பட்டணத்துச் செய்திகள்

-மகாகவி பாரதி

பத்திரிகையாளன், தான் காணும், கேட்கும் நிகழ்வுகள் எதையும் செய்தியாக்கும் திறமை கொண்டவனாக இருக்க வேண்டும். அதிலும் நாட்டிற்கு நலம் விளைவிக்க தனது கருத்தைத் தெளிவாகப் புலப்படுத்தும் துணிவும் வாய்த்திருக்க வேண்டும். ‘மகாகவி பாரதி (காளிதாஸன் என்ற பெயரில்) அளித்த இச்செய்தி காட்டுவது இதைத் தானே?

24 டிசம்பர் 1920                                      ரெளத்திரி மார்கழி 10

ஒரு ட்ராம்வே உத்யோகஸ்தர் சாகத் தெரிந்தார்

சில தினங்களுக்கு முன் திருவல்லிக்கேணியிலிருந்து சென்னைக்கு ட்ராம் வண்டியேறி வந்து கொண்டிருக்கையிலே முனிஸிபல் குப்பை மோட்டார் ஒன்று ட்ராம் வண்டிக்கு ஸமீபமாக வந்து கொண்டிருந்தது. இடையே ஒரு போலீஸ் சேவகர் நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் தப்பிய ஒரு  க்ஷணத்துக்குள் குப்பை மோட்டார் ட்ராம் வண்டியோடு உராய்ந்தது. இடையே, ட்ராம் ஏறு பலகைமேல் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இவர் நடுங்கிப் போனார். ஆனால் பொடி மனிதனானபடியால் காயமில்லாமல் தப்பினார். வண்டியிலிருந்த ஆண்களும் பெண்களும் இவர் பிழைத்ததுபற்றி ஈசனை ஸ்தோத்ரம் செய்தார்கள். “ஒரு நூலினடியிலே நிற்கிறது மனிதனுடைய ஆவி! இதில் எத்தனை கவலைகள், எத்தனை பயங்கள், எத்தனை போராட்டங்கள், கஷ்டங்கள், மனிதர் தமக்குத் தாமே மூடத்தன்மையால் விளைவித்துக் கொள்கின்றனர்!” என்று சொல்லி ஒரு ஸ்திரீ ஞானோபதேசம் செய்தாள். இது நிற்க, மோட்டார் முதலியன விடுவோர் இயன்றவரை ட்ராம் மார்க்கத்தை விட்டு விலகியோட்டுதல் அவசியமென்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். 

ட்ராம் வண்டியில் ராஜீய வாதம்

“புதிய யுகம் வரப் போகிறது: மாண்டேகு ஸ்வராஜ்யக் குட்டிப் போடப் போகிறதென்று சத்தம் போட்ட தெல்லாம் கடைசியாக, வெங்கட ரெட்டி, ஸுப்பராயலு ரெட்டி, ராம ராயனிங்கார் என்ற மூவரும் நம்முடைய மாகாணத்துக்கு மந்திரிகளாக வந்திருக்கிறார்கள். இஃதென்ன விநோதம்!”

என்று, இன்று காலை எனக்கெதிரே ட்ராம் வண்டியிலுட்கார்ந்திருந்த எழுபது வயதுள்ள ஒரு வைஷ்ணவ பிராமணர் கூறினார். அதைக்கேட்டு, அவரருகிலிருந்த மஹமதியரொருவர்:- “எவர் வந்தாலென்ன? சென்னப் பட்டணத்திலே பிராமணர் வந்தாலும் கிலாபத்துக்கு வேலை செய்ய மாட்டார்கள். மற்ற ஜாதியார் வந்தாலும் கிலாபத்தைக் கவனிக்க மாட்டார்கள். இது தரித்திரம் பிடித்த நகரமையா இது! லாஹோர், லக்னவ், டில்லி, பம்பாய், கல்கத்தா பக்கங்களிலே கிலாபத்துக்கு என்ன வேலை செய்கிறார்கள் தெரியுமா?” என்றார். அப்போது, ஒரு ஐரோப்பிய வியாபார ஸ்தலத்துக் கார்யஸ்தர்போலே தோன்றிய முதலியார் ஒருவர்- “பிராமணர்கள் வந்தால் அதிகமாக ஆங்கிலேய உத்தியோகஸ்தருக்கு அடிமைப்படமாட்டார்கள். எனவே, ஜனங்களுக்குக் கொஞ்சம் நியாயம் கிடைக்கும். மற்றக் கூட்டத்தார் இன்னும் அது சரியாகப் படிக்கவில்லை” என்றார். அப்பால் கலாசாலை மாணாக்கராகிய ஒரு அய்யர்:-

“பிராமணரில்லாமல் மற்றவர் மந்திரிகளாக நியமிக்கப்பட்டது எனக்கு சந்தோஷந்தான். தாங்களே ஐரோப்பியக் கல்விக்குப் பிறப்புரிமை கொண்டோரென்றும் ஆதலால் ஐரோப்பியக் கல்வியில் தாம் பெறக்கூடிய தேர்ச்சி மற்ற ஜாதியாரால் எய்தவே முடியாதென்றும், ஆதலால் உயர்ந்த ஸர்க்கார் ஸ்தானங்களெல்லாம் தங்களுக்கே கிடைக்குமென்றும் சென்னை மாகாணத்து பிராமணரில் சிலர் மிகவும் கர்வம் பாராட்டில் வருகிறார்கள் அவர்களுடைய கர்வத்தைத் தீர்க்க இது நல்ல மருந்தாகி வந்தது. ஆனால் பிராமணரைத் தவிர வேறு ஜாதியாரை நியமிப்பதில் பிராமணத் துவேஷம் ஒன்றையே பெருங் கடமையாகவும், பரமதர்மமாகவும், ஜன்ம லக்ஷ்யமாகவும் நினைக்கிறவர்களை விட்டு, இதர ஜாதியாராயினும் பிராமணத் துவேஷமில்லாதவர்களையே லார்ட் வில்லிங்டன் நியமித்திருக்க வேண்டும்” என்றார்.

“இதுவரை பிராமணரைப் பகைத்துக் கொண்டிருந்த போதிலும், இப்போது மந்திரி ஸ்தானம் கிடைத்ததிலிருந்தேனும், இவர்கள் அதிகப் பொறுப்புணர்ச்சியும் விசால புத்தியும் உடையவர்களாய்த் தமது பெயரைக் காத்துக் கொள்ள வேணும். இயன்றவரை எல்லா வகுப்பினருள்ளும் பக்ஷபாதமில்லாமல் பொதுவாக நடந்து வர முயற்சி செய்வார்களென்று நம்புகிறேன்” என்று மேற்கூறிய முதலியார் சொன்னார். இவர் சொல்லியதில் ஒருவித உண்மையிருக்க கூடுமென்று என் புத்திக்குப் புலப்பட்டது. ஆனால் அதற்குள் நான் ட்ராம் வண்டியிலிருந்து இறங்குவதற்குக் காலமாய்விட்டபடியால் அந்த ரஸமான ஸம்பாஷணையைத் தொடர்ந்து கேட்க இயலவில்லை.

  • சுதேசமித்திரன் (24.12.1920)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s