அகமும் புறமும்- 3ஆ

-பேரா. அ.ச.ஞானசம்பந்தன்

தலைவியை நினைத்துக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தக் கட்டளை இடுகின்ற காலத்திலும் தலைவன் தன் உயர்ந்த பண்பாட்டிலிருந்து நீங்கவில்லை. திடீரென்று தலைவனுடைய தேர் வேகமாகப் போகத் தொடங்கினால் உடன் வருகின்ற வீரர்கள் ஓடும்படி நேரிடுமன்றோ? அவர்கள் அவ்வாறு ஓடிப் பின்தொடர வேண்டிய இன்றியமையாமை போர்க்காலத்தில் உண்டு. ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை ஓடவைப்பது முறையன்று. எனவே, தலைவன் அவர்கள் வேண்டுமளவு தங்கி இளைப்பாறிவிட்டுப் பின்னர் வரட்டும் என்கிறான்.

அகம்

3. இலக்கியத்தில் வாழ்வு- ஆ

மடலேறுவது பற்றிய பாடல்

அறிவாலும் திருவாலும் நிறைந்தவன் அத்தலைவன்; நல்ல கல்வியும் ‘மன உறுதியும் கொண்டது முடிக்கும் ஆற்றலும்’ உடையவன். இத்தகைய அவன் எதிர்பாராவிதமாக ஒரு பெண்ணைக் கண்டான். அதற்கு முன் அவன் ஆயிரக்கணக்கான பெண்களைக் கண்டதுண்டு. ஆனால், மனித சமுதாயத்தின் சரிப் பகுதியினரான அவர்களுள் அவன் மனத்தை ஒருவரும் கவரவில்லை. ஆனால், இன்று அப்பெண்ணைக் கண்டவுடன் தன் மனத்தைப் பறி கொடுத்து விட்டான். ஒரு பெண்ணால் இம்மாதிரி தன் மனத்தைக் கவர முடியும் என்பதை அவன் அதற்குமுன் நினைத்ததுகூட இல்லை அவளும் இம்மாதிரியே அத் தலைவனிடம் தன் மனத்தைப் பறிகொடுத்துவிட்டாள். அச்சம், மடம், நாணம் முதலியவற்றை உடையவள்தான் அத்தலைவி; சிறந்த குடியிற் பிறந்தவளும் ஆவாள். ஆடவரைக் கண்டால் உடனே மனம் மாறுபடும் இனத்தைச் சேர்ந்தவளல்லள் அவள். அவ்வாறு இருந்தும், அவர்கள் ஒருவரை ஒருவர் காண நேர்ந்தது எனில், அது விதியின் விளையாட்டு என்றே இருவரும் கருதினர். ‘பால் வரை தெய்வம் கடைக்கூட்டக் கண்டனர்’ என்று பழந் தமிழர் இக்காட்சியை விரித்துரைத்தனர். எதிர்பாரா விதமாக ஒரு நாள் ஒரு சோலையில் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்ப்பட்டனர். ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’. இருவரும் பார்த்துக் கொண்ட பார்வை மூலமாகவே ஒருவர் மற்றொருவருடைய உள்ளத்தில் புகுந்து நிலையாய்த் தங்கி விட்டனர். ‘இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்தினார்’. இக்காட்சியின் பின்னர் இருவரும் உள்ளமும் உடலும் கலந்தவர்களாய்ச் சிறிது நேரம் இருந்துவிட்டுப் பிரிந்தனர். அவ்வாறு பிரியும் பொழுது அவள் மிகவும் வருந்தினாள்; இனி எப்பொழுது எவ்வாறு அவனைக் காண முடியும் என்று அஞ்சினாள். அவன் பலபடியாக அவளுக்கு அமைதி கூறினான்; தன் ஊர் மிக அணித்தாகவே உளதென்றும், தினந்தோறும் அவளை வந்து சந்திப்பதாகவும் கூறினான்.

தனது ஊர் மிகவும் அண்மையில்தான் இருக்கிறது என்பதை மிகவும் அழகுபடக் கூறுகிறான் அத்தலைவன்.

‘பெண்ணே, அஞ்ச வேண்டா! எம் ஊரிடத்திலுள்ள மலை போன்ற பெரிய மாளிகைகள் சுண்ணாம்பு பூசப் பெற்று மிக்க ஒளியுடன் விளங்குகின்றன. அந்தச் சுண்ணத்தின் வெண்மையான ஒளிபடுவதால், உன் ஊரில் உள்ள கரியநிறமுடைய குன்றுகள் அனைத்தும் வெண்மை நிறம் பெற்று விளங்கும்’, என்ற கருத்தால்,

இருங்குன்ற வாணர் இளங்கொடி யே! இடர் எய்தல்! எம்ஊர்ப்
பருங்குன்ற மாளிகை நுண்கள பத்து ஒளி பாயநும் ஊர்க்
கருங்குன்றம் வெண்ணிறக் கஞ்சுகம் ஏய்க்கும் கனங்குழையே!

    (சிற்றம்பலக்கோவை-15)

என்று தன் கலையறிவையும் காட்டி அவள் வருத்தத்தையும் போக்கினான். இருவரும் ஓரளவு ஆறுதல் பெற்றுப் பிரிந்து விட்டனர்.

அத்தலைவன் ஒரு பெரிய நாட்டின் மன்னன். பற்பல அலுவல்களை உடையவன். எனவே, அவனுடைய வேலை காரணமாகச் சில நாட்கள் அத் தலைவியைச் சந்திக்க முடியவில்லை. ஒருநாள் மிகவும் அவளுடைய நினைவைப் பெற்றவனாக முன்னர் அவளைச் சந்தித்த இடத்திற்குச் சென்றான். ஆனால், அவளை அங்குக் காண முடியவில்லை. அவனுடைய வருத்தம் மிகவும் அதிகமாகி விட்டது. என் செய்வதென்று தெரியாமல் வருந்தினான். அவளுடைய ஊர் முதலியன அவனுக்குத் தெரியுமேனும், ஊரினுட்சென்று அவளைப் பற்றி விசாரிப்பது இயலாத காரியம். எனவே, தன் துயரத்தைப் பிறரிடம் கூறி வருத்தத்தை ஆற்றிக் கொள்ளக்கூட முடியாத நிலைமையில் பலமுறை வருவதும் போவதுமாய் இருந்தான்.

இந்நிலையில் தலைவியின் பாடு மிகவும் திண்டாட்டமாகி விட்டது. அவனாவது ஆண்மகன் என்ற முறையில் பல இடங்கட்குச் செல்வதாலும் பலருடன் பழகுவதனாலும் தன் துயரை மறக்கக் கூடிய நிலையில் இருந்தான். ஆனால், அவளோ, பெண்! அவளுடைய வருத்தத்தை வெளியிற்கூடக் கூற முடியவில்லை! என் செய்வாள் பாவம்! அவளுக்கு உயிர்த் தோழி ஒருத்தி உண்டு. அவளிடமாவது கூறித் தன் மன வருத்தத்தை ஆற்றிக் கொள்ளலாம் என்று நினைத்தாள். ஆனால், பலமுறை நினைந்தும் துணிவு பிறக்கவில்லை. ஒருவரிடமும் கூறாமல் தன் துயரத்தைத் தானே பொறுத்துக் கொண்டு வருந்தினாள். உடல் இளைக்கத் தொடங்கிற்று; உணவு சரியாகச் செல்லவில்லை; பாலும் கசக்கும் நிலைமை அடைந்துவிட்டாள். படுக்கை நோவத் தொடங்கிவிட்டது. இரவில் அவள் நல்ல உறக்கம் பெற்றுப் பல நாட்களாகிவிட்டன. உடல் இளைப்பைக் கண்ட அவளுடைய தாய், மகளைத் தெய்வம் தீண்டி விட்டதாகவே முடிவு செய்துவிட்டாள். தெய்வக் குற்றத்தைப் போக்கும் முறையில் வேலனை வைத்து வெறியாட முடிவு செய்துவிட்டாள்.

தலைவியின் பாடு மிகவும் இடைஞ்சலாகிவிட்டது. வேலன் வெறியாடிய பிறகும் அவளுக்கு உடல் தேறவில்லை என்றால், தாய் முதலானவர்கள் அவள் மேல் ஐயங்கொள்ளத் தலைபட்டுவிடுவார்கள். எனவே தீவிரமாக இதுபற்றி ஆய்ந்து இறுதியாகத் தோழியிடம் கூற வேண்டும் என்ற முடிவுக்கு வந்தாள். இந்நிலையில் தோழியே ஐயப்பட்ட நிலையிலிருந்து உறுதிப்பாட்டுக்கு வந்து விட்டாள். தான் உறுதியாக நம்புகிற ஒன்றை எவ்வாறு தலைவியிடம் எடுத்துக் கூறுவது என்பதுதான் அவளுடைய தொல்லை. வேறு வழி இல்லாமல் குறிப்பாக ஒரு நாள் பேச்சைத் தொடங்கினாள். இத்தகைய ஒரு வாய்ப்பை எதிர்ப்பார்த்திருந்த தலைவிக்கு இது மிகவும் பொருத்தமாக அமைந்துவிட்டது. எனவே, தோழியிடம் தன் தலைவனைப் பற்றிக் கூறிவிட்டாள். மேலும், அவனை விரைவில் அடையாவிடில், தன்பாடு மிகவும் திண்டாட்ட மாகிவிடும் என்பதையும் அறிவித்தாள். தோழி அவளை அஞ்ச வேண்டா என்றும், விரைவில் அத்தலைவனையே மணந்து கொள்ளுமாறு செய்வதாகவும் உறுதிமொழி கூறினாள்.

இவ்வாறு தோழிக்கும் தலைவிக்கும் உரையாடல் நடைபெற்ற இரண்டொரு நாட்கள் கழிந்த பின் ஒரு நாள் தோழி தலைவனைக் கண்டாள். இவள்தான் தன் தலைவியின் உற்ற தோழி என்பதை அறிந்த தலைவன், தோழியிடம் பேச்சைத் தொடங்கினான். ஆனால், தோழி சிறிதும் விட்டுக் கொடாமற் பேசினாள்; தலைவி படும் வருத்தத்தைச் சிறிதும் வெளிக்காட்டாமலும், பிடி கொடாமலும் பேசினாள். தலைவன் பாடு போதும் போதும் என்றாகி விட்டது. இறுதியாக அவன் தன் வருத்தம் முழுவதையும் வெளியிட்டான். அதிலும் பயன் இல்லாமற் போய்விடவே, தலைவன் தான் மடல் ஏறப் போவதாகவே கூறினான்.

மடல் ஏறுதல் என்பது அக் காலத்து வழக்கம். ஒரு தலைவன் தன்னால் விரும்பப்பட்ட தலைவியை மணந்து கொள்ள முயல்வான். ஆனால், சுற்றத்தார், தோழி முதலிய யாராலாவது தடை ஏற்படுமாயின், தன் தலைவியினிடம் கொண்டுள்ள அன்பின் ஆழத்தை வெளியிட மடல் ஏறுவதும் உண்டு. இலக்கியத்தில் காணப்பெறும் இம்மடல் ஏறும் வழக்கம் வாழ்க்கையில் எவ்வளவு தூரம் கடைப்பிடிக்கப்பட்டது என்பதை அறிதற்கில்லை. இலக்கிய இலக்கணங்களிற் கண்டபடி மடல் ஏறுதல் என்பது வியப்பைத் தரக்கூடியதாம். பனை மரத்தின் கருக்கினால் செய்யப் பெற்ற குதிரை ஒன்றின் மேல் தலைவன் ஏறிக் கொள்வான். தலைவியினுடைய உருவம் தீட்டப் பெற்ற ஓர் ஓவியம அவனது கையில் இருக்கும். தலைவியினுடைய ஊரில் சென்று அவளுடைய பெற்றோரும் சுற்றத்தாரும் இருக்கும் இடத்தின் எதிரே செல்வான். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே அவ்வூரில் உள்ள சிறு பிள்ளைகளை விட்டு அக்குதிரையை இழுக்கச் செய்வான். பணங்கருக்கினால் செய்யப் பெற்ற குதிரையாதலின், அது தலைவனுடைய தொடையைக் கிழிக்கும். அவனுடைய தொடையிலிருந்து உதிரம் பெருகும். இக் கொடுமையைக் காணச் சகியாத சுற்றத்தார், அத்தலைவியினுடைய பெற்றோரைக் கேட்டு அப்பெண்ணை இத்தலைவனுக்கே மணம் முடிக்க ஏற்பாடு செய்வர். தலைவன் தலைவியினுடைய படத்தை எழுதிக்கொண்டுதான் அக்குதிரையில் ஏற வேண்டும் என்ற இந்தக் கட்டுப்பாடு, இலக்கியத்தில் மிக அழகான சில பாடல்கள் தோன்றவும் காரணமாயிற்று.

திருச்சிற்றம்பலக் கோவையார் என்பது ‘மாணிக்கவாசகர்’ என்று கூறப்பெறும் திருவாதவூர் அடிகளால் அருளிச் செய்யப் பெற்றது. திருவாசகத்தை அருளிய அப் பெருமானே இவ்வழகிய நூலையும் இயற்றியுள்ளார். கோவை என்பது ஒரு தலைவன் தலைவியைக் கண்டு காதலித்து அவளுடன் களவு மணத்தில் ஈடுபட்டுப் பின்னர் அவளையே மணந்து வாழ்வதைப் பற்றிப் பாடுவது, இந்த நிகழ்ச்சியை நானூறு பிரிவுகளாக வகுத்துக் கொண்டு பாடுவதே கோவை எனப்படும். தலைவன் தலைவியைக் காண்பது, “இவள் தெய்வ மகளோ!” என்று ஐயங்கொள்வது போன்ற ஒவ்வொரு நிலைக்கும் ஒன்று முதல் பல பாடல்கள் பாடப் பெறும். பெரும்பாலும் இறைவனையோ, ஒரு பெரிய அரசனையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டே பாடப்பெறும் இந்நூல். மணிவாசகப் பெருமான் பாடிய கோவையாரின் பாட்டுடைத் தலைவன் சிதம்பரத்தின்கண் ஆனந்தத் தாண்டவம் புரியும் பொன்னம்பலவனே. அந்தச் சிறந்த நூலில் மடல் ஏறுதல் பற்றி வரும் பகுதி மிக அழகானது. தலைவன், ‘நான் மடல் ஏறப் போகிறேன்’ என்று கூறுகிறான். தோழி, ‘அது முடியாது,’ என்கிறாள். தலைவன் ‘ஏன் முடியாது?’ என்று கேட்கிறான். அதற்குத் தோழி அழகாக விடை கூறுகிறாள். ‘தலைவீர், மடல் ஏற வேண்டுமானால், தலைவியினுடைய படத்தை எழுத வேண்டும் அன்றோ? எம் தலைவியின் படத்தைத்தான் எழுத முடியாதே! அவள் குரலுக்குப் பதிலாக ஒரு யாழை எழுதும்; அவள் பல் வரிசைக்குப் பதிலாக முத்துக்களை எழுதும். கூந்தலுக்குப் பதிலாக மேகக் கூட்டத்தைப் பூவுடன் எழுதும்; அவள் உதடுகட்குப் பதிலாக ஒரு கொவ்வைக் கனியை எழுதும்; இவை அனைத்தையும் தாங்கிக் கொண்டிருக்கும் ஒரு பூங்கொம்பு இருக்குமாயின், அதனைக் கொண்டு வாரும் மடல் ஏறுவதற்கு,’ என்று கூறுகிறாள் தோழி.

யாழும் எழுதி எழில்முத்து எழுதி இருளின் மென்பூச்
சூழும் எழுதிஓர் தொண்டையும் தீட்டிஎன் தொல்பிறவி
ஏழும் எழுதா வகைசிதைத் தோன்புலி யூர்இளமாம்
போழும் எழுதிற்றுஓர் கொம்பர்உண் டேல்கொண்டு போதுகவே!

      (திருக்கோவையார்-79)

திருமங்கை ஆழ்வார் ‘சிறிய திருமடல்’ என்றும் ‘பெரிய திருமடல்’ என்றும் இம்மடலேறுதலை இரண்டு பாடல்களாக அருளிச் செய்துள்ளார். அவ்வழகிய பாடலிலும் ஆழ்வார்:

"பேர்ஆ யிரமும் பிதற்றிப் பெருந்தெருவே
ஊரார் இகழினும் ஊராது ஒழியேன்நான்
வாரார்பூம் பெண்ணை மடல்." 

     (சிறிய திருமடல், 78-80)

என்று அருளுவது காண்க.

நாம் கூறி வந்த தலைவனும் தோழியைக் கண்டு, தான் மடல் ஏறித்தான் தலைவியை அடைய வேண்டுமா என்று கேட்கிறான். ‘மடல் ஏறி அதனால் பெறுகின்ற பழியுடனா தலைவியை அடைய வேண்டும்? இதைவிடச் சாவு வருமேயாயின், அது எவ்வளவு சிறப்புடையதாக இருக்கும்?” என்று வருந்திக் கூறுகிறான் அத்தலைவன்.

“பனை மடலாலே செய்யப்பெற்ற குதிரையில் ஏறி, எருக்கம்பூ, பூளைப்பூ முதலியவற்றைச் சூடி, இடம் அகன்ற பல ஊர்களிலும் நாட்டிலும் திரிந்து, அழகிய தலைவியின் நலங்களை எல்லாம் எடுத்துக் கூறிச் செல்லும் மடலேறும் தொழிலைச் செய்யாமல், என் மனத்தைக் கட்டுப்படுத்தி, அதுவே நோயாக இருந்து இறந்து போவேனாயின், அது எவ்வளவு நன்மையாக இருக்கும்! அகன்ற பெரிய ஆகாயத்திடத்தே இராகு விழுங்கிய பசிய கதிர்களை உடைய நிலவைப் போலக் கூந்தலுடன் விளங்கும் நெற்றியையுடைய தலைவி யான் நினைக்குந்தோறும் என் எதிரே வந்து வினாவி என்னை மெலியச் செய்கிறாள். அதனால் எனக்குக் காமநோய் மிகுதியாகி இருக்கிறது!” என்ற கருத்துடன் பாடல் அமைகிறது.

மடல்மா ஊர்ந்து மாலை சூடிக்
கண்அகன் வைப்பின் நாடும் ஊரும்
ஒண்ணுதல் அரிவை நலம்பா ராட்டிப்
பண்ணல் மேவலம் ஆகி அரிதுற்று
அதுபிணி ஆக விளியலங் கொல்லோ?
அகல்இரு விசும்பின் அரவுக்குறை படுத்த
பசுங்கதிர் மதியத்து அகல்நிலாப் போல
அளகம் சேர்ந்த சிறுநுதல்
கழறும் மெலிக்கும் நோய்ஆ கின்றே! 

       (நற்றிணை-377)

(மடல்மா- பனங்கருக்கால்; செய்த குதிரை; கண் அகன் வைப்பு- இடம் அகன்ற பூமி; ஒண்ணுதல்- ஒளி பொருந்திய நெற்றி; அரிவை- தலைவி; பண்ணல் மேவலம் – அலங்கரித்துக் கொள்ளலை விரும்பேம்; விளியலங் கொல்லோ- சாகமாட்டோமோ; அளகம்- கூந்தல்; கழறும்- இடித்துக்கூறும்)

இவ்வழகிய பாடலின் இறுதி நான்கு அடிகளிலும் தலைவியின் அழகைக் கூறுகிறான் தலைவன். ஆனால், அவ்வாறு கூறுமுகமாகவே அவளிடத்தில் தான் கொண்டுள்ள தணியாக் காதலையும் வெளியிட்டு விடுகிறான். ‘மடலேறித்தான் நான் இறக்க வேண்டுமா? அது இல்லாமல் இந்தப் பாழ் உயிர் போகவும் மறுக்கிறதே’ என்று கூறுகையில் தலைவி இல்லாவிட்டால் தான் இறந்து போவது உறுதி என்னுங் கருத்தையும் பெற வைத்தான். மேலும், அவ்வாறு தான் உயிர்விட நேர்ந்தால் அந்தப் பழி தலைவியைத்தான் சேரும் என்பதையும் கூறிவிட்டான்.

காதல் காதல் காதல்
காதல் போயிற்
சாதல் சாதல் சாதல்

என்று கூறிய கவியரசர் பாரதியாரின் மூதாதை போலும் இத்தலைவன்!

***

பாலைத் திணை

பாலைத் திணை நிகழ்வதாகக் கூறப்படும் இடம் பாலை நிலம், காலம் நல்ல கோடைக்காலம், பொழுது நண்பகல்.

தலைவன் தலைவியைவிட்டுப் பிரிவதும் அதுபற்றிய பிற செய்திகளும் பேசப்படும் இத்திணைப் பாடல்களில்.

தலைவியை விட்டுப் பிரிந்து சென்ற தலைவனுடைய மனநிலையை விளக்கும் பாடல் இது:

பொய்கையில் ஓடுமீன் வழி

ஒருநாள் தலைவன் குளிப்பதற்காகக் குளத்திற்குச் சென்றான். நல்ல தாமரைத் தடாகத்தில் தண்ணீர் குளிர்ந்தும் தெளிந்தும் இருந்தது. அதன் அருகில் ஈடுபட்ட தலைவன், குளத்துள் இறங்கிக் குளியாமல், கரையில் அமர்ந்துவிட்டான். அவன் மனத்துள் ஒரு பெரிய போராட்டம் நிகழ்கிறது. நெடுநாளாகவே குடும்பத்தில் ஒரு குறை இருந்து வருகிறது. அக்குறையை எவரும் எடுத்துக் காட்டவில்லை. இன்னும் பார்க்கப்போனால் அது இல்லாததுபோலவே நடந்துகொள்கின்றனர். அக்குறை பொருட்குறைதான். வேண்டுமான அளவு பொருள் வசதி இல்லை. தலைவனுக்குப் பெரிய பெரிய குறிக்கோள்கள் உள்ளன. இவற்றை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமாயின், நிறையப் பொருள் வேண்டும். ஆனால், வீட்டிலே இன்றியமையாதவற்றை வாங்கக்கூடப் பொருள் முட்டுப் படுகிறது. தலைவனுக்கு உள்ளூரப் பெரிய கவலைதான். ‘ என்ன செய்தால் இக்கவலை தீரும்!’ என்று ஆராய்ந்தான். முடிவாக, ‘வெளியூர் சென்று பொருளீட்ட வேண்டும்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டான்.

அவன் ஏதோ செயற்கரிய காரியத்தைச் செய்யத் துணிந்துவிட்டவன் போல மகிழ்ச்சி அடைந்தான். ஆனால், இம்மகிழ்ச்சி மிகச் சிறிது நேரமே தங்கியிருந்தது. ஏன் எனில், ‘பொருள் தேடுதல்’ என்றாலே வெளிநாடு செல்ல வேண்டும் என்பது தானே பொருள்? வெளிநாடு செல்ல வேண்டும் என்றால் அது எத்துணைப் பெரிய காரியம் அந்த நாட்களில்? வெளிநாட்டில் வாழும் அந்த நாட்களில் என்ன தனிமை! நினைத்த பொழுதே நெஞ்சு நடுங்கும் தனிமை! ஏன்? அங்கு மக்களே இல்லையா? இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும், தான் பல காலம் பழகிய தன் சுற்றத்தாரையும் உயிரினும் இனிய காதலியை யும் விட்டுப் பிரிந்து வாழ வேண்டிய அந்தத் தனிமை! தலைவியை விட்டுப் பிரிவதை நினைத்தாலே போதும், பொருள் சேகரிப்பதில் உள்ள மகிழ்ச்சி எல்லாம் காற்றாய்ப் பறந்து விடும். ஆனால், இப்பொழுது தலைவன் வீட்டிலேதான் இருக்கிறான். தலைவியின் இன்பத்தில் ஈடுபட்டிருக்கையில் ஒரோவழிப் பெருள் இல்லாத கவலை வந்து குறுக்கிடுகிறது.

இவ்வாறு பலவிதமான எண்ணங்கட்கு இடையில் அவதிப்பட்ட தலைவன், அன்று குளக்கரையில் அமர்ந்து தன் எண்ணங்களை ஓடவிட்டிருக்கிறான். ‘தலைவி, பொருள் தேடப் பிரிவு’ என்ற இரண்டின் இடையே நடைபெற்ற போராட்டத்தில் ஒருவிதமாக ஒரு முடிவுக்கு வந்துவிட்டான் நேற்றைப் பொழுதில். எவ்வாறாயினும் கடமையை நிறைவேற்றப் போவதுதான் ஆண் மகனாகிய தனக்கே முறை என்பதை உணர்ந்தான். தலைவியின் மாட்டுக் காதலில் திளைக்கும் அவனுடைய நெஞ்சங்கூட அவன் செய்யத் துணிந்ததே முறையானது என்று கூறிற்று. இனித் தடை என்ன? எவ்வாறாயினும் பொருள் தேடப் போய்விடலாம் என்ற முடிவுடனேதான் நேற்றைப் பொழுது முழுவதும், ஏன் – இன்று குளக்கரைக்கு வரும் அளவும் தலைவன் உறுதி பூண்டிருந்தான். ஆனால், இப்பொழுது குளத்தினுள் பார்த்துக் கொண்டிருக்கையில்…! ஆ! ஈதென்ன புதுமை! அவன் இதுவரை காணாத ஒன்றைக் கண்டுவிட்டானா? ஆம்! அவனுடைய உறுதி எல்லாம் குலைந்து விட்டது போன்ற ஒரு முகக் குறிப்பு இதோ வெளிப்படுகிறது. தலைவன் இதோ வாய்விட்டுப் பேசுகிறான்:

...............................................பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பன்
ஓடுமீன் வழியில் கெடுவ......... 

     (நற்றிணை-16)

(பொருளானது, வாடாத தாமரை போன்ற மலர்களை உடைய குளத்தின் நடுவே மீன்கள் ஓடும் பொழுது உண்டாகின்ற வழியைப் போல அழியத் தக்கது)

அதாவது, மீன்கள் ஓடும்பொழுது வழி உண்டாவது போலத் தோன்றி, அம் மீன்கள் அப்பாற் சென்ற மறு விநாடியே வழி என்ற ஒன்று இல்லாது போய்விடுகிற தன்றோ? அது போலப் பொருள் என்பதும் பாடுபட்டுத் தேடும் பொழுது நிறையச் சேர்வது போலத் தோன்றிப் பிறகு தான் இருந்த இடமும் இல்லையாக மறைந்துவிடும் ஒன்றாகும். இதனை வாய்விட்டுத் தலைவன் கூறிக் கொண்டிருக்கும் பொழுதே யாரோ ஒரு புலவர் இந்தப் பொருளின் நிலையாமை பற்றிக் கூறியது அவன் நினைவுக்கு வருகிறது. அவர் என்றோ ஒருநாள் பாடினார்:

'வீழுநர்க்கு இறைச்சியாய் விரல்கவர்பு இசைக்குங்கோல்
ஏழும்தம் இசைகெட இடைநின்ற நரம்புஅறூஉம்
யாழினும் நிலைஇல்லாப் பொருள்...' 

      (பாலைக்கலி-8)

(விரும்பிக் கேட்பார்க்கு இன்பந் தருவதாய், விரலாலே வாசிக்கப்படுகிற நரம்பு ஏழும், தாம் இருந்தும் பயன் படாதபடி வாசிக்கும் வில்லில் அகப்பட்டு இடை நின்ற நரம்பு அறும்படியான யாழைக் காட்டிலும் நிலையில்லாத பொருள்)

மேலும் அந்தப் புலவர் பொருளின் நிலையாமை பற்றித் தொடர்ந்து பாடியதைத் தலைவன் இப்பொழுது நினைவிற்குக் கொண்டு வந்தான்:

'மரீஇத்தான் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது
பிரியுங்கால் பிறர்எள்ளப் பீடு இன்றிப் புறம்மாறும்
திருவினும் நிலையில்லாப் பொருள் ...' 

     (பாலைக்கலி-7)

(திருமகள், தான் விரும்பி மனத்தால் ஏற்றுக் கொண்டவர் களை, தான் வந்து சேரும் பொழுது இருந்த நிலைபோல் இல்லாமல் பிரிந்து செல்லும் பொழுது பிறர் கண்டு கேவலமாய்ப் பேசும் அளவுக்குத் தாழ்த்திவிட்டுச் செல்லும் தன்மை போல நிலையில்லாத பொருள்)

அதாவது, புதுப் பணக்காரன் ஆனவன் மீட்டும் ஏழையானால், அவனது பழைய நிலைதானே என்று கருதாமல், உலகத்தார் அவனை மிகுதியும் எள்ளி நகை யாடுகிறார்களாம். முன்னர் ஏழையாய் இருந்தபொழுது இருந்த நிலைகூட இப்பொழுது (இடையில் பணக்காரனாகி மறுபடியும் ஏழையான இப்பொழுது) இல்லாமல் செய்கிற திருமகள் என்றபடி.

அந்தப் புலவர் பாடிய இந்த மூன்று அடிகளும் தலைவன் நினைவிற்கு வந்தன. உடனே தான் கொண்டிருந்த முடிவு ஆட்டங் கண்டுவிட்டதைத் தலைவன் உணர்ந்தான்; எவ்வாறு ஆயினும் பொருள் தேடப் போக வேண்டும் என்ற முடிவு இப்பொழுது தன்பால் இல்லை என்பதை உணரத் தலைப்பட்டான். தான் இதுவரை கொண்டிருந்த முடிவு நெகிழ்ந்தவுடன் தலைவனுக்கு மீட்டும் ‘எது பெரிது?’ என்ற வினாத் தோன்றத் தொடங்கி விட்டது. தலைவியுடன் கூடி இருப்பதைப் பெரிதென மதித்தால், பொருள் தான் இருக்கும் இடந்தேடி வரப் போவதில்லை. ஆனால், கடமையை நிறைவேற்றப் பொருள் தேவை என்று உணர்ந்து அதனைத் தேடப் புறப்பட்டால், தலைவியுடன் சேர்ந்து வாழ இயலப் போவதில்லை. இதனிடையில் அவனுடைய நெஞ்சம் மாறி மாறி அவனுக்கு அறவுரை கூறத் தொடங்கி விட்டது. தலைவி எதிரே இருக்கின்ற வரை அவளுடைய அழகில் தானும் ஈடுபட்டு தன்னையும் ஈடுபடுத்திய நெஞ்சம், ‘இவ்வளவு அழகுடையவளை வருந்த விட்டுப் போகலாமா? இது முறையா?’ என்று எடுத்துக் கூறிற்று. ஆனால், அவளைப் பிரிந்து அப்பாற் சென்றவுடன் உலகத்தார்க்கு அவன் ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவூட்டி, ‘இனியும் சும்மா இருக்கலாமா? உடனே பொருள் தேடப் புறப்பட்டு’, என்று இடித்துக் கூறத் தொடங்கி விட்டது. எனவே, தன் நெஞ்சைப் பார்த்து அந்தக் குளக்கரையில் இருந்தபடியே தலைவன் கூறத் தொடங்கி விட்டான்.

‘நெஞ்சே!, தலைவி இன்பம் பெரிதென மதித்து இவன் இருந்து விட்டால், பொருள் நம்மை வந்து அடையாது. பொருள் தேடும் கடமை இன்றியமையாதது என்று நினைந்து சென்று விட்டால், தலைவியினிடத்துப் பெறும் இன்பம் கைகூடாது. ஆனால், இரண்டினும் இன்பம் அடையக்கூடும் நீ. இங்கிருந்தால் தலைவியிடத்தே இன்பம் பெறுவாய். இவளை விட்டுப் பொருள் தேடச் சென்றாலோ, அவ்விடத்தும் இன்பம் பெறுவாய். ஆனால், என்னைப் பொருத்தவரை இவளை விட்டு நீங்கிவிட்டால் இன்பம் பெறுவது இயலாத காரியம். அப்படித்தான் இவளை விட்டுத் தேடப் போகிற பொருள் இவளைப் போல நிலைத்த இன்பத்தைத் தரக் கூடியதா என்ன? அதுவும் இல்லை. வாடாத பூக்கள் நிறைந்த குளத்தினிடத்து மீன்கள் ஓடும்பொழுது தோன்றும் வழியைப் போலத் தோன்றி, உடன் மறைந்துபோம் இயல்புடைய இப்பொருளுக்காக, நிலைபெற்ற இவள் இன்பத்தைத் துறக்க என்னால் இயலாது. நீ வேண்டுமானால் அப்பொருளைத் தேடிச் செல்க. யான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். பெரிய கடலால் சூழப் பெற்ற இவ்வுலகை மரக்காலாகக் கொண்டு ஏழு முறை அளக்கக்கூடிய அளவு பெறும் பொருளைப் பெறுவதாயினும், நான் தலைவியை விட்டு வர மாட்டேன். கனமான குழையைக் காதுகளில் அணிந்த அவள் குளிர்ச்சி பொருந்திய செவ்வரி பரந்த தன் கண்களால் அடிக்கடி என்னைப் பார்க்கிறாள். அப் பார்வையால் தாக்குண்ட நான் இனி வர மாட்டேன்! இனி அந்தப் பொருள் எக்கேடாயினும் கேட்டுப் போகட்டும்! அப்பொருளை விரும்பிச் செல்வார்மாட்டு அது தங்கி வாழட்டும்!’

இந்த முறையில் பொருள்படத் தலைவன் தன் நெஞ்சை நோக்கிக் கூறுகிறான்:

புணரின் புணராது பொருளே; பொருள்வயின்
பிரியின் புணராது புணர்வே; ஆயிடைச்
சேர்பினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு
உரியை வாழிஎன் நெஞ்சே! பொருளே
வாடாப் பூவின் பொய்கை நாப்பண்
ஓடுமின் வழியில் கெடுவ; யானே
விழுநீர் வியல்அகம தூணி ஆக
எழுமாண் அளக்கும்விழுநிதி பெறினும்
கனங்குழைக்கு அமர்ந்த சேயரி மழைக்கண்
அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனன்,
எனைய ஆகுக! வாழிய பொருளே! 

     (நற்றிணை - 16)

(புணரின்-தலைவியிடம் தங்கினால்; புணராது-சேராது; ஆயிடைச் சேர்பினும்-பொருள் தேடும் அவ்விடம் சேர்ந்தாலும்; நல்லதற்கு உரியை-உனக்கு இன்பம் கிட்டும்; விழுநீர்-கடல்; வியல் அகம-அகன்ற உலகம்; தூணி-மரக்கால் என்னும் இரண்டு படி கொண்ட ஓர் அளவு; சேயரி-சிவந்த வரிகள்; அமர்ந்தினிது நோக்கம்- இனிய பார்வை; செகுத்தனன்-இவள் பார்வையால் என் ஆற்றல அழிந்தேன்.)

இவள் இன்பத்தில் வெறுப்படையாமல் முதுமைப் பருவம் வரையில் இங்கு  தங்கிவிட்டால் பிறகு பொருள் தேடல் முடியாது என்ற கருத்தைத் தலைவன், ‘புணரின் புணராது பொருளே,’ என்றும், பிரிந்து சென்றுவிட்டால் இவள் இறந்துவிடுவாளாகலின், இனி வந்தபொழுது இவள் இன்பம் கிடைக்காது என்ற கருத்தைப் ‘பொருள் வயின் பிரியின் புணராது புணர்வே,’ என்றும் கூறி, அந் நெஞ்சுக்குக் குறிப்பாக ‘நீயும் இங்குத் தங்க வேண்டுவதே முறை’ என்று கூருமுகமாக, ‘நல்லதற்கு உரியை’ என்று கூறின அழகு மீட்டும் ஒருமுறையன்றிப் பன்முறை படித்து மகிழத் தக்கதன்றோ!

இதே கருத்துபட, கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்ற புலவர், பட்டினப்பாலை என்றதொரு பெரிய பாடலைப் பாடியுள்ளார். கரிகால் பெருவளத்தானுடைய காவிரிப்பூம்பட்டினத்தின் பெருமையைப் பலபடியாக எடுத்துக்கூறி, அப்புலவர் பெருமான், ‘இத்தகைய ஒப்பற்ற பட்டினத்தையே எனக்குப் பரிசிலாக அக்கரிகாலன் தந்தாற்கூட யான் என் காதலியை விட்டு வரமாட்டேன்!’ என்று கூறுகிறார். 301 அடிகளையுடைய அப்பாடலில் அதில் மேற்சொன்ன கருத்து இதுதான்:

'முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும்
வார்இருங் கூந்தல் வயங்கிழை ஒழிய...
வாரேன்; வாழிய நெஞ்சே!' 

     (பட்டினப்பாலை-218-220)

தமிழன் கொண்ட காதற்சிறப்பை அறிய இவை சிறந்த எடுத்துக்காட்டுகள் அல்லவா?


***

கடமையை நிறைவேற்றிச் செல்லும் தலைவனுடைய மனப் போராட்டத்தை விளக்கும் பாடல் இது:

தேய்புரி பழங்கயிறு

இத்தப் பரந்த உலகத்தில் என்று மனிதன் தோன்றினானோ, அன்றே அவனைத் தொடர்ந்து துன்பமும் தோன்றியது போலும்! மனிதன் ஆதியில் தனிமையாய்க் காடுகளிலும் மலைகளிலும் வாழ்ந்திருப்பான். குடி இருக்கக் குச்சு வேண்டும் என்று கவலைப்படாமலும், அடுத்த வேளை உணவுக்கு என்ன செய்வது என்பதுபற்றி அவன் கவலை கொள்ளாமலும் வாழ்ந்த காலம் அது. பசியெடுத்த பொழுது ஆயுதங்களுடன் வெளியே சென்று காட்டில் நிறைந்திருந்த விலங்குகளில் வேண்டுவனவற்றை வேட்டையாடி உண்டுவிட்டு, அடுத்த வேளை உணவுக்கு அதில் சிறிது மீத்து வைத்துக்கொள்ளவுங்கூடக் கவலைப் படாமல் இருந்த காலம்!

அத்தகைய நிலையில் அவனுக்குக் கடமை என்று கூறத் தக்கது ஒன்றும் இருந்தற்கில்லை. மனிதன் தன்னையொத்த பிற மனிதருடன் கூடி வாழத் தொடங்கிய பின்னரே அவனுக்கென்று சில கடமைகள் தோன்றுகின்றன. இதுவரைத் தன் உரிமையை அன்றிப் பிறரைப் பற்றிக் கவலை கொள்ளாது இருந்த அவனுக்கு இப்பொழுது புதிய அனுபவம் தோன்றுகிறது. சமுதாயமாகக் கூடி வாழத் தொடங்கியவுடன் தன உரிமை, பிறர் உரிமை என்ற இரண்டும் மோதத் தொடங்குகின்றன. தன உரிமையில் சிலவற்றை விட்டுக் கொடுத்தால்ஒழிய நன்முறையில் பிறருடன் சேர்ந்து வாழ முடியாது என்பதை மனிதன் உணரத் தொடங்குகிறான்.

சமுதாய வாழ்வில் தோன்றும் இந்தச் சிக்கல் ஒருபுறம் இருக்க  குடும்பம் என்று அவன் ஏற்படுத்திக் கொண்டு வாழும் வாழ்விலும் புதிய பல சிக்கல்கள் தொன்று கின்றன. தலைவியினிடம் பெரும்காதல் கொண்டுதான் தலைவன் குடும்பம் தொடங்குகிறான்; அவளிடம் நிலைத்த இன்பம் காண ஒரே வழி குடும்பம் வைத்தாலே என்று கருதித்தான் அதில் ஈடுபடுகிறான். ஆனால், குடும்பம் தொடங்கியவுடன் புதிய பொறுப்புக்கள் அவனை வந்து அடைகின்றன. குடும்பம் என்பது தானும் அவளும் கேவலம் இன்ப வேட்டை ஆட ஏற்பட்டது அன்று என்ற உண்மை அவனுக்குப் புலனாகிறது. அக் குடும்பம் காரணமாகத் தன்னை வந்தடைந்த பலரையும் காக்கும் பொறுப்பும் அவனை வந்தடைகிறது. தமது வறுமை காரணமாகவும், இயலாமை காரணமாகவும், பலதிறப்பட்டவர் அவனை வந்தடைகின்றனர்.

அத்தனை பேரையும் உணவு கொடுத்துக் காக்க வேண்டிய பொறுப்பு அவனுடையதாகிறது. இன்மை காரணமாக வந்தவருக்கு அவர் வேண்டும் பொருளைத் தருதலும், இயலாமை காரணமாக வந்தவருக்கு அவர் குறை முடித்துத் தருதலும் அவன் செய்ய வேண்டுமாயின், அவனது காலம் முதலாவது வீணாகும்; இரண்டாவது அவனுடைய பொருள் வீணாகும்; மூன்றாவதாகவும் மிக முக்கியமானதாகவும் அவன் மனைவியைப் பிரியவும் நேரிடும். எந்த ஒருத்தியைப் பிரியாமல் இருக்க ஒரே வழி குடும்பம் என்று நினைத்தானோ, அந்தக் குடும்பமே இன்று அவன் அவளை விட்டு நீங்கக் காரணமாய் விட்டது.

இந்தச் சூழ்நிலையில் ஒரு தலைவன் அகப்பட்டுக் கொள்கிறான். குடும்பம் வைத்தமையின் அப்பொறுப்பு களைச் சரிவர நடத்தப் பொருள் தேடச் செல்ல வேண்டியுளது. ஆனால், தலைவியின்மாட்டுக் கொண்ட அன்பு அவன் கடமையை உதறிவிடத் தூண்டுகிறது. கடமைக்கும் அன்புக்கும் இடையே ஒரு பெரும் போராட்டம் தொடங்கி விடுகிறது. ‘ கடமையே பெரிதாதலின், ‘ ஆண் மகனாகிய நீ அதற்கு இடையூறாக நிற்றல் கூடாது,’ என ‘அறிவு’ அவனை இடித்துக் கூறுகிறது. ஆனால் அன்பால் நிறைந்த நெஞ்சம், ‘கடமையாவது கத்தரிக்காயாவது! இரு!’ என்று கூறுகிறது.

அறிவும் அன்பும் பெரும் போராட்டம் நிகழ்த்துகின்றன. ஆனால், இப் போராட்டம் நடைபெறுகையில் தலைவன் ஊரில் தலைவியுடன் வாழவில்லை. பொருள் தேடுதல் நிமித்தமாக வெளிநாடு சென்றுள்ளான். ஆனால், போன காரியம் இன்னும் முற்றிலும் முடியவில்லை.

நெஞ்சு பேசுகிறது; ‘தலைவியை விட்டுப் பிரிந்து எத்தனை நாட்களாகின்றன. உண்மையான அன்பென்பது இதுதானா! அவளை நினைத்தாலும் அவள் உருவம் மனக்கண்முன் வந்து நிற்கிறதே!’

அறிவு:- என்ன நெஞ்சே! இடங்கொடுத்தவுடன் ஒரே அடியாக உன் கதையைத் தொடங்கிவிட்டாயே! கடமை என்ற சொல்லை நீ எங்காவது கேள்விப்பட்டதுண்டா? ஆறு அறிவு படைத்த மனிதனுக்கும் விலங்குக்கும் உள்ள வேறுபாடு யாது என்பதாவது உனக்குத் தெரியுமா?

நெஞ்சு:- அறிவே என்ன? கடமை, மனிதன், மிருகம் என்று ஏதேதோ கதைக்கின்றாயே! தலைவியைப் பற்றி நீ நினைத்துப் பார்த்ததுண்டா? கடமையைப் பற்றிப் பெரிய சொற்பொழிவு செய்ய வந்துவிட்டாயே! தலைவிக்குச் செய்ய வேண்டிய கடமை பற்றி உனக்கு ஏதாவது நினைவுக்கு வருகிறதா?

அறிவு:- நன்றாக நினைவுக்கு வருகிறது! தலைவி மட்டும் எனக்குச் சொந்தம் இல்லையா? அவளுக்கு ஓரளவு துன்பம் தந்துவிட்டது உண்மைதான். ஆனால், அவள் வருத்தப்படாமல் இருக்க வேண்டும் என்று அதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் மற்றக் கடமைகள் என்ன ஆகும்?

நெஞ்சு:- என்ன அப்படி மற்றக் கடமைகளை மறந்து விட்டது? வீட்டுக்கு முக்கியம் தலைவிதானே! அறிவே! அவள் இல்லாத பொழுது இல்லறம் என்பது இல்லையே! இப்பொழுது நீ பேசும் கடமைகள் எங்கிருந்து வந்தன? ஆகவே, உன் இல்லறம் நடைபெறுவதற்கு மூலகாரணமான தலைவியை மறந்துவிட்டுக் கடமைகள் என்று கூறிக் கொண்டு திரிவதில் பயன் இல்லை என்பது உனக்குத் தெரியுமா?

அறிவு:- ஆனால், தலைவியை இன்பமாக வைத்துக் கொள்வதற்கு மட்டும் நாம் இல்லறம் தொடங்கவில்லை. வீடு வைத்தவுடன் எத்தனையோ புதிய பொறுப்புகள் தோன்றுகின்றன. நீ கூறும் அந்தத் தலைவி மகிழ்ச்சியாக எப்பொழுது இருக்க முடியும்? வீட்டில் விருந்தினர்கள் வந்திருக்கும்பொழுது அடுப்பில் பூனை படுத்துக்கொண்டிருந்தால் தலைவி மகிழ்ச்சியாக இருப்பாளா? இல்லை என்று உதவி வேண்டி நிற்பவர்கள் கடைத்தலையில் நின்று கொண்டு இருக்கையில் தலைவி மட்டும் அதுபற்றிக் கவலைப்படாமல் உண்டு உடுத்து மகிழ்ச்சியாக இருக்க முடியுமா? நினைத்துப்பார்.

நெஞ்சு:- ஆம்! அவள் இம்மாதிரிச் சந்தருப்பங்களில் மகிழ்ச்சியாக இருக்கமுடியாதுதான். அதற்காக அவள் தலைவனை விட்டுப் பிரிந்து தனியே வாடும்படு விட்டு விட்டால் மட்டும் மகிழ்ச்சி ஏற்பட்டு விடுமா!

அறிவு:- பைத்தியக்கார நெஞ்சே! எப்பொழுதுமே துயரத்தில் ஆழ்ந்து இருக்கும்படியாகவா விட்டுவிடுகிறோம்? பொருள் தேட இங்கு வந்த நம் தலைவன் மட்டும் தலைவியை விட்டு இங்கேயே இருந்துவிடப் போகிறானா என்ன! வந்த கடமை முடிந்து, வேண்டிய பொருள் கிடைத்தவுடன் ஊருக்குத்தானே புறப்படப் போகிறான்?

நெஞ்சு:- அறிவே, நீயும் உன் தலைவனும் கடமையை முடித்துக்கொண்டு புறப்படும்வரை அருமைத் தலைவி உயிருடன் இருப்பாள் என்பது என்ன உறுதி? ஆ! அவளுடைய கரிய கூந்தல் முதுகில் தாழ்ந்து தொங்கிக் கொண்டிருப்பதை நினைப்பதும் ஓர் இன்பமாகிறது. அவளுடைய அகன்ற அந்த விழிகள், ஆளை விழுங்கி விடுவது போன்று பார்க்கும் அந்தப் பார்வை, இவை இரண்டுடன் அவள் என்னைப் பிணைத்து விட்டாளே! என் செய்வது?

அறிவு:- நெஞ்சே, ஏது! இவ்வளவு தூரத்திற்கு வந்தும் வந்த காரியத்தை மறந்துவிட்டுத் தலைவியைப் பற்றிய உன் எண்ணங்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் எனக்குக்கூட அறிவு மழுங்கிவிடும் போல இருக்கிறதே! சிறிது நினைத்துப் பார்; நாம் இவ்வளவு தூரம் வந்து வந்த காரியத்தை முடிக்காமல் ஊர் திரும்பினால் நம் தலைவனுடைய பெயருக்கே ஓர் இழுக்கு உண்டாகாதா? அவனை அறியாமை உடையவன் என்று ஊரார் இகழ மாட்டார்களா? பொறுத்தது பொறுத்தாய், நெஞ்சே, இன்னும் சற்றுப் பொறு! எடுத்த காரியத்தை முடித்துக் கொண்டு போகலாம்.

நெஞ்சு:- இனிப் பொறுக்க முடியாது! உடனே புறப்பட வேண்டும்!

இவ்வாறு தலைவனுடைய நெஞ்சுக்கும் அறிவுக்கும் ஒரு போராட்டம் நிகழ்ந்ததாம். அறிவு, நெஞ்சு என்ற இவை இரண்டின் இடைப்பட்ட தலைவன்பாடு மிகத் திண்டாட்டமாகி விட்டதாம். அவன் பட்டபாட்டிற்குக் காட்டும் உவமை மிகமிக அழகானது. இரண்டு வலிமை பொருந்திய ஆண் யானைகள், எதிர் எதிரே நின்று கொண்டு, புரிகள் தேய்ந்து போன பழைய கயிற்றைப் பற்றி இழுக்கின்றனவாம். அந்தக் கயிற்றின் நிலை எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறதாம் அவனுடைய நிலையும். இவ்வளவு அழகிய பாடலைப் பாடியவர் பெயர் கூடத் தெரியவில்லை! எனவே பிற்காலத்தார் அவர் பாட்டில் உள்ள இந்த அழகான உவமையைக்கருதி அவருக்கே ‘தேய்புரிப் பழங்கயிற்றினார்’ என்று பெயர்கூட வைத்து விட்டார்கள்.

புறம்தாழ்பு இருண்ட கூந்தல் போதின்
நிறம்பெறும் ஈர்இதழ் பொலிந்த உண்கண்
உள்ளம் பிணிக்கொண் டோள்வயின் நெஞ்சம்
செல்லல் தீர்க்கம் செல்வாம் என்னும்,
செய்வினை முடியாது எவ்வம் செய்தல்
எய்யாமையொடு இளிவுதலைத் தருமென
உறுதி தூக்கத் தூங்கி அறிவே
சிறிதுநனி விரையல் என்னும். ஆயிடை
ஒளிறு ஏந்து மருப்பில் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவது கொல்என் வருந்திய உடம்பே! 

     (நற்றிணை-284)

(புறந்தாழ்பு-முதுகில் தாழ்ந்து; (நீளமாக) போதின் நிறம் பெறும்- நெய்தற்பூவின் நிறமுடைய; உண்கண்- ஆளை விழுங்குவது போன்ற கண்; செல்லல்- வருத்தம்; எவ்வம் செய்தல்-இகழ்ந்து விட்டுப் போதல்; எய்யாமை- அறியாமை; இளிவு-இகழ்ச்சி; உறுதி தூக்கத் தூங்கி- உறுதிப்பாடு செலுத்தலினாலே செல்லாது; நனி-மிகுதி; ஒளிறேந்து மறுப்பு- ஒளி படைத்த கொன்பு; வீவது கொல்- அழிய வேண்டுமா?)

உணமையான காதலும் கடமை உணர்ச்சியும் ஒருவனுடைய மனத்தில் போராட்டம் நிகழ்த்துவதைச் சித்தரிக்கிறது இப்பாடல். இவை இரண்டில் எது சரியானது என்ற முடிவுக்குத் தலைவன் வர முடியவில்லையாம். ஆகவே, எது சரியென்று கேட்டுக்கேட்டுக் கவலைப்பட்டு அவன் உடம்புகூட இளைத்துவிடுகிறதாம். இன்றும் நம்மில் பலருக்குக் கவலை உண்டு. கவலை இல்லாதவர்களே இவ் வுலகில் இல்லை. ஆனால், இம்மாதிரியான கவலை உண்டா? அன்புக்கும் கடமைக்கும் போராட்டம் நம் மனத்தில் நிகழ்வதுண்டா? உண்மைக் காதல், உண்மைக் கடமை என்ற இரண்டுமே, அருகிய சரக்காகிவிட்ட இற்றை நாளில் இத்தகைய பாடல்கள் ஒரு பெரிய உறுதி யையும் உணர்ச்சியையும் நமக்குத் தருகின்றன. இரண்டு யானைகளும் சமபலத்துடன் இழுக்கின்றன என்றமையாற் காதலும் கடமையும் சமபலத்துடன் தலைவனிடம் உள்ளன என்பதையும் கவிஞர் பெற வைத்துவிட்டார்.


***

தலைவி பிரிந்து சென்றதை நினைத்து வருந்தும் தாயின் மனநிலை பேசும் பாடல் இது:

‘நினைத்தாலும் நெஞ்சு வேகிறது!’

நல்ல கடுவேனில்; உச்சிப்போழுது இந்த வெயிலின் கொடுமையை நினைத்தாலும் உள்ளம சுடுகிறது! சாதாரணமாக வெயிலின் நடப்பவர்கட்கே அதன் கொடுமையை அறியமுடியும் என்பர். ஆனால், சில சமயங்களில் வெயிலில் நடப்பவர்கள் எவ்விதக் கவலையும் இல்லாமல் சாவதானமாக நடந்து செல்லுதலைக் காண்கிறோம். ஏன்? அவர்களுடைய கால்கள் இரும்பால் ஆனவையா? அப்பாதங்களில் சூடு தாக்காமல் விட்டு விடுமா? சூரியன் அவ்வாறு ஒருவரைச் சுட்டுப் பிறரைச் சுடாமல் விடுபவன் அல்லனே! எலும்பில்லாத புழுவையும் தனது அதிகாரம் நடைபெறும் இடத்திற்கு வந்து விட்டால் அவன் விடுவதில்லை. துடித்துத் துடித்து இறக்குமாறு செய்கிறான் புழுவை.

அத்தகைய கடு வெயிலில் இரண்டு பேர்கள் செல்லுகிறார்கள். இன்னும் சற்று நெருங்கிச் சென்று பார்க்கலாமா அவர்களை? ஓடித் தப்பித்துக் கொள்ள வேண்டிய வெயிலில் அவர்கள் இருவரும் ஏன் மெள்ள நடக்கிறார்கள் என்பது இப்பொழுது தெரிகிறதா? ஆம்! இதோ பின்னே செல்கிற இப்பெண் வேகமாக நடக்க முடியாதவள். முன்னே செல்லும் இந்த ஆடவன் இவள் பொருட்டே மெல்லச் செல்கிறான். அவனுடைய மிடுக்கையும் உடற்கட்டையும் தோள் வலியையும் பார்த்தால், அவன் மிக வேகமாக நடக்கக் கூடியவன் என்பது தெரிகிறது. ஆனால், ஏன் அடிக்கடி பின்தங்கி விடுகிறான்? இதோ பின்னே வரும் அப்பெண் கொடியை நோக்கி ஏதோ கூறுகிறான். அவனுடைய முகத்தில் எவ்வளவு அன்பு ததும்புகிறது! வீரனுடைய உடற்கட்டு அமைந்த அவனுடைய முகத்தில் இவ்வளவு அன்பும் குழைவும் எங்கிருந்து பிறந்தன? ஐயமே இல்லை! இந்தப் பெண்ணிடம் திரும்பிப் பேசுந்தோறும் அவனுடை முகத்தில் அன்பும் அருளும் காட்சி அளிக்கின்றன. இப்படி ஒரு பெண்ணிடம் பேசும் பொழுதெல்லாம் ஒருவனுடைய முகத்தில் அன்பு தோன்றுமாயின், அவன் அவளுடைய காதலன்தான் என்று முடிவு செய்யலாம்.

இந்தப் பெண்ணைப் பார்த்தால், இவளிடம் இளமை தாண்டவமாடுகிறது. இவளுடைய உடல் அமைப்பில், பெரிய குடும்பத்தில் வசதியுடன் வளர்ந்த பொலிவு காணப்படுகிறது. இப்படிப்பட்டவள் இவ்வாறு கடுமையான வெயிலில் நடந்து பழகியிருத்தல் இயலாது. எனவே, இவள் கால்கள் சூடு தாங்காமல் தள்ளாடுகின்றன. இவள் படும் பாட்டைக் கண்ட இவளுடைய காதலன் நின்று நின்று இவளுக்கு ஏதோ அமைதி கூறுகிறான். விளையாட்டாகப் பேசி, இவளை மகிழ்விக்கிறான். இவளுடைய கவலையை மறக்க வைக்க அவன் அரும்பாடு படுகிறான் என்பது நன்றாகத் தெரிகிறது.

இவளும் அவனிடம் பெருங்காதல் கொண்டுள்ளாள் என்பதில் ஐயமில்லை. அன்றேல், இக் கடுவெயிலின் கொடுமையை மறந்து, அவனுடைய சொற்களில் ஈடுபட்டு இவ்வாறு தன்னை மறந்து இவள் சிரிக்க இயலுமா? இத்துணைத் துன்பத்தையும் இவள் மறக்க வேண்டுமாயின் அவனுடைய சொற்களில் இவளுக்குள்ள ஈடுபாடு அளவற்றதாய் இருக்க வேண்டும். ஏன் இவ்வாறு இக் காதலர்கள் இந்த நேரத்தில் செல்ல வேண்டும்? அது ஒரு கதை.

இத் தலைவனுக்கும் தலைவிக்கும் நெடுநாட்களாகவே பழக்கம் உண்டு. முதன்முதலில் இவர்கள் இருவரும் எங்கு எவ்வாறு சந்திந்தார்கள் என்பது நமக்குத் தெரியாது. இவன், இவள், இவளுடைய உயிர்த்தோழி ஆகிய மூவருக்கு மட்டுமே அது தெரியும். ஆனால், இத் தலைவியுனுடைய சுற்றத்தார் இவர்களிடையே திருமணம் நடைபெறவிட மாட்டார்கள் என்பதைத் தோழி அறிந்து கொண்டாள். வேறு வழியாது? மற்றொருவனுக்கு இப்பெண்ணை மணம் முடிக்க ஏற்பாடுகளும் செய்துவிட்டனர் இவர்களுடைய சுற்றத்தார். நிலைமை மிகவும் மோசமாகி விடும் போலத் தோன்றலாயிற்று. தோழி பார்த்தாள்; தலைவி வேறு ஓர் ஆடவனை மணத்தல் என்பது இயலாத காரியம். அத்தகைய நிலைமை ஏற்பட்டால் இவள் இறந்துபடுவாளே தவிர அப்புதியவனை மணக்க இசைய மாட்டாள். என்றாலும் தலைவியின் சுற்றத்தார்களும் தலைவியின் நிலையைப் புரிந்து கொள்ளவே மறுக்கிறார்கள்.

இந்நிலையில் தோழிக்கு இரண்டே வழிகள் தெரிகின்றன. ஒன்று தலைவியின் விதிப்படி ஆகட்டும் என்று விட்டுவிடுவது. இரண்டாவது, பலரும் தன்மேல் ஐயங்கொண்டு பகைமை பாராட்டுவார்கள் என்று அறிந்து இருந்தும் அதுபற்றிக் கவலையடையாமல், தலைவிக்கு அவள் விரும்பியவனை அடையுமாறு உதவுவது. எந்தத் தோழியும் தலைவியை முதல் வழியில் விடமாட்டாள். அவள் இறந்துபட நேர்ந்தால், இதைவிடக் கொடுமை வேறு யாது? எனவே இரண்டாவது வழிதான் சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிட்டாள் தோழி. தன்னுடைய சுற்றத்தார் நிறைந்துள்ள இந்த ஊரில் தலைவி விரும்பியவனை மணந்துகொள்ளுதல் என்பது இயலாத காரியம். எனவே, தலைவனுடன் தலைவி ஓடிவிட வேண்டும். இவ்வாறு தலைவனுடன் தலைவி ஓடுவதை ‘உடன்போக்கு’ என்று இலக்கியம் கூறும். மேனாட்டார் இதனை இதே பொருளில் ‘எலோபெமென்ட்’ என்று வழங்குவதும் அறிதற்குரியது.

தோழியின் உதவியால் தலைவி தலைவனுடன் ஒரு நாள் விடியற்காலையில் தன் ஊரையும், தாய் தந்தையரையும், சுற்றத்தாரையும் விட்டுவிட்டு ஓடிவிட்டாள். முதல் நாள் மாலைப்பொழுது வரை அந்த வீட்டில் வாழ்பவர் கட்கு இதுபற்றி ஒரு குறிப்பும் தெரியவில்லை. இப் பெண்ணின் தாய்க்கு இவள் ஒரே பெண். வேறு ஆண் மக்கள் இருக்கலாம். எனினும் சீராட்டித் தன் மகள் என்று கூறி ஆடம்பரமாகத் திருமணம் செய்து வைக்க வேறு பெண்ணும் இல்லை! என் செய்வாள் அத்தாய்.

மறுநாள் பொழுது விடிந்ததும் மகளைத் தேடினாள். யாண்டும் காணவில்லை. தோழியை விசாரித்தாள், தனக்கு யாதொன்றும் தெரியாது என்று தோழி கூறிவிட்டாள். தோழிதான் தலைவியின் உடன்போக்குக்கு உதவி செய்தாள். எனினும், அவளே இப்பொழுது ஒன்றும் தெரியாதவள் போலத் தலைவியைக் காணவில்லையே என்று அழத் தொடங்கிவிட்டாள்! போதாக்குறைக்கு ஊரில் உள்ள பெண்டிர் அனைவரும் வந்து கூடிவிட்டனர்.

ஒவ்வொருவரும் தத்தம் கவலையை ஓரளவு தெரிவித்துக் கொண்டனர். சிலர் அத்தாயைத் தேற்ற முற்பட்டு விட்டனர்; இது ஓர் இளம்பெண்ணின் வாழ்க்கையில் இயல்புதான் என்பதை எடுத்துக்காட்டினர்; அறவழியும் இதுதான் என்றும் எடுத்துக் கூறினர். எவ்வளவு சிறப்புடன் பெற்று வளர்த்தாலும், பெண்ணைப் பெற்றுவிட்டால் ஒருவனிடம் ஒப்படைக்கத் தானே வேண்டும்? இவ்வாறு அவர்கள் பலபடியாக எடுத்துக் கூறியும் தாய்க்குக் கவலை நீங்கவில்லை. சிலர் காரண காரியத்துடன் உவமைகள் கூறியும் அவள் கவலையைப் போக்க முயன்றனர். ஒருத்தி கூறினாள் பின்வருமாறு:

“அம்மா, நல்ல மணம் வீசுகிற சந்தனம் மரமாக மலையிலேதான் பிறக்கிறது என்றாலும், தான் பிறந்த மலையில் இருக்கும் வரை மலைக்கு அது பயன்படுவதில்லை. அங்கிருந்து பிரிந்து சென்று யாருடைய வீட்டிலோ சேர்ந்து விட்டால், அங்கு மணம் வீசுகிறது. ஆராய்ந்து பாருங்கள். உம்முடைய மகளும் அத்தகையவள் தானே?” என்றாள்.

'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க் கல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம்என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே;’

      (பாலைக்கலி-8) 

மற்றொருத்தி வேறு ஓர் உதாரணம் தந்தாள்; “நீவிர் அணிந்திருக்கிற முத்துக்கள் கடலிலேதானே பிறந்தன? ஆனால், அவை கடலுக்கு ஒரு சிறிதும் பயன்படாமல் உம்மை அலங்கரிக்க வந்துவிட்டன. ஆய்ந்து பார்த்தால், உம் மகளும் அவ்வாறுதான்?” என்றாள்.

'சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே!'

     (பாலைக்கலி-9)

என்று கூறி, அத்தையின் துயரத்தைத் தணிக்க முற்பட்டனள். இவர்கள் எவ்வளவுக்கெவ்வளவு அவளுடைய துயரைத் தணிக்க அமுது கூறினார்களோ, அவ்வளவுக் கவ்வளவு அவளுடைய துயரம் எல்லை கடந்து விட்டது.

தாய் தனக்கு அமைதி கூறினவர் அனைவரையும் ஒரு முறை பார்த்தாள். இன்னும் அவளுடைய வருத்தம் அதிகமாயிற்று. மேலும், அவர்கள்மேல் அது கோபமாகவும் மாறியது. ஏன் தெரியுமா? அவளுக்கு அமைதி கூறவந்த அவர்கள் அவளைப் போலவா இருக்கிறார்கள்? அவருள் ஒவ்வொருவருக்கும் இரண்டு மூன்று பெண்கள் உண்டு. ஒருத்தி இவ்வாறு தலைவனுடன் ஓடிவிட்டாலும் மற்றப் பெண்கட்கு அவர்கள் மணம் செய்து வைத்து மகிழலாம். ஆனால் தன் நிலையை அவர்களுள் யாரும் ஆராய்ந்து பார்த்ததாகவே அவளுக்குத் தெரியவில்லை. அவளுக்கு இருந்தவள் ஒரே மகள் அல்லவோ? அந்த ஒருத்தியும் இன்று இல்லாமல் சென்றுவிட்டாளே;

அதையும் அறியாதவள் அல்லள். ஒருவாறு தன் துயரத்தை மறந்துவிட்டு இருக்கவே முயல்கிறாள். ஆனாலும், என்ன கொடுமை! வீட்டைச் சுற்றி நொச்சிச் செடி வளர்ந்துள்ளது; நீலமணி போலப் பூக்களைப் பூத்துக் குலுங்கி நிற்கிறது. அதைப் பார்க்குந்தோறும் மகள் நினைவு வருகிறது, அச்செடியின் அடியில் அருமை மகள் விளையாடி வளர்ந்ததை அவள் எவ்வாறு மறக்க இயலும்! அவள் அமர்ந்து விளையாடிய திண்ணையை நினைக்க நினைக்கத் தாய்க்குப் பெற்ற மனம் வெடித்துவிடும் போல ஆகிவிடுகிறது.

இது ஒரு மனத்தத்துவம். அண்மையில் அன்புடையவர்களை இழந்து விட்டவர்கட்கே இது தெரியும். இறந்தவர்களுடைய பொருளைக் காணும் போதெல்லாம் துயரம் புதிய வேகத்துடன் வெளிவரும். கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை இதனை அழகாக மகனை இழந்த தாய் என்ற பாடலில் பாடுகிறார். இறந்த மகனைப் புத்தர் பிரான் எதிரே போட்டு அத்தாய் அழுவது இம்மன நிலையை நன்கு விளக்குகின்றது. அக்குழந்தை விளையாடிய பொருள் களைக் காணும் பொழுதெல்லாம் தன்துயரம் புதிய உருவெடுத்தலை இதோ அத்தாய் கூறுகிறாள்:

'சித்திரத் தேரும் சிறுபறையும் கூடிஎனைப்
பித்தியிலும் பித்தி பெரும்பித்தி ஆக்குதையா!' 

      (கவிமணி)

இதே போன்ற கருத்தத்தைதான் நற்றிணைப் பாட்டில் வரும் அத்தாயும் கூறுகிறாள்.

“அறிவுள்ள அயல் வீட்டவர்களே! உங்களைப் போல நான் பல புதல்வியரைப் பெறவில்லை. ஒரே பெண்ணைப் பெற்றேன். அவளும், போரில் மிக்க வலிமை காட்டும் கூரிய வேலாயுதத்தையுமுடைய காளை ஒருவனோடு கடும் பாலை வனத்தின் வழியே சென்றுவிட்டாள். அவளே சென்றுவிட்டமையின் யான் அவள்மேல் கொண்டிருந்த ஆசையை மறக்கிறேன். எனினும், ஆவலுடன் பழகியதை மறக்க முடியவில்லை. ஆனால், நீங்கள் கவலையை மறக்குமாறு சொல்கிறீர்கள். அந்த ஒரே மகளை எவ்வாறு மறப்பது? கண்ணுள் வாழும் பாவை வெளியே வந்து நடை பயில்வது போன்ற என் மகள், நீலமணி போன்ற பூக்கள் பூக்கும் நொச்சிச் செடியின் அருகில் விளையாடிய தையும் அவள் விளையாடிய திண்ணையையும் எவ்வாறு என்னால் மறக்க முடியும்? நினைத்தாலும் நெஞ்சு வேகிறது!”

ஒருமகள் உடையேன் மன்னே அவளும்
செருமிகு மொய்ம்பின் கூர்வேல் காளையொடு
பெருமலை அருஞ்சுரம் நெருநல் சென்றனள்;
இனியே,

தாங்குநின் அவலம் என்றிர்; அதுமற்று
யாங்ஙனன் ஒல்லுமோ அறிவுடை யீரே!
உள்ளின் உள்ளம் வேமே; உண்கண்
மனிவாழ் பாவை நடைகற்று அன்னஎன்
அணிஇயல் குறுமகள் ஆடிய
மணியேர் நொச்சியும் கண்டே 

      (நற்றிணை-184)

(செரு- போர்; மொய்ம்பு- வலிமை; நெருநல்-நேற்று, ஒல்லுமோ- முடியுமோ; உண்கண் மணி வாழ்பவை- கண்ணினுள் வாழும் பாவை; தெற்றி- திண்ணை)

“மகள் சென்ற பாலையை நினைத்து வீட்டில் நிழல் தரும் நொச்சியையும் திண்ணையையும் பார்த்தால் வருத்தத்தால் நெஞ்சு வெடிக்கிறதே!” என்றாள் அப்பெற்ற தாய். ‘குடி வறன் உற்ற கொழுநன்’ தலைவியின் தனிக் குடித்தனத்தில், அவள் உறுதியைப் பற்றிப் பேசும் பாடலைப் பார்ப்போம்;

ஒரு பெரிய மாளிகை விண்ணைத் தொட்டு நிற்கிறது. அது மிகப் பெருஞ் செல்வருடைய வீடென்பது கண்ட மாத்திரத்தில் யாரும் அறிந்துகொள்ளுதல் கூடும். வீட்டின் வெளி முற்றத்தில் பெரியதொரு தென்னங்கீற்றுப் பந்தல் போடப்பட்டிருக்கிறது. வீட்டின் சொந்தக்காரர் பொருட் செல்வம் பெற்றுள்ள அளவுக்கு மக்கட்செல்வம் பெறவில்லை என்று நினைக்கத் தோன்றுகிறது. அல்லாவிடில், இதோ வீட்டு வாயிலை விட்டு வெளியே வரும் இந்த ஒரு பெண் குழந்தையைப் பாருங்கள். எவ்வளவு சிறந்த ஆடைகள், கண்டீர்களா? இவ்வளவு சிறிய குழந்தைக்கு இப்படி வைரத்தால் இழைத்து நகைகள் போட்டிருக்கிறார்கள். பார்த்தீர்களா? என்ன நினைக்கிறீர்கள்? இந்தக் குழந்தையைப் பார்த்து முன் ஒரு காலத்தில் ஒரு கவிஞன் ‘நல்கூர்ந்தார் செல்வமகள்’ என்று கூறிப்போனான். அதன் பொருள் விளங்குகிறதா? ‘நல்கூர்ந்தார்’ என்பதற்கு வறுமையுடையவர் என்பது பொருள். வறுமையுடையவர்கட்கு எவ்வாறு செல்வ மகள் இருக்க முடியும் என்று கேட்கிறீர்களா? ஆம். நியாயமான கேள்விதான். ஆனால், ‘வறுமை’ எதில் ஏற்பட்டது என்று அறியவில்லையே! செல்வம் நிறைய உடையவர்கள் என்பதே பொருள். ‘ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு’ என்று கூறுவார்களே! அது போல ஒரே ஒரு குழந்தையை அருமையாகப் பெற்று உள்ளார்கள். இங்கே நாம் காணும் அம்மை இக்குழந்தையைப் பெற்ற தாயல்லள். ஆனால், தாயின் இடத்தில் இருந்து வளர்க்கும் செவிலித் தாய் ஆவாள். ஆம் ‘நற்றாய்’ என்று கூறப்படும், பெற்ற தாய்க்கு அடுத்தபடி இருப்பவள், ‘செவிலித் தாய்’ என்று கூறப்படும் இந்த வளர்க்கும் தாய் தானே? ஆதலாலேதான் இவ்வளவு உரிமையுடன் குழந்தையை அச்சுறுத்தும் நோக்கத்துடன் கையில் கோலை எடுத்துக்கொண்டு ஓடி வருகிறாள். இந்த மூதாட்டியை அடுத்து நிற்கும் அந்தப் பெண்ணின் கையில் இருக்கும் பொற்கிண்ணத்தைப் பார்த்தீர்களா? அதில் வெண்மையான பாலும் சோறும் இருக்கின்றன. பாற் சோற்றுக்கு உள்ள இனிப்பும் போதாது என்பதற்கு இச் சோற்றுடன் என்ன கலந்துள்ளார்கள் என்பது தெரியுமா? நாம் இக்காலத்தில் சத்தற்ற வெள்ளைச் சர்க்கரையை அல்லவா பயன்படுத்துகிறோம்? ஆனால், அந்நாளைத் தமிழர் பாலுக்கு இனிப்பூட்டத் தேனை உடன் கலந்தனர். எனவே, இக்குழந்தையின் பால் சோற்றுடன் தேனைக் கலந்திருக்கிறார்கள். தேன் கலந்த பால் சோற்றைத் தங்கக் கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு பின்னர் இருக்கும் பணிப் பெண் ஏன் இங்கே வந்து நிற்கிறாள்? முதலில் ஓடி வந்த இந்தப் பெண் குழந்தைக்குச் சோறு ஊட்டவே இத்தனை பேர்களும் வந்துள்ளார்கள். இந்தக் குழந்தை, உணவை, பாலும் தேனும் கலந்த அந்த இனிய சோற்றை உண்ண மறுக்கிறது. அம்மட்டோ வெளியில் உள்ள பந்தலைச் சுற்றிச் சுற்றியும் ஓடுகிறது. வயது முதிர்ந்த நரை தோன்றிய பணிப்பெண்கள் இக் குழந்தையைப் பிடிக்க வேண்டி, தம் வயதை மறந்து குழந்தையின் பின்னர் ஓடுவது அதனை விட வியப்பாய் இருக்கிறது! ஆனால், குழந்தை அவர்களின் கையில் சிக்காமல் இங்கும் அங்கும் ஓடுகிறது. இடை இடையே அப் பணிப்பெண்கள் தம் ஓட்டத்தை நிறுத்திக்கொண்டு குழந்தையை வேண்டுகிறார்கள்.

இது ஒரு காட்சி. வாழ்க்கைச் சித்திரத்தின் ஒரு பகுதி இது. இதோ! இனி மற்றொரு பகுதி தொடங்குகிறது. இங்கு நாம் காணும் பெண் நல்ல இளம்பருவம் உடைய நங்கை. இவளுடைய இயற்கை வனப்பைத் தவிர வேறு அழகு செய்யும் ஆடை அணிகளுள் ஒன்றும் இல்லை. உடையிலும், வீட்டுச் சூழ்நிலையிலும் எவ்வளவுதான் வறுமை தெரிந்தாலும், இவளுடைய முகத்தில் காணப்படுகிறது ஒப்பற்ற பொலிவு. வறுமை என்பது உடலைப் பிடிக்கும் பொழுது அதுதான் தோல்வியடைகிறது. அவ் வறுமையால் பீடிக்கப் பெற்றவன் பணிய மறுத்து விடுகிறான். எனவே, அவனுடைய உடை, உணவு, உறையுள் என்று கூறப்பெறும் இம்மூன்றும் கெட்டுவிடுகின்றன. ஆனால், அவனுடைய முகத்தைப் பார்த்து யாரும் வறுமையுடையவன் என்று கூறிவிட முடியாது. இது கருதியே தான், ‘செல்வம் என்பது சிந்தையின் நிறைவு. அல்கா நல்குரவு அவாஎனப் படுமே’ என்று கூறினார் குமரகுருபர அடிகளார்.

இப்பொழுது நாம் காணும் இப்பெண்மணியின் புறத் தோற்றமும் சூழ்நிலையும் இவளுடைய வாழ்க்கை செல்வப் பாதையில் செல்லவில்லை என்பதையும், வறுமையில் நடைபெறுகிறது என்பதையும் நன்கு அறிவுறுத்துகின்றன. என்றாலும் என்ன? இவளுடைய முகத் தோற்றத்திலே தான் எவ்வளவு பொலிவு காணப்படுகிறது!

இதோ இவளுடைய வீட்டினுள் சென்று காண்போம். எவ்வளவு சிறிய வீடு! ஆனால் எவ்வளவு தூய்மையாய் வைக்கப்பெற்றிருக்கிறது! அவ்வளவு பெரிய மாளிகையில் வாழ்ந்த இப்பெண், எவ்வாறு இவ்வாறு சிறிய வீட்டில் வாழக் கற்றுக் கொண்டாள்; தொட்டதற்கெல்லாம் பணிப்பெண்களை ஏவி வேலையை முடித்துக்கொள்ளும் பழக்கமுடைய இப்பெண், இப்பொழுது ஒரு பணிப்பெண்கூட இல்லாமல் எவ்வாறு வாழ்க்கை நடத்துகிறாள்? தனக்குச் சோறு ஊட்ட வேண்டும் என்று பிறரை எதிர்பார்த்து வளர்ந்த இப்பெண், இப்பொழுது எவ்வாறு தன் குடும்பத்தைக் கவனித்துக் கொள்கிறாள்? இவை அனைத்தும் ஒருபுறம் இருக்க இவள் இப்பொழுதுதானே உணவு சமைக்கவும் தலைப்பட்டு விட்டாள். தங்கக் கிண்ணத்தில் தேனொடு கலந்த பால்சோற்றைப் பிறர் வருந்தி வருந்தி ஊட்ட முயன்றது அக்காலம். ஊட்ட ஊட்ட உண்ண மறுத்ததும் அந்தக் காலம். இன்று எத்தகைய மாறுதல்? தங்கக்கிண்ணம் என்று கூறுவதற்குக்கூட, ஒன்றும் இல்லை. வீட்டில் பழகும் சாமான்கள் அனைத்தும் நிலத்தாயின் அருளால் கிடைத்தவை தாம்! அனைத்தும் மண் பாண்டங்கள். அவற்றில் பாலும் இல்லை, தேனும் இல்லை; பழஞ் சோறுதான் இருக்கிறது. என்றாலும், அச்சோற்றை விருப்பமுடன் உண்கிறாள்! தான் மட்டும் உண்ணவில்லை! தன் கணவனுக்கும் விருப்புடன் அதனைப் படைக்கிறாள்.

இதோ! இந்த ஆண் மகன்தான் இவளுடைய காதற் கணவன் போலும்! இவனுடைய முறுக்கேறிய உடல் இவனுடைய வன்மையும் பலத்தையும் காட்டுகிறது. ஆனால், அணிந்திருக்கும் உடை முதலியன, இவனுடைய குடும்பம் செல்வத்தில் வாழவில்லை என்பதை அறிவுறுத்துகின்றன. இருந்தாலும், வறுமையில் செம்மை உடையவனாகவே காணப்படுகிறான். இவனுக்குச் செய்யவேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்கிறாள் இப்பெண். வெறுங் கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டு, இயந்திரம்போல மட்டும் இவள் செய்யவில்லை; முழு அன்புடன் கடமையைச் செய்கிறாள். இவளுடைய ஒவ்வொரு செயலிலும் மனத்தின் ஆழத்தில் படிந்திருக்கும் காதல் உணர்ச்சி குமிழிட்டு வெளிவருகிறது.

இவ்வளவு அருமைப்பாட்டுடன் நடைபெறும் குடும்பத்தைக் காண இவள் தந்தையார் ஒரு முறை வந்திருந்தார்; மகளின் வாழ்க்கை முறையைக் கவனித்தார். பெற்று வளர்த்த அவருடைய மனம் அனுதாபத்தால் கரைந்து விட்டது. மகளுடைய இந்த வறுமையைப் போக்க வேண்டும் என்று முடிவு செய்துகொண்டார். மிகவும் பக்குவமாக இவளை அணுகி, தாம் உதவி செய்வதாகக் கூறினார். அதுவும் உதவி என்ற பெயரால் அன்று. இவளுடைய பழைய வாழ்வை நினைத்துப் பார்த்த அவர், அதை இவளுக்கு நினைவூட்டினால் ஒரு வேளை அச்செல்வ வாழ்வை மீட்டும் விரும்புவாளோ என்று ஐயுற்றார்; எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்; தம் இடத்தில் பொருளுதவி பெறுதல் தவறன்று என்று பல வகையாகவும் எடுத்துக்காட்டினார். ஆனால், இவள் அவருடைய சொல்லை மறுத்துவிட்டாள்; எந்த விதமான உதவியும் பெற மறுத்துவிட்டாள். எத்துனைத் துன்பமுற்றாலும் தன் தந்தையாரிடமிருந்து உதவி பெற இவள் விரும்ப வில்லை; தன் கணவனுடைய பெருமைக்கு அவ்வாறு உதவி பெறுதல் இழுக்கு என்னும் முடிவுக்கு வந்தாள். கணவனும் உதவி பெறுதலை விரும்ப மாட்டான் என்பது இவளுக்கு நன்கு தெரியும்!

மாமனாருடைய செல்வத்தில் பங்குபெற்று வாழ்தல் மிகவும் மானக்கேடானது என்பது அவனுடைய கொள்கை. அன்றைய நாளில் தமிழன் இவ்வாறுதான் கருதினான். எத்துனை வறுமையில் ஆழ்ந்துவிட்டாலும், தானாகச் சம்பாதியாமல் பிறர் பொருளை வைத்து வாழ்வது மானக்கேடானது என்பது தமிழனுடைய உறுதியான கொள்கை. இவற்றையெல்லாம் மனத்துட்கொண்டு இப்பெண் தன் தந்தையார் தருவதாகக் கூறிய செல்வத்தை ஏற்க மறுத்துவிட்டாள்.

இப்பெண்ணின் இல்வாழ்க்கையை ஒருநாள் வளர்த்து வந்து செவிலித்தாய் சென்று கண்டாள். மகளின் இக் கால வாழ்க்கை அவளுடைய கண்ணில் நீரை வரவழைத்து விட்டது. இவளுடைய பழைய வாழ்க்கையையும் பால் சோறு உண்ண மறுத்த குறும்புத்தனத்தையும் மீட்டும் நினைந்து பார்த்தாள். கண்ணீர ஆறாய்ப் பெருகியது. ஆனால், மகள் வறுமையில் செம்மையாக வாழ்க்கை நடத்துவதைப் பார்த்ததும், பெருமித உணர்ச்சி மேலிட்டு விடுகிறது. மீண்டும் தன் வீட்டிற்கு வந்தாள். செவிலித் தாய்; இவற்றை யெல்லாம் நினைத்து ஒரு கவிதையாகப் பாடினாள். ஆனால் கவிதையைப்பாடியது போதனார் என்ற ஆண் மகனார். இதோ கவிதையைப் பாருங்கள்:

'பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பில் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்என்று ஒக்குபு புடைப்பத் தெண்ணிர்
முத்துஅரிப் பொன்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று
அரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇமெலிந்து ஒழியப் பந்தர் ஓடி
ஏவல் மறுக்கும் சிறுவிளை யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுஉணர்ந் தனள்கொல்!
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றுஎனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்குஅறல் போலப்
பொழுதுமறுத்து உண்ணும் சிறுமது கையளே.' 

       (நற்றிணை-110)

(பிரசம்- தேன்; புடைப்பில் சுற்றும்-குஞ்சும் கட்டிய; முத்து அரிப்பொன் சிலம்பு-முத்தை உள் ஈடாக உடைய பொன் சிலம்பு; அரிநரை-மெல்லிய நரைத்த; பரீஇ மெலிந்து ஒழியப்- பின் தொடர்ந்து ஓடிப் பற்ற முடியாமல் விட்டுவிட; குடிவறன் உற்றென- கணவன் வீடு வறுமையுற்றதாக; கொடுத்த தந்தை-பெற்று வளர்த்த தந்தை; கொழுஞ்சோறு-செல்வ உணவு; ஒழுகு நீர்- ஓடும் தண்ணீர்; நுணங்கு அறல்- இடை இடையே கிடக்கும் மணல் திட்டுப்போல ஒரு முறை உணவு உண்டும் ஒரு முறை பட்டினி கிடந்தும் வாழும் வாழ்வு; பொழுது மறுத்து உண்ணும்- ஒரு பொழுது உணவு உண்டு மறு பொழுது உணவின்றி இருக்கும்; சிறு மதுகையளே- சிறிய வண்மையை உடையவள்)

பழந்தமிழ்ப் பெண்மணிகள் வாழ்வில் ஓர் ஒப்பற்ற ஏடாகும் இப்பாடல். கவிதையைப் பன்முறை படித்துச் சுவைப்பதுடன் வாழ்விலும் நம் சோதரிகள் இம்மாதிரி வாழ முற்பட்டால் நாடு எத்துணைச் சிறப்படையும்.

***


முல்லைத் திணை

முல்லைத் திணை காடும் காடு சார்ந்த இடமும் நிலைக்களனாக உடையது.

தலைவன் கார் காலம் வந்தவுடன் மீண்டுவிடுவதாகக் கூறிவிட்டுப் போனான். அக்காலம் வந்தும் அவன் வரவில்லை. அவன் சொற்களில் நம்பிக்கையுடன் தலைவி பிரிவுத் துயரைப் பொறுத்துக்கொண்டு வாழ்கிறாள். தலைவன் வருகிறான் காட்டு வழியே. இவையே இத்திணையில் இடம் பெறுபவை,

கற்பின் குறுமகள் முல்லைத் திணையின் சிறப்பு யாதெனில், தலைவி தான் படும் துயரத்தைப் பிறர் அறியாமல் மறைத்து வாழ்தலேயாம். எத்தணைத்தூரம் தலைவன் பிரிவுக்கு வருந்துவ தாயினும், வீட்டில் உள்ள கடமைகளைத் துறத்தல் இயலாத காரியம். எனவே, கடமைக்கும் மனத்தில் தோன்றும் பிரிவுத் துயரத்திற்கும் ஏற்படும் போராட்டத்தில் தலைவியின் வெற்றியைக் காட்டுவதே முல்லைத் திணை. கடலத்தனைத் துயரம் ஏற்பட்டாலும் தமிழ்ப் பெண்கள் தம் துயரத்தைப் பெரிதாகப் பறைசாற்றிக் கொண்டு கடமையை மறந்து காற்றில் விடுவதில்லை. இந்த அரிய பண்பாட்டை எடுத்துக் கூறுவதாலேதான் முல்லைத் திணை பற்றிய பழந்தமிழ்ப் பாடல்கள் சிறப்புடன் விளங்கக் காண்கிறோம்.

தலைவியும் இளமையுடையவள்; தலைவனும் அப்படியே. ஆனால், கடமையைப் பெரிதென மதித்து அவன் பிரிந்து போய் விட்டான். தலைவியும் தன் துயரத்தை ஓரளவு மறந்து கடமைகளில் ஈடுபட முனைகிறாள். ஆனால், இவ்வுலகியற்கை எத்துணை விந்தையானது! கடமை மேற்செல்கிறவர்களைத் தடுக்க எத்தனை சூழ்ச்சி கள் நடைபெறுகின்றன வாழ்வில்! எந்தக் கடமையை நிறைவேற்ற யார் முற்பட்டாலும், தடைகட்குப் பஞ்சமே இராது. தலைவி மட்டும் இவ்விதிக்கு விலக்கானவளா? இளமையை மறந்து, தலைவனையும் கடமையில் கருத்தூன்றி நிற்கச் செய்யும் அவள் உறுதியைக் கலைக்க யார் யார், முற்படுகிறார்கள் தெரியுமா? முதலில் கார்காலக் கருமேகங்கள் திரண்டெழுந்து வருகின்றன. அம்மேகங் களைக் கண்ட மயில்கள் தம் தோகையை விரித்து ஆடத் தொடங்குகின்றன. ஆடும் மயிலின் அற்புதக் காட்சி தலைவிக்கு மனத்திற்கு அமைதி தரவில்லையே என வருந்திய தலைவி, வேறுபுறம் திரும்பினால், பகலில் மேயச் சென்ற மாடுகளும், உணவு தேடச் சென்ற புள்ளினங்களும் தம் துணையுடன் குலாவிக்கொண்டு இருப்பிடத்தை நாடி மீள்கின்றன. இவற்றைப் பார்த்தால் துன்பம் மிகும் என்று தலைவி வீட்டினுள் வந்தாலும் துன்பம் தொடர்கின்றது.

அஃறிணைப் பொருள்களாகிய விலங்குகள் மட்டுமா தலைவிக்கு வருத்தம் உண்டாக்க முற்பட்டன? உயர் திணையாகிய மனிதன் என்ன வாழ்கிறான்! அவனும் பிறருக்குத் துன்பம் தருகிறோமே என்ற எண்ணம இல்லாமலேதான் தொழில் செய்கிறான். மாடுகளை ஓட்டிச் செல்லும் அவ்விடையன் சும்மா போகக் கூடாதா? போகவில்லை; வேய்ங்குழலை வைத்து ஓயாமல் ஊதிக்கொண்டே செல்லுகிறான். அந்தப் பாவிக்கு வாய் தான் வலியாதா? ஏன் இப்படி ஊதி ஊதித் தலைவியின் உயிரை வாங்குகிறானோ, தெரியவில்லை! அவன் கண்டானா தலைவிக்கு இது வருத்தத்தை உண்டாக்கும் என்று? அவன் மகிழ்ச்சியாகத்தான் ஊதிக்கொண்டே செல்லுகிறான். அந்த இடையனுடன் உறவு கொண்டதா இந்தக் குயிலும்? ஏன் இதுவும் இப்பொழுது கூவத் தொடங்கிவிட்டது? செவ்வானத்தையும் தென்றலையும் கண்டவுடன் குயிலுக்குக் ‘குஷி’ பிறந்துவிட்டது. ஆனால், குயிலுக்குப் பிறந்த குஷியில் அதுபாட ஆரம்பிக்கத் தலைவிக்கு இது தலைவேதனையாக அன்றோ ஆய்விட்டது! தலைவனை மறக்க முயன்ற தலைவிக்கு எத்தனை பகைகள் திரண்டெழுந்து விட்டன! மாலைக் காலம், சிவந்த அந்த வானம், குயில், துணையுடன் வரும் மாடுகளும் பறவைகளும், இடையன், தென்றல், மயில், பிறைச்சந்திரன்-இவை அனைத்தும் கார் காலத்தில் உள்ளவை. இவற்றை அடிப்படையிற் கொண்டு, இலக்கண ஆசிரியின் ‘காரும் மாலையும் முல்லை’ (தொல், அகத் திணை, 6) என்று கூறிப் போனான்.

இந்த நிலைக்களத்தை வைத்துக்கொண்டு ஒரு தலைவி படும் பாட்டை இதோ பிற்காலப் புலவன் ஒருவன் சித்தரிக்கிறான்.

தண்ணமுது உடன்பிறந்தாய் வெண்ணிலாவே!
தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே!
பெண்ணுடன் பிறந்ததுஉண்டே வெண்ணிலாவே! என்றன்
பெண்மைகண்டும் காயலாமோ வெண்ணிலாவே!
திக்கெலாம் தென்றல் புலிவந்து பாயுதேமன்மதா-குயில்
சின்னம் பிடித்தபின் அன்னம் பிடியாதே!

    (குற்றாலக் குறவஞ்சி, 24,25)

இத்துணைத் துயரத்துடன் இருப்பினும், தலைவி தன் கடமையிலிருந்து தவறினதில்லை. அவளைத் தலைவன் நன்கு அறிவான். எனவே, பிரிந்து சென்று மீளும்பொழுது ஓயாமல் தலைவியைப் பற்றியே நினைந்துகொண்டு வருகின்றான்; மீண்டு வரும்பொழுது குதிரைகள் பூட்டிய தேரில் வருகின்றான். தேரோட்டுபவனும் தலைவனுடைய மனநிலையை நன்கு அறிந்து, மிகவும் வேகமாகத்தான் தேரைச் செலுத்துகிறான். என்றாலும் என்ன! தலைவனுடைய மனம் செல்லுகின்ற வேகத்துடன் ஒப்பிட்டால், வேகமாகச் செல்கின்ற குதிரைகள்கூட ஓடாமல் மெள்ளச் செல்வது போலக் காட்சியளிக்கின்றன அவனுக்கு. எனவே, பாகனை நோக்கிப் பேசுகிறான் தலைவன்; “நம்முடன் வருகின்ற வீரர் விரைந்து வருதலாலே மிகவும் வருந்தியுள்ளனர். அவர்கள் இடையிற் கட்டிய கச்சையை அவிழ்த்து விட்டுக்கொண்டு மெள்ள இடை இடையே தங்கி வருவார்களாக. இதுவரை பயன்படுத்தாமல் வைத்திருந்த தாற்று முள்ளாலே குதிரையைக் குத்தியாயினும் விரைவில் செலுத்துக!” என்கிறான் சென்ற வினை முடித்து மீளும் தலைவன்.

'விரைப்பரி வருந்திய வீங்குசெலல் இளையர்
அரைச்செறி கச்சை யாப்பழித்து அசைஇ
வேண்டமர் நடையர் மென்மெல வருக
தீண்டா வைமுள் தீண்டி நாம்செலற்கு
ஏமதி வலவ! தேரே' 

     (நற்றிணை-21)

(விரைப்பரி – விரைந்து செல்லல்; வீங்கு செலல்- மிக்க செலவினையுடைய; இளையர்- வீரர்; அரைச்செறி கச்சை- இடுப்பிற் கட்டிய கச்சு; யாப்பு- கட்டு; வைமுள்- கூர்மையான தாற்றுக் கோல்; ஏமதி- செலுத்துக.)

தலைவியை நினைத்துக்கொண்டு தேரை விரைவாகச் செலுத்தக் கட்டளை இடுகின்ற காலத்திலும் தலைவன் தன் உயர்ந்த பண்பாட்டிலிருந்து நீங்கவில்லை. திடீரென்று தலைவனுடைய தேர் வேகமாகப் போகத் தொடங்கினால் உடன் வருகின்ற வீரர்கள் ஓடும்படி நேரிடுமன்றோ? அவர்கள் அவ்வாறு ஓடிப் பின்தொடர வேண்டிய இன்றியமையாமை போர்க்காலத்தில் உண்டு. ஆனால், வேலை முடிந்து வீடு திரும்பும் நேரத்தில் அவர்களை ஓடவைப்பது முறையன்று. எனவே, தலைவன் அவர்கள் வேண்டுமளவு தங்கி இளைப்பாறிவிட்டுப் பின்னர் வரட்டும் என்கிறான்.

பழந்தமிழனுடைய பண்பாட்டைப் பார்க்க இது ஒரு தக்க வாய்ப்பாகும். சாதாரண நேரங்களில் மிக்க பண்பாட்டுடன் நடந்துகொள்பவர்கள்கூட, மனத்தில் ஒரு கவலை புகுந்துகொண்டால், பண்பாட்டை இழந்துவிடுவர். வேண்டியவர் – வேண்டாதவர் என்ற பாகுபாடின்றி நடந்து கொள்வர். இங்குத் தலைவனுடைய நினைவெல்லாம் தலைவியிடம் சென்றுவிட்டது. அவன் தேரை விரைவாகச் செலுத்தவேண்டும் என்று கட்டளை இடுகிறான். ஆனால், அந்நிலையிலும் அத்தலைவன் உடன்வருபவர்களை மறந்து விடவில்லை. அவர்கள் வேண்டுமானால் சிறிது நேரம் தங்கி இளைப்பாறிவிட்டு வரலாம் என்று கட்டளை இடுவானே யாகில், அவனுடைய பரந்த பண்பாட்டை அரிய வேறு சான்றும் வேண்டுமா?

தங்கள் காரியம் நடைபெற வேண்டுமானால் பிறருக்கு எத்துணைத் துயரம் அதனால் ஏற்படும் என்பதைப் பற்றிக் கவலைப்படாத பெரிய மனிதர்களை நாம் அன்றாடம் கண்டுகொண்டிருக்கிறோம். ‘இதற்கெல்லாம் நாம் கவலைப்பட முடியுமா சார்! என்று இப்பெரிய மனிதர்கள் வாய் கூசமால் பேசுவதையும் கேட்கலாம். ஆனால், தான் விரைவாகச் செல்ல வேண்டிய வேளையில் தலைவன் கட்டளையைக் காணுங்கள்! ‘தீண்டா வைமுள் தீண்டி..ஏமதி’ என்று கட்டளை இடுகிறான். தாற்றுக் காம்புக்கு அடைமொழி ‘தீண்டா’ என்பதாகும். குதிரை ஓட்டுபவர்கள் ‘சவுக்கு’ வைத்திருப்பது முறைதான். ஆனால், அதனை ஓயாமால் பயன்படுத்தும் சில மக்களையும் காண்கிறோம். ‘அக்கம்பு கையில் இருப்பதே குதிரையை அடிக்கத் தானே?’ என்று பேசுவார்கள் இவர்கள். ஆனால், பயன்படுத்தாமல் குதிரைக்கு அச்சத்தை உண்டாக்க மட்டுமே வைத்துள்ளான் அக்கம்பை அப் பழந்தமிழன். அதைப் பயன்படுத்து என்று கூறும்பொழுது கூடத் ‘தீண்டி’ (மெள்ளத் தொட்டு) என்ற சொல்லாலே தான் கூறுகிறான்.

தன்னோடு பலகாலும் பழகுகின்ற குதிரையினிடத்து அவன் கருணை காட்டுகிறான் என்பது மிகுதியும் பாராட்டற்குரிய ஒன்று அன்று. அஃறிணையாகிய குதிரை யினிடத்தும் அவன் கருணையுடையவன் என்பதற்காகவே அவனைப் பாராட்டுகிறோம். ஆளால், அதிகம் பழகியதாலும், அதனால் தான் பயன் பெறுவதாலும் ஒருவேளை அவன் அதனிடத்து அன்பு பாராட்டுகிறானோ என்று நினைக்கத் தேவை இல்லை. அவன் இயல்பாகவே இப் பண்பாடுடையவன் என்பதையும் நாம் அறியப் பாடல்கள் உள்ளன.

ஒருதலைவன் வினை முற்றி மீண்டு வருகிறான். வருகின்ற காலமோ, கார்காலம், வரும் வழியோ, அடர்ந்த காட்டு வழி. கார் காலம் ஆகலின், காடு முழுவதும் பூத்துக் குலுங்குகின்றது. அப்பூக்களினிடத்து வண்டுகள் மொய்க்கின்றன. எவ்வாறு அவை வருகின்றன? இரட்டையாக, துணையோடு புணர்ந்தவையாய் வருகின்றன. அவ்வாறு வண்டுகள் நிறைந்துள்ள வழியில் தலைவன் தேரில் வருகிறான். தேரில் மணிகள் நிறையக் கட்டி யுள்ளன. தேர் வேகமாக வரும்போது மணிகள் ஒலிக்கு மல்லவா? காட்டில் திடீரென்று இவ்வாறு மணி ஒலி கேட்குமானால், துணையுடன் மகிழ்ந்து தேன் உண்ணும் வண்டுகள் அச்சத்தால் ஓட நேரிடுமே! துணையுடன் மகிழ்ந்திருக்கும் அவை பிரிந்து செல்லத் தான் காரண மாய் இருக்க விரும்பவில்லை அத்தமிழ் மகன். அதற்காக யாது செய்கின்றான்? தன் தேரில் உள்ள மணிகளின் நாவைப் பிடித்துக் கட்டிவிட்டான். தன்னோடு தொடர்புள்ள மக்களிடத்துகூட அன்பு காட்டாத இக் காலத் தமிழன் எங்கே, ஏதோ வண்டுகள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்குத் தான் இடையூறாக இருத்தல் கூடாதென்று மணியின் நாவைக் கட்டும் அக்காலத் தமிழன் எங்கே! அவன் பண்பாட்டின் உச்சியை எட்டிப் பிடித்தவன் என்பதைக் கூறவும் வேண்டுமா?

பூத்த பொங்கர் துணையொடு வதிந்த
தாதுஉண் பவவை பேதுறல் அஞ்சி
மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன் 

     (அகநானூறு-4)

[பொங்கர்- சோலை; தாது உண் பறவை – மகரந்தம் உண்ணும் வண்டு; பேதுறல் – மயக்கமடைதல்.]

“வாழ்வின் குறிக்கோளை நன்குணர்ந்த இத் தலைவனுக்கு ஏற்ற தலைவியே வீட்டில் உறைகின்றாள். அவளும் ஏதோ வாழ்கின்றோம் என்று கருதி வாழாமல், ஓர் உயரிய குறிக்கோளுடனேதான் வாழ்கின்றாள், தலைவன் பிரிந்திருக்கின்ற காலத்து அவள் கடமைகளைச் செவ்வனே செய்து முடிப்பினும் மனம் முழுவதையும் அவன்பாற் செலுத்தி வாழ்கின்றாள். இல்லறம் நடத்தத் தொடங்கிய அன்றிலிருந்தே விருந்தோம்பலைத் தன் தலையாய கடமையாகக் கொண்டாள் தலைவி.

இருந்துஓம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு' 

     (குறள்-81)

என்றல்லவோ பொதுமறை கட்டளை இடுகின்றது? எனவே, தலைவி விருந்தோம்பலில் எத்துனை இன்பம் அடைகிறாள் என்பதைத் தலைவன் அவளைப் பிரிந்து வாழும் பொழுது நினைந்து பார்க்கிறான்.

அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்
முல்லை சான்ற கற்பின்
மெல்லியல் குறுமகள் 

      (நற்றிணை, 142)

[அல்லில் ஆயினும் – இராப்பொழுதில் ஆனாலும்; விருந்தைக் கண்டாள் உவக்கின்றாளாம் தலைவி. அளவு மீறிய விருந்தினர் வரினும் சலியாது உபசரிக்கின்றாள்.]

“விருந்து ஒழிவறியாப் பெருந்தண் பந்தர்வருந்தி வருநர் ஓம்பி….” நேரங் கெட்ட நேரத்தில் எங்கேயாவது உணவு விடுதி இல்லாத ஊரில் வேறு வழியில்லாமல் யார் வீட்டிற்காவது நீங்கள் விருந்தினராகச் சென்றதுண்டா? சென்றிருந்தால், இப்பழைய பாடலில் வரும் தலைவியை நினைக்க நேரிடும்.

இத்தகைய ஓர் உயர்ந்த குறிக்கோளுடன் தலைவி வாழ்கிறாளாகலின். அத்தலைவனும் மனக் கவலையின்றி வாழ முடிந்தது; கடமைகளைக் கவனிக்கவும் முடிந்தது. தலைவநிடத்து அவள் என்ன சிறப்பைக் கண்டாள். இத்துணை மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு? இதோ கூறுகிறாள் ஒரு தலைவி.

அம்ம வாழி தோழி! காதலர்
நிலம்புடை பெயர்வது ஆயினும் கூறிய
சொல்புடை பெயர்தலோ இலரே." 

      (நற்றிணை, 289)

இத்தகைய தலைவனுடன் வாழ்வதாலேதான் அவள் முல்லை சான்ற கற்பின் குறுமகளாக வாழ முடிந்தது.


$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s