சுவாமி விவேகானந்தரின் கனவில் விழிப்புற்ற பாரதம்

-பேரா. இரா.இளங்கோ

மதுரையைச் சார்ந்த பேராசிரியர் திரு. இரா.இளங்கோ, திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் துணை முதல்வராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். விவேகானந்தரின் சிந்தனைகளை இளைஞர்களிடத்தில் கொண்டுசெல்வதை தனது கடமையாகக் கொண்டவர். அகில பாரத சிக்‌ஷண மண்டலி அமைப்பின் தமிழகத் தலைவர். இவரது இனிய கட்டுரை இங்கே…

1863, ஜனவரி 12. மகர சங்கராந்தி தினம்; பருவமாற்றத்தைக் குறிக்கும் பரிசுத்த நன்னாள். காலை மணி 6.45, சூரிய உதயத்திற்குச் சற்றுப் பின் சுவாமி விவேகானந்தார் இப்பூவலகில் தோன்றுகிறார். கொல்கத்தாவில் அவர் பிறந்த வீட்டின் கூப்பிடு தொலைவில் கங்கை கரைபுரண்டு ஒடுகிறது. ஆயிரக் கணக்கான இந்து பெண்களும். ஆண்களும் பக்திப் பரவசத்தோடு பாடி, மலர் தூவி கங்கை அன்னையை ஆராதிக்கும் வேளை. கங்கை மாதா நன்மகனை ஈன்றெடுத்த மகிழ்ச்சியில் பெருமையோடு அனைவரையும் பார்க்கிறாள். இவன்  “உலகை உய்விக்க வந்த உத்தமன்” என்று சொல்லி ஆராதனை செய்தவர்களை ஆசீர்வதிக்கிறாள்.

அது மேற்கத்திய புலனின்ப கலாச்சாரம் நமது புனித புராதனப்  பண்பாட்டினை  கபளீகரம் புரிய முயலும் வேளை. அதற்கு, படித்த இளைஞர்கள் பலியாகும் காலம். இத்தருணத்தில் சுவாமிஜியின் தோற்றம் காலத்தின் கட்டாயம். பாரதத்தாய் இப்புனிதரை பிரசவித்ததன்  நோக்கம் தேசத்தை நேர்படுத்த; இளைஞர்களை நற்பாதையில் நடத்த. அதனால் தான் சுவாமிஜியின் பலமான வார்த்தைகள் பலவீன இளைஞர்களை  நோக்கி கர்ஜித்தது.

“ஈதென்ன பேருறக்கம்! இனித்தான் எழுந்திராய்!” இது 8-ம் நூற்றாண்டில் பெண் ஆழ்வார் ஆண்டாளின் தட்டி எழுப்பும் வார்த்தைகள். அதையே சுவாமிஜியின் சொற்களும் எதிரொலித்தன. “Arise! Awake!! Stop not till the goal is reached.”

சுவாமிஜி ஒன்றும் முணுமுணுப்பதற்காகப் பிறக்கவிலை. சிகரத்தின் உச்சிக்குச் சென்று உறங்குகின்றவர்களை உசுப்பிவிட, வேதமந்திரங்களை உச்சரிக்கவே அவர் உதித்தார். வேதத்தை எல்லோரும் சொன்னார்கள். ஆனால் சுவாஜி தன்மயமாக்கி, ஜீரணித்து. மெருகேற்றி, காலத்திற்கேற்றவாறு உணர்ச்சிப் பெருக்கோடு உரைத்தார். ஆனால், காலத்தால் அழியாத. என்றும் நிலைத்திருக்கும் சத்தியங்கள் அங்கு சாகவில்லை. மிளிர்ந்தன. காதைத் தீட்டி, கண்னை விரித்துக் கேட்டனர் அனைவரும்.

“கோழைத்தனத்திற்கு பலியாகாதே! இது உனக்குப் பொருந்தாது. நீ அழிக்கமுடியாத ஆத்மசெரூபன்” -பகவான் அர்ச்சுனனுக்குச் சொன்ன இந்த வார்த்தைகளை மட்டும் உணர்ந்தால் கீதை முழுவதையும் ஒருவன் கற்றவன் ஆகிறான் என்பது சுவாமிஜியின் திண்ணிய எண்ணம். இதை வையத்து வாழ்வீர்காளுக்குச் சொல்லுங்கள். மூன்றே மூன்று நாள். உலக மக்களின் துக்கம், நோய், நொடி எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விடும். இது ஆன்மிக வைத்தியரின் மருந்துச் சீட்டு சொல்லும் அறிவுரை.

இவர் சமூக சீர்திருத்தவாதி அல்ல. ஆனால் அவர்கள் இவரது கருத்துக்களை உன்னிப்பாகக் கேட்டனர். இவர் தேசிய விடுதலை வீரரும் அல்லர். ஆனால் சுதந்திரப் போரிட்ட வீரர்கள் இவரது உணர்ச்சிமிகு சொற்களால் உந்தப்பட்டனர். ஆன்மிக விழிப்புணர்வு தான் உன்மையான விடுதலை என்று இவர் ஆணித்தரமாக நம்பினார்.  தியாகமும், சேவையும் பாரதப் புதல்வனின் இரு கண்களாகட்டும். பாரத்தின் உண்மையான விடுதலை அது தான் என்பது இவரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

உடல் என்னும் கண்ணுக்குப் புலபபடும் அரணைத் தாண்டி, புலப்படாத மனது, புத்தி என்னும் அரண்களையும் கடந்து உள்ளே என்றென்றும் சாட்சியாக ஜொலித்துக் கொண்டிருக்கும் அந்த ஆத்மாவை, பரமாத்மாவின் சிதறலை உணர்ந்தவனே உண்மையில் விழிப்புணர்வு கொண்டு விடுதலையை அடைந்தவன்.  “I care only for the Spirit. When that is right everything will be righted by itself”. உன்னில் உள்ள தெய்வீகத்தை வெளிப்படுத்து.  நடைமுறைப்படுத்து. உனக்கு எல்லாம் கிடைக்கும் – சக்தி, ஆற்றல், வெற்றி, ஆனந்தம் அனைத்தும்.

லெளகீக நாற்றத்தில் வாசம் செய்யும் மனிதன் வெறும் பணம் பன்ணும் கருவி – “Money Making Machine”. ஜனத்திரள் அன்றும், இன்றும் அப்படித்தான் உள்ளதோ! எனவே தான் அவனுக்கு அவனது நிஜசொரூபத்தை நினைவூட்டுவதை தனது அரும் முயற்சியாகக் கொண்டார், “Man Making Mission”.

“அமிர்தஸ்ய புத்ர” – என்னும் வேத வாக்கை நினைவில் கொள். தெய்வத்தை வெளியே தேட மாட்டாய். உன்னுள் உறைந்திருக்கும் இறைமையை உணர்ந்து கொள். பின்னர் உன் கண்களுக்கு இவ்வுலகம் சிறைச்சாலையாகத் தெரியாது; விளையாட்டு மைதானமாகும். குளிர்ந்த நீரூற்றும், மனதைக் கவரும் மலர்களும், வட்டமிடும் பட்டாம்பூச்சியும் உன்னை குதூகலிக்கச் செய்யும். உன்னைவிட்டு வெளியே இறைவனைத் தேடுவது கரைபுரண்டோடும் கங்கைக் கரையில் நீருக்கு நீ கிணறு தோண்டுவதைப் போல.

உன் மனது எப்படியோ அப்படியே உலகம் உன் கண்களுக்குத் தெரியும். உலகைச் சபிக்காதே. அதுவே உலகிற்கு நீ செய்யும் உதவி. மனதை நிறையத் திற. சத்தான எண்ணங்கள் அதை நிரப்பட்டும். இறக்கும் தருவாயில் கூட “I am He, I am He”- தெய்வீகமே என் நிஜ சொரூபம் என பறைசாற்று. அதுவே பேருண்மை.

வயிறு நிரப்ப ஒர் வேலையைக் கேட்கச் சென்ற நரேந்திரன், காளி மாதாவிடம் கேட்டது தைரியத்தை, சக்தியை, மனத்திட்பத்தை, அவளது நிரந்தர அருட்பார்வையை. காளியிடம் யாசகம் கேட்பது மகாராஜாவிடம் காய்ந்து போன காய்கறிகளைக் கேட்பது போல எனச் சிரித்தார் இளைஞர் நரேந்திரன். மகிழ்ந்தார் குரு மகராஜ். “நான் சம்பாதித்த ஆன்மிகச் செல்வத்தின் ஒரே வாரிசு இந்த நரேன். இதை உலகத்திற்கு இவன் கொடுப்பான்” என்றார் குரு மகராஜ்.

அவரது கனவு இதுதான் – தைரியம் மனதில் நிரம்பி வழியட்டும். உரத்த சிந்தனை உள்ளத்தில் ஒங்கி ஒலிக்கட்டும். நாடி நரம்புகளில் பாயட்டும்; ரத்ததில் கலக்கட்டும். முயற்சி செய் மனிதா! தோல்வியைக் கண்டு துவண்டு போகாதே. தோல்வி வாழ்க்கையின் அழகு; சிருங்காரம். அனுபவி தோல்வியை. போராட்டம் உன் வாழ்க்கைக்கு மெருகேற்றும். பசு ஒருமுறை கூட பொய் சொன்னது இல்லை. அதனால் தானே அது இன்னும் பசுவாக இருக்கிறது. தடுக்கி விழும் மனிதன் மீண்டும், மீண்டும் எழுகிறான். பரிணாம வளர்ச்சியின் வாய்ப்புகள் அவனுக்கே அதிகம்.

எத்தனை அழுத்தங்கள் வாழ்க்கையில்! உயிர் தன்னை வெளிக்கொணர எத்தனை போராட்டங்கள்! நிறைநிலையை அடைய எத்தனை பகீரதப் பிரயத்தனங்கள்! முயற்சி தானே வாழ்வு. மனதைப் பக்குவப்படுத்து! புத்தியை விழிக்கச் செய்! உணர்வை உன்னதமாக்கு! உன் காயங்கள் ஆறும். ரத்தக் கசிவு நிற்கும்.  முறிந்த எலும்புகள் ஒன்றுகூடும். பலமான மூச்சுக்காற்றை சுவாமிஜி நம்முள் பாயவிடுகிறார்.

1897, ஜனவரி 15. கிட்டத்தட்ட 3.5 ஆண்டுகால மேற்கத்திய நாடுகளில் தன் ஆன்மிகப் பயணத்தை முடித்து கொழும்பில் காலடி வைக்கிறார். அவர் சற்றும் எதிர்பாராத இந்துக்களின் பிரமாண்ட வரவேற்பு. கரகோஷம்; பிரமிக்கிறார். அவர்  என்ன கட் அவுட்  கலாசாரத்தில் இன்பங்காணும் அரசியல்வாதியா? போர்முனையில் வெற்றிவாகை சூடிய போர்வீரனா? வியாபாரத்தை முடித்து வீடு திரும்பும் லட்சாதிபதியா? இல்லை. பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தும் ஒரு சாதாரண சந்தியாசி.

பாரதத்தின் முதுகெலும்பே ஆன்மிகம் தானே! தன்னலமற்ற தவலசீலரை ஆராதிப்பது தான் இந்து தர்மம். மேலைநாடுகளில் சனாதன தர்மத்தை நிலைநாட்டிய சுவாமிஜி மீது மக்கள் கொண்ட உவகையையும், செலுத்திய நன்றியையும் அவர் தனக்கென எடுத்துக் கொள்ளாது, மீண்டும் அதை பாரதத்திற்கே அர்ப்பணிக்கிறார்.

சுவாமிஜியின் மனதில் ஒருமுறை அதிரவைக்கும் எண்ணம் எழுந்தது. பாரதம் இறந்துவிடுமோ என்பது தான் அது. அடுத்த நொடியே பதிலும் கிடைக்கிறது. பாரதம் மறைந்தால் அதனோடு சேர்ந்து ஆன்மிகம், ஒழுக்கம், தியாகம், சேவை போன்ற நன்னெறிகளும்  நசிந்துபோகும்.  காமமும், காட்டுமிராண்டித்தனமும் கட்டவிழ்த்து விடப்படும். மனிதநேயம் மாண்டுவிடும். அப்படி நடக்கவே நடக்காது என அவர் தம் தன்னம்பிக்கை பறை சாற்றுகிறது. அதன் பிரதிபலிப்பு 1987 ஜனவரி 29 அன்று ராமநாதபுரத்தில் அவரின் உணர்ச்சிமிகு சொற்பொழிவில் காணப்படுகிறது.

கருத்தாழமும், சொல்லழகும் கொண்டது அவரது பேச்சு. நம்பிக்கையூட்டும் வார்த்தைகள்; நிமிரச் செய்யும் சொற்கள். அன்றைய இளைஞர்களுக்கு அவர் ஆற்றிய உரை இன்று போதையிலும், வக்கிர எண்ணங்களைத் தூண்டும் திரைப்படங்கள், தொலைக்காட்சிகளில்- தங்களையும், தன்னம்பிக்கையையும், தொலைத்துவிட்டு கூனிக் குறுகி நிற்கும் இளைஞர்களுக்குப் பொருந்தும்…

“நீண்ட நெடிய இரவு முடிவுக்கு வந்துவிட்டது. நாம் பட்ட இன்னல்கள்  எல்லாம் நீங்கிவிட்டன. அதோ ஒரு குரல் ஒலிக்கிறதே, அது ஆயிரக் கணக்கான ஆண்டு ஆன்மிக சரித்திரத்தின் குரல். இமாலயத்தில் தவம் செய்து இறைவனை உணர்ந்த இந்துத் துறவிகளின் குரல். பேருறக்கத்தில் உள்ள் உங்களை எழுப்பும் குரல். அதைக் கேளுங்கள். சவம் கூட தவம் செய்யும்”

-என்றது அவரது முழக்கம். அரசியல் விழிப்புணர்விற்கு அடிகோலியது இவ்வார்த்தைகள்.

இந்த வார்த்தைகள், 1905 வங்கத்தில் சுதேசி இயக்கத்தில் ஆரம்பித்து, பின்னர் ரத்தம் சிந்தும் பல வன்முறைப் போராட்டங்களை தாண்டி, மகாத்மாவின் சத்தியாகிரஹமாகப் பரிணமித்தன. ஆன்மிக அடித்தளம் இல்லையென்றால் செல்வச் செழிப்பு மிக்க ஜரோப்பிய பொருளாதாரம் கூட சுக்கு நூறாகச் சிதறிவிடும் என்று நினைவுபடுத்தினார். அவரது வார்த்தைகள் உண்மையாவதை கண்கூடாகப் பார்க்கிறோமே!

தோல்வியை எண்ணித்  துவண்டு போவதை விட, உன்னிடம் நிறைந்திருக்கும் அளப்பரிய தெய்வீக ஆற்றலை எண்ணி, எண்ணி, தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள். அழுதது போதும்! உன்னை பலவீனமடையச் செய்யும் எதையும் விஷமென வெறுத்து ஒதுக்கு. வீழ்ச்சியை விசாரித்துப் பார். மெய்யறிவு கிட்டும் இப்படித் தொடர்கிறது அவர்தம் கனவு. வேத மகரிஷிகள் திரும்பத் திரும்பப் பிரயோகிக்கும் வார்த்தை ‘அபி’ (Abhih).  சுவாமிஜிக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இதுதான் பாரதத்தின் பாரம்பரிய உணர்வு. அலெக்ஸாண்டரை அச்சப்பட வைத்தது இந்த ‘அபி’.

சுவாமிஜியின் கனவு – அலெக்ஸாண்டர் அழைக்கிறான்,  இமாலயத்தில் தவம் செய்யும் துறவியை மாசிடோனியாவிற்கு. மறுக்கும் அவனை வதைக்க முயலும் அலெக்ஸாண்டர். துறவியின் துணிச்சல் – “என் உடலைக்  கொண்டு போகலாம். ஆன்மாவை அல்ல. காற்றில் கரையாத. நீரில் நனையாத, நெருப்பில் கருகாத அப்பெரும் பொருளை உன்னால் தொட முடியாது” என சூளுரைக்கும் துறவி. இதுதான் தைரியம்- பாரத்தின் சொத்து என கனவு காண்கிறார் சுவாமிஜி.

பாராளுமன்றச் சட்டம் திருடனைத் திருத்தாது. ஆன்மிகம் ஒன்று தான் மனதின் அடித்தளம் வரை சென்று அழுக்கை அகற்றும். எனவே தான் சுவாமிஜி, “எனக்குத் தெரிந்த அரசியல் கடவுளும், சத்தியமும் மட்டுமே. மற்றவை எல்லாம் குப்பைகள்” என்கிறார்.

சுவாமிஜியின் கனவு தொடர்கிறது – குரு மகராஜின் மூச்சுக் காற்று பட்டவுடன் பாரதத்தில் சத்திய யுகம் பிறந்துவிட்டது. இந்தப் பொற்காலத்தில் புதிய பாரதம் மலரும். ஏழையின் குடிசையிலிருந்து. உழவனின் உழைப்பிலிருந்து. மீனவனின் வலையிலிருந்து. நவிந்தவன் நாட்டை ஆள்வான். ஆன்மிக வெள்ளம் அனைவரையும் பலவானாக்கும். பாரதச் சக்கரம் கீழது மேலாய், மேலது கீழாய் சுழலும்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பாரதத்தாய் தன் அழியாத அரியாசனத்தில் அமர்வாள். உலகை வெல்லுவாள். அதிகாரத்தால் அல்ல- ஆன்மிகத்தால். கண்ணுக்குப் புலப்படாத பனிப்பொழிவு இரவெல்லாம் மெல்லெனப் பெய்து லட்சக் கணக்கான மொட்டுக்கனை மலர்விக்கச்  செய்தது போல, பாரதத்தின் ஆன்மிகம் உலகை வென்று மலரச் செய்யும்.

நமது கலாச்சார பொக்கிஷங்களை மார்போடு அணைத்தபடி பாரத அன்னை காலங்காலமாக காத்து வருகிறாள். எத்தனை படையெடுப்புகள்! கலாச்சாரச்  சீரழிவு முயற்சிகள் அயலாரிடமிருந்து! அத்துணைக்கும் மத்தியில் காலத்தால் அழியாத, உன்னதமான பாரம்பரியத்தை பாதுகாக்கிறாள். அந்த தேவாமிருதத்தைப் பருக, அகில உலகமும் காத்திருக்கிறது. விழிப்புற்ற பாரதம் உலகை வளமாக்கும்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s