இதன் பெயரென்ன?

-மகாகவி பாரதி

லண்டனிலிருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை இந்திய விரோதமாக எழுதுவது இன்று ஏதோ புதியதல்ல, மகாகவி பாரதி காலத்திலேயே இப்படித்தான் அந்தப் பத்திரிகை செயல்பட்டிருக்கிறது. அதற்கு அப்போதே பதிலடி கொடுத்திருக்கிறார் மகாகவி...

21 ஜனவரி 1920

லண்டன் “டைம்ஸ்” பத்திரிகையில் ஸர் வாலன்டைன் கிராஸ் பின்வருமாறு பரிதபிக்கிறார்:-

பத்து வருஷங்களின் முன்னே டில்லி நகரத்துக்கு வெளியே, இந்தியாவில், பண்டு இஸ்லாமிய ஆதிக்க மிருந்தற்குச் சிறந்தொரு சின்னமாகிய குதுப்மினார் என்ற கோரியின் கீழே ஒரு நாள் காலையில் சில மஹமதிய நண்பர்கள் என்னோடு ஸம்பாஷணை செய்து கொண்டிருந்தனர். இனி இந்திய ஸ்வராஜ்யமும், ஹிந்து ஆதிக்கமும் நேர்ந்தால் இந்திய மஹமதியரின் கதி என்ன ஆகுமோ என்றெண்ணி அவர்கள் பெருமூச்செறிந்தார்கள். இன்றைக்கு அவர்களில் சிலர் ஸ்ரீமான் காந்தியின் பரம சிஷ்யர்களாக இருக்கிறார்கள். இன்றைக்கு எங்கு பார்த்தாலும்  ‘ஹிந்து முஸ்லிம்கீ ஜய்’ என்ற சத்தம் பிறந்துவிட்டது. மஹமதியர்களில் மசூதிகளுக்குள் ஹிந்துக்கள் உபந்யாசர்களாய் முஸ்லிம்களுக்கு ஸ்வராஜ்ய உபதேசம் பண்ணுகிறார்கள். டில்லி நகரத்தில், சில தினங்களின் முன்பு உலோமாக்களின் ஸர்வ பாரத ஸங்கம் நடைபெற்றபோது அங்கு ஸ்ரீ காந்தி விருந்தாளியாகச் சென்றிருந்தார். இதைக்காட்டிலும் வினோதமான செய்து ஹிந்துக்களின் கொள்கைக்கிணங்கி முஸல்மான்கள் முக்யமான உத்ஸவ காலங்களில் பசுக்களை விட்டு ஆடுகளைக் கொல்ல உடம்பட்டதாகும். ஆனால் இப்படிச் செய்யலாமென்று அக்பர் சக்கரவர்த்தி விதித்திருக்கிறார்.”

என்று மேன்மேலும் ஸர் வாலண்டைன் தமது மன வருத்தத்தை விஸ்தரித் தெழுதிக்கொண்டு போகிறார். பொறாமையும் வயிற்றெரிச்சலும் இந்த வார்த்தைகளில் கொழுந்து விட்டெரிகின்றன. இப்படிப்பட்ட மனோபாவ விலாஸங்களை இங்கிலாந்தில் ப்ரகடனம் செய்வதனால் யாருக்கென்ன பயன் விளையுமென்று டைம்ஸ் பத்திரிகை அதிகாரிகள் நினைக்கிறார்கள் என்பதை நம்மால் ஊஹிக்க முடியவில்லை.

ஆனால் தேசீய பாடசாலைகளில் ஹிந்து மத கிரந்தங்களுக்குத் தக்கபடி கல்வி கற்பிக்கப்படுமாதலால் அப்பாடசாலைகள் முஸல்மான்களுக்குப் பயன்பட மாட்டாவென்று ஸர் வாலன்டைன் சொல்லும்போதுதான், அவர் நம்பிக்கையின் வரம்புக்கு வெளியே பஹிரங்கமாக வந்து நிற்கிறார். ஏனெனில் தேசீயப் பாடசாலைகளில் முஸ்லிம் பிள்ளைகளுக்கு முஸ்லிம் மத நூல்களே உபதேசிக்கப்படு மென்பது ஸகலருக்கும் தெரிந்த விஷயம்.

  • சுதேசமித்திரன் (21.01.1920)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s