-மகாகவி பாரதி
மகனின் நிர்பந்தம் காரணமாக சூதாட்டத்துக்கு ஒப்புக்கொண்ட மன்னர் திருதராஷ்டிரன், சூதாட்டம் நிகழ்வதற்கான அழகிய மண்டபத்தை நிர்மாணிக்குமாறு உத்தரவிடுகிறார். அதன்படி அழகிய சபா மண்டபம் நிர்மானிக்கப்படுகிறது. ‘பஞ்சவர் வேள்வியில் கண்டது போலே’ மண்டபம் நிர்மாணிக்குமாறு தொழில் விணைஞர்களிடம் மன்னர் கூறுகையில், அவரது மனமும் திரிபடையத் தொடங்கிவிட்டதைக் காட்டுகிறார் மகாகவி பாரதி....

முதல் பாகம்
1.1. அழைப்புச் சருக்கம்
1.1.15. சபா நிர்மாணம்
மஞ்சனும் மாமனும் போயின பின்னர்
மன்னன் வினைஞர் பலரை அழைத்தே,
‘பஞ்சவர் வேள்வியிற் கண்டது போலப்
பாங்கி னுயர்ந்ததொர் மண்டபஞ் செய்வீர்!
மிஞ்சு பொருளதற் காற்றுவன்’என்றான்;
மிக்க உவகைய டாங்கவர் சென்றே
கஞ்ச மலரிற் கடவுள் வியப்பக்
கட்டி நிறுத்தினர் பொற்சபை ஒன்றே. 109
வல்லவன் ஆக்கிய சித்திரம் போலும்,
வண்மைக் கவிஞர் கனவினைப் போலும்,
நல்ல தொழிலுணர்ந் தார்செய லென்றே
நாடு முழுதும் புகழ்ச்சிகள் கூறக்
கல்லையும் மண்ணையும் பொன்னையும் கொண்டு
காமர் மணிகள் சிலசில சேர்த்துச்
சொல்லை யிசைத்துப் பிறர்செயு மாறே
சுந்தர மாமொரு காப்பியஞ் செய்தார்! 110
$$$