-சுவாமி ஓம்காராநந்தர்

தேனி, ஸ்ரீ சித்பவானந்த ஆசிரமத்தின் நிறுவனரான அமரர் பூஜ்யஸ்ரீ சுவாமி ஓம்காராநந்தரின் சுவாமி விவேகானந்தர் குறித்த இரண்டாவது கட்டுரை இது...
ஒவ்வோர் உயிரிலும் தெய்வத்தன்மை மறைந்திருக்கிறது. பாரதத் தாய் ஈன்றெடுத்த பாஸ்கர ஜோதியான சுவாமி விவேகானந்தர் உபநிஷதங்களின் செய்தியை உலகெங்கும் முரசறைந்தார்.
உயிரின் உண்மைத் தன்மையை உள்ளவாறு எடுத்துரைத்து அறியாமையில் மூழ்கிக் கிடந்தோரைத் தட்டி எழுப்பினார்.
அமரத்துவம் வாய்ந்த அவரது சொற்கள், மெய்யறிவைக் கொடுத்து, மரணமிலாப் பெருநிலையை அருளக் கூடிய பேராற்றல் படைத்தவை.
சுவாமிஜி, ஆன்மிகத்தின் அனைத்து நிலைகளையும் பற்றி அற்புதமான சொற்பொழிவுகள் பலவற்றை அருளியிருக்கிறார். அதில் ஓரிடத்தில், எனது லட்சியத்தைச் சுருக்கமாகச் சொன்னால், இதுதான்:
மனிதன் தெய்விகமானவன் என்பதை மனித குலத்திற்குப் போதிப்பது; இந்த உண்மையை அவர்கள் வாழ்வில் ஒவ்வோர் அசைவிலும் வெளிப்படச் செய்வதே.
மனிதனில் உறைகிற தெய்விகத்தை வெளிப்படுத்துவதை மதம் என்றார் சுவாமிஜி. மனிதன் எப்படி தெய்விகமானவன்?
பொதுவாக, மனிதன் தன்னை உடலாகவே கருதிக்கொண்டு, உடலின் பிறப்பையே தன் பிறப்பாகக் கொள்கிறான். உடல் இறந்தால், தான் இறந்துவிடுவேன் என எண்ணிக் கலங்குகிறான். உடலின் தன்மைகளான அழகு, ஆரோக்கியம், நோய், பலம், பலமின்மை, வலி அனைத்தையும் தனது தன்மைகளாகக் கருதிக் கொள்கிறான்.
ஒவ்வொருவனுக்கும் புறத்தில் தெரிகிற பருவுடல் உள்ளது. பொறிகள், மனம், புத்தி, பிராணன் ஆகியவை சேர்ந்த நுண்ணுடல் உள்ளது.
மின்சாதனங்கள் இயங்குவதற்கு, மின்கம்பங்கள், அதனுள் மெல்லிய இழைகள் இருந்தால் மட்டும் போதாது. அதனுள் மின்சாரம் வேண்டும். அதுபோல உயிர் என்ற தத்துவம் நுண்ணுடலுக்கும் பருவுடலுக்கும் உயிரூட்டி, உணர்வளிக்கிறது.
நான் உடல் அல்ல, நான் ஓர் உயிர் என மனிதனை உணர வைப்பதே பாரதக் கல்வித் திட்டத்தின் பால பாடம்.
உடலை விட்டு உயிர் பிரியும்போது நுண்ணுடலும் சேர்ந்து அதனுடன் போகிறது. அதனால்தான் ஒருவரின் புண்ணியம், பாபம், கல்வி ஆகியவை பிறவிதோறும் உடன் வருகின்றன என்று கூறப்படுகிறது.
தான் உடல் அல்ல, தான் ஓர் உயிர் என்பதை உணர்ந்து கொள்ளும் மனிதன் உடல் வாழ்க்கைக்காக உழைப்பதை விடுத்து, உயிர் வாழ்க்கைக்காக உழைக்கிறான். அதாவது, உடல் இறந்த பிறகு, வரப் போகும் அடுத்த பிறவிகளில் நல்ல கதி கிடைப்பதற்காக உழைக்கிறான்.
அடுத்து, உயிர் என்பது என்ன? என்று மெய்யறிவு நூல்களின் துணையோடு முறையாக ஆராய்ந்தால் உயிரானது உண்மையில் பரம்பொருளின் நிழல் என்பது விளங்கும்.
பரம்பொருளின் தன்மை என்ன? பரம்பொருள் தூய உணர்வே வடிவானது. அதன் மீது உயிருக்கு உயிரான இறைவனும் உயிர்களும் உலகங்களும் உள்ளங்களும் உடல்களும் மாயையால் கற்பிக்கப்பட்டுள்ளன என்பது அத்வைத வேதாந்த ஸித்தாந்தம் கூறும் அறுதித் தத்துவம்.
உதாரணத்திற்கு, கடல் என்ற சொல்லும் அலை என்ற சொல்லும் நீரின் மீது கற்பிக்கப்படுகின்றன. உண்மையில் நீர் மட்டுமே இருக்கிறது. உயிர் அலை போன்றது, உயிருக்கு உயிரான இறைவன் கடல் போன்றவர். இருவருமே பரம்பொருளில் கற்பிக்கப்பட்டிருக்கிறார்கள்.
வேதத்தில் கர்ம காண்டம், ஞான காண்டம் என இரு பகுதிகள் இருக்கின்றன. கர்ம காண்டப் பகுதி, நான் ஓர் உயிர் என்ற எண்ணத்தை விதைக்கிறது. ஞான காண்டமோ, அந்த எண்ணத்தையும் வேரறுத்து, தான் உணர்வு என்ற உண்மையை உணர்த்துகிறது.
பேருணர்வே பரம்பொருள் (ப்ரக்ஞானம் பிரம்ம) என்று கூறும் வேதம், நீ பரம்பொருளாக இருக்கிறாய் (தத் த்வம் அஸி) என்றும் கூறுகிறது. பரம்பொருளில் கற்பிக்கப்பட்டிருக்கும் அனைத்துமே பரம்பொருளுக்கு வேறானவை அல்ல.
அதனால்தான், கடவுள் எங்கு இருக்கிறார்? என்ற கேள்விக்கு கடவுள் எங்குதான் இல்லை? என்ற எதிர்க்கேள்வியையே பதிலாக ஸநாதன தர்மம் அளிக்கிறது. பரம்பொருள் பார்க்குமிடம் எங்கும் நீக்கமற நிறைந்தது என்றால், மனிதனுக்குள்ளும் அது இருப்பதாகத்தானே பொருள்?

தன்னை உடலாகக் கருதிக் கொள்வதுதான், மனிதனின் அத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். தான் உடல் என்ற எண்ணம்தான், மரண பயத்திற்கு வித்திடுகிறது. மக்களின் அத்தனை துன்பங்களும் கவலைகளும் மரண பயத்திற்குள் புதைந்திருக்கிறது.
தன்னை உடலாகக் கருதிக் கொள்ளும்வரையில் மரணத்திலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. தன்னை எங்கும் நீக்கமற நிறைந்த மாறாத உணர்வாக உணர்ந்து கொள்பவர் பிறப்பு இறப்பைக் கடந்து விடுகிறார்.
தன்னை உடலாகக் கருதிக்கொள்வதற்கு தேஹாத்மபுத்தி என்று பெயர். தன்னை உயிராகக் கருதிக் கொள்வதற்கு ஜீவாத்ம புத்தி என்று பெயர். தான் உடலும் அல்ல, உயிரும் அல்ல, தான் தூய உணர்வு என்று புரிந்து கொள்வதற்கு பிரம்மாத்ம புத்தி என்று பெயர்.
இதைத்தான் ஒவ்வோர் உயிரிலும் தெய்வத்தன்மை புதைந்திருக்கிறது என்றார் சுவாமி விவேகானந்தர். இதையே தெய்வம் நீயென்று உணர் என்று கூறினார் மகாகவி பாரதியார்! அவர் இறுதியாக, பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையின் தலைப்புகூட, மனிதனுக்கு மரணமில்லை என்பதுதான்!
உபநிஷதங்கள் கூறும் உண்மைத் தத்துவத்தை, சுவாமி விவேகானந்தரின் மொழியில் உணர்ந்து பேரின்பத்தில் திளைத்திருப்போமாக!
- நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் (ஜனவரி 2014) சிறப்பிதழ்
$$$