-திருநின்றவூர் ரவிகுமார்
‘மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது’ நூல் நமது தள வாசகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானது தான். இந்நூல் குறித்த கண்ணோட்டத்தை இங்கு பதிவு செய்கிறார், தளத்தின் ஆசிரியர் குழு உறுப்பினர் திரு. திருநின்றவூர் ரவிகுமார்...

ஹிட்லருடைய அமைச்சர் கோயபல்ஸ் உலகுக்கு ஒரு புதிய கருத்தைக் கொடுத்தான். பொய்யை மீண்டும் மீண்டும் சொன்னால் சமுதாயம் அதை உண்மை என்று நம்பிவிடும். உறுதியாகப் பிடித்துக் கொள்ளும். அதில் தேர்ந்தவர்கள் திராவிட அரசியல் கட்சிகள், குறிப்பாக திமுக.
பாஜக பண்டார பரதேசிகளின் கட்சி என்பார்கள். வாய்ப்புக் கிடைத்தவுடன் வாஜ்பாயின் அமைச்சரவையில் பதவிகளைப் பெற்றுக் கொள்வார்கள். கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸ் கட்சியைப் பேசுவார்கள். ஆனால் காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சர் பதவியில் அமர்ந்து விடுவார்கள். பிற்போக்காக இருந்தும் இவர்கள் வெற்றி பெற காரணம் மக்களின் மறதி.
இப்போது அந்த கோயபல்ஸ் கூட்டத்தினரின் புதிய இலக்கு நரேந்திர மோடி. அவர் திருக்குறளை கூட்டத்தில் சொன்னால் போதுமா, தமிழுக்கு தமிழருக்கு என்ன செய்தார் என்று, பார்த்தும் கூட திருக்குறளை சரியாகச் சொல்லத் தெரியாதவர்கள் கேட்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்கிறது திரு. சின்னப்பா கணேசனின் ‘மோடியின் தமிழகம்’ நூல்.
இடிலுள்ள 27 கட்டுரைகள் ஒவ்வொன்றும் திராவிட வீணர்களை வீழ்த்தும் குத்தீட்டிகள். திராவிட பகைப்புலத்தில் மோடியின் செயல்களை முன்னிறுத்துவதே கட்டுரைகளின் சிறப்பு.
விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்வதில் கில்லாடிகளான இவர்களுக்கு சரியான தடைக்கல்லாக உள்ளது மோடியின் ஆட்சி. மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவித்தொகையை நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வருகிறது. ஊழலுக்கு வாய்ப்பு இல்லை என்று நினைத்தால், திராவிடக் கட்சியினர் போலிப் பெயர்களில் பணத்தைக் கொள்ளையிட்டனர். ஆனால், மத்திய அரசு 11 லட்சத்து 64 ஆயிரம் கோடி போலி விவசாயிகளைக் கண்டுபிடித்து விட்டது. ஊழலுக்குத் துணை போன 8 அதிகாரிகள் மீது நடவடிக்கை. எல்லாவற்றுக்கும் மேலாக முறைகேடாக பட்டுவாடா செய்யப்பட்ட 182.8 கோடி ரூபாயை மீட்டும் விட்டது. இதை இந்த புத்தகம் வெளிப்படுத்துகிறது.
இந்தியாவில் எந்தப் பகுதியிலும் சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்டாட 144 தடை உத்தரவு பிறப்பித்தது கிடையாது. திப்பு சுல்தானுக்கு மட்டும்தான் அது. மைசூர் பகுதியில் வாழும் முஸ்லிம்கள் கூட தங்கள் குழந்தைகளுக்கு திப்பு என்று பெயரிட விரும்பாத கொடுங்கோலன் திப்பு சுல்தானை சுதந்திரப் போராட்ட வீரன் என்கிறார்கள் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் திமுகவினர். 1998 கோவை குண்டுவெடிப்பில் தண்டனை பெற்றவர்களைக் காப்பாற்றத் துடிக்கிறது திமுக. இப்பொழுது கோவையில் முயற்சிக்கப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை ‘சிலிண்டர் வெடிப்பு’ என்று மடை மாற்ற முயற்சிக்கிறது. இதுபோன்ற தேச விரோதச் செயல்களுக்குத் துணை போகும் திமுகவை வெங்காயத் தோலை உரிப்பது போல உரித்து சாம்பார் வைக்கும் அண்ணாமலையைப் பாராட்டுகிறது இந்த நூல்.
1911 ஜூன் மாதம் வெள்ளைய கொடுங்கோலன் ஆஷைச் சுட்டுக்கொன்ற வீரவாஞ்சியின் தியாகத்தை சுட்டிக்காட்டி அதே காலத்தில் திராவிடத் தந்தை ஈவெரா உல்லாசமாக வாழ்ந்ததையும் ஒப்பிடுகிறது. ‘வெள்ளையன் வெளியேறக் கூடாது; சுதந்திரம் வேண்டாம்’ என்ற அவரது தீர்மானத்தை சுட்டிக்காட்டி திராவிட மாயையினை அம்பலப்படுத்துகிறது இந்த நூல்.
பல புதிய தகவல்களையும் சொல்கிறது, மறைக்கப்பட்டதையும் சொல்கிறது இந்த நூல். உதாரணமாக அரசே சாராயம் விற்கும் இன்றும்கூட, பூரண மதுவிலக்கு உள்ள கிராமமாக குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் அருகில் உள்ள தோப்பூர் கிராமம் இருக்கிறது என்ற தகவல். மோடி அரசின் மீனவர் நலத் திட்டங்களைச் சொல்லும்போது, சாதாரணமாக இருந்த மீனவர் வாழ்வில் நவீன எந்திரப் படகுகளை அறிமுகப்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்திய காமராஜர் அரசாவையில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த காங்கிரஸ் காரர்களே சொல்ல மறந்த / மறைத்த லூர்தம்மாள் சைமனைப் பற்றிச் சொல்கிறது.
கோதாவரி- காவிரி இணைப்பு திட்டத்திற்கு தமிழக அரசு தர வேண்டியது ரூ. 2,100 கோடி. அந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் தராத ஸ்டாலின் ஆட்சி சென்னையில் நான்கு பூங்காக்களை மேம்படுத்த ரூ. 2,500 கோடி ஒதுக்கி உள்ளது. இதுவா விடியல் ஆட்சி என்று கேள்வி எழுப்புகிறது இந்த நூல்.
பிரதமர் மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் எப்போதும் பல நல்ல விஷயங்களை சுவாரஸ்யமாக மக்களுக்கு அறிமுகம் செய்வார். அதில் தமிழகம் பற்றியும் தமிழ் பற்றியும் சாதனைகள் புரிந்த தமிழர்களைப் பற்றியும் கூறியவற்றை தொகுத்துச் சொல்கிறது இன்னொரு கட்டுரை.
காந்தி கம்யூனிஸ்ட் தலைவர் சி.பி.ஜோஷிக்கு 1944 ஜூன் 11-ஆம் தேதி எழுதிய கடிதத்தில் எழுப்பிய ஐந்து கேள்விகளை சுட்டிக்காட்டி இன்றும் அது பொருத்தமாக இருப்பதைக் கூறி கம்யூனிஸ்டுகளைத் தோலுரிக்கிறது மற்றொரு கட்டுரை.
இவ்வளவு செய்தும் சொல்லியும் தமிழக மக்கள் பாஜகவுக்கு ஆதரவு தரவில்லையே என்று வருந்துவது இயல்பு. மனமுடைந்து போக வேண்டாம் என மூங்கில் வளர்ப்பை சுட்டிக்காட்டி ஆறுதலும் சொல்கிறது. மூங்கிலை நீர் பாய்ச்சி பாதுகாப்பாக பராமரித்தாலும் நான்கைந்து ஆண்டுகளுக்கு மூச்சே விடாது. அதன்பிறகு அது விடுவிடு என 150 அடி உயரம் வரை வளரும். அதுபோல தமிழகத்தில் பாஜக. ஆனால் ‘பெரியார் மண்’ணைப் பிளந்து வெளிப்படும் காலம் இது.
பாஜக ஆட்சி தமிழகத்திற்குச் செய்தது என்ன என்று தெரிந்துகொள்ள அனைவரும் படிக்க வேண்டிய நூல் இது. பாஜக தொண்டர்கள் அவசியம் படிக்க வேண்டும்.
- காண்க: மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது– நூல் மதிப்புரை
நூல் குறித்த விவரங்கள்: மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது சின்னப்பா கணேசன் 368 பக்கங்கள், விலை: ரூ. 350- (கெட்டி அட்டையுடன்: ரூ. 450-) வெளியீடு: சோழன் பதிப்பகம், எண்: 3இ, மூன்றாவது தளம், சாய் சூர்யா அடுக்ககம், காமகோடி நகர், சென்னை- 600 100 கைப்பேசி எண்கள்: 90923 45641, 97899 65475
$$$