-பேரா. பிரேமா நந்தகுமார்
திருமதி பிரேமா நந்தகுமார் (83), நாடறிந்த பேச்சாளர்; அரவிந்தர் இலக்கிய ஆய்வாளர்; பாரதி ஆய்வாளர்; ஸ்ரீரங்கத்தில் வசிக்கிறார். தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல நூல்களை எழுதி இருக்கிறார். ‘சுப்பிரமணிய பாரதி, இந்தியப் பண்பாட்டுக் கருவூலம் – உலக ஆன்மிகச் செல்வம், இந்தியத் தத்துவம், சரித்திரம் மற்றும் பண்பாடு’ போன்ற ஆய்வேடுகள் இவரது சிறப்பான பங்களிப்புகளாகும். நமது தளத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த இவரது இரண்டாவது கட்டுரை இது….

அனுமன் கடலைத் தாண்டி வந்து ராமனின் கணையாழியை சீதாப் பிராட்டியிடம் தந்து, அவள் தந்த சூடாமணியை மீண்டும் ராமனிடம் சேர்ப்பிக்கிறான். அன்று அனுமன் கடலைக் கடந்து சென்றதும், வந்ததும் நமக்கு ராமராஜ்யத்தைத் தந்தது.
1893-இல் மனித குலம் ஒன்றுபட வித்திடப்பட்டது. இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இரண்டு பிரயாணங்கள் நினைவில் கொள்ளத்தக்கவை.
சுவாமி விவேகானந்தர் 1893-ஆம் ஆண்டு கடல் தாண்டி சிகாகோ சென்றதும், ஸ்ரீ அரவிந்தர் கடலைத் தாண்டி தாய்நாடு திரும்பியதும் நமக்கு சநாதன தர்ம ராஜ்யத்தை அளித்திருக்கிறது.
19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பாரத மாதா அவளது சரித்திரத்திலே என்றும் காணாத அளவு இருளில் அமிழ்ந்திருந்தாள். ஒரு காலத்தில் நாம் பெற்றிருந்த உயர்வென்ன என்பதைத் தெரிந்துகொள்ள பாரதியாரிடம் செல்ல வேண்டும்.
“வண்மையிலே யுளத்திண்மையிலே – மனத்
தண்மையிலே மதி நுண்மையிலே
உண்மையிலே தவறாத புலவர்
உணர்வினிலே யுயர் நாடு”
ஞானத்திலும் பர மோனத்திலும் சிறந்த இப்பொன்னாடு தம் காலத்திலே சீரழிந்தது கண்டு பாரதியார்,
“நெஞ்சு பொறுக்குதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்….”என்று வருந்தியதும் உண்டு.
நம் மக்களை மீண்டும் போர்வீரர்களாகவும், ஆன்ம வீரர்களாகவும் மாற்றியமைக்க பாரதசக்தி சுவாமிஜியையும் அரவிந்தரையும் நமக்கு அனுப்பி வைத்தாள்.
தான் வலுவிழந்து, ஒளியிழந்து போனதைக் கூட அறியாமல் இந்தியர் வாழ்ந்ததைப் பற்றி ஸ்ரீ அரவிந்தர் எழுதும்போது, ‘இச்சீரழிவு பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், ஆங்கிலப் படிப்பு, மேலைநாட்டின் பண்பாடு முதலியவற்றின் விளைவு’ என்று குறிப்பிட்டுள்ளார்.



பாரதி போல அரவிந்தரும் பண்டைய இந்தியா கண்ட மேலான நாகரிகம் பற்றி எழுதியிருக்கிறார்.
“பண்டைய இந்தியாவின் ஆன்மா கம்பீரமானது. சிந்தனைகளும் வாழ்க்கை முறையும் உயர்ந்த தன்மை கொண்டவை. அஞ்சாத உரம் பெற்றவை. சீரிய சிந்தனை, சீரிய செயற்பாடு, சீரிய நோக்கம், சீரிய இலக்கியம் – கலை, சீரிய சமய வாழ்க்கை அனைத்திலும் உச்சியை அடைவதே குறிக்கோள். இந்த முயற்சியில் உலகை இழப்பினும் பரவாயில்லை என்ற நெஞ்சுரம். இதுவே பண்டைய பாரதத்தின் ஆன்ம சக்தி”. (Sri Arabindo Archieves & Research – p.5)
ஆனால் ஆங்கிலேயர் வந்து நமக்குப் பன்றிபோல வாழக் கற்றுத் தந்தனர். மாதச் சம்பளம் பெறுவதால் மேலெழும்பும் ஆர்வங்கள் தொய்ந்து போகின்றன. அவர்கள் நம்மிடையே வீரம், ஆர்வம், முன்யோசனை, ஆண்மை முதலியன இருப்பதை விரும்பவில்லை.
ஸ்ரீ அரவிந்தர் கூறுவார்: “மகாபாரதம், ராமாயணம் மறந்தோம். அதற்குப் பதிலாக ஸ்மைல் (Smile) எழுதிய தனக்கு உதவி (Self -Help) என்ற நூலை உருப்போட்டோம்”.
பாரதம் தொய்ந்து கிடந்த இந்நேரத்தில் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்ரீ அரவிந்தர் தனது கட்டுரை ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:
“ஒரு முழு நாட்டையே மயக்கி வைத்திருந்த வெற்றி பிரிட்டனையே சாரும். பிரிட்டிஷ் அரசாங்கம் நமது ஆர்வத்தையும் அதன் செயல்பாடுகளையும் கொன்று போட்டுவிட்டு வாழும்படி நமக்கு அறிவுறுத்தியது. நிழல்களை நிஜங்களாக எண்ண வைத்தது. அது நம்மை மயங்க வைத்ததால் வலுவிழந்த இயற்கையைப் பெற்றோம். “அச்சமயம் பிரிட்டனையும் விட சக்தி வாய்ந்த மாயாவி தோன்றி, கண்மூடி மயங்கிக் கிடந்த இந்தியாவின் கண்களைத் தீண்டி, ‘எழுந்திரு‘ என்றான். அப்போது தான் நம்மைக் கட்டியிருந்த மாயை விலகியது. தூங்கும் மனம் விழிப்புற்றது. இறந்துபட்ட ஆன்மா மீண்டும் உயிர் பெற்றது”.
கட உபநிஷதம் கூறும் மகா வாக்கியமான ‘எழுமின், விழிமின்’ என்ற தொடரைக் கையாண்டு புதுயுக சாரதியாக விளங்கிய அண்ணலை நாம் அனைவரும் அறிவோம்.
19-ஆம் நூற்றாண்டின் கடைசியில் பாரதமெங்கும் சுவாமிஜி பரிவ்ராஜக சந்நியாசியாகப் பயணித்தார். தாங்கள் எப்படிப்பட்ட தவறு செய்கிறோம் என்பது புரியாமலேயே இந்தியர்கள் உறங்குவது கண்டு மனம் வெதும்பினார்.
அச்சமயத்தில் தான் இந்தியாவின் பண்டைய உயர்வையும் இன்று பாரதத்திற்குத் தேவையான சீர்திருத்தத்தையும் உலகறியச் செய்ய வேண்டும் எனும் அவா அவரிடம் பன்மடங்காகக் கிளர்ந்தது.
1893-ஆம் ஆண்டு சிகாகோ நகரில் நடந்த உலக சமய மாநாடு கைகொடுத்தது. அந்த மாநாட்டில் சுவாமி விவேகானந்தர் கலந்து கொண்டதன் விளைவாக உலகெங்கும், கடவுள், இயற்கை மற்றும் மனிதனைப் பற்றிய சிந்தனைகள் புதுவாழ்வு பெற்றன.
அமெரிக்கா செல்லும் முன்பு தனது பரிவ்ராஜக வாழ்க்கை மூலம் இந்தியாவின் நாடித் துடிப்பை சுவாமிஜி நன்கு அறிந்து கொண்டார். அதனால் தான் அவரால் இந்தியாவின் நிலையை மேலை நாடுகளுக்கு கச்சிதமாக எடுத்துரைக்க முடிந்தது.
வீழ்ச்சி அடைந்த இந்தியாவை வெளியார் உதவியுடன் தூக்கி நிறுத்த வேண்டும். ஆனால் இந்தியா பிச்சை எடுக்கக் கூடாது. அதற்குத் தரப்படும் உதவி அதன் உரிமை.
கன்னியாகுமரியிலே சுவாமிஜி பெற்ற அனுபூதியை வர்ணிக்கும்போது சுவாமி நிகிலானந்தர் கூறுகிறார்:
“சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவை ஏராளமான வசதிகள் தரக்கூடிய நிலையமாகக் கருதினார். அங்கு மனிதர்கள் சாதியென்றும் உயர்வு தாழ்வு என்றும் பேசவில்லை. அமெரிக்கர்களுக்கு இந்தியாவின் காலத்தை வென்ற ஆன்மிகச் செல்வங்களை அளித்து அதற்குப் பதிலாக அவர்களது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெற விரும்பினார் சுவாமிஜி. அவரது முயற்சி வெற்றி பெற்றால் இந்தியாவின் மதிப்பு மேலைநாடுகளில் ஓங்குவதோடு இந்தியர்களுக்குத் தன்னம்பிக்கையையும் வளர்க்கும்”. (Swami Vivekananda: A Biography – p.101)
1893, மே 31-இல் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் அன்புச் சீடர் பம்பாயிலிருந்து ‘எஸ்.எஸ். பெனின்சுலார்’ என்ற கப்பலில் பயணமானார். சுவாமிஜியின் மறுப்பையும் மீறி கேத்ரி மகாராஜா சமர்ப்பித்த, விலையுயர்ந்த ஆடைகளும் அவருடன் பயணித்தன. இலங்கை, ஜப்பான் முதலிய நாடுகள் வழியே பிரிட்டிஷ் கொலம்பியா சென்று, அங்கிருந்து சிகாகோ சென்றடைந்தார். மாநாட்டில் உலகிற்கு நமது சநாதன தருமத்தைப் பரிசளித்தார் சுவாமி விவேகானந்தர்.
“பிற சமயக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்ப்பின்றி ஏற்றுக் கொள்ளுதல் ஆகிய இரு பண்புகளை உலகத்திற்குப் புகட்டிய மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன். எதையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும் என்னும் கொள்கையை நாங்கள் நம்புவதோடு, எல்லா மதங்களும் உண்மை என்று ஏற்கவும் செய்கிறோம்”.
சிகாகோ மாநாட்டிற்குப் பின் 120 ஆண்டுகள் ஓடிவிட்டன. யோசிக்கும்போது இவ்வுரையின் தாக்கம் நமது நாட்டின் மேல் சிறப்பாகத் தன் பொன் சிறகுகளை விரித்துள்ளது தெரிகிறது. ஏனெனில் சுவாமிகள் நம்மிடம், வாழ்க்கையை விட்டு ஓடிவிடுமாறு கூறவில்லை.
சிகாகோ மாநாட்டிற்குப் பிறகு சுவாமிகள் பத்து ஆண்டுகளே நம்மிடையே வாழ்ந்தார். ஆனால் அப் பத்தாண்டுகளில் அவர் ஏழைகளுக்கு இரங்கினார்; நற்கல்வி இயக்கத்தை வளர்த்தார்; பல உயர்ந்த சங்கங்களைத் தோற்வித்தார், தம் சுகவீனத்தைப் பாராட்டாமல் பிரயாணங்களை மேற்கொண்டார். மேலைநாட்டினரை இந்தியாவில் தங்கி பெண் கல்வியினைப் பேணுமாறு அழைத்தார். வேதாந்தக் கொடியைப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்தார்.
1893-ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து ஒரு வீரர் மேலைநாட்டிற்கு நமது நாட்டின் பெருமைகளை எடுத்துச் சென்றார். அதே ஆண்டு மேலைநாட்டிலிருந்து அவ்வகைப் பண்பாட்டினை கசடறக் கற்ற மற்றொரு வீரர் இந்தியாவிற்கு வந்து நம் மக்களிடையே அவர்களது சநாதன தருமத்தை மீண்டும் உயிர்ப்பித்தார்.
ஸ்ரீ அரவிந்தர் 14 ஆண்டுகள் இங்கிலாந்தில் உயர்கல்வி கற்று, லண்டனிலிருந்து ‘எஸ்.எஸ் கார்தேஜ்’ எனும் கப்பலில் புறப்பட்டு, பிப்ரவரி 6-ம் தேதியன்று பம்பாய் வந்து சேர்ந்தார். கப்பலிலிருந்து பாரத மண்ணில் இறங்கியதுமே அவர் நெஞ்சினை ஒரு பேரமைதி கவ்வியது.
21 வயது தான். அதற்குள்ளாகவே லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் ஆகியவற்றில் தேர்ச்சியுற்று, அரவிந்தர் மேலைநாடுகளின் சதித்திரம் மற்றும் சமூகவியல் பற்றி நன்றாகப் படித்திருந்தார்.
அரவிந்தரின் தந்தை, மகனை ஆங்கிலக் கனவானாகவே வளர்த்தார். அதனால் அரவிந்தருக்கு தாய்நாடு திரும்பியபோது அவரது தாய்மொழியான வங்காளம் கூடத் தெரிந்திருக்கவில்லை. தாய்நாட்டின் பண்பாட்டினைப் பற்றி அவர் ஏதும் அறிந்திருக்கவில்லை.
இந்நாடு மூடப்பழக்க வழக்கங்களில் மண்டிக் கிடப்பதாகவும் இங்கு நிர்வாண சந்நியாசிகளும் பாம்பாட்டிகளுமே செங்கோலோச்சுவதாகவும் நினைத்திருந்த அவருக்கு ஒரே ஆச்சரியம்!
‘அட, சாப்பாட்டிற்கில்லாத ஏழை எளியவர் கூட கதைகளும், காலட்சேபங்களும் கேட்டு நற்சிந்தனைகளை வளர்த்துக்கொண்டு பண்புடன் நடந்து கொள்ளும் நாடல்லவோ இந்நாடு. எங்கு திரும்பினாலும் தியாகத்திலே, தவவேகத்திலே இணையற்ற நாகரிகம், சக்தி வீச்சுள்ள இந்நாட்டை, பின் எப்படி ஒரு சிலரால் அடிமைப்படுத்த முடிந்தது?’ என்று சிந்தித்தார்.
சுவாமி விவேகானந்தர் தமது நாட்டினர் மீண்டும் கல்விக்கு முதலிடம் தர வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அரவிந்தர் பரோடா கல்லூரியில் விரிவுரையாளர் ஆனார்.
சம்ஸ்கிருதம், குஜராத்தி, வங்காளி மொழிகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றார். நம் பண்பாட்டின் கருவூலங்களான ராமாயணம், மகாபாரதம் முதலியவற்றைக் கற்றார்.
அப்போதிலிருந்து நாட்டிற்காகவும், இந்நாட்டின் பண்பாட்டிற்காகவும் பாடுபடத் தொடங்கினார். தனது மனைவி மிருணாளினியுடன் இனிய இல்லறம் நடத்திய அவர், யோக முறையை ஏற்று இல்வாழ்வில் ஒரு துறவியாக வாழ முனைந்தார். அச்சயம் மனைவிக்கு ஒரு கடிதம் எழுதியபோது அவர் குறிப்பிடுகிறார்:
“சாமான்யமாகப் பலர் இந்த நாட்டை வெறும் மைதானங்களும் வயல்களும் காடுகளும் குன்றுகளும் நதிகளும் உடையதோர் உயிரற்ற பொருளாகக் கருதுகின்றனர். “நான் இதனைத் தாயாக அறிந்திருக்கின்றேன்; தாயாகவே மதித்துத் தொழுகின்றேன். தாயின் மார்பிலே ஓர் அசுரன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளது ரத்தத்தை உறிஞ்சினால் அப்போது மகன் என்ன செய்வான்? “கவலை ஏதுமின்றி உண்டு களித்துத் தன் மனைவி மக்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழிப்பானா? தனது தாயை ரட்சிக்க வழி தேடுவான் அல்லவா? “வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டைக் காப்பாறும் வல்லமை எனக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கின்றேன். எனக்கு உடல் பலம் இல்லாதிருக்கலாம். ஆனால் நான் வாளினாலோ, துப்பாக்கியாலோ போரிடப் போவதில்லை. அறிவின் பலத்தால் யுத்தம் நடத்தப் போகிறேன்”. (மொழிபெயர்ப்பு: சுப்ரமண்ய பாரதியார்)
தாய்நாட்டின் சேவையில் அரசியல் களத்தில் இருந்த அரவிந்தருக்கு ஓராண்டு சிறைவாசம் கிடைத்தது. சிறையைத் தம் யோகமந்திரமாக அமைத்துக் கொண்ட அரவிந்தருக்கு நாராயண தரிசனம் கிட்டியது. வாசுதேவன் சிறையெங்கும் நிறைந்தான். போர்த்திக் கொள்ளும் கம்பளியிலும் காவல் அதிகாரியிடத்திலும் சிறைத்தோட்டத்தின் மரத்திலும் எங்கெங்கு காணினும் அவருக்கு வாசுதேவன் காட்சியளித்தான்.
சிறையில் தனியறையில் அவர் அடைக்கப்பபட்டிருந்தார். யோகத்தில் அமிழ்ந்து மனிதகுலம் தெய்விகமாவது எப்போது என்று யோசித்திருந்த அவருக்கு சுவாமி விவேகானந்தர் காட்சியளித்தார்.
‘அதிமானஸம்’ எனும் நூலைப் பற்றி சுவாமிஜி தமக்கு விளக்கிக் காட்டியதாக அரவிந்தர் குறிப்பிட்டிருக்கிறார்:
“விவேகானந்தர் ” என்ற சொல்லை உபயோகிக்கவில்லை. அதிமானஸம் என்பது எனது சொல்லாக்கம். அவர் என்னிடம் ‘இதுதான் அது, அதுதான் இது’ என்றெல்லாம் சொன்னார். கையால் சுட்டிக்காட்டியபடி அவர் போதித்தார். அலிப்பூர் சிறையில் 15 நாட்கள் அவர் என்னிடம் வந்தார். அவர் கூறுவதை நான் நன்கு புரிந்து கொள்ளும்வரை எனக்கு போதித்தார். மனம் கடந்த சைதன்யத்தை எனக்குப் புரிய வைத்தார். அதுவே அதிமானஸ சைதன்யத்திற்கு இட்டுச் செல்லும் சத்திய சைதன்யம். என் மூளையில் அனைத்தும் படியும்வரை என்னை அவர் விட்டாரில்லை”.
(Sri Arabindo: A Biography and a History – p.372)
சுவாமிஜியும் ஸ்ரீ அரவிந்தரும் இந்தியாவின் சநாதன தருமத்தை மனிதனின் ஆற்றலைப் பெருக்கும் விசையாகக் கண்டறிந்தனர். இந்த மாற்றியமைக்கும் விசை சாதனம் மண்ணிலே விண்ணைத் தோற்றுவிக்கும் என்றனர்.
சுவாமிஜி ஒரு முறை உணர்ச்சிப் பெருக்கில் கூறினார்:
‘என் பாரதமே! துயிலெழுந்திடு! எங்கே உன் உயிர்ப்புச் சக்தி? (My India , Arise, Where is your vital force?)’
இதற்குப் பதிலளிக்கும் முறையில் அரவிந்தர் தம் வாழ்வினையும் வாக்கினையும் பாரதத்திற்கு அர்ப்பணித்தார்:
“பாரத சக்தி என்பது பவானி, பாரதி என்று நாம் வணங்குவது முப்பது கோடி மக்களின் சக்தியாகும். மனித குலத்தைக் காப்பாற்ற ஒளிமயமான எதிர்காலம் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கிறது. அவளது சநாதன தருமம் உலகினுக்கு அளிக்கப்பட வேண்டும். அப்போது தான் மரம், அறிவியல், தத்துவம் அனைத்தும் ஒருங்கிணைந்து அழிவற்றதொரு சமயம் தோன்றி மனித நேயத்தினை வளர்க்கும்”.
நன்றி: விவேகானந்தரைக் கற்போம்- ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் வெளியீடு.
$$$