-மகாத்மா காந்தி

ஐந்தாம் பாகம்
26. ஒற்றுமையில் ஆர்வம்
ஐரோப்பாவில் நாசகரமான யுத்தம் நடந்துகொண்டு வந்த போதுதான் கேடாப் போராட்டம் ஆரம்பமாயிற்று. அப்போராட்டம் முடிந்த பிறகு, யுத்தத்தில் ஒரு நெருக்கடியான நிலைமை உண்டாயிற்று. வைசிராய் டில்லியில் ஒரு யுத்த மகாநாட்டைக் கூட்டி, அதற்குப் பல தலைவர்களையும் அழைத்திருந்தார். வைசிராய் லார்டு செம்ஸ்போர்டுக்கும் எனக்கும் நெருங்கிய நட்பு இருந்ததைக் குறித்து முன்பே கூறியிருக்கிறேன்.
அந்த அழைப்பிற்கு இணங்கி நான் டில்லிக்குச் சென்றேன். ஆனால், அம்மகாநாட்டில் நான் கலந்து கொள்ளுவது சம்பந்தமாக எனக்குச் சில ஆட்சேபங்கள் இருந்தன. அவற்றில் முக்கியமானது, அலி சகோதரர்கள் போன்ற தலைவர்களை அம்மகாநாட்டிற்கு அழைக்கவில்லை என்பது. அப்பொழுது அவர்கள் சிறையில் இருந்தார்கள். அவர்களைக் குறித்து நான் நிறையக் கேள்விப் பட்டிருந்தேனாயினும் இரண்டொரு முறையே அவர்களைச் சந்தித்திருந்தேன். அவர்களுடைய சேவையைக் குறித்தும், தீரத்தைப் பற்றியும் என்னிடம் எல்லோரும் மிகவும் பாராட்டிக் கூறியிருந்தார்கள். ஹக்கீம் சாகிபுடன் அப்பொழுது எனக்கு நெருங்கிய பழக்கம் இல்லை. ஆனால், பிரதமப் பேராசிரியர் ருத்திராவும் தீனபந்து ஆண்டுரூஸும், அவருடைய பெருமையைக் குறித்து என்னிடம் அதிகம் கூறியிருந்தனர். ஸ்ரீ ஷு வாயிப் குரேஷியையும் ஸ்ரீ குவாஜாவையும் கல்கத்தாவில் முஸ்லிம் லீகில் சந்தித்திருந்தேன். டாக்டர் அன்ஸாரியுடனும் டாக்டர் அப்துர் ரஹ்மானுடனும் எனக்குப் பழக்கம் இருந்தது. உத்தமமான முஸ்லிம்களின் நட்பை நான் நாடினேன். முஸ்லிம்களின் புனிதமான, அதிக தேசாபிமானமுள்ள பிரதிநிதிகளுடன் தொடர்புகொண்டு அதன்மூலம் முஸ்லிம்களின் மனத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். ஆகையால், அப்படிப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக் கொள்ளுவதற்காக, அவர்கள் என்னை எங்கே அழைத்துச் சென்றாலும் போவேன். அதற்கு எந்தவிதமான வற்புறுத்தலும் தேவையே இல்லை.
ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே உண்மையான நட்பு இல்லை என்பதை தென்னாப்பிரிக்காவில் வெகு காலத்திற்கு முன்பே நான் தெரிந்து கொண்டேன். ஒற்றுமைக்குத் தடையாக இருப்பவைகளைப் போக்குவதற்குக் கிடைக்கும் எந்த வாய்ப்பையும் நான் தவற விட்டுவிடுவது இல்லை. முகஸ்துதியாகப் பேசியோ, சுயமதிப்புக்குப் பாதகமான வகையில் நடந்தோ ஒருவரைச் சமாதானப்படுத்திக் கொண்டு விடுவது என்பது என் சுபாவத்திற்கே விரோதமானது. ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமை விஷயத்தில்தான் என்னுடைய அகிம்சை கடுமையான சோதனைக்கு உள்ளாக நேரும் என்பதை எனது தென்னாப்பிரிக்க அனுபவம் எனக்குத் தெளிவாகக் காட்டியிருந்தது. அதோடு இவ்விஷயமே என்னுடைய அகிம்சையின் சோதனைகளுக்கு மிக விஸ்தாரமான இலக்கை அளிக்கிறது என்றும் அறிந்திருந்தேன். அந்த உறுதியே இன்னும் இருந்து வருகிறது. என் வாழ்நாளின் ஒவ்வொரு கணத்திலும் கடவுள் என்னைச் சோதித்து வருகிறார் என்பதையும் உணருகிறேன்.
தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய போது இவ்விஷயத்தில் இவ்விதமான உறுதியான கொள்கையுடன் நான் இருந்ததனால், அலி சகோதரர்களுடன் தொடர்பு பெறுவது மிகவும் முக்கியம் என்று மதித்தேன். ஆனால், நெருக்கமான பழக்கம் ஏற்படுவதற்கு முன்னால் அவர்களைத் தனிமையில் வைத்து விட்டனர். கடிதம் எழுத ஜெயிலர்கள் அனுமதிக்கும் போதெல்லாம் மௌலானா முகமது அலி, பேதூலிலிருந்தும் சிந்து வாடியிலிருந்தும் எனக்கு நீண்ட கடிதங்களை எழுதிக் கொண்டிருந்தார். அவர்களைப் போய்ப் பார்க்க அனுமதி கோரி விண்ணப்பித்துக் கொண்டேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை.
அலி சகோதரர்கள் சிறைப்பட்ட பின்னரே, கல்கத்தாவில் நடந்த முஸ்லிம் லீக் மகாநாட்டிற்கு முஸ்லிம் நண்பர்கள் என்னை அழைத்திருந்தார்கள். அங்கே பேசும்படி என்னைக் கேட்டுக் கொண்டபோது, அலி சகோதரர்கள் விடுதலையாகும்படிச் செய்ய வேண்டியது முஸ்லிம்களின் கடமை என்று பேசினேன். இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு இந்த நண்பர்கள், அலிகாரிலுள்ள முஸ்லிம் கல்லூரிக்கு என்னை அழைத்துச் சென்றனர். அங்கே பேசுகையில் தாய்நாட்டிற்குச் சேவை செய்வதற்காக இளைஞர்கள் பக்கிரிகள் ஆக வேண்டும் என்று அழைத்தேன்.
பிறகு அலி சகோதரர்கள் விடுதலைக்காக அரசாங்கத்துடன் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டேன். இது சம்பந்தமாக, கிலாபத் பற்றி அலி சகோதரர்கள் கொண்டிருந்த கருத்துக்களையும், அவர்களுடைய நடவடிக்கைகளையும் ஆராய்ந்தேன். முஸ்லிம் நண்பர்களுடனும் விவாதித்தேன். இதனால் ஒன்றை உணர்ந்தேன். நான் முஸ்லிம்களின் உண்மையான நண்பனாக வேண்டுமானால், அலி சகோதரர்களின் விடுதலையைப் பெறுவதற்காகவும், கிலாபத் பிரச்னையில் நியாயமான முடிவு ஏற்படுவதற்காகவும், சாத்தியமான எல்லா உதவிகளையும் நான் செய்ய வேண்டும் என்பதே அது. அவர்களுடைய கோரிக்கையில் தரும விரோதமானது எதுவும் இல்லையென்றால், அதன் முழு நியாயங்களையும் குறித்து நான் ஆராய்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. மத சம்பந்தமான விஷயங்களில் நம்பிக்கைகள் மாறுபடுகின்றன. அவரவரின் நம்பிக்கைதான் அவரவர்களுக்கு மேலானதாகும். மத சம்பந்தமான விசயங்களிலெல்லாம் எல்லோருக்கும் ஒரேவிதமான நம்பிக்கை இருக்குமானால், உலகில் ஒரே ஒரு மதம் தான் இருக்கும். கிலாபத் சம்பந்தமான முஸ்லிம்களின் கோரிக்கையில் தருமத்திற்கு விரோதமானது எதுவும் இல்லை என்பதோடு மாத்திரம் அல்ல, முஸ்லிம்களுடைய கோரிக்கையின் நியாயத்தை பிரிட்டிஷ் பிரதம மந்திரியே ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதைப் பின்னால் அறிந்து கொண்டேன். ஆகையால், பிரதம மந்திரியின் வாக்குறுதி நிறைவேற்றப்படும்படி செய்வதற்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய நான் கடமைப் பட்டிருக்கிறேன் என்று கருதினேன். மிகவும் தெளிவான முறையில் அந்த வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்ததால், என்னுடைய மனச் சாட்சியைத் திருப்தி செய்துகொள்ளுவதற்கு மாத்திரமே முஸ்லிம்களுடைய கோரிக்கையின் தகுதியைக் குறித்து நான் பரிசீலனை செய்து கொள்ள வேண்டியிருந்தது.
கிலாபத் பிரச்னையில் நான் கொண்ட போக்கைக் குறித்து நண்பர்களும் மற்றவர்களும் குற்றஞ் சொல்லியிருக்கின்றனர். அவர்கள் கண்டித்திருந்த போதிலும், என் கருத்தை மாற்றிக் கொள்ளுவதற்கு எந்தக் காரணமும் இருப்பதாக நான் எண்ணவில்லை. முஸ்லிம்களுடன் ஒத்துழைத்ததற்காக நான் வருந்தவும் இல்லை. இதேபோன்ற சமயம் இனி ஏற்படுமானால், அதே போக்கைத்தான் நான் அனுசரிக்க வேண்டும். ஆகையால், நான் டில்லிக்குச் சென்றபோது, முஸ்லிம்களின் கட்சியை வைசிராய்க்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்ற முழு எண்ணத்துடனேயே சென்றேன். கிலாபத் பிரச்னை, பின்னால் அது கொண்ட உருவை அப்பொழுது அடைந்து விடவில்லை.
ஆனால், நான் டில்லியை அடைந்ததும், மகாநாட்டிற்கு நான் செல்வதற்கு எதிராக மற்றொரு கஷ்டமும் ஏற்பட்டது. யுத்த மகாநாட்டில் நான் கலந்து கொள்ளுவது தருமமாகுமா என்ற கேள்வியை தீனபந்து ஆண்டுரூஸ் எழுதினார். இங்கிலாந்துக்கும் இத்தாலிக்கும் ஏற்பட்ட ரகசிய ஒப்பந்தங்களைப் பற்றி பிரிட்டிஷ் பத்திரிகைகளில் நடந்து வந்த விவாதங்களைக் குறித்து அவர் எனக்குக் கூறினார். இன்னுமொரு ஐரோப்பிய வல்லரசுடன் பிரிட்டன் ரகசியமாக ஒப்பந்தங்கள் செய்து கொண்டிருக்குமானால், இம் மகாநாட்டில் எப்படி நான் கலந்துகொள்ள முடியும் என்று ஸ்ரீ ஆண்டுரூஸ் கேட்டார். ஒப்பந்தங்களைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. தீனபந்து ஆண்டுரூஸ் சொன்னதே எனக்குப் போதுமானது. ஆகவே, மகாநாட்டில் கலந்துகொள்ள நான் தயங்குவதன் காரணத்தை விளக்கி லார்டு செம்ஸ்போர்டுக்குக் கடிதம் எழுதினேன். இதைக் குறித்து என்னுடன் விவாதிப்பதற்காக அவர் என்னை அழைத்தார். அவருடனும் அவருடைய அந்தரங்கக் காரியதரிசி ஸ்ரீ மாபியுடனும் நீண்ட நேரம் விவாதித்தேன். அதன்பேரில் மகாநாட்டில் கலந்து கொள்ளச் சம்மதித்தேன். வைசிராய் வாதத்தின் சாராம்சம் இதுதான்: “பிரிட்டிஷ் மந்திரி சபை செய்யும் ஒவ்வொன்றும் வைசிராய்க்குத் தெரியும் என்று நிச்சயம் நீங்கள் நம்பிவிட மாட்டீர்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் தவறே செய்யாது என்று நான் சொல்லவில்லை; யாரும் சொல்லவுமில்லை. ஆனால், மொத்தத்தில் சாம்ராஜ்யம் நல்லதற்கான ஒரு சக்தி என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் என்றால், இந்தியா, பிரிட்டிஷ் சம்பந்தத்தினால் மொத்தத்தில் நன்மை யடைந்திருக்குமாயின், சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில் அதற்கு உதவி செய்ய வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் கடமை என்பதை ஒப்புக் கொள்ளுவீர்களல்லவா? ரகசிய ஒப்பந்தங்களைக் குறித்து பிரிட்டிஷ் பத்திரிகைகள் என்ன கூறுகின்றன என்பதை நானும் படித்தேன். இந்தப் பத்திரிகைகள் கூறுவதற்குமேல் எனக்கு எதுவும் தெரியாது என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். அதோடு, அடிக்கடி பத்திரிகைகள் கதை கட்டிவிடுகின்றன என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பத்திரிகைச் செய்திகளை மாத்திரம் ஆதாரமாக வைத்துக்கொண்டு இது போன்ற ஒரு நெருக்கடியான சமயத்தில் சாம்ராஜ்யத்திற்கு உதவி செய்ய நீங்கள் மறுக்கலாமா? இன்று அல்ல, இந்த யுத்தம் முடிந்த பிறகு, எந்தத் தார்மிகப் பிரச்னையில் வேண்டுமானாலும் உங்கள் இஷ்டப்படி நீங்கள் ஆட்சேபங்களைக் கிளப்பி எங்களுக்குச் சவால் விடலாம்.”
வாதம் புதியது அன்று. ஆனால், கூறப்பட்ட முறையினாலும், கூறப்பட்ட நேரத்தின் காரணமாகவும் அது புதிதாக எனக்குத் தோன்றியது. மகாநாட்டில் கலந்து கொள்ளுவதற்கும் சம்மதித்தேன். முஸ்லிம்களின் கோரிக்கையைப் பொறுத்த வரையில் வைசிராய்க்கு நான் கடிதம் எழுதுவது என்பதும் முடிவாயிற்று.
$$$
27. படைக்கு ஆள் திரட்டல்
ஆகவே நான் மகாநாட்டிற்குச் சென்றேன். படைக்கு ஆள் திரட்டுவது சம்பந்தமான தீர்மானத்தை நான் ஆதரிக்க வேண்டும் என்பதில் வைசிராய் அதிகச் சிரத்தையுடன் இருந்தார். ஹிந்துஸ்தானியில் நான் பேச அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன். என் கோரிக்கைக்கு வைசிராய் அனுமதியளித்தார். ஆனால், நான் ஆங்கிலத்திலும் பேச வேண்டும் என்று யோசனை கூறினார். நான் நீளமான பிரசங்கம் செய்ய எண்ணவில்லை. பேசினேன். “என் பொறுப்பைப் பூரணமாக உணர்ந்தே நான் இத்தீர்மானத்தை ஆதரிக்கிறேன்” என்ற ஒரே வாக்கியமே நான் பேசியது.
ஹிந்துஸ்தானியில் நான் பேசியதற்காகப் பலர் என்னைப் பாராட்டினார்கள். இத்தகைய கூட்டத்தில் ஹிந்துஸ்தானியில் பேசியது அதுவே முதல் தடவை என்றும் அவர்கள் கூறினார்கள். இப்பாராட்டுக்களும், வைசிராய் கூட்டமொன்றில் ஹிந்துஸ்தானியில் முதல்முதல் பேசியது நானே என்பது கண்டுபிடிக்கப்பட்டதும், என்னுடைய தேசிய கௌரவத்தைப் பாதித்தன. எனக்கு நானே குன்றிப் போய்விட்டதாக உணர்ந்தேன். நாட்டில், நாடு சம்பந்தமான வேலையைப் பற்றிய கூட்டங்களில், நாட்டின் மொழி தடுக்கப்பட்டிருப்பதும், என்னைப் போன்ற யாரோ ஒருவர் அங்கே ஹிந்துஸ்தானியில் பேசிவிட்டது பாராட்டுதற்குரிய விஷயமாக இருப்பதும், எவ்வளவு பெரிய துக்ககரமான விஷயம்! நாம் எவ்வளவு இழிவான நிலைமையை அடைந்திருக்கிறோம் என்பதை இதுபோன்ற சம்பவங்கள் நினைவூட்டுகின்றன.
மகாநாட்டில் நான் பேசியது ஒரே ஒரு வாக்கியமேயாயினும் எனக்கு அது அதிக முக்கியமான பொருளைக் கொண்டதாகும். அம் மகாநாட்டையோ, அதில் நான் ஆதரித்த தீர்மானத்தையோ மறந்துவிடுவது எனக்குச் சாத்தியமல்ல. செய்வதாக நான் ஏற்றுக் கொண்டிருந்த ஒரு காரியத்தை டில்லியிலிருந்த போதே நான் நிறைவேற்றியாக வேண்டியிருந்தது. வைசிராய்க்கு நான் கடிதம் எழுத வேண்டியிருந்தது. எனக்கு இது எளிதான காரியமன்று. அரசாங்கம், மக்கள் ஆகிய இருதரப்பினரின் நன்மையையும் முன்னிட்டு, எப்படி, ஏன் அம் மகாநாட்டுக்கு வந்தேன் என்பதை அக்கடிதத்தில் விளக்கிச் சொல்லி, அரசாங்கத்தினிடமிருந்து மக்கள் எதிர்பார்ப்பது என்ன என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்ட வேண்டியது என் கடமை என்பதை உணர்ந்தேன்.
லோகமான்ய திலகர், அலி சகோதரர்கள் போன்ற தலைவர்கள் மகாநாட்டிற்கு அழைக்கப்படாமல் விலக்கப்பட்டிருந்தது குறித்து என் வருத்தத்தை அக்கடிதத்தில் தெரிவித்தேன். மக்களின் குறைந்தபட்ச ராஜீயக் கோரிக்கையைக் குறித்தும், யுத்தத்தினால் ஏற்பட்ட நிலைமையின் காரணமாக உண்டாகியிருக்கும் முஸ்லிம்களின் கோரிக்கையைப் பற்றியும் அதில் கூறினேன். அக்கடிதத்தைப் பிரசுரிக்கவும் அனுமதி கேட்டேன். வைசிராயும் மகிழ்ச்சியுடன் அனுமதியளித்தார்.
மகாநாடு முடிந்தவுடனேயே வைசிராய் சிம்லாவுக்குப் போய் விட்டதால், அக்கடிதத்தை அங்கே அனுப்ப வேண்டியிருந்தது. எனக்கோ, அக்கடிதம் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. தபால் மூலம் அனுப்புவதாயிருந்தால் தாமதம் ஆகிவிடவும் கூடும். சீக்கிரத்தில் கடிதம் போய்ச் சேர வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், அதைக் கண்டவர்களிடம் கொடுத்தனுப்பிவிடவும் எனக்கு மனமில்லை. புனிதமான ஒருவர் அதை எடுத்துச் சென்று வைசிராய் மாளிகையில் அவரிடம் நேரில் சேர்ப்பிக்க வேண்டும் என்று விரும்பினேன். கேம்பிரிட்ஜ் மிஷனைச் சேர்ந்த புனித பாதிரியாரான பூஜ்ய அயர்லாந்திடம் கொடுத்தனுப்பலாம் என்று தீனபந்து ஆண்டுரூஸும், பிரதமப் பேராசிரியர் ருத்திராவும் யோசனை கூறினர். கடிதத்தைப் படித்துப் பார்த்து, அது நல்லது என்று தமக்குத் தோன்றினால் அதைக் கொண்டுபோவதாக அவர் ஒப்புக்கொண்டார். அக்கடிதம் ரகசியமானதல்ல வாகையால் அதை அவர் படித்துப் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமில்லை. கடிதத்தை அவர் படித்தார்; அது அவருக்குப் பிடித்திருந்தது. அதைக் கொண்டுபோய்ச் சேர்க்க ஒப்புக்கொண்டார். அவருக்கு இரண்டாம் வகுப்பு ரெயில் கட்டணம் கொடுப்பதாகக் கூறினேன். ஆனால், இன்டர் வகுப்பில் பிரயாணம் செய்வதுதான் தமக்குப் பழக்கம் என்று கூறி அதை வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டார். இரவுப் பிரயாணமாக இருந்தும் இன்டர் வகுப்பிலேயே சென்றார். அவருடைய எளிமையும், நேரிய, ஒளிவு மறைவு இல்லாத போக்கும் என்னைக் கவர்ந்துவிட்டன. இவ்விதம் தூய்மையான உள்ளம் படைத்த ஒருவர் மூலம் அனுப்பப் பெற்ற கடிதம், நான் எண்ணியவாறே விரும்பிய பலனைத் தந்தது. அது என் மனத்திற்கு ஆறுதல் அளித்ததோடு நான் செல்ல வேண்டிய வழியையும் தெளிவுபடுத்தியது.
செய்வதாக நான் ஏற்றுக்கொண்ட கடமையின் மற்றொரு பகுதி, படைக்கு ஆள் திரட்டுவது. இந்த வேலையை கேடாவைத் தவிர நான் வேறு எங்கே ஆரம்பிப்பது? முதலில் சைனியத்தில் சேருபவராக இருக்கும்படி என் சொந்த சக ஊழியர்களைத் தவிர வேறு யாரை நான் அழைக்க முடியும்? ஆகவே, நதியாத்துக்கு நான் போனதுமே வல்லபபாயையும் மற்ற நண்பர்களையும் அழைத்துப் பேசினேன். அவர்களில் சிலர், என் யோசனையை எளிதில் ஏற்றுக்கொண்டு விடவில்லை. என் யோசனை பிடித்திருந்தவர்களுக்கோ, அது வெற்றி பெறுமா என்பதில் சந்தேகம் இருந்தது. எந்த வகுப்பினருக்கு நான் கோரிக்கை வெளியிட விரும்பினேனோ அந்த வகுப்பாருக்கு அரசாங்கத்தினிடம் அன்பு இல்லை. அரசாங்க அதிகாரிகளிடம் அவர்கள் அடைந்த கசப்பான அனுபவம் அவர்கள் மனத்தில் இன்றும் அப்படியே இருந்து வந்தது.
என்றாலும், வேலையைத் தொடங்குவதற்கு அவர்கள் ஆதரவாக இருந்தார்கள். என் வேலையை நான் ஆரம்பித்ததுமே என் கண்கள் திறந்துவிட்டன. நான் கொண்டிருந்த நம்பிக்கை, பயங்கரமான அதிர்ச்சியை அடைந்தது. நிலவரிப் போராட்டத்தின் போது மக்கள் தங்கள் வண்டிகளை வாடகை வாங்கிக் கொள்ளாமலேயே தாராளமாகக் கொடுக்க முன்வந்தார்கள். ஒரு தொண்டர் வேண்டுமென்றபோது, இரண்டு பேர் தொண்டர்களாக வந்தார்கள். அப்படியிருக்க இப்பொழுதோ வாடகைக்கும் ஒரு வண்டி கிடைக்கவில்லை யென்றால் தொண்டர்கள் விஷயத்தைச் சொல்லத் தேவையில்லை. ஆயினும், நாங்கள் அதைரியம் அடைந்து விடவில்லை. வண்டிகளில் போவது என்பதையே விட்டுவிட்டு நடந்தே பிரயாணம் செய்வது என்று தீர்மானித்தோம். இவ்விதம் நாங்கள் தினம் இருபது மைல் நடக்க வேண்டியவர்களானோம். வண்டியே கிடைப்பதில்லை யென்றால், அம் மக்கள் எங்களுக்குச் சாப்பாடு போடுவார்கள் என்று எதிர்பார்ப்பது வீண் வேலை. சாப்பாடு போடுமாறு கேட்பதும் சரியல்ல. ஆகவே, ஒவ்வொரு தொண்டரும் தமக்கு வேண்டிய சாப்பாட்டைக் கையில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தோம். அது கோடைக்காலம். ஆகையால் படுக்கையோ, போர்வையோ தேவைப்படவில்லை.
சென்ற இடங்களிலெல்லாம் கூட்டங்களை நடத்தினோம். அவற்றிற்கு மக்கள் வந்தார்கள். ஆனால், ஒருவர் இருவர் கூட ராணுவத்தில் சேர முன்வரவில்லை. “நீங்கள் அகிம்சையை அனுசரிக்கிறவர்கள். அப்படியிருக்க ஆயுதங்களை ஏந்துமாறு எங்களை நீங்கள் எப்படிக் கேட்கலாம்?” “எங்கள் ஒத்துழைப்பைப் பெறுவதற்கு அரசாங்கம் இந்தியாவுக்கு என்ன நன்மையைச் செய்துவிட்டது?” இவை போன்ற கேள்விகளை யெல்லாம் எங்களைக் கேட்டார்கள் என்றாலும், நிதானமாக நாங்கள் வேலை செய்துகொண்டு போனது பயன் தர ஆரம்பித்தது. பலர் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துகொண்டனர். முதல் கோஷ்டி அனுப்பப்பட்டதுமே தொடர்ந்து ஆட்களை அனுப்பிக் கொண்டிருப்பது சாத்தியமாகும் என்று நம்பினோம். படைக்குச் சேரும் ஆட்களை எங்கே தங்கச் செய்வது என்பதைப் பற்றிக் கமிஷனருடன் ஆலோசிக்கவும் தொடங்கினேன்.
டில்லியில் நடந்த மகாநாட்டை அனுசரித்து, ஒவ்வொரு டிவிஷனிலும் கமிஷனர்கள் மகாநாடுகளை நடத்தினார்கள். அத்தகைய மகாநாடு ஒன்று குஜராத்தில் நடந்தது. என் சக ஊழியர்களையும் என்னையும் அதற்கு அழைத்திருந்தார்கள். நாங்கள் போயிருந்தோம். ஆனால், டில்லி மகாநாட்டில் எனக்கு இருந்த இடம் கூட இதில் எனக்கு இல்லை என்பதை உணர்ந்தேன். அடிமை உணர்ச்சியே நிலவியிருந்த அச்சூழ்நிலை எனக்குச் சங்கடமாக இருந்தது. அங்கே கொஞ்சம் விரிவாகவே பேசினேன். நான் சொன்னதில் அதிகாரிகளுக்குக் கஷ்டமாக இருக்கக்கூடிய இரண்டொரு விஷயங்கள் நிச்சயமாக இருந்தனவேயன்றி அவர்களுக்குத் திருப்தியளிக்கும்படி நான் எதுவும் சொல்ல முடியவில்லை.
படையில் சேரும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு நான் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு வந்தேன். அவற்றில் நான் உபயோகித்த வாதங்களில் ஒன்று கமிஷனருக்குப் பிடிக்கவில்லை. அந்த வாதம் இதுதான்: “இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி செய்திருக்கும் தவறான பல செய்கைகளில், தேச மக்கள் எல்லோருக்குமே ஆயுதப் பயிற்சி இல்லாது போகும்படி செய்திருக்கும் சட்டமே மிகவும் மோசமானது என்று சரித்திரம் கூறும். ஆயுதச் சட்டம் ரத்தாக வேண்டும் என்று நாம் விரும்பினால், ஆயுதங்களை உபயோகிப்பதை நாம் கற்றுக்கொள்ள விரும்பினால், அதற்குப் பொன்னான வாய்ப்பு இதோ இருக்கிறது. அரசாங்கத்திற்குக் கஷ்டம் ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், மத்தியதர வகுப்பினர் வலிய வந்து அதற்கு உதவி செய்வார்களாயின், அவநம்பிக்கை மறைந்துவிடும்; ஆயுதங்கள் வைத்துக் கொள்ளுவதற்கு இருக்கும் தடையும் ரத்தாகிவிடும். கமிஷனர் இதைப்பற்றிக் குறிப்பிட்டு, எங்களுக்குள் அபிப்பிராய பேதமிருந்தும் நான் மகாநாட்டிற்கு வந்ததைப் பாராட்டினார். ஆகவே, என்னால் முடிந்த வரையில் மரியாதையுடன் என் கட்சியிலிருக்கும் நியாயத்தை நான் எடுத்துக் கூற வேண்டியதாயிற்று.
வைசிராய்க்கு நான் எழுதிய மேலே குறிப்பிட்டிருக்கும் கடிதம் இதுவே:
“26-ஆம் தேதி (ஏப்ரல்) தங்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அதில் கண்ட காரணங்களைப் பற்றிக் கவனமாகச் சிந்தித்ததன் பேரில் நான் மகாநாட்டிற்கு வர முடியாமல் இருக்கிறது என்பதை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அதன் பிறகு நீங்கள் எனக்கு அளித்த பேட்டிக்குப் பின்னர் மகாநாட்டில் கலந்து கொள்ளுவது என்று என்னையே திடப்படுத்திக் கொண்டேன். இதற்கு வேறு காரணமில்லாது போயினும், தங்களிடம் நான் கொண்டிருந்த பெரும் மதிப்பே அதற்குக் காரணம். மகாநாட்டிற்கு வருவதில்லை என்று நான் எண்ணியதற்கு ஒரு காரணம், முக்கியமான காரணம் பொதுஜன அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு அதிகச் சக்தி வாய்ந்த தலைவர்கள் என்று நான் கருதும் லோகமான்ய திலகர், ஸ்ரீ மதி பெஸன்ட், அலி சகோதரர்கள் ஆகியவர்களை அம் மகாநாட்டிற்கு அழைக்காதது தான். மகாநாட்டிற்கு வருமாறு அவர்களை அழைக்காது போனது பெரிய தவறு என்றே நான் இன்னும் கருதுகிறேன். அதைத் தொடர்ந்து மாகாண மகாநாடுகள் நடக்கப் போகின்றன என்று அறிகிறேன். அந்த மகாநாடுகளுக்காவது வந்து, அரசாங்கத்திற்கு ஆலோசனை கூறி உதவுமாறு அத்தலைவர்கள் அழைக்கப் படுவார்களானால், நடந்துவிட்ட தவறை நிவர்த்தித்துக் கொள்ள வழி ஏற்படும் என்ற யோசனையைப் பணிவுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இத்தலைவர்கள், ஏராளமான பொதுமக்களின் பிரதிநிதிகளாக உள்ளவர்கள். அரசாங்கத்துடன் மாறுபட்ட கருத்துள்ளவர்களாக அவர்கள் இருந்த போதிலும், எந்த அரசாங்கமும் தலைவர்களை அலட்சியம் செய்து விட முடியாது என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். மகாநாட்டின் கமிட்டிகளில் எல்லாக் கட்சிகளும் தங்கள் அபிப்பிராயத்தைத் தாராளமாக எடுத்துக் கூற அனுமதிக்கப்பட்டது என்பது அதே சமயத்தில் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. என்னைப் பொறுத்த வரையில், நான் இருந்த கமிட்டியிலோ, மகாநாட்டிலோ, வேண்டுமென்றேதான் நான் என் அபிப்பிராயத்தைக் கூறாமல் இருந்துவிட்டேன். மகாநாட்டில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு என் ஆதரவை அளிப்பதோடு இருப்பது மாத்திரமே, மகாநாட்டின் நோக்கத்திற்குச் சிறந்த சேவை செய்ததாகும் என்று கருதினேன். அதையே மனப்பூர்வமாகச் செய்தேன். என்னுடைய உதவித் திட்டம் ஒன்றை இத்துடன் தனிக் கடிதத்தில் அனுப்பியிருக்கிறேன். அதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதுமே மகாநாட்டில் நான் கூறியதைக் காரியத்தில் சீக்கரத்தில் நிறைவேற்றலாம் என நம்புகிறேன்.
“மற்ற குடியேற்ற நாடுகளைப் போன்று நாங்களும், சாம்ராஜ்யத்துடன் கூடிய சீக்கிரத்தில் பங்காளிகளாக ஆகிவிட வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆகையால், இந்தச் சாம்ராஜ்யத்திற்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் இச்சமயத்தில், இப்பொழுது நாங்கள் அளிக்கத் தீர்மானித்திருப்பது போன்று, எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் பூரணமான ஆதரவை அளிக்க வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளுகிறேன். இவ்வாறு உதவி செய்ய முன்வந்திருப்பதற்குக் காரணம், இன்னும் அதிக விரைவில் நமது லட்சியத்தையடைய முடியும் என்று எதிர்பார்ப்பதுதான் என்பதே உண்மை. அந்த வகையில் கடமையைச் செய்வதானாலும், அப்படிச் செய்வோர், அதே சமயத்தில் உரிமையையும் தானே பெறுகின்றனர். ஆகையால், சீக்கிரத்தில் வரப்போவதாக உங்கள் பிரசங்கத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அரசியல் சீர்திருத்தங்கள், முக்கிய அம்சங்களில் காங்கிரஸ் – லீக் திட்டத்தை அனுசரித்தவையாக இருக்கும் என்று எண்ண மக்களுக்கு உரிமை உண்டு. இந்த நம்பிக்கையே அரசாங்கத்திற்கு மனப்பூர்வமான ஒத்துழைப்பை மகாநாட்டில் அளிக்கும்படி பலரைச் செய்தது என்பதில் சந்தேகமில்லை.
“முன்வைத்த காலைப் பின் வாங்கிக் கொள்ளும்படி என் தேச மக்களைச் செய்ய என்னால் முடியுமானால், காங்கிரஸ் தீர்மானங்களையெல்லாம் அவர்கள் வாபஸ் வாங்கிக் கொண்டு, யுத்தம் நடந்து கொண்டிருக்கும் வரையில் ‘சுயாட்சி’, ‘பொறுப்பாட்சி’ என்ற பேச்சைப் பேசக் கூடாது என்று சொல்லி, அவர்கள் அவ்விதமே செய்யும்படியும் செய்வேன். சாம்ராஜ்யத்திற்கு நெருக்கடியான சமயம் ஏற்பட்டிருக்கும் இந்த நேரத்தில், உடல் வலுவுள்ள தம் புதல்வர்கள் எல்லோரையும் இந்தியா, சாம்ராஜ்யத்திற்குத் தியாகம் செய்துவிட முன்வரும்படியும் செய்வேன். இச்செய்கை ஒன்றினாலேயே, சாம்ராஜ்யத்தில் இந்தியா அதிகச் சலுகைகளுடன் கூடிய பங்காளியாகி விடுவதோடு நிற பேதங்களெல்லாம் என்றோ இருந்தவை என்றாகிவிடும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், அனுபவத்தில் படித்த இந்தியர் எல்லோருமே இதைவிடக் குறைந்த பலனுள்ள முறையையே தீர்மானித்திருக்கின்றனர். பொதுமக்களிடையே படித்த இந்தியருக்கு எந்தவிதமான செல்வாக்குமே இல்லை என்று சொல்லிவிடுவது இனியும் சாத்தியமானதன்று. நான் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பியது முதல் விவசாயிகளுடன் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு வருகிறேன். சுயாட்சி ஆர்வம் அவர்களிடையேயும் அதிகமாகப் பரவியிருக்கிறது என்பதை உங்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன். சென்ற காங்கிரஸ் மகாநாட்டிற்குப் போயிருந்தேன். பார்லிமெண்டு நிறைவேற்றும் சட்டத்தின் மூலம் திட்டமாகத் தேதியைக் குறிப்பிட்டு, அந்தக் காலத்திற்குள் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு முழுப் பொறுப்பாட்சியும் அளித்து விட வேண்டும் என்று காங்கிரஸில் தீர்மானம் நிறைவேறியதில் என் பங்கும் உண்டு. அதைச் செய்வது தைரியமான காரியமே என்பதை ஒப்புக் கொள்ளுகிறேன். ஆனால், சாத்தியமான அளவு குறைந்த காலத்திற்குள் சுயாட்சியை அடைய முடியும் என்ற திட்டமான எண்ணம் ஏற்படுவதைத் தவிர வேறு எதுவும் இந்திய மக்களைத் திருப்தி செய்யாது என்பதை நிச்சயமாக அறிகிறேன். இந்த லட்சியத்தை அடைவதற்குச் செய்யும் எந்தத் தியாகமும் பெரியதாகாது என்று எண்ணுகிறவர்கள் இந்தியாவில் அநேகர் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அதே சமயத்தில் எந்தச் சாம்ராஜ்யத்தில் முடிவான அந்தஸ்தை அடைய நினைக்கிறார்களோ, விரும்புகிறார்களோ அந்தச் சாம்ராஜ்யத்திற்காகத் தங்களையே தியாகம் செய்யவும் தயாராக இருக்க வேண்டும் என்பதையும் விழிப்புடன் அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள். ஆகவே, சாம்ராஜ்யத்தை மிரட்டி வரும் அபாயத்திலிருந்து அதைக் காப்பாற்றுவதற்காக மௌனமாகவும் மனப்பூர்வமாகவும் பாடுபடுவதனால் லட்சியத்தை நோக்கிச் செல்லும் நமது பிரயாணத்தைத் துரிதப்படுத்திவிடலாம் என்று ஆகிறது. சாதாரணமானதான இந்த உண்மையை அறியாது போவது தேசியத் தற்கொலையே ஆகும். சாம்ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்கு நாம் பணிபுரிந்தால், அப்பணியிலேயே நாம் சுயஆட்சியை அடைந்தவர்களாகிறோம் என்பதை நாம் கண்டுகொள்ள வேண்டும்.
“ஆகையால், சாம்ராஜ்யத்தின் பாதுகாப்புக்கு நாம் அழைக்கக் கூடிய ஒவ்வொருவரையும் அழைக்க வேண்டும் என்பது எனக்குத் தெளிவாகிறது. ஆனால், பொருளுதவியைப் பொறுத்த வரையில் அவ்வாறு நான் சொல்ல முடியாது என்றே அஞ்சுகிறேன். இந்தியா, தன்னுடைய சக்திக்கு அதிகமாகவே சாம்ராஜ்யத்தின் பொக்கிஷத்திற்குக் கொடுத்திருக்கிறது என்று, விவசாயிகளிடம் நான் கொண்டிருக்கும் நெருங்கிய தொடர்பினால் நிச்சயமாகக் கருதுகிறேன். நான் இவ்விதம் கூறுவது, என் நாட்டு மக்களின் பெரும்பான்மையோரின் அபிப்பிராயத்தைக் கூறுவதாகும் என்பதை அறிவேன்.
“டில்லியில் நடந்த யுத்த மகாநாடு, பொதுவானதோர் லட்சியத்திற்காக எங்கள் வாழ்க்கையை அர்ப்பணம் செய்து கொள்ளுவதில் ஒரு முக்கியமான காரியம் என்று நான் கருதுகிறேன். எங்களில் மற்றும் பலரும் அவ்வாறே கருதுகிறார்கள் என்றே நம்புகிறேன். ஆனால், எங்கள் நிலைமையோ மிகவும் விசித்திரமானது. இன்று நாங்கள் சாம்ராஜ்யத்தில் சம பங்காளிகளாக இல்லை. வருங்காலத்தில் அவ்வாறு ஆகலாம் என்ற நம்பிக்கையின் பேரில் எங்களை அர்ப்பணம் செய்திருக்கிறோம். அந்த நம்பிக்கை என்ன என்பதைத் தெளிவாகவும் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையிலும் உங்களுக்கு நான் கூறாது போனால், உங்களுக்கும் என் நாட்டிற்கும் உண்மையாக நடந்து கொண்டவனாக மாட்டேன். அது நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காக நான் பேரம் பேசவில்லை. ஆனால், நம்பிக்கையில் ஏமாற்றம் என்பது, நம்பிக்கையையே ஒழிப்பதாகும் என்பதை நீங்கள் அறிய வேண்டும். இன்னுமொரு விஷயத்தையும் நான் சொல்லாமல் இருக்கக் கூடாது. நமது சொந்த வித்தியாசங்களை யெல்லாம் மறந்து விடுமாறு எங்களை நீங்கள் கேட்டுக்கொண்டீர்கள். அதிகாரிகளின் கொடுமைகளையும் அக்கிரமங்களையும் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதும் உங்கள் வேண்டுகோளுக்குப் பொருள் என்றால், அதற்கு இணங்க நான் அசக்தனாவேன். கட்டுப்பாடான கொடுமையை நான் கடைசிவரை எதிர்த்தே தீருவேன். ஒருவரைக் கூடத் துன்புறுத்தக் கூடாது என்றும், இதற்கு முன்னால் செய்து வந்ததைப் போல் அல்லாமல் பொதுஜன அபிப்பிராயத்தை மதித்து அவர்களைக் கலந்து ஆலோசித்து நடக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அந்த வேண்டுகோள் கூற வேண்டும். சம்பாரணில் நெடுங்காலமாக இருந்து வந்த கொடுமையை எதிர்த்ததன் மூலம், பிரிட்டிஷ் நீதியின் முடிவான சிறப்பை நான் காட்டியிருக்கிறேன். கேடாவில் அரசாங்கத்தை மக்கள் சபித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றோ உண்மைக்காகத் துன்பங்களை அனுபவிக்கவும் தாங்கள் தயாராகும்போது சக்தி தாங்களே அன்றி அரசாங்கம் அல்ல என்பதை அதே மக்கள் இப்பொழுது உணருகிறார்கள். ஆகவே, அம்மக்களிடமிருந்து மனக்கசப்பு மறைந்து வருகிறது. அநீதிகளை உணரும் போது ஒழுங்கான, மரியாதையான சட்ட மறுப்பை மக்கள் ஆட்சி சகிப்பதால் அரசாங்கம் மக்களின் அரசாங்கமாகவே இருக்க வேண்டும் என்று அம்மக்கள் தங்களுக்குத் தாங்களே சொல்லிக் கொள்கின்றனர்.
“இவ்விதம் சம்பாரண், கேடாக் காரியங்கள், யுத்தத்திற்கு நான் நேரடியாக, திட்டமாகச் செய்த விஷேச உதவிகளாகும். அத்துறையில் என்னுடைய நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு கேட்பது, என் உயிரையே நிறுத்தி வைத்துவிடுமாறு நீங்கள் கேட்பதாகும், மிகுந்த பலத்திற்குப் பதிலாக ஆன்ம சக்தியை, அதாவது அன்பின் சக்தியை எல்லோரும் அனுசரிக்கும்படி நான் செய்ய முடியுமானால், உலகம் முழுவதும் அதனால் முடிந்ததை யெல்லாம் செய்தாலும், அதையும் எதிர்த்து நிற்கக்கூடிய இந்தியாவை உங்களுக்கு நான் காட்ட முடியும். ஆகையால், துன்பத்தைச் சகிப்பது என்னும் இந்த நிரந்தரமான தருமத்தை என் வாழ்க்கையில் வெளிக்காட்டும் வகையில் என்னையே நான் கட்டுத்திட்டங்களுக்கு உட்படுத்திக் கொள்ளுவேன். அதில் சிரத்தையுள்ளோரெல்லாம் இத்தருமத்தை ஏற்றுக்கொள்ளுமாறு உபதேசிப்பேன். நான் வேறு ஏதாவது நடவடிக்கைகளில் ஈடுபடுவேனாயின், அதன் நோக்கம் இந்தத் தருமத்தின் இணையில்லாத உயர்வைக் காட்டுவதற்கே ஆகும்.
“கடைசியாக முஸ்லிம் ராஜ்யங்கள் சம்பந்தமாகத் திட்டமான வாக்குறுதியை அளிக்குமாறு பிரிட்டிஷ் மந்திரிகளை நீங்கள் கேட்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வொரு முகம்மதியரும் இவைகளில் ஆழ்ந்த சிரத்தை கொண்டிருக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஹிந்து என்ற வகையில் நான் அவர்களுடைய விஷயத்தில் அசட்டையாக இருந்து விடக் கூடாது. அவர்களுடைய துயரங்கள் எங்கள் துயரங்களாகவே இருக்க வேண்டும். அந்த ராஜ்யங்களின் உரிமைகளை முற்றும் மதிப்பதிலும், முஸ்லிம்களின் புண்ணிய ஸ்தலங்கள் சம்பந்தமாக அவர்களுடைய உணர்ச்சிகளை மதிப்பதிலும், சுயாட்சி சம்பந்தமான இந்தியாவின் கோரிக்கையை நியாயமாகவும் தக்க காலத்திலும் நிறைவேற்றி வைப்பதிலுமே சாம்ராஜ்யத்தின் பாதுகாப்பு இருக்கிறது. ஆங்கில நாட்டு மக்களை நான் நேசிக்கிறேன். ஆங்கிலேயரிடம் ஒவ்வோர் இந்தியருக்கும் விசுவாசத்தை உண்டுபண்ண வேண்டும் என்று விரும்புகிறேன். அதனாலேயே இதை எழுதுகிறேன்.”
$$$
28. மரணத்தின் வாயிலருகில்
படைக்கு ஆள் திரட்டும் வேலையில் என் உடம்பையே அநேகமாக நாசப்படுத்திக் கொண்டு விட்டேன். அந்த நாட்களில் நிலக்கடலை வெண்ணெயும் எலுமிச்சம் பழமுமே என் முக்கியமான உணவு. அந்த வெண்ணெயையே அதிகமாகச் சாப்பிட்டு விட்டால், அதனால் உடம்புக்குத் தீமை உண்டாகும் என்பது எனக்குத் தெரியும். என்றாலும், அதை நான் அளவுக்கு மிஞ்சியே சாப்பிட்டு விட்டேன். இதனால் எனக்கு இலேசாகச் சீதபேதி ஏற்பட்டது. அதை நான் அதிகமாகப் பொருட்படுத்தாமலேயே அன்று மாலை ஆசிரமத்திற்குச் சென்றேன். அடிக்கடி ஆசிரமத்திற்கு நான் போய்வருவது வழக்கம். அந்த நாட்களில் நான் மருந்து எதுவும் சாப்பிடுவதில்லை. ஒரு வேளை பட்டினி போட்டு விட்டால் உடம்பு குணமாகிவிடும் என்று எண்ணினேன். மறுநாள் காலை சாப்பிடாமல் இருந்ததால் உண்மையில் உடம்பு குணமாகியிருப்பதாகவே உணர்ந்தேன். ஆனால், முழுவதும் குணமடைந்து விட வேண்டுமானால் நீடித்து உபவாசம் இருந்து வர வேண்டும். ஏதாவது சாப்பிடுவதாய் இருந்தாலும் பழரசத்தைத் தவிர வேறு எதுவுமே சாப்பிடக் கூடாது என்பதை அறிவேன்.
அன்று ஏதோ பண்டிகை நாள். மத்தியானம் நான் எதுவும் சாப்பிடப் போவதில்லை என்று கஸ்தூரிபாயிடம் கூறியிருந்தேன். ஆனால், சாப்பிடும் ஆசையை அவள் தூண்டி விட்டாள். அதற்குப் பலியாகி விட்டேன். பாலையோ, பாலினால் ஆனவைகளையோ சாப்பிடுவதில்லை என்று நான் விரதம் கொண்டிருந்ததால், நெய்க்குப் பதிலாக எண்ணெய் விட்டு அவள் எனக்காகக் கோதுமைத் தித்திப்புப் பலகாரம் செய்திருந்தாள். ஒரு கிண்ணம் நிறைய பயிற்றங் கஞ்சியையும் வைத்திருந்தாள். இவைகளை உண்பதில் எனக்கு அதிகப் பிரியம் உண்டு. அவைகளைச் சாப்பிட்டேன். கஸ்தூரிபாயைத் திருப்தி செய்து, என் நாவின் ருசிக்கும் திருப்தி அளிக்கும் அளவு சாப்பிட்டால் கஷ்டப்பட வேண்டி வராது என்றும் நம்பினேன். ஆனால், ருசிப் பிசாசோ எப்பொழுது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்தது. மிகக் கொஞ்சமாகச் சாப்பிடுவதற்குப் பதிலாக வயிறு நிரம்பச் சாப்பிட்டு விட்டேன். இதுவே எமனுக்குப் போதுமான அழைப்பாகி விட்டது. ஒரு மணி நேரத்திற்கெல்லாம் சீதபேதி கடுமையாகத் தோன்றிவிட்டது.
அன்று மாலையே நான் நதியாத்திற்குத் திரும்ப வேண்டியிருந்தது. சபர்மதி ஸ்டேஷனுக்குப் பத்து பர்லாங்கு தூரம்தான். என்றாலும், அதிகக் கஷ்டத்தின் பேரிலேயே அங்கே நடந்து சென்றேன் ஸ்ரீ வல்லபபாய், அகமதாபாத்தில் வந்து என்னோடு சேர்ந்துகொண்டார். நான் உடல் குணமின்றி இருப்பதைக் கண்டார். என்றாலும், வலி எவ்வளவு கடுமையாக இருந்தது என்பதை நான் அவருக்குக் காட்டிக் கொள்ளவே இல்லை.
இரவு பத்து மணிக்கு நதியாத் போய்ச் சேர்ந்தோம். எங்கள் தலைமை ஸ்தானமாக நாங்கள் கொண்டிருந்த ஹிந்து அனாதாசிரமம் ரயிலடியிலிருந்து அரை மைல் தூரம்தான். ஆனால், அது எனக்குப் பத்துமைல் தூரம்போல இருந்தது. எப்படியோ சமாளித்துக் கொண்டு அங்கே போய்ச் சேர்ந்து விட்டேன். ஆனால், வயிற்றிலிருந்த கடுப்பு வலி அதிகரித்துக் கொண்டே போயிற்று. வழக்கமாகப் போகும் கக்கூசு தூரத்தில் இருந்ததால், பக்கத்து அறையிலேயே ஒரு மலச்சட்டி கொண்டுவந்து வைக்கும்படி கூறினேன். இதைக் கேட்க எனக்கு வெட்கமாக இருந்த போதிலும் வேறு வழியில்லை. ஸ்ரீ பூல்சந்திரர், ஒரு மலச்சட்டியைத் தேடிக் கொண்டுவந்து வைத்தார். நண்பர்கள் எல்லோரும் அதிகக் கவலையுடன் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். அவர்கள் என்னிடம் முழு அன்பையும் காட்டி என்னைக் கவனித்துக் கொண்டனர். ஆனால், எனக்கிருந்த வேதனையை அவர்களால் போக்கிவிட முடியாது. என்னுடைய பிடிவாதம் வேறு அவர்களால் ஒன்றும் செய்ய முடியாதபடி செய்து விட்டது. வைத்திய உதவி எதையும் பெற நான் மறுத்து விட்டேன். நான் மருந்தும் சாப்பிடுவதில்லை. நான் செய்துவிட்ட தவறுக்குத் தண்டனையை அனுபவிக்கவே விரும்பினேன். ஆகையால், அவர்கள் எதுவுமே செய்ய இயலாதவர்களாகப் பிரமித்து நின்றனர். இருபத்துநான்கு மணி நேரத்தில் முப்பது, நாற்பது தடவை பேதியாகி விட்டது. ஆரம்பத்தில் பழரசமும் சாப்பிடாமல் பட்டினி இருந்தேன். பசியே இல்லாது போயிற்று. என் உடல் இரும்பு போலப் பலமானது என்று நீண்டகாலமாக நான் எண்ணிவந்தேன். ஆனால், இப்பொழுதோ இவ்வுடல் வெறும் களிமண் பிண்டம்போல் ஆகிவிட்டதைக் கண்டேன். நோயை எதிர்க்கும் சக்தியையெல்லாம் அது இழந்துவிட்டது. டாக்டர் கனுகா வந்து மருந்து சாப்பிடுமாறு வேண்டினார். மறுத்துவிட்டேன். ஊசியினால் குத்தி மருந்தை ஏற்றுவதாகச் சொன்னார். அதற்கும் நான் மறுத்துவிட்டேன். ஊசியினால் குத்தி மருந்தை ஏற்றுவதைப் பற்றி அக்காலத்தில் எனக்கு ஒன்றுமே தெரியாமல் இருந்தது பரிகாசத்திற்குரிய ஒன்றே.
ஊசியினால் குத்தி ஏற்றும் மருந்து ஏதோ பிராணியின் நிணநீராகவே இருக்க வேண்டும் என்று நம்பினேன். ஊசியினால் குத்தி எனக்கு ஏற்றுவதாக டாக்டர் சொன்ன மருந்து, ஏதோ மூலிகையின் சத்து என்பது எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. இதைக் காலங்கடந்தே நான் அறிந்துகொண்டதால் அதனால் பலனில்லாது போயிற்று. தொடர்ந்து வயிற்றுப் போக்கு இருந்தது. நான் முற்றும் களைத்துப்போனேன். களைப்பின் காரணமாக ஜுரமும் பிதற்றலும் ஏற்பட்டன. நண்பர்கள் மேலும் பீதியடைந்து விட்டனர். வேறு பல வைத்தியர்களையும் அழைத்து வந்தார்கள். ஆனால், வைத்தியர்களுடைய யோசனைகளை யெல்லாம் கேட்க மாட்டேன் என்று இருக்கும் நோயாளிக்கு அவர்களால் என்ன செய்ய முடியும்?
சேத் அம்பாலால் தமது உத்தம பத்தினியுடன் நதியாத்திற்கு வந்து என் சக ஊழியர்களுடன் கலந்து ஆலோசித்தார். அகமதாபாத்தில் இருக்கும் தமது மீர்ஜாப்பூர் பங்களாவுக்கு என்னை மிகவும் ஜாக்கிரதையாகக் கொண்டுபோனார். இந்த நோயின்போது நான் பெற்ற அன்பு நிறைந்த தன்னலமற்ற தொண்டைப் போன்று வேறு யாரும் பெற்றிருக்க முடியாது. ஆனால், ஒரு வகையான உள் ஜுரம் மாத்திரம் இருந்துகொண்டே வந்தது. இதனால், நாளுக்கு நாள் உடல் மெலிந்தது. நோய் நீண்டகாலம் நீடித்து இருந்து வரும், அநேகமாக மரணத்திலேயே முடிந்து விடக்கூடும் என்று எண்ணினேன். அம்பாலால் சேத்தின் வீட்டில் என்மீது சொரியப்பட்ட அன்பிற்கும் கவனத்திற்கும் எல்லையே இல்லை. என்றாலும், என் மனம் அமைதியே இல்லாதிருந்தது. என்னை ஆசிரமத்துக்குக் கொண்டுபோய் விடும்படி அவரை வற்புறுத்தினேன். என் வற்புறுத்தலுக்கு அவர் இணங்க வேண்டியதாயிற்று.
ஆசிரமத்தில் இவ்விதம் நான் வலியால் படுக்கையில் புரண்டு கொண்டிருக்கையில், ஜெர்மனி அடியோடு தோற்கடிக்கப்பட்டு விட்டது என்றும், படைக்கு ஆள் திரட்டுவது இனி அவசியமில்லை என்றும் கமிஷனர் சொல்லி அனுப்பியிருக்கிறார் என்றும் ஸ்ரீ வல்லபபாய் செய்தி கொண்டுவந்தார். படைக்கு ஆள் திரட்டுவதைக் குறித்து நான் மேற்கொண்டும் கவலைப்பட வேண்டியதில்லை என்பது எனக்கு அதிக ஆறுதலை அளித்தது.
அப்பொழுது நான் நீர்சிகிச்சை செய்து கொண்டு வந்தேன். அதில் எனக்குக் கொஞ்சம் சுகம் தெரிந்தது. ஆனால், உடம்பு தேறும்படி செய்வது மிகவும் கஷ்டமான வேலையாக இருந்தது. வைத்தியர்கள் பலர் எனக்கு ஏராளமாக ஆலோசனை கூறி வந்தார்கள். ஆனால், அவற்றில் எதையும் அனுசரிக்க எனக்கு விருப்பமில்லை. பால் சாப்பிடுவதில்லை என்ற விரதம் கெடாமல் மாமிச சூப் சாப்பிடலாம் என்றும் இரண்டு, மூன்று வைத்தியர்கள் யோசனை கூறினர். இந்த ஆலோசனைக்கு ஆயுர்வேதத்திலிருந்தும் மேற்கோள்களைக் காட்டினர். அவர்களில் ஒருவர், முட்டைகளைச் சாப்பிடும்படி பலமாகச் சிபாரிசு செய்தார். ஆனால், அவர்கள் எல்லோருக்கும், “முடியாது” என்ற ஒரே பதிலையே நான் கூறி வந்தேன்.
ஆகாரத்தைப் பற்றிய விஷயம், எனக்குச் சாத்திரங்களின் ஆதாரங்களைக் கொண்டு முடிவு செய்யவேண்டியது அன்று. என் வாழ்க்கையின் போக்கு, வெளி ஆதாரங்களை மேற்கொண்டும் நம்பியிராத கொள்கைகளின் வழியை அனுசரித்தது. அதனுடன் பின்னியிருப்பது எனது உணவு விஷயம். அக்கொள்கைகளைப் புறக்கணித்துவிட்டு வாழும் ஆசை எனக்கு இல்லை. என் மனைவி, குழந்தைகள், நண்பர்கள் இவர்கள் விஷயத்தில் இரக்கமற்ற வகையில் நான் வற்புறுத்தி வந்திருக்கும் ஒரு கொள்கையை என் விஷயத்தில் மாத்திரம் நான் எப்படிக் கைவிட்டுவிட முடியும்?
என் வாழ்க்கையில் எனக்கு முதல்முதல் ஏற்பட்ட நீண்ட நாள் தொடர்ந்த நோய் இதுதான். இந்நோய், என் கொள்கைகளைப் பரிசீலனை செய்து சோதிக்கும் வாய்ப்பை இவ்வாறு எனக்கு அளித்தது. ஒரு நாள் இரவு நான் நம்பிக்கையை அடியோடு இழந்துவிட்டேன். மரணத்தின் வாயிலில் நிற்கிறேன் என்றே எனக்குத் தோன்றியது. அனுசூயா பென்னுக்குச் சொல்லி அனுப்பினேன். அவர் ஆசிரமத்திற்குப் பறந்தோடி வந்தார். வல்லபாய், டாக்டர். கனுகாவுடன் வந்து சேர்ந்தார். டாக்டர், என் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு, “உங்கள் நாடியெல்லாம் நன்றாகவே இருக்கிறது. அபாயம் எதுவும் இல்லவே இல்லை. பலவீனம் அதிகமாக இருப்பதால் ஏற்பட்டிருக்கும் ஆயாசம் இது” என்றார். ஆனால், எனக்கு மட்டும் நம்பிக்கை உண்டாகவில்லை. அன்று இரவெல்லாம் எனக்குத் தூக்கமே வரவில்லை.
சாவு வராமலேயே பொழுது விடிந்துவிட்டது. ஆனால், முடிவு சமீபித்துவிட்டது என்ற உணர்ச்சி மாத்திரம் விடாமல் எனக்கு இருந்தது. ஆகவே ஆசிரமவாசிகளைக் கீதையைப் படிக்கச் சொல்லிக் கேட்பதிலேயே விழித்திருக்கும் நேரம் முழுவதையும் கழித்து வந்தேன். என்னால் படிக்க முடியாது. பிறரிடம் பேசும் விருப்பமும் எனக்கு இல்லை. கொஞ்சமும் பேசினாலும் மூளைக்குக் களைப்பாயிருந்தது. வாழ்வதற்காகவே வாழ வேண்டும் என்ற விருப்பம் எனக்கு என்றுமே இல்லையாகையால், வாழ்வில் எல்லாச் சுவையும் போய் விட்டது. ஒன்றும் செய்ய முடியாமல் நண்பர்களிடமும் சக ஊழியர்களிடமும் வேலை வாங்கிக்கொண்டு உடல் மெள்ளத் தேய்ந்துகொண்டே போவதைக் காணும் மோசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த துன்பமாகவே இருந்தது.
இவ்விதம் சதா சாவை எதிர்பார்த்துக்கொண்டு நான் படுத்திருந்த போது, டாக்டர் தல்வல்கர், ஒரு விசித்திர ஆசாமியை அழைத்துக்கொண்டு அங்கே வந்தார். மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர் அந்த ஆசாமி. அவர் பிரசித்தமானவர் அன்று. ஆனால், அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரும் என்னைப் போன்ற ஒரு பைத்தியம் என்பதைக் கண்டுகொண்டேன். தம்முடைய சிகிச்சை முறையை என்னிடம் சோதித்துப் பார்ப்பதற்காகவே அவர் வந்தார். கிரான்ட் வைத்தியக் கல்லூரியில் அவர் அநேகமாகப் படித்து முடித்துவிட்டார். ஆனால், இன்னும் பட்டம் பெறவில்லை. அவர் பிரம்ம சமாஜத்தில் ஓர் அங்கத்தினர் என்று பின்னால் எனக்குத் தெரிந்தது. ஸ்ரீ கேல்கர் என்பது அவர் பெயர். சுயேச்சையான, பிடிவாதப் போக்குள்ளவர் அவர். பனிக்கட்டிச் சிகிச்சையில் அவருக்கு அதிக நம்பிக்கை. அந்தச் சிகிச்சையை என்னிடம் பரீட்சிக்க விரும்பினார். அவருக்குப் ‘பனிக்கட்டி டாக்டர்’ என்று பெயர் வைத்தோம். தேர்ந்த டாக்டர்களுக்கும் தெரியாது போன சில விஷயங்களைத் தாம் கண்டுபிடித்திருப்பதாக அவருக்குத் திடமான நம்பிக்கை உண்டு. தமது சிகிச்சையில் அவர் கொண்டிருந்த நம்பிக்கை என்னையும் தொத்திக் கொள்ளும்படி செய்ய முடியாது போனது, எங்கள் இருவருக்குமே பரிதாபகரமான விஷயமாகும். ஒரு குறிப்பிட்ட அளவு வரையில், அவருடைய சிகிச்சை முறையை நான் நம்புகிறேன். ஆனால், அவர் அவசரப்பட்டே சில முடிவுகளுக்கு வந்துவிட்டார் என்று அஞ்சுகிறேன்.
அவர் கண்டுபிடித்திருப்பவைகளின் குணாதிசயங்கள் எதுவாக இருந்தாலும், என் உடலில் அவற்றைப் பரிசோதிக்க அவரை நான் அனுமதித்தேன். உடலுக்கு வெளியில் செய்யும் சிகிச்சையைப் பற்றி எனக்கு ஆட்சேபமில்லை. உடம்பு முழுவதற்கும் பனிக்கட்டி வைத்துக் கட்டுவதே அவருடைய சிகிச்சை. அவருடைய சிகிச்சையினால் என் உடம்பில் ஏற்பட்ட குணத்தைக் குறித்து அவர் சொல்லிக் கொண்டதை அங்கீகரிக்க என்னால் முடியா விட்டாலும், எனக்கு ஒரு புதிய நம்பிக்கையையும் பலத்தையும் என்னுள் அது நிச்சயமாக உண்டாக்கியது. இயற்கையாகவே மனநிலை உடம்பிலும் பிரதிபலித்தது. எனக்குப் பசியெடுக்க ஆரம்பித்தது. ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மெல்ல நடக்கவும் தொடங்கினேன். அப்பொழுது அவர் என் ஆகாரத்தில் ஒரு சீர்திருத்தம் செய்ய யோசனை கூறினார். அவர் கூறியதாவது: “நீங்கள் பச்சை முட்டைகளைச் சாப்பிட்டால் அதிகச் சக்தியைப் பெற்று சீக்கிரமாகப் பழைய பலத்தை அடைவீர்கள் என்று உறுதியாகக் கூறுகிறேன். முட்டைகள், பாலைப் போலத் தீங்கில்லாதவை. நிச்சயமாக முட்டை புலால் ரகத்தைச் சேர்ந்ததல்ல. முட்டைகள் எல்லாமே குஞ்சு பொரிக்கக் கூடியவை அல்ல என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்விதம் குஞ்சு பொரிக்காதவைகளாக்கப்பட்ட முட்டைகளும் விற்கின்றன.”
என்றாலும், குஞ்சு பொரிக்காதவை ஆக்கப்பட்டுவிட்ட முட்டைகளைச் சாப்பிடவும் நான் தயாராயில்லை. ஆனால், என் உடல்நிலையில் ஏற்பட்ட அபிவிருத்தி, பொதுக் காரியங்களில் நான் சிரத்தை கொள்ளுவதற்குப் போதுமானதாக இருந்தது.
$$$
29. ரௌலட் மசோதாக்கள் : என் மனக்குழப்பம்
மாதேரானுக்குப் போய் அங்கே தங்கினால், சீக்கிரத்தில் என் உடம்பு தேறும் என்று டாக்டர்களும் நண்பர்களும் கூறினார்கள். ஆகவே, நான் அங்கே போனேன். ஆனால், மாதேரானில் தண்ணீர் உப்பாக இருந்ததால் அங்கே நான் தங்குவது கஷ்டமாகிவிட்டது. வயிற்றுக் கடுப்பு நோய் ஏற்பட்டு நான் கஷ்டப்பட்டு விட்டதால் என் ஆசனவாய் மென்மையாகிவிட்டது. இதனால் மலம் கழிக்கும்போது ஆசனவாயில் எனக்குத் தாங்கமுடியாத வலி இருந்தது. ஆகையால், சாப்பிடுவது என்று நினைத்தாலே எனக்கு ஒரே பயமாக இருந்தது. ஒரு வாரம் முடிவதற்கு முன்னாலேயே மாதேரானிலிருந்து நான் போய்விட வேண்டியதாயிற்று. அப்பொழுது சங்கர்லால் பாங்கர் என் உடல் நிலையின் காவலராக இருந்து வந்ததால், டாக்டர் தலாலைக் கலந்து ஆலோசிக்குமாறு என்னை வற்புறுத்தினார். அதன் பேரில் டாக்டர் தலாலை அழைத்து வந்தனர். உடனுக்குடனேயே முடிவுக்கு வந்துவிடுவதில் அவருக்கு இருந்த ஆற்றல் என்னைக் கவர்ந்தது.
அவர் கூறியதாவது: “நீங்கள் பால் சாப்பிட்டாலன்றி உங்கள் உடம்பு தேறும்படி செய்வது என்னால் முடியாது. அதோடு அயம், ஆர்ஸனிக் ஆகிய மருந்துகளை ஊசிமூலம் குத்திக் கொள்ளுவீர்களானால் உங்கள் உடம்பைத் தேற்றி விடுவதாக நான் முற்றும் உத்தரவாதம் அளிக்க முடியும்.”
அதற்கு நான், “ஊசி குத்தி மருந்தை நீங்கள் ஏற்றலாம். ஆனால், பால் சாப்பிடுவது என்பது வேறு விஷயம். பால் சாப்பிடுவதில்லை என்று விரதம் பூண்டிருக்கிறேன்” என்றேன். அதன் பேரில் டாக்டர், “உங்கள் விரதத்தில் தன்மைதான் என்ன?” என்று கேட்டார்.
பசுவையும் எருமையையும் பால் கறப்பதற்கு பூக்கா முறையை அனுசரிக்கிறார்கள் என்று எனக்குத் தெரிந்ததிலிருந்து நான் இந்த விரதத்தை மேற்கொண்டதைப் பற்றிய வரலாற்றையும், அவ்விரதத்தின் காரணத்தையும், அவருக்கு எடுத்துக் கூறினேன். “பால் என்றாலே எனக்குப் பலமான வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. மேலும், பால், மனிதனுக்கு இயற்கையான ஆகாரம் அல்ல என்றே எப்பொழுதும் கருதி வந்திருக்கிறேன். ஆகையால், அதை உபயோகிப்பதை அடியோடு நிறுத்திவிட்டேன்” என்றேன். அப்பொழுது கஸ்தூரிபாய் என் படுக்கைக்கு அருகில் நின்றுகொண்டு நாங்கள் பேசிக் கொண்டிருந்ததை யெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள்.
“அப்படியானால், ஆட்டுப்பால் சாப்பிடுவதற்கு உங்களுக்கு எவ்விதமான ஆட்சேபமும் இருப்பதற்கில்லை” என்று குறுக்கிட்டுச் சொன்னாள்.
டாக்டரும் அவள் கூறியதைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டார். “நீங்கள் ஆட்டுப்பால் சாப்பிட்டால் அதுவே எனக்குப் போதும்” என்றார், அவர்.
நானும் உடன்பட்டு விட்டேன். சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று எனக்கு இருந்துவந்த தீவிர ஆர்வம், நான் உயிரோடிருக்க வேண்டும் என்ற பலமான ஆசையை என்னுள் உண்டாக்கி விட்டது. எனவே, விரதத்தைச் சொல்லளவில் மாத்திரம் அனுசரித்துவிட்டு, அதன் உட்கருத்தை தத்தம் செய்துவிட என்னையே திருப்தி செய்து கொண்டேன். நான் விரதம் எடுத்துக்கொண்ட போது பசுவின் பாலும் எருமைப் பாலுமே. என் எண்ணத்தில் இருந்தனவென்றாலும், அதன் இயற்கையான பொருளின்படி, எல்லா மிருகங்களின் பாலும் அதில் அடங்கியதே. மேலும், பால், மனிதனின் இயற்கையான ஆகாரம் அல்ல என்ற கருத்து எனக்கு இருக்கும் வரை, எந்தப் பாலையும் நான் சாப்பிடுவது சரியே அல்ல. இவைகளையெல்லாம் அறிந்திருந்தும் ஆட்டுப் பால் சாப்பிடச் சம்மதித்தேன். உயிரோடு இருக்க வேண்டும் என்பதில் கொண்ட உறுதி, சத்தியத்தினிடம் கொண்ட பற்றை விடப் பலமானதாக நிரூபிக்கப்பட்டு விட்டது. சத்தியாக்கிரகப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தினால், சத்தியத்தை வற்புறுத்தி வந்த நான், தெய்வீகமான கொள்கையை விட்டுக் கொடுத்து விட்டேன். இச்செய்கையின் நினைவு இன்னும் என் உள்ளத்தில் உறுத்திக் கொண்டிருப்பதோடு எனக்கு மனச் சஞ்சலத்தையும் உண்டாக்கி வருகிறது. ஆட்டுப் பால் சாப்பிடுவதை எப்படி விட்டு விடுவது என்பதைக் குறித்துச் சதா சிந்தித்தும் வருகிறேன். ஆனால், சேவை செய்ய வேண்டும் என்ற மிகுந்த, அடக்கமான ஆசை எனக்கு இன்னும் இருந்து கொண்டுதான் வருகிறது. அதிலிருந்து விடுபட இன்னும் என்னால் முடியவில்லை.
அகிம்சை ஆராய்ச்சியின் ஒரு பகுதியாகவுள்ள என்னுடைய ஆகார சோதனைகள் எனக்கு மிகவும் முக்கியமானவை. அவை என் மனத்திற்கு ஆறுதலையும் ஆனந்தத்தையும் அளிக்கின்றன. ஆனால், நான் ஆட்டுப்பால் சாப்பிட்டு வருவது வாக்குறுதியை மீறியதேயாதலால், அகிம்சையை ஒட்டிய ஆகார வகையில் அல்ல, சத்திய வகையில், இன்று எனக்கு அதிகச் சங்கடமாக இருந்து வருகிறது. அகிம்சையின் லட்சியத்தை விட சத்தியத்தின் லட்சியத்தையே நான் நன்றாகப் புரிந்துகொள்ளுகிறேன் என்று எனக்குத் தோன்றுகிறது. சத்தியத்தில் எனக்கு இருக்கும் பிடிப்பை நான் விட்டுவிடுவேனாயின், அகிம்சையின் புதிரை அறிந்துகொள்ள என்னால் என்றுமே முடியாது என்பதை அனுபவம் எனக்குக் கூறுகிறது. மேற்கொள்ளும் விரதங்களை, அதன் சொல்லுக்கும் பொருளுக்கும் ஏற்ப நிறைவேற்றி வைக்க வேண்டியது, சத்தியத்தின் லட்சியத்திற்கு அவசியமாகிறது. இந்த விஷயத்திலோ, என் விரதத்தின் பொருளை அதன் ஆன்மாவைக் கொன்றுவிட்டு அதன் வெளித் தோற்றத்தை மாத்திரமே அனுசரிக்கிறேன். எனக்கு இதுதான் வேதனையளிக்கிறது. ஆனால், இதை நான் தெளிவாக அறிந்திருந்தும், நேரான வழி என் முன்னால் எனக்குத் தென்படவில்லை. இன்னும் சொன்னால், நேரான வழியைப் பின்பற்றுவதற்கு வேண்டிய தைரியம் எனக்கு இல்லை. அடிப்படையில் இரண்டுக்கும் பொருள் ஒன்றுதான். ஏனெனில், எப்பொழுதுமே, நம்பிக்கை இல்லாததனாலும் பலவீனத்தினாலுமே சந்தேகம் உண்டாகிறது. ஆகவே, ஆண்டவனே! எனக்கு நம்பிக்கையைக் கொடு” என்று நான் இரவு பகலாகப் பிரார்த்தித்துக் கொண்டு வருகிறேன்.
நான் ஆட்டுப்பால் சாப்பிட ஆரம்பித்ததுமே டாக்டர் தலால் எனக்கு ஆசனவாய்க் கோளாறுக்கு வெற்றிகரமான ரணசிகிச்சை செய்து முடித்தார். என் உடல் பலம் பெற்று வரவே, முக்கியமாகக் கடவுள் நான் செய்வதற்கென்று வேலையைத் தயாராக வைத்திருந்ததால், உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை எனக்குத் திரும்பவும் பிறந்தது.
குணமடைந்து வருகிறேன் என்று நான் உணர ஆரம்பித்ததுமே, ரௌலட் கமிட்டியின் அறிக்கையை தற்செயலாகப் பத்திரிகையில் படித்தேன். அந்த அறிக்கை அப்பொழுதுதான் வெளியாகியிருந்தது. அக்கமிட்டியின் சிபாரிசுகள் என்னைத் திடுக்குறச் செய்தன. சங்கரலால் பாங்கரும், உமார் சோபானியும் என்னிடம் வந்து, இவ்விஷயத்தில் நான் உடனே ஏதாவது நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று யோசனை கூறினார்கள். ஒரு மாதத்தில் நான் அகமதாபாத்திற்குப் போனேன். அநேகமாகத் தினமும் என்னைப் பார்ப்பதற்கு வல்லபபாய் வருவார். அவரிடம் எனக்கு இருந்த சந்தேகங்களைக் கூறினேன். “ஏதாவது செய்தாக வேண்டும்” என்றேன். அதற்கு அவர், “இந்த நிலைமையில் நாம் என்ன செய்ய முடியும்?” என்று என்னைக் கேட்டார்.
நான் சொன்னதாவது: “அம்மசோதாக்களை எதிர்ப்பது என்ற பிரதிக்ஞையில் கையெழுத்திட ஒரு சிலர் கிடைத்தாலும் போதும். அதையும் பொருட்படுத்தாமல் சட்டம் செய்யப்பட்டு விடுமானால், நாம் உடனே சத்தியாக்கிரகத்தை ஆரம்பித்துவிட வேண்டியதே. நான் இதுபோல் நோயுற்றுக் கிடக்காமல் இருந்தால், மற்றவர்கள் என்னைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்து நானே தன்னந்தனியாக அதை எதிர்த்துப் போராடுவேன். ஆனால், நான் இப்பொழுது இருக்கும் இத்திக்கற்ற நிலைமையில் அந்த வேலை என்னால் ஆகாது என்றே எண்ணுகிறேன்.”
இவ்விதம் நாங்கள் பேசியதன் பேரில், என்னுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர்களை யெல்லாம் அழைத்து ஒரு கூட்டம் கூட்டுவது என்று முடிவாயிற்று. ரௌலட் கமிட்டி அறிக்கையில் பிரசுரமாகியிருக்கும் சாட்சியங்களைக் கொண்டு பார்த்தால், அக்கமிட்டியின் சிபாரிசுகள் அவசியமில்லாதவை என்று எனக்குத் தோன்றியது. மானமுள்ள யாரும் அந்தச் சிபாரிசுகளுக்கு உடன் பட்டு இருந்து விடமுடியாது என்றும் உணர்ந்தேன்.
முடிவாக அக்கூட்டமும் ஆசிரமத்தில் நடந்தது. இருபதுபேர் கூட அக்கூட்டத்திற்கு அழைக்கப்படவில்லை. வல்லபபாயைத் தவிர ஸ்ரீ மதி சரோஜினி நாயுடு, ஸ்ரீ ஹார்னிமன், காலஞ்சென்ற ஸ்ரீ உமார் சோபானி, ஸ்ரீ சங்கரலால் பாங்கர், ஸ்ரீமதி அனுசூயா பென் ஆகியவர்களே அக்கூட்டத்திற்கு வந்திருந்தார்கள் என்று எனக்கு ஞாபகம். சத்தியாக்கிரக பிரதிக்ஞை நகலை இக்கூட்டத்தில் தயாரித்தோம். வந்திருந்தவர்கள் எல்லோரும் அதில் கையெழுத்திட்டார்கள் என்றும் எனக்கு ஞாபகம். அச்சமயம் நான் எந்தப் பத்திரிகையையும் நடத்தவில்லை. ஆனால், என் கருத்துக்களை எப்பொழுதாவது தினப்பத்திரிகைகளின் மூலம் வெளியிட்டு வருவேன். இச்சமயமும் அவ்வாறே செய்தேன். சங்கரலால் பாங்கர் இக்கிளர்ச்சியில் தீவிரமாக இறங்கிவிட்டார். வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து, உறுதியுடன் விடாமல் வேலை செய்வதில் அவருக்கு இருந்த அற்புதமான ஆற்றலைப்பற்றி முதல் தடவையாக அப்பொழுதுதான் நான் தெரிந்து கொண்டேன்.
சத்தியாக்கிரகத்தைப் போன்ற புதியதானதோர் ஆயுதத்தை, அப்பொழுது இருந்த ஸ்தாபனங்களில் எதுவும் அனுசரிக்கும் என்ற நம்பிக்கையெல்லாம் வீண் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, என்னுடைய யோசனையின் பேரில் சத்தியாக்கிரக சபை என்ற ஒரு தனி ஸ்தாபனம் ஆரம்பமாயிற்று. அதன் முக்கியமான அங்கத்தினர்களெல்லாம் பம்பாயைச் சேர்ந்தவர்கள். ஆகையால், அதன் தலைமைக் காரியாலயம் அங்கே அமைக்கப்பட்டது. அச்சங்கத்தில் சேர ஏராளமானவர்கள் விரும்பிப் பிரதிக்ஞையில் கையெழுத்திட்டார்கள். துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டோம். பொதுக்கூட்டங்கள் எல்லா இடங்களிலும் நடந்தன. கேடாச் சத்தியாக்கிரகப் போராட்டத்தின் முக்கியமான அம்சங்களை இவையெல்லாம் நினைவூட்டின.
சத்தியாக்கிரக சபைக்கு நான் தலைவனானேன். இச் சபையில், படித்த அறிவாளிகள் என்று இருந்தவர்களுக்கும் எனக்கும் அபிப்பிராய ஒற்றுமை இருப்பதற்கில்லை என்பதைச் சீக்கிரத்திலேயே கண்டுகொண்டேன். சபையில் குஜராத்தி மொழியையே உபயோகிக்க வேண்டும் என்று வற்புறுத்தினேன். அதோடு, என்னுடைய மற்றும் சில வேலை முறைகளும் அவர்களுக்கு விசித்திரமாகத் தோன்றியதோடு அவர்களுக்குக் கவலையையும் சங்கடத்தையும் உண்டாக்கின. ஆனால், அவர்களில் அநேகர் பெரிய மனதோடு என்னுடைய விசித்திரப் போக்குகளை எல்லாம் சகித்துக்கொண்டார்கள் என்பதையும் நான் சொல்லவே வேண்டும்.
ஆனால், சபை நீண்ட காலம் உயிரோடு இருக்காது என்பது ஆரம்பத்திலிருந்தே எனக்குத் தெளிவாகத் தெரிந்து விட்டது. சத்தியத்தையும் அகிம்சையையும் நான் வற்புறுத்தி வந்தது அச்சபையின் அங்கத்தினர்களில் சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதையும் நான் கண்டுகொள்ள முடிந்தது. என்றாலும், ஆரம்பக் கட்டங்களில் எங்களுடைய புதிய நடவடிக்கை அதிக வேகமாக நடந்துகொண்டு வந்தது; இயக்கமும் தீவிரமாகப் பரவலாயிற்று.
$$$
30. அந்த அற்புதக் காட்சி!
இவ்வாறு ஒரு பக்கம் ரௌலட் கமிட்டி அறிக்கையை எதிர்த்து நடந்த கிளர்ச்சி வளர்ந்து, தீவிரமாகிக்கொண்டு வந்த சமயத்தில், மற்றொரு பக்கத்தில் அரசாங்கம், அக் கமிட்டியின் அறிக்கையை அமுலுக்குக் கொண்டு வருவதில் மேலும் மேலும் அதிக உறுதிகொண்டது. ரௌலட் மசோதாவையும் பிரசுரித்தார்கள். இந்திய சட்டசபைக் கூட்டத்திற்கு என் வாழ்நாளில் ஒரே ஒரு முறை நான் போயிருக்கிறேன். அது, இந்த மசோதாவின் பேரில் அந்தச் சபையில் விவாதம் நடந்தபோதுதான். அப்பொழுது சாஸ்திரியார் ஆவேசமாகப் பேசினார். அரசாங்கத்திற்குப் பலமான எச்சரிக்கையும் செய்தார். வைசிராய் பிரமித்துப்போய் அப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்ததாகத் தோன்றியது. சாஸ்திரியார் தமது சூடான பேச்சு வன்மையைப் பொழிந்து கொண்டிருந்த போது வைசிராய், கண்கொட்டாமல் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருடைய பேச்சில் உண்மையும், உணர்ச்சியும் நிறைந்திருந்தன.
ஒருவர் உண்மையிலேயே தூங்கிக்கொண்டிருந்தால் அவரை எழுப்பிவிட முடியும். ஆனால், தூங்குவதாகப் பாசாங்குதான் செய்கிறார் என்றால், அப்படிப்பட்டவரை என்னதான் முயன்றாலும் எழுப்பிவிட முடியாது. அரசாங்கத்தின் உண்மையான நிலைமையும் அதுதான். அது, முன்னாலேயே இதில் ஒரு தீர்மானம் செய்து கொண்டு விட்டது. இதற்குச் சட்டரீதியான சடங்குகளை நிறைவேற்றி விடவேண்டும் என்பதில் மாத்திரமே அது கவலை கொண்டு விட்டது. ஆகையால் சாஸ்திரியாரின் உண்மையான எச்சரிக்கை அரசாங்கத்தினிடம் ஒரு மாறுதலையும் உண்டு பண்ணவில்லை.
இத்தகையதோர் நிலைமையில் என் பேச்சு வனாந்தரத்தில் இட்ட ஓலமாகவே முடியும். வைசிராயை நான் மன்றாடிக் கேட்டுக்கொண்டேன். அந்தரங்கமாகவும் பகிரங்கமாகவும் அவருக்குக் கடிதங்கள் எழுதினேன். அரசாங்கத்தின் செய்கையால், சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளுவதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லாமல் போகிறது என்று அக் கடிதங்களில் கூறினேன். ஆனால், ஒன்றும் பயன்படவே இல்லை.
மசோதாக்கள் இன்னும் சட்டங்களாக கெஜட்டில் பிரசுரமாகவில்லை. நானோ, அதிக பலவீனமான நிலையில் இருந்தேன். என்றாலும், சென்னையிலிருந்து எனக்கு அழைப்பு வந்ததும், அந்த நீண்ட பிரயாணத்தினால் ஏற்படக்கூடிய அபாயத்திற்கும் துணிவது என்று முடிவு செய்தேன். அச்சமயம் பொதுக் கூட்டங்களில் போதிய அளவு உரக்கப் பேச என்னால் முடியாது. பொதுக்கூட்டங்களில் நின்றுகொண்டு பேசுவதற்கும் இயலாது. அந்த நிலைமை எனக்கு இப்பொழுதும் இருந்து வருகிறது. நின்றுகொண்டு நீண்ட நேரம் பேச முயல்வேனாயின் என் உடம்பு முழுவதும் நடுக்கமெடுக்கும்; மூச்சுத் திணறும்.
தென்னாடு எப்பொழுதுமே எனக்குச் சொந்த வீடுபோல் தோன்றும். தென்னாப்பிரிக்காவில் நான் செய்த வேலையின் காரணமாகத் தமிழர் மீதும் தெலுங்கர்மீதும் எனக்கு ஒருவகையான தனியுரிமை இருப்பதாகவே நான் உணர்ந்தேன். தென்னாட்டின் நல்ல மக்கள், என் நம்பிக்கையை என்றும் பொய்ப்பித்தது இல்லை. காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காரின் கையொப்பத்துடன் அழைப்பு வந்தது. ஆனால், அந்த அழைப்புக்கு முக்கியமான காரணஸ்தராக இருந்தவர் ராஜகோபாலாச்சாரியாரே என்பதைப் பிறகு நான் சென்னைக்குப் போகும் வழியில் தெரிந்துகொண்டேன். அவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது அதுவே முதல் தடவை என்று சொல்லலாம். அது எப்படியாயினும், முதல் தடவையாக ஒருவரையொருவர் நேரில் அறிந்து கொண்டது அப்பொழுதுதான்.
காலஞ்சென்ற ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார் போன்ற நண்பர்கள் வற்புறுத்தி அழைத்ததன் பேரிலும், பொது வாழ்க்கையில் மேலும் தீவிரமான பங்கு வகிக்கலாம் என்ற நோக்கத்தின் பேரிலும், அப்பொழுது கொஞ்ச காலத்திற்கு முன்னால்தான் ராஜகோபாலாச்சாரியார் சென்னையில் வக்கீல் தொழிலை நடத்த சேலத்திலிருந்து வந்திருந்தார். சென்னையில் அவரோடேயே நாங்கள் தங்கினோம். ஆனால், அவருடன் இரு தினங்கள் தங்கியிருந்ததற்குப் பின்னாலேயே இதை நான் கண்டுபிடித்தேன். ஏனெனில், நாங்கள் தங்கியது ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்காருக்குச் சொந்தமான பங்களா ஆகையால் அவருடைய விருந்தினராகவே நாங்கள் தங்கி இருக்கிறோம் என்று எண்ணினேன். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு விஷயத்தை கூறினார். அவர் வெகு சீக்கிரத்தில் ராஜகோபாலாச்சாரியாருடன் நெருங்கிய பழக்கம் கொண்டு விட்டார். ராஜகோபாலாச்சாரியாரோ, தமது சங்கோஜத் தன்மையினால் எப்பொழுதும் பின்னுக்கே இருந்து வந்தார். ஆனால், மகாதேவ தேசாய் எனக்கு யோசனை சொன்னார். “இவருடன் நீங்கள் நெருங்கிய பழக்கம் வைத்துக்கொள்ள வேண்டும்” என்று அவர் ஒரு நாள் சொன்னார்.
அவ்வாறே செய்தேன். போராட்டத்தின் திட்டங்களைக் குறித்துத் தினமும் சேர்ந்து வாதித்தோம். ஆனால், பொதுக் கூட்டங்களை நடத்துவதைத் தவிர வேறு எந்த வேலைத் திட்டமும் எப்பொழுதும் எனக்குத் தோன்றவில்லை. ரௌலட் மசோதா முடிவில் சட்டமாக்கப்பட்டு விடுமானால், அதை எதிர்த்துச் சாத்விகச் சட்ட மறுப்புச் செய்வது எப்படி என்பது எனக்கு விளங்கவே இல்லை. சட்டத்தை மறுப்பதற்கு அரசாங்கம் சந்தர்ப்பம் அளித்தால்தான் அச்சட்டத்தை ஒருவர் மீற முடியும். அதில்லாது போனால், மற்ற சட்டங்களை நாம் சாத்விக முறையில் மீற முடியுமா? அப்படிச் செய்வதாயின் அதற்கு எந்த இடத்தில் வரம்பை நிர்ணயிப்பது? இதையும் இதுபோன்ற பல விஷயங்களையும் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
விஷயத்தை நன்கு பரிசீலனை செய்து முடிவுக்கு வருவதற்காக ஸ்ரீ கஸ்தூரிரங்க ஐயங்கார், தலைவர்கள் அடங்கிய சிறு கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அதில் முக்கியமான பங்கெடுத்துக் கொண்டவர்களில் ஸ்ரீ விஜயராகவாச்சாரியாரும் ஒருவர். சத்தியாக்கிரக சரித்திரத்தின் நுட்பமான விவரங்கள் அடங்கிய விரிவான குறிப்பு நூல் ஒன்றை நான் தயாரிக்க வேண்டும் என்று அவர் யோசனை கூறினார். அந்த வேலை என் சக்திக்குப் புறம்பானது என்பதை உணர்ந்தேன். அதை அவரிடம் தெரிவித்தும் விட்டேன். இந்த ஆலோசனைகளெல்லாம் நடந்து கொண்டிருக்கையில், ரௌலட் மசோதா சட்டமாகப் பிரசுரமாகிவிட்டது என்ற செய்தி கிடைத்தது. அதைப் பற்றி யோசித்தவாறே அன்றிரவு தூங்கி விட்டேன். மறுநாள் அதிகாலையில் வழக்கமாக எழுவதற்குக் கொஞ்சம் முன்பாகவே எழுந்துவிட்டேன். தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையேயுள்ள நிலையில் நான் இருக்கும்போது திடீரென்று எனக்கு ஒரு யோசனை தோன்றியது. அது கனவைப் போன்றே இருந்தது. காலையில் அதன் விவரம் முழுவதையும் ராஜ கோபாலச்சாரியாரிடம் கூறினேன்:
“நேற்றிரவு கனவில் ஒரு யோசனை வந்தது. பொது ஹர்த்தாலை நடத்த வேண்டும் என்று தேச மக்களைக் கேட்டுக் கொள்ளுவது என்பதே அது. ஆன்மத் தூய்மை செய்துகொள்ளும் ஒரு முறையே சத்தியாக்கிரகம். நம்முடைய போராட்டமோ, ஒரு புனிதமான போராட்டம். ஆகையால், அதை ஆன்மத் தூய்மை செய்து கொள்ளுவதோடு ஆரம்பிப்பதே சரி என்று எனக்குத் தோன்றுகிறது. எனவே, இந்திய மக்கள் எல்லோரும் அன்று தங்கள் வேலைகளையெல்லாம் நிறுத்திவிட்டு உபவாசம் இருந்து பிரார்த்தனை செய்யட்டும். முஸ்லிம்கள் ஒரு நாளுக்கு மேல் பட்டினி விரதம் இருக்க மாட்டார்கள். ஆகவே, பட்டினி விரதம் இருக்கும் நேரம் 21 மணி என்று இருக்க வேண்டும். இந்த நமது கோரிக்கையை எல்லா மாகாணங்களுமே ஏற்றுக் கொண்டு நடத்தும் என்று சொல்லுவதற்கில்லை. ஆனால், பம்பாய், சென்னை, பீகார், சிந்து ஆகிய மாகாணங்கள் அனுசரிப்பது நிச்சயம் என்று எண்ணுகிறேன். இந்த இடங்களிலெல்லாம் ஹர்த்தால் சரியானபடி அனுஷ்டிக்கப் பட்டாலும் நான் திருப்தியடையக் காரணம் உண்டு என்றே கருதுகிறேன்.”
என்னுடைய இந்த யோசனையை ராஜகோபாலச்சாரியார் உடனே ஏற்றுக்கொண்டார். பிறகு இதை மற்ற நண்பர்களுக்கு அறிவித்தபோது அவர்களும் வரவேற்றார்கள். சுருக்கமான வேண்டுகோள் ஒன்றை நான் தயாரித்தேன். 1919 மார்ச் 30-ஆம் தேதி ஹர்த்தால் அனுஷ்டிப்பது என்று முதலில் நிர்ணயிக்கப் பட்டது. ஆனால், பிறகு ஏப்ரல் 6-ஆம் தேதி என்று மாற்றினோம். இவ்விதம் மக்களுக்குச் சொற்ப கால அவகாசத்துடனேயே அறிவித்தோம். நீண்டகாலத்திற்கு முன்னால் அறிவிப்பது சாத்தியமில்லை.
இதெல்லாம் எவ்விதம் நடந்ததென்பதை யார் அறிவார்கள்? இந்தியா முழுவதிலும் ஒரு மூலையிலிருந்து மற்றோர் மூலை வரையில் பட்டணங்களும் கிராமங்களும் அன்று பூரணமான ஹர்த்தாலை அனுஷ்டித்தன. அது மிகவும் அற்புதமான காட்சியாக இருந்தது.
$$$