உலகிற்கு வழிகாட்டும் சுவாமி விவேகானந்தர்!

-வ.மு.முரளி

திரு. வ.மு.முரளி, பத்திரிகையாளர்; தினமணி நாளிதழில் பணியாற்றுகிறார். தினமணி இணையதளத்தில் இவர் எழுதிய கட்டுரை இது…

மூன்றே வார்த்தைகளில் ஒரு நாட்டையும் மக்களையும் கவர்ந்து வெற்றிக்கொடி நாட்ட முடியுமா? அதுவும் அறிவில் சிறந்தவர்களும் பல மதத் தலைவர்களும் நிறைந்த சபையில், தனியொருவனாக நின்று அனைவரது உள்ளங்களையும் கொள்ளையிட முடியுமா?

இதை நடத்திக் காட்டியவர் சுவாமி விவேகானந்தர். இன்றைக்கு 120 ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவின் சிகாகோ நகரில், 1893, செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற்ற உலக சர்வ சமயப் பேரவையில் பாரதத்திலிருந்து இந்து சமயப் பிரதிநிதியாகப் பங்கேற்றவர் விவேகானந்தர். அந்த மாநாட்டின் நோக்கங்களை வரையறுத்தவராக அவர் மாறியது ஓர் உலக அதிசயம்.

அப்படி என்ன அவர் புதிய விஷயங்களைச் சொல்லிவிட்டார்? உலகைப் பீடித்திருக்கும் பிரிவினைவாதமும், அளவுக்கு மீறிய மதப்பற்றும், மதவெறியும் உலகை ரத்தக்களரியாக்குகின்றன என்ற அவரது கருத்தில் புதுமை ஏதும் இல்லை. இதை பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே, சிலுவைப் போர்களின் போதே உலகம் உணர்ந்துவிட்டது. எனில், விவேகானந்தரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது எது?

இங்கு தான் பாரதத்தின் ஆன்ம வலிமை வெளிப்படுகிறது. விவேகானந்தர் உண்மையில் இந்து சமயப் பிரதிநிதியாக மட்டும் உலக சர்வ சமயப் பேரவையில் பங்கேற்கவில்லை. அவர் அங்கு ஆறு நாட்களில் நிகழ்த்திய உரைகளை வாசிக்கும் எவரும் அவரது தேசபக்தியால் புளகாங்கிதம் அடைவர்.

உலகில் மதவெறியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் புகலிடம் அளித்த நாட்டிலிருந்து வந்தவன் என்றுதான் தன்னை முதல் நாள் பேச்சில் விவேகானந்தர் அறிமுகப்படுத்திக் கொண்டார். யூதர்களுக்கும் பார்ஸிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த நாட்டிலிருந்து வருபவன் நான் என்று அவர் நெஞ்சு நிமிர்த்திப் பேசினார். இந்த நெஞ்சுரத்துக்குத் தகுதி உடையவர்கள் வேறு எவரும் அங்கிருக்கவில்லை.

‘எங்கெங்கோ தோன்றும் ஓடைகள் அனைத்தும் இறுதியில் கடலில் சங்கமிப்பதைப் போல அனைத்து மதங்களும் இறைவனிடம் சென்று சேர்கின்றன’ என்ற பொருள் தரும், பாரத மக்கள் அன்றாடம் பாடும் சிவ மகிமை ஸ்தோத்திரத்தை அந்தச் சபையில் விவேகானந்தர் பாடியபோது, அடிமை தேசத்தின் ஆண்மை மிக்க ஆன்மா பேசியதை சபை உணர்ந்தது.

இதுதான் அந்த மாநாட்டில் பேசிய பிற மதத் தலைவர்களிடமிருந்து விவேகானந்தரை வேறுபடுத்திக் காட்டியது. உலகம் முழுவதும் மதவெறி தலைவிரித்தாடுகையில் மானுடம் என்ன ஆகுமோ என்ற கவலையில் கூடிய அம்மாநாட்டிற்குத் தெளிவான வழிகாட்டுதலை, ஓர் இந்துத் துறவி என்ற முறையில் விவேகானந்தரால் கச்சிதமாகவும் உறுதியாகவும் வெளிப்படுத்த முடிந்தது.

அவரது பேச்சின் துவக்கமே அதை அடிக்கோடிட்டுக் காட்டியது. ‘அமெரிக்கா வாழ் சகோதர சகோதரிகளே’ என்ற மூன்றே வார்த்தைகளில், அங்கு கூடியிருந்த 7 ஆயிரம் பேருக்கும் தான் அடுத்து என்ன சொல்லப் போகிறேன் என்பதை அவர் தெளிவுபடுத்திவிட்டார்.

பரிபூரணமான இதயசுத்தியால் அமைந்த கம்பீரமான உடல்மொழியும், தியாகமும் துறவும் அமைத்துக் கொடுத்த அற்புதமான மனத்தெளிவும் அவருக்குப் பொலிவூட்டின. தனது இதய அன்பின் ஆழத்திலிருந்து அவர் கூறிய அச்சொற்கள் போலித்தனமானவை அல்ல என்பதை அந்த விநாடியே சர்வ சமயப் பேரவை உணர்ந்தது. அதனால் தான் வேறு யாருக்கும் கிட்டாத மிக நீண்ட கரவொலியும் வரவேற்பும் அந்த இளம் துறவிக்கு அங்கு கிடைத்தன.

அடுத்தடுத்த நாட்களில் சபையில் சோர்வு ஏற்பட்ட போதெல்லாம் விவேகானந்தரைப் பேச அழைத்து, சர்வ சமயப் பேரவை நிர்வாகிகள் பெருமை பெற்றனர்.  ‘இந்தியாவின் இளம்புயல்’ என்று அமெரிக்கப் பத்திரிகைகள் அவரை வர்ணித்தன. அதற்கடுத்த ஆண்டுகளில் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் நிகழ்த்திய தொடர்  பிரசாரம், வெளிநாடுகளில் இந்தியா குறித்து உருவாகியிருந்த தவறான கருத்துகளை மாற்றி அமைத்தது.

பல நூறு ஆண்டுகளாக பல்வேறு நாடுகளால் சூறையாடப்பட்ட போதும் இந்தியா தனது ஆன்ம வலிமையை இழக்கவில்லை. படையெடுத்து வந்தவர்களையும் சுவீகரித்து, ஜீரணித்து, அவர்களையும் அவர்களது புதிய மதங்களையும் மனமார அரவணைத்ததால் தான் பாரதம் உலகிற்கே வழிகாட்டும் தகுதி பெற்றது. இதற்கு பாரதத்தின் பன்னெடுங்காலப் பாரம்பரியமும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பண்பாட்டு விழுமியங்களும் தான் காரணம்.

அத்தகைய, உலகையே ஒரு குடும்பமாகப் பாவிக்கும்  ‘வசுதைவ குடும்பகம்’ என்ற உபநிடத மகாவாக்கியம் அல்லவா விவேகானந்தரை உருவாக்கியது? அதுவல்லவா பிற்காலத்தில் மகாத்மா காந்தியையும் உலகிற்கு ஈந்தது! இதை உலகம் மறந்ததால் அல்லவா, 2001ஆம் ஆண்டில் இதே செப்டம்பர் 11ஆம் தேதி அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டு ஆயிரக் கணக்கான மக்கள் மடிந்து போயினர்!

இன்றும்கூட நாள்தோறும் உலகில் நிகழும் மதவெறி சார்ந்த நிகழ்வுகளும் அதற்கு பரிதாபமாகப் பலியாகும் மனித உயிர்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கெல்லாம் தீர்வாக உலகிற்கு விவேகானந்தரின் போதனைகளை மீண்டும் முன்வைக்கும் பொறுப்பு பாரதத்திற்கே உள்ளது.

சுவாமி விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்திக் கொண்டாட்டங்கள் நிகழும் இந்த (*2013) ஆண்டைவிட அதற்கு மிகவும் பொருத்தமான தருணம் வேறு எது?

  • நன்றி: தினமணி  இணையதளம் (14.09.2013)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s