பாஞ்சாலி சபதம் – 1.1.17

-மகாகவி பாரதி

பாண்டவரை சூதுக்கழைக்கச் செல்லும் அமைச்சர் விதுரன்,  போகும் வழியில் பாண்டவர் நாட்டின் வளமையைக் கண்டு வியக்கிறார். இத்துணை சிறப்பு மிக்க நாட்டிற்கு தீது இழைக்கதானும் ஒரு கருவியாகி விட்டேனே என்று மனம் வருந்துகிறார் இப்பாடலில்...

முதல் பாகம்

1.1.அழைப்புச் சருக்கம்

1.1.17. விதுரன் தூது செல்லுதல்

வேறு

அண்ணனிடம் விடைபெற்று விதுரன் சென்றான்;
      அடவிமலை ஆறெல்லாம் கடந்துபோகித்
திண்ணமுறு தடந்தோளும் உளமும்கொண்டு
      திருமலியப் பாண்டவர்தாம் அரசு செய்யும்
வண்ணமுயர் மணிநகரின் மருங்கு செல்வான்
      விழியிடையே நாட்டினுறு வளங்கள் நோக்கி
எண்ணமுற லாகித்தன் இதயத்துள்ளே
      இனையபல மொழிகூறி இரங்கு வானால்.       115

‘நீலமுடி தரித்தபல மலைசேர் நாடு,
      நீரமுதம் எனப்பாய்ந்து நிரம்பும் நாடு,
கோலமுறு பயன்மரங்கள் செறிந்து வாழுங்
      குளிர்காவுஞ் சோலைகளுங் குலவு நாடு,
ஞாலமெலாம் பசியின்றிக் காத்தல் வல்ல
      நன்செய்யும் புன்செய்யும் நலமிக் கோங்கப்
பாலடையும் நறுநெய்யும் தேனு முண்டு
      பண்ணவர்போல மக்களெலாம் பயிலும் நாடு,       116

‘அன்னங்கள் பொற்கமலத் தடத்தின் ஊர
      அளிமுரலக் கிளிமழலை அரற்றக் கேட்போர்
கன்னங்கள் அமுதூறக் குயில்கள் பாடும்
      காவினத்து நறுமலரின் கமழைத் தென்றல்
பொன்னங்க மணிமடவார் மாட மீது
      புலவிசெயும் போழ்தினிலே போந்து வீச,
வன்னங்கொள் வரைத்தோளார் மகிழ,மாதர்
      மையல்விழி தோற்றுவிக்கும் வண்மை நாடு,       117

‘பேரறமும் பெருந்தொழிலும் பிறங்கு நாடு,
      பெண்க ளெல்லாம் அரம்பையர்போல் ஒளிரும் நாடு,
வீரமொடு மெய்ஞ்ஞானம் தவங்கள் கல்வி
      கேள்விஎனும் இவையெல்லாம் விளங்கு நாடு,
சோரமுதற் புன்மையெதுந் தோன்றா நாடு,
      தொல்லுலகின் முடிமணிபோல் தோன்று நாடு,
பாரதர்தந் நாட்டிலே நாச மெய்தப்
      பாவியேன் துணைபுரியும் பான்மை என்னே!’       118

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s