-எஸ்.எஸ்.மகாதேவன்
மூத்த தமிழ் இதழாளர் திரு. எஸ்.எஸ்.மகாதேவன், இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவை மேம்படுத்துவது எப்படி என்று இக்கட்டுரையில் ஆராய்கிறார்....

மேற்கு தொடர்ச்சி மலைச்சாரல் காடுகளின் விளிம்புப் பகுதியில் வசிக்கும் (800 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த) மாணவர்கள் ‘யுவா மித்ர’ என்ற திட்டத்தின் கீழ் மிக முக்கியமான ஒரு விஷயம் பற்றி பயிற்சி எடுத்துக் கொள்ள இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 10,000 மாணவ மாணவிகளுக்கு இந்தப் பயிற்சி கிடைக்க இருக்கிறது.
கர்நாடகத்தின் மைசூரு, சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் வன விளிம்புப் பகுதிகள் உள்ளன. காட்டுக்குள் பல்லுயிர்ப் பெருக்கம், விளிம்புப் பகுதிகளில் மனிதன்- விலங்கு உறவு நிலை, காட்டுத்தீயைத் தவிர்க்கும் உத்திகள் போன்றவை பற்றி மாணவர்களுக்கு கண்கூடாகப் புரிய வைப்பது ‘யுவா மித்ர’ திட்டத்தின் நோக்கம். திட்டத்தில் சேர்வது வனவிளிம்புப் பகுதி மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் அரசு உண்டுறை பள்ளி ஒன்றின் மாணவர்களை வனத்துறையினர் பண்டீபுரா புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் ஸபாரி முறையில் அழைத்துச் சென்று காட்டினார்கள். துறையின் சார்பில் உணவும் வழங்கப்பட்டது. அந்த ஸபாரியை மத்திய வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சென்ற வாரம் தொடங்கி வைத்தார்.

‘யுவா மித்ர’ போன்ற பயிற்சி தமிழகத்தில் அளிக்கப்பட்டால் நல்லது. திருநெல்வேலி, கோயம்புத்தூர், தர்மபுரி மாவட்டங்களின் அடர்ந்த காடுகளின் விளிம்புக் கிராமங்களில் வசிக்கும் மாணவ மாணவிகளுக்கு மனிதர்- விலங்கு உறவு பற்றி மட்டுமாவது விழிப்புணர்வு ஊட்ட வேண்டும். ஆசிரியரிடமிருந்து மாணவ மாணவிகளுக்கு; மாணவ மாணவிகளிடமிருந்து பெற்றோருக்கு; பெற்றோரிடமிருந்து கிராமத்துக்கு… என்று விழிப்புணர்வு சங்கிலித்தொடராகப் பரவ முடியும்.
வனவிளிம்புப் பகுதி வயல், தோப்பு விளைச்சல் எல்லாம் காட்டுப்பன்றி, யானை அழித்தது போக மிஞ்சினால்தான் வீட்டுக்கு என்ற நிலை தமிழக விவசாயிகளின் தொடர் அனுபவமாகிவிட்டது. காட்டோர ஊர்களில் சிறுத்தை நடமாட்டம் கிளப்பும் பீதி அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் வனவிளிம்புவாசிகளுக்கு ‘யுவா மித்ர’ தரும் விழிப்புணர்வு அவசியம் என்று மாநில அரசு புரிந்துகொள்ள நாள் பிடிக்கும் என்றால், தனியார் முன்முயற்சி கைகொடுக்கக் கூடும்.
திருநெல்வேலி மாவட்டத்தின் முண்டந்துறை புலிகள் சரணாலயத்தை அடுத்த வன விளிம்புப் பகுதி மக்களிடையே கல்விப்பணி புரிந்து வரும் நெடுநோக்கமுள்ள தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பு நடத்தும் ஜோஹோ போன்ற பெரு நிறுவனங்கள் நிபுணர்களை கர்நாடகத்திற்கு அனுப்பி யுவ மித்ரா’ திட்டத்தின் அனுபவங்களைக் கண்டறிந்து வர முடியும். இது ஒரு யோசனை.

இன்னொரு யோசனை:
வன விளிம்புப் பகுதி வாழ் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளை, மூதாதையர் காட்டிய வழியில், இயற்கைக்கு அனுசரணையான வாழ்க்கை வாழ தாங்களே வாழ்ந்துகாட்டி புகட்ட வேண்டும்.
அந்தமான் வனவாசி அன்பர் வனப்பகுதியில் தேனடையிலிருந்து தேன் எடுக்கும் முறையை உதாரணமாகச் சொல்லலாம். புகைமூட்டம் போட்டு தேனீக்களை விரட்டி அவர் தேன் எடுப்பதில்லை. தேனீக்கடியைத் தவிர்க்க தன் உடலில் பச்சிலைச் சாற்றைப் பூசிக்கொண்டு தேன் எடுக்க மரம் ஏறுவார்.
நிகோபார் வாழ் ஓங் வனவாசி அன்பர் நீரில் குறிபார்த்து ஈட்டி எறிந்து மீன் பிடிக்கிறார். டைனமைட் வைத்து மீனின் வாழ்விடத்தைத் தகர்த்து முட்டைகளையும் குஞ்சுகளையும் அழித்து சர்வநாசம் புரிவதில்லை.
அருணாசல் பிரதேச வனவாசியோ ஆற்றின் நடுவே பாறைகளைக் குவித்து மீனுக்கு வாழ்விடம் அமைக்கிறார்; வந்து தங்கும் மீன் முட்டையிட்டு குஞ்சு பொரித்து ஒரு மாத காலம் வசிக்கிறது. அங்கிருந்து பெரிய மீன்களை மட்டும் வெறுங் கையாலேயே பிடித்தெடுத்துக் கொள்கிறார்.
நமது ஊர் விவசாய அன்பர் மாடுகட்டிப் பால் கறப்பது எப்படி? கோமாதா கன்றுக்கு ஊட்டிய மிச்சத்தைத் தானே கறக்கிறார்? வன வளத்தை, வன விலங்குகளை சேதாரமில்லாமல், இயற்கை சமன்பாடு சிதறாமல், எப்படிக் கையாள்வது என்றல்லவா இந்த மேலோர் வாழ்ந்து காட்டுகிறார்கள்!
தேன் எடுக்கவும் மீன் பிடிக்கவும் பால் கறக்கவும் மட்டுமல்ல, மாசுபடாமல் காற்றைக் காப்பாற்ற வேண்டும்; கழிவு கலக்காமல் நீரைக் காப்பாற்ற வேண்டும். அது எப்படி சாத்தியம் என்று எல்லோருக்கும் தெரியும்.

பசவன் திருவிழா:
மனிதன்- விலங்கு உறவு நம் மூதாதையர் பார்வையில் எவ்வளவு புனிதமானதாக, அதே சமயம் ஆனந்தமான விஷயமாக இருந்திருக்கிறது என்று பாருங்கள்:
65 ஆண்டுகளுக்கு முன்னர் தென் தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி கிராமங்களில் காளை பொம்மையை சப்பரத்தில் அமைத்து அலங்கரித்து வீதிவலம் செல்வார்கள்; அதை ‘பசவன்’ என்றே அழைப்பார்கள்.
ஹிந்து சமய உற்சவமாக காளைக்கு ஊர் ஊராக விழா எடுக்கும் மரபு புத்துயிர் பெறுவது ‘பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு நம் கோயில் திருவிழாவின் அங்கம்’ என்பதை அனைவருக்கும் தெளிவாக்கிட உதவும். அது ஹிந்து சமுதாயத்திற்கே பாதுகாப்பு.
இதை நான் முகநூல் பதிவாக சுற்றுக்கு விட்டபோது பல தமிழக ஊர்களில் இன்றும் காளையைக் கொண்டாடும் பசவன் திருவிழா நடப்பதாக அன்பர்கள் பலர் தகவல் தந்தார்கள். குறிப்பாக, அன்பர் செங்கோட்டை ஸ்ரீராம் தனது சொந்த ஊரில் நடக்கும் பசவன் கோலாட்டத் திருவிழாவை விடியோ எடுத்தே அனுப்பிவிட்டார்.
சோறு போடும் வயல் நமக்கு பூமாதா என்கிறது ஹிந்துத்துவம்; ஆரமுத பசு நமக்கு கோமாதா என்கிறது ஹிந்துத்துவம்; நீரமுத நதி நமக்கு கங்கை அம்மன் என்கிறது ஹிந்துத்துவம்; பாசத்துடன் நமை வளர்க்கும் இயற்கை நமக்கு அம்மா என்கிறது நமது ரத்தத்தில் ஊறிப் போன ஹிந்துத்துவம்; நமக்கு மனசாட்சியும் உண்டு.
சுயநலத்தால் அரசியல் பேசியோ, திராவிடம் பேசியோ, பிரிவினைவாதம் பேசியோ, மதச்சார்பின்மை பேசியோ நமது மனசாட்சியின் குரலுக்கு நாம் செவிசாய்க்காமல் இருந்தால் நஷ்டம் நமக்கல்ல, இயற்கைக்கு; அதாவது நமது நாளைய தலைமுறையின் சொத்துக்கு.
- காண்க: பத்திரிகைச் செய்தி
$$$
One thought on “வெண்ணெய் கைவசம் இருக்க நெய் தேடி அலையலாமா?”