-குரு.சிவகுமார்
மத்திய கல்வி அமைச்சகத்தின் ஏற்பாட்டில் வாராணசியில், நவம்பர் 17-இல் தொடங்கி ‘காசி தமிழ் சங்கமம்’ டிசம்பர் 16 வரை தொடர்ந்து கலாச்சார பரிமாற்ற விழாவாக நடைபெற்றது. காசியையும் தமிழகத்தையும் இணைக்கும் பாரம்பரிய வேர்களை நினைவுறுத்தும் இந்த அற்புதமான நிகழ்வில் பங்கேற்க தமிழகத்திலிருந்து எழுத்தாளர்கள் பலர் சென்று வந்தனர். இந்த நிகழ்வில் பங்கேற்ற ‘விஜயபாரதம்’ வார இதழின் முன்னாள் ஆசிரியரும், ஜோதிட வல்லுநருமான திரு. ஸ்ரீதரம் கு.சிவகுமார் அவர்களின் அனுபவப் பகிர்தல் இது….

இடம்: திரிவேணி சங்கமம், பிரயாகை.
சப்த ரிஷிகள், சப்த கன்னிகள், சப்த ஸ்வரங்கள் போன்று கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதி, சிந்து, காவேரி என ஏழு புண்ணிய நதிகளைப் போற்றுகிறோம்.
ஏழு சகோதரிகள் என்று தேசத்தின் வடகிழக்குப் பகுதி மாநிலங்களக் குறிப்பிடுகிறோம்.
தேசத்தின் மேற்கில் அமைந்துள்ள சோமநாத் ஆலயம். வடக்கில் கயிலை ஈசனின் உறைவிடம். தெற்கில் கன்யாகுமரி எனும் பார்வதி தேவி தவமியற்றும் தலம். இதற்கிடையில் நாடெங்கும் நாடிச் செல்ல வேண்டிய எண்ணற்ற புண்ணிய திருத்தலங்கள் உள்ளன. சைவத் தலங்கள், சக்தி பீடங்கள், வைணவ திவ்ய ஷேத்திரங்கள், காணாபத்யத் தலங்கள், கௌமாரக் கோயில்கள், சௌரம் புகழ் போற்றும் தலங்கள் என அறுசமயம் எனும் ஷண்மதங்களைப் போற்றும் பாரத தேசத்தில், காசியையும் ராமேஸ்வரத்தையும் தங்கள் வாழ்நாளில் தரிசித்தால்தான் நமக்கும் நம் முன்னோர்களுக்கும் முக்தி கிடைக்கும் என்ற நம்பிக்கையுள்ள மக்கள் வாழும் தேசம் இது.
எண்ணற்ற மொழிகள். ஒவ்வொன்றும் இலக்கணம், இலக்கியத் தொன்மை வாய்ந்தவை. அவற்றின் பாடல்கள், நடனங்கள் , ஓவியங்கள், சிற்பங்கள் என்ற மனதை மென்மையாக்கும் கலைகள் வளர்த்த நாடு இது.
உணவில் மாற்றங்கள் இருந்தாலும் அங்கங்கு விளையும் தானியங்களால் ஆரோக்யம் காத்தவர்களின் தேசம் இது.
உடையிலும், அதை அணிவதிலும் பல்வேறு சம்பிரதாயங்களைக் கொண்ட பிரதேசங்கள் அடங்கிய பாரத மணித்திருநாடு இது.
செப்புமொழி பதினெட்டுடையாள் - எனில் சிந்தனை ஒன்றுடையாள்
என பாரத தேவியை போற்றிப் பாடிய மஹாகவி பாரதி – தமிழகத்தின் பொருணை (தாமிரபரணி) நதியை அருந்தி, தமிழ்ப் பாக்களால் பாமாலை அளித்தவன். அவனுக்கும் முன்னரே முனி அகத்தியன், ஔவைப் பிராட்டி, கம்பன், அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார், தமிழ்ச்சங்க புலவர்கள், ஸ்ரீலஸ்ரீ குமரகுருபரர் போன்றோர் உண்டு. காளமேகப் புலவர், கவியோகி சுத்தாநந்த பாரதியார்,கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, கவியரசு கண்ணதாசன், ஜெயகாந்தன் முதற்கொண்டு இலக்கியத்தை, தமிழை மூச்சாகக் கொண்ட கவிஞர்கள், படைப்பாளர்கள் இன்றும் ஏராளமானவர்கள் உண்டு.
தமிழையும் சம்ஸ்கிருதத்தையும் ஒன்றெனப் போற்றிப் புகழ்ந்தவர்களின் நாடு இது.
‘தேசத்தைக் காத்தல் செய்’ என்ற அமர வாக்கியத்தை மனதிலிருத்திய தியாகசீலர்களும் அறிஞர்களும், தன் வீட்டைப்போல நாட்டைக் காத்த பெண்ணரசிகளும், ஹிந்து மஹா சமுத்திரம் முதல் பனி நிறைந்த காஷ்மீர் வரை உண்டு.
ராமசேது அமைக்க தன் சக்திக்கேற்ப தொண்டாற்றிய அணிலைப்போல பாரத தேவியின் பொற்பாதங்களில் தங்களை சமப்பித்தவர்கள் ஏராளமானவர்கள் உண்டு.
தேசியமும் தெய்வீகமும் இருகண்களாக பாவித்த மானுடதேவர்கள் நாடு முழுவதும் உண்டு.
கங்கைக்கரை ராமனுக்கு ராமேஸ்வர மண்ணு தெய்வம்! செங்குட்டுவ சேரனுக்கு இமயமலைக் கல்லு தெய்வம்!
என்று பேதங்கள் இன்றிப் போற்றி வாழும் பக்திமான்கள் தேசம் முழுவதும் உண்டு.
தனது உழைப்பை, அறிவை நாட்டுக்கு மட்டுமே அர்ப்பணித்த சேவகர்களாக வாழும் புண்ணியாத்மாக்கள் எங்கும் நிறைந்த ராஷ்ட்ரம் இது.

அயோத்தியில் ராம்லல்லா தரிசனம்

கட்டுமான தளத்தில்…
நாம் இந்த பரந்து விரிந்த பாரத மண்ணில் பிறந்ததே பேறு என்பதை உணர்வோம்.
சென்னை ஐ.ஐ.டி.யும் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்படுத்திய காசி தமிழ்ச் சங்கமத்தில் ஒன்றெனக் கரைந்த நாமெல்லாம் பூர்வ ஜென்மத்தில் புண்ணியம் செய்தவர்கள்.
மாற்றுச் சிந்தனையாளர்களும், வேறு வழிபாட்டைக் கொண்டவர்களும் இணைந்தே, பாரதியர்களாகப் பயணித்த அந்த மகத்தான நிகழ்வுகளை மறக்க முடியுமா?
நாம் அனைவரும் தமிழ்மூச்சால் சுவாசித்தோம்.
வழியெங்கும் வரவேற்ற சகோதர பாஷைகளின் காற்றையும் நேசித்தோம்.
இணைந்தே தேசிய சந்தனத்தைப் பூசி மகிழ்ந்தோம்.
வேறுபாடு இல்லை… வெறுப்பு இல்லை.
மொழிவெறி இல்லை… பேதங்கள் இல்லை.
பிரிவினைக் கூச்சல்கள் எங்குமே இல்லை.
எங்கெங்கும் ஒலித்தது-
பாரத அன்னைக்கு வணக்கம் – வந்தே மாதரம்!
பாரத அன்னை வெல்க – பாரத் மாதா கி ஜெய்!
இந்தக் கோஷம் மட்டும்தான் எங்கும் ஒலித்தது.
நம்மைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்ற ஐஆர்சிடிசி ஊழியர்கள், மத்திய அரசு அதிகாரிகள், உள்ளூர் காவலதிகாரிகள், மாவட்ட ஆட்சியர், அங்கங்கு வந்து வாழ்த்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் , ஆளுநர்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், வாகன ஓட்டிகள், படகோட்டிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்த தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்போம்.
உலக நாடுகள் இப்போது பாரதத்தைத் தலைமையேற்க அழைக்கும்போது, நமது தேசத்தின் பெருமைகளை அறிய பிற நாட்டினர் விரும்பி வருகின்றபோது, நாம் பெருமிதம் கொண்டு, நமது நாட்டைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமல்லவா?
இனி, நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பற்றி சிந்திப்போம்.
ஒன்று…
தேசத்தின் பல இடங்களிலும் உள்ள ஆலயங்கள், வரலாற்றுத் தலங்கள், சுதந்திரப் போராட்ட புண்ணியத் தலங்களைத் தரிசிக்க வேண்டும். இதன்மூலம் சுற்றுலாத் தலங்கள் வளரும். அந்தந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருகும்.
இரண்டு…
அந்தந்தப் பிரதேச மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் அன்பைப் பெறுவோம். கலாசாரப் பெருமைகளைப் புரிந்துகொள்வோம். அங்கங்கு வாழ்ந்த ஞானிகள், வீரர்கள், தியாகிகள், சிற்பிகள், ஓவியர்கள், பெண்ணரசிகள் ஆகியோர்களை தெரிந்து பெருமிதம் கொள்வோம்.
மூன்று…
அந்நியர்களின் ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட துன்பங்களை உணர்ந்து ஒற்றுமை பேணுவோம். பிற மாநில பாரதியர்களை தமிழகம் காண அழைப்போம். பாரதத்தின் அனைத்து அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட தமிழகத்தைக் காட்டுவோம். மனம் நிறைவுபெறும் வகையில் நமது விருந்தினர்களாக உபசரிப்போம்.
இதனை, இதனை மட்டுமே நமது பாரத பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்கள் விரும்புகிறார்கள். அதனை நாமனைவரும் நிறைவேற்றுவோம்.

மேலும்,
அயோத்தி ராமனின் பாதம் பதிந்த தமிழகத் தலங்களைத் தரிசிப்போம். இதிகாசப் புராணங்களின் தடங்களை ஆய்வு செய்வோம்.
இமயம் முதல் குமரி வரை உறவை வளப்படுத்துவோம்.
கங்கையில் நீராடியதால் புண்ணியம் எய்தினோம்.
திரிவேணி சங்கமத்தில் மூழ்கி எழுந்ததால் புனிதர்கள் ஆனோம்.
ஆகவே நாம், முனிவர் வால்மீகியையும் கவிச் சக்கிரவர்த்தி கம்ப நாட்டானையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும்.
தேசம் விடுதலையாகிட, தன்னையே தியாக வேள்வியில் ஆகுதியாக்கிய முகமறியாத தேசபக்தர்களை அறிந்து போற்ற வேண்டும்.
ஸ்ரீராமன் அவதரித்த அயோத்தியிலும், அவனது குலதெய்வம் அமைந்த ஸ்ரீரங்கத்திலும் ஆய்வரங்கங்கம் அமைக்க வேண்டும்.
பன்மொழி கலை, இலக்கியப் பண்பாட்டு மையங்களை அமைப்போம். பாரத மொழியினருக்கு தமிழகத்தில் விழா எடுப்போம்.
பாரதி பாடித் திரிந்த ஊர்களைக் கண்டு, அவன் புகழைப் பரப்புவோம்.
கங்கையையும் காவிரியையும் இணைப்பதைப் போல, இதயங்களை நேசத்தால் இணைப்போம்.
தேசம் ஒன்று என உரக்கச் சொல்வோம்!
இதனை, இதனை மட்டுமே நமது பாரதப் பிரதமர் நரேந்திர தாமோதர்தாஸ் மோதி அவர்கள் விரும்புகின்றார். நாமும் அதனை நிறைவேற்ற வேண்டும்.
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க! நன்மைவந் தெய்துக! தீதெலாம் நலிக! அறம்வளர்ந் திடுக! மறம்மடி வுறுக! ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும் சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக! நந்தே யத்தினர் நாடொறும் உயர்க! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! -மகாகவி பாரதி
என்றும் தேசப்பணியில்,
ஸ்ரீதரம் குரு.சிவகுமார்
95662 22468
$$$
அற்புதமான கட்டுரை.
தமிழும் ஆன்மீகமும் புண்ணிய பாரதப் பெருமையும் பொலியும் சிந்தனை.
LikeLike