குறிப்புகள்

-மகாகவி பாரதி

சக்திதாஸன் என்ற பெயரில் சுதேசமித்திரனில் மகாகவி பாரதி எழுதிய வியாசம் இது. ஸம்ஸ்க்ருதம் குறித்த பாரதியின் கருத்து மிகத் தெளிவானது. அதுவே இந்தியாவுக்கான பொது பாஷை என்பது தான் மகாகவியின் கருத்து என்பதை இந்தப் பதிவில் காண்கிறோம்…

21 ஜனவரி 1920                                                 ரெளத்திரி தை 9

எளிதாக ஸம்ஸ்க்ருதம் படிக்கும் வழி

1921 ஜனவரி 11-ஆந் தேதி சுதேசமித்திரனில் ‘ஒளிர்மணிக் கோவை’ என்ற மகுடத்தின் கீழே எழுதப்பட்டிருந்த குறிப்புக்களில் “இந்தியாவுக்கொரு பொதுப் பாஷை” என்ற தலைப்பின் கீழுள்ள குறிப்பைப் பார்த்துவிட்டு, நம் சந்தாதாரர் ஒருவர்; “(1) பண்டாரகரால் வெளியிடப்பட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட புஸ்தகம், (2) பஞ்சதந்திரம்- தமிழ் மொழிபெயர்ப்புடன் –  ஆகிய இவ்விரண்டும் எங்கே கிடைக்கும், என்று நம்மைக் கேட்கிறார்.

வடமொழியும் இங்கிலீஷும் கலந்து பண்டாரகர் வெளிப்படுத்தியிருக்கும் மூல நூல் சென்னையில் பெரிய பாடசாலைப் புஸ்தக வியாபாரி எவரிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம். அதன் தமிழ் மொழிபெயர்ப்பு, திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதருக்கெழுதினால் கிடைக்குமென்று தெரிகிறது.

பஞ்ச தந்திரம், வடமொழியிலுள்ள மூல நூலுக்கு நேரான தமிழ் மொழிபெயர்ப்பு இதுவரை யாவராலும் செய்யப்படவில்லையென்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். தாண்டவராய முதலியார் எழுதியிருக்கும் தமிழ்ப் பஞ்ச தந்த்ரம் ஸம்ஸ்க்ருதத்திலிருந்து நேராக மொழி பெயர்க்கப்பட்டதன்று. மஹாராஷ்ட்ர பாஷையில் பஞ்ச தந்திரக் கதைகளை மட்டும் ஒருவாறு தொகுத்திருந்ததொரு நூலினின்றும் கதைகளைத் திரட்டித் தமிழில் அந்த முதலியார் வெளிப்படுத்திவிட்டாரென்று தெரிய வருகிறது.

எனவே பூமண்டல முழுமையிலும் தனக்கொரு நிகரில்லாத ராஜ்யநீதி சாஸ்த்ரமும், ஹிந்துக்களின் அறிவு நுட்பத்துக்குப் பெரும் புகழுமாகி விளங்கும் ஸம்ஸ்க்ருத பஞ்சதந்திரமும், தமிழில் இயற்கையாக மொழி பெயர்க்கப்படவில்லை. அதன் அழகான நீதி வசனங்களில் பெரும்பான்மை தமிழ் மொழி பெயர்ப்பிலேயில்லை. மேலும் தமிழ்ப் பஞ்ச தந்திரத்தைப் படித்தால், இஃதொரு ஸாமான்யமான கதைப் புஸ்தகமொன்று தோன்றுகிறதேயன்றி, உலகத்து ராஜ்ய தந்த்ர சாஸ்த்ரங்களுள்ளே இது சிரோமணியென்பது துலங்கவில்லை.

இப்போது தமிழ் நாட்டில் புதியதோர் அறிவுக் கிளர்ச்சி எழுச்சி கொண்டிருப்பதினின்றும், இனி, விரைவிலே அந்நூல் தமிழில் நேராக மொழி பெயர்க்கப்படு மென்பது நிச்சயந்தான். ஆயினும் தற்காலத்தில் அவ்வித மொழி பெயர்ப்பில்லை. எனினும், இதுபற்றி மனஞ்சலிக்க வேண்டாம். அன்றைக் குறிப்பில் எழுந்தியிருந்தபடி, முதல் நூல், (பஞ்ச தந்த்ரம்) வடமொழியில் மிக மிக எளிய, மிக ஸரளமான, மிகத் தெளிந்த, ஸாமான்ய நடையில் அமைந்திருக்கிறது. அதன் பொருள் எத்தனை அபூர்வமாகவும், ஆழமாகவும், நுட்பமாகவும், ஆச்சரியமாகவும் அமைந்திருக்கிறதோ அத்தனை எளிமையாகவும் ஸாதாரணமாகவும் அதன் வாக்ய நடை அமைந்துள்ளது. எனவே, அன்று தெரிவித்தபடி, பண்டாரகர் முதற்பாட புஸ்தகத்தையும், இரண்டாம் பாட புஸ்தகத்தில் ஒரு பகுதியையும் ஏழெட்டு மாதங்களுக்குள் படித்துணர்ந்து கொண்டால், பிறகு பஞ்சதந்திரத்தை மூலத்திலேயே, பிறருதவி வேண்டாமல் வாசித்து யாரும் பொருளறிந்து கொள்ளலாம். 

தொழிற்கட்சியின் உதவி

“ஹிந்து” பத்திரிகையில் சாந்த நிஹள ஸிங் எழுதியிருக்கும் வியாஸமொன்றில், இந்தியா விடுதலை பெறும் விஷயத்தில் ப்ரிட்டிஷ் தொழிற்கக்ஷியாரின் ஸஹாயத்தை எத்தனை தூரம் எதிர்பார்க்கக் கூடுமென்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறார். இவ்விஷயமாக இவர் நேரே தொழிற் கக்ஷித் தலைவருள்ளே முக்யஸ்தரைக் கண்டு ஸம்பாஷணை செய்திருக்கிறார். ஸ்ரீ நிஹாள ஸிங் சொல்லியிருப்பதன் சுருக்கமான கருத்துப் பின்வருமாறு:-

தொழிற்கக்ஷியில் இரண்டு பகுதிகளிருக்கின்றன. இப்போதுள்ள கவர்ன்மெண்ட் மாறித் தொழிற்கக்ஷி கவர்ன்மெண்ட் ஏற்பட்டால் மந்திரி ஸ்தாபனங்களெய்தக் கூடிய மிஸ்டர் க்ளைன்ஸ் (பொதுத் தொழிலாளிகளின் தேசீய ஐக்ய ஸங்கத் தலைவர்), மிஸ்டர் ஆர்தர் ஹெண்டர்ஸன் (தொழிற் கக்ஷியின் கார்யதர்சி), மிஸ்டர் ஆடம்ஸன் (பார்லிமெண்ட் தொழில் ஸமிதியின் அதிபர்) முதலியவர்களும் இவர்களைச் சேர்ந்தோரும் இந்தியாவுக்கு ஸ்வராஜ்யம் கிடைக்க வேண்டுமென்றும், அதில் தொழிற் கக்ஷியார் இயன்ற மட்டுந் துணை புரிய வேண்டுமென்றும் கருதுவாரே யாவார். ஆனால், அதற்கு மாண்டேகு செம்ஸ்போர்ட் திருத்தங்களை அங்கீகாரம் செய்து கொண்டு, அதனால் எய்தக்கூடிய நலன்களையெல்லாம் பாடுபட்டெய்தி, அப்பால் அதிக உரிமைகள் கேட்பதே தக்க வழியென்பது இவர்களுடைய கருத்து. இந்தக் கருத்தையொட்டி இந்தியர் நடந்து கொண்டால் மாத்திரமே மேற்கூறிய தொழிற்கக்ஷித் தலைவர்கள் நமக்குத் துணை புரிவார்களென்றும், நம்மவர் ஒத்துழையாமையைக் கைப்பற்றினால் பிறகு, அவர்களுடைய உதவியை எதிர்பார்க்க வேண்டியதில்லையென்றும் ஸ்ரீமான் நிஹள ஸிங் சொல்லுகிறார்.

ஆனால் மேற்கூறிய தலைவர்கள் சேர்ந்த பகுதியைத் தவிர ஆங்கிலத் தொழிற் கக்ஷிக்குள்ளேயே மற்றொரு பகுதியிருக்கிறது. அந்த மற்றொரு பகுதியார், பார்லிமெண்ட் அனுஷ்டானங்களைக் கடைப்பிடித்தொழுகி, அவற்றின் மூலமாகத் தொழிற் கக்ஷியின் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளாமல், பலாத்காரமான புரட்சி முறையாலே தொழிலரசு ஸ்தாபிக்க வேண்டுமென்ற நோக்கமுடையவர்கள். இந்தியா ஒத்துழையாமையைக் கைக்கொள்ளுமிடத்தே, பிற்கூரிய தொழிற் பகுதியினரின் ஆதரவை மட்டுமே எதிர்பார்க்கலாமென்று ஸ்ரீ நிஹள ஸிங் தெரிவிக்கிறார். இங்ஙனம் ஸ்ரீ நிகள ஸிங் வரையறுத்துப் பாகுபாடு செய்திருப்பதில் ஒரு சிறிதுண்மையிருத்தல் மெய்யே யெனினும், இது முற்றிலும் சரியென்று நாம் நினைக்க இடமில்லை. ஏனென்றால், ஒத்துழையாமை முறை பலாத்காரச் செயல்களை மறுக்குமியல்புடையது; புரட்சி மார்க்கத்தைச் சார்ந்ததன்று. எனவே, ஆங்கிலத் தொழிலாளிகளில் மனுஷ்ய ஜாதியின் ஸமத்வத்தையும், ஸ்வாதீனத்தையும் மேண்டும் இயல்புடையோர், பலாத்கார முறைகளை வேண்டாத ஸமாதானப் பிரியராகிய போதிலும், இந்தியர் ஒத்துழையாமையைக் கைக் கொண்டது பற்றி மனவருத்த மெய்த மாட்டார்கள். தம்மால் இந்தியாவுக்குச் செய்யக்கூடிய உதவியை அவர்கள் எப்போதும் செய்வார்கள்.

திருஷ்டாந்தமாக கர்னல் வெட்ஜ்வுட் தொழிற்கக்ஷித் தலைவருள்ளே புரட்சி வகுப்பைச் சேராதவரென்றே கொள்ள வேண்டும். மேலும், இவர் நம் நாட்டில் எழுந்திருக்கும் ஒத்துழையாமைக் கிளர்ச்சியில் அபிமானமில்லாதவர். புதிய சட்ட சபைகளை நாம் உபயோகப் படுத்தியே விடுதலைக்கு வழி தேட வேண்டுமென்ற கருத்துடையவர்.

அப்படியிருந்தும், காங்கிரஸ் ஸபையில் இவரை நோக்கி, ஸ்ரீமான் ஸத்தியமூர்த்தி அய்யர்:- “ருஷியாவுக்கும், ஐர்லாந்துக்கும் பரிந்து பேசும் தாங்கள் இந்தியா ஒத்துழையாமையைக் கைக் கொண்ட போதிலும் பார்லிமெண்டில் எங்கள் சார்பாக நின்று போராட மாட்டீர்களோ?” என்று கேட்டபோது, என்ன மறுமொழி சொன்னார்?

“இந்தியா ஒத்துழையாமையைக் கைக்கொண்டாலும், வேறென்ன செய்தாலும் நான் இந்தியர் விடுதலை பெறும் பொருட்டு வேலை செய்வதை நிறுத்த மாட்டேன்” என்று விடையளித்தார்.

தொழிற் கக்ஷியில் புரட்சிக்காரரல்லாதாரிடையேயும் இந்தக் கர்னல் வெட்ஜ்வுட் போன்றோர் பலர் இருக்கக் கூடுமென்றே எதிர்பார்க்கிறோம்.

  • சுதேசமித்திரன் (21.01.1920)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s