-லா.சு.ரங்கராஜன்
அமரர் திரு. லா.சு.ரங்கராஜன் (1930- 2016), தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர்; எழுத்தாளர்; காந்திய சிந்தனையாளர்; மகாத்மா காந்தியின் சொற்பொழிவுகள் எழுத்துக்கள் அனைத்தையும் அரசு சார்பில் (Collective Works Of Mahatma Gandhi) தொகுத்த குழுவை வழிநடத்தியவர். சுவாமி விவேகானந்தர் குறித்த அவரது இரண்டாவது கட்டுரை இங்கே….

பரம ஞானி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர் 1886-இல் தமது ஐம்பதாம் வயதில் கல்கத்தா அருகே தக்ஷிணேஸ்வரம் சிற்றூரில் தமது பூத உடலை விட்டுப் பிரிவதற்கு மூன்று நாள்களுக்கு முன், பிரதான சீடரான நரேந்திரர் எனும் இளைஞனுக்கே தமது ஆன்மிகச் செல்வம் அனைத்தையும் வழங்குவதாக மற்ற சீடர்கள் முன்னிலையில் அறிவித்தார்.
“ஏ நரேன்! இன்று நான் என்னிடமிருந்த அனைத்தையும் உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன். வருங்காலத்தில் நீ பல அரிய பெரிய சாதனைகளைப் புரியப் போகிறாய். எனது வாரிசு நீதான்” என்றார் ஆசான்.
அப்போது நரேந்திரருக்கு வயது 23; மணமாகவில்லை. கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டம் பெற்றவர்; ஆன்மிக நாட்டம் கொண்டவர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பிறகு தக்ஷிணேஸ்வரம் அருகேயுள்ள பரநாகூரில் சுவாமி நரேந்திரர் துறவி மடமொன்று அமைத்தார். மற்ற சீடர்களும் பிரம்மச்சரிய விரதம் பூண்டு சன்னியாசிகளாயினர்.
இரண்டாண்டுகளுக்குப் பிறகு இளந்துறவி நரேந்திரர் தொடர்ந்து ஐந்தாண்டு காலம் நாடெங்கும் பாதயாத்திரையாக அலைந்து திரிந்தார். இறுதியில் ராமேஸ்வரம் செல்லும் வழியில், மதுரையில் தங்கியிருந்த ராமநாதபுரம் ராஜா பாஸ்கர சேதுபதியைச் சந்தித்தார்.
சிகாகோவில் நடைபெறவிருக்கும் அனைத்துலக சர்வ சமயப் பேரவையில் சுவாமி நரேந்திரர் பங்கேற்க வேண்டும் என்று ராமநாதபுரம் சிற்றரசர் தான் முதன்முதலாக யோசனை கூறினார். அமெரிக்கா செல்ல பண உதவியைச் செய்வதாகவும் வாக்களித்தார். நன்கு யோசித்து முடிவு தெரிவிப்பதாகக் கூறி நரேந்திரர் ராமேஸ்வரத்திற்குப் புறப்பட்டுச் சென்றார்.
1892 இறுதியில் ராமேஸ்வரம் வந்தடைந்த இளம் சுவாமிஜி, பிரசித்திபெற்ற சிவாலயத்தில் வழிபட்டார். அங்கிருந்து கன்னியாகுமரிக்குச் சென்றார். “நீலக் திரைகடலோரத்திலே நின்று நித்தம் தவஞ்செய் குமரி எல்லை”யின் முனைதான் அவ் வருங்கால விவேகானந்தரின் வாழ்வில் ஓர் திருப்புமுனையாக அமைந்தது.
குமரி அம்மன் சன்னிதியில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். அலைமோதும் கடல் சந்திப்பின் கரைக்கு அப்பால் தூரத்தே உயர்ந்து நிற்கும் கற்பாறைத் தளமே தமது ஏகாந்த தியானத்திற்குச் சிறந்த இடம் எனத் தீர்மானித்தார். அங்கு செல்ல படகுக்காரனுக்குக் கூலி தரக்கூடக் கையில் போதுமான பணமில்லை. காஷாய அங்கியை வரிந்து கட்டிக்கொண்டு கடலில் குதித்து நீந்திச் சென்று பாறையை அடைந்தார். பாறை மீது பத்மாசனப் பாணியில் அமர்ந்து மூன்று நாள்கள் தொடர்ந்து தவநிலையில் சமைந்தார்.
இது நிகழ்ந்தது 1892 டிசம்பர் 25, 26, 27 தேதிகளில். பண்டைய பாரத நாட்டினிலே எத்தனையோ மகான்கள் பல்வேறு காரணங்களுக்காக தவம் மேற்கொண்டுள்ளனர் – கடவுளைக் காண, வரம்பெற, வேதாந்த விசாரத்திற்காக, சுய ஆன்மிக முன்னேற்றத்திற்காக, அஷ்ட மகா சித்திகள் பெற என்றெல்லாம் பற்பல காரணங்கள். ஆனால், ‘தாய்நாட்டின் தாழ்வுக்குக் காரணம் யாது? பாரதத்தைப் புனருத்தாரணம் செய்வது எப்படி? ஏழை, எளிய மக்களை சமூக, பொருளாதார ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் உய்விப்பது எங்ஙனம்? வேதாந்தத்திற்கு தற்கால சூழ்நிலையில் எவ்வாறு செயல்வடிவம் அளிப்பது?’ ஆகியன பற்றிய ஆழ்ந்த சிந்தனையே துறவி நரேந்திரரின் தவமாக அமைந்தது.
பாறைத் திடலைச் சுற்றிலும் சீறி மோதும் கடல் அலைகள்; அஸ்தமித்ததும் கும்மிருட்டு. ‘ஹோ’ என்ற அந்த ஏகாந்தத்தில் சிந்தனையும் தியானமும் கலந்த அந்த மூன்று நாள் தவப்பயனால் தெளிவு பெற்றார்.
“எழுமின்! விழிமின்!! இலக்கை அடையும்வரை ஓயாது உழைமின்!!!” என்ற ஆன்ம கர்ஜனையுடன் எழுந்தார். தமிழகத் தென் கோடியில் அன்று தம்முன் ஓடிய சிந்தனையின் சாரத்தை சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா சென்றதும் ஓர் அன்பருக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு பதித்துள்ளார்:
“பாரதத்தின் தென்கோடிக் கடற்கரைப் பாறையில் சமைந்திருந்தபோது எனக்குஓர் திட்டம் உதயமாயிற்று. நம் தாய்நாட்டில் எவ்வளவோ சன்னியாசிகள் சுற்றித்திரிந்து, அல்லது மடங்களில் அமர்ந்து , வேத, சாத்திர, ஆன்மிக விசாரங்களின்மகிமையை உபன்யாசித்து வருகின்றனர். இதெல்லாம் பைத்தியக்காரத்தனம் என்பேன்… பெரும்பாலான பாட்டாளி மக்களோ அறியாமையிலும் வறுமையிலும் சிக்கி,விலங்குகள்போன்று வளைய வருகிறார்கள். “காலி வயிறுக்கு ஆன்மிகம்ஒத்துவராது”என எமது குருநாதர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் எடுத்துரைத்துள்ளாரே?… ஆகவே, பிறருக்கு நன்மை புரிவதையே லட்சியமாகக் கொண்ட சன்னியாசிகள் பலர்ஒன்றுகூடித் திட்டம் தீட்டி, கிராமம் கிராமமாகச் சென்று கல்வி புகட்டுதல்போன்ற பல்வேறு நற்பணிகள் மூலம் கடையனுக்கும் கடையர்கள் வரை ஏழை மக்கள்அனைவரையும் மேம்படுத்த முன்வரலாமே? நவீன சாதனங்கள் வாயிலாகவும் நற்பண்புகளைமனத்தில் பதிய வைக்கலாமே? மக்கள் தமது தனித்தன்மையை, பண்டைய பண்புகளைத்தொலைத்துவிட்டதே இந்தியாவின் தொல்லைகளுக்கு அடிப்படைக் காரணம். அவற்றை மீட்டுத் தரவேண்டியதே நமது தலையாய கடமையாகும்”.
இவ்வாறு தமிழகக் கன்னியாகுமரியிலே தான் சுவாமி நரேந்திரர் தன்னைத் தாய்நாட்டின் சேவைக்கு அர்ப்பணித்துக் கொண்டார். குறிப்பாக, மேல்தட்டு மக்களால் ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட லட்சோப லட்சம் ஏழை மக்களுக்குத் தொண்டாற்றி தேசிய எழுச்சியை ஊக்குவிப்பதே தமது முழுமுதற் கடமையாக வரித்தார். தேசபக்தத் துறவியாகத் திரிபு பெற்றார். ஒரே வார்த்தையில் சொல்லப் போனால், “நரேன்!, வருங்காலத்தில் நீ அரிய பெரிய சாதனைகளைப் புரியப் போகிறாய்” என்று அருளிய அவரது ஞான ஆசானின் வாக்கு கன்னியாகுமரியில் தான் செயல்வடிவம் பெற்றது எனலாம்.
துறவி நரேந்திரர் கன்னியாகுமரியிலிருந்து பாண்டிச்சேரிக்கு நடந்தே சென்றார். அங்கே பல இளைஞர்கள் அன்னாரது கம்பீரத் தோற்றத்தையும் பொலிவையும் பேச்சையும் கண்டு வியந்து பணிந்தனர். தமது இல்லங்களுக்கு அழைத்துச் சென்று உபசரித்தனர்.
பாண்டிச்சேரியிலிருந்து புறப்பட்டு மதறாஸ் நகரை (இன்றைய சென்னை) வந்தடைந்தார். சென்னையிலே தான் முதன்முதலாக படித்த, அறிவார்ந்த பற்பலர் அவரது லட்சியங்களைப் புரிந்துகொண்டு அவற்றைப் பரப்பிப் பிரசாரம் செய்ய முன்வந்தனர். அதைக் கண்டு சுவாமிஜி அகமகிழ்ந்தார். அவரது எதிர்பார்ப்புகள் சென்னையிலேதான் முதல் முறையாக வரவேற்புப் பெற்றன.
பத்து, பனிரெண்டு தமிழ் இளைஞர்கள் உடனடியாக அவரது சீடர்களாகத் தம்மை இணைத்துக் கொண்டனர். தமது செயற்திட்டம் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை சென்னையிலே தான் அவருக்குத் துளிர்விட்டது. சுவாமி அமெரிக்கா செல்லும் திட்டத்தைக் கோடிகாட்டியவுடன் சென்னையில், நிதி உதவிகள் திரண்டு வந்தன.
ஆகவே, கல்கத்தாவுக்கு அடுத்தபடியாக சென்னை மாநகர் தான் சுவாமி விவேகானந்தரின் வாழ்விலும் பணியிலும் மிக முக்கிய மையங்களாக அமைந்தன. சென்னை, திருவல்லிக்கேணி இலக்கியக் கழகத்தில் சுவாமிஜி நிகழ்த்திய கலந்துரையாடல்களில், படிப்பாளிகளும் பேராசிரியர்களும் அவரது நா வன்மையையும் மேதா விலாசத்தையும் கண்டு வியந்து போற்றினர்.
மேலைநாடுகளில் பாரதத்தின் பெருமையையும் ஆன்மிகச் செல்வத்தையும் எடுத்துரைக்கப் பயணம் மேற்கொள்ளும் தமது தீர்மானத்தைத் திருவல்லிக்கேணி கூட்டத்திலேதான் அறிவித்தார். பிரமுகர்களும் பாமர மக்களும் போட்டி போட்டுக்கொண்டு நிதி உதவி அளிக்கலாயினர். அழசிங்கப் பெருமாள் என்பாரின் தலைமையில் சகாய நிதி கமிட்டியொன்றுஅமைக்கப்பட்டது.
கடிதங்கள் மூலமும், ராமநாதபுரம், மைசூர், ஹைதராபாத் சமஸ்தானங்களுக்கு உறுப்பினர்கள் நேரில் சென்றும் நிதி திரட்டினர். அழசிங்கப் பெருமாள் சென்னையில் வீடு வீடாகச் சென்று நிதி சேர்த்தார்.
அப்போது, கேத்ரி சமஸ்தான மன்னரிடமிருந்து சுவாமிஜிக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றவர் சமஸ்தானாதிபதியின் செயலருடன் பம்பாய் ஏகினார். மன்னரின் செயலர் கப்பற் பிரயாணத்திற்கும், வெளிநாடுகளுக்கான உடை மற்றும் பொருள்களுக்கும் ஏற்பாடுகள் செய்தார். சென்னையிலிருந்து அழசிங்கப் பெருமாளும் நண்பர்களும் வந்திருந்து கணிசமான பண முடிப்புடன் சுவாமிஜியை வழியனுப்பினர்.
அமெரிக்கா புறப்படும் முன்னர்தான் துறவி நரேந்திரர், ‘சுவாமி விவேகானந்தர்’ என்ற புதுப் பெயரை வரித்தார். அப்பெயர், கேத்ரி சமஸ்தான மன்னரால் பரிந்துரைக்கப்பட்டது. அன்றிலிருந்து நரேந்திரர், ‘சுவாமி விவேகானந்தர்’ என்றே அறியப்படலானார்.
பம்பாய் துறைமுகத்திலிருந்து 1893 மே 31-ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவுக்கு கப்பலில் முதல் வகுப்பில் புறப்பட்டார்.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி அனைத்துலக சர்வ சமயப் பேரவை டாக்டர் பர்ரோஸ் என்பாரின் தலைமையில் தொடக்கம் பெற்றது. விசாலமான மேடையில் பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். ரோமன் கத்தோலிக்கக் கிறித்தவர் சார்பில் கர்தினால் ஒரு குழுவினருடன் வந்திருந்தார்.
இந்தியாவிலிருந்து பிரம்ம சமாஜத்தின் மஜும்தார் மற்றும் சக்கரவர்த்தி, புத்த, ஜைன சமயத் துறவிகள், பிரம்ம ஞானசபையின் சார்பாக அன்னிபெசன்ட் அம்மையார் முதலியோரும் வீற்றிருந்தனர். சனாதன இந்துமதப் பிரதிநிதியாக சுவாமி விவேகானந்தர் மட்டுமே மேடையில் இருந்தார். ஏராளமான அமெரிக்கப் பார்வையாளர்கள் கூடியிருந்தனர்.
நீண்ட காவி அங்கியும், தலைப்பாகையும் அணிந்து சுவாமி விவேகானந்தர் எழுந்து கம்பீரமாக மேடையில் நின்றார். “அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே” என்று கணீர்க்குரலில் உரையைத் தொடங்கியபோது சபையினர் அனைவரும் உற்சாகத்தில் தொடர்ந்து இரு நிமிடங்கள் கரவொலி எழுப்பினர்.
எழுதிப் படிக்காமல் அன்று அவர் பேசியது பத்தே நிமிடங்கள்தான். ஆனால், அவரது ஒவ்வொரு சொல்லும் கூடியிருந்தோரின் கவனத்தையும் மனத்தையும் ஈர்த்தது. மத விவகாரங்களில் சகிப்புத்தன்மையின் அவசியத்தை வற்புறுத்தினார்.
“இந்துமதம் சகிப்புத்தன்மையோடு மட்டுமே நில்லாமல், அனைத்து சமயங்களும் உண்மையையேவிளம்புகின்றன என்று அரவணைக்கிறது. வெவ்வேறு இடங்களிலிருந்து ஊற்றெடுக்கும்ஓடைகளும் சிற்றாறுகளும் எவ்வாறு இறுதியில் ஒருசேரத் தம்மை பெருங் கடலில்கரைத்துக் கொள்கின்றனவோ, அவ்வாறே வெவ்வேறு பண்பாட்டு மக்களிடையேவெவ்வேறாகத் தோன்றிய மதங்கள் நேராகவோ சுற்றி வளைத்தோ இறுதியில் நிரந்தரசத்தியத்தையே சரணடைகின்றன”
-என்று, இந்து திருமறை சுலோகத்தை உரத்துக் கூறி தொடக்க உரையை முடித்தார். சபையினர் ஆரவாரத்துடன் எழுந்து நின்று கரகோஷித்தனர்.
தொடர்ந்து 21 நாட்கள் (1893 செப்டம்பர் 11 முதல் 27 வரை) நடைபெற்ற பேரவைக் கூட்டங்களில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய எழுச்சிமிகு தொடர் உரைகளே சபைக்குக் களைகட்டின. பார்வையாளர்களின் எண்ணிக்கை பன்மடங்காயிற்று.
சிகாகோ பிரபலத்திற்குப் பிறகு சுவாமிஜி சுமார் மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி சுற்றுப்பயணித்தார். ஆங்காங்கே உரைகள் ஆற்றினார். வேதாந்தம், கர்ம, ஞான ராஜயோகம் பற்றி வகுப்புகள் நடத்தினார். நியூயார்க் நகரிலிருந்து 1896 ஏப்ரல் 15 அன்று புறப்பட்டு இங்கிலாந்து சென்றார். அன்பர்களின் அழைப்பின்பேரில் ஐரோப்பிய நாடுகள் சிலவற்றுக்கும் விஜயம் செய்தார். எங்கும் அமோக வரவேற்பு; பேச்சைக் கேட்கத் திரளும் மக்கள்.
லண்டன் மாநகரில் ஒரு மாத காலம் தங்கியிருந்த சமயம் தான் மிஸ். மார்க்ரெட் நோபிள் (1867-1911) எனும் ஐரிஷ் மாது சுவாமிஜியின் போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது பரம பக்தையானாள். (பின்னர் 1898-இல் இந்தியாவுக்கு வந்து பேலூரில் ஓர் குடிலில் தங்கினாள். சுவாமி விவேகானந்தரிடம் பிரம்மச்சாரிணியாக தீட்சை பெற்று ‘சகோதரி நிவேதிதா’ என்ற பெயர் சூட்டப்பெற்றார்).
1897-இல் ஐரோப்பாவின் நேபிள்ஸ் நகரிலிருந்து சுவாமி விவேகானந்தர் புறப்பட்டு, 1897 ஜனவரி மத்தியில் இலங்கைத் தலைநகரான கொழும்புத் துறைமுகத்தில் இறங்கினார். இலங்கையில் பதினொரு நாள்கள் தங்கி, அம் மக்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் ஆளானார். இந்தியாவுக்கு நீராவிப் படகில் புறப்பட்ட சுவாமிஜியை பாம்பன் முனையில் ராமநாதபுரம் ராஜா வரவேற்கக் காத்திருந்தார். ரயிலில் பிரயாணித்து 1897 பிப்ரவரி தொடக்கத்தில் சென்னை வந்தடைந்த சுவாமி விவேகானந்தரை ஏராளமான மக்கள் ஆரவாரத்துடன் ரயில் நிலையத்தில் வரவேற்றனர்.
ஆடம்பர சாரட் வண்டியில் ஊர்வலமாக இட்டுச் செல்லப்பட்டார். குதிரைகளை அவிழ்த்துவிட்டு இளைஞர்களே வண்டியை இழுத்துச் சென்றனர். திருவல்லிக்கேணி கடற்கரையருகில் பிலிகிரி ஐயங்கார் என்பவருக்குச் சொந்தமான ‘காஸில் கெர்னன்’ எனும் அரண் – மாளிகையில் சுவாமிஜி தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன (அம் மாளிகையே பிறகு ‘விவேகானந்தர் இல்லம்’ என்ற பெயரில் தற்போது ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பில் உள்ளது).
விக்டோரியா ஹாலில் இரு முறை, பச்சையப்பன் கல்லூரி, ஹார்ம்ஸ்டன் சர்கஸ் பெவிலியன் மற்றும் திருவல்லிக்கேணி இலக்கிய சங்கம் என்று சென்னையில் ஒன்பது நாள்கள் தங்கியிருந்த சுவாமிஜி, ஐந்து கூட்டங்களில் உரையாற்றினார். பின்னர் நீராவிக் கப்பலில் கல்கத்தா சென்றடைந்தார்.
1897 -ஆம் ஆண்டு மே மாதம் பேலூரில் ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் அமைப்பை நிறுவினார். அடுத்தபடியாக சென்னையில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடமொன்றை நிறுவ வேண்டும் என்பதே அவரது நீண்டநாள் பேரவா. அது அவர் மறைவுக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னரே நிறைவேறியது.
மேற்கு இமாலயத்தில் உள்ள அமர்நாத் லிங்க குகைக்கு 1898 மத்தியில் சுவாமிஜி யாத்திரை மேற்கொண்டார். 1899, ஜூன் மாதம் இரண்டாம் முறையாக அமெரிக்கா சென்று டிசம்பரில் திரும்பி வந்தார். ஓயாத அலைச்சலினால் உடல் நலம் குன்றி சோர்வடைந்தார். அவரைப் பீடித்த ஆஸ்துமா நோயால் அவதியுற்றிருந்தார். இருப்பினும், ராமகிருஷ்ண மடத்தின் அலுவல்களைக் கவனித்து வந்தது மட்டுமன்றி பிரம்மசாரிகளுக்கு ஆன்மிக வகுப்புகளும் நடத்தினார்.
1902 ஜூலை 4 அன்று திடீரென காலமானார். அப்போது அவருக்கு வயது 39.
இளவயதில் அவர் மரணமடைந்தது இந்தியாவுக்கு ஒரு பேரிழப்பு எனலாம். சிகாகோவில் சர்வதேச சமயப் பேரவையில் பேசிப் பிரசித்தமடைந்த ஸ்ரீ விவேகானந்தர், அடுத்த பத்தாண்டு காலத்திற்குள் பாரதத்தின் பெருமையை அயல்நாட்டினருக்கு உணர்த்தினார். தாய்நாட்டில் இந்து மதத்திற்கு புதிய நடைமுறை வகுத்து, மக்கள் மனதில் உத்வேகம் ஊட்டினார் என்றால் அது மிகையன்று!
- நன்றி: ‘தினமணி’ (14.01.1013) நாளிதழில் திரு. லா.சு.ர. எழுதிய கட்டுரை இது.
$$$