-மாதா அமிர்தானந்தமயி தேவி

‘அகில பாரத சுவாமி விவேகானந்தர் 150வது ஜெயந்தி விழாக்குழு’வின் தலைவராக இருந்த பூஜ்யஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி, ஜெயந்தி கொண்டாட்டத் துவக்க விழாவில் (புதுதில்லி- ஜனவரி 11, 2013) ஆற்றிய அருளுரையின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவமே இக்கட்டுரை....
சுவாமி விவேகானந்தரின் வாழ்வும் உபதேசங்களும் இன்று போலவே எந்தக் காலத்திலும் முக்கியமானவை. அவரது சொற்கள் மனிதனின் ஆன்மிக ஆற்றலைக் கனன்று எழவைத்து அதற்கு ஒரு மகத்தான சக்தியைத் தரவல்லவை.
இன்றுள்ள பெரும்பாலான பிரச்னைகளுக்கு பழமையான நமது பண்பாட்டைக் காற்றில் பறக்கவிட்ட நமது சிந்தனைப்போக்கும் வாழ்க்கை முறையுமே காரணங்கள்.
இன்று நாம் உடனடித் திருப்தியை எதிர்பார்க்கும், அக்கரைப் பச்சையை நாடும் மனப்போக்கைக் கொண்டுள்ளோம். சுவாமிஜியின் கருத்துகள் அமைதியான, சக்தி வாய்ந்த ஆன்மிகப் புரட்சி உருவாக உதவும். அது வெளிப்புறப் புரட்சியல்ல, உள்ளார்ந்த மாற்றம் தரும், வாழ்வியல் மதிப்பீடுகள் சார்ந்த அகப்புரட்சி.
இன்று நமக்கு அறிவு உள்ளது; ஆனால் விழிப்புணர்வு இல்லை. தகவல் உள்ளது; ஆனால் பகுத்தறிவு இல்லை. இந்த நிலைக்கு உலகமயமாக்கலின் தாக்கம், ஆங்கிலேய ஆட்சி, மற்ற மதங்கள் ஆகியவற்றின் மீது ஓரளவிற்குக் குறை கூறலாம். ஆனால் அவையே முக்கியக் காரணங்கள் அல்ல. நாம், நமது பொறுப்பின்மையின் காரணமாக, விலைமதிப்பற்ற நம் சொத்துகளைப் போற்றிப் பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்பதே உண்மைக் காரணம்.
ரிஷி பூமியான பாரதம் ஆன்மிகத்தின் பொன்னொளியை உலகிற்கு அளித்த நாடு. உலகம் முழுமைக்கும் வழிகாட்டும் ஒளியான நமது வேதப்பண்பாடு இன்று சிக்கலில் உள்ளது. இந்த தர்மத்தை நாம் காப்பாற்ற வேண்டும்.
ஆனால் இந்தப் பொறுப்பை ஏற்க வேண்டிய பாரதத்தின் இளைய தலைமுறை, இந்த மண்ணிற்கே உரிய மேன்மையை மறக்க ஆரம்பித்துள்ளது. தர்மத்தைக் காப்பாற்றும் துணிவு நமக்கு இன்னும் வரவில்லை. பரந்த, தொன்மையான நம் அறிவுக் கலாச்சாரத்திற்கு நாமே சவக்குழி தோண்டியுள்ளோம்.
எனினும் இன்னமும் காலம் கடந்து விடவில்லை. மனதார முயற்சித்தால், நம் தர்மத்தை மீட்டெடுத்து விடலாம். எப்படி?
இதற்காக நீங்கள் தீவிர ஆன்மிக விரதங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதில்லை. உங்கள் சக்திக்கேற்ப சிறு அளவில் நம் தர்மத்தைச் செயல்படுத்தலாம்.
என்னால் முடியாது என்ற எண்ணம், என்னால் மட்டுமே முடியும் என்ற அளவுக்கு மாற வேண்டும். இந்த உயர்ந்த கல்வியைத் தரும் நமது பாரம்பரியத்தை எதிர்காலத்துக்கு எடுத்துச் செல்லும் விதமாக நம் இளைஞர்களிடம் இவை பதிய வேண்டும்.
ஒரு நூற்றாண்டில் பெரிய கூட்டம் சாதிக்காதவற்றை, முழு மனதும், பொறுப்பும், ஆற்றலும் மிக்க ஒரு சில ஆண்களாலும் பெண்களாலும் ஒரே வருடத்தில் சாதிக்க முடியும் என்ற சுவாமி விவேகானந்தரின் இந்தச் சொற்களை நினைவில் கொள்ளுங்கள்.
சுவாமிஜி மேலும் கூறினார்: வீரர்களாலேயே பூமி ஆளப்படுகிறது. இது மாறாத உண்மை. ஆண்மகனாக இரு. எப்போதும் பயமில்லை என்றே கூறு. இதை அனைவரிடமும் கூறுங்கள்: பயம் வேண்டாம்.
சுவாமிஜி மேற்கூறியதன் மூலம் ஆத்மசக்தி மீண்டும் உயிர்த்தெழுவதையே கூறுகிறார். சரணாகதி மனோபாவத்துடன் செயலில் ஈடுபடும்போது நமக்குச் சக்தி பெருகும்; லட்சியத்தை அடைய முடியும்.
தன்னை நம்பாதவன் நாத்திகன் என்று சுவாமிஜி கூறியுள்ளார். தன்னை நம்புதல் என்பது தனது எல்லையற்ற ஆத்மசக்தியை நம்புவதாகும்.
தன் சமய நம்பிக்கைகளைச் செயல்படுத்துவதில் உள்ள பயமே இன்றைய ஹிந்து சமூகத்தின் சாபக் கேடு. வேத மாதா, தேவ மாதா, பிரக்ருதி மாதா, ஜகன்மாதா போன்றோரை மறந்ததே இன்றைய இந்துவை இருண்ட படுகுழியில் தள்ளிவிட்டது.
சநாதன தர்மத்தின் சாரம் பயமின்மையே. பயம், வாழ்வை மரணத்திற்கு ஒப்பாக ஆக்குகிறது; நமது செயல்திறனை மழுங்கச் செய்கிறது. அது நம் மனதைச் சுயநலத்திற்கும், தீய செயல்களுக்கும் அடிமை ஆக்குகிறது. இந்தப் பயத்தின் மூல காரணமே நான் கோழை என்னும் எண்ணம்தான். நமக்குள் உள்ள எல்லையற்ற சக்தியைப் பற்றிய அறியாமையே இந்தப் பயத்திற்குக் காரணம்.
சிறுவயதிலேயே பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளிடம், ‘நீங்கள் வீராங்கனைகளாக வளர வேண்டும். யாரும் உங்களை அடிமைப்படுத்த அனுமதிக்கக் கூடாது. உங்கள் மன உறுதி அதிகரிக்க வேண்டும்’ என்று கூற வேண்டும். அதுபோல் ஆண்களுக்கு, பெண்களை மதித்துப் பாதுகாக்கக் கற்பிக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் மன ஆரோக்கியத்திற்கான தூண்டுதல்கள் அதன் குடும்பச் சூழ்நிலையிலிருந்தே வருகின்றன. 7, 8 வயதுக்குள் 70% மன வளர்ச்சிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிடுகிறது. குழந்தையாய் இருந்தபோது பெற்ற அஸ்திவாரத்தின் பலம் மற்றும் பலமின்மை மீதே, மீதமுள்ள 30% கல்வி அமைகிறது.
ஒரு பெரிய கட்டடத்திற்கு பலமான அடித்தளம் தேவை. வாழ்நாள் முழுவதும் கற்கும் திறனைப் பெறுவதே அறிவுடைமை.
உலகாயத இலக்குகளை அடைய அதைப் பற்றிய வெளி உலக அறிவைப் பெற வேண்டும். ஆனால் நம் வாழ்வை அத்தகைய தகவல்களோடு மட்டுமே குறுக்கிக்கொண்டுவிட்டால், நமது அகம்பாவம் வளர்கிறது. இன்று நாம், குறிப்பாக இளைஞர்கள், தேவையற்ற தகவல்களில் மூழ்கிக் கிடக்கிறோம். நமது இளைஞர்கள், தங்கள் உடல் மற்றும் மனங்களையே நம்புகின்றனர். இவ்விதச் சிந்தனைகள் மக்களை எந்திரமாகவும் சுயநலம் கொண்டவர்களாகவும் ஆக்குகின்றன.
சுவாமி விவேகானந்தர் ஒரு முறை கூறினார்: மரணம் என்பது நிச்சயம் என்பதால், நற்காரியத்திற்குத் தன்னைத் தியாகம் செய்வது சிறந்தது. சனாதன தர்மத்தின் சாரமான இது போன்ற கருத்துகளை இளைஞர்களுக்குக் கற்பிக்க வேண்டும். நம் வாழ்வில் இவற்றைக் கடைப்பிடித்து, அவர்கள் லட்சிய புருஷர்களாக விளங்க உதவ வேண்டும்.
இந்தியக் கலாச்சாரத்தை மதிக்கத் தவறிய தன்மையை இன்று நாம் காண்பதற்கு நமது சமூக அமைப்பு, நமது இன்றைய கல்வி முறை, கண்மூடித்தனமாக மேலைநாட்டை காப்பியடிக்கும் போக்கு, அதனால் மாறிவிட்ட நம் வாழ்க்கை முறை இவையே காரணம். இவை யாவும் பயம், கவலை மற்றும் கோழைத்தனத்தை உருவாக்குகின்றன. மனித இனம், வாழ்க்கையை ஒரு வீர விளையாட்டு அல்லது சவாலாகத் தைரியத்துடன் எதிர்நோக்கத் தேவையான பலத்தை இழந்து நிற்கிறது.
நம் இளைஞர்கள் ஒன்றுக்கும் உருப்படாதவர்கள் அல்ல; எல்லாவற்றுக்கும் ஏற்றவர்களே. பொறுப்பற்றவர்கள் அல்ல, பொறுப்பாகக் கவனத்துடன் கையாளப்படாதவர்கள். அவ்வளவே. இந்தியாவின்-ஏன் – உலகின் எதிர்காலமே அவர்கள் கையில்தான் உள்ளது. அவர்கள் விழித்தெழுந்தால் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கும்.
மனம் மற்றும் புத்தியின் சக்தி குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இவற்றின் வீரியமும் சிறிது காலத்திற்குப் பின் மறைந்துவிடும். அதனால்தான் நம்முள் உறைந்து கிடக்கும் ஆத்ம சக்தியின்பால் நம்பிக்கையைச் செலுத்த வேண்டும்.
இதை உடனடியாகப் பெற்றுவிட முடியாது. நம் செயல்களைச் சரணாகதியாகச் செய்யும்போது, நாம் சக்தி பெற்று, நம் இலக்கை நோக்கிப் பயணிப்போம். நமது எதிரிகள் வெளியில் இல்லை; உள்ளேயே உள்ளனர். நாமே நமக்கு எதிரி. நமது அறியாமை, ஆசைகளுக்கு வயப்படும் நம் அடிமைத்தனம், வாழ்க்கையைப் பற்றிய தவறான புரிதல்கள் ஆகிய தளர்வுகள் நம்மைச் சுருக்கி விடுகின்றன.
எல்லா அறிவின் அடிப்படையும் நம்முள் உறையும் சுத்த சத்வம் என்பதை ரிஷிகள் கண்டனர். நாம் இந்த உண்மையை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும்.
அன்பு, ஆசி, அருள், கருணை என்பவை யாவும் கடவுள் என்பதன் மறுபெயர்களே. நம் தர்மத்தை மலர்ச்சியுடன் நாம் திறந்த மனத்துடன் செய்யும்போது இந்தச் சக்தியும் அருளும் நம்முள் ஊடுருவிச் செல்கின்றன.
மனிதர்களைக் கடவுளாக, அதாவது நரனை நாராயணனாகக் காணும் தத்துவத்தை சனாதன தர்மம் மட்டுமே கற்றுக் கொடுக்கிறது. விளக்கங்களுக்கு அப்பாற்பட்ட, விவரிக்க முடியாத, அருவமும் கடவுளே என வணங்கும் ஒரே மதம் இந்து மதம் மட்டுமே. எந்த உருவத்தை நாம் இறைவனாகக் காண்கிறோமோ அதில் அன்புருவான இறைவனின் இருப்பை உணர்கிறோம்.
இயற்கையைப் போற்றி எல்லா உயிரினங்களையும் மதிக்கும் நீண்ட காலப் பாரம்பரியம் நமக்கு உண்டு. அளவில் சிறிய ஒரு தேனீ இல்லாவிட்டால் மகரந்தச்சேர்க்கையின்றி ஒரு பூவினமே முழுவதும் அழிந்துவிடும். உண்மையிலேயே, ஒவ்வொன்றுக்கும் ஒரு பணியும் தேவையும் உண்டு. எதுவும் முக்கியமற்றதல்ல.
மதம் என்பது என்றோ பிரிந்து போன மக்களை இணைக்கும் பாலமே, பிரிக்கும் சுவர் அல்ல. இதை அறிய ஒவ்வொருவரும் மதத்தின் உட்கருத்துகளை உணர்ந்து கொள்ள வேண்டும். அவை அன்பு மற்றும் கருணை என்பவை. இந்த வழியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையும், வாக்கும் அனைவருக்கும் உந்துசக்திகள்.

மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஒரு வருடமாவது கிராமங்களில் சேவை செய்ய வேண்டும் என்பது போல, ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த ஒரு குழந்தையாவது தன் கல்லூரிப் படிப்பை முடித்தபின் கிராம சேவை செய்ய வேண்டும். அரசு இதற்கு உதவ வேண்டும். இந்த இளைஞர்கள் ஏழைகளுடன் தங்கி, அவர்களது பிரச்னைகளை நேருக்கு நேர் உணர்ந்து அவற்றுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இப்படி, இளைஞர்களிடம் கருணையை ஊக்குவித்து ஏழைகளை உயர்த்தினால் அதன் மூலம் நாடே முழுமையான வளர்ச்சி பெறும். இதே போன்று, பணி ஓய்வு பெற்றவர்களும் ஏழைகளின் சேவைக்காக ஒரு வருடத்தை ஒதுக்கினால், நாட்டுக்கு இன்னும் நல்ல பயன் ஏற்படும்.
ஒரு வண்ணத்துப்பூச்சியின் வாழ்வு ஒரு சில நாட்களே. எனினும் அக்குறுகிய காலத்திற்குள் எத்தனை அழகையும் மகிழ்ச்சியையும் உலகில் பரப்பி விடுகிறது!
நாமும் உலகை மேலும் அழகானதாக மாற்ற, நமது வாழ்க்கையைப் பயன்படுத்த வேண்டும்.
பாரதம், ஆத்மஞானம் மற்றும் பண்டைய ரிஷிகள் தந்த சாஸ்திரங்களுடன் மீண்டும் உயிர்த்தெழுந்து உலகம் முழுவதும் பவனி வர வேண்டும். இதனை மெய்ப்பிக்க நாம் ஒற்றுமையுடன் கூட்டாகப் பணி புரிய வேண்டும்.
உலகிற்கே ஏற்புடைமைத் தத்துவத்தைக் கற்றுத் தந்த இப்பூமி அந்த நற்குணத்தில் ஆழப் பதிந்து இருக்க வேண்டும். சனாதன தர்ம சங்கொலி உலகைச் சுற்றி ஒரு புது எழுச்சியை ஊட்டட்டும்.
சுவாமி விவேகானந்தர் கண்ட இனிய கனவான அன்பு, பயமின்மை மற்றும் ஒற்றுமை நனவாகட்டும். இதனை மெய்ப்பிக்கும் சக்தியை பரமாத்மன் அனைவருக்கும் அருளட்டும்.
தமிழாக்கம்: எம்.பைரவசுப்பிரமணியம் நன்றி: ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் (ஜனவரி 2014)
$$$