-மகாகவி பாரதி
ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய் என்று கடவுள் சொல்லுகிறார்.

முன்னுரை -3
கடவுள் சொல்லுகிறார் :- லோபமும் பயமும் சினமும் அழிந்து, என் மயமாய், என்னைச் சார்ந்தோராய், ஞானத் தவத்தால் தூய்மை பெற்றோர் பலர் எனது தன்மை எய்தியுள்ளார் (கீதை 4-ஆம் அத்தியாயம், 10-ம் சுலோகம்) இந்த சுலோகத்தில் ஒருவன் இகலோகத்திலேயே ஜீவன் முக்தி பெற்று ஈசுவரத் தன்மையடைதற்குரிய உபாயம் பகவானால் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஞானத்தைக் கடைப்பிடி. அதனையே தவமாகக் கொண்டொழுகு. சினத்தை விடு. என்னையே சரணமாகக் கொண்டு என்னுடன் லயித்திரு. நீ எனது தன்மை பெறுவாய் என்று கடவுள் சொல்லுகிறார்.
எல்லாச் செயல்களையும் கடவுளுக்கென்று சமர்ப்பித்து விட்டுப் பற்றுதல் நீக்கி எவன் தொழில் செய்கிறானோ அவனைப் பாவம் தீண்டுவதில்லை. தாமரையிலை மீது நீர் போலே. (கீதை, 5-ஆம் அத்தியாயம், 10ஆம் சுலோகம்)
சால நல்ல செய்தியன்றோ, மானுடர்காள், இஃது உங்களுக்கு! பாவத்தை செய்யாமலிருக்கும் வழி தெரியாமல் தவிக்கும் மானுடரே! உங்களுக்கு இந்த சுலோகத்தில் நல்வழி காட்டியிருக்கின்றான் கடவுள். ஈசனைக் கருதி, அவன் செயலென்றும், அவன் பொருட்டாகச் செயல்படுவதென்றும் நன்கு தெளிவெய்தி, நீங்கள் எத்தொழிலைச் செய்யப் புகுந்தாலும், அதில் பாவம் ஒட்டாது. தாமரையிலை மீது நீர் தங்காமல் நழுவி ஓடிவிடுவது போல் உங்கள் மதியைப் பாவம் கவர்ந்து நிற்கும் வலியற்றதாய் உங்களை விட்டு நழுவியோடிப் போய்விடும்.
(தொடர்கிறது)
$$$