காலக் கண்ணாடி

-மகாகவி பாரதி

 “இந்தியாவிலுள்ள பத்திரிகைகள் ஐரோப்பிய, அமெரிக்கப் பத்திரிகைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள. விஸ்தாரமான செய்தி யெல்லை; ரஸமாகச் செல்லும் திறமை – இவற்றில் இந்தியாவிலுள்ள பத்திரிகைகளைக் காட்டிலும் மேற்றிசைப் பத்திரிகைகள் மிக உயர்ந்த நிலையிலிருக்கின்றன. அதிலும், இந்தியாவிலுள்ள தேசபாஷைப் பத்திரிகைகளின் நிலைமை சில அம்சங்களில் மிகவும் பரிதாபத்துக்கிடமாக இருக்கிறது” - மகாகவி பாரதி

15 மார்ச் 1921                                           ரெளத்திரி பங்குனி 2

சமாசாரப் பத்திரிகைகள் 

இங்கிலாந்தில் சில முக்யமான வாசகசாலைத் தலைவர் இவ்வருஷத் தொடக்கத்தில், மற்றப் பழம் பத்திரிகைகளை விலைக்குக் கொடுத்தது போல், “லண்டன் டைம்ஸ்” பத்திரிகையை மட்டும் கொடுக்காமல் உலக சரித்திரத்துக்கு ஆதாரமாகச் சேகரித்து வைத்தார்களென்று தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அத்தகைய பதவி நம் சுதேசமித்திரனுக்குக் கடவுள் அனுக்ரஹம் செய்யும்படி பிரார்த்திக்கிறேன். வர்த்தமானப் பத்திரிகைகளின் நிலைமை பொதுப்படையாகவே நாள்தோறும் ஏறிக்கொண்டு வருகிறது. உலகத்து ராஜ்ய தந்த்ரங்களுக்குப் பொதுஜன ஆதரவு அவசியமென்ற விதி பலப்பட பலப்படப் பத்திரிகைகளின் சக்தி மிகுதிப் பட்டுக் கொண்டு வருகிறது. வியாபாரிகளுக்கு வர்த்தமானப் பத்திரிகை இன்றியமையாத விளக்காய்விட்டது. கைத்தொழில் வளர்ச்சிக்கும் பத்திரிகைகள் தூண்டுதலாகி வருகின்றன. இலக்கியத் துறையிலும் பத்திரிகைகள் மேன்மேலும் மாண்புயர்ந்து வருமென்று தோன்றுகிறது. 

பாரமார்த்திக தர்சனம்

இங்ஙனம் லெளகிக வெற்றியை வேண்டுவோருக்கு மாத்திரமே பத்திரிகை முக்யமானதென்று கருதல் வேண்டா. “அவனின்று ஓரணுவும் அசையாது” என்ற பெரியோரின் வாக்குப்படி உலகத்து நிகழ்ச்சிகளெல்லாம் கடவுளுடைய செயல்களேயாதலால், பத்திரிகை படித்தல் தெய்வ பக்தியுடையோருக்கும் பேராநந்தம் விளைத்தற்குரியது. கடவுள் மனித உலகத்தை எங்ஙனம் நடத்திச் செல்கிறனென்பதை விளக்குவதே சரித்திரப் பயிற்சியின் மேலான பயனென்று பூர்வாசார்யர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அங்ஙனமாயின், இந்த அம்சத்தில் சரித்திர நூல்களைக் காட்டிலும் பத்திரிகைகள் பன்முறை அதிகமான பயன் தருமென்பதில் ஐயம் சிறிதேனுமுண்டோ?

ஆனால் தற்காலப் பத்திரிகைகளில் பக்ஷபாத குணம் அதிகமாகக் காண்பிக்கப்படுகிறது. தேசப் பஷபாதங்களும் கக்ஷிப் பிரிவுகளும் மலிந்து கிடக்கின்றன. இவற்றை நீக்கிவிட்டால் பத்திரிகையின் மஹிமை இன்னும் நெடிதோங்கி வளர இடமுண்டாகும்.

இதனிடையே, இந்தியாவிலுள்ள பத்திரிகைகள் ஐரோப்பிய, அமெரிக்கப் பத்திரிகைகளிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள. விஸ்தாரமான செய்தி யெல்லை; ரஸமாகச் செல்லும் திறமை – இவற்றில் இந்தியாவிலுள்ள பத்திரிகைகளைக் காட்டிலும் மேற்றிசைப் பத்திரிகைகள் மிக உயர்ந்த நிலையிலிருக்கின்றன. அதிலும், இந்தியாவிலுள்ள தேசபாஷைப் பத்திரிகைகளின் நிலைமை சில அம்சங்களில் மிகவும் பரிதாபத்துக்கிடமாக இருக்கிறது. கடிதங்களெழுதுவோரில் பலர் இலக்கணப் பயிற்சிகூட இல்லாமல் பத்திரிகைக் கெழுதத் துணிகிறார்கள். அவற்றைப் பத்திராதிபர்கள் சில ஸமயங்களில் பிழை களையாமலே ப்ரசுரம் செய்து விடுகிறார்கள். இதுவுமன்றி இலக்கணப் பயிற்சியற்ற சிலர் பத்திராதிபராக இருக்கும் விநோதத்தையும் இந்நாட்டிலே காண்கிறோம். நவீன நாகரிகத்தின் முக்யச் சின்னங்களிலொன்றாகிய பத்திரிகைத் தொழிலில் நாம் மேன்மை பெற வேண்டுமானால், மேற்கூறப்பட்ட பிழைகளைத் தீர்த்துக் கொள்ளக் கடவோம்.

தொழிலாளர் கிளர்ச்சி

சில தினங்களின் முன்பு பெல்ஜியத்தில் ஒரு தொழிற்சாலையைத் தொழிலாளிகள் கைப்பற்றிக் கொண்டார்களென்று ஒரு செய்தி கிடைத்திருக்கிறது. எனவே பொது உடமைக் கக்ஷி என்ற காட்டுத் தீ ஐரோப்பா என்ற மனுஷ்ய வனத்தில் ருஷியா முழுவதையும் சூழ்ந்து கொண்டதுமன்றி மற்ற இடங்களிலும் அங்கங்கே திடீர் திடீர் என்று வெடித்துத் தழல் வீசி வருவது காண்கிறோம். போல்ஷெவிஸ்ட் கொள்கையை மத்ய ஆசியாவில் பரவவிடக் கூடாதென்றெண்ணும் ஆங்கிலேய மந்திரிகள் இத்தாலி, ஜெர்மனி, ஆஸ்த்ரியா, துருக்கி, ப்ரான்ஸ் முதலிய நாடுகளில் மிகுதியாகவும், இங்கிலாந்து, நார்வே, ஸ்வீடன், பெல்ஜியம், டென்மார்க் முதலிய தேசங்களில் சற்றே மட்டாகவும் அக்கொள்கை வியாபித்து வருவதை எங்ஙனம் ஸஹிக்கிறார்களென்பது புலப்படவில்லை. என்ன செய்யலாம்? ஆங்கிலேயப் பழங்கதை யொன்றிலே சொல்லப்பட்டதுபோல, கான்யூட் ராஜா சொல்லுக்குக் கடல் கீழ்ப்படிந்து நடக்குமா?

ஜப்பானில் ஜாதி பேதம்

நான் ஜாதி பேதத்துக்கு நண்பனல்லேன். இந்தியர்களெல்லாரும், அல்லது ஹிந்துக்களெல்லாரும் ஒரே ஜாதி யென்ற ஸாதாரண இங்கிலிஷ் படிப்பாளிகளின் கொள்கையை நான் அனுஸரிக்கவில்லை. உலகத்து மனிதர்கள் எல்லாரும் ஒரே ஜாதி “வஸுதைவ குடும்பம்” என்ற பர்த்ருஹரியின் கொள்கையைத் தழுவியுள்ளேன். மனித ஜாதியும் மற்ற ஜந்து ஸமூஹங்களும் ஒரே குடும்பமென்ற (d) டார்வின் என்னும் ஆங்கில சாஸ்திரியின் கருத்தைப் பின்பற்றுகிறேன். எல்லா ஜீவர்களும் கடவுளுடைய அம்சமென்ற பகவத்கீதையின் பரமோபதேசத்தைக் கடைப் பிடித்து நிற்கிறேன்.

ஒரு பிராமணனை, ஒரு ஆங்கிலேயனை, ஒரு ஆட்டைக் கொல்லுதல் அல்லது அடிப்பதால் எய்தும் பாவம் ஒரே மாதிரி உபசரிப்பதால் அல்லது வணங்குவதால் எய்தும் புண்யமும் ஒரே தன்மையுடையது. இஃதென் உண்மையான, யான் ஒழுக்கப்படுத்தி வருகிற கொள்கை. எனிலும் ஜாதி பேதம் தொலையும் வரை நாம் ஸ்வராஜ்யம் புரியத் தகுதி பெற மாட்டோம் என்ற சொல்வோருடைய பேச்சுக் காசு பெறாதென்பதை நான் உறுதியாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.

திருந்தமாக, ஸமீபகாலத்தில் கிடைத்த டோக்யோத் தந்திகளினின்றும் அங்கு பரம நீதி ஸபை (ப்ரவி கெளன்ஸில்) அக்ராஸனாதிபதியான யமகாடாபிரபு என்பவரும், வேறு பல அரண்மனை அதிகாரிகளும் ராஜிநாமாக் கொடுத்துவிட்டார்களென்று தெரிகிறது. இதன் காரணம் யாதென்றால் பூர்வகால முதலாக ஐந்து பழைய குடும்பங்களிலிருந்து மட்டுமே சக்ரவர்த்தி வம்சத்தார் பெண்ணெடுப்பது வழக்கமாக நடைபெற்று வந்திருக்க, இப்போது அந்த வழக்கத்துக்கு மாறாகப் பட்டத்திளவரசருக்கு அவ்வைந்து குடும்பங்களில் சேராத சேனாதிபதி கூனி இளவரசர் என்பவரின் மகள் இளவரசி நாகாகோ என்பவளை மணம் புரிய நிச்சயித்திருப்பதேயாம். ஜப்பானியப் பரம நீதி ஸபைத் தலைவர் எவ்விதமான ஜாதிபேதம் பாராட்டுகிறார் பார்த்தீர்களா!

விவாக ஸம்பந்தமான இடையூறுகளை உத்தேசித்தே யுனைடெட் ஸ்டேட்ஸ் மக்களான நாகரிக சிகாமணிகள் தமது களவாண்ட தேசத்தில் ஜப்பானியர் அடியெடுத்து வைக்கக் கூடாதென்று கூக்குரல் போடுகிறார்கள். மற்றப்படி வெள்ளை ஜாதியர்களுக்குள்ளே இருக்கும் விவாகத் தடைகள் பல. ஜாதி பேதமாவது முக்யமாக விவாகத்தடை; இரண்டாம் பக்ஷம் ஸமபந்தி போஜனத்தடை. இவையிருத்தல் தவறு, ஆனால் இவை ஸ்வராஜ்ய ஸ்தாபனத்திற்கு விரோத மென்று கூறுவோர் பச்சை அறியாமையாலே அங்ஙனம் சொல்லுகிறார்கள்.

-சக்திதாஸன்

  • சுதேசமித்திரன் (15.03.1921)

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s