-ஆர்.பி.வி.எஸ்.மணியன்
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னோடித் தலைவரும், ‘விவேக பாரதி’ அமைப்பின் நிறுவனருமான திரு. ஆர்.பி.வி.எஸ்.மணியன் அவர்கள் எழுதியுள்ள அற்புதமான கட்டுரை இது.... சுவாமி விவேகானந்தரின் தேசபக்திக் கனலை இக்கட்டுரையில் நாம் தரிசிக்கிறோம்...

விவேகானந்தரை வர்ணிக்கும் போது “தேச பக்த துறவி” என்றும் “தேசீயத் துறவி” என்றும் தேசபக்த துறவி என்றும் கூறுவதுன்டு. இவரை நாம் தேசபக்த துறவி என்றால் மற்ற துறவிகள் தேசபக்தி இல்லாதவர்களா? என்ற கேள்வி எழலாம்.
சாதாரணமாக துறவிகள் என்றாலே எல்லாவிதமான பற்றுகளையும் விட்டுவிட வேண்டும்.
பாச பந்தங்களுக்கு மேலெழுந்து நிற்க வேண்டும். பாசம் என்கிற போது தாய்ப்பாசமாக இருந்தாலும் சரி, தாய்நாட்டுப் பாசமாக இருந்தாலும் சரி. ஆனால் ஒரு சில துறவிகள் தங்களது தாய்p பாசத்தைத் துறந்தாலும் தாய்நாட்டுப் பாசத்தைத் துறக்கவில்லை. சில துறவிகள் தங்களது தாய்நாட்டுப் பற்றை வார்த்தைகளில் வடித்திருக்கிறார்கள். சிலர் செயல்களால் செதுக்கியிருக்கிறார்கள்.
அப்படிச் சொல்லாலும் செயலாலும் தங்களது தேசபக்தியை பிரகடனப்படுத்தியவர்களையே தேசபக்தத் துறவியர்கள் என்றும் வர்ணிக்கிறோம்.
கடந்த கால வரலாற்றில் சுவாமி வித்யாரண்யரும், ஸமர்த்த ராமதாஸரும் இத்தகைய தேசபக்தத் துறவிகளாகத் திகழ்ந்திருக்கிறார்கள்.
அப்படியே அண்மைக் கால வரலாற்றில் சுவாமி விவேகானந்தரும், சுவாமி ராமதீர்த்தரும் தேசபக்தத் துறவிகள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். அதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைவது அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் அரசியல் சூழ்நிலையும், சமுதாயச் சூழ்நிலையுமே.
அப்படிப் பார்த்தால் இஸ்லாமியப் படையெடுப்புகளால் ஹிந்துப் பண்பாடு அழிந்து போய்விடுமோ என்ற நிலையில் தென்னகத்தில் இஸ்லாமிய ஆதிக்கம் காலூன்ற முடியாதபடி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமான சூழ்நிலையில் விஜய நகர ஸாம்ராஜ்யத்தை நிர்மாணித்தார் வித்யாரண்யர். அதுபோலவே ஔரங்கசீபின் மதவெறியால் தக்காணப் பீடபூமி துருக்கர் பூமியாகிவிடாமல் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு தமக்கு இருந்ததை உணர்ந்த ஸமர்த்த ராமதாஸர் மாவீரன் சிவாஜிக்கு உத்வேகமும் உற்சாகமும் தந்து அவன் மூலமாக ஹைந்தவீ ஸ்வராஜ்யத்தை நிர்மாணித்தார்.
சுவாமி விவேகானந்தரும் தமது வாழ்நாளில் மேற்கத்திய கலாச்சாரத்தில் நாம் மூழ்கிப்போய் விடுவோமோ என்று அஞ்சி ஹிந்துத்துவ தேசிய உணர்வைத் தமது சொற்பொழிவுகளில் வெளிப்படுத்தினார். அவரது சம காலத்திய விடுதலைப் போர்வீரர்களும் சரி, அல்லது அவருக்குப் பிற்காலத்தில் தோன்றிய விடுதலை இயக்கத் தலைவர்களும் சரி அவரது உரைகளால் உந்தப்பட்டு, உத்வேகம் பெற்று உழைத்ததாலேயே நாம் விடுதலை பெற்றோம்.
விடுதலைப் போரில் விவேகானந்தரின் மறைமுகப் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.
ஆகவே இப்போது நாம் அவரது தேச பக்த முகத்தைச் சற்று தரிசிப்போம்.
***
என்னதான் சொந்தநாடு ஆனாலும் ஒரு துறவி அதன்மீது பற்று வைப்பது சரியல்ல என்று ஒருவர் ஒருமுறை விவேகானந்தரிடம் கூறினார். அதற்கு அவர் பதில் கூறும்போது,
“தன் தாயை ஒரு துறவி எவ்வாறு நேசிக்காமல் இருக்க முடியாதோ அதுபோலவே தாய்நாட்டை நேசிக்காமலும் இருக்க முடியாது. ஒரு துறவிக்குத் தாய்ப்பாசம் இருக்கலாம் என்று சாஸ்திரங்களே கூறுகின்றன. அதுபோலவே ஒரு துறவிக்குத் தாய்நாட்டுப் பாசம் இருப்பதிலும் தவறில்லை. உலகத்தவரை நேசிப்பதற்குத் தாய்நாட்டுப் பற்றுத் தடையாக இருக்க முடியாது”
-என்று கூறினார்.
***
சுவாமிஜி பாரதத்தை வெறும் நிலப்பரப்பாகவோ, ஜடப்பொருளாகவோ பார்க்கவில்லை. அதனை சைதன்யம் நிறைந்த மாத்ரு வடிவமாகப் பார்த்தார். அரவிந்தரும் தாயகத்தை மாதா பவானியாகத்தான் பார்த்தார். இவர்கள் இருவருக்குமே இத்தகைய கண்ணோட்டத்தை வழங்கியவர் பங்கிம் சந்திர சட்டர்ஜி. பங்கிம் சந்திரரின் ‘ஆனந்தமடம்’ விவேகானந்தரையும், அரவிந்தரையும் வெகுவாகவே பாதித்தது. அரவிந்தரின் பவானி மந்திரம், ஆனந்த மடத்தின் சாயலே அன்றி வேறல்ல. ‘ஆனந்த மடம்’ பங்கிம் சந்திரரின் கடந்தகாலக் கற்பனை. ‘பவானி மந்திரம்’ அரவிந்தரின் நனவாகாத கனவு.
சுவாமிஜி உருவாக்கிய ராமகிருஷ்ண மடம் ஆனந்தமடத்தின் சாயலைப் பெற முடியாமல் போனதற்குக் காரணம் விவேகானந்தரின் சகோதரத் துறவிகளிடத்தில் நரேந்திரனுக்கு இருந்த அளவிற்கு தேசிய உணர்வும், விடுதலை வேட்கையும் இல்லாமல் போனதேயாகும். அவர்களது நாட்டமெல்லாம் ஆன்மிக சாதனையின் மீதே இருந்தது.
***
ஆனந்த மடத்தில் ஒரு காட்சி.
ஸத்யானந்த ப்ரம்மச்சாரி மஹேந்திரனுக்கு ஆனந்த மடத்தில் அன்னையை தரிசனம் செய்து வைக்கிறார்.
சலவைக் கல்லால் அமைந்த ஒரு விசாலமான கர்ப்பக்ருஹத்தில் பத்துத் தோள்களுடன் பராசக்தியின் பதுமை ஒன்று.
“இவள் எங்கள் தாய். இனி இவள் அடையப்போகும் ஸ்வரூபம் இது. பத்துக்கரங்களிலும் பலப்பல ஆயுதங்கள். பத்து திசைகளிலும் இவள் புகழ் பரவும். அன்னையின் காலடியில் அஸுரன் ஒருவன். இனி பாரத தேவியின் பகைவர்களின் கதி இதுதான்.
பூமி யி னும்பொறை மிக்குடை யாள்பெறும் புண்ணிய நெஞ்சினள் தாய் – எனில் தோமிழைப் பார்முன் நின்றிடுங் காற்கொடுந் துர்க்கை யனையவள் தாய். கற்றைச் சடைமதி வைத்த துறவியைக் கைதொழு வாள்எங்கள் தாய் – கையில் ஒற்றைத் திகிரிகொண் டேழுல காளும் ஒருவனை யுந்தொழு வாள். யோகத்தி லேநிக ரற்றவள் உண்மையும் ஒன்றென நன்றறி வாள் – உயர் போகத்தி லேயும் நிறைந்தவள் எண்ணரும் பொற்குவை தானுடையாள். நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி நயம்புரி வாள்எங்கள் தாய் – அவர் அல்லவ ராயின் அவரைவி ழுங்கிப்பின் ஆனந்தக் கூத்தி டுவாள். (மகாகவி பாரதி)
ஆனந்த மடத்தில் ஸத்யானந்த ப்ரம்மச்சாரி மஹேந்திரனுக்கு தரிசனம் செய்து வைக்கும் பாரத தேவி அதே கோலத்தில் விவேகானந்தரது வார்த்தைகளிலும் வெளிப்படுவதைக் காணலாம்.
“வருங்காலத்துக்குள் நான் புகுந்து பார்க்கவில்லை. அதில் எனக்கு அக்கறையும் இல்லை . ஆனால் ஒரு காட்சியை மட்டும் தெள்ளத் தெளிவாக உயிர்த்துடிப்புடன் நான் காண்கிறேன். புராதனமான அன்னை மீண்டும் இளமையெழிலுடன், முன் கண்டிராத புகழ்ச் சிறப்புடன் அமர்ந்து கொண்டிருக்கிறாள். சாந்தியும் அருளும் கலந்த மொழியால் உலகுக்கு அவளைப் பிரகடனம் செய்யுங்கள்.”
***
பாரத தேசத்தின் மீது சுவாமிஜிக்கு இருந்த ப்ரேமையை விளக்க இன்னுமொரு சம்பவம்.
மேலை நாடுகளில் சுவாமி அந்நாட்டவர்களிடையே பேசிய தலைப்புகளில் ‘பாரத தேசம்’ என்ற பொருளும் ஒன்று.
பாரதத்தைப் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டால் தாம் மெய்மறந்துபோய் நேரத்தைக் கணக்கிடாமல் விட்டுவிடலாம் என்று பயந்து, “பாரதத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிட்டால் எனக்கு நேரம் போவதே தெரியாது. எனவே சொற்பொழிவை முடிக்க வேண்டிய நேரத்திற்குச் சிறிது முன்பாக ஏதாவது அடையாளம் காட்டுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.
சுவாமிஜி பாரதத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நேரம் போனதே தெரியவில்லை. குறிப்பிட்ட காலம் நெருங்கி விட்டதை உணர்ந்த நண்பர் கடிகாரத்தை எடுத்து உயரப் பிடித்து சுவாமிஜிக்கு சொற்பொழிவை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்த்தினார்.
இதைக் கண்ணுற்ற சுவாமிஜி, “அதோ, அடையாளம் காட்டுகிறார்கள், சொற்பொழிவை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று. ஆனால் நண்பர்களே பாரதத்தைப் பற்றி இப்போதுதான் பேசவே ஆரம்பித்துள்ளேன்”
அவருடைய ஹிருதயம் முழுவதும் பாரதத்தைப்பற்றிய தகவல்களால் நிறைந்திருந்தது.
***
சுவாமிஜி பாரதத்தின்மீது கொண்டிருந்த தேசபக்தி அத்யாத்மிக தேசபக்தி யாகும்.
பாம்பனில் கடற்கரையில் கால் பதித்ததும் சுவாமிஜி மண்ணில் விழுந்து நமஸ்கரித்தார். சிறிதளவு மண்ணை எடுத்து வாயில் போட்டுக் கொண்டார். மீண்டும் சிறிதளவு மண்ணை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டார். அருகிலிருந்த பிரமுகர் ஒருவர் சுவாமிஜியின் இச்செய்கைக்கான விளக்கத்தைக் கேட்டார்.
“கடந்த நான்கு ஆண்டுகளாக நான் மேலை நாடுகளில் சுற்றித் திரிந்து வருகிறேன். அவையெல்லாம் போக பூமி. பாரதம் மட்டுமே புண்ணிய பூமி, யோகபூமி. என்னயறியாமல் நான் போக பூமியில் இருந்தபோது ஏதேனும் போகத்தின் சாயல் என் உள்ளத்திலோ உடலிலோ பதிந்திருக்கலாம். இந்தப் புண்ணிய பூமியின் மண்ணை உட்கொண்டும் உடலில் பூசியும் அத்தகைய போகத்தின் சாயலை நான் இப்போது போக்கிக் கொண்டேன்” என்று விளக்கினார் சுவாமிஜி.
1896 டிசம்பர் 16 ஆம் தேதி சுவாமிஜியிடம் அவர் ஐரோப்பாவை விட்டுப் புறப்படுகிற நேரத்தில் நண்பர் ஒருவர் கேட்ட ஒரு கேள்வியையும் சுவாமிஜி அளித்த பதிலையும் இங்கு ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது.
“போகங்களும், பெருமைகளும் ஆற்றல்களும் நிறைந்த மேலைநாடுகளில் நான்கு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டு உங்கள் சொந்த நாட்டிற்குச் செல்கிறீர்களே இப்போது உங்கள் தாய்நாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
“என்ன நினைக்கிறேனா? நான் என் தாய்நாட்டிலிருந்து கிளம்பும் முன் அதனை நான் பிறந்த பூமி என்பதற்காக நேசித்தேன். இப்போதோ, அதனுடைய ஒவ்வொரு தூசியும் எனக்குப் புனிதமாகிவிட்டது. அதன்மீது வீசுகிற காற்று எனக்குப் புனிதமானது. உலகிலேயே எனது தாய்நாடு ஒன்றுதான் யோகபூமி, புண்ணிய பூமி என்பதைப் புரிந்து கொண்டுவிட்டேன். எங்களது பாரதப் புனிதபூமி எனது க்ஷேத்ராடன ஸ்தலம், தீர்த்தாடன லக்ஷியம்”
-என்ற சுவாமிஜியின் பதிலில் தொனிக்கும் தேசபக்தி எத்துனை ஆன்மீகமானது என்பதைப் புரிந்து கொள்வோம்.
***
பாரதத்தைப் பற்றிய அவரது அத்யாத்மிகப் பார்வை கீழ்க்கண்ட வார்த்தைகளில் மிளிர்வதைப் பாருங்கள்.
“இந்தப் பூவுலகில் புனிதமான புண்ணிய பூமி என்று உரிமை கொண்டாட ஏதாவது ஒரு நாடு இருக்குமானால், பூவுலக ஆன்மாக்கள் தன் கர்ம பலன்களைக் கழிக்க வேண்டிய ஒரு நாடு என்று இருக்குமானால், இறைவழியை நோக்கிச் செல்லும் ஒவ்வோர் ஆன்மாவும் தன் இறுதி வீடாக வந்தடைய வேண்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால், மனிதகுலம் அன்பின் சிகரத்தை பரந்த உள்ளத்தின் உச்சி நிலையை, தூய்மையின் உயரத்தை, அமைதியின் எல்லையை, எல்லாவற்றுக்கும் மேலாக ஆத்மிக உள்நோக்கின் சிகரத்தை எட்டிய நாடு என்று ஒன்று இருக்குமானால் அதுதான் பாரதமாகும்”.
***
நமது தேசத்தின் மறுமலர்ச்சிக்காக நாம் மேற்கொள்ளும் பணியும் நமது கடந்த கால ஆன்மிகப் பாரம்பர்யத்தின் ஆதாரத்திலேயே அமையவேண்டும் என்று விரும்பிய விவேகானந்தரின் அத்யாத்மிக சுதேசியப் பார்வையைச் சற்றுக் காண்போமா?
ஓ பாரத நாடே! பிறருடைய கருத்துக்களை வெறுமனே எதிரொலிப்பதனாலே, மட்டரகமாகப் பிறரைப் பின்பற்றி நடிப்பதனாலே பிறரை நம்பி வாழ்வதனாலே, நாகரிகத்தின் சிகரத்தையும், சீர் சிறப்பின் சிகரத்தையும் நீ எய்திவிட முடியுமா? அவமானகரமான இந்த கோழைத்தனத்தினாலே வீரதீரர்களுக்கே உரித்தான சுதந்திரத்தை நீ அடைய முடியுமா? ஓ பாரத நாடே, ஸீதை, ஸாவித்ரி, தமயந்தி முதலிய கற்பில் சிறந்த உத்தமிகளை மறவாதே. உனது பெண்மையின் லக்ஷியத்துக்கு அவர்களே உதாரணம்! யோகிகளுக்கெல்லாம் யோகியும் எல்லாவற்றையும் துறந்தவருமான உமாபதியாம் சங்கரனே நீ வணங்கும் கடவுள் என்பதை மறவாதே! உனது திருமணம், உனது செல்வம், உனது உயிர் முதலானவை, உனது பிரத்யேக இந்திரிய சுகபோகத்திற்கும், உனது சொந்த நன்மைகளுக்கும் ஏற்பட்டவையல்ல என்பதை மறவாதே! நீ தேவியின் பலிபீடத்துக்கான ஒரு யாக திரவியமாகப் பிறந்திருக்கிறாய் என்பதை மறவாதே! வர்ணாசிரம தர்மமானது அகிலாண்டேசுவரியான பராசக்தியின் பிரதிபிம்பந்தான் என்பதை மறவாதே. தாழ்த்தப்பட்டவர்களும், அறியாத மூடர்களும், ஏழைகளும், எழுத்து வாசனையற்றவர்களும், சண்டாளர்களும், தோட்டிகளும் உன் சகோதரர்கள். உன் ரத்தக் கலப்புள்ளவர்கள் என்பதையும் மறவாதே. வீரனே! தீரனாக இரு. கோழைத்தனத்தை அகல ஓட்டு! நீ ஒரு பாரதவாசி என்பதில் பெருமைகொள். “நான் ஒரு பாரதவாசி, ஒவ்வொரு பாரதீயனும் என் சகோதரன்” என்று பெருமையுடன் உரக்கக் குரல் எழுப்பு! மூட பாரதீயனும், பிராம்மண பாரதீயனும், பறையராகிய பாரதீயனும் எனது சகோதரன் என்று சொல்வாய். இடுப்பில் ஒரு கோவணத்தை மட்டும் கட்டிக் கொண்டிருக்கிறவ ராயினும் உரத்தக் குரலெடுத்து, “பாரதீயரே எனது சகோதரர், பாரதீயரே எனது உயிர், பாரதத்தின் தேவ தேவிகளே நான் வணங்கும் தெய்வங்கள், பாரதத்தின் ஜன சமூகமே நான் குழந்தையாக இருந்தபோது படுத்து வளர்ந்த தொட்டில், இளமையில் விளையாடிக் களித்த எழிற்பூங்கா, மூப்படைந்த தருணத்தில் அடையும் வாரணாசியான மோக்ஷஸ்தலம்” என்று பெருமையுடன் சொல்வாயாக. சகோதரனே, “பாரதபூமியே எனது அதியுயர்ந்த மோக்ஷலோகம், பாரதத்தின் நன்மையே எனது நன்மை” என்று சொல்வாயாக. இரவிலும் பகலிலும் “கௌரி வல்லப! அகிலாண்டேசுவரி! ஆண்மைத் தனத்தை எனக்கு அருள் வீர்களாக! வல்லமையை அருளும் தாயே! எனது கோழைத்தனத்தை அகற்றுவாய். எனது பேடித்தனத்தைப் போக்குவாய்! என்னை ஓர் ஆண்மகனாக ஆக்கு! என்று இடையறாது ப்ரார்த்தனை செய்.
***
திருவனந்தபுரத்தில் சுவாமிஜி தங்கியிருந்தபோது பேராசிரியர் சுந்தரராம ஐயரின் மகன் ராமஸ்வாமி சாஸ்திரியிடம் தேசபக்திக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுவாமிஜி.
“….தேச பக்தி, தேச பக்தி என்கிறார்களே, உண்மையில் அது என்ன? கண்மூடித் தனமான ஒரு நம்பிக்கையா? இல்லை. நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதில் உள்ள பேரார்வம்தான் உண்மையில் தேச பக்தி. பாரதம் முழுவதும் பார்த்துவிட்டேன். அறியாமையும், துன்பமும், ஒழுக்கச் சீர்குலைவுகளும்தான் நான் கண்டவை. என் உள்ளம் பற்றியெரிகிறது. இந்தத் தீமைகளை வேரோடு களைய வேண்டும் என்று துடிக்கிறேன். “அவர்களின் தீவினை அது. அதனால் கஷ்டப்படுகிறார்கள்” என்று கர்மம் பற்றி பேசுகிறார்கள். தயவு செய்து அப்படிப் பேசாதீர்கள். கஷ்டப்படுவது அவர்களின் கர்மம் என்றால் அதிலிருந்து அவர்களை விடுவிப்பது நமது தர்மம். கடவுளைக் காண வேண்டுமானால் மனிதனுக்குத் தொண்டு செய்யுங்கள். நாராயணனை அடைய வேண்டுமானால் பட்டினியில் வாடுகின்ற லக்ஷோபலக்ஷம் ஏழை நாராயணர்களுக்குச் சேவை செய்யுங்கள். அதுதான் உண்மையான தேச பக்தி”.
***
சுவாமி அகண்டானந்தர் சுவாமிஜியின் தேசபக்தியை வர்ணிக்கும்போது
“… பாரதத்தின் மீதுதான் சுவாமிஜிக்கு எத்தனை அன்பு! அதில் நூறில் ஒரு பங்காவது எங்களிடம் உள்ளதா? அவரது சகோதரர்களாக இருந்தும் எங்களிடம் அந்த உணர்வு இல்லாதபோது மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது?
“…சுவாமிஜி பாரதத்தின் மீது கொண்ட அன்பு சாதாரண விஷயம் அல்ல. அது வெறும் தேச பக்தி (patriotism) அல்ல. அது தேசாத்மபோதம். சாதாரண மனிதர்களுக்கு இருப்பது “தேஹாத்ம போதம்”, அதாவது உடம்பைத் தானாக உணர்வது. சுவாமிஜிக்கு இருந்ததோ ‘தேசாத்மபோதம்’. அதாவது நாட்டையே தானாக உணர்வது.
நாட்டு மக்களின் சுகம், துக்கம், அவர்களின் கடந்த காலம், எதிர் காலம், நிகழ் காலம் என்பவை பற்றியே அவர் சிந்தித்தார்.
தேசாத்ம போதத்துடன் அவரது உணர்வு நின்றுவிடவில்லை. அது விச்வாத்ம போதமாக விரிந்தது. பாரத மக்களுக்காக மட்டுமல்ல. உலக உயிரினங்கள் அனைத்துடனும் தம்மை ஒன்று படுத்திக் கொண்டு அவர்களுக்காக கவலைப்பட்டார் அவர். அனைவருக்கும் முக்தி கிடைக்காமல் அவருக்கு முக்தியில்லை …..”
***
மேலை நாடுகளிலிருந்து அவர் பேலூர் மடத்திற்குத் திரும்பி வந்த பிறகு நடந்த ஒரு சம்பவம்.
ஒரு நாள் இரவு விவேகானந்தரின் அறைக்குப் பக்கத்து அறையில் அவரது சகோதரச் சீடரான விஞ்ஞானானந்தர் படுத்திருந்தார். நள்ளிரவில் விவேகானந்தரின் அறையில் யாரோ விம்மி விம்மி அழும் குரல் கேட்டு எழுந்து அவரது அறைக்குச் சென்றார்.
அங்கே பார்த்தால் அழுது கொண்டிருந்தது வேறுயாரும் அல்ல. அது விவேகானந்தர்தான். விஞ்ஞானானந்தர் அறைக்குள் நுழைந்ததை சுவாமிஜி கவனிக்கவே இல்லை. விக்கி விக்கி அழுதுகொண்டிந்த சுவாமிஜியிடம், “சுவாமிஜி, உங்களுக்கு ஏதாவது உடல் சுகவீனமா? என்று கேட்டார்.
அதற்கு விவேகானந்தர், “என் உடலுக்கு ஒன்றுமில்லை. நமது தாயகத்தின் உடல்நிலைதான் மோசமாக உள்ளது. என் நாடு துன்பத்தில் துடிக்கிறது. என்னால் அந்த வேதனையைத் தாங்க இயலவில்லை. அதனாலேயே அதை நினைக்கிறபோதெல்லாம் என்னால் அழாமல் இருக்க முடியவில்லை” என்றார்.
***
“பாரதம், பாரத மக்கள், பாரதத்தின் வரலாறு, பாரதத்தின் கலாச்சாரம், மண், நதி, மலை, மக்கள் பழக்கவழக்கங்கள், ஆன்மிகப் பொக்கிஷங்கள்” என்று அனைத்தையும் நேசித்தவர் விவேகானந்தர் என்று எழுதுகிறார் அவரது மேலைநாட்டு சிஷ்யையாகிய சிஸ்டர் கிறிஸ்டினா.
***
ஒரு முறை மெக்லவுட் என்ற சிஷ்யை சுவாமிஜியிடம், சுவாமிஜி உங்களுக்கு மிகச் சிறந்த முறையில் சேவை செய்வதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார். “பாரதத்தை நேசி” என்று பதிலளித்தார் சுவாமிஜி.
***
சுவாமி விவேகானந்தரின் தேச பக்தியைப் பற்றி மஹாகவி பாரதியார் ‘இந்தியா’ பத்திரிகையில் 25.8.1906 இதழில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
“சுவாமி விவேகானந்தரின் தேசபக்தியானது அபரிமிதமென்பதை இங்கே குறிப்பிடுவது அவசியமில்லை . இந்த மகரிஷி “கிழக்கு திசையும் மேற்கு திசையும்” என்பதாக வங்காள மொழியில் ஒரு திவ்விய உபன்னியாஸம் எழுதியிருக்கிறார். அதன் ஒரு பகுதி இம்மாதத்திலே கிடைத்த ‘வாணி விலாஸினி’ பத்திரிகையில் தமிழில் மொழிபெயர்த்து எழுதப்பட்டிருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்பிலே மூல உபன்னியாஸத்தின் ரஸமும் பெருமையும் குறைந்திருக்க வேண்டும் என்பது அவசியமே எனினும், இது கூட படிப்பவர் மனது பிரமிக்கும்படியாகச் செய்கிறது. இதை முழுதும் மற்றொரு முறை நமது பத்திரிகையிலே எடுத்துப் பிரசுரம் செய்ய நிச்சயித் திருக்கிறோமாதலால், இங்கு அதைப் பற்றி விரிவாக எழுத விரும்புகின்றோமில்லை. ஆனால் அந்த உபன்னியாஸத்திலே (கட்டுரையிலே) ஸ்வாமி தமது தேசபக்தியை நன்கு விளக்கியிருக்கிறார். “வீரர்களாயிருங்கள். பூமியை அனுபவியுங்கள். கண்டவர்களெல்லாம் காலால் மிதித்தும், காறியுமிழ்ந்தும், அவமானப்படுத்துகிற இந்தப் பேடி வாழ்க்கை எத்தனை காலம் வாழப் போகிறீர்கள். இதுவும் ஒரு வாழ்க்கையா?” என்று மஹா ஆக்ரஹத்துடன் ஸ்வாமி கேட்கிறார். ஸர்வ ஸன்னியாஸியாகிய விவேகானந்தர் நமது நாட்டிலே மட்டும் ஒருவிதமான அதீதப்பற்று வைத்திருந்தமை அவரது பெருந்துறவுக்குப் பொருந்துமாவென்று சிலர் ஐயுறலாம். இதே விஷயந்தான் அவருடைய சிஷ்ய சிகாமணிகளில் ஒருவராகிய ஸ்ரீ நிவேதிதா தேவியின் மனதினும் பலவித ஆலோசனைகளுக்கு இடமுண்டாக்கியிருக்கிறது. ஸ்ரீ நிவேதிதா தேவி சென்ற சில மாதங்களாக ‘ப்ரபுத்த பாரதம்’ என்ற பத்திரிகையிலே விவேகானந்தரைப் பற்றி வரிசையாக எழுதிக் கொண்டு வருகிறார். இம்மாதத்து பத்திரிகையிலே நிவேதிதா தேவி, ஸ்வாமியின் தேசபக்திக்கும், ஸன்னியாஸத்திற்கும் உள்ள விரோத இயற்கையைப் பற்றி விஸ்தாரமாகப் பேசுகிறார். இதையெல்லாம் இங்கே விவரமாக எழுத முடியாத போதிலும் அதன் கருத்தை கீழே தருகிறோம். விவேகானந்தரின் இயற்கையிலே சுதேச பக்தி வேர் ஊன்றிப் போய் விட்டது. மஹா பலங் கொண்டவளாகிய பாரத மாதா தனது பலத்தைத் தானேயறியாதவளாகி அடிமை நிலைகொண்டு நிற்பதை அவரால் பார்த்துச் சகிக்க முடியவில்லை. ஆனால் இந்த சொற்ப பாசங்கூட மாயா சம்பந்தமனது என்பதை அவரே நன்றாக அறிந்திருந்தார். அவர் மட்டுமென்ன? அவரது பரம குருவாகிய ராமகிருஷ்ண பரமஹம்ஸர் கூட அதைப் பற்றிப் பிரஸ்தாபித்திருக்கின்றார். “விவேகானந்தருடைய மனசை ஒரு லேசான மாயைப் படலம் சுழ்ந்திருக்கிறது. அதை ஈசன் இவருடைய மனதில் ஒரு நன்மையைக் கருதி வைத்திருக்கிறார். ஆனால் அது மிகவும் லேசான படலம். அதை எந்த நிமிஷத்திலும் விவேகானந்தர் கிழித்தெறிந்துவிடுவார்.” என்று ராமகிருஷ்ணர் திருவாய் மலர்ந்தருளினார். “ ஆனால் நம்மவரின் அதிருஷ்டத்தாலும், ஈசனுடைய திருவருளாலும் மற்றெல்லா மாயைப் படலங்களையும் அறுத்தெறிந்துவிட்ட விவேகானந்தர் சுதேசப் பற்றை மட்டிலும் நெடுங்காலம் கொண்டிருந்தனர். ஆனால், பரம ஸன்னியாஸியைத் தவிர மற்றவர்கள் அனைவரும் பூமிப் பற்றில்லாத விஷயத்தில் பிணங்களுக்குச் சமமானவர்கள் என்பதை இம்மஹரிஷி மிகவும் வற்புறுத்திப் பேசியிருக்கிறார்”.
***
1907 ஜூலை 17-இல் ‘இந்தியா’ பத்திரிகையில் துணைத் தலையங்கமாக வந்த கட்டுரை…
தற்காலப் புது உணர்ச்சிக்கு மூல புருஷர் ஸத்குரு ஸ்ரீ விவேகானந்த சுவாமிகளே. நம் பாரதத்தில் இப்போது நடைபெறும் “நவீன இயக்கத்தின்” உற்பத்தி ஆகமங்கள் ஸ்ரீ விவேகானந்தரின் உபதேசங்களே. அவர், “பாரதத்திற்கு உள்ளும் புறமுமாக இருக்கும் ஒவ்வொரு குலத்திலும் உள்ள சத்தையெல்லாம் சேர்த்து அதனால் பாரதம் முழுவதையும் புதுப்பியுங்கள். உலகின் ஆன்மகோடிகளின் ஆத்ம விருத்தியையும் உங்கள் கடமையாகக் கொள்ளுங்கள். பின் பாரதமே எத்தேசத்திற்கும் லக்ஷியமாகும்” என்று நம்மெல்லோருக்கும் பல முறையும் வற்புறுத்திச் சொல்லியிருக்கிறார். அப்படி ஆவதற்கு ஏற்ற வழிகள் ஸ்வஜாதீயக் கல்வி, ஸ்வதேச வஸ்துவைப் பரிபாலித்தல், அன்னியச் சரக்குகளை விலக்கல் முதலிய ஸ்வஜாதீய ஏற்பாடுகளே என்றும். அவ்வழிகளில் நடப்பதற்கும், நல்வாழ்க்கைக்கும் அவசியமான தேஹம், மன ஒழுக்கம் பக்தி முதலியவைகள் எல்லாம் உறுதிப்பாடு அடையும்படியான அப்பியாசங்களைக் கைக்கொள்ள வேண்டும் என்றும் சுவாமிகள் நமக்கு போதிக்கிறார். இன்னும் முப்பத்து முக்கோடி ஜனங்கள் அடங்கிய இத்தேசத்தை சென்ற ஆயிரம் வருஷங்களாக, கட்டுப்பாடுள்ள சிற்சிலரே (வெளிநாட்டவர்களே) அடக்கி ஆண்டு வருகிறார்கள் என்ற இப்பிரச்னத்தின் தத்துவார்த்தத்தை அறிவிக்கும் எழுத்தாணிப் பாலை முதலில் நமக்கு ஊட்டிய ஸத்குருவும் அவரே பின்னும் அவரே. அக்கிருத்தியத்தை ஒருவித ‘மனோ மயக்கு ஜாலம்’ என்றும், அந்த ஜால மயக்கம் தெளிய நம் எல்லோருடைய ஆத்மாவிலும் மறைந்து கிடக்கும் தெய்வீக சக்தியை வேதாந்த ஞான ஒளியால் எழுப்பக் கூடுமென்றும் கற்பித்திருக்கிறார்: நம் க்ருத்தியம், ராஜரீகமோ வைதீகமோ, லௌகீகமோ இன்னும் வேறு எதுவாக இருந்தாலும் சரி, அதை அடைய வேதாந்த ‘ஞானமே வழி. நாம் இப்போது ஏற்படுத்தி வரும் ஆயிரக் கணக்கான சங்கங்களும், கூட்டும் எண்ணிறந்த மஹாநாடுகளும் மற்றவைகளும் உபயோகமற்றன. மற்றெல்லோருடைய கஷ்டங்களையும் காண மனம் உருகி அவர்களுக்கு அனுதாபம் காட்டி அன்பிலும் அருளிலும் புத்தரைப் பணிபவராகவும், ஸ்ரீ கிருஷ்ண பகவானுடைய உபதேச மொழிகளை ராஜாங்க ரீதியார்த்தமாக கொள்பவராகவும் நாம் ஆகும் வரைக்கும் நாம் முன்னுக்கு வரக்கூடும் என்று நம்ப இடமில்லை என்று அவர் கண்டிப்பாய்ச் சொல்லியிருக்கிறார். அன்றியும் நம் ஜாதீய க்ஷணதசைக்குக் காரணம் நம்மை விட்டுப் புறம்பே இருந்து எதுவும் வந்ததாகக் கருதலாகாது. நாம் செய்த பழியை நாம் நம் பேரிலேயே தைரியமாய்ச் சுமத்திக் கொள்ள வேண்டும். நாம் படும் பாட்டிற்கெல்லாம் நாமே காரணம் என்ற இப்படிப்பினை யெல்லாம் அவரிடம் இருந்தே நாம் கற்றுக் கொண்டோம். இவை அனைத்தையும் சுருக்கிச் சொல்லுவோம். எல்லோரும் சரியான புருஷர்களாயிருக்கப் பாருங்கள்.அதற்கு ‘சக்தி’யே வடிவமாயுள்ள லோகமாதாவை, “ஹே கருணாம்பிகையே’ என்னிடம் உள்ள பேடித் தனத்தை எடுத்துக் கொண்டு உன்னிடம் உள்ள புருஷத்வத்தைக் கொடு என்று அல்லும் பகலும் ப்ரார்த்தியுங்கள்” என்ற நம் ஸத்குருவான சுவாமிகள் கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது இவ்வுணர்ச்சிகளெல்லாம் ஸத்குரு விவேகானந்த ஸ்வாமிகளிடமிருந்து பிறந்து, அவையனைத்தும் ஒருமித்து ‘நவீன இயக்க’ மெனத்திரண்டு ப்ரும்ம ஸமாஜத்து ஸ்ரீ பிபின் சந்திர பாலர், ஆர்ய ஸமாஜத்து ஸ்ரீ லாலா லஜபதிராய், வைதீகர் பால கங்காதர திலகர், சிவனடியார் ஸ்ரீ வ. உ. சிதம்பரம் பிள்ளை ஆகிய இன்னும் அனேக மஹான்கள் மடியிலே வளர்ந்து பாரதீயனாகப் பிறந்துள்ள ஒவ்வொருவருடனும் தற்காலத்தில் விளையாடி வாரா நிற்கும். தேச பக்தராய்ப் பணிவார்கள் எல்லார்க்கும் அடியான்.
***
சுவாமிஜியின் சீடரான சதாசிவானந்தர் கூறுவதாவது:
“பிரபல தேச பக்தரான கேல்கர் காசியில் சுவாமிஜியைச் சந்திக்க வந்தார், சுவாமிஜிக்கு அப்போது உடல்நிலை சரியில்லை .
கட்டிலில் படுத்திருந்த சுவாமிஜி கேல்கரோடு பேசத் தொடங்கியவுடன் உணர்ச்சி வசப்பட்டு எழுந்து உடகார்ந்து விட்டார்.
பாரதத் தாய், அவளது வேதனை,அரசியல் சமுதாய சீர்திருத்தங்கள் என்று பல விஷயங்களை சுவாமிஜி பேசிக் கொண்டே போனார். குரல் உயர்ந்து கொண்டே போயிற்று.
“வறுமையும் நோயும் பீடித்து, இவ்வளவு இழிவுற்றுக் கிடக்கின்ற இந்த பாரதத்தில் இனிமேலும் வாழ்வதில் என்ன நன்மை? ஒவ்வொரு கணமும் நமது பாரதத்தாய் நரக வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு உண்ண உணவில்லை, உடுக்க உடையில்லை. அவமானமும் துன்பமும் தான் அவளது தலையில் நிரந்தரமாக எழுதப்பட்டுள்ளன. அவள் மூச்சு விடுகிறாள்… வாழ்கிறாள் என்பதற்கு அது ஒன்றே அறிகுறியாக உள்ளது. அவள் வாடுவது நரகத் தீயில். அது உறுதி, அது நிச்சயம். இப்படித் துன்புறுவதைவிட அவள் இந்த உலகிலிருந்து மறைந்து விடுவது நல்லதல்லவா?”
பாரதத்தின் ஏழைகள் அத்தனை பேருடைய துன்பங்களையும் ஏற்று சுவாமிஜி துடிப்பதுபோல் இருந்தது. அவரது உடல் நடுங்கியது. மூச்சு வேகமாக வெளிவந்தது.
அவர் உண்மையான தேச பக்தர். உண்மையான மஹான். “யாருடைய இதயம் ஏழைகளுக்காக ரத்தம் வடிக்கிறதோ அவனே உண்மையான மஹாத்மா என்பேன் நான்” என்று கூறியவர் அல்லவா அவர்? அவரது வாழ்க்கையிலேயே அந்த உண்மையை நாங்கள் காண முடிந்தது.
படிப்படியாக சுவாமிஜியின் பழைய நிலைமை திரும்பியது பிறகு, எந்த வழியில் பாரதத் தாயின் துன்பத்தை ஆற்ற முடியும் என்பது பற்றி அவர் கேல்கரிடம் கூறினார்.
குறிப்பாக ஒரு கருத்தை வலியுறுத்தினார்.
“பாரதம் வளர்ச்சி காண வேண்டுமானால் அதன் முன்னேற்றம் நமது புராதன மரபுகளைப் பின்பற்றி அகத்திலிருந்தே வருகின்ற இயல்பான முன்னேற்றப் பாதையில் இருக்க வேண்டும்.”
இந்தக் கருத்தை அவர் மீண்டும் மீண்டும் கூறினார். எல்லாச் சீர்திருத்தங்களும் மதத்தின் வழியில் இருக்க வேண்டும் என்பதையும் வற்புறுத்தினார். அன்று நாங்கள் ஒரு வித்தியாசமான சுவாமிஜியைக் கண்டோம்”
***
1901 டிசம்பர் 28 முதல் 31 வரை கல்கத்தாவில் இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டின் வருடாந்திரக் கூட்டம் நடைபெற்றது. சுவாமிஜி அரசியல் மற்றும் அது சார்ந்த இயக்கங்களிலிருந்து விலகியே இருந்தார்.
“எங்கள் நாட்டை எங்களிடம் கொடுத்து விடுங்கள்” என்று பிச்சை கேட்கும் பாணியில் அமைந்த காங்கிரஸின் கொள்கையை அவர் சிறிதும் விரும்பவில்லை.
இந்தக் கோரமான பஞ்சம் வெள்ளம், வியாதிகள், தொற்றுநோய் மிகுந்த இந்த வேளையில் காங்கிரஸ்காரர்கள் எங்கே போய்விட்டார்கள்? சொல்.
“அரசை எங்கள் கையில் தந்துவிடுங்கள்” என்று வெறுமனே சொல்லிவிட்டால் போதுமா? இவர்களின் பேச்சைக் கேட்க யார் இருக்கிறார்கள்? உண்மையான வேலை செய்கின்ற ஒருவன் வாய் திறந்து கேட்கவும் வேண்டுமா? உன்னைப்போல் இரண்டாயிரம் பேர் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலை செய்தால் அரசியல் விவகாரங்களில் ஆங்கிலேயர்கள் உங்களைக் கலந்து ஆலோசிக்க மாட்டார்களா என்ன?”
-என்று 1900 பிப்ரவரியில் அகண்டானந்தருக்கு எழுதினார் சுவாமிஜி.
அவரது போக்கு ஆண்மை நிரம்பியதாக ஆக்கபூர்வமானதாக இருந்தது. சுவாமிஜின் போக்கைக் காங்கிரஸார் பொதுவாக விரும்பவில்லை. அதே வேளையில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திலகர் போன்ற சிலர் சுவாமிஜியின் கருத்துக்களை வரவேற்காமலும் இல்லை.
தேசபக்த மஹானாகக் கருதப்பட்டவர் சுவாமிஜி. அவரது கருத்துக்களைப் படித்த பல காங்கிரஸ் தலைவர்களும் அந்த நாட்களில் பேலூர் மடத்திற்கு வந்து சுவாமிஜியை தரிசித்துச் சென்றனர். பல்வேறு கருத்துக்களை விவாதித்தபடி திலகரும் சுவாமிஜியுமாக கங்கைக் கரையில் உலவிய நாட்களும் உண்டு .
***
1901 மாநாட்டில்தான் மஹாத்மா காந்தி முதன்முறையாக கலந்துகொண்டார். மாநாடு முடிந்தபிறகு ஒரு மாத காலம் கோகலேயின் வீட்டில் விருந்தினராக அவர் தங்கியிருந்தார் அவர் சுவாமிஜியைச் சந்திக்கவும் விரும்பினார். ஆனால் மோஹன்தாஸ் கரம்சந்த் காந்தி சென்றபோது சுவாமிஜி மடத்தில் இல்லாததால் அவரைச் சந்திக்க இயலவில்லை.
“நான் விவேகானந்தரது சொற்பொழிவுகளை ஆழ்ந்து படித்த பிறகுதான் எனது தேசபக்தி ஆயிரம் மடங்காகப் பெருகி உள்ளது” என்று பேலூர் மடத்திற்குப் பின்னொரு முறை விஜயம் செய்தபோது கூறியது இங்கு நினைவுகூரத் தக்கது.
***
சுவாமிஜி வேறொரு சந்தர்ப்பத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள் குறித்த தமது அபிப்பிராயத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“காங்கிரஸின் செயல்பாடுகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் கையைக் கட்டிக் கொண்டு சும்மா இருப்பதை விட ஏதாவது செய்வது நல்லதுதானே. உறங்கும் நமது நாட்டை விழிப்படையச் செய்ய எல்லா பக்கங்களிலிருந்தும் உந்தித்தள்ளுவது நல்லதுதான்.இந்தக் காங்கிரஸ் மக்களுக்காக இதுவரை என்ன செய்துள்ளது என்பதை எனக்குக் கூறுங்கள், பார்க்கலாம். சில தீர்மானங்களை நிறைவேற்றி விட்டால் சுதந்திரம் தானாக வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அதில் எனக்கு நம்பிக்கையில்லை. முதலில் மக்களிடையே விழிப்புணர்வை உண்டாக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் தங்கள் சுதந்திரத்தை தாங்களே தேடிக் கொள்வார்கள்.”
***
ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது அங்கெல்லாம் ஆன்மிக பிரசாரம் செய்ததோடு விவேகானந்தர் நின்று விடவில்லை. தனது சொற்பொழிவுகளுக்கு நடுவே அடிமைப்பட்டுக் கிடக்கும் பாரதத்தின் துயரகரமான நிலையைக் குறித்தும் அவர் பேசத் தவறவில்லை. அவர் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த இந்தக் கனலின் விளைவு ரஷ்யப் புரட்சிக்காரர்களுடன் அவரைத் தொடர்பு கொள்ள வைத்தது.
எந்த பிரிட்டன் பாரதத்தை அடிமைப்படுத்தி வைத்திருந்ததோ அந்த பிரிட்டனிலேயே சுதந்திரப் பிரசாரம் செய்ய அவர் தயங்கவில்லை.
1898 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் நியூ இங்கிலாந்தில் அனிஸ்கூவாம் என்னும் ஊரில் பேராசிரியர் ரெய்ட் என்பவர் வீட்டில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஆங்கில ஏகாதிபத்தியம் பாரதத்திற்கு இழைத்து வரும் தீமைகளைக் கண்டித்துக் காரசாரமாக அவர் பேசினார்.
1899ஆம் ஆண்டில் மேரி ஹேலன் என்னும் அமெரிக்கப் பெண்மணிக்கு விவேகானந்தர் எழுதிய கடிதம் ஒன்றில் பின்வறுமாறு குறிப்பிட்டுள்ளார்:
“1857 ஆம் ஆண்டில் நடைபெற்ற முதலாவது பாரத சுதந்திரப் போராட்டத்தின்போதும், அதற்குப் பின்னரும் ஆங்கிலேயர்கள் பாரதத்தில் புரிந்த கொலைகளையும் அட்டூழியங்களையும் பாரதீயர்களால் ஒருபோதும் மறக்க முடியாது. பாரதத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு ரத்த பயங்கர ஆட்சியே நடந்து வந்துள்ளது. ஆங்கிலேய போர் வீரர்கள் எங்கள் மாதர்களைக் கற்பழித்தும் வருகின்றனர். இந்தக் கொடுமைகள் எல்லாம் எதற்காக? எங்கள் செலவில் வழிச்செலவும் பென்ஷனும் பெற்றுத் தங்களது தாயகத்திற்கு அனுப்பி வைப்பதற்காகத்தான். ஒரு வேளை நீங்கள் இந்தக் கடிதத்தை வெளியிட்டீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பாரதத்தில் இப்போது நிறைவேற்றப் பட்டுள்ள சட்டம் என்னை இங்கிருந்து பாரதத்திற்கு இழுத்துக் கொண்டு போய் எத்தகைய விசாரணையும் இல்லாமல் என்னைக் கொல்வதற்கு ஆங்கிலேயே அரசுக்கு அனுமதி அளித்திருக்கிறது.”
***
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு பாரதம் திரும்பிய விவேகானந்தர் பாரதத்திலும் நமது தேச விடுதலைக்காக ரகசியப் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுட்டிருந்தார்.
தனக்கோ அல்லது தான் தோற்றுவித்த ராமகிருஷ்ண மடத்துக்கோ எத்தகைய அரசியல் சம்பந்தமும் கிடையாது என்று விவேகானந்தர் அறிவித்திருந்த போதிலும் அவரும் அவருடைய சீடர்களும் ரகசிய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்தனர். ஆயுதம் தாங்கிய புரட்சி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த புரட்சிகர சங்கங்களுடன் விவேகானந்தரின் சீடர்கள் பலருக்கு ரகசிய தொடர்பு இருந்தது.
பாரதத்தில் ஒரு ஆயுதப் புரட்சி நடைபெற வேண்டும் என்ற அவருடைய உள்ளக் கிடக்கையில் எத்தகைய மாறுதலும் இல்லை .
***
1901-ல் சுவாமிஜி டாக்காவில் இருந்தபோது, பின்னாளில் புரட்சிவாதியாக மலர்ந்த ஹேமச்சந்திர கோஷும் அவரது நண்பர்களும் சுவாமிஜியைச் சந்தித்து தங்களுக்கு அவர்கூறும் அறிவுரை என்ன என்று வினவியபோது, சுவாமிஜி கூறியதாவது:
“அடிமைப்பட்டு கிடக்கும் தேசத்தின் இளைஞர்கள் அச்சமின்மையையும், வலிமையையும் தங்களுள் வளர்த்துக் கொள்ளவேண்டும். நமது நாட்டைச் சுரண்டி வாழும் இந்த அன்னிய மிலேச்ச ஆட்சியை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இரும்பினை ஒத்த தசையும், எஃகினை ஒத்த நரம்புகளையும் கொண்ட இளைஞர்களாகத் திகழுங்கள். பங்கிம் சந்திரரது நாவல்களைப் படியுங்கள். பங்கிம் சந்திரர் போதித்த தேசபக்தி உங்கள் உள்ளங்களில் சுடர் விட்டு பிரகாசிக்கட்டும். பாரதத்தின் அரசியல் விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராடவும் தயங்காதீர்கள்.”
சுவாமிஜி கூறியபடியே, ஹேமச்சந்திர கோஷ் புரட்சிவாதியாக மாறினார். இதுபோலவே ஜதீன் முகர்ஜியும் புரட்சிவாதியாக மாறினார்.
***
அனுசீலன் சமிதி என்ற பெயரில் வங்காளத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஆயுதப் புரட்சி சங்கத்தைச் சேர்ந்த சாயிராம் கணேஷ் டேவுஷ்கர் என்னும் புரட்சியாளரை விவேகானந்தர் சந்தித்தார். அவரிடம் விவேகானந்தர் பின்வருமாறு கூறினார்:
“பாரதம் ஒரு வெடி மருந்துக் கிடங்காக மாறும். எனது மரணத்திற்கு முன்பாகவே நாட்டில் புரட்சி நடக்கும். ஒரு சிறு தீப்பொறி போதும். வெடிக்கிற வேகத்தில் பிரிட்டிஷ் அரசு சிதறிவிடும். என் வாழ்வில் நான் புரட்சியைக் காண்பேன்”
அப்போது சுவாமிஜியிடம் டேவுஸ்கர், “வெளிநாட்டினரின் உதவியுடன்தான் இது நடக்குமா?” என்று கேட்டார்.
“நிச்சயமாக இல்லை, நமது சுதேசிய மன்னர்கள் பலர் ஒன்று சேர்வார்கள். மக்கள் எழுச்சியும் மன்னர்களின் கூட்டுத் தலைமையும் பிரிட்டிஷ் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும்”.
சுவாமிஜியின் வாழ்நாளில் இது நிறைவேறவில்லை. மன்னர்கள் ஒன்று சேர்ந்து போராடுவார்கள் என்ற சுவாமிஜியின் கனவு கனவாகவே இருந்துவிட்டது. 1857-இல் மன்னர்கள் சிலர் ஒன்று சேர்ந்து போரிட்டது உண்மை. ஆனால் அதற்குப் பின்னால் அங்ஙனம் ஏதும் நிகழவில்லை . இதனை சுவாமிஜியே கிறிஸ்டினா என்ற தமது மேற்கத்திய சிஷ்யையிடம் தாம் இறப்பதற்கு ஓராண்டுக்கு முன்னால் கூறியிருக்கிறார்.
“சுதேசிய மன்னர்களை ஒருங்கிணைக்க நான் முயற்சித்தது உண்மை. ஹிராம் மேக்ஸிம் என்ற துப்பாக்கித் தயாரிப்பாளரிடம் நான் தொடர்பு கொண்டிருந்தேன். ஆனால் மன்னர்களிடம் தேசத்தைப் பற்றிய சூடு சொரணையே இல்லை. எனவே மக்களிடத்தில் தேசிய உணர்வைத் தூண்டும் பணியைச் செய்யும் தன்னலமற்ற தொண்டர்களை உருவாக்குவதிலேயே என் கவனம் எல்லாம் உள்ளது” உள்ளம் நொந்து சுவாமிஜி கூறிய வார்த்தைகள் இவை. பிரபல வரலாற்று ஆசிரியரான ஆர்.சி.மஜூம்தார் தான் எழுதிய நூலில் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார்.
விவேகானந்தர் எதிர்பார்த்ததுபோல நாடு தழுவிய ஆயுதப் புரட்சி ஏதும் பாரதத்தில் நிகழவில்லை. அத்தகைய புரட்சியை உருவாக்க முயன்றவர்களின் முயற்சிகள் பல காரணங்களால் தோல்வியைத் தழுவின.
ஆனாலும்கூட இங்கொன்றும் அங்கொன்றுமாக சில தனிநபர்களும், அமைப்புகளும் ஆயுதப் புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டது என்னவோ உண்மை தான்.
ஆனால் இத்தகைய உதிரிப் புரட்சியாளர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் சுவாமிஜி தன் வாழ்நாளில் காண இயலவில்லை
அவர் மறைந்த 1902க்குப் பின்னரே இத்தகைய புரட்சி நடவடிக்கைகள் மஹாராஷ்ட்ரம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம் தமிழகம் ஆகிய மாநிலங்களில் நிகழ்ந்தன.
இவை கூட தனி நபர்களின் பயங்கரவாதத் தாக்குதல்கள் என்பதாக வர்ணிக்கப்படலாமே தவிர அவற்றை ஆயுதப் புரட்சி நடவடிக்கைகள் என்று பட்டியலிட முடியாது.
***
விவேகானந்தருக்கு ரகசியப் புரட்சி நடவடிக்கைகளோடு தொடர்பு இருக்கலாம் என்று பிரிட்டிஷ் அரசு சந்தேகித்தது. அவரை இடைவிடாது கண்காணிக்க ஒற்றர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்தச் செய்திக்கு ஆதாரமாகத் திகழ்வது சகோதரி நிவேதிதை 1898 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாளன்று தனது தோழி ஹராமாண்டுவிற்கு எழுதிய கடிதம்தான். நிவேதிதை அக்கடிதத்தில் குறிப்பிடுவதாவது. “சுவாமிஜியை ஓற்றர்கள் மூலம் காவல் துறையினர் கண்காணித்து வருவதாக இன்று மாலை, மடத்தைச் சேர்ந்த துறவிகளில் ஒருவர் எச்சரிக்கை செய்தார். இதைக் கேட்டு சுவாமிஜி சிரிக்கிறார். ஆனால் இதற்கு முக்கியத்துவம் அளிக்காமல் என்னால் இருக்க முடியவில்லை.
பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் விவேகானந்தர் அவர்களை ஒரு துறவியாகப் பார்க்கவில்லை. காவியுடை தரித்த ஒரு புரட்சிவாதியாகவே அவரைக் கருதியது.
1918ஆம் ஆண்டில் பாரதத்தில் பல்வேறு இடங்களில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற வன்முறை புரட்சி குறித்து விசாரிப்பதற்கு ரௌலட் குழுவை பிரிட்டிஷ் அரசு நியமித்தது.
இந்தக் குழு தயாரித்து அளித்த அறிக்கையில் “வங்காளத்திலும் வேறு இடங்களிலும் ஆட்சிக்கு எதிராக பெரும் கிளர்ச்சிகள் நடந்ததற்கு விவேகானந்தரின் பிரசாரம் ஏற்படுத்திய தாக்கமும் ஒரு முக்கியமான காரணம்” ஆகும்.
“விவேகானந்தர் சன்னியாஸி உடையில் இருந்த ஒரு மூர்க்கமான அரசியல்வாதியே”
பிரிட்டிஷ் அரசாங்கத்தின் உளவுத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட புரட்சிவாதிகளின் வீடுகளில் விவேகானந்தரது சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகங்கள் கிடைத்தன. ஒரு கட்டத்தில் ராமகிருஷ்ண மிஷனையே அரசியல் இயக்கமாகக் கருதி அதனைத் தடை செய்ய விரும்பியது அரசு. ஆனால் வங்காள கவர்னர் அரசின் இந்த முயற்சியை தடுத்து விட்டார். பல புரட்சிவாதிகள் ராமகிருஷ்ண மடத்திற்கு வந்து போய் கொண்டிருந்தனர். புரட்சிவாதிகளாகத் திகழ்ந்து பின்னாளில் ராமகிருஷ்ண மடத்தில் துறவியர்கள் ஆனவர்களும் உண்டு. உதாரணத்திற்கு ஒருவரைச் சொல்லவேண்டுமானால் தேவவிரத பாஸு என்பவர் சுவாமி ப்ரக்ஞானானந்தா என்ற துறவியாக மாறியதைக் கூறலாம்.
பிரிட்டீஷ் அரசின் கடுமையான கண்காணிப்பிற்கு இடையே கொஞ்சமும் அஞ்சாமல் விவேகானந்தர் தனது புரட்சிகர நடவடிக்கைகளை நடத்தி வந்தார். வங்கத்திலும் பாரதத்தின் பிற்பகுதிகளிலும் ரகசியமாக இயங்கிவந்த புரட்சிக்காரர்களுடன் அவருக்குத் தொடர்பு இருந்து வந்திருக்கிறது.
விவேகானந்தரின் புரட்சி நடவடிக்கைகளை இவர்கள் இருவரும் நன்கு அறிந்திருந்த காரணத்தினால் அவர் விட்டுச் சென்ற பணியினை இவர்களால் தொடர முடிந்தது.
***
நிவேதிதை கல்கத்தாவில் தான் தொடங்கிய பெண்களுக்கான பாடசாலை மூலம் ஹிந்துப் பெண்களின் இளம் உள்ளங்களில் தேசிய உணர்வை விதைக்க விரும்பினாள்.
அன்றைக்கு வங்காள மக்களே கூட அறிந்திராத ‘வந்தேமாதரம்’ பாடலை தினசரி ப்ரார்த்தனை கீதமாக ஆக்கினாள்.
ஆம்! பின்னாளில் வங்காளம் துண்டாடப்பட்டபோது ஓர் பேரியக்கமாக உருவெடுத்த வந்தே மாதர கீதத்திற்கு வித்தூன்றியவள் விவேகானந்தரின் சிஷ்யையான இந்த வீரப் பெண்மணிதான்.
பாரத நாட்டின் உடனடித் தேவை அரசியல் விடுதலைதான் என்பதை அவள் நன்கு உணர்ந்திருந்தாள்.
அவள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை சுவாமிஜியும் சரி அவர் தொடங்கியிருந்த ஸ்ரீ ராமகிருஷ்ண மடமும் சரி விரும்பவில்லை. எனவே அவள் தனது அரசியல் உணர்வுகளை ஒரு கட்டுக்குள் வைத்திருக்க நேர்ந்தது.
ஓகாகுரா காசுகோ என்னும் ஜப்பானிய பேராசிரியருடன் சேர்ந்து ரகசிய சங்கம் ஒன்றை உருவாக்கி பிரிட்டிஷாருக்கு எதிராக பிரச்சாரம் செய்தாள் நிவேதிதை. ஆயுதம் தாங்கிய புரட்சிக்கு நாட்டைத் தயார் செய்வதே இச்சங்கத்தின் ரகசிய நோக்கமாக இருந்தது.
ரஷ்யாவில் செயல்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாத அனார்க்கிச இயக்கம் காட்டிய பாதையை பாரதமும் பின்பற்ற வேண்டும் என்று ஜப்பானிய பேராசிரியர் ஓகாகுரா யோசனை கூறினார்.
நிவேதிதா பாரதம் வந்தபோது அவளது அரசியல் முனைப்பை மழுங்க வைக்க நினைத்து சுவாமி விவேகானந்தர் நிவேதிதாவின் தோழி கிரைஸ்டின் என்னும் பெண்மணியிடம் தனது உள்ளக் கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
“எனக்கும் புரட்சியில் ஆர்வம் உண்டு. ஆனால் பாரதம் புரட்சிப் பாதையில் நடைபோட இன்னும் தயாராக வில்லை. முதலில் பாரதத்தை அதன் இன்றைய சீரழிந்த நிலையிலிருந்து விடுவித்துச் சீரமைக்க வேண்டும். அதற்காக ப்ரும்மச்சர்ய விரதம் ஏற்று நாட்டு மக்களிடையே உணர்வூட்டி புத்துயிர்பெறச் செய்யக் கூடிய தொண்டர் படைதான் முதலில் எனக்குத் தேவை. அத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்யாமல் வெறும் ஆர்வத்தில் உந்தப்பட்டு புரட்சிகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுவது எந்தப் பயனும் தராது”
-என்று விவேகானந்தர் கூறினார்.
ஆனால் சுவாமிஜியின் மறைவுக்குப் பின்னால் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷனிலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொண்டு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவி வந்தார் நிவேதிதை.
சுவாமிஜியின் மறைவுக்குப் பின்னால் சுதந்திரப் பறவையாகி விட்ட நிவேதிதா பாரதத்தின் பல்வேறு பகுதிகளுக்கெல்லாம் சென்றார். பரோடாவில் இருந்த மன்னர் கல்லுரியில் பேராசிரியராகப் பணிபுரிந்து வந்த அரவிந்தரை 1902 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 20 ஆம் நாளன்று சந்தித்தார். ஏற்கெனவே புரட்சி நடவடிக்கைகளில் அரவிந்தர் ஈடுபாடு கொண்டிருந்தார். விவேகானந்தரால் உந்தப்பட்டவர் அரவிந்தர்.
பூனாவில் இயங்கி வந்த ரகசிய சங்கத்தோடு அரவிந்தருக்குத் தொடாபு இருந்தது. அரவிந்தருக்கும் திலகருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. இருவருமாக சேர்ந்து பாரத இளைஞர்களுக்கு ரஷ்யாவில் ராணுவப் பயிற்சி அளிக்கும் சாத்தியக் கூறுகள் பலவற்றை அறியும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இது சம்பந்தமாக திலகர் பம்பாயில் இருந்த ரஷ்யத் தூதரை பல முறை சந்தித்துப் பேசினார். இத்தகைய சூழ்நிலையில் அரவிந்தரை நிவேதிதா தேவி சந்தித்தது மிக முக்கியமானதாகும். இந்தச் சந்திப்பை பற்றி அரவிந்தர் பின்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
“நிவேதிதா என்னிடம் ஆன்மிக விளக்கம் பற்றியோ ராமகிருஷ்ணர் விவேகானந்தர் பற்றியோ பேசியதாக எனக்கு நினைவு இல்லை. பாரத அரசியலையும் மற்றும் பல விஷயங்களையும் குறித்தே பேசினோம்.”
அரவிந்தரும் நிவேதிதா தேவியும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பது பற்றிய முழு விவரமும் தெரியாவிட்டாலும் நாடெங்கிலும் புரட்சிகர நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய திட்டங்களைப் பற்றியே இருவரும் பேசியிருக்க வேண்டும்.
பல்வேறு சிறு சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருந்த புரட்சி வீரர்களை ஒன்றுபடுத்த வேண்டியது பற்றியும் அவர்கள் ஆராய்ந்திருக்க வேண்டும்.
இச்சந்திப்பின் விளைவாக பின்னால் அரவிந்தர் எழுதிய ஒரு குறிப்பே நமக்குப் பல விவரங்களைத் தெளிவுபடுத்துகிறது.
“சமீப காலத்தில் தோன்றியுள்ள புரட்சிவாத அமைப்புகள் சிலவும், புரட்சிவாதிகள் சிலரும் தனித்தனியாக செயல்பட்டு வந்ததை நான் கண்டேன். இவையாவற்றையும் இணைத்து பாரிஸ்டர் பி.மித்ரா அவர்களை வங்காளத்தில் புரட்சித் தலைவராகவும் நிவேதிதா தேவியை உள்ளடக்கிய ஐந்து பேர்களை ஒரு மத்தியக் குழுவாகவும் அமைத்து ஒரே ஸ்தாபனமாக உருவாக்க நான் முயன்றேன்”.
நிவேதிதா பற்றிய தனது நூலில் பரிவ்ராஜிகா ஆத்மப்ராணா பின்கண்டவாறு எழுதியிருக்கிறார்:
“ஒத்துழையாமையும் ஸாத்வீக எதிர்ப்பும் தோல்வி அடையும் கட்டத்தில் பஹிரங்கமான கலகத்திற்கு ஒரு தயாரிப்பாக ரகசியப் புரட்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வர வேண்டும் என்ற அரவிந்தரின் முயற்சியை அவர் ஆதரித்தார்”
1905ல் பவானி மந்திரம் என்ற துண்டுப் பிரசுரத்தை வெளியிட்டார் அரவிந்தர்.
கானகத்தில் மலைகளுக்கு இடையே மறைவாக ஒரு கோயில் கட்ட வேண்டும். கட்டிய கோயிலில் பவானி தேவியை ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். இந்த பவானி வேறுயாருமில்லை. பாரத தேவிதான்.
பாரத தேவியின் அடிமை விலங்கை உடைத்தெறிய உறுதி பூண்டு தன் உடல், பொருள் ஆவி அனைத்தையும் அர்ப்பணம் செய்ய முன்வரும் பிரம்மச்சாரிகள் இந்த் பவானி மந்திரத்தில் ஆயுதம் ஏந்திப் போராடப் பயிற்சி பெறுவார்கள். பவானி மந்திரம் அரவிந்தரின் மனக்கோட்டையாகவே முடிந்துபோயிற்று. ஆனாலும் அவரது எண்ண ஓட்டம் என்ன என்பதைப் புரிந்துகொண்ட ஆங்கிலேய அரசு அதிர்ந்து போனது.
ஆயுதப் புரட்சியை மறைமுகமாக ஊக்குவித்த அரவிந்தர், விண்ணப்பங்கள் மூலம் விடுதலை பெற்று விடலாம் என்று வீண் கனவு கண்டு கொண்டிருந்த இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்பை, இரும்புக் கரம் கொண்டு மட்டுமே இங்கிலாந்தைப் பணிய வைக்க முடியும் என்று நம்பவைத்தார். விளைவு காங்கிரஸ் ஆங்கில அரசின் அஸ்திவாரத்தையே அசைக்கும் அளவுக்கு வலிமை பெற்றது.
அரவிந்தர் தன் சகோதரர் பரிந்திரநாத் கோஷ் மூலம் வங்காள ராஜதானியில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்புகளோடு தொடர்பு வைத்துக் கொண்டார். விவேகானந்தரின் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் அடிப்படையில் உருவான ‘அனுசீலன் ஸமிதி’ என்னும் புரட்சி அமைப்பு சிறந்த முறையில் திட்டமிட்டுச் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்புடன் நிவேதிதா நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார்.
மாஜினியின் சரித்திரத்தில் கொரில்லாப் போர்முறை பற்றிய அத்தியாயத்தைப் பிரதி எடுத்து வங்காளம் முழுவதும் பரவச் செய்தார் நிவேதிதை.
***
வங்காள மாநில இந்திய தேசிய காங்கிரஸின் மாநில மாநாடு 1906 ஏப்ரல் 14ல் பாரிஸாலில் நடந்தது. இந்த மாநாட்டின்போது வந்தே மாதரம் கோஷத்தை எழுப்பியதற்காக, மாநாட்டுத் தலைவர்கள் மீது தொண்டர்கள் மீதும் தடியடிப் பிரயோகம் செய்தனர் பிரிட்டீஷ் போலீஸார்.
அந்த மாநாட்டிற்குத் தலைமையேற்றுவிட்டுத் திரும்பிய ஸுரேந்திரநாத் பானர்ஜியை ஸியால்டா ஸ்டேஷனில் நிவேதிதை சந்தித்தார். அப்போது அவர் கூறியது.
“தேச விடுதலைக்காகத் தாங்களும் மற்றவர்களும் சிந்திய ரத்தத்துளிகளிலிருந்து சிலிர்த்து எழுவார்கள் சிங்கக்குட்டிகள். விடுதலை விரைவில் கிடைக்க அஸ்திவாரம் இட்டுவிட்டீர்கள்” என்பதே.
***
1908 ஆம் ஆண்டில் விவேகானந்தரின் தம்பியான பூபேந்திரநாத் தத்தா நிவேதிதையிடமிருந்து மாஜினியின் சுயசரிதை மற்றும் ‘ஒரு புரட்சிவாதியின் நினைவுக் குறிப்புகள்’, ‘ரஷ்ய மற்றும் ஃப்ரெஞ்சுக் சிறைக்கூடங்கள்’ என்ற தலைப்புகளில் பீட்டர் குரோபோட்கின் எழுதியிருந்த இரு நூல்களையும் பெற்றிருந்தார்.
இளைஞர்களை விடுதலைப் போராட்டத்திற்குத் தயார் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்ட நிவேதிதா தேவி அக்காலத்தில் அவ்வளவாக பிரபலம் அடையாத புரட்சி வீரர்கள் மத்தியில் அதிகமாக அறிமுகம் ஆகியிருந்தார். விவேகானந்தரின் தம்பியான பூபேந்திரநாத் தத்தா, அரவிந்தர், பரிந்திர கோஷ் போன்ற இளம் புரட்சிவாதிகள் அவரிடமிருந்து உத்வேகத்தையும், உதவிகளையும் பெற்றார்கள்”.
பூபேந்திரநாத் தத்தா 1907ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டபோது அவரை ஜாமீனில் வெளியே கொண்டு வருவதற்கு நிவேதிதா முயற்சிகளை மேற்கொண்டார். அவரைச் சிறையில் சந்தித்தார். அவருடைய தாய் புவனேஸ்வரியை அடிக்கடி சென்று பார்த்து அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்தார்.
பூபேந்திரநாத் தத்தாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகை ரூ.10000 ஐத் திரட்டிக் கொடுப்பதிலும் அவர் முன் நின்றார். ஒரு ஆண்டுக்கால சிறை வாசத்திற்குப் பின்னால் பூபேந்திரநாத் தத்தா அமெரிக்கா சென்றார். இதற்கு இரண்டு ஆண்டுக்காலம் கழித்து அமெரிக்கா சென்ற நிவேதிதா பூபேந்திரநாத், தாரக் நாத் மற்றும் அமெரிக்காவில் இருந்த பல புரட்சி வீரர்களைச் சந்தித்துப் பேசினார்.
அலிப்பூர் சதி வழக்கில் சிறைப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டுக் காலம் சிறைவாசம் அனுபவித்து விட்டு வெளியே வந்த அரவிந்தர் 1910 ஆம் ஆண்டு பிப்ரவரியில் சந்திரநாகூருக்குத் தப்பிச் சென்றார். அங்கு சென்று அவரை நிவேதிதா தேவி சந்தித்துப் பேசி அரவிந்தர் அங்கிருந்து பாண்டிச்சேரிக்கு பத்திரமாகப் போய்ச் சேர்வதற்கு பிரபல விஞ்ஞானியான டாக்டர் ஜகதீஷ் சந்திரபோஸ் அவர்களிடம் பணம் பெற்றுக் கொடுத்து அவரை பத்திரமாக அனுப்பிவைத்தார்.
நிவேதிதாவிற்கு சுவாமிஜி ஊட்டிய பாரத தேசப்பற்றே அவரை இந்த அளவிற்கு நமது தேச விடுதலைக்காக உழைக்கத் தூண்டியது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
***
விவேகானந்தரிடம் குடிகொண்டிருந்த தேசபக்திக்கனல் அவரது சகோதரரான பூபேந்திரநாத் தத்தாவையும் ஆட்கொண்டது. பாரத தேசிய விடுதலை இயக்கத்தில் அவர் தீவிரமாக ஈடுபட்டார். ‘யுகாந்தர்’ என்னும் பத்திரிகை வாயிலாக அனல் கக்கும் பிரசாரம் புரிந்தார். வங்க இளைஞர்கள் அவரது எழுத்துக்களின் மூலம் எழுச்சி பெற்றார்கள்.
அரவிந்தர் தமது ‘யுகாந்தர்’ வார இதழில் கொரில்லாப் போர் முறை பற்றிய விவரங்களை வெளியிட்டார். இதன் ஆசிரியர் குழுவில் பணியாற்றிய விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா மீது அரசு வழக்குத் தொடர்ந்தது.
தாங்கள் பிரிட்டீஷ் அரசாங்கத்தையே நியாயமான அதிகாரபூர்வமான அரசாக ஏற்கவில்லை என்பதால் அந்த அரசு தொடரும் எந்த வழக்கும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்று இந்த பத்திரிகை துணிச்சலுடன் பதிலடி கொடுத்தது. பிரிட்ஷ் அரசின் அடக்குமுறைக் கணைகள் அவர்மீது பாய்ந்தன.
1907 ஆம் ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறைப்பட்டவுடன் யுகாந்தர் குழுவில் இடம் பெற்றிருந்த இளைஞர்கள் ஓய்ந்துவிடவில்லை.
“விடுதலை பெற வழி என்ன? (முக்தி கோன் பாதே) என்ற தலைப்பில் அவரது கட்டுரைகள் பல நூலாக வெளிவந்துள்ளன.
“ஆயுதங்களை ஏராளமாக ரகசியமாகத் தயாரிக்க வேண்டும், ஏராளமான குண்டுகள் புரட்சிவாதிகளின் ரகசியத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட வேண்டும். இத்தகைய குண்டுகளைச் செய்யும் வித்தைகளையும் கற்றுவர ஹிந்து இளைஞர்கள் அன்னியநாடுகளுக்கு அனுப்பப்பெற வேண்டும். அயல்நாடுகளிலிருந்து ஆயுதங்கள் ரகசியமாக இறக்குமதி செய்யப்பட வேண்டும்”
“பிரிட்டிஷாரின் படையில் உள்ள ஹிந்து ராணுவ வீரர்களின் துணை கொண்டு ஆங்கிலேயருக்கு எதிரான புரட்சியை உருவாக்குவது சாத்தியம். பிரிட்டிஷ் அரசின் படையில் பணிபுரியும் சுதேசிய வீரர்களின் ஆயுதங்கள் பிரிட்டீஷாருக்கு எதிராகத் திரும்ப வாய்ப்பு உள்ளது”
-என்பன போன்ற தகவல்களை இந்நூலில் காணலாம்.
1940களில் மும்பையில் பிரிட்டிஷ் படையில் சுதேசிய வீரர்களின் கிளர்ச்சியும், இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியரிடம் கைதிகளாக பிடிபட்ட பிரிட்டிஷ் படையினரின் சுதேசிய வீரர்களைக் கொண்டு நேதாஜி உருவாக்கிய ஹிந்து தேசிய ராணுவமும்தான் உண்மையில் பிரிட்டிஷார் பாரதத்திற்கு விடுதலை அளிக்க முக்கிய காரணங்கள் என்பதை பலரும் அறிவர்.
விவேகானந்தர் நேரிடையாக அரசியலில் ஈடுபடுவதற்கு அவரது துறவு வாழ்வும், ஆன்மிகப் பணிகளும் தடையாக இருந்தன. ஆனாலும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் சுவாமி விவேகானந்தரையே தங்களின் வழிகாட்டியாகக் கொண்டிருந்தனர் என்பது வரலாற்று உண்மை.
$$$