை ஆதாரமாகக் கொண்டு, ஒரு கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகத் தொடங்குங்காலையில், ஒரு மனிதன் வலிமையை வளர்க்க ஆரம்பிக்கிறான்.
தன்னறிவில் மாறாத தத்துவங்களைக் காண்டல் மிக மிக உயர்ந்த வலிமையை உடனே அடைவதற்கு ஆதாரமும் மருமமும் ஆகும்.
அதிகமாகத் தேடிய பின்னும், துன்பப்பட்ட பின்னும், தியாகஞ் செய்த பின்னும், நித்தியப் பொருளின் ஒளி ஆன்மா மீது வீசும்போது, ஒரு தெய்வ அமைதி உண்டாகிறது; சொல்ல முடியாத பேரின்பம் ஹிருதயத்தை மகிழ்விக்கின்றது.
அத்தகைய நித்தியப்பொருளை எவன் கண்டானோ, அவன் அலைந்து திரிதலை விட்டுச் சமாதானமாகவும், தன்னை அடக்கி யாண்டுகொண்டும் இருக்கிறான். அவன் ”காமக் குரோதங்களுக்கு அடிமையாயிருத்தலை” விட்டு, விதியாகிய கோயிலை எஜமானாயிருந்து காட்டுகிறான்.
ஒரு கொள்கையாலல்லாமல், தன்னால் ஆளப்படுகிற மனிதன், தனது சுயநய சௌகரியங்களுக்கு அபாயம் வரும்போது முதுகு காட்டி ஓடுகிறான். தனது சுய நன்மைகளைக் காப்பதற்கும், அவற்றிக்குக் கேடு வராமல் தடுப்பதற்கும், ஆழ்ந்த எண்ணமுடையவனாயிருக்கிறபடியால், அவன் அதற்கு உதவும் எல்லா வழிகளையும் நியாயமான வழிகளென்று கருதுகிறான். தனக்குத்தானே சத்துருவென்பதைக் காணமுடியா விதத்தில், தன்னையே மிக மிகப் பற்றிக் கொண்டிருக்கிறபடியால், அவன் தனது விரோதிகளிடமிருந்து தன்னை எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாமென்று இடைவிடாது சதியாலோசனை செய்துகொண்டிருக்கிறான். அத்தகைய மனிதனுடைய வேலை தூள் தூளாகப் போகின்றது; ஏனெனில், அது மெய்ப்பொருளினின் வலிமையினின்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றது. தன்னை அடிப்படையாகக் கொண்டிருக்கிற முயற்சிகளெல்லாம் நாசம் அடைகின்றன; அழிக்க முடியாத ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற வேலை மாத்திரம் நிலை நிற்கின்றது.
ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகுகின்ற மனிதன், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அமைதியாகவும் அச்சமில்லாமலும் தன்னை அடக்கியாண்டு கொண்டிருப்பான். மெய்ப்பொருளை விடுவதா, அல்லது தனது சரீர சௌகரியங்களை விடுவதா என்ற சோதனைக் காலம் வரும்போது, அவன் தனது சரீர சௌகரியங்களை விட்டுவிட்டு உறுதியாயிருக்கிறான். சித்திரவதை அல்லது மரணம் வருவதானாலும் அஃது அவனைத் தடுக்கவாவது, மாற்றவாவது முடியாது. ‘யான்’ என்னும் மனிதன் தனது செல்வத்தை இழத்தலையும், தனது சௌகரியங்களை இழத்தலையும், தனது உயிரை இழத்தலையும் மிக மிகப் பெரிய ஆபத்துக்களாகக் கருதுகிறான். ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகும் மனிதன் இந்தச் சம்பவங்களை மிக அற்பமானவையாகவும் மெய்ப்பொருள் இழப்போடும் ஒழுக்க இழப்போடும் ஒப்பிடத்தக்கவை யல்லவென்றும் கருதுகிறான். மெய்ப்பொருளைக் கைவிடுதலே அவனுக்கு ஓர் ஆபத்தென்று சொல்லத்தக்கது.
சங்கட காலந்தான்; யார் யார் இருளின் அடிமைகள், யார் யார் ஒளியின் மக்கள் என்று தீர்மானிப்பது, அச்சுறுத்தும் விபத்து, அழிவு இம்சை இவை வருங்காலந்தான் செம்மறி ஆடுகளிலிருந்து வெள்ளாடுகளைப் பிரித்துக் காட்டுவது; வலிமையுள்ள ஆடவர்களையும், மகளிர்களையும் பிற்காலத்தவருடைய மதிப்புக்குப் பாத்திரராக்குவது.
ஒரு மனிதன் தனது உடைமைகளை அனுபவிக்கும்படியாக விடப்பட்டிருக்கிற காலமெல்லாம் சாந்தி, சகோதரத்வம், பேரன்பு இவற்றின் கொள்கைகளைக் கைக்கொண்டும், நம்பியும் இருக்கும்படி தன்னைச் செய்து கொள்வது அவனுக்கு எளிதாயிருக்கும். ஆனால் அவனுடைய அவ்வநுபோகங்களுக்கு ஆபத்து வரும்போது அல்லது அவ்வநுபோகங்களுக்கு ஆபத்து வருகிறதாக அவன் நினைக்கும்போது, அவன் சண்டைக்காக உரத்துச் சத்தமிடுவானாயின், அவன் சாந்தி, சகோதரத்துவம், பேரன்பு இவற்றைக் கொண்டிருக்கவில்லையென்றும், சண்டை, சுயநயம், வெறுப்பு இவற்றைக் கொண்டிருக்கிறதாகவும் காட்டுகிறான்.
தனது உலக உடைமை ஒவ்வொன்றையும் இழக்கும்படியான நிலைமை ஏற்படும்போதும், தன் மதிப்பையும் உயிரையும்கூட இழக்கும்படியான நிலைமை ஏற்படும்போதும், தனது கொள்கையைக் கைவிடாதவனே மனிதன்; தனது ஒவ்வொரு சொல்லும் செயலும் நிலைநிற்கச் செய்யும் மனிதன், பிற்காலத்தார் கனப்படுத்தி மரியாதை செய்து வணங்கும் பெருமை வாய்ந்த மனிதன். தமக்கு ஆதாரமாகக் கொண்டிருந்ததும், தாம் பூரணமாக நம்பியிருந்ததுமான தெய்வ அன்பைக் கைவிட மறுத்து, ஏசுநாதர் மிக மிகக் கொடிய துன்பத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்தார்; இன்று இவ்வுலகம் அவருடைய பாதார விந்தங்களில் ஆனந்தப் பரவசத்துடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறது.
ஆன்ம உண்மைகளைக் காணும் அக ஒளியையும் அறிவையும் தவிர, ஆன்மவலிமை அடைவதற்கு வேறு வழியில்லை; அடிக்கடி நினைப்பதாலும் அப்பியசிப்பதாலுமே அவ்வான்ம உண்மைகளைக் காண முடியும்.
தெய்வ அன்பை எடுத்துக்கொள்ளுங்கள்; அதனைப் பூரணமாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடன், அதைப் பற்றி அமைதியோடும் சுறுசுறுப்போடும் தியானியுங்கள். அதனுடைய மின்சார ஒளியை உங்கள் பழக்கங்கள், உங்கள் செயல்கள், மற்றவர்களோடு நீங்கள் கொள்ளும் உறவு, பேசும் பேச்சு, உங்கள் ஒவ்வொரு நினைப்பு, விருப்பம் இவற்றில் காட்டுங்கள். இவ்வழியில் நீங்கள் முயலும்போது, தெய்வ அன்பு மேன்மேலும் நன்றாக உங்களுக்குத் தெரியும்; உங்கள் சொந்தக் குறைகள் மேன்மேலும் தெளிவாக உங்களுக்குத் தோன்றி, உங்களைப் புது முயற்சியில் ஈடுபடுத்தும்; அவ்வழியாக அன்பின் ஒப்பற்ற மகத்துவத்தை ஒரு க்ஷணம் தரிசனம் செய்துவிடின், பின்னர் ஒருபோதும் நீங்கள் உங்கள் பலஹீனத்தில், உங்கள் சுயநயத்தில், உங்கள் குறைபாட்டில் இருக்க மாட்டீர்கள்; அந்த அன்புக்குப் பொருத்தமற்ற ஒவ்வோர் அம்சத்தையும் கைவிட்டு, அதற்கு முழுப் பொருத்தமாக உங்களைச் செய்துகொள்ளும் வரையில், நீங்கள் அதனைப் பின்பற்றிச் செல்வீர்கள். அன்பிற்கு ஒற்றுமையான அகநிலைமையே ஆன்மவலிமை, தூய்மை கருணை போன்ற ஆன்ம உண்மைகளை எடுத்து அவற்றைப் பற்றியே தியானித்து அவற்றை மேன்மேலும் அப்பியசியுங்கள்; உங்கள் ஆன்மாவின் ஒவ்வொரு மாசும் நீங்கும் வரையிலும், உங்கள் ஹிருதயத்திலிருந்து கடினத் தன்மையும், குற்றங்காண்டலும், இரக்கமின்மையும் நீங்கும் வரையிலும், நிங்கள் இடைவழியில் நில்லாதவர்களாகிய மெய்ப்பொருள்பால் சேருவீர்கள்.
இந்த உண்மைகளை நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு அறிந்து, உணர்ந்து, நம்புகின்றீர்களோ, அவ்வளவுக்கவ்வளவு ஆன்ம வலிமையை அடைவீர்கள்; அவ்வலிமை உங்களிடத்திலும், உங்கள் மூலமாகவும் மேன்மேலும் வளர்ந்து அமைதி, பொறுமை, சமநிலை இவற்றின் வடிவங்களாக வெளிப்படும்.
அமைதி, மேலான தன்னடக்கத்தைக் காட்டுகின்றது; வாழ்க்கையின் கடமைகளுக்கும் சிதறல்களுக்கும் மத்தியில் அசைக்கப்படாத ஓர் அமைதியைக் கொண்டிருத்தல் அவ்வமைதியுடையார் ஆன்ம வலிமையுள்ள மனிதர் எனக் காட்டுகின்றது. ”உலகத்தில் உலகத்தரது அபிப்பிராயத்தைப் பின்பற்றி வாழ்தல் எளிது. தனித்த இடத்தில் தனது சொந்த அபிப்பிராயத்தைப் பின்பற்றி வாழ்தல் எளிது. ஆனால், எவன் கூட்டத்தின் மத்தியில் ஏகாந்தத்தின் பூரண இனிமையை அனுபவிக்கிறானோ, அவனே பெரிய மனிதன்.”
அமைதியின் நிறைவே அற்புதங்களைச் செய்யும் வலிமைக்கு மூலம் என்று சில யோகிகள் கூறுகின்றார்கள். உண்மையில், எவ்வளவு பெரிய இடியும் தன்னைப் பாதிக்க முடியாத விதத்தில் எவன் தனது மனோசக்திகளை அடக்கி ஆள்கிறானோ, அவன் அச் சக்திகளைச் சாமர்த்தியமாகச் செலுத்தி நடத்தும் திறமையை உடையவனாயிருப்பான்.
தன்னடக்கத்தில், சாந்தத்தில், சமாதானத்தில் வளர்தல், பலத்திலும், வலிமையிலும் வளர்தலேயாம். ஒரு கொள்கையில் உங்கள் சித்தத்தை ஏகாக்கிரப்படுத்தலினாலே தான், நீங்கள் அக்கொள்கைப்படி வளர்ச்சியடையக்கூடும். ஒரு குழந்தை எவ்வித உதவியும் இல்லாமல் நடப்பதற்குப் பலமுறை எத்தனங்கள் செய்த, பலமுறை தவறி விழுந்து, கடைசியாக நடத்தல் போல, நீங்கள் முதலில் தனியாக நடப்பதற்கு எத்தனித்து வலிமை மார்க்கத்தில் பிரவேசித்தல் வேண்டும். மனிதர்களுக்குள் நீங்கள் நிமிர்ந்து தனியாக நடந்து செல்லும் திறமையை அடையும் வரையில் வழக்கம், சம்பிரதாயம், ஐதிகம் என்னும் கொடுமையை உடைத்தெறிய வேண்டும். உங்கள் சொந்த அறிவை நம்புங்கள்; உங்கள் மனச்சாட்சிக்கு ஒத்து நடங்கள்; உங்கள் அக விளக்கைப் பின்பற்றிச் செல்லுங்கள்; புற விளக்குகளெல்லாம் கொள்ளிவாய்ப் பிசாசுகள். நீங்கள் அறிவற்றவர்களென்றும், உங்கள் அறிவு பிழைபட்டதென்றும், உங்கள் மனச்சாட்சி முழுக் கோணலானதென்றும், உங்கள் அக விளக்கு இருளென்றும் சொல்பவர்கள் பலர் இருப்பார்கள்; அவர்களுடைய சொற்களைக் கவனிக்காதீர்கள். அவர்கள் சொல்வது உண்மையாயிருப்பின், நீங்கள் ஞானத்தை நாடுகிறவர்களானபடியால் நீங்கள் அவ்வுண்மையை விரைவில் தெரிந்துகொள்வது தன்மையே; உங்கள் சக்திகளை உபயோகித்து அவ்வுண்மையை நீங்கள் காணக்கூடும். ஆதலால், உங்கள் மார்க்கத்தில் நீங்கள் தைரியமாகச் செல்லுங்கள். உங்கள் மனச்சாட்சி உங்களுக்குச் சொந்தமானது; அதனைப் பின்பற்றிச் செல்பவன் அடிமை. நீங்கள் அநேக தடவை தவறி விழலாம்; அநேக காயங்களை அடையலாம்; அநேக குத்துக்களைச் சிறிது காலம் பெறலாம்; ஆனால், உங்கள் வெற்றி வெகு சமீபத்தில் இருப்பது உண்மையென்று நம்பி, விசுவாசத்தோடு முன்செல்லுங்கள். ஒரு பாதையை, ஒரு கொள்கையைத் தேடுங்கள்; அதனைக் கண்டதும் அதனை நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்; அசையாமல் நீங்கள் அதனோடு சேர்ந்து, சுயநயத்தின் அலைகளையும் புயல்களையும் வெல்லும் வரையில், நீங்கள் அதன் மேல் அசையாமல் நில்லுங்கள்.
சுயநயம், எந்த உருவோடு கூடியதாயினும், சிதறுதலும், பலஹீனமும், மரணமும் ஆகும்; பரநயம் அதன் ஆன்மக்காட்சியில், ஒன்றுபடுதலும், பலமும், உயிரும் ஆகும். ஆன்ம வாழ்க்கையில் நீங்கள் வளர்ந்து, உண்மைக் கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்ட காலையில், நீங்கள் அக்கொள்கைகளைப் போலவே அழகும் அசையாத்தன்மையும் உடையவர்கள் ஆவீர்கள்; அவைகளின் அழியாத சாரத்தின் இனிமையை அனுபவிப்பீர்கள்; அகக் கடவுளின் அழியாத நித்தியமான தன்மையை அடைவீர்கள்.
விதியின் நடுங்கும் அடிமைக ளாலே
சூழப் பட்டும் தாழா துள்ளம்
சாபமொடு துன்பையும் நோவையும் எதிர்த்து
வெறுப்பெனும் புயலிடை மேலே நிமிர்ந்து
நிற்கும் ஒழுக்க நிலையரைத்
துன்பம் நல்கும் அம்புகள் அணுகா.
மௌன வலிமையால் மகிமையொடு சாந்தி
அமைந்து நிற்கிறான்; அசையான்; திரும்பான்.
துயரநு பவிக்கும் இருள்நே ரத்தில்
பொறுமையோ டுறுதியாய் நிற்கிறான்; காலம்
அவனுக் கடிபணி கின்றது;
சாவையும் விதியையும் தள்கிறான் உதைத்தே.
அவனைச் சுற்றி வெகுளியின் பயங்கர
மின்னல்கள் ஓடி விளையாடு கின்றன;
அவனது தலைமேல் நரக இடிகள்
முழங்கு கின்றன; அவன் அசை கின்றிலன்;
அவனை அவைகொலல் ஆற்றா,
காலமோ டிடத்தைக் கடந்தவ ளாதலால்.
அழியா அன்பால் ஆளப் படுகிற
அவனுக் கச்சம் யாதில் உளது?
மாறா மெய்ப்பொருள் மேவி அவன்தான்
இலாபநட் டங்கள் எங்ஙனம் காண்பான்?
நித்தியத் துவத்தைப் பெற்றதால்
அசைகின் றிலன்காண் நிழல்வந் தேகுங்கால்
"அவன் இறவாதவன்; அவன் ஒளி; மெய்ப்பொருள்
எதிர்காலம் உணர்த்தும் இறை" எனச் சொல்மின்
அவன் அவ்வுயர்நிலை அடைந்தனன் விருப்பொரு
கடவுள் மகிமையின் உடையை உடுத்தே
இரவின் கொடிய இருளில்
கடவுட் டன்மையை இடைவிடா துன்னியே.