ஈ.வெ.ரா.வின் முகத்திரையைக் கிழிக்கும் நூல்- மதிப்புரை

-சேக்கிழான்

தமிழகம் எவ்வாறு விரசாய்ப் போனது என்பதை உணர்ந்தால் தான், இதற்கு மாற்றுக் கண்டறிய முடியும். அந்த வகையில் நமது வீழ்ச்சிக்கு வித்திட்ட ‘சிறியார்’ ஒருவரை நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியம். அந்த வகையில் நாம் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது. அம்பேத்கரிய ஆய்வாளர் திரு.ம.வெங்கடேசனால் ‘துக்ளக்’ வார இதழில்  எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் இப்போது சுவாசம் பதிப்பகத்தால் ‘மறைக்கப்படும் ஈ.வெ.ரா’ என்ற நூலாக வெளியாகி இருக்கிறது.
மறைக்கப்படும் ஈவெரா
-ம.வெங்கடேசன்

152 பக்கங்கள், விலை:  ரூ. 180-

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்,
52/2, பி.எஸ்.மஹால் அருகில், 
பொன்மார், சென்னை- 600127
போன்: 81480 66645.

“… நீ வாழ்த்துவதால் உன் தமிழ்த்தாய்க்கு ஒரு கொம்பு முளைத்துவிடுமோ? கடவுள் வாழ்த்து வேண்டாம் என்றால் உடனே தமிழ்த்தாய் வாழ்த்து. ஒரு முட்டாள் தனத்துக்குப் பதில் இன்னொரு முட்டாள் தனமா?”

-தமிழகத்தைப் பெரியார் மண் என்று விதந்தோதிக் கொண்டிருக்கும் திராவிட அரசியல்வாதிகளிடம், இதைச் சொன்னவர் யார் என்று கேட்டால் கொஞ்சம் நெளியத் தான் செய்வார்கள்.  இதைச் சொன்னவர், இவர்களால் பெரியார் என்றும், பகுத்தறிவுத் தந்தை என்றும், சுயமரியாதையை தமிழர்க்குக் கற்றுத் தந்தவர் என்றும் புகழப்படும் ஈ.வெ.ராமசாமி தான்.

இப்படியெல்லாம் பெரியார் சொல்லியிருக்க மாட்டார் என்று கொம்பு சுற்றும் திராவிட அதிமேதாவிகள் உண்டு. அவர்களுக்காகவே, இந்தக் கூற்று வெளியான, ‘பெரியார்’ நடத்திய விடுதலை இதழையே (13.04.1972) சான்றாக முன்வைத்திருக்கிறார் ஆய்வாளர் ம.வெங்கடேசன்.

‘மறைக்கப்படும் ஈ.வெ.ரா’ என்ற நூலின் ஆய்வுத் தரத்துக்கு, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல மேலே குறிப்பிட்ட சான்றே உதாரணம் (பக்கம்: 9).

இது மட்டுமல்ல, தமிழை சனியன் என்றும் ஏசி இருக்கிறார் இந்தச் சிறியார்.

“நாம் வீட்டில் தமிழ் பேசுகிறோம். கடிதப் போக்குவரத்து நிர்வாகம், மக்களிடம் பேச்சு இவைகளைத் தமிழில் நடத்துகிற்றோம். சமயத்தை, சமயநூல்களை, இலக்கியத்தைத் தமிழில் கொண்டு இருக்கிறோமே! சரி, இதற்கு மேலும் சனியனான தமிழுக்கு என்ன வேண்டும்?” என்றும் கேட்கிறார் ஈ.வெ.ரா.  

(ஆதாரம்: விடுதலை தலையங்கம் – 16.03.1967, ஈ.வெ.ரா சிந்தனைகள் – பக். 983- 986)

இப்படி, நமது தாய்மொழியாம் தமிழை ஈ.வெ.ரா. கொச்சைப்படுத்தியதன் பின்புலம் என்ன? இதைத்தான், தனது நூலில் ஈ.வெ.ரா.வின் எழுத்துகளைக் கொண்டே, அவரைப் பற்றி தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை சுக்குநூறாக உடைத்திருக்கிறார் ம.வெ. இதற்காக இவர் அளித்திருக்கும் கடும் உழைப்பும் ஆய்வும், நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் வெளிப்படுகின்றன…

இதோ மேலும் சில மேற்கோள்கள்…

“கடைசியாகத் தமிழின் மூலமோ, தமிழ் இலக்கியத்தின் மூலமோ, தமிழ்ச் சமயம், தமிழ்ப் பண்பாட்டின் மூலமோ, நாம் உலக மக்கள் முன்னிலையில் ஒருநாளும் இருக்க முடியாது”…

(ஆதாரம்: மொழியும் அறிவும்- நூல்- 1957; ஈ.வெ.ரா.சிந்தனைகள்- பக். 987-989).

“தமிழர்களின் பகுத்தறிவுக்கும், சமுதாயக் கேடு நீக்கலுக்கும், தமிழர்களால், தமிழ்ப் புலவர்களால் போற்றப்படுபவர்களில் ஐந்து பேர் எதிரிகளாவார்கள். அவர்கள் யார் என்றால், 1.  வள்ளுவன், 2. தொல்காப்பியன், 3. கம்பன், 4. இளங்கோவன், 5. சேக்கிழார்…”.

(ஆதாரம்: விடுதலை- 90வது பிறந்த மலர்- 17.09.1968)

இந்தியப் பாரம்பரியத்துக்கு எதிராகப் பேசுவோரையும், நாட்டின் பெருமைகளை இழிவுபடுத்துபவர்களையும் ஆதரிக்க இன்று உலக அளவில் பெரும் அமைப்புகளுண்டு. இப்படிப் பேசுவோர் எதைப் பற்றியும் கவலையின்றி, எந்தவொரு ஆதாரமும் இன்றி, அல்லது தாங்களே புனைந்துகொண்ட மலினமான ஆதாரங்களின் அடிப்படையில்,  ‘சநாதனத்தை வேரறுப்போம்’ என்றெல்லாம் முழங்குவதை இப்போது நாம் காண்கிறோம். இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக நூறாண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் கிளம்பியவர் தான் ஈ.வெ.ரா. உலகப் பொதுமறையான திருக்குறள் குறித்து இந்த அஞ்ஞானி கூறியிருக்கும் கருத்தைப் பாருங்கள்:

“வள்ளுவன் குறளையும் அந்தப்படியே, அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது, பலர் என்னிடம்,  ‘எல்லாம் போய்விட்டால், நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்துவிடு என்று கூறினால், அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட்பது?’ என்று பதில் கூறுவேன்.”

(ஆதாரம்: விடுதலை- 30.05.1950, ஈ.வெ.ரா. சிந்தனைகள்- பக். 1259).

அது மட்டுமல்ல, ‘உதவாக்கரை இலக்கியங்கள்’ என்ற தலைப்பில் சிலப்பதிகாரம் பற்றி ஈ.வெ.ரா. முன்வைத்த விமர்சனத்தை எந்த ஒரு மானமுள்ள தமிழனும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி என்ன விமர்சனம் வைத்திருக்கிறார்? இதற்கு ம.வெ.வின்  ‘மறைக்கப்படும் ஈ.வெ.ரா’ நூலை (பக்கங்கள் 42- 51) நீங்கள் படிக்க வேண்டும்.

‘உயர் கம்பன் பிறந்த தமிழ்நாடு’ என்று மகாகவி பாரதி போற்றிப் பரவிய கம்பனையும் ஈ.வெ.ரா. விட்டுவைக்கவில்லை.

“கம்ப ராமாயணம் அரிய இலக்கியமாய் இருக்கிறதாகச் சொல்லுகிறார்கள். இருந்து என்ன பயன்? ஒருவன் எவ்வளவுதான் பட்டினிக் கிடந்தாலும், மலத்தில் இருந்து அரிசி பொறுக்குவானா? அதுபோலத்தானே கம்ப ராமாயணம் இருக்கிறது?…”

(ஆதாரம்: குடியரசு- 29.01.1936)

வள்ளுவனையும் கம்பனையும் ஏசிய இந்த ஈனவாய் மகாகவி பாரதியை மட்டும் விட்டுவைக்குமா? இதோ, இந்த அறிவிலியின் முழக்கம்…

“பார்ப்பனரல்லாதார் என்ற உணர்ச்சிப் போராட்டம் இல்லாதிருந்தால், இந்த மேதாவி டாக்டர்கள், ‘மகான்’களின் (தமிழறிஞர்களைத் தான் கூறுகிறார்) நிலை இன்று எப்படி இருக்கும்? கிறுக்கன் பாரதிக்கு இருக்கிற மதிப்பில் நூற்றில் ஒன்றுகூட இவர்களில் எவருக்கும் இன்று இல்லையே?”

(ஆதாரம்: விடுதலை தலையங்கம்- 05.04.1967; ஈ.வெ.ரா. சிந்தனைகள்- பக். 1000-1002)

இப்படித்தான் ஈ.வெ.ரா. தமிழகத்தில் பகுத்தறிவையும் தமிழர் மாண்பையும் வளர்த்திருக்கிறார். இவரைத்தான் ‘தமிழர் தந்தை’ என்று போற்றி இறுமாந்து போகிறார்கள் சிலர். அவர்களின் அகக்கண்ணைத் திறப்பதற்காகவே, நெடுநாள் உழைத்து, இந்த நூலை எழுதி இருக்கும் ம.வெங்கடேசனைப் பாராட்ட வேண்டும்.  

‘துக்ளக்’ வார இதழில் தொடராக வெளிவந்து, கிழக்கு பதிப்பகத்தால் ‘ஈ.வெ.ரா.வின் மறுபக்கம்’ என்ற தலைப்பில் வெளியான இந்நூல், இப்போது புதுப்பொலிவுடன் சுவாசம் பதிப்பகத்தால் ‘மறைக்கப்படும் ஈ.வெ.ரா’ என்ற நூலாக வெளியாகி இருக்கிறது.

ஈ.வெ.ரா.வின் உளப் பிரச்னை, எல்லாவற்றையும் பார்ப்பன ஆதிக்கமாகவே கண்டு வெருண்டது தான். அது மட்டுமல்ல, சமுதாயத் தீமைகள் அனைத்திற்கும் பிராமணர்களையும், ஹிந்து சமயத்தையும் குற்றவாளியாகச் சித்தரிப்பது, ஆரிய இன வெறுப்பு அரசியலுக்கு உகந்ததாக இருந்தது. இந்த வெற்றுப் போலி அறிஞரின் கூற்றுகளின் மீதுதான் திராவிட அரசியல் மாளிகை எழும்பி இருக்கிறது என்பது, தமிழர்கள் தலையில் அடித்துக்கொண்டு அழ வேண்டிய அளவுக்குக் கேவலமான கீழ்மை.

ஈ.வெ.ராவின் பார்ப்பன வெறுப்பு, அவரை கடவுள் மறுப்பாளராக மாற்றியது; பிற்பாடு ஹிந்து விரோதி ஆக்கியது; இறுதியில் இந்திய விரோதி ஆக்கியது. இந்திய சுதந்திர நாளை துக்க நாளாக அனுசரிக்க வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அவரது மனநோய் முற்றி இருந்தது. நமது துரதிர்ஷ்டம், அவரது மனநோய்ப் பிதற்றல்களை பெரும் ஞானியின் அவதூத வார்த்தைகளாக முன்வைத்தவர்களான பிராமண வெறுப்பாளர்களிடம் தமிழகம் சிக்கிக் கொண்டதுதான்.

“தமிழக அரசர்கள் ஆரிய அடிமைகள்; சேர சோழ பாண்டியர்கள் மக்களை மடையர்களாக்கினர்” என்று வேறு எவராவது தமிழகத்தில் கூறி இருக்க முடியுமா? இதை பார்ப்பன வெறுப்பு என்ற போர்வையில் சொன்னவர் ஈ.வெ.ரா. (காண்க: பக். 56 – 58).

சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்த பிராமணர்கள் மீதான பிராமணரல்லாத உயர்ஜாதி மக்களின் பொறாமையை ஓர் அரசியல் ஆயுதமாக்கியவர் என்பதே, ஈ.வெ.ரா.வுக்கு புரட்சிக்காரர் அந்தஸ்தை அளித்திருக்கிறது. இது எவ்வளவு தரம் தாழ்ந்த செயல் என்பது, இந்நூலின் ஒவ்வொரு பக்கத்தைப் படிக்கும்போதும் புரிய வருகிறது.

தமிழ் வாழ்க என்று முழங்கும் இதே தமிழகத்தில் தான், தமிழ் போதனா மொழியாக இருக்கக் கூடாது என்றும், ஆங்கிலம் அந்த இடத்தில் இருக்க வேண்டும் என்றும் சொன்னார் ஈ.வெ.ரா. இதையும். ம.வெ. பதிவு செய்திருக்கிறார் (பக். 70 – 78).

“எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ் வேண்டும் என்பதற்கோ அல்ல என்பதைத் தோழர்கள் உணர வேண்டும். வேறெதற்கு என்றால், ஆங்கிலமே பொதுமொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ்நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டும் என்பதற்காகவே யாகும்”.

(ஆதாரம்: விடுதலை- 27.01.1969; ஈ.வெ.ரா.சிந்தனைகள்- பக். 989).

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிராத ஒருவரிடமிருந்து இதைத் தவிர வேறென்ன எதிர்பார்க்க முடியும்? ‘தொடக்கக் கல்வி முழுவதும் அவரவர் மாநிலத்தின் தாய்மொழியில் தான் இருக்க வேண்டும்’ என்று வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை, ஈ.வெ.ரா.வைப் பின்பற்றுவதாகக் கூறும் திமுக அரசு எதிர்ப்பது ஏன் என்பது இப்போது புரிகிறதல்லவா?

இவ்வாறு, ஈ.வெ.ரா.வின். சிந்தனை வீச்சுகளை 15 அத்தியாயங்களில் தொகுத்திருக்கிறார் தோழர் ம.வெங்கடேசன். அற்புதமான வரலாற்றுப் பணி. கீழ்வெண்மணியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 44 கூலித் தொழிலாளர்கள் ஆதிக்க ஜாதியினரால் கொளுத்தப்பட்டபோது, ஈ.வெ.ரா என்ன செய்தார் என்பதை ம.வெ. விளக்கி இருப்பதைப் படிக்கும்போது இதயம் துடிக்கிறது.

மகாத்மா காந்தி கள் எதிர்ப்பு இயக்கம் நடத்திய காலத்தில் (1920கள்) அப்போது காங்கிரஸில் இருந்த ஈ.வெ.ரா. ஈரோட்டில் கள் இறக்குவதைத் தடுக்க தனது தென்னந்தோப்பையே வெட்டி வீழ்த்தினார் என்று புளகாங்கிதம் அடைந்து பேசும் திராவிட இயக்கச் செயல்வீரர்களை இன்றும் நாம் ஆங்காங்கே காணலாம். அவர்களிடம், தென்னம் பாளைகளைக் கண்காணித்தால் போதுமே, எதற்கு தோப்பையே வெட்டி வீழ்த்த வேண்டும் – என்று யாரும் இதுவரை கேட்டதில்லை அல்லவா? மூட்டைப்பூச்சிக்குப் பயந்து யாரேனும் வீட்டைக் கொளுத்துவார்களா?

அதே ஈ.வெ.ரா. மதுவிலக்குக் கொள்கை குறித்து 1962-இலும் 1971-லும் என்ன கூறி இருக்கிறார் என்று பாருங்கள்:

“…மது விலக்கு என்பது உயிர்ச்சத்துள்ள மதுவை விலக்கிவிட்டு, விஷச் சத்துள்ள மதுவைக் குடிகாரர்களுக்குத் தருவது போலாகும் என்றும் சொன்னேன். மது விலக்கு என்பது மது அருந்துபவர்கள் மதுக்கடைகளுக்குப் போய் அருந்துவதற்குப் பதிலாக, அவர்கள் இருக்குமிடத்திற்கு மது தானே தேடிக் கொண்டு வரும்படி செய்வதாகும்”.

(ஆதாரம்: விடுதலை- 29.11.1962).

“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும், நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்….”

“…மதுவிலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய, மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்கத் தயார்.”

(ஆதாரம்: விடுதலை- 18.03.1971).

“திருமணம் பெண்ணை அடிமையாக்கும் சடங்கு; தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்; தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி” – இப்படி, சமுதாயத்தில் உயர்வாக உள்ள எதையும் போகிற போக்கில் நையாண்டியும் பகடியும் செய்து, கொச்சையாகப் பேசி, அதன்மூலமாக தன்னையொத்த அரைவேக்காடுகளின் கரவொலியைப் பெற்றவர் தான் ஈ.வெ.ரா. என்பதை இந்நூலைப் படிக்கும் எவரும் உணர முடியும்.

தமிழகம் எவ்வாறு விரசாய்ப் போனது என்பதை உணர்ந்தால் தான், இதற்கு மாற்றுக் கண்டறிய முடியும். அந்த வகையில் நமது வீழ்ச்சிக்கு வித்திட்ட  ‘சிறியார்’ ஒருவரை நாம் அனைவரும் அறிந்திருப்பது அவசியம். அந்த வகையில் நாம் அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல் இது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s