-செந்தமிழ்க்கூத்தன் இராம.வேணுகோபால்
திரு. இராம.வேணுகோபால், ஆசிரியர்; குடியாத்தத்தில் வசிக்கிறார். சித்த மருத்துவர்; பத்திரிகையாளர்; கவிஞர் எனப் பல பரிமாணங்களை உடையவர். ‘செந்தமிழ்க் கூத்தன்’ என்ற பெயரில் கவிதைகளை எழுதி வருகிறார். 2சுவாமி விவேகானந்தர் குறித்த அன்னாரது கவிதை இது….

என்னரும் விவேகா னந்த
பாரத நாட்டின் மைந்த
உன்னரும் ஆற்ற லாலே
உலகிலே இந்த மண்ணின்
நன்மைசேர் தத்து வத்தை
நயமுற விதைத்து வந்தாய்,
அன்னியர் கூடப் போற்றும்
அருந்தவ ஆற்றல் ஊற்றே!
1
திண்ணிய நெஞ்சம் கேட்டாய்.
திரண்டதோள் வலிமை கேட்டாய்.
புண்ணிய நெறியாம் ஏழைக்
குதவுநல் புனிதம் கேட்டாய்.
கண்ணிலே கருத்தில் என்றும்
கடமைசெய் ஆற்றல் கொண்டாய்.
தண்ணொளி வீசும் குன்றே
தரணியில் சான்றாய் நின்றாய்!
2
இத்தனை கேட்ட திண்டோள்
இணையிலா மன்ன, பாராய்.
எத்தனை இன்னல் கண்டும்
இடிந்திடா உள்ளம் பெற்றாய்.
முத்தனை இளைஞர் கூட்டம்
முடிவிலா தியாகம் கொண்டு
பத்தியால் உன்றன் கனவைப்
பதமெனப் போற்றும் வேளை.
3
வடக்கிலே தோன்றும் கங்கை
நாடெலாம் பாய்வ தெப்போ?
தொடர்ந்திடும் உழவர் வாழ்வில்
தொல்லைகள் தீர்வ தெப்போ?
படர்ந்திடும் மாற்றார் கல்வி
மோகத்தை ஒழிப் தெப்போ?
சுடர்த்திரு வானே நீயே
தீர்வினைக் காணச் செய்வாய்!
4
பாரத அன்னை காக்கும்
புதல்வரைத் தீய சத்தி
வேரதில் புழுவைப் போல
அன்னிய எண்ணத் தாக்கால்
பாரதில் பரவி வந்து
பைந்தமிழ் நாட்டில் கூட
நீரதில் நஞ்சைப் போல
நிர்மணம் கூட்டு திங்கே!
5
வஞ்சனை, பொய்மை, கள்ளம்
உரையது செய்கை பேதம்
நெஞ்சினில் படர்ந்த மாசு
நிறைந்துதான் ஓங்கு திங்கே.
பஞ்சொளிர் பூவே உன்றன்
பணிமொழி போற்றிப் பேணி
விஞ்சிடும் உலகு செய்ய
விரைகுவாய் அருளின் ஊற்றே!
6
பாரதப் பண்பாட் டைநீ
பாரெலாம் உணர்த்து தற்கே
சீரலைக் கடலின் குன்றில்
சிறப்புறு தவமி ருந்து
ஏறென சிகாகோ சென்று
எளிமையாய் எடுத்துக் கூறி
வேரது பார தந்தான்
ஆன்மிக வழிகா ணென்றாய்!
7
நாத்திகம் உந்தன் நெஞ்சில்
நாட்டமும் கொண்டதுண்டு.
ஆத்திகக் கடவுள் எங்கே?
அறிந்தவர் சொல்வீர் என்றாய்;
பார்த்தனாய் அலையலுற்றாய்
பலப் பல குருவைத் தேடி
தேர்ந்தபோ தங்குதித்தார்
ஞானியாம் பரமஹம்சர்!
8
தேசிய இளைஞர் கூட்டம்
தேர்ந்திட ‘எழுமின், விழிமின்,
வாசமாய்க் குறிசார் மட்டும்
விடாதுநீ செல்மின்’ என்றாய்
மாசிலா மதத்தை விட்டு
மருட்டியே மாற்றல் செய்தால்
தேசத்துத் துரோகிக் கூட்டம்
பெருகவே வகையாம் என்றாய்!
9
கலங்கரை விளக்காய் என்றும்
குவலயம் போற்ற இந்த
பலம்மிகு பார தத்தில்
நூற்றுவர் இளைஞர் கூட்டம்
நலம்பெற வந்தால் போதும்
நாட்டிலே வளமாய் ஓங்கும்
உலகத்தீர் வாரீர் என்றாய்
உன்னடி போற்று கின்றோம்!
10
$$$