-சேக்கிழான்

முன்னாள் பத்திரிகையாளரும் திரைப்பட இணை இயக்குநருமான திரு. சின்னப்பா கணேசன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், தமிழகத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும் மோடி எதிர்ப்பு மாய பிம்பத்தை சுக்குநூறாக உடைக்கிறது. தமிழகத்திற்கு மோடி அளிக்கும் முக்கியத்துவத்தையும், தமிழின்பால் அவருக்குள்ள அன்பையும் பிரமாதமாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர்.
கவியரசு கண்ணதாசனின் எழுத்துநடையை ஒட்டிய சின்ன வாக்கியங்கள், சிறிய பத்திகள்; சுற்றி வளைக்காத சாதாரணமான எளிய உரையாடல் விளக்கங்கள்; பலரும் அறியாத முக்கியமான அடிப்படைத் தரவுகள்; படிக்கத் தூண்டும் சரித்திர நிகழ்வுகள்; நரேந்திர மோடியின் தமிழ் தொடர்பான மேற்கோள்கள் – இவை அனைத்தையும் பக்குவமாக இணைத்திருக்கும் பாங்கு என நல்ல அறுசுவை உணவு போலப் படைக்கப்பட்டிருகிறது இந்நூல்.
பாஜக மாநிலத் தலைவர் திரு. கே.அண்ணாமலை ஐ.பி.எஸ். இந்நூலுக்கு அணிந்துரை வழங்கி இருக்கிறார். பாஜகவினர் இந்நூலைப் படித்தால் போதும், பொதுக்கூட்டங்களில் எளிதாகப் பேச முடியும். அந்த அளவுக்கு பல புள்ளிவிவரங்களை இந்த நூலில் 27 கட்டுரைகளாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.
குறுகிய காலத்தில் தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி; செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் தேசிய அளவில் இரண்டாமிடம் வகிப்பது தமிழகம் (ரூ. 14,329 கோடி); சென்ற ஆண்டு வழங்கப்பட்ட நூறு பத்ம விருதுகளில் தமிழர்கள் பெற்றவை 12; சென்ற நிதியாண்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதி ரூ. 8 லட்சம் கோடி; பிரதமரின் விவசாய கௌரவ நிதி பெறுவோரில் 37 லட்சம் பேர் தமிழக விவசாயிகள்; யூரியா உரம் கடத்தலைத் தடுக்க அதில் வேப்பெண்ணெய் கலந்த மத்திய அரசு – இதுபோன்ற தகவல்கள் பலர் அறியாதவை.
ஒவ்வொரு கட்டுரையும் நாம் அறிய வேண்டிய சரித்திர நாயகரை அறிமுகப்படுத்துவதாகத் தொடங்குவதை ஓர் உத்தியாகவே நூலாசிரியர் கடைபிடித்திருக்கிறார். உதாரணமாக, வ.உ.சி.யின் சுதேசிக் கப்பலும் ‘மோடி மீட்டெடெடுத்த சிவகாசி பட்டாசும்’ (கட்டுரை-18), ‘ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளையும் மோடியின் கரோனா தடுப்பூசியும்’ (கட்டுரை- 20), வீரமங்கை வேலு நாச்சியாரும் மோடியின் 11 மருத்துவக் கல்லூரிகளும்’ (கட்டுரை- 6) போன்ற கட்டுரைகளைக் கூறலாம்.
சுதேசிக் கப்பல் கம்பெனிக்காக வ.உ.சி. பட்ட துயரங்களை பட்டியலிடும் நூலாசிரியர், அதை மீறி தேசபக்தியுடன் அவர் இயங்கியதை எழுதிவிட்டு, சிவகாசி பட்டாசுத் தொழிலைக் காக்க மோடி அரசு மேற்கொண்ட முயற்சிகளை கட்டுரையின் பிற்பகுதியில் லாவகமாக இணைக்கிறார். ஜெய்ஹிந்த் செண்பகராமனின் வரலாற்றைக் கூறுகையில், சட்டசபையில் ‘ஜெய்ஹிந்த்’ மந்திரத்தை கேவலப்படுத்திய திமுக கூட்டணிக் கட்சியைச் சாடுகிறார். காமராஜர் அமைச்சரவையில் திறம்படச் செயல்பட்ட அமைச்சர் லூர்தம்மாள் சைமனைப் பற்றிக் கூறிவிட்டு, தமிழக மீணவர்களுக்கு மோடி அரசு செய்யும் அரும்பணிகளைக் குறிப்பிடுகிறார்.
ஜல்லிக்கட்டுக்குத் தடை விதிக்க யார் காரணம், அதை எவ்வாறு மோடி அரசு சரிப்படுத்தியது; தேவேந்திரகுல வேளாளர்கள் எவ்வாறு மோடி பக்தர்களாக மாறினார்கள், அதை தமிழக கட்சிகள் எப்படி தவறாகக் கையாண்டன; தமிழகத்தில் பேசப்படும் சமூகநீதி என்ற போலி கோஷத்தை மிகவும் சாதாரணமாக, எல்.முருகனை மத்திய அமைச்சராக்கி நிர்மூலமாக்கிய மோடியின் சிறப்பு; ஹிட்லரின் கோயபல்ஸ் பிரசாரம் போல தமிழகத்தில் மோடிக்கு எதிராகச் செய்யப்பட்ட பிரசாரத்தின் கெடுதியான பலன்; தகுதியான மாணவர்கள் மட்டும் மருத்துவம் படிக்க வழிவகை செய்யும் நீட் தேர்வு என்பதற்கு தனது வாழ்விலிருந்தே உதாரணம் காட்டும் துணிவு; ஈழத்தமிழர்களுக்கு 60 ஆயிரம் வீடுகளைக் கட்டிக் கொடுத்த மோடியின் பாசம்- என ஒவ்வொரு கட்டுரையும் தேர்ந்த அரசியல் வல்லுநரால் பகுப்பாய்வு செய்யப்பட்டது போல எழுதப்பட்டிருக்கின்றன.
மனதின் குரலோ, வெளிநாட்டில் கலந்துகொள்ளும் நிகழ்வோ, பிர மாநிலங்களில் பங்கேற்கும் பொதுக்கூட்டமோ, எங்கும் தமிழின் உயர்வை வியந்தோதும் பிரதமர் நரேந்திர மோடி குறித்த பதிவுகள் ஒன்று விடாமல் தொகுக்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களுடன் உரையாடிய பிரதமரின் பேச்சுகளும் நூலின் கடைசிக் கட்டுரையில் தொடுக்கப்பட்டிருக்கின்றன.
இந்நூல், பாஜக ஆதரவாளர்கள் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய நூல். அதுமட்டுமல்ல, பாஜகவின் எதிரிகளும் படிக்க வேண்டிய வகையில், தகவல் சுரங்கமாக அமைந்திருப்பது இந்நூலின் சிறப்பு.
***
நூல் குறித்த விவரங்கள்: மோடியின் தமிழகம்: உண்மை பேசுகிறது... சின்னப்பா கணேசன் 368 பக்கங்கள், விலை: ரூ. 350- (கெட்டி அட்டையுடன்: ரூ. 450-) வெளியீடு: சோழன் பதிப்பகம், எண்: 3இ, மூன்றாவது தளம், சாய் சூர்யா அடுக்ககம், காமகோடி நகர், சென்னை- 600 100 கைப்பேசி எண்கள்: 90923 45641, 97899 65475
$$$
One thought on “மோடியின் தமிழகம் – நூல் அறிமுகம்”