-எஸ்.எஸ்.மகாதேவன்

30. மக்களைப் பிரிக்கிறது அரசியல்; இணைக்கிறது பக்தி!
மக்களைப் பிரிக்கிறது அரசியல்; இணைக்கிறது பக்தி! நிரூபிக்கிறது நம்மூர் நிலக்கடலை திருவிழா!
நம்மூர்? பெங்களூருவில் தானே நிலக்கடலை திருவிழா நடக்கும்? சென்னைவாசியான நான் நம்மூர்த் திருவிழா என்று இன்று சொந்தம் கொண்டாடுவது எப்படி என்று யோசிக்கிறீர்களா? 60 ஆண்டுகளாக சென்னைவாசியாக இருந்த நான் நேற்றுமுதல் பங்களூரு வாசி.
1962இல் நான் சென்னைப் பிரவேசம் செய்தபோது, ஒரு அண்ணாதுரை (திமுக) விலையேற்றத்தை வைத்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தார். பிறகு 1967இல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி (6 கிலோ!) என்று மக்களுக்கு ஆசை காட்டித்தான் ஆட்சியைப் பிடித்தாரே தவிர, 1965இன் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் அவரது வெற்றிக்குக் காரணம் அல்ல என்ற கருத்து உண்டு. இந்தக் கருத்து வலுப்படுமானால் மொழிவழி இனவாதம், மொழிவழி தேசியம், குறிப்பாக மொழிக்காழ்ப்பு ஆகியவை சரிவைச் சந்திக்கும். நான் சென்னையில் இருந்து விடைபெறும் இந்த 2022இல் ஒரு அண்ணாமலை விலையேற்றத்தையே அடிப்படையாக வைத்து கட்சியை (பாஜக) வளர்த்து மக்கள் மனம் கவர்ந்து வருகிறார்!
இடமாற்றல் எனக்குத்தான். 500 வருடங்களுக்கு மேலாக நடக்கும் ‘கடலேகாயி பரிஸெ’ என்ற அந்த நிலக்கடலைத் திருவிழாவுக்கு அல்ல. அது என்றும் போல ஜாம் ஜாம் என்று நடக்கிறது. நவம்பர் 21 அன்றும் நடந்தது.
இதோ, அது பற்றிய ஒரு தொகுப்பு – இலவச இணைப்பாக திருவிழா நேரத்தில் மனதில் தோன்றிய எண்ணங்களும்:
தமிழகத்தில் கார்த்திகை மாதம் இப்போதுதான் பிறந்திருக்கிறது; கர்நாடகாவில் கார்த்திகை மாதம் முடிவடையும் தருணம் இது. கார்த்திகை கடைசி திங்கள்கிழமை அன்று (நவம்பர் 21) மாநிலத் தலைநகர் பெங்களூருவின் மையப் பகுதி ஆகிவிட்ட பசவனகுடியில் நிலக்கடலைச் சந்தை (கடலேகாயி பரிஸெ) அமோகமாக நடைபெற்றது. பெயர்தான் சந்தையே தவிர அது பெங்களூருவின் அறுபத்துமூவரே தான்.


இந்தத் திருவிழாவிற்கு ஒரு சமய வரலாறு உண்டு. அந்தக் காலத்தில் பெங்களூரு சிறு கிராமம். சுற்றுப்புற ஹள்ளிகளில் (ஊர்களில்) மக்கள் நிலக்கடலை பயிரிட்டு வந்தார்கள். பௌர்ணமி தோறும் ஒரு முரட்டுக்காளை அறுவடைக்குத் தயாராக இருக்கும் பயிரை சேதப்படுத்தி வந்தது. விவசாயிகள் நந்திக்கு பூஜை செய்து ‘அறுவடை ஆனதும் முதல் வேலையாக உங்களுக்கு படையல் இடுகிறோம். பயிர்களை சேதப்படுத்தாதீர்கள்’ என்று பிரார்த்தனை செய்து கொண்டார்கள் (நமது முன்னோர்கள்தான் மனிதர்கள் – விலங்குகள் உறவுக்கு எப்படிப்பட்ட ஒரு பரிமாணம் கொடுக்கிறார்கள் பாருங்கள்; இதன் பரிணாமமும் நன்றாகவே அமைந்தது என்பதும் முக்கியம்).
இதற்கிடையில் பூமிக்கு அடியில் இருந்து ஒரு பெரிய நந்தி விக்கிரகம் வெளிப்பட்டது. இது நடந்தது பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில். தகவல் அறிந்ததும் மன்னர் கெம்பே கவுடா அந்த நந்திக்கு கோயில் கட்டினார். அந்தப் பகுதிக்கு பசவனகுடி (நந்தியின் கோயில்) என்று பெயர் ஏற்பட்டது. விவசாயிகள் பக்தி என்னும் வேலி கட்டி பயிர்களைக் காப்பாற்றிக் கொண்டார்கள். இன்றைய தேதிக்கு லேசுப்பட்ட சாதனையா இது?
நிலக்கடலைத் திருவிழாவின்போது விவசாயிகள் வீதி நெடுக குவியல் குவியலாக நிலக்கடலை ரகங்களை காட்சிக்கு வைத்தார்கள் (விஜயநகரப் பேரரசு நடந்த நாட்களில் ஹம்பி மாநகர வீதிகளில் நவரத்தினங்களை வீதியில் குவித்து வைத்து நம்மவர்கள் கடைபரப்பினதாகவும், பல நாட்டினர் ‘நத்தி நமக்கினிய பொருள் கொணர்ந்தே நம்மருள் வேண்டிய’தாகவும் கேள்விப்படுகிறோம். எங்கிருந்து எங்கே!)
முதலில் அந்தப் பகுதியில் உள்ள தொட்ட கணேசா (dodda என்றால் எனக்குத் தெரியாது என்று எந்த தமிழரும் சொல்ல முடியாது நீலகிரி மலையின் மிக உயர்ந்த சிகரத்திற்கு பெயர் ‘தொட்டபெட்டா’ என்று பள்ளிக்கூடத்தில் படித்தது வேண்டுமானால் அவருக்கு மறந்து போயிருக்கலாம்) கோயிலில் பூஜை செய்தார்கள். நந்திக்கு நிலக்கடலை படைத்தார்கள்; திருவிழா களைகட்டியது.
பெங்களூர் வாசிகள் பெருந்திரளாக வந்து நிலக்கடலை வாங்கிச் சென்றார்கள். பெரும் கூட்டம் சேர்வதால் மற்ற வணிகர்களும் தங்கள் கடைகளைப் பரப்பினார்கள். வளையல், பொம்மை, தின்பண்டங்கள் விற்கும் சுமார் 700 கடைகள் திருவிழாவில் பரபரப்பாக இயங்கின.
இந்தத் திருவிழாவை மையமாக வைத்து சுற்றுலாவை மேம்படுத்துவதில் மாநில சுற்றுலாத் துறை (சமயச் சடங்கின் முக்கியத்துவம் குறைந்து போகாத விதத்தில்) முனைந்து செயல்பட்டது. திருவிழாவில் பிளாஸ்டிக்கே தென்படவில்லை. இது உள்ளூர் மக்களின் தீர்மானத்திற்குக் கிடைத்த ஆரோக்கியமான பலன்.
ஒரு சிறிய வட்டார விவசாயிகளின் ஹிந்து சமயச் சடங்கு இந்த அளவுக்கு பிரம்மாண்டமான திருவிழாவாக வடிவெடுத்து அபாரமான வணிக வாய்ப்புக்கு வகை செய்திருப்பதை பெங்களூர் எம்.பி.யும் பாஜகவின் அகில பாரத இளைஞர் அணித் தலைவருமான தேஜஸ்வி சூர்யா சுட்டிக்காட்டி, “லோக்கல் டு குளோபல் என்று பிரதமர் நரேந்திர மோடி சொல்லி வரும் கருத்துக்கு நேரடி உதாரணம் இது” என்று தனது ட்விட்டர் பதிவில் பாராட்டினார்.
தமிழகத்திலிருந்தும் நிலக்கடலை சாகுபடியாளர்கள் இந்தப் படையல் விழாவில் பக்தியோடு கலந்து கொண்டார்கள். இது குறிப்பிடத்தக்கது. இரு மாநில விவசாயிகளை இணைக்கும் சக்தி பக்திக்கு உண்டு என்பது இங்கே கண்கூடு. இதை ஊதிப் பெரிதுபடுத்தினால் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வலு சேரும்.
$$$