-பேரா. மு.இராமச்சந்திரன்
பேராசிரியர் மு.இராமச்சந்திரன், சிவகாசி அய்ய நாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் ஆங்கிலத் துறை பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்; மதுரையில் வசிக்கிறார். தொலைகாட்சி சிறப்பு நிகழ்ச்சிகளிலும், பட்டிமண்டப மேடைகளிலும் சொற்பொழிவாளராக தமிழ் வளர்ப்பவர்; ‘கம்பன்- சில தரிசனங்கள்’ என்ற நூலை எழுதி இருக்கிறார். அன்னாரது சுவாமி விவேகானந்தர் குறித்த கட்டுரை இது…

இருட்டு அச்சம் தருவது, வெளிச்சமோ ஆனந்தம் தருவது; அதுவும் விவேகத்தால் கிட்டும் வெளிச்சம் பேரானந்தம் தருவது.
இருட்டு தடுமாறச் செய்வது; வெளிச்சமோ தன்னம்பிக்கை தருவது; அதுவும் ஞானத்தால் கிட்டும் வெளிச்சம் அபரிமிதமான நம்பிக்கை தருவது.
இருட்டு சோம்பலைத் தருவது; வெளிச்சமோ உற்சாகம் தருவது; அதுவும் தவத்தால் கிட்டும் வெளிச்சமோ ஊனமில்லா உற்சாகம் தருவது.
இருட்டு குழியில் தள்ளுவது, வெளிச்சம் நிமிரச் செய்வது; அதுவும் தியாகத்தால் கிட்டும் வெளிச்சமோ நிலைத்த நிமிர்வைத் தருவது.
விவேகம், ஞானம், தியாகம், தவம் எல்லாம் விதைக்கின்ற வெளிச்சத்துக்கெல்லாம் ஒரு குறியீடு தேடினால், அந்தக் குறியீடு தான் வீரத்துறவி விவேகானந்தர்.
விவேகானந்தர் தவத்தாமரை; இந்தத் தாமரை வடித்த தேனில் பாரத ஞானம் இனித்தது.
அவர் வெளிச்சக் கதிரவன்; இந்தக் கதிரவன் விரித்த கதிர்களால் பாரதப் பண்பாடு ஜொலித்தது.
அவர் ஞானப் பறவை; இந்தப் பறவை விரித்த சிறகுகளால் பாரதப் பாரம்பரியம் பரந்து விரிந்தது.
கடவுள் பற்றிய தேடலும், கடவுளை நேரில் தரிசிக்கும் ஆவலும் இளம் வயது முதலேயே விவேகானந்தரிடம் ஓங்கி வளர்ந்தன. ‘கடவுளை நேரில் பார்த்திருக்கிறீர்களா?’ என்ற விவேகானந்தரின் கேள்விக்கு யாராலும் நேரடியாகப் பதில் சொல்ல முடியவில்லை. தக்ஷிணேஸ்வரத்து தவசிரேஷ்டர் பரமஹம்ஸரிடம் தான் பதில் கிடைத்தது.
“உன்னை எவ்வளவு நெருக்கமாகப் பார்க்கிறேனோ, அவ்வளவு நெருக்கமாக நான் கடவுளைப் பார்த்திருக்கிறேன்” என்ற ராமகிருஷ்ணர் சொல்லி, விவேகானந்தரைத் தொட்டார். பரமஹம்ஸரின் விரல் நுனி விவேகாநந்தருக்குப் பெருநிலைப் பேருணர்வைத் தந்தது. சீடனுக்குக் குரு கிடைத்தார்.
“உன் சொந்த முக்தியைத் தள்ளி வை; உலகோர் முக்திக்கு வழிகாட்டு; தெய்வீகப் பேரின்பத்தின் ஒரு திவலையைத் தான் நான் உனக்குக் காட்டியிருக்கிறேன்; பேரின்பக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வேண்டிய பொறுப்பு உன்னுடையது” என்று குரு காட்டிய வழியால் சீடனின் வாழ்வெல்லாம் வெளிச்சமாக இருந்தது.
விசுவநாத தத்தர் விவேகாநந்தரின் சரீரத் தந்தை; வறுமையில் விட்டுவிட்டு மறைந்து விட்டார்; பரமஹம்ஸரோ அவரின் ஞானத் தந்தை; ஆன்மீகச் செல்வத்தை எல்லாம் திரட்டி ஒரு பெட்டகத்தில் இட்டு, அந்தப் பெட்டகச் சாவியை சீடனிடம் தந்துவிட்டு மறைந்தார். ஞானத் தந்தை வழங்கிய செல்வத்தை விவேகானந்தர் பாதுகாத்தார். வளர்த்தார்; வாரி வாரி வழங்கினார்,
விவேகபானு வெளிச்சம் விரித்த பாரத மண்ணில் தான் இன்று இருள் கவிந்து கிடக்கிறது. சாதி, சமயம், மொழி, இனம், நதி எல்லாவற்றையும் அரசியலாக்கியதால் இந்தியா இன்று அசிங்கப்பட்டுக் கிடக்கிறது. இந்திய இளைஞர்கள் கண்ணிலாக் குருடர்கள் போல் பிறர் காட்டிய வழியில் எல்லாம் போய் மாட்டிக் கொள்கிறார்கள்.
ஆன்மிகம் தான் இந்தியாவின் ஆதார சக்தி; ஆன்மிக சக்தியைப் பெரிதாக நினைக்காமல், வேறு ஏதேதோ சக்திகளின் பின்னால் போய், பாரதம் ஏளனம் சுமந்து பரிதவிக்கிறது.
“எல்லாத் துன்பமும் பலவீனத்தில் இருந்து வருகிறது. பலவீனங்களை விட்டு எறியுங்கள்” “ஆன்ம உணர்வை நோக்கி விரியும் சமய உணர்வே ஆதாரம்” “மிருக பலத்தால் அல்ல; ஆன்ம பலத்தால் தான் இந்தியா எழுச்சி பெறும்” “ஆன்மிகம் செல்வாக்கிழந்து உலகாயதம் தலையெடுத்தால், அன்று முதல் அழிவு ஆரம்பம்” “ஆன்மிக லட்சியத்தை விட்டுவிட்டு, மேலைநாட்டு நாகரிகத்தில் மூழ்கினால் மூன்று தலைமுறைகளில் நமது இனம் அழிந்து விடும்” “ஆன்மிக வாழ்க்கை ஒருவருக்கு வாய்க்கவில்லையென்றால், புலனின்ப வாழ்க்கையிலா உழல்வது? அமுதம் கிட்டவில்லையென்றால், சாக்கடை நீரை அருந்தலாமா?”

– இவையெல்லாம் விவேகபானு விரித்த வெளிச்சக் கதிர்கள்; இருட்டில் தடுமாறுவது இயல்பு. இவ்வளவு வெளிச்சம் இருந்தும் தடுமாறுகிறோமே! நியாயமா?
செல்வமில்லாதவன் பிச்சை எடுப்பது இயல்பு; இவ்வளவு செல்வமிருந்தும் பிச்சை எடுக்கிறோமே! தர்மமா?
முப்பத்தொன்பதாவது வயதில் மஹாசமாதி அடையும் முன் விவேகானந்தர் சொன்னார்: “உருவமற்ற குரலாக நான் உங்களுக்காக ஒலித்துக் கொண்டே இருப்பேன்” ( I shall be a voice without form).
அந்த உருவமற்ற குரல் நம் செவிகளில் ஒலிக்க ஒலிக்க, நம் ஆன்மா விகசிக்கும்.
நம் ஆன்மா விகசிக்க, விகசிக்க, பாரதம் வெளிச்சம் பெறும்.
விவேகானந்தர் விரித்த ஆன்மிக வெளிச்சத்ததில் ‘பாரத நாடு பார்க்கெலாம் திலகமாக’ப் பளிச்செனத் தெரியும்.
$$$