-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்
11. குடும்பத்தின் பிற்கால நிலை
சிதம்பரம் பிள்ளை
அப்பால் சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள் தேசிகரிடம் விடை பெற்றுக்கொண்டு மாயூரத்திற்குப் புறப்படுகையில் தேசிகர் உசிதமாக அப்பொழுது செய்யவேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பினார். அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு மாயூரம் சென்று சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
சிதம்பரம் பிள்ளையினுடைய குடும்பம் வரவரப் பெருகிவிட்டமையினால் செலவு அதிகரிக்கவே குடும்பம் தளர்ச்சியை அடைந்தது. அதனை அவர் மடத்திற்குத் தெரிவிக்கவில்லை. வேதநாயகம் பிள்ளை அதனை அறிந்து அந்தத் துயரத்தை நீக்கியருள வேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகருக்கு ஐந்து பாடல்கள் எழுதியனுப்பினார். அவை வருமாறு:
(விருத்தம்) (1) "புயலிருக்குங் கரதலச்சுப் பிரமணிய வள்ளானின் புலவன் பன்னூல் இயலிருக்கு மீனாட்சி சுந்தரவேண் மைந்தனுறும் இடர்க ளெல்லாம் அயலிருக்கும் பலரானும் அறிவுற்றேன் பரிவுற்றேன் அவனுக் கிங்கே உயலிருக்குங் கயலிருக்கும் வயலிருக்கு மொன்றினைநீ உதவி னம்மா." [வயல் இருக்கும் ஒன்று - நெல். உதவின் உயலிருக்கு மென்க.] (கட்டளைக் கலித் துறை) (2) "கந்தனை நேர்சுப் பிரமணி யைய கவிஞரெலாம் வந்தனை செய்தற் குரியன் பெரியன்மண் வாழ்வைவிட்டென் சிந்தனை வாழ்பவன் மீனாட்சி சுந்தரச் செல்வனென்பான் மைந்தனை நிந்தனைப் பஞ்ச முறாவண்ணம் வாழ்வருளே." (3) "அருந்தவஞ் செய்த தவத்தாற் புவியி லவதரித்துப் பெருந்தவஞ் செய்சுப் பிரமணி யையநின் பிள்ளையிவன் வருந்து மிடிப்பிணிக் கோர்மருந் தின்றிமெய் வாடினனம் மருந்து விளையு மிடம்யா தெனினின் வளவயலே." (4) "பல்லார் புகழ்சுப் பிரமணி யையவிப் பாலனைத்தான் இல்லாமை யென்னு மதகரி பற்றி யிடுங்கடும்போர் வில்லா லடிப்பினுங் கல்லா லடிப்பினும் விட்டிலதால் நெல்லா லடிக்கும் படிநீ பலகலம் நீட்டுவையே." (5) "பாவிற் பெரியவன் மீனாட்சி சுந்தரப் பாவலனே தாவிற் பெரிய னவன்சேய் நினக்கதைத் தானுரைக்க நாவிற் பெரியவ னானென்சொற் கேட்டு நலம்புரியப் பூவிற் பெரியவ னீசுப்ர மண்ய புரவலனே." [தா - வருத்தம். பூ - பூமி.]
இவற்றைப் பார்த்த சுப்பிரமணிய தேசிகர், சிதம்பரம் பிள்ளையை வருவித்து அவருக்கு வேண்டிய அனுகூலங்களைச் செய்வித் தனுப்பினார்.
சிதம்பரம் பிள்ளைக்கு ஆங்கிலத்திலும் பயிற்சி உண்டு. அவர் சும்மா இருத்தலையறிந்த வேதநாயகம் பிள்ளை அங்கே டிப்டி கலெக்டராயிருந்த முருகேசம் பிள்ளை யென்பவரிடம் சொல்லி மாயூரந் தாலூகாவிலுள்ள கப்பூரென்னும் ஊரில் கணக்கு வேலை கிடைக்கும்படி செய்வித்தார். அவ்வேலையைப் பெற்றுக்கொண்டு அவர் வாழ்ந்திருப்பாராயினர். மேல் உத்தியோகஸ்தர்கள் பிள்ளையவர்களுடைய குமாரரென்பதை யறிந்து அவரிடம் பிரியமாக இருந்து பலவகையான அனுகூலங்களை அவருக்குச் செய்வித்து வந்தார்கள்.
சிதம்பரம் பிள்ளை அப்பொழுது அப்பொழுது தாம் வாங்கி வந்த கடன் மிகுதியால் தம்முடைய வீட்டை விற்றுக் கடன்காரர்களுக்குச் சேர்ப்பிக்க வேண்டிய தொகையைச் சேர்ப்பித்துவிட்டுப் பின் வாடகை வீட்டிற் குடியிருந்து வந்தனர்; அங்ஙனம் இருந்து வந்தமை அவர் குடும்பத்திற்கு மிகவும் அஸெளகரியமாக இருந்தது. அதனை யறிந்த நான் அவருக்கு இடவசதி செய்விக்க வேண்டுமென்று நினைந்து பிள்ளையவர்கள் மாணாக்கர்கள் பலரிடத்தும் அன்பர்கள் பலரிடத்தும் சொல்லியும் கடிதவாயிலாகத் தெரிவித்தும் வந்தேன். ஒருவரும் கவனிக்கவில்லை. அப்பால் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குப் பின்பு ஆதீனகர்த்தராக இருந்தவரும் அருங்கலை விநோதரும் கற்றவர் நற்றுணையுமாகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்கு, சில செய்யுட்களால் சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு வீடு வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று தெரிவித்துக்கொண்டேன். அச்செய்யுட்கள் வருமாறு :
(விருத்தம்) (1) "மாமேவு வடமொழிதென் மொழிவாணர் இசைவாணர் மகிழ்ந்து போற்றக் காமேவு பெருவண்மை மருவியவர்ப் புரக்குமருங் கலைவி நோத பாமேவு புகழுடையாய் ஆவடுதண் டுறையென்னும் பதியின் மேய கோமேவு விறன்மிகுமம் பலவாண தேசிகயான் கூறல் கேண்மோ" (2) "இனமளித்தற் கியலாமல் தனையடைந்த மாணாக்கர்க் கிரங்கி யென்றும் அனமளித்தும் தனமளித்தும் அரியபல நூலளித்தும் அவையா ராயும் மனமளித்தும் விளங்கியசீர் மீனாட்சி சுந்தரநா வலவர் கோமான் முனமளித்த அரும்புதல்வன் இடமின்றி வருந்துதலும் முறைமை யாமோ." (3) " வரமளிக்கும் வள்ளலஞ்சல் நாயகியோ டினிதமரும் மாயூ ரத்தில் தரமளிக்குந் தென்மறுகி னினதுதிரு மடத்தருகே சார்ந்த தாகத் திரமளிக்கும் வீடொன்று கட்டுவித்தே அவனிருக்கச் செய்வித் தாள்வாய் உரமளிக்கும் அடியவர்க்கு வீடளித்தல் நின்மரபிற் குரிய தன்றோ." [வள்ளலென்பது ஸ்ரீ மாயூரநாதரது திருநாமம்; அஞ்சலென்பது அம்பிகையின் திருநாமம்.]
இச்செய்யுட்களைப் பார்த்த உடனே அம்பலவாண தேசிகர் மனமிரங்கி மாயூரத்தில் தெற்கு வீதியின் வடசிறகில் மடத்திற்குச் சொந்தமாக இருந்த வீடொன்றைக் கொடுக்கும்படி அவ்வூரிலிருந்த காரியஸ்தருக்கு உத்தரவு அனுப்பியதன்றி அச்செய்தியை எனக்கும் தெரிவித்தார். அது தெரிந்து அளவற்ற சந்தோஷமடைந்து மனமுருகிப் பின்னே உள்ள செய்யுட்களை அவருக்கு எழுதியனுப்பினேன்:
(விருத்தம்) (1) "வான்பூத்த கயிலாய பரம்பரையிற் சயிலாதி மரபிற் றோன்றித் தேன்பூத்த சுவைபழுத்த தமிழ்மறையின் பொருளையனு தினமுந் தேர்ந்தே ஊன்பூத்த பவப்பிணியு மிடிப்பிணியு மடுத்தவருக் கொழித்துப் போதிக் கான்பூத்த நகர்வளரம் பலவாண தேவகடைக் கணிக்க வீதே." (சயிலாதி - திருநந்திதேவர். தமிழ்மறை - தேவாரம். போதிக் கான்பூத்த நகர் - திருவாவடுதுறை; போதிக்கான் - அரசவனம்.) (2) "இந்தமதி தனிலிருப தாந்தேதித் திருமுகமீண் டெய்தப் பெற்றேன் சந்தவரைக் குறுமுனியு மதித்திடுமா றொருமூன்று தலைச்சை லப்பால் வந்தபெருந் தமிழ்ச்செல்வன் மீனாட்சி சுந்தரநா வலவர் கோமான் மைந்தனுக்கு வசதியளித் திடலாதி தெரிந்துமிக மகிழ்வுற் றேனால்." (சந்தவரை - பொதியில் மலை. ஒரு மூன்றுதலைச் சைலம் - திரிசிரகிரி. வசதி - நல்லிடமாகிய வீடு.) (3) "அகத்தியனோ குறியனின தருங்கவிநா வலனெடியன் அவனோர் நூலே சகத்தினிடை நவின்றனன்மற் றதுவுமற்ற தென்பர்நினைச் சார்ந்தோன் யாரும் மிகத்துதிக்க வியற்றியவை பலவவையிந் நாண்மேன்மேல் விளங்குந் தென்றல் நகத்தினன்பன் னிருவர்க்கின் னவன்பலர்க்கா சானிவன்சீர் நவிலற் பாற்றோ." (ஓர் நூலென்றது அகத்தியத்தை. மற்று அதுவும் அற்றது என்பர். பல - பல நூல்கள். ஆசானென்பதைப் பன்னிருவர்க்கே ஆசான் என முன்னுங்கூட்டுக.) (4) "இன்னபெரு நாவலனின் மொழிப்படிநின் னிடைப்பலவாண் டிருந்தென் போல்வார்க் குன்னரிய பலநூலு முளங்கொளுமா றன்புடனன் குரைத்த லாலே என்னவருத் தமுமின்றி யிருக்கின்றே மவன்புதல்வற் கில்ல மீய நன்னரமை செயலில்லம் நினக்கன்றி யெவர்க்கிதனை நவிலு வேமால்." (ஆதீனகர்த்தர்களாக வந்த யாவரும் ஒருவரே எனக் கொள்வதும் முன்னவர் செயல்களைப் பின்னவர்க்கும் ஏற்றிச் சொல்லுதலும் மரபு. இல்லம் - வீடு. செயல் இல்லம் - நானும் என் போல்வாரும் உதவி செய்தற்குரிய சாதனங்கள் இல்லேம்.) (5) "பார்பூத்த பருதியென விளங்கியடுத் தவர் துயரம் பாற்றி யோங்கும் சீர்பூத்த துறைசையிலம் பலவாண தேசிகவிச் செய்தி தன்னைப் பேர்பூத்த பலர்க்கெழுதிக் கைசோர்ந்தேன் நாச்சோர்ந்தேன் பேசிப் பேசிக் கார்பூத்த கொடையமைநின் றிருமுகங்கண் டல்லலொரீஇக் களித்திட் டேனால்." (6) " நினையடைந்தோர்க் கொருகுறையு மிலையெனினு முளதொன்று நிகழ்த்து கென்னின் அனையனைய அன்புடைச்சுப் பிரமணிய குருமணிநின் அளவி லாற்றல் தனைநிகரில் கொடையினைக்கல் வியைமனோ தைரியத்தைச் சாந்தந் தன்னை இனையபல வற்றையிவ ணிருந்துணர்ந்து மகிழ்ந்திலனே என்ப தாமால்." (7) "என்னமொழிந் திடினுமெனக் காராமை மீக்கூரும் ஈது நிற்க முன்னடைந்தோர் தமைப்பிரம ராக்கிமறைப் பொருள்பலவும் மொழிந்தே பின்னர் அன்னவரை மாலாக்கி உடன்பீதாம் பரதரர்கள் ஆக்கி நீசெய் இன்னபரி சாதிகளைக் கலியாண சுந்தரன்வந் தியம்பி னானால்." (பிரமர் - மயக்கமுடையவர், பிரமதேவர். மறைப்பொருள் - தேவாரப் பொருள், வேதத்தின் பொருள். மாலாக்கி - மயக்கமுடையவராகச் செய்து, திருமாலாக்கி. பீதாம்பரம் – பொன்னாடை; திருமாலுக்குப் பொன்னாடை உரியது. கலியாணசுந்தரன்: என் குமாரன்.) (8) "மந்தரமா ளிகைவீதித் துறைசையிலம் பலவாண வள்ள லேவான் கந்தரநே ரருண்மிகுசுப் பிரமணிய குருமணியாற் கவின்மீனாட்சி சுந்தரநா வலன்கவலை யிலனானா னனையவன்பிற் றோன்ற லாகி வந்தமைநீ யவன்புதல்வன் றனைக்காத்தல் வழக்குன்சீர் வாழ்க மாதோ."
அப்பால் நகரவைசியச் செல்வராகிய வீரப்ப செட்டியாரென்பவர் ஸ்ரீ மாயூரநாதர் கோயில் திருப்பணிக்குக் கொணர்ந்த பொருள்களை சிதம்பரம் பிள்ளைக்குக் கொடுக்கக் கருதியிருந்த வீட்டில் நிரப்பிவிட்டதனால் அந்த வீடு அவருக்குப் பயன்படாமற் போயிற்று.
குடும்பத்துக்கு உதவி
கும்பகோணம் காலேஜில் நான் வேலைபார்க்கத் தொடங்கியது முதல் அவ்வப்போது என்னால் இயன்ற உதவிகளை அக்குடும்பத்துக்குச் செய்துவந்ததுண்டு. நிலையான தொகை ஒன்று இருந்தால் அக் குடும்பத்திற்கு அனுகூலமாக இருக்குமென்று நினைத்து அது விஷயத்தில் முயற்சி செய்ய எண்ணினேன். 1915-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் பூவாளூர்ச் சைவ சித்தாந்த ஸபைக்கு நான் போய்வர நேர்ந்தது. அங்ஙனம் போயிருந்தபொழுது அவ்வூரில் பிள்ளையவர்களுடைய பெருமையை நன்றாக அறிந்த தனவைசியச் செல்வர்கள் அக்காலத்தில் இருந்தனராதலின் அவர்கள் முன்னிலையில் என்னுடைய கருத்தை வெளியிட்டேன்.
அந்த ஸபைக்கு வந்திருந்த சேற்றூர்ச் சமஸ்தான வித்துவான் ஸ்ரீமான் மு.ரா.கந்தசாமிக் கவிராயரவர்களும், மகிபாலன்பட்டி, பண்டிதமணி ஸ்ரீமான் மு.கதிரேசச் செட்டியாரவர்களும் அதனை ஆமோதித்துப் பேசினார்கள். ஸபைக்கு வந்திருந்த கனவான்கள் கேட்டு அங்கீகரித்து உடனே 250 ரூபாய் வரையில் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தார்கள். என்னுடைய விருப்பத்தின்படி இக்காரியத்தை நிறைவேற்றுதற்குரிய முயற்சியைக் கவிராயரவர்களும் செட்டியாரவர்களும் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டாருக்கு ஒரு வேண்டுகோளை அச்சிட்டு அனுப்பினார்கள். பின்பு மேலைச்சிவபுரி முதலிய ஊர்களிலிருந்த கனவான்களிடமிருந்தும் பூவாளூரிலிருந்தும் வேறு வகையிலும் ரூபாய் ஆயிரத்துக்குச் சிறிது மேற்பட்ட தொகை கிடைத்திருப்பதாக அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். 1916-ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் இங்ஙனம் சேர்ந்த அந்தத் தொகை திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த பாஸ்கர விலாஸத்திற் கூட்டப்பெற்ற ஒரு மகா ஸபையில் சிதம்பரம் பிள்ளைக்கு எங்கள் விருப்பத்தின்படி ஸ்ரீ அம்பலவாண தேசிகரால் வழங்கப்பெற்றது. அவர் அதனைப் பெற்று அந்தத் தொகையின் வட்டியினாலும் வேலையிற் கிடைக்கும் வரும்படியினாலும் சுகமாக வாழ்ந்துவந்தனர்.
குடும்பத்தின் பிந்திய வரலாறு
சிதம்பரம் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவர்களுள் முதல்வரும் மூன்றாம் புதல்வரும் அக்காலத்தில் இறந்துவிட்டனர். இரண்டாங் குமாரருக்கு வைத்தியநாதசாமி பிள்ளை யென்று பெயர். தம் தந்தையார் பார்த்து வந்த கப்பூர்க் கணக்கு வேலையை அவர் பார்த்துக்கொண்டு இப்பொழுது சௌக்கியமாக இருந்து வருகின்றனர். அவரை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. “உமக்கு ஆண் குழந்தை பிறந்தால் அக் குழந்தைக்குப் பிள்ளையவர்களுடைய பெயரை வைக்க வேண்டும்” என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன்.
பின் ஒருமுறை அவரைக் கண்டபொழுது தமக்கு ஒரு குமாரன் பிறந்திருப்பதாகவும் அவனுக்கு மீனாட்சி சுந்தரமென்று பெயர் வைத்திருப்பதாகவும் சொன்னார். நான் அதனை அறிந்து மகிழ்ந்தேன். அவர் அடிக்கடி திருவாவடுதுறைக்கு வந்து இப்பொழுது ஆதீனகர்த்தர்களாக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்களைத் தரிசனம் செய்துகொண்டு போவார். அவர்களும் அவர்பால் மிக்க அன்புடையவர்களாகி விசேஷ தினங்களில் வஸ்திரம் முதலியன அளித்து ஆதரித்துவருகிறார்கள்.
சில வருஷங்களுக்கு முன்பு நான் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர்களைப் பார்க்கச் சென்றிருந்தபொழுது வைத்தியநாதசாமி பிள்ளை தம்முடைய குமாரனுடன் அங்கே வந்திருந்தார்; “இவன் தான் என்னுடைய குமாரன்” என்று அவர் சொன்னார். அப்பொழுது அவனுக்குப் பத்துப்பிராயம் இருக்கும். அவனைப் பார்த்து, “உன்னுடைய பெயரென்ன?” என்று கேட்டேன். அவன், “மீனாட்சிசுந்தரம்” என்று தைரியமாகச் சொன்னான். அந்தப் பெயரை அவன் கூறியபொழுது எனக்குப் பழைய ஞாபகங்களெல்லாம் வந்து இன்பமளித்தன. “தமிழ் வாசிக்கிறாயா?” என்றேன். “வாசித்து வருகிறேன்” என்றான். “ஏதாவது ஒரு பாடலைச் சொல்” என்றபோது ஒரு பாட்டை நன்றாகச் சொன்னான். பின்பு, “புதிதாக ஒரு பாட்டைப் பாடித் தந்தால் பாடம் பண்ணிக்கொண்டு தைரியமாக ஸந்நிதானத்திடம் சொல்வாயா?” என்று நான் கேட்கவே, “நன்றாகச் சொல்லுவேன்” என்று அவன் சொன்னான். அவனுடைய தைரியத்தைப் பாராட்டியதன்றி,
(கட்டளைக் கலித்துறை) "படிதாங்கு சேடனும் கூறற் கருநின்றன் பாக்கியத்தை மிடிதாங்கு சிற்றடி யேனோ வறிந்து விளம்புவனின் அடிதாங்கி வாழ வருள்திதென் கோமுத்தி யாந்தலத்தெம் குடிதாங்கி வாழும் வயித்திய லிங்க குருமணியே "
என்ற செய்யுளைச் செய்து கொடுத்துப் பாடம் பண்ணச் சொல்லி ஆதீனகர்த்தரவர்களிடம் அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு வந்தனம் செய்து திருநீறு பெற்றுக் கொண்டான். பின்பு பாட்டை விண்ணப்பிக்கச் செய்தேன். அவன் மிகவும் தைரியமாகவே அந்தச் செய்யுளைச் சொன்னான்; சொல்லும் பொழுது எங்கெங்கே எப்படி எப்படி நிறுத்திச் சொல்ல வேண்டுமோ அங்கங்கே அப்படி அப்படியே நிறுத்தி அந்தப் பாடலைச் சொன்னான். கேட்ட தேசிகரவர்கள் மகிழ்ந்து பின்னும் இரண்டுமுறை அதனைச் சொல்லச் செய்து கேட்டார்கள்; “மேலும் மேலும் படித்து வா. அடிக்கடி இங்கே வந்து போ” என்று பேரன்புடன் கட்டளையிட்டதோடு பொருளும் வஸ்திரமும் அளித்து அனுப்பினார்கள்.
அவனுக்கு இப்பொழுது பதின்மூன்று பிராயம் இருக்கும். அவனைக் காணும் பொழுதெல்லாம், “பிள்ளையவர்கள் பரம்பரையிற் பிறந்த உனக்குத் தமிழில் இயல்பாகவே அறிவு விருத்தியாகும். ஊக்கத்தோடு படித்து வந்தால் சிறந்த பயனை அடைவாய். தமிழ் நாட்டாருடைய அன்புக்கும் பாத்திரனாவாய்” என்று கூறிக்கொண்டு வருகிறேன்; அவனும் படித்துக்கொண்டு வருகிறான். தமிழ்த் தெய்வத்தின் திருவருளும், தமிழ்நாட்டாருடைய பேரன்பும் அக் குடும்பத்தினருக்கு என்றும் இருந்துவர வேண்டுமென்பதே எனது வேணவாவாகும். இறைவன் திருவருள் அங்ஙனமே செய்விக்குமென எண்ணுகிறேன்.
சுபம்.
$$$