உலகத் தலைவர் விவேகானந்தர்!

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்

முன்னாள் ஜனாதிபதி மேதகு டாக்டர் அப்துல் கலாம் 1.10.2004 அன்று கொல்கத்தாவில் சுவாமி விவேகானந்தர் வாழ்ந்த இல்லத்தை ஸ்ரீராமகிருஷ்ண மிஷனின் கலாச்சாரச் சின்ன நினைவகமாகத் திறந்துவைத்து உரை நிகழ்த்தினார். அந்த உரையிலிருந்து….

இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறை  சுவாமிஜியின் முன்னோர்களின் வீட்டை, தனித்தன்மை சிதையாமல் புதுப்பித்துள்ளார்கள். வரலாற்றுச் சிறப்பு மிக்க இத்தருணத்தில் இங்கு குழுமியுள்ள துறவிகளுக்கு என் வணக்கம். மற்றவர்களுக்கு என் வாழ்த்துகள்.

விவேகானந்தரின் தீர்க்க தரிசனம்:

நண்பர்களே, விவேகானந்தர் வாழ்ந்த இந்த வீட்டின் அழகிய கீழ்த்தளத்தில் இருந்தவாறு, அவரது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர விரும்புகிறேன்.

1893-ஆம் வருடம் மும்பையிலிருந்து ஐரோப்பாவிற்கு ஒரு கப்பல் சென்று கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த புகழ்மிக்க முக்கிய மனிதர்களான விவேகானந்தரும் ஜாம்ஷெட்ஜி நஸர்வான்ஜி டாடாவும் தங்களுக்குள் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

சுவாமிஜி, டாடாவிடம் அவரது பயணத்தின் நோக்கத்தை வினவினார். அதற்கு அவர், ‘நமது நாட்டிற்கு இரும்பு உருக்குத் தொழிலைக் கொண்டு வரும் லட்சியத்துடன் அயல்நாடு செல்கிறேன்’ என்றார்.

அது ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட நேரம். டாடாவிடம் சுவாமிஜி, ‘உங்களது உயர்ந்த நோக்கம் வெற்றி பெற நல்லாசிகள். ஆனால் நீங்கள் ஒன்றில் அதிக கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உருக்கு செய்முறையுடன் அதன் தொழில்நுணுக்கத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் தீவிர ஆராய்ச்சிக்கு ஓர் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும்’ என்றார்

ஆகா,  எவ்வளவு தீர்க்க தரிசனத்துடன் சுவாமிஜி அந்த வார்த்தைகளை அப்போது கூறினார்!

பிறகு பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. டாடாவால் உருக்குத் தொழில்நுட்பத்தை இங்கிலாந்திலிருந்து பெற முடியவில்லை. ஆனால் அட்லாண்டிக் கடல் தாண்டிச் சென்று அமெரிக்காவிடமிருந்து அவர் அதைப் பெற்றார்.

பிறகு அவர் ஜாம்ஷெட்பூரில் டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி என்ற அமைப்பை நிறுவினார்.  அதன்மூலம் ஒரு பெரிய செயல்திட்டம் உருவாயிற்று. அதன் முதல் பகுதியாகத் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் இரும்புத் தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டது.

இரண்டாவது பகுதியாக, டாடா தமது சொத்தில் ஆறில் ஒரு பங்கை பெங்களூரில் இன்ஸ்டிட்யூட் ஆப் மெட்டிரீயல் ரிசர்ச் என்ற ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவ வழங்கினார்.

சில நாட்களுக்கு முன் நான் ஜாம்ஷெட்பூர் சென்றிருந்தேன். அங்கு டாடாவின் தீர்க்க தரிசனத்தின் பலன்களைக் கண்கூடாகப் பார்த்தேன். அங்கு டிஸ்கோ எனப்படும் டாடா உருக்குத் தொழிற்சாலை ஆண்டுக்கு 40 லட்சம் டன் உருக்கை உற்பத்தி செய்கிறது. பெங்களூரில் சிறிய அளவில் துவக்கப்பட்ட ஆராய்ச்சி சாலை, இன்று ‘இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸயின்ஸ்’ என்ற பெயரில் மிகப் பெரிய கல்வி நிறுவனமாக இயங்கி வருகிறது.

சுவாமிஜியின் தீர்க்க தரிசனத்தையே இது பறைசாற்றுகிறது. வலுவான முன்னேறிய இந்தியாவை உருவாக்குவதே அவரது லட்சியம். அறிவியல் தொழில்நுட்பம், உற்பத்தித் தொழில் ஆகிய மூன்றும் ஒருங்கிணைந்து முன்னேற்றத்திற்குத் துணையாகச் செயல்பட வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இந்தியாவைத் தட்டி எழுப்ப அவரது அறைகூவல் ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல் பொருளாதார, சமுதாய முன்னேற்றத்திற்கும் ஆனது.

மதங்களிடையே ஆழ்ந்த ஒற்றுமை:

நண்பர்களே, நான் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய போது ராஜ்கோட்டிலுள்ள பல நிறுவனங்களிலிருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. அப்போது ராஜ்கோட்டில் பிஷப்பாக இருந்த ரெவரண்ட் பாதர் க்ரெகரி கரோ டெம்ப்ரல் என்பவர் கிரைஸ்ட் கல்லூரியைத் துவங்கி வைக்க அழைத்தார்.

அதே நாளில் சுவாமி தர்மபந்து நடத்திய சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் கலந்துகொண்ட ‘விஷன் ஆப் லைஃப்’ நிகழ்ச்சியில் நான் உரையாற்றினேன். அதன் பிறகு போர்பந்தரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் ஏற்பாடு செய்திருந்த மாணவர் கூட்டத்திற்கு நான் செல்லவிருந்தேன். அப்போது ராஜ்கோட்டில் காந்திஜி படித்த ஆல்ப்ரட் பள்ளிக்கும் சென்றேன்.

அந்தச் சூழ்நிலையில் நடந்த இரண்டு சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். கல்லூரித் திறப்பு விழாவிற்கு முன் ராஜ்கோட்டிலுள்ள பிஷப்பின் வீட்டிற்குச் சென்றேன். அவரது வீட்டிற்குள் நுழையும்போது ஒரு புனிதமான இடத்தில் நுழைவதைப் போல உணர்ந்தேன். அங்கிருந்த பிரார்த்தனைக்கூடத்தில் எல்லா மத உணர்வுகளும் மதிக்கப்பட்டு அவை ஒன்றிணைக்கப்பட்ட உணர்வு ஏற்பட்டது. அக்கூட்டத்தின் மகத்துவத்தை பிஷப் எனக்கு விளக்கிக் கொண்டிருந்தபோது, அருகிலிருந்த சுவாமி நாராயணன் கோயிலுக்கும் செல்ல எனக்கு அழைப்பு வந்தது. இதை நான் பிஷப்பிடம் தெரிவித்தபோது, தாமும் உடன் வருவதாகக் கூறினார்.

அக்கோவிலின் உள்ளே இருந்த அழகான கிருஷ்ணர் சிலையின் அருகில் நாங்கள் சென்றது ஒரு தனி அனுபவம். நெற்றியில் திலகமிட்டு எங்களை வரவேற்றனர். ரெவரண்ட் பாதர் க்ரெகரி, அப்துல் கலாம், ஒய்.எஸ் ராஜன் ஆகிய மூவரும் நெற்றியில் ஒரே மாதிரி ஜொலிக்கும் திலகத்துடன் அங்கு நின்றிருந்தது, மிகவும் மகத்துவம் உள்ளதாகப்பட்டது. இந்த நிகழ்ச்சி, நம் நாட்டில் உள்ள மத ஒருமைப்பாட்டின் மகத்தான சக்தி, ஆன்மிக முன்னேற்றத்திற்குத் துணை நிற்பதை விளக்குவதாக இருந்தது. இப்படி ஒருங்கிணைந்த மத உணர்வுகளே அக்டோபர் 2003 -ல் அறிவிக்கப்பட்ட சூரத் ஆன்மிக அறிக்கைக்குக்  காரணமாக அமைந்தன. அந்த அறிக்கையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனும் பெரும் பங்கு வகித்தது.

பிரார்த்தனையின் சக்தி:

அடுத்த நிகழ்ச்சி மிக அழகான ஒன்று, ராஜ்கோட், ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனின் சுவாமி என்னிடம் விமான நிலையம் செல்லும் வழியில் மிஷனின் கோவிலுக்கு வர வேண்டினார். ஸ்ரீ ராமகிருஷ்ணரின் உபதேசங்கள், சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை லட்சியத்தைப் பற்றிய சொற்பொழிவு அங்கு நடந்து கொண்டிருந்தது.

பிறகு பிரார்த்தனை மணி ஒலித்தது. அறை முழுவதும் நிறைந்த லயமான இசையின் இனிய அலைகளில் மூழ்கியிருந்தது. அங்கிருந்த பக்தர்களுடன் நானும் பிரார்த்தித்தேன். அங்கு நிலவிய ஆன்மிகச் சூழலும் பிரார்த்தனையின் தீவிரமும் என்னை ஒரு மாறுபட்ட உயர் உலகிற்கு இட்டுச் சென்றன. என்னுடன் வந்திருந்த நண்பர்களும், அங்கிருந்த சுவாமியும் வியக்கும்படி அன்று நான் ஒரு தனிப்பட்ட ஆன்மிக அனுபவத்தை உணர்ந்தேன். எனக்கு நேரம் பற்றிய உணர்வோ, நினைவோ இல்லை. அது ஒருங்கிணைந்த ஆன்மிகச் சூழலின் விளைவாக இருக்கலாம். இன்று விவேகானந்தர் வாழ்ந்த இக்கட்டடத்தில் இருக்கும்போது, என் மனம் ராஜ்கோட்டில் அன்று நான் உணர்ந்த ஆன்மிகச் சூழலையே உணர்கிறது.

உள்ளங்கையில் ஒரு பெரிய நூலகம்:

இந்தக் கட்டடத்தில் ஒரு நூலகம் நிறுவப்போவதாகக் கேள்விப்பட்டேன். இங்கு நிறுவப்போகும் நூலகத்திற்கும் ஆராய்ச்சி மையத்திற்கும் தற்போது இந்தியா முனைந்திருக்கும் டிஜிட்டல் நூலக முயற்சி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் பற்றி நான் உங்களுக்குக் கூற விரும்புகிறேன்.

எம்சிஐடி எனும் ‘மினிஸ்ட்ரி ஆப் கம்யூனிகேஷன் அண்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி’, ஐ.ஐ.எஸ்சி. எனும் ‘இண்டியன் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸயின்ஸ்’, அமெரிக்க கார்னகிமெலான் யுனிவர்ஸிட்டி ஆகிய மூன்றும் இணைந்து டிஜிட்டல் நூலகம் எனப்படும் ஒரு புதிய இணையதளத்தை உருவாக்கியுள்ளன.

இந்த இலவச இணையதளத்தின் மூலம் இன்னும் ஓர் ஆண்டுக்குள் 10 லட்சம் நூல்களை கணினி மூலம் யாரும் படிக்க முடியும். இதுவரை 80,000 நூல்கள் டிஜிடைஸ் செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 45,000 நூல்கள் 9 இந்திய மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இணைய தளத்தில் கிடைக்கின்றன. இவ்வாறு அறிமுகப்படுத்தப்படும் நூல்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் இரு மடங்காகிறது.

இப்போது சுமார் 100 டாலருக்கு 300 கிகா பைட்கள் (GB) கொண்ட டிஸ்குகள் கிடைக்கின்றன. அந்த டிஸ்கில் சுமார் 30,000 நூல்களை வைத்துக் கொள்ளலாம்.

இன்னும் 10 வருடங்களில் அதே அளவுள்ள ஒரு டிஸ்கில் சுமார் 3 கோடி நூல்களைச் சேகரித்து வைக்கலாம். ஒரு பெரிய நூலகத்தில் கூட இவ்வளவு நூல்கள் இருக்குமா என்பது சந்தேகம். உள்ளங்கையில் ஒரு பெரிய நூலகம்!

இங்கு அமைய உள்ள நூலகத்தை டிஜிடைஸ் செய்து, அதை விஸ்வபாரதி, கொல்கத்தாவிலுள்ள மற்ற பல்கலைக் கழகங்களுடனும் இணைத்தால், அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தர் போன்றோரின் அரிய இலக்கியங்களையும் பிற மதக்கோட்பாடுகளையும் நம் கலாச்சாரத்தின் அருமை பெருமைகளையும் பற்றி மேலும் அறிந்து அவற்றைப் பரப்ப முடியும்.

இங்கு நிறுவப்பட்டுள்ள கலாச்சார மையம்,  கிராம முன்னேற்றத்திற்காகவும் திட்டங்கள் வகுக்க உள்ளதாக அறிகிறேன். ஏழைகள், கிராமப்புற மக்கள் மற்றும் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களுக்கும் உதவும் வகையில் ஏற்படுத்தப்பட்ட ‘புரா’ (PURA – Proving Urban Amenities in Rural Areas) என்ற முயற்சியைப் பற்றி இங்கு கூற விரும்புகிறேன்.

இத்திட்டத்தின் மூலம் கிராமங்களிலிருந்து மக்கள் நகரங்களுக்குப் பெயர்வது கணிசமாகக் குறையும். இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், கிராமங்களின் சூழ்நிலைகளை நகர மக்களை ஈர்க்கும் வகையில் மாற்றுவதே. இதன்மூலம்  நகரத்தார் கிராமங்களுக்குக் குடியேறச் செய்ய வேண்டும். இன்றைய சில பெருநகரங்களில் மக்கள்தொகை அதிகரிப்பால் அதிக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் வாழ்க்கை வசதி, சுகாதாரம் போன்றவை குறைந்து மாசுகள், வியாதிகள், குற்றங்கள் ஆகியவை பெருகியுள்ளன.

நம் நாட்டில் 70 கோடி மக்கள் வசிக்கும் 6 லட்சம் கிராமங்களில் உள்ள முன்னேற்ற மையங்களை இணைத்து, அங்குள்ள எல்லாருக்கும் பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை அளிப்பது இன்றைய தலையாய கடமை.

இதன்மூலம் கிராமங்கள் – நகரங்களுக்கு இடையே உள்ள இடைவெளி குறையும். வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். கிராமங்களில் சுபிட்சம் பெருகும். இன்று கிராமங்களுக்கு இன்றியமையாத தேவைகள்- நீர், மின்சாரம், சாலைகள், சுகாதார வசதி, கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவையே.

கிராமங்களில் முன்னேற்றத்திற்கு உதவும் இணைப்புகள்:

1. கிராமங்களை இணைக்கும் சாலைகள், மற்ற போக்குவரத்து வசதிகள்;

2. கிராமங்களை நகரங்களுடன் இணைக்கும் கணினிகளும் கேபிள்களும்;

3. கல்வித் திட்டங்களின் மூலம் விவசாயிகள், கிராமக் கைவினைஞர்கள் ஆகியோருக்கான தொழிற்கல்வி, தொழில் முனைவோர் திட்டங்கள், வங்கிகள், சிறுகடன் உதவிகள் மற்றும் விளைபொருள்களை விற்பதற்கு வகை செய்தல்  -இவற்றின் மூலம் வேலைவாய்ப்புகள், விநியோகம் ஆகியவை கூடுவதால் கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.

இக்கலாச்சார மையம் மேற்கூறிய உத்திகளால் கொல்கத்தாவில் அருகிலுள்ள கிராமங்களைத் தத்தெடுத்து அங்கு தொண்டு நிறுவனங்கள்,  தர்மச் சிந்தனையாளர்களுடன் இணைந்து புரா அமைப்புகளைத் துவக்கி, கிராமத்தினரின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த முயல வேண்டும். சுவாமிஜிக்கு அது நாம் செய்யும் அஞ்சலியாக இருக்கும்.

நண்பர்களே, விவேகானந்தர் நமக்கு விடுத்த ஓர் அறைகூவல் என் நினைவிற்கு வருகிறது.

“ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள், உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள், அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன்னுணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும். பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும், எவையெல்லாம் மேலானதோ, அவை அத்தனையும் வரும்.”

பிரக்ஞையுடன் செயலில் ஈடுபட விவேகானந்தர் விடுக்கும் இந்த வேண்டுகோள் நம் நேர்மையையும் உள்ளுணர்வையும் தட்டியெழுப்பும். நம் இதயத்தில் நேர்மையிருந்தால், ஒழுக்கத்தில் கண்ணியம் இருக்கும். ஒழுக்கத்தில் கண்ணியமிருந்தால், வீட்டில் அமைதியிருக்கும். வீட்டில் அமைதியிருந்தால், நாட்டில் ஒழுங்கு நிலவும். நாட்டில் ஒழுங்கு இருந்தால், உலகில் அமைதி நிலவும்.

ஆகையால் நாம் அனைவரும் அப்படிப்பட்ட கல்வியறிவு பெற்ற, அறிவு சார்ந்த குடிமகன்களாக வாழ முயல்வோம். அதுவே சுவாமிஜி நமக்களித்துள்ள பாரம்பரியம்.

அத்தகைய குடிமகன், அவரது “எழுந்திருங்கள், விழித்துக் கொள்ளுங்கள், லட்சியத்தை அடையும் வரை ஓயாது உழையுங்கள்” என்ற அறைகூவலுக்குச் செவிசாய்ப்பான்; தனது உடல்நலனையும் சேர்வுறாத மனதையும் சுவாமிஜி கூறியபடி உறுதியுடன் பாதுகாப்பான்.

நம் குறிக்கோள்- வலிமையான, அமைதியான இந்தியாவை உருவாக்குவது மட்டுமல்ல. அந்த அமைதியை மற்ற உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதும் ஆகும்.

இன்று திறக்கப்படும் இக்கலாச்சார மையம் அத்தகைய எண்ணங்களுக்கும், அவற்றின் செயல்வடிவங்களுக்கும் ஒரு மையக் கருவூலமாக இருக்கட்டும். இம்மையத்தைத் திறந்து வைப்பதில் எனக்கு மிக மகிழ்ச்சி. இங்கு வருபவர்கள் இங்குள்ளவற்றைக் கண்டு ஊக்கமடைவார்கள் என்பது உறுதி,

இதுபோன்ற ஆனந்தமும், ஊக்கமும், இங்கு வர முடியாதவர்களும், நேரில் வந்து இவற்றையெல்லாம் காண முடியாதவர்களும் பெற வேண்டும் என விரும்புகிறேன்.

இம்மைய நிர்வாகிகள் இங்குள்ள நூலகக்கருவூலத்தை ‘டிஜிடைஸ்’ செய்து இங்கு காணப்படும் அனைத்துக் காட்சிகளையும், அத்துடன் நேர்முகமாகப் பதிவு செய்து அதை உலகம் முழுவதும் காணுமாறு செய்ய வேண்டும். ஏனெனில் பெரும் பொக்கிஷமாகப் பேணப்படும் உலகப் பெருந்தலைவர்களுள் சுவாமி விவேகானந்தரும் ஒருவர் ஆவார்.

நன்றி: விவேகானந்தரைக் கற்போம்! 
–தொ.ஆ: சுவாமி விமூர்த்தானந்தர், 
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு, சென்னை- 2012

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s