பாரதியின் தவம்

-இசைக்கவி ரமணன்

பாரதி இலக்கியம்
எழுத்துத்தான் பாரதி நமக்காக விட்டுச் சென்றிருக்கும் தவம். வெளியே இருந்து வியக்கும்போது அது நிழல்தரும் மரமாக இருக்கிறது. உள்ளே நுழைந்தாலோ அது நெருப்புக் குழம்பாகத் தகதகக்கிறது. இதுவே பாரதத்தின் அடிநாதம். இதுவே பாரதியின் இயல்பு.

ஒவ்வொரு மனிதனின் குணசித்திரத்திலும் ஒரு தலையாய அம்சம் இருக்கும். அதை வைத்தே அந்த மனிதனை நாம் அடையாளப்படுத்துகிறோம். இவர் சாது, அவர் முன்கோபக்காரர், இவர் நகைச்சுவையாளர், அவர் இரக்கமுள்ளவர் என்று ஒவ்வொருவரையும் அவரது தலையாய அம்சத்தைக் கொண்டே நாம் அறிந்துகொள்கிறோம்; நினைவில் வைத்துக் கொள்கிறோம். வீடுகளுக்கும் அடையாளங்கள் உண்டல்லவா? நமக்கு முகவரி, இலக்கங்கள் தேவை. குழந்தைகளோ கதவின் நிறம், காய்த்திருக்கும் மரம், பறவைகளின் கூடு, சமையல் வாசனை இவற்றை வைத்தே அடையாளம் கண்டுகொள்ளும். 

மனிதனுக்கு எப்படி குணசித்திரமோ, வீட்டுக்கு எப்படி வனப்புகளோ, அதேபோல ஒவ்வொரு நாட்டுக்கும் கூட ஒரு பிரத்யேகமான தன்மை இருக்கும். அதுதான் அந்த நாட்டுக்கு அடிநாதமாக, உயிரோட்டமாக இருக்கும்; அதை அடையாளம் கண்டு, அதை மதித்து, அதனோடு இயைந்து நடக்கும் நாடு செழிக்கும்; அதிலிருந்து விலகியிருந்தால் அந்த நாடு சீரழியும் என்ற ஓர் அரிய தகவலை நமக்கு சுவாமி விவேகானந்தர் தருகிறார்.

ஆன்மிகமே பாரத நாட்டின் ஆதார ஸ்ருதி என்பதை அவரே நமக்கு விளக்குகிறார். எங்கே மதம் முடிகிறதோ அங்கே துவங்குகிறது ஆன்மிகம் என்பதே வேறெந்த நாட்டுக்கும் இல்லாத, நமக்கே உரிய தனிச்சிறப்பு. பாரத நாட்டின் ஆன்மிகம், எதையும் விலக்காமல், எதையும் சாராமல், அனைத்தையும் உள்ளடக்கி, எதையும் அதற்கென்றுரிய இடத்தில் வைத்துக் காட்டும் அறிவார்ந்த பார்வை. அது மதங்களைத் தாண்டியது; மண்ணில் மணமாய்க் கலந்தது. அது எல்லோருக்கும் உகந்த வாழ்க்கை நெறி. எவராலும் பழக முடியும் வாழ்க்கை முறை.

படைப்பு என்பது எதற்கு, அதில் நாம் யார், நமது நிலை என்ன, எதற்குப் பிறப்பு, இறப்புக்குப் பின்பு என்ன, நமது பூமி சுழலும் இந்த அண்டத்தின் பரிமாணம் எத்தகையது, இன்பதுன்பங்களின் காரணம் போன்ற பலவற்றையும் அறிவுபூர்வமாகவும் அனுபவமூர்வமாகவும் மிகத் தெளிவாக அறிந்தும் அந்த அறிவைப் பதிந்தும் வைத்திருக்கிறது பாரத நாட்டுப் பண்பாடான ஆன்மிகம். எந்த மனிதனுக்கும் இந்தத் தெளிவென்பது முதலில் ஒரு நம்பத்தக்க சேதியாகவே இருக்கிறது. மெல்ல மெல்லவே அது அக அனுபவத்தில் நிரூபணமாகிறது. 

நமது முன்னோர்கள், இந்தத் தெளிவை அடைவதற்குக் கைக்கொண்ட கருவியொன்று உண்டு. அதன் பெயரே தவம்! 

தவம் என்பது, உயிரும் உணர்வும் ஒருமுனையில் இடைவிடாமல் கனன்று கொண்டிருக்கும் தன்மை. ‘விளைவற்ற ஒரு விசைப்பு’ தவம். தன்னில் ஆழ்தல் தவம். தன்னை அறிதல் தவம். தன்னில் அனைத்தையும் காணல் தவம். தானே அனைத்துமாய்த் தகதகத்தல் தவம். அண்டமும் பிண்டமும் தட்டாமாலை சுற்ற அசையாதிருப்பது தவம். காலமென்னும் கண்கட்டு அவிழ்ந்து, கண், தன்னைக் காணும் அனுபவம் தவம். கடவுளின் தோள்தொட்டு, படைப்பு என்னும் பெருங்கதையைப் படிப்பது தவம். எல்லாமும் அறிந்தபின், எப்போதும் போல எளிய மனிதனாக வளைய வருவது தவம்.

தவமென்னும் கனலின் முனையில் நின்று மந்திரங்களைத் தரிசித்து அவற்றை மக்களின் நலனுக்காகத் தரைக்கிறக்கித் தந்தார்கள் மஹரிஷிகள். தவமென்னும் கனல்நதியில் மூழ்கி முத்துக் குளித்து, மகத்தான மந்திரக் கவிதைகளை விண்ணவர் வியக்கும் வண்ணம் மண்ணுக்குத் தந்தவன் பாரதி. மஹரிஷிகள் மந்திரங்களைக் கவிதைகளாக்கித் தந்தார்கள், மஹாகவியோ கவிதையை மந்திரமாக்கித் தந்தான். ஆம், அவன் கவிதைகள் தவத்தின் விளைவானதால்தான் அவை நம் நெஞ்சுக்குள் நேரே ஊடுருவி நெருக்கமாக இருக்கின்றன. தமிழே தெரியாதவர்களையும் தட்டி எழுப்புகின்றன.  அவன் அதனால்தான் நம்மையும் தவம்செய்யத் தூண்டுகிறான்:

செய்கதவம் செய்கதவம் நெஞ்சே! தவம்செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்! வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு 

      (விநாயகர் நான்மணி மாலை)

எதற்காகத் தவம் புரிய வேண்டுமாம்? அன்பை விடவும் சிறந்தது ஒன்றுமில்லை என்று தெரிந்துகொள்ளத்தானாம்! சரி, அப்படி அன்பைத் தவமாகச் செய்தால் என்னவாகுமாம்? அந்தத் தவத்தில் நமது கடமை நமக்குத் தெளிவாகும். வேதத்தின் மூலக்கொள்கை யாது? தன்னை அறிதலும் மன்னுயிர்பால் செயலார்ந்த அக்கறை கொள்வதுமே! இதுதான் வள்ளுவர் உணர்த்தும் வாழ்வாங்கு வாழ்தல். இதை இன்னும் விரித்து எத்துணை அற்புதமாகப் பாடுகிறான் பாரதி! கடமை நான்கு முகங்கள் கொண்டதாம்:

கடமையாவன தன்னைக் கட்டுதல்
பிறர்துயர் தீர்த்தல் பிறர்நலம் வேண்டுதல்…
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்..

தன்னை அறியாமல் எவனும் இன்னொன்றைச் சரியாக அறிந்துகொள்ள வாய்ப்பே இல்லை. தன்னை அறிந்தால்தானே தனக்கு அப்பாற்பட்ட இன்னொன்று இல்லையென்று தெரியவரும்? அப்போது நம்மூலம் பல்கிப் பெருகிப் புறத்தே பாயும் இறைவெள்ளத்தைத்தான் அன்பு என்று கூறமுடியும். தன்னை அறிதல் என்பதை விடவும் தன்னைக் கட்டுதல் என்றானே அது இன்னும் சுவாரசியமானது. தன்னைக் கட்டாமல், தனது தேவைகளைக் குறைத்துக்கொள்ளாமல் பிறர் துயர் கண்ணில் படாதல்லவா? அடுத்து, எல்லோர் துயரையும் தீர்ப்பதென்பது நம்மால் ஆகிற காரியமா? ஆனால், எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்று விரும்புவதும் பிரார்த்தனை செய்வதும் எவருக்கும் சாத்தியமே! எனவேதான் பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல் என்றான். இறுதியில், உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல் என்கிறான்.

உ..ல..கெ..லா.ம்..(உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன், உலகம் யா..வை..யு..ம் தாமுளவாக்கலும்) என்னும்போது இத்தனை பெரிய உலகைப் பரிவோடு காப்பவன் நம்மைக் கைவிடமாட்டான் என்ற நம்பிக்கை தொனிக்கிறது. 

எல்லாம் புரக்கும் இறை நமையும் காக்கும் என்ற
சொல்லால் அழியும் துயர்

என்று இன்னோர் இடத்தில் அவனே சொன்ன வார்த்தைகள் இந்த வாக்கியத்தை விளக்குகின்றன. மேலும், உலகெலாங் காப்பவன் ஒருவனே. அவனே பலவாகத் தோன்றுகிறான். 

‘ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்’
 ‘..எனப்பல மதத்தினர்
உருவகத்தாலே உணர்ந்து உணராது 
பலவகையாகப் பரவிடும் பரம்பொருள் 
ஒன்றே; அதனியல் ஒளியுறும் அறிவாம்
அதன் நிலை கண்டார் அல்லலை அகற்றினார்
அதனருள் வாழ்த்தி அமரவாழ்வு எய்துவோம்!

பாரதிக்கு பாரதிதான் அகராதி என்று வாகீச கலாநிதி திரு கி.வா.ஜ. சொன்னதுதான் எத்தனை உண்மை!

முதலில் சொன்ன மூன்று கடமைகள்தான் (தன்னைக் கட்டுதல், பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்) இந்த உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல்.. என்னும் கடமைக்குத் தகுதியுள்ளவர்களாக நம்மைத் தயார் செய்கின்றன. 

ஆக, அன்பே தவமாகி அதுவே கடமையாகி அந்தக் கடமையே தவம் என்று காட்டுகிறான் பாரதி:

துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகும் இங்குக்
குறைந்தாரைக் காத்து எளியார்க்கு உணவீந்து
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெல்லாம்
சிறந்தாளு நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே!

இந்தத் தவம்தான் நமது நாட்டின் ஜீவன். எத்தனையோ இன்னல்களைச் சந்தித்தபோதும் இன்றும் நம் நாட்டில் ஆன்மிகப் பண்பு தழைத்திருப்பதற்குக் காரணம் இந்தத் தவம்தான். தவம் என்பது பூஜையைப்போல் அல்ல. அதற்குக் கால அளவு கிடையாது; இடைவேளை இருக்கவே முடியாது; இவ்வளவு செய்தால் இத்தனை பயன்விளையும் என்ற கணக்கில் வரவே வராது; அதைத்தவிர பிற எதையும் அனுமதிக்காது. அது அவன் ஒவ்வோர் எழுத்திலும் ஒளி வீசுகிறது. இப்போது,

நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்
இமைப்பொழுதும் சோரா திருத்தல் – உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்
இசைக்கவி ரமணன்

என்ற பாடல் நமக்கு இன்னும் தெளிவாக விளங்குகின்றது. அவன், முன்பு குறிப்பிட்ட நான்கு கடமைகளை இங்கே மூன்றாகச் சுருக்கித் தந்திருக்கிறான். செயல் என்பது சிந்தையில் தோன்றுவது. சிந்தை, இந்த மூன்றையும் செய்தால், நான்காவது கடமையாகிய உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல் இயல்பாக, அதுவாக நடக்கும். வள்ளுவர் காட்டியது போல அறவழியில் பொருளையும் இன்பத்தையும் நிர்வகித்தால் வீடு நிச்சயம் என்று கூறாமல் கூறிச் சென்றதைப் போல, நான்காவது கடமை தவிர்க்க முடியாத நடப்பாகி விடுகிறது! 

இமைப்பொழுதும் சோரா திருத்தலே தவம். அது ஒரு புலப்படாத வெறி. வெளியே புறப்படாத தகதகப்பு. பாரதி, எப்போதும் அந்த வெறியில் தகதகத்துக் கொண்டிருந்தான். எழுத்து என்ற ஒன்றை அவனது தடுக்க முடியாத இயல்பாக பராசக்தி தந்திருக்கவில்லையென்றால். அவனது தவம், நம்மால் அறியப்படாமல் போயிருக்கும். ரிஷிகள், எல்லாவற்றையும் துறந்து, தவம் செய்து, எல்லாவற்றையும் அடைந்து, உலகை விட்டுச்செல்லும்போது, அந்தத் தவத்தை உலகுக்காக விட்டுச் செல்வார்கள். 

எழுத்துத்தான் பாரதி நமக்காக விட்டுச் சென்றிருக்கும் தவம். வெளியே இருந்து வியக்கும்போது அது நிழல்தரும் மரமாக இருக்கிறது. உள்ளே நுழைந்தாலோ அது நெருப்புக் குழம்பாகத் தகதகக்கிறது. இதுவே பாரதத்தின் அடிநாதம். இதுவே பாரதியின் இயல்பு.

பலயுகங்கள் ஒருகணத்தில் குலவுமெங்கள் பாரதம் – அதில்
நிலவுகின்ற தவவெறிக்கு நிழல்மரமே பாரதி!

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s