இந்தியாவின்   ‘பீம ஸ்மிருதி’

-ம.வெங்கடேசன்

தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் (நேஷனல் கமிஷன் ஃபார் சஃபாய் கரம்சாரிஸ் – என்சிஎஸ்கே) என்ற அரசு சார் அமைப்பின் தலைவரான திரு. ம.வெங்கடேசன் எழுதிய கட்டுரை இது…
அரசியல் சாசன அமைப்புக் குழு

சுதந்திர இந்தியாவுக்கென தனித்த அரசியல் சாஸனம் வடிவமைக்கப்பட வேண்டும் என்ற சிந்தனை எழுந்தவுடன், மூத்த காங்கிரஸ் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசியல் சாசன சபையின் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 டிசம்பர் 13 அன்று அரசியல் சாசன சபையில் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்து இப்பணியை அவர் ஆரம்பித்து வைத்தார். இதில் டிசம்பர் 17-இல் டாக்டர் அம்பேத்கர் தனது முதல் கன்னிப்பேச்சை சாதாரண உறுப்பினராகவே தொடங்கினார்.

டிசம்பர் 1946-லிருந்து ஜூன் 1947 வரை அரசியல் சாஸன சபையில் அரசியல் சாஸனத்தை வரைவதிலும் பல குழுக் கூட்டங்களிலும் டாக்டர் அம்பேத்கரின் தலைசிறந்த பங்களிப்பை பல மூத்த தலைவர்கள் கண்கூடாக்க க்ண்டனர். டாக்டர் அம்பேத்கர் அரசியல் சாஸன சபையில் ஏறத்தாழ அனைத்து முக்கிய குழுக்களிலும், அவரது அறிவுத் திறனையும் பங்களிப்பையும் பிறர் உணர்ந்திருந்த காரணத்தால் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

பின்னர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு உதவ ஒரு பரந்த ஆலோசனைக்குழு ஏற்படுத்தப்பட்டது. அக்குழுவுக்கு சர்தார் வல்லபபாய் படேல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும் உறுப்பினராக டாக்டர் அம்பேத்கர் இருந்தார். பல்வேறு சூழ்நிலைகளில் குழுவின் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலும் மூத்த தலைவர் ராஜாஜியும் அம்பேத்கரின் கருத்துகளை வரவேற்றுப் பாராட்டினார்கள்.

அதேசமயம், இடைக்கால அரசின் தலைவராக இருந்த ஜவஹர்லால் நேரு தலைமையில் ஐக்கிய அரசியல் சாஸனக் குழு அமைக்கப்பட்டது. நேரு இக்கூட்டத்துக்கு வர இயலாதபோது தற்காலிகத் தலைவராக டாக்டர் அம்பேத்கர் தேர்ந்தெடுக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு.

இதற்கிடையே அரசியல் சாஸன சபையின் உறுப்பினர் பதவியை டாக்டர் அம்பேத்கர் இழந்துவிட்டார். டாக்டர் அம்பேத்கர் இல்லாத நிலையில், சாஸன சபையின் பணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டது. சபையின் வேலைகள் அனைத்திற்கும் பின்னடைவு ஏற்பட்டது. இதை உணர்ந்த ராஜேந்திரபிரசாத், சர்தார் வல்லபபாய் படேல் மும்பையில் முதல்வராக இருந்த திரு.பி.ஜி.கேர் என்பவருக்கு கடிதம் எழுதி ‘டாக்டர் அம்பேத்கரைத் தேர்ந்தெடுக்க வழி செய்ய முயற்சி செய்யுங்கள்’ என்று எழுதினார். ஒரு காலத்தில் காங்கிரசை எதிர்த்துப் போராடிய டாக்டர் அம்பேத்கரின் சேவை சாஸன சபைக்கு எவ்வளவு இன்றியமையாததாக இருந்தது என்பதை மாபெரும் காங்கிரஸ் தலைவர்களே உணர்ந்திருந்தனர் என்பதை, இக்கடிதங்கள் நமக்கு உணர்த்தும். மீண்டும் டாக்டர் அம்பேத்கர் சபையின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே, இந்திய அரசியல் சாஸனம் வரைய சரியான ஒருவர் கிடைக்கவில்லையென காந்தியிடம் கூறி பல நாடுகளுக்கு சாஸனங்களை வரைந்த சர் ஐவர் ஜென்னிங்ஸை அழைக்க பிரதமர் நேரு அனுமதி கோரினார். காந்திஜி இதற்கு மறுப்புத் தெரிவித்து, டாக்டர் அம்பேத்கர் பெயரைப் பரிந்துரைத்தார்.

மேலும் டாக்டர் அம்பேத்கரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளுமாறு காந்திஜி கூறியபோது, தயக்கம் காட்டிய நேரு, டாக்டர் அம்பேத்கர் இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தார் என்று கூறினார். ஆனால் காந்திஜியோ ‘டாக்டர் அம்பேத்கரின் திறமைகள், புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

நேருவின் தயக்கத்துடனேயே தான், டாக்டர் அம்பேத்கர் நாட்டின் முதல் சட்ட அமைச்சரானார். 1947, ஆகஸ்ட் 29-இல் அரசியல் சாஸன சபை ஒரு குழுவை அமைத்தது. டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், திரு. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், திரு. என்.கோபால்சாமி ஐயங்கார், திரு. கே.எம்.முன்ஷி, திரு. சையது முகமது சாதுல்லா, சர்.பி.எல்.மிட்டர், திரு. டி.பி.கைத்தான்- இவர்கள்தான் வரைவுக்குழுவினர். இக்குழுவுக்கு டாக்டர் அம்பேத்கர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தக் குழுதான் அரசியல் சாஸன வரைவை முழுமையாகத் தயாரித்தது. டாக்டர் அம்பேத்கர் மிகக் கடுமையாகவே உழைத்தார்.

அரசியல் சாஸனம் வரைவதில் டாக்டர் அம்பேத்கரின் பணி எவ்வாறு இருந்தது என்பதை டி.டி.கிருஷ்ணமாச்சாரி எவ்வாறு பாரட்டினார் என்று பாருங்கள்:

“அரசியல் சாசனம் வரைவதில் டாக்டர் அம்பேத்கரின் ஆர்வத்தையும் கடுமையான உழைப்பையும் நான் அறிவேன். சபையால் வரைவுக் குழுவுக்கு அமர்த்தப்பட்ட எழுவரில், ஒருவர் பணியிலிருந்து நீங்கிவிட்டார். ஒருவர் காலமாகிவிட்டார். அந்த இடம் நிரப்பப்படவில்லை. இன்னொருவர் அமெரிக்கா சென்றுவிட்டார். மற்றொருவர் மாநில வேலைகளில் ஈடுபட்டிருந்தார். ஓரிருவர் தில்லியிலிருந்து தொலைவில் இருந்த்தால், அவர்களுடைய உடல்நிலை காரணமாக வருகை தர இயவில்லை. ஆதலால் அரசியல் சாஸனம் வரையும் முழுப் பொறுப்பும் டாக்டர் அம்பேத்கரிடம் சென்றது. அவர் அக்கடமையைச் செவ்வனே செய்ததால் நாம் அவருக்கு நன்றியுடையவராகிறோம் எனக் கூறுவதில் எந்த ஐயமும் இல்லை”

-என்று கூறினார் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி. அந்த அளவுக்கு டாக்டர் அம்பேத்கரின் பணி நிகரற்றதாக இருந்தது.

1949 செப்டம்பர் 16 அன்று எல்லா ஷரத்துகளின் மீதும் நடைபெற்ற விவாதங்கள் முடிவடைந்தன. செப்டம்பர் 17 அன்று டாக்டர் அம்பேத்கர் ஒரு தீர்மானத்தை மொழிந்தார். அதன்மீதான விவாதம் 10 வாரங்களுக்கு நடைபெற்றது. இறுதியாக டாக்டர் அம்பேத்கரைப் பாராட்டி பேசிய உறுப்பினர்களின் பேச்சுகளை ஆராய்ந்தால் டாக்டர் அம்பேத்கரின் பணி எவ்வளவு முக்கியமானது என்பது விளங்கும்.

திரு. சேட் கோவிந்ததாஸ்: முதலில் இந்த அமைப்புச் சட்டத்துக்கு சரியான வடிவத்தைக் கொடுப்பதற்கு பாடுபட்ட டாக்டர் அம்பேத்கரைப் பாராட்ட விரும்புகிறேன். அவர் தனக்குத் தரப்பட்ட பணியை மிகத் திறமையாகச செய்து முடித்திருக்கிறார்.

திரு. குலாதர் சாலிஹா: இந்த அற்புதமான அமைப்புச் சட்டத்தை எவ்வளவோ இடப்ப்பாடுகளுக்கிடையில் தயாரித்த வரைவுக் குழுவினரையும், எல்லாவற்றுக்கும் மேலாக இக்குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களையும் வாழ்த்த நான் கடமைப்பட்டுள்ளேன்.

திரு. டி.பிரகாசம்: டாக்டர் அம்பேத்கர் ஒரு சட்ட மேதை. இவர் இங்கு செய்த பணியால் இங்கிலாந்து நாட்டின் அரசு வழக்கறிஞராக ஆவதற்கும் தகுதி பெற்றவர் என மெய்ப்பித்துள்ளார்.

திரு. எச்.ஜே.காண்டேகர்: இந்த அமைப்புச் சட்டத்தை நான் ‘மகர் சட்டம்’ என்று அழைக்கிறேன். ஏனென்றால் டாக்டர் அம்பேத்கர் ஒரு மகர். மனுநீதியை நாம் அகற்றிவிட்டு மகர் நீதியைப் பெற்றுள்ளோம். மனுநீதியால் நாட்டிற்கு எந்தப் பயனும் இல்லை. மகர் நீதியால் இந்த நாட்டை ஒரு சொர்க்க பூமியாக ஆக்குவோம்.

திரு. மக்பூப் அலி பேக்: இந்த அமைப்புச் சட்டத்தை மிகத் திறமையோடு வடிவமைத்த டாக்டர் அம்பேத்கர் அவர்களை நான் பாராட்டுகிறேன். அமைப்புச் சட்டத்தின் நுணுக்கங்களைப் பற்றியும், குறிப்பாக நிதித்துறை சம்பந்தமாகவும் அவருக்கு இருக்கின்ற அறிவு, அவரது பேச்சுத்திறன் ஆகியவையெல்லாம் அற்புதமானவை. முழுமையானவையும் கூட.

திரு. எஸ்.நாகப்பா: இந்த அருஞ்செயலின் மூலம் பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்கள் திறமையற்றவர்கள் என்கிற மாசு துடைக்கப்பட்டுவிட்டது. அத்துடன் அல்லாமல் வாய்ப்புகள் கிடைக்குமேயானால் மற்றவர்களை மிஞ்சவும் முடியும் என்பதும் தெளிவாகத் தெரிந்துவிட்டது. இதற்காக நான் டாக்டர் அம்பேத்கர் அவர்களைப் பாராட்டுகிறேன்.

திரு. ஜஸ்பத்ராய் கபூர்: டாக்டர் அம்பேத்கர் இந்த சபையில் ஆற்றிய முதல் உரை, அதற்குப் பிறகு பல நேரங்களில் ஏற்பட்ட சிக்கல்களைத் திறமையுடன் இவர் நீக்கிய முறை, அமைப்புச் சட்டத்துக்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் ஆகியவற்றைப் பார்க்கின்றபோது, டாக்டர் அம்பேத்கர் மிகச்சிறந்த தேசபக்தர் என நான் கூறுவேன்.

திரு. சியாமாநந்தன் சகாயா: நம் நாட்டின் விடுதலையை மகாத்மா காந்தி பெற்றுத் தந்தார். அதனுடைய அமைப்புச் சட்டத்தை, மகாத்மாவைக் கடுமையாக விமர்சித்த சட்டமேதையான டாக்டர் அம்பேத்கர் உருவாக்கியுள்ளார். இவரை நம்முடைய சாஸன சபை மட்டுமல்லாமல் நம்முடைய நாடே பாராட்டக் கடமைப்பட்டுள்ளது.

திரு. கோபால் நாராயண்: இவர் வடிவமைத்த இந்த மாபெரும் அமைப்புச் சட்டத்தில் எந்த ஒரு பொருளையும் இவர் விட்டுவிடவில்லை. டாக்டர் அம்பேத்கரைப் பற்றி நான் ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இவர் அறிவுத் தன்மையின் மனித உருவம் மட்டுமல்ல, தனக்குப் பேரும் புகழும் சேர்த்துக் கொண்டுள்ளார்.

திரு. ஆர்.வி.துலேர்: நம் எதிரில் வைக்கப்பட்டதானது ஒரு மாபெரும் பணி. டாக்டர் அம்பேத்கர் இதனை மிகவும் திறமையாகச் செய்து முடித்திருக்கிறார். இந்தப் பணியானது பாண்டவர்களில் பீமனின் பெருஞ்செயல் போன்றது. அவரது பெயர் பீமராவ் அம்பேத்கர். தன்னுடைய பெயருக்கு ஏற்ப இருந்தது அவருடைய பணி. தெளிவான பேச்சு, தொலைநோக்கு இவற்றின் மூலம் எதிர்வரிசையில் அமர்ந்திருந்த எல்லா உறுப்பினர்களின் எண்ணங்களையும் நன்றாகப் புரிந்துகொண்டு அவற்றிற்கேற்ப தம்முடைய கருத்துகளைத் தெளிவான பாணியில் கூறினார்.

திரு. அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்: டாக்டர் அம்பேத்கர் இந்த வரைவு அமைப்புச் சட்டத்தின் தலைவராக, தன்னுடைய அயராத உழைப்பின் மூலமாக எவ்வளவு திறமையுடன் இதனை வடிவமைத்துள்ளார் என்பதனை நான் பாராட்டாவிட்டால், என்னுடைய பொறுப்பிலிருந்து தவறியவனாவேன்.

திரு. கே.எம்.ஜேதே: பட்டியலின மக்கள் டாக்டர் அம்பேத்கரை வெகுவாகப் பாராட்டிப் போற்றி வருகின்றனர். ஆகவே, இந்த அரசியல் அமைப்புச் சட்டத்தை ‘பீம் ஸ்மிருதி’ என்றுதான் அழைக்க வேண்டும். சட்டத்தின் மூலமாகத் தீண்டாமையை ஒழித்து விட்டார் டாக்டர் அம்பேத்கர்.

திரு. ஃபிரேங்க் அந்தோணி: இந்த கனமான, கடினமான அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்குவதில் அவர் எவ்வளவு கடுமையாக உழைத்திருக்க வேண்டுமென்று நம்மால் ஆழ்ந்து பார்க்கக்கூட இயலாது.

1949 நவம்பர் 25-இல் டாக்டர் அம்பேத்கர் நிறைவுரையாற்றினார். அதன்பின்னர் டாக்டர் பாபு ராஜேந்திர பிரசாத் கூறினார்:

“இந்த நாற்காலியில் நான் அமர்ந்து கொண்டு, அன்றாடம் இந்த மன்றத்தின் நடவடிக்கைகளைக் கவனித்துக்கொண்டு வந்த நேரங்களிலெல்லாம், வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய உடல்நலம் குன்றியிருந்தாலும் எவ்வளவு ஆர்வத்துடனும் அக்கறையுடனும் தன்னுடைய கடமையை ஆற்றியுள்ளார் என்று உணர்ந்தேன். நாம் டாக்டர் அம்பேத்கர் அவர்களை வரைவுக் குழுவின் தலைவராகத் தேர்ந்தெடுத்தது எவ்வளவு சரியான முடிவு என்பதையும் நான் உணர்ந்தேன். இந்த முடிவு எவ்வளவு சரியானது என்பதை அவர் மெய்ப்பித்தது மட்டுமல்லாமல் தன்னுடைய பணிக்கு அவர் மெருகு ஏற்றியுள்ளார் என்றே கூற வேண்டும்”.

-இப்படி எல்லோரும் அரசியல் சாஸனம் வரைவதில் டாக்டர் அம்பேத்கர் ஆற்றிய பணியை (பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள் தான்) கூறினாலும், இப்போதைய காங்கிரஸ்காரர்களுக்கு அதை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் ஏனோ தெரியவில்லை. அதனால் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களே, டாக்டர் அம்பேத்கரின் பணியைப் பாராட்டியிருக்கிறார்:

“டாக்டர் அம்பேத்கரைக் காட்டிலும் அரசியல் சாஸனம் உருவாவதற்கு வேறு யாரும் அதிக அக்கறையும் உழைப்பும் எடுத்துக் கொள்ளவில்லை என்பதில் ஐயமில்லை.”

இதுதான் இந்திய அரசியல் சாஸனம் வடிவமைத்த சிற்பியின் கதை. இந்த நாடு உள்ள வரை, இந்த நாட்டுக்கென தனித்த சிறப்புடைய அரசியல் சாஸனத்தை வடிவமைத்த டாக்டர் பீமராவ் அம்பேத்கரின் புகழும் நிலைத்திருக்கும்.

மனு ஸ்மிருதியின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தி, சமுதாயத்தின் பெரும்பகுதி மக்களை தீண்டத்தகாதவர்களாக்கி அடக்கியாண்ட ஆதிக்க சக்திகளுக்கு தனது கடுமையான உழைப்பாலும், நேர்மையான நடத்தையாலும் சரியான மருந்தைக் கொடுத்தார் அம்பேத்கர். ஒருமைப்பாட்டை வலுவாக்கும் ‘பீம ஸ்மிருதி’ என்று அழைக்கத் தக்க அற்புதமான அரசியல் சாஸனத்தை அவர் வழங்கிச் சென்றார்.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s