-மகாகவி பாரதி
எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது.

முன்னுரை – 2
வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. ரிக் வேதத்திலுள்ள புருஷ ஸூக்தம் சொல்லுகிறது, ‘இஃதெல்லாம் கடவுள்’ என்று. இக்கருத்தையொட்டியே கீதையிலும் பகவான், ‘எவன் எல்லாப் பொருள்களிலும் ஆத்மாவையும், ஆத்மாவில் எல்லாப் பொருள்களையும் பார்க்கிறானோ அவனே காட்சியுடையான்’ என்கிறார்.
நீயும் கடவுள், நீ செய்யும் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள், நீ பந்தத்தில் பிறப்பதும் கடவுளுடைய செயல். மேன்மேலும் பல தளைகளை உனக்கு நீயே பூட்டிக் கொள்வதும் கடவுளுடைய செயல். நீ முக்தி பெறுவதும் கடவுளுடைய செயல்.
‘ஆனால் நான் எதற்காக தளை நீங்கும்படி பாடுபடவேண்டும்? எல்லாம் கடவுளுடைய செய்கையாய் இருக்கும் போது முக்தியடையும் படி நான் ஏன் முயற்சி செய்ய வேண்டும்?’ என்று ஒருவன் கேட்பானாயின், அதற்கு நாம் கேட்கிறோம், ‘முக்தியாவது யாது?’
எல்லாத் துயரங்களும் எல்லா அம்சங்களும் எல்லாக் கவலைகளும் நீங்கி நிற்கும் நிலையே முக்தி. அதனை எய்த வேண்டுமென்ற விருப்பம் உனக்குண்டாயின், நீ அதற்குரிய முயற்சி செய். இல்லாவிட்டால், துன்பங்களிலே கிடந்து ஓயாமல் உழன்று கொண்டிரு. உன்னை யார் தடுக்கிறார்கள்? ஆனால், நீ எவ்விதச் செய்கை செய்த போதிலும், அது உன்னுடைய செய்கையில்லை. கடவுளுடைய செய்கை என்பதை அறிந்துகொண்டு செய். அதனால் உனக்கு நன்மை விளையும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது. ‘ஸர்வம் விஷ்ணு மயம் ஜகத்’ என்பது ஸநாதன தர்மத்தின் சித்தாந்தம். எல்லாம் கடவுள் மயம், எல்லாத் தோற்றங்களும், எல்லா வடிவங்களும், எல்லா உருவங்களும், எல்லாக் காட்சிகளும், எல்லாக் கோலங்களும், எல்லா நிலைமைகளும், எல்லா உயிர்களும், எல்லாப் பொருள்களும், எல்லா சக்திகளும், எல்லா நிகழ்ச்சிகளும், எல்லாச் செயல்களும் – எல்லாம் ஈசன் மயம். (ஆதலால், எல்லாம் ஒன்றுக்கொன்று சமானம்.) ‘ஈசாவஸ்தம் இதன் ஸர்வம் யத் கிஞ்ச ஜகத்யாம் ஜகத்’ என்று ஈசாவாஸ்யோப நிஷத் சொல்லுகிறது. அதாவது :- ‘இவ்வுலகத்தில் நிகழ்வது யாதாயினும் அது கடவுள் மயமானது’ என்று பொருள்படும்.
இந்தக் கருத்தையே ஸ்ரீ கிருஷ்ணன் பகவத் கீதையில், ‘இவ்வுலகனைத்திலும் நிரம்பிக் கிடக்கும் கடவுள் அழிவில்லாதது என்று உணர்’ என்று சொல்லுகிறார்.
எனவே எல்லாம் கடவுள் மயமாய், எல்லாச் செயல்களும் கடவுளின் செயலாக நிற்கும் உலகத்தில், எவனும் கவலைப்படுதலும், துயர்ப்படுதலும் அறியாமையன்றோ?
‘எல்லாம் சிவன் செயல்’ என்றால், பின் எதற்கும் நான் ஏன் வருத்தப்பட வேண்டும்? ‘இட்டமுடன் என் தலையிலே இன்னபடி யென்றெழுதிவிட்ட சிவன் செத்துவிட்டானோ?’
நக்ஷத்திரங்களெல்லாம் கடவுள் வலியால் சுழல்கின்றன. திரிலோகங்களும் அவனுடைய சக்கரத்தில் ஆடுகின்றன. நீ அவன், உன் மனம், உன் மனத்தின் நினைப்புகள் எல்லாம் அவனே ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் – அங்ஙனமாக, மானுடா, நீ ஏன் வீணாகப் பொறுப்பைச் சுமக்கிறாய்? பொறுப்பையெல்லாம் தொப்பென்று கீழே போட்டுவிட்டு, சந்தோஷமாக உன்னால் இயன்ற தொழிலைச் செய்து கொண்டிரு. எது எப்படியானால் உனக்கென்ன? நீயா இவ்வுலகத்தைப் படைத்தாய்? உலகமென்னும் போது உன்னைத் தவிர்ந்த மற்ற உலகத்தையெல்லாம் கணக்கிடாதே. நீ உட்பட்ட உலகத்தை, உனக்கு முந்தியே உன் பூர்வ காரணமாக நின்று உன்னை ஆக்கி வளர்த்துத் துடைக்கும் உலகத்தை, மானுடா, நீயா படைத்தாய்? நீயா இதை நடத்துகிறாய்? உன்னைக் கேட்டா நக்ஷத்திரங்கள் நடக்கின்றன? உன்னைக் கேட்டா நீ பிறந்தாய்? எந்த விஷயத்துக்கும் நீ ஏன் பொறுப்பை வகித்துக் கொள்கிறாய்?
(தொடர்கிறது)
$$$