-சுவாமி சந்திரசேகரானந்தர்
பூஜ்யஸ்ரீ சுவாமி சந்திரசேகரானந்தர், திருப்பராய்த்துறை ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் துறவி. தேவிப்பட்டினத்தில் உள்ள தபோவன மடத்தின் நிர்வாகி. சுவாமி விவேகானந்தரின் 150வது ஜெயந்திக் கொண்டாட்டத்தின் போது இவர் எழுதிய கட்டுரை இது….

சுவாமி விவேகானந்தரை நாம் எல்லோரும் கொண்டாட முக்கிய காரணம் என்ன?
அவர் தன்னிடத்தில் உள்ளவற்றை உலகுக்கு வழங்கினார். புத்தரைப் போன்று அன்பையும் ஆதிசங்கரரைப் போன்று அறிவையும் ஆஞ்சநேயரைப் போன்று ஆற்றலையும் உலகுக்குக் கொடுத்தார். பசி, தாகத்தை பொருட்படுத்தாமல், மரணத்துக்கும் அஞ்சாமல், காடு மலைகளை கால்நடையாகக் கடந்து மக்களைச் சந்தித்தார். அல்லும் பகலும் அவர்களின் வறுமையை, அறியாமையைப் போக்கச் சிந்தித்தார்; பேசினார். ராமகிருஷ்ண இயக்கத்தை நிரந்தரமாகத் தொண்டு புரிய உருவாக்கி, பரம்பரையாக அப்பணியைச் செய்ய துறவிப்படையை நியமித்து இருக்கிறார்.
இந்திய விடுதலைக்குப் போராடிய நமது தலைவர்கள் அனைவரும் அவருடைய வாழ்க்கை, வார்த்தைகளினால் தேச பக்தியையும், சேவை செய்ய ஊக்கத்தையும், ஆற்றலையும் பெற்றார்கள். இதை அவர்களுடைய வார்த்தைகளின் மூலமாகவே அறிகிறோம்.
இந்தியாவின் அரசியல் மறுமலர்ச்சிக்கும், பொருளாதார, விஞ்ஞான வளர்ச்சிக்கும் மூல காரணம் சுவாமிஜி. “விதவையின் கண்ணீரைத் துடைக்காத, பசித்த வயிறுக்கு உணவளிக்காத ஒரு மதம் எனக்குத் தேவையில்லை” என்று முழங்கிய புரட்சித் துறவி சுவாமி விவேகானந்தர். அதனால் தான் இன்று அவருடைய வார்த்தைகளை, பொன்மொழிகளை மேற்கோள் காட்டிப் பேசாத அரசியல், சமூக, இலக்கியச் சொற்பொழிவுகள் இல்லை. இது அவருடைய அன்புக்கு எடுத்துக்காட்டு.
பாம்பாட்டிகள் வாழும் நாடு இந்தியா என்ற மேல்நாட்டு மக்களின் தவறான கருத்தைத் தன்னுடைய வேதாந்தப் பிரசாரத்தால் ஒழித்தார். பண்டைய பாரதத்தின் ஞானப் பொக்கிஷங்களை, அழகான, ஆழ்ந்த ஆங்கில அறிவினால் உலகமறியச் செய்தார். மத நல்லிணக்கத்துக்கும் அஹிம்சைக்கும், வந்தாரை வாழ வைக்கும் பண்பாட்டுக்கும் இந்தியா பல்லாயிரம் வருடங்களாக முன்மாதிரியாக இருந்திருக்கிறது. எத்தனையோ படையெடுப்புகளால் கொள்ளையடிக்கப்பட்ட போதும் அதனுடைய ஆன்மிக வாழ்க்கை மூலம் பாரதம் தலைநிமிர்ந்து அழியாமல் இருக்கிறது. இந்தியாவின் உயிர்நாடி ஆன்மிகம் என்று ஒரு சரித்திர ஆசிரியரைப் போல் புள்ளிவிவரமாக மேல்நாட்டு மக்களுக்கு விளக்கினார். அவர் பேசாத விஷயமே இல்லை.
கலை, ஞானம், பன்மொழிப் புலமை, விளையாட்டு, சங்கீதம் எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் சுவாமிஜி. மேலைநாடு, கீழைநாடுகளின் தத்துவ ஞானம், அவரிடம் அனுபவபூர்வமாக இருந்தது. சுருக்கமாக சொல்லப்போனால், இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயர்த்தினார் சுவாமிஜி. அது இன்றும் தொடர்கிறது.
கல்வி சீர்திருத்தம், பெண்கள் முன்னேற்றம், தனிமனித ஒழுக்கம், தொண்டு நிறுவனங்கள், அறிவியல் தொழில்நுட்பம்- இவை எல்லாவற்றையும் குறித்து சுவாமிஜி பேசியுள்ளார். அவருடைய புத்தகங்களை இன்று அறிஞர்கள் ஆய்வு செய்கிறார்கள்; அதன்படி செயல்படுகிறார்கள். சாதனையாளர்களின் சாதனைக்கெல்லாம் மூல காரணம் யார் என்றால் மறு வார்த்தை சுவாமி விவேகானந்தர் என்பார்கள். அவருடைய சிறு புத்தகங்கள் பலருடைய வாழ்க்கையை மேலான வாழ்க்கையாக மாற்றியிருக்கின்றன.
இனி ஆற்றலுக்கு வருவோம். அவருடைய கம்பீரமான தோற்றத்தைப் பார்க்கும் பொழுதே ஆற்றல் வரும். ஆஞ்சநேயருக்கு குழந்தையாக இருக்கும் பொழுது மும்மூர்த்திகளும் தேவர்களும் வரங்களைக் கொடுத்தார்கள். அதுபோல, ‘சுவாமிஜி பிறவிலேயே ஞானி. சப்தரிஷிகளில் ஒருவர்’ என்று பகவான் ராமகிருஷ்ணர் சொன்னார்.
அனுமன் விஸ்வரூபம் எடுத்துக் கடலைத் தாண்டினார். வழியில் பல தடைகளை தனது அன்பால், அறிவால், ஆற்றலால் முறியடித்தார். அதுபோல் சுவாமிஜியும் இந்த உலகம் அனைத்தையும் தனது ஆத்மாவாகவே கருதினார். இலங்கையில் ஆஞ்சநேயர் அவமானங்களைச் சந்தித்தார். அதை வேண்டுமென்றே ஏற்றுக்கொண்டார். அதுபோல் சுவாமிஜி அந்த போக பூமியில் அறிமுகம் இன்றி செலவுக்குப் பணம் இன்றிப் பல சோதனைகளை எதிர்த்து, இறைவன் அருளால் உலகப் புகழை அடைகிறார்.
ஆஞ்சநேயர் செய்தது ராமகாரியம் என்றால், சுவாமிஜி செய்தது பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அவதார நோக்கத்தை நிறைவேற்றும் காரியம். இருவருக்கும் பல விதங்களில் ஒற்றுமை இருக்கிறது. உலகப்புகழ் அடைந்தாலும் அது அவரை அசைக்கவில்லை. கஷ்டப்படும் மக்களுக்காக கண்ணீர் சிந்தினார்; கதறியழுதார். என்றும் இளைஞனின் தோற்றத்தில் இருந்து கொண்டே, ஜாம்பவான் ஆஞ்சநேயருக்கு ஆத்ம போதத்தை தட்டியெழுப்பியது போல இளைஞர்களுக்கு தியாகத்தையும், தெய்வீகத்தையும், எல்லையற்ற வலிமையும், அன்பின் சக்தியையும் நிலைப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.
“உன்னால் எதையும் சாதிக்க முடியும்; எல்லா ஆற்றல்களும் உன்னிடத்தில் இருக்கின்றன”என்கிறார் சுவாமிஜி. அவருடைய அனல் பறக்கும் ஞானக் கருத்துக்கள் மனிதனை விலங்குத் தன்மையிலிருந்து தெய்வத்தன்மைக்கு உயர்த்துபவையாகும்.
அச்சம் என்பதை அறியாதவர் சுவாமிஜி; புலியை மூன்று முறை அருகிலேயே சந்தித்திருக்கிறார். சிறு குழந்தையாக இருக்கும் பொழுதே வேகமாக வந்த குதிரை வண்டியை கைகளை நீட்டி நிறுத்தி, தெருவில் விளையாடிய குழந்தையைக் காப்பாற்றி இருக்கிறார். ஆர்ப்பரிக்கும் குமரிக்கடலில் எதிர்நீச்சல் போட்டுச் சென்று அங்குள்ள தீவுப் பாறையில் தியானித்து, அந்த இடத்தையே நாட்டிற்கு வழிகாட்டும் இடமாக மாற்றினார்
தரைப்படை, கப்பல்படை, விமானப்படை போன்ற பாதுகாப்பு படையினர் நாட்டைக் காக்க பணியாற்றுகின்றனர். ராணுவம் இந்தியாவைக் காப்பாற்றுமோ இல்லையோ, சுவாமிஜியின் கருத்துக்கள் நாட்டை காக்கும் வல்லமை கொண்டவை. விவேகானந்தரின் உபதேசங்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே ஒரு பாதுகாப்புப்படை ஆகும்.
இயந்திர சக்தியை விட பன்மடங்கு வலிமை வாய்ந்தது ஆத்ம சக்தி. அந்த ஆத்ம சக்தியைத் தரும் ஆற்றலின் சுரங்கமான சுவாமிஜியின் நூல்களைத் திரும்பத் திரும்பப் படிப்போம். நாமும் பயன்பெற்று, இந்த உலகத்துக்கும் நற் பயனுடையவர்களாக வாழ்வோம். இதுதான் சுவாமிஜி நம்மிடம் எதிர்பார்ப்பது ஆகும்.
ஜெய் ஸ்ரீ சுவாமிஜி மஹராஜ் கீ ஜெய்!
$$$