-சுவாமி சுத்திதானந்தர்

அனைத்துப் பண்பாட்டிற்கும் தொட்டிலாக இருக்கும் பாரதியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பது ஹிந்து சமுதாயம். எனவே, ஹிந்து சமுதாயத்திற்கு அடித்தளமாக இருப்பது எது என்ற கேள்வி அடுத்து எழுவது இயல்பே. இங்கு ஹிந்துக்கள் என்று நாம் அழைக்கும் மக்களை உருவாக்கியது எது? அதுதான் உலகளாவிய, அறிவியல் பூர்வமான, சாஸ்வதமான வேதச் சிந்தனை முறை.
-3-
புத்த, சமண, சீக்கிய மதத்தினரிடையே ‘நாங்கள் வேறுபட்டவர்கள்’ என்று சொல்லிக் கொள்ளும் குழுவினரின் சிந்தனை முறைகளை நாம் கவனித்துப் பார்த்தால், அவையெல்லாம் ஹிந்துயிசத்தில் இருந்து சிறிய மாற்றங்களுடன் கிளைத்தவை என்பது தெரிய வரும். உண்மையை சொல்லப் போனால், உன்னத லட்சியங்களில் இருந்து ஹிந்து சமுதாயம் நழுவிச் சென்ற காலங்களில், அதனால் ஏற்பட்ட சமூகத் தீமைகளைக் களைய வெவ்வேறு காலங்களில் ஏற்பட்ட சீர்திருத்த இயக்கங்களே இவை. ஹிந்துயிசம் அல்லது வேத சனாதன தர்மமே இந்த அத்தனை குழுக்களுக்கும் தாய். ஹிந்துயிசத்தை ‘அனைத்து மதங்களின் தாய்’ என்று 1893 செப்டம்பர் 11-இல் சுவாமிஜி நிகழ்த்திய உலகச் சிறப்பு வாய்ந்த சிகாகோ உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல, இந்தியாவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வேர் ஹிந்துதான் என்ற எளிய உண்மையை நாம் தெரிந்து கொள்ளவும், ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அவர்களெல்லாம் முன்பு ஹிந்துக்களாக இருந்தவர்கள் தான்; படையெடுத்து வந்த ஆக்கிரமிப்பாளர்களாலோ அல்லது காலனிய ஆட்சியாளர்களாலோ கட்டாயப்படுத்தப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் இவர்கள். எனவே, நாம் ஹிந்து என்று சொன்னால் இந்திய துணைக் கண்டத்தில் வாழ்கின்ற மற்றும் முன்பு வாழ்ந்திருந்த அனைவரையும் தான் குறிப்பிடுகிறோம். ஏனென்றால் அவர்கள் எல்லோரும் ஹிந்துவிலிருந்து உருவானவர்களே. ஹிந்து என்பதை ஒரு குறிப்பிட்ட சமயத்துடன் சம்பந்தப்படுத்திக் கொண்டு, ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்துடன் மோதவிடக் கூடாது. இந்த விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இனி, ஹிந்து இனம் அல்லது இந்தியாவின் மேன்மையைப் பற்றி சுவாமிஜி கூறியதைப் பார்ப்போம். அவர் கூறுகிறார்: ‘உலக நாகரிகத்தின் தொட்டில் இந்தியா’.
இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் சுவாமிஜி இந்த விஷயத்தைச் சொல்லும்போது மொகஞ்சதாரோ, ஹரப்பாவில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை. சிந்து சமவெளி நாகரிகம் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. இன்று, அவற்றைக் கண்டுபிடித்த பிறகு மனித நாகரிகத்தின் தொட்டில் இந்தியா என்று உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், இவையெல்லாம் கண்டுபிடிப்பதற்கு முன்னதாகவே, பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே, உலகில் உள்ள எல்லா நாகரிகங்களின், பண்பாடுகளின் தொட்டில் இந்திய நாகரிகம் என்று சுவாமிஜி கூறியுள்ளார்.
அப்படியானால், இந்திய நாகரிகம் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது? அது ஹிந்து மக்களின் தினசரி வாழ்க்கை, செயல்கள், அவர்களுடைய சிந்தனை முறைகள், தத்துவம் ஆகியவற்றால் உருப்பெற்றுள்ளது. இந்த துணைக் கண்டத்தில் வாழும் ஹிந்து மக்களின் தொன்மை என்ன? அதை யாராலும் துல்லியமாகக் கூறிவிட முடியாது. வரலாற்றுக்கும் முந்தைய காலகட்டத்தில் ஹிந்து மக்களின் தொன்மை புதைந்து கிடக்கிறது; காலமின்மையில் கரைந்து கிடக்கிறது அதன் வரலாறு. இந்தப் பூவுலகில் வாழும் மிகவும் தொன்மையான குடி அது என்பதுதான் உண்மை.
மேற்கத்தியர்கள் (ஐரோப்பிய வரலாற்றாளர்களும் அறிஞர்களும்) இந்திய நாகரிகம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானது என்றும், ரிக் வேதம் சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது என்றும் சொல்கிறார்கள். இது கேலிக் கூத்தானது. இந்திய வரலாற்றை 5000 ஆண்டுக்குள் அடக்கி விட முடியுமா? உண்மையான இந்தியாவின் கதை பல யுகங்களை, பல்லாயிரம் ஆண்டுகளை கொண்டது; ஒரு யுகம் கடந்தது. நமது பௌராணிக முறை காலக் கணக்கெடுப்பு என்பது மேற்கத்திய மனங்களால் புரிந்துகொள்ளக் கூட முடியாதது. ஆனால், இப்போது பல இந்திய அறிஞர்களும் வரலாற்றாளர்களும் இந்தியாவின் தொன்மையைப் பற்றி மேற்கத்தியர்கள் கூறியதைத் தவறென அறிவியல் பூர்வமாக நிரூபித்து வருகிறார்கள்.
வேத வாழ்க்கை முறையை, சிந்தனை முறையைப் பின்பற்றும் ஹிந்து இனம் இன்று உலகிலேயே மிகப் பழமையான, இன்னும் உயிர்ப்புடன் உள்ள இனம். இதிலிருந்துதான் மற்றவை நேரடியாகவோ மறைமுகமாகவோ முளைத்தன. இந்த மண்ணில் வாழும் இம்மக்களின் பெருமையை பற்றி சுவாமிஜி:
இங்கிருந்து (இந்தியாவிலிருந்து) மிகப் பழமையான காலம் தொடங்கி, சமயங்களைத் தோற்றுவித்தவர்கள் பிறந்து, வற்றாத, தூய ஆன்மிக ஊற்றை வெள்ளமெனப் பெருக வைத்து இப்பூமியை மூழ்கடித்தனர். இங்கிருந்துதான் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளிலும் தத்துவ அலை புரண்டோடியது.
சுவாமிஜி கூறுகிறார்:
“இந்தப் பூவுலகில் புண்ணிய பூமி என்று ஒன்றிருக்குமானால் அது இந்தியாதான். இவ்வுலகில் தோன்றிய ஆன்மாக்கள் அனைத்தும் இங்குதான் தங்கள் கர்மாவைத் தீர்க்க வேண்டும். இறைவனை நோக்கிப் பயணிக்கும் எந்த ஆன்மாவுக்கும் இதுவே இறுதி வீடு. மனித மாண்பின் உச்சத்தை, தூய்மையை, தன்னலமற்ற பெருந்தன்மையை, அமைதியை, எல்லாவற்றிற்கும் மேலாக சுயபரிசோதனையில், ஆன்மிகத்தில் உச்சம் தொட்டது இந்தியா தான்.”
சுவாமிஜி மேலும் கூறுகிறார்:
“நம் தாய்நாட்டிற்கு இவ்வுலகம் மிகவும் கடன்பட்டிருக்கிறது. எந்த நாட்டுடன் ஒப்பிட்டாலும் சரி, உலகில் உள்ள எந்தவொரு இனமாக இருந்தாலும் சரி, பொறுமையான, மென்மையான ஹிந்து இனத்திற்குதான் அவை மிகவும் கடன் பட்டிருக்கின்றன.”
சுவாமிஜியின் பேச்சு, எழுத்துக்களில், உலகிலுள்ள எல்லா சமயங்களும் நேரடியாகவோ மறைமுகமாகவோ மகத்தான ஹிந்து சிந்தனை முறையிலிருந்து கிளைத்தவையே என்பதற்கு இதுபோன்ற எண்ணற்ற மேற்கோளைக் காட்ட முடியும். அவற்றையெல்லாம் நான் இங்கு மேற்கோள் காட்டாமல் உங்களிடம் ஒரு வேண்டுகோளை மட்டும் வைக்கிறேன். தயவுசெய்து சுவாமிஜியின் நூல் தொகுப்பில் இரண்டாவது பாகத்தில் உள்ள ‘உலகிற்கு இந்தியாவின் கொடை’ என்ற அத்தியாயத்தைப் படித்து பாருங்கள். அதில் அவர் ஹிந்து இனத்தைப் பற்றி உணர்வுபூர்வமாகப் பேசியுள்ளார். ஹிந்து இனத்திற்கு இந்த உலகம் மிகவும் கடன்பட்டுள்ளது. காரணம், அந்த அளவுக்கு ஹிந்து இனம் உலகிற்கு வழங்கியுள்ளது.
அமெரிக்க அறிஞரும் எழுத்தாளருமான மார்க் டிவைன், இந்திய மக்களைப் பற்றி பெருமையாகப் பேசியுள்ளார். அவர் கூறுகிறார்: ‘மனித இனத்தின் தொட்டில் இந்தியா’. அந்த இனத்திலிருந்துதான் பிற இனங்களும் நாகரிகங்களும் பண்பாடுகளும் தோன்றின. அவர் தொடர்ந்து எழுதும்போது, ‘மனித இனத்தின் பேச்சு பிறந்தது இந்தியாவில்தான்’ என்கிறார். ஹிந்துக்களின் பண்டைய தொடர்பு மொழியான சமஸ்கிருதம் தெய்வீகமானது. அது அனைத்து மொழிகளுக்கும் தாய். அது தேவ பாஷை என்று அறியப்படுகிறது. சுவாரஸ்யம் என்னவென்றால் மனித இனத்தின் மிகத் தொன்மையான மொழியான சமஸ்கிருதம், இன்று இருபத்தியோராம் நூற்றாண்டில் மிகவும் முன்னேறிய, அறிவியல் பூர்வமான மொழி என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கணினி மென்பொருள் உருவாக்கத்திற்கு மிகவும் ஏற்ற மொழியென ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. உலகின் எந்த மூலையிலும் நாகரிகமும் பண்பாடும் தோன்றியிராத போது இந்த துணைக் கண்டத்தில் வாழ்ந்த ஹிந்துக்கள் அம்மொழியைப் பயன்படுத்தி பேசியிருக்கிறார்கள்.
மார்க் டிவைன் சொல்கிறார்: ‘வரலாற்றின் தாய் இந்தியா. புராணங்களின் பாட்டி இந்தியா. மரபுகளின் முப்பாட்டி இந்தியா.’ வரலாறு, புராணம், மரபு ஆகிய எல்லாவற்றின் தொடக்கப் புள்ளி இந்தியாதான். இதை சுவாமிஜி ஓர் இடத்தில் கூறுகிறார்:
“மதங்களை ஆராய்ச்சி செய்யும்போது ஒரு விஷயம் வெளிப்படுகிறது. எந்த நாட்டிலும் நல்ல அறக் கோட்பாடு இல்லை. அப்படி ஏதாவது இருக்குமானால் அது நம்மிடம் (ஹிந்துக்கள்) இருந்து இரவல் பெற்றதே. ஆன்மா அழிவற்றது என்ற நல்ல கருத்தை எந்த மதத்திலாவது இருந்தால் அது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நம்மிடமிருந்து (ஹிந்துக்களிடமிருந்து) பெறப்பட்டதே.”
அனைத்துப் பண்பாட்டிற்கும் தொட்டிலாக இருக்கும் பாரதியப் பண்பாட்டிற்கு அடித்தளமாக இருப்பது ஹிந்து சமுதாயம். எனவே, ஹிந்து சமுதாயத்திற்கு அடித்தளமாக இருப்பது எது என்ற கேள்வி அடுத்து எழுவது இயல்பே. இங்கு ஹிந்துக்கள் என்று நாம் அழைக்கும் மக்களை உருவாக்கியது எது? அதுதான் உலகளாவிய, அறிவியல் பூர்வமான, சாஸ்வதமான வேதச் சிந்தனை முறை.
வாழ்க்கை பற்றிய அறிவியல் என்ற பிரம்மாண்டமான வேதச் சிந்தனை முறை ஹிந்து சமுதாயத்தின் ஆணிவேராக இருக்கிறது. உண்மையில், வேதச் சிந்தனை முறைதான் ஹிந்து கலாச்சாரம் தோன்றிய நாள் முதற்கொண்டு கோடிக்கணக்கான ஹிந்துக்களின் தினசரி வாழ்க்கையில் ஒவ்வொரு செயலையும் நெறிப்படுத்துகிறது. அப்படியானால், இந்த வேதச் சிந்தனை முறையின் சிறப்பு என்ன? இப்பொழுதுதான் நாம் ‘இந்திய கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் கட்டமைப்பு’ என்ற விஷயத்துக்கு வருகிறோம்.
உண்மையில் வேதச் சிந்தனை முறையின் சிறப்பு என்ன? சில விஷயங்களைப் பார்ப்போம். வேத சனாதன தர்மத்தின் மிக முக்கியமான அம்சம்: ‘உண்மை ஒன்றுதான், அதை மகான்கள் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார்கள்’ (ஏகம் சத் விப்ரா பஹூதா வதந்தி). இதுதான் வேதத்தின் மைய நாதம், மையக்கருத்து என்று சுவாமிஜி கூறுகிறார். மானுட வரலாற்றிலேயே மகத்தான கூற்று இது.
சற்று சிந்தித்துப் பாருங்கள். பிற கலாச்சாரங்களும் நாகரிகங்களும் தோன்றுவதற்கு முன், இங்கு செமெட்டிக் மதங்களைப் பற்றிச் சொல்ல என்ன இருக்கிறது? (அவை சமீபத்தில் தோன்றியவை என்று பொருள்), கால வரலாற்றில் பழுப்பேறிய பக்கங்களில் (மிகவும் தொன்மையான காலம் என்று பொருள்), மகத்தான சில மகரிஷிகள் வேதப் பாடல்களை இசைப்பதை கற்பனை செய்யுங்கள். சிந்து அல்லது கங்கை அல்லது சரஸ்வதி நதிக்கரையில் அமர்ந்துகொண்டு ‘உண்மை ஒன்றுதான் அதை மகான்கள் பலவிதங்களில் வெளிப்படுத்துகிறார்கள்’ என்ற மகத்தான அறிவிப்பை உலகிற்கு வெளியிட்ட அந்தக் காட்சியைக் காணுங்கள். உலகம் இந்த உண்மையை, ஏற்றுக் கொள்வது கிடக்கட்டும், புரிந்து கொள்ளக்கூட முடியாத நிலையில் இருக்கும்போது இந்த அறிவிப்பு வெளிவந்ததை கற்பனை செய்து பாருங்கள்.
இன்றும் கூட, இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் கூட, உலகம் ‘உண்மை ஒன்றுதான்’ என்ற சாதாரண உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. இது ஆச்சரியமாக இருக்கிறது! மனித இனமாக நாம் முன்னேறியவர்களாக, வளர்ச்சி பெற்றவர்களாக ஆகி விட்டோமா? இந்தக் கேள்வி, சில நேரங்களில் நம் மனதில் வருகிறது. தொழில்நுட்ப முன்னேற்றத்தினால் மட்டுமே நாம் வளர்ச்சி அடைந்தவர்களாகி விட முடியாது. மனித இனம் இந்த மகத்தான உண்மையைப் புரிந்து கொள்ளவில்லை. சுவாமிஜி கூறுகிறார்: இதுதான் வேதச் சிந்தனை முறையில் முக்கியமான அம்சம். இதுதான் ஹிந்து இனத்தை சிறப்பானதாக்குகிறது. ஏனெனில் வேறு எந்த மதத்திலோ, இனத்திலோ சிந்தனை முறையிலோ இது போன்று இல்லை.
உண்மை ஒன்றுதான் என்றால் அந்த உண்மை என்ன? அதுதான் தூய விழிப்புணர்வு அல்லது தெய்வீகம். நாம் அதற்கு எந்தப் பெயரையும் வைக்கலாம், அது விஷயம் அல்ல. பெயரினால் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடாது. தெய்வீகம்தான் இந்தப் படைப்பின் சாரமாக, மையமாக இருக்கிறது.
படைப்பின் சாரமாக இருக்கின்ற தெய்வீகம்தான் படைப்பினுள்ளும் பரவியிருக்கிறது; எல்லாவற்றிலும் விரவியிருக்கிறது. எனவே எல்லாம் தெய்வீகம் என்று வேதம் நமக்கு சொல்கிறது. ஒவ்வொரு மனிதனும் மனுஷியும் உயிரினமும் தெய்வம் என்கிறது. எல்லாம் தெய்வம். எல்லா இடத்திலும் தெய்வீகத்தை அன்றி வேறெதுவும் இல்லை.
இந்த தெய்வீகத்தை நாம் நம்ப வேண்டுமா? தேவையில்லை. நம்பிக்கை முறைமை என்பது வேதத்தில் இல்லை. எல்லா செமிட்டிக் மதங்களிலும் நம்பிக்கை முறைமை உள்ளது. உலகைப் படைத்தவர், அதை ஆட்சி செய்பவர் இறைவன். அவர் இந்த உலகத்திற்கு அப்பால் ஆகாயத்தில் வேறொரு இடத்தில் இருக்கிறார். அங்கிருந்து ஆட்சி செய்கிறார். மரணத்திற்குப் பிறகு நாம் அங்கு செல்ல வேண்டும். அங்கு நம்முடைய செயல்களுக்கு தீர்ப்பு வழங்கப்படும். தீர்ப்புக்கு ஏற்ப நாம் சொர்க்கத்திற்கு அனுப்பப்படுவோம். அல்லது கொடும் நரகத்தில் தள்ளப்படுவோம். இதெல்லாம் நம்பிக்கை. இவற்றை யாரும் சோதித்து உறுதிப்படுத்த முடியாது.
வேதம் இவற்றைப் பேசவில்லை. வேதம் சொல்கிறது, ‘நாம் ஒவ்வொருவரும் தெய்வீகமானவர்கள்’ என்று. தெய்வீகம் என்பது நாம் நம்ப வேண்டிய விஷயமல்ல. மாறாக சோதித்து உறுதிப்படுத்த வேண்டியது. யார் வேண்டுமானாலும் சோதிக்கலாம். ஒவ்வொருவரும் சோதிக்கலாம். ஒவ்வொருவரும் அதை அனுபவிக்கலாம். மரணத்துக்குப் பிறகு அல்ல, இந்த உடம்பில் வாழும் போதே.
வேதம் சொல்லும் அடுத்த முக்கியமான விஷயம், மனிதப் பிறப்பின் நோக்கமே ஒவ்வொருவரும் அந்த தெய்வீகத்தை உணர்வது, அனுபவிப்பது. நாம் பேசிக் கொண்டிருக்கின்ற தெய்வீகம் என்ற உண்மைக்கு வடிவமோ பெயரோ இல்லை என்றபோதிலும் அது எண்ணற்ற வடிவங்களில் கணக்கற்ற பெயர்களுடன் இருக்கிறது. சுயமுரண்பாடு போலத் தோன்றுகின்ற இதுதான் உண்மை அல்லது தெய்வீகத்தின் நிஜம். எண்ணற்ற வடிவங்களில் கணக்கற்ற பெயர்களில் அது இருக்கிறதென்றால் நாமும் அதை வரம்பற்ற வழிகளில் வணங்கலாம், அணுகலாம். இதுதான் ஹிந்து சமுதாயத்தை, இந்திய சமுதாயத்தை மிக சிறப்பானதாக்குகின்ற விஷயம். இதுதான் இந்திய பண்பாட்டின், நாகரிகத்தின் அடித்தளம்.
(தொடர்கிறது)
- நன்றி: பிரபுத்த பாரதா
- தமிழில்: திருநின்றவூர் ரவிகுமார்
$$$