-மகாகவி பாரதி
தங்கள் கோபமான சொற்களுக்கு தருமன் அளித்த பதிலுரை கேட்ட தம்பியர் நால்வரும், அன்பு மிகுதியால்தான் அண்ணனிடம் வாதிட்டோம்; அண்ணன் சொல்லே தங்களுக்கு வேதவாக்கு என்கின்றனர். மூத்தவர் சொல்லை மறுக்காமல் ஏற்பது அக்கால வழக்கம் என்பதை இப்பாடலில் காட்டுகிறார் மகாகவி பாரதி...

முதல் பாகம்
1.1. அழைப்புச் சருக்கம்
1.1.25. நால்வரும் சம்மதித்தல்
வேறு
என் றினைய நீதிபல தரும ராசன்
எடுத்துரைப்ப,இளைஞர்களுந் தங்கை கூப்பிக்
‘முன்றினிலே ஏற்றிவைத்த விளக்கைப் போலக்
குவலயத்திற் கறங்காட்டத் தோன்றி னாய் நீ!
வென்றிபெறுந் திருவடியாய்!நினது சொல்லை
மீறிஒரு செயலுண்டோ?ஆண்டான் ஆணை
யன்றிஅடி யார்தமக்குக் கடன்வே றுண்டோ?
ஐயனே!பாண்டவர்தம் ஆவி நீயே! 143
துன்பமுறும் எமக்கென்றே எண்ணி நின்வாய்ச்
சொல்லைமறுத் துரைத்தோமோ?நின்பா லுள்ள
அன்புமிகையா லன்றோ திருவுளத்தின்
ஆக்கினையை எதிர்த்துரைத்தோம் அறிவில் லாமல்
மன்பதையின் உளச்செயல்கள் தெளியக் காணும்
மன்னவனே!மற்றதுநீ அறியா தொன்றோ?
வன்புமொழி பொறுத்தருள்வாய் வாழி,நின்சொல்
வழிச்செல்வோம்,”எனக்கூறி வணங்கிச் சென்றார். 144
$$$