மகாவித்துவான் சரித்திரம்- 2(6இ)

-உ.வே.சாமிநாதையர்

இரண்டாம் பாகம்

6 இ. திருவாவடுதுறை வாஸம்


திருப்பெருந்துறைப் புராணம் பாடத்தொடங்கியது

இப்படி இருக்கையில் ஒரு தினத்தில் சுப்பிரமணிய தேசிகருடைய கட்டளைப்படி நல்லவேளையில் இவர் திருப்பெருந்துறைப் புராணத்தை இயற்றத் தொடங்கினார். தொடங்கியவுடன் எழுத்தாணி கையில் இல்லாமையை யறிந்து மடத்துக் காரியஸ்தரொருவரை யழைத்து ஓர் [19] எழுத்தாணியையும் ஏடுகளையும் கொணர்ந்து என்னிடம் கொடுக்கும்படி சொன்னார். அவர் அப்படியே செய்தனர். யோசித்து வைத்திருந்த ஒரு விநாயகர் காப்புச் செய்யுளை வழக்கப்படியே பொதுவாக முதலிற் சொல்லி எழுதுவித்தார்.

அப்பால் ஸ்தல விநாயகராகிய வெயிலுவந்த விநாயகரது ஸ்துதியைப் பாடுவதற்கு இவர் யோசிப்பதை அறிந்து, “முன்னமே நான் மாயூரத்திற்கு வந்து மொழிபெயர்ப்புப் புத்தகம் முதலியவற்றைக் கொடுத்தவுடன், ‘நிலவுவந்த முடியினொடு வெயிலுவந்த மழகளிற்றை நினைந்து வாழ்வாம்’ என்று ஐயா அவர்கள் சொன்ன ஓரடி எனக்கு ஞாபகத்திலிருக்கின்றது” என்று குறிப்பித்தேன்; “அப்படியா? அது நன்றாகவிருக்கிறது” என்று சற்று நேரம் யோசித்து முதல் மூன்றடியையும் சிறந்த கற்பனையுடன் முடித்து ஈற்றடியை இறுதியிலே எழுதும்படி சொல்லி மேலே பாடல்களைச் சொல்லி எழுதுவித்துக்கொண்டு போனார். அச்செய்யுள் வருமாறு:

(விருத்தம்)

*20  “இலவுவந்த செவ்வாயெம் பெருமாட்டி பார்வையொடும் இருக்கு முன்னூல்
சொலவுவந்த நம்பெருமான் பார்வையுமேற் றமர்சிறப்புத் தோற்றி யாங்குப்
பலவுவந்த பொழில்வளஞ்சால் குருந்துறையும் பெருந்துறையிற் பண்பு கூரும்
நிலவுவந்த முடியினொடும் வெயிலுவந்த மழகளிற்றை நினைந்து வாழ்வாம்."

இந்நிகழ்ச்சியைக் கண்ட அருகிலிருந்த அறிஞர்களுக்கு வியப்புண்டாயிற்று; “மற்றவர்களாக இருந்தால் தம்மை எவ்வளவு புகழ்ந்து கொள்வார்கள்? நம்மையும் நிர்ப்பந்தித்துப் புகழச் சொல்வார்களே!” என்று அவர்கள் தம்முட் பேசிக்கொண்டார்கள்.

‘சிறவாதவற்றையும் சிறப்பிக்க வல்லவன்’

திருப்பெருந்துறைப் புராணத்தில் நாட்டுப்படலம் பூர்த்தியாயிற்று. நடந்த பாகங்களை சுப்பிரமணிய தேசிகரிடம் படித்துக் காட்ட இவர் விரும்பினர்; தியாகராச செட்டியாரும் உடனிருந்தால் மிகவும் நலமாயிருக்குமென்று நினைந்து ஒருநாள் அவருக்கு என்னைக்கொண்டு ஒரு கடிதம் எழுதுவித்தனர்; “வருகிற சனிக்கிழமையின் பிற்பகலில் திருப்பெருந்துறைப் புராணத்தில் நடந்த பாகத்தை ஸ்ரீலஸ்ரீ மகா ஸந்நிதானத்தின் திருச்செவி சார்த்த எண்ணியிருக்கிறேன். அக்காலத்தில் நீயும் உடனிருந்தால் திருப்தியாக இருக்கும். ஆதலால் சனிக்கிழமை சூரியோதய காலத்தில் கோட்டுமாங்குளக்கரையில் நான் பார்க்கும்படி நீ வந்துவிடவேண்டும். சிறவாதவற்றையும் சிறப்பிக்க வல்லவன் நீயல்லவா?” என்பது அக்கடிதத்திற் கண்ட விஷயம். சனிக்கிழமை காலையில் எப்படியும் அவர் வரக்கூடுமென்று நினைந்து காலையில் அநுஷ்டானத்தை முடித்துக்கொண்டு கோட்டுமாங்குளத்து வடகரையின் கீழைக்கோடியில் அவருடைய வரவைப் பார்த்துக்கொண்டே இவர் நின்றார்.

கடிதத்தைக் கண்ட செட்டியார் வெள்ளிக்கிழமை இராப் போசனத்தை முடித்துக்கொண்டு உடனே கும்பகோணத்திலிருந்து வண்டியில் ஏறிச் சூரியோதய காலத்திற் கோட்டுமாங்குளத்தின் வடகரையின் மேலைக்கோடியில் வருகையில் இவர் கிழக்கே நிற்பதைக் கண்டு வண்டியை விட்டு இறங்கி ஆவலோடு விரைந்து வருவாராயினர். அங்ஙனம் வந்த செட்டியார் இவருக்கு அஞ்சலி செய்து விட்டு உடனே கோபக்குறிப்புடன் என்னிடம் வந்து, “ஐயா எழுதச் சொன்னாலும் நீர் எழுதலாமா? சிறவாதவற்றையும் சிறப்பிக்க வல்லவன் நானா? ஐயா அவர்கள் அவசரமாகச் சொன்னாலும் யோசித்தல்லவோ நீர் எழுத வேண்டும்?” என்று மேலே மேலே கண்டிப்பாராயினர். இக்கவியரசர் அவரைப் பார்த்து, “ஏனப்பா அவரைக் கண்டிக்கிறாய்? நானே அப்படி எழுதச் சொன்னேன். நீ இடமறிந்து சந்தோஷிப்பதை நேரே பலமுறை பார்த்திருக்கிறேனே, நீ இருந்தால் ஸந்நிதானத்திற்கும் திருப்தியாயிருக்குமன்றோ?” என்று சொன்னார்.

செட்டியார், “சுவை நிரம்பிய உங்களுடைய நூல்களிற் சிறவாத பாகம் ஏதேனும் இருந்தாலன்றோ நான் சிறப்பிக்க வேண்டுவது? அது கிடையாதே. ‘ நீ வந்து கேட்டு மகிழ்ச்சியடைய வேண்டும்’ என்று எழுதியிருந்தால் எனக்குத் திருப்தியாக இருக்கும். போனது போகட்டும். இனிமேல் இப்படி எழுதச் சொல்லக் கூடாது” என்று கேட்டுக்கொண்டு பிள்ளையவர்களுடன் வீடு வந்து சேர்ந்தனர்.

பிற்பகலில் சுப்பிரமணிய தேசிகருக்கு முன்னே புராணம் படித்துக் காட்டப்பட்டது. கடவுள் வாழ்த்திற் சிலசில பாடல்களிற் புராணத்திலுள்ள சரித்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றைப் பற்றிச் சொல்லும்பொழுது இவர், *21 “நூனுதல் பொருளைத் தன்னகத்தடக்கி என்னும் பாயிர இலக்கணம் அமைய இவ்வாறு பாடப்பெற்றது. இங்ஙனமே காஞ்சிப் புராணம் முதலியவற்றின் கடவுள் வாழ்த்துக்களிற் காணப்படும். அவற்றைப் பின்பற்றித்தான் அடியேன் இங்ஙனம் செய்தேன்” என்றார்.

உடனிருந்த தியாகராச செட்டியார் முதலியவர்களும் வடமொழி வித்துவான்களும் பிறரும் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்கள். தேசிகர் மிகவும் பாராட்டியதுடன், “இந்நூலை விரைவில் முடித்தால் அரங்கேற்றுதற்குரிய ஏற்பாடு செய்யப்படும்” என்றும் கூறினார். அங்ஙனமே இவர் ஓய்வு நேரங்களிற் புராணச் செய்யுட்களை இயற்றி எழுதுவித்து வந்தார். செட்டியார் விடைபெற்று அடுத்த திங்கட்கிழமை காலையிற் புறப்பட்டு கும்பகோணம் சென்றார்.

பார்க்க வருபவர்கள்

பல செல்வர்களும் வித்துவான்கள் பலரும் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சிலதினமிருந்து ஸல்லாபஞ் செய்தற் பொருட்டுத் திருவாவடுதுறைக்கு வருவார்கள். சிலருடைய விருப்பத்தின்படி அவர்கள் செய்தனவாகப் பிறர்க்குத் தோற்றும்வண்ணம் புதிய செய்யுட்களைச் செய்து கொடுத்தும், சிலர் ஏதேனும் புதிய நூலொன்றைச் செய்து கொணர்ந்தால் அதைத் திருத்திக் கொடுத்துச் சிறப்புப் பாயிரமளித்தும், தாம் படித்த நூல்களில் உண்டான ஐயங்களை யாரேனும் வந்து வினாவினால் அவற்றைத் தீர்த்தும், இன்னும் அவர்களுக்கு ஆகவேண்டியவற்றைக் கவனித்தும் அனுப்புவது இவருக்கு அப்போது வழக்கமாக இருந்தது. பின்னும் நகரப் பள்ளிக்கூடங்களிலும் காலேஜ்களிலும் உள்ள தமிழ்ப் பண்டிதர்கள் தாங்கள் சொல்லவேண்டிய பாடங்களிற் கடினமானவற்றிற்குப் பொருள் தெரிந்து கொண்டு போவதற்கு விடுமுறை நாட்களில் வந்து வந்து கேட்டுவிட்டுத் திருப்தியுற்றுச் செல்வார்கள். அப்படியே கிராமப் பள்ளிக்கூடங்களிலுள்ள உபாத்தியாயர்களும் வந்து தமக்கு வேண்டிய நூல்களுக்குப் பொருள் கேட்டுத் தெரிந்துகொண்டு செல்வார்கள். பிள்ளையவர்களுக்கு ஓய்வில்லையென்று தெரிந்தால் சுப்பிரமணிய தேசிகர் படிக்க வேண்டியவர்களைத் தம்மிடம் வரச்செய்து தாமே பாடஞ் சொல்லித் தெளிவித்து அவர்களை அனுப்புவார்.

வருபவர்கள் பலவகையாராக இருத்தல் கூடும். அவர்களிற் பந்திபோஜனத்துக்கு உரியவர்களைப் பந்தியில் வைத்து உண்பித்தலும் ஏனையோரை அவரவருடைய பிரிவுக்குத் தக்கபடி வேறு வேறிடங்களில் தனித்தனியே வைப்பித்து ஆகாரஞ் செய்வித்தலும் இடமளித்தலும் பிறவும் ஆதீனகர்த்தருடைய ஆஞ்ஞையால் ஒழுங்காக நடைபெறும். அந்த அனுகூலத்தை உத்தேசித்தே சிலர் பாடங்கேட்பதற்கு வருவதுபோல் வந்து சில தினம் இருந்து செல்வார்கள்.

தம்மூர்களிற் பாடஞ்சொல்லுவோர் இல்லாமையாலும் திரவிய செளகரியம் இல்லாமையாலும் இவர் பாடஞ் சொல்லுதலைக் கேள்வியுற்று அடிக்கடி வந்து படிக்க வருவோர் சிலர். சில மாதங்களிருந்து வேண்டியவற்றைக் கேட்டுக்கொண்டு விடைபெற்றுப் போவோர் சிலர்.

வன்றொண்டரது ஞாபக சக்தி

கந்தபுராணப் பாடம் நடந்து வருகையில் அதிலுள்ள கயமுகனுற்பத்திப் படலத்தில் 70-ஆவது செய்யுளாகிய, “மாண்டவவ்வலியகலன்” என்ற செய்யுளுக்குப் பொருள் விளங்காமையால் இவர் நெடுநேரம் யோசனை செய்துவிட்டு, “வன்றொண்டர் இந்நூலை முன்பு பாடங்கேட்டதுண்டு. அவர் சிந்தித்தும் வைத்திருப்பார். அவர் வரும்பொழுது கேட்டால் விளங்கும்” என்றார். அவ்வாறே அவர் பின்பு ஒருசமயம் வந்தபொழுது, “கந்தபுராணத்திற் கயமுகனுற்பத்திப் படலத்தில் ஒரு சந்தேகம்” என்று சொல்லிவிட்டுப் பாடலின் முதலை இவர் சொல்லத் தொடங்குமுன்பே, “இன்ன செய்யுளோ?” என்று அச்செய்யுளின் முழுப்பாகத்தையும் சொல்லித் தாம் முன்பு கேட்டிருந்தபடி பொருளையும் அவர் கூறிவிட்டனர். மாணாக்கர்களெல்லாரும் அவருடைய ஞாபக சக்தியையும் பாடம் போற்றலையும் தெரிந்து வியந்தார்கள்.

என் தந்தையாருக்கு எழுதிய கடிதம்

அப்புராணத்தை நாங்கள் பாடம் கேட்டு வந்த காலத்தில் *22 காருகுடி என்னும் ஊரில் இருந்த என் தந்தையார் முடக்கு ஜ்வரத்தால் மிகவும் துன்பம் உற்றார்; “பிள்ளையவர்களிடம் படித்துக் கொண்டிருந்த ஒரு பிராமணர் அவர்களை விட்டுப் பிரிந்துபோனார்” என்று யாரோ ஒருவர் கூறியதை அவர் கேள்வியுற்று நான்தான் அங்ஙனம் பிரிந்து விட்டேனோவென்று ஐயமுற்றார். உடனே வந்து என்னைப் பார்க்க வேண்டுமென்ற விருப்பம் அதிகமாக இருந்தும் தேக அசௌகரியத்தால் அவருக்கு வரக் கூடவில்லை. கவலையினால் அசௌகரியம் அதிகரித்துவிட்டது. அதனால் உத்தமதானபுரத்தில் இருந்த என் சிறிய தந்தையாருக்குத் தம்முடைய தேக அசெளக்கியத்தைத் தெரிவித்ததோடு என்னுடைய நிலையைப் பற்றி நன்றாக விசாரித்து உடனே எழுத வேண்டுமென்று ஒரு கடிதம் எழுதினார், அவர் அக் கடிதத்தை ஓர் ஆள் வசம் திருவாவடுதுறைக்குக் கொடுத்தனுப்பினார். அதைக் கண்டவுடன் தகப்பனாரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் கவலையும் எனக்கு மிகுதியாக உண்டாயின. அவருடைய தேக அசெளக்கியத்தை நினைந்து வருந்தினேன்; எவ்வாறேனும் போய்ப் பார்க்கவேண்டு மென்றெண்ணிப் பிள்ளையவர்களை உத்தரவு கேட்டேன்.

என்னுடைய விருப்பத்தை யறிந்த இவர் துணையின்றி என்னை அனுப்பத் துணியாமல் எனக்குத் தக்க ஆறுதல் கூறி என் தந்தையாருக்கு ஒரு கடிதம் எழுதுவித்தார். அது வருமாறு:

உ
சிவமயம்.

"சாது குலோத்தம சாம்பவர்களாகிய ஐயரவர்களுக்கு அநேக தண்டம்.

"இவ்விடம் யாவரும் க்ஷேமம். சாமிநாத ஐயரும் க்ஷேமமாக இருக்கிறார். தாங்களும் குழந்தை முதலியவர்களும் க்ஷேமமாக இருக்கிற செய்திக்குக் கடிதம் வரைந்தனுப்ப வேண்டும்.

"தாங்கள் சரீர செளக்கியம் இல்லாமலிருந்து தலைக்கு ஜலம் போட்டுக்கொண்டதாகவும் அன்னம் செல்லாமலிருக்கிறதென்றும் *23 சின்னசாமி ஐயரவர்களுக்கு எழுதிய கடிதம் இவ்விடம் வந்து சேர்ந்தது; பார்வையிட்டோம். சாமிநாத ஐயர் மிகவும் கிலேசப்பட்டு, ‘இப்போதே போய் நான் பார்த்துக்கொண்டு வருவேன்' என்று தீவிரமாகப் பிரயாணப்பட்டார். அப்போது நீரும் நிழலும் இல்லாத காட்டு ராஜ்யத்தில் நிராதாரமாகப் போவது கூடாதென்று நான் தடுத்திருக்கிறேன். அப்படித் தடுத்திருந்தும் அவர் நீங்கள் என்ன சிரமப்படுகிறீர்களோவென்று சதா கவலையுள்ளவராகவே இருக்கிறார். ஆகையால் இந்தக் கடிதம் கண்டவுடனே உங்கள் தேக செளக்கியத்தைக் குறித்து ஒரு கடிதம் அனுப்புவதன்றியும் அவ்விடத்துக் காரியங்களைப் பார்த்துக் கொண்டு முன் கடிதத்தில் எழுதியபடியே வந்துசேர வேண்டும்.

"உங்கள் தேக செளக்கியத்தைக் குறித்துச் சீக்கிரம் கடிதம் அனுப்பிவிட்டால் நீங்கள் பத்து நாள் தாமதித்து வந்தாலும் வரலாம். 'சாமிநாதன் செளக்கியம் தெரிந்தால்தான் எனக்கு ஸெளக்கியமாகும்' என்று எழுதியிருக்கிறீர்களே. அவர் நிரம்பவும் செளக்கியமாக இருக்கிறார். அவரைக் குறித்து யாதொரு கவலையும் வேண்டாம். நான் இப்பொழுது திருவாவடுதுறையிலேயே இருக்கிறேன். காகிதமும் திருவாவடுதுறைக்கே அனுப்ப வேண்டுவது. 
*24............. ..............
இக்கடிதம் சாமிநாதையர் கையெழுத்து. ஆகையால் சீக்கிரம் பதிலனுப்ப வேண்டும்.

இங்ஙனம்
மீனாட்சிசுந்தரம்.
ஆங்கிரச ஆண்டு ஆவணி மாதம் 32.

இக் கடிதத்தைப் பார்த்தவுடன் என் தந்தையார், “உங்களுடைய அருமையான கடிதம் வந்து எனக்கு மிக்க ஆறுதலை விளைவித்தது. எனக்குள்ள அஸெளக்கியம் இதனால் சீக்கிரம் நீங்கிவிடுமென்று எண்ணுகிறேன். ஸெளக்கியமானவுடன் வந்து பார்க்கிறேன்” என்று இவருக்கு ஒரு பதில் எழுதிவிட்டுச் செளகரியப்படுத்திக்கொண்டு சில வாரங்களுக்குப் பின்பு திருவாவடுதுறைக்கு வந்தார்; என்னுடன் சில தினம் இருந்து பிள்ளையவர்களோடு சம்பாஷணை செய்துவிட்டு மனமுவந்து மீட்டும் மேற்கூறிய காருகுடிக்குச் சென்றார்.

‘உலகெலாம்’ என்னும் செய்யுளின் உரை

ஆங்கிரஸ வருஷம் கார்த்திகை மாதத்திற் பெரிய புராணப் பாடம் ஆரம்பிக்கப்பட்டது. தியாகராச செட்டியாரும் வந்து கேட்டு இன்புற்றனர். இயல்பாகவே மகா வைத்தியநாதையரும் அவர் தமையனார் இராமசாமி ஐயரும் மடத்திற்கு வந்திருந்தமையால் அவர்களும் சிலதினம் உடனிருந்து கேட்டு வருவாராயினர். அப்புராணத்தை நடத்தத் தொடங்கிய பொழுது மூலம் மட்டுமுள்ள சில அச்சுப் புத்தகங்களும் சில பாகத்திற்கு மட்டும் உரை எழுதப்பட்ட புத்தகம் ஒன்றும் வந்திருந்தன. “உலகெலாம்” என்ற செய்யுளுக்கு அந்த உரையாசிரியர் எங்ஙனம் பொருள் செய்திருக்கிறாரென்பதை அறிவதற்கு அதனுரையைப் படிப்பித்து இவர் கேட்டார். அச்செய்யுளின் நயத்தை அவ்வுரை நன்கு புலப்படுத்தவில்லை. ‘மலர் சிலம்படி’ என்பதற்கு இலக்கணப் பிழையாக மலர் போன்ற சிலம்படியென்று பொருள் எழுதப்பட்டிருந்தது. அதனை யறிந்து இவர் மனவருத்தமடைந்து, “மலர் சிலம்படி யென்றது வினைத்தொகை; அதற்கு மலர்ந்த சிலம்படி யென்பதுதான் பொருள். மலர்போன்ற சிலம்படியென்று பொருள் கொள்ள வேண்டுமானால், மலர்ச்சிலம்படி யென் றிருத்தல் வேண்டும். அப்படியிருத்தல் இங்கே பொருந்தாது” என்றார்; உலகெலாம் மலர் சிலம்படியென இயைக்க வேண்டுமென்றும் இப்பொருளுக்கு மேற்கோள் திருவாசகத்திலுள்ள, “தில்லை மூதூ ராடிய சேவடி, பல்லுயி ரெல்லாம் பயின்றன னாக” என்பதென்றும் எங்களுக்குச் சொன்னார். அந்த உரையைச் சுப்பிரமணிய தேசிகரிடத்தும் படித்துக் காட்டச் சொல்லவே கேட்டு அவரும் அதிருப்தியுற்றார். அந்த வருத்தம் மனத்தில் இருந்தே வந்தது; அதன் பொருளை யாவரும் எளிதில் அறிந்து கொள்ளச் செய்யவேண்டுமென எண்ணியே, சேக்கிழார் பிள்ளைத் தமிழை இவர் இயற்றுகையில் *25 “மாமேவு” என்னுங் காப்புச் செய்யுளில் விளக்கினர்; அச்செய்யுளிலுள்ள நான் காமடி முதலியவற்றால் இது விளங்கும்.

பெரிய புராணப் பாடத்தை நிறுத்தியது

பெரிய புராணத்திற் கண்ணப்ப நாயனார் புராணத்தைப் பாடங் கேட்டு வருகையிற் சில தினத்திற்குப் பின்பு எனக்கு முதலிற் கடுமையான ஜ்வரம் கண்டது. பின்பு பெரியம்மை (பனையேறியம்மை) பூட்டி விட்டமையால் தைமாத முதலில் என் அம்மானுடைய ஊராகிய சூரிய மூலைக்கு நான் செல்லும்படி ஏற்பட்டது. நான் சென்றதனால் மனவருத்தமுற்றிருந்த பிள்ளையவர்களுடைய நோக்கத்தை அறிந்த ஆதீனகர்த்தர், “சாமிநாதையர் செளக்கியமடைந்து வந்த பின்பே பெரிய புராணத்தில் எஞ்சிய பாகத்தைப் படிக்கலாம்” என்றார். அதனால் அப்பாடம் சில காலம் வரையில் நடைபெறவில்லை.

பல ஊர்களுக்குச் சென்றது

அதற்குமேல் இவர் தம்முடைய மாணாக்கர்களுடன் புறப்பட்டு திருவாரூர், கீழ்வேளூர், நாகபட்டினம், ஆவராணி, காரைக்கால், திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களுக்குச் சென்றார். தை மாதத்தில் இவர் திருவாவடுதுறைக்குத் திரும்புகையில் நீடாமங்கலத்துக்கு வரும்பொழுது இவருக்கு முடக்கு ஜ்வரம் கண்டு விட்டது. அதனால் துன்பம் உண்டானமையால் அவ்வூரிலும் அயலூர்களிலுமுள்ள சில கனவான்களின் உதவியினால் அது நீங்கும்வரையில் அங்கே தங்கியிருந்தார்.

ஒரு பாட்டிற்குப் பொருள் கூறியது

தமிழில் நல்ல பயிற்சி இல்லாமல் நூல்களுள் அங்கங்கே ஐயத்திற்கிடமான சில செய்யுட்களை மட்டும் மனனம் செய்து கொண்டு படித்த யாரையேனும் கண்டால் அந்தப் பாடல்களைச் சொல்லிப் பொருள் கேட்பது சிலருடைய வழக்கமென்பது அறிஞர்களுக்குத் தெரிந்திருத்தல் கூடும். அத்தகைய செய்யுட்களின் பொருளைத் தெரிந்துவைத்துக் கொண்டதனாலேயே எல்லா வித்துவான்களிலும் தாம் மேற்பட்டவர்களென்ற தருக்கு அன்னோருக்கு உண்டாகிவிடும். அதனால் தம்முடைய சில வினாக்களுக்கு விடை அளியாதவர்கள் தமிழ்வித்துவான்களல்லரென்று தாமே தீர்மானித்து விடுவார்கள். அங்ஙனம் அவர்கள் சொல்லக் கூடிய செய்யுட்கள்: *26 “வந்தெதிரே தொழுதானை’, “நஞ்ச மன்னவரை”, ஆயமா நாகர் “, *27 “மாதுலராகி வந்த ” என்பன முதலியவை.

அந்த வகையைச் சார்ந்த ஒருவர் இவருடைய வரவை அறிந்து இவர்பால் வந்து கேள்வி கேட்கத் தொடங்கினார். இவர் முகமாக எவ்வளவோ பல அரிய விஷயங்களைக் கேட்டு அறிந்து கொள்ளலா மென்ற எண்ணம் அவருக்கு உண்டாகவேயில்லை. ஏதேனும் இயற்கையாகவே படித்திருந்தாலல்லவோ அந்த எண்ணம் உண்டாகும்? அவர் கேட்ட ஒவ்வொரு வினாவிற்கும் இவர் எளிதில் விடையளித்து வந்தார். வந்தவர் தம்முடைய சரக்குக்களை ஒவ்வொன்றாக எடுத்துவிட்டார். பல செய்யுட்களுக்கும் இவர் பொருள் கூறி வருவதைக் கேட்ட அவர், அது காறும் மிக்க ஐயத்திற்கிடமாயிருந்ததும் அவராற் பொருள் அறிந்துவைக்கப்படாததுமாகிய,

(கட்டளைக் கலித்துறை)

*28 “காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே"

என்னும் ஒரு செய்யுளைக்கூறிப் பொருள் வினாவினார்.

இவர் அதிலே உள்ள காணிகளைக் கூட்டி, “காலைக் காட்டு மென்பது இதன் பொருள். கழுக்குன்றத்தை யடைந்தால் அத் தலம் சிவபெருமான் திருவடியைக் காணச் செய்யுமென்பது இதன் கருத்து. இது,

'பிணக்கிலாத பெருந்துறைப்பெரும் பித்தனே
............... என் வினை யொத்தபின்,
கணக்கிலாத்திருக் கோலநீ வந்து காட்டினாய்கழுக் குன்றிலே'

என்பதை நினைந்து பாடப் பெற்றது” என்று விடையளித்தார். கேட்ட அவர் வியந்து, “இதுவரையிலும் யாரும் இதற்குச் சரியாகப் பொருள் சொல்லவில்லை. கடினமான செய்யுளையே பொறுக்கி எல்லோரையும் கேட்டுக் கலங்கச் செய்து கொண்டு வரும் நானே தெரிந்துகொள்ளவில்லை. யாதொரு கவலையுமின்றி இதற்குப் பொருள் கூறிய தாங்கள் தெய்வப் பிறவியே” என்று பாராட்டிக் கூறி மகிழ்ந்து சென்றார்.

அவர் சென்றபின் இவர், “இப்படி ஒரு கூட்டத்தினர் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். இத்தகைய பாடல்களுக்குப் பொருள் கூறுவதுதான் உண்மையான புலமை யென்ற அபிப்பிராயத்தை அவர்கள் எப்பொழுதும் விட மாட்டார்கள்” என்றார். உடனிருந்த அவ்வூராரிற் சிலர், “இந்தத் துஷ்டன் எந்தத் தமிழ் வித்துவான் வந்தாலும் இப்படியே கேள்வி கேட்பது வழக்கம். சாதுவான சிலர் இவனுடைய படாடோபத்தில் மயங்கி அடங்கி விடுவார்கள். அதனால் இவனுடைய கொழுப்பு மிகுந்து வந்தது. இன்றைக்குத் தங்கள் முன் இவனுடைய கர்வம் அடங்கிற்று. எங்களுக்கு அது சந்தோஷமாகவிருக்கிறது” என்றார்கள் .

திருவாவடுதுறைக்கு மறுபடி வந்தது

அங்கேயுள்ளவருடைய விருப்பத்தின்படி இவர் மேனாப்பல்லக்கை உபயோகித்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வருவாராயினர். உடன் சென்ற மாணாக்கர்களும் தவசிப்பிள்ளைகளும் இவரை மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்துக்கொண்டு வந்தார்கள். இவருக்கு ஜ்வரம் வந்ததைக் கேள்வியுற்றுத் திருவாவடுதுறையிலிருந்து சென்றவர்களுடன் இவர் மாணாக்கராகிய சாமிநாத பண்டார மென்பவரும் வழியிற் சென்று பார்த்தனர்.

என்னைப் பற்றிய கவலை

அவரைப் பார்த்தவுடன் இவர், “சாமிநாதா, சாமிநாதையருக்குப் பெரியம்மை எந்த மட்டிலிருக்கிறது? தலைக்கு ஜலம் விட்டாயிற்றா? செளக்கியமாக இருக்கிறாரா?” என்று கேட்டனர். பண்டாரம், “நான் பார்க்கவில்லை; அதனால் அவரைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது” என்று கூறவே இவர், “அடிக்கடி சென்று அவரைப் பார்த்து வரும்படி சொல்லி அதற்காகத்தானே உன்னைத் திருவாவடுதுறையில் வைத்து விட்டு வந்தேன்? நீ கவனியாமலிருந்தது எனக்குச் சிறிதும் திருப்தியாக இல்லை” என்று சொல்லிவிட்டுத் திருவாவடுதுறைக்கு வந்தார்; வந்தவுடனே மேற்கூறிய சாமிநாத பண்டாரத்தோடு வேறொருவரையுஞ் சேர்த்து என்னுடைய நிலையை அறிந்து வரும்படி சூரியமூலைக்கு அனுப்பினர். அவர்கள் வந்து என்னைக் கண்டு கவலை தீர்ந்து, “உங்களுடைய தேகத்தின் நிலைமையை நன்றாக அறிந்து கொண்டு விரைவில் வந்து தெரிவிக்கும்படி சொன்னதன்றி ஏதாவது உங்களுக்கு ஆக வேண்டியிருந்தால் அதையும் தெரிந்து வந்து சொல்ல வேண்டுமென்றும் ஐயா அவர்கள் சொன்னார்கள். அவர்கள் உங்கள் விஷயமான கவலையோடேயே யிருக்கிறார்கள். சீக்கிரத்தில் நாங்கள் சென்று சொல்ல வேண்டும்” என்று சொன்னார்கள். உடனே நான், “இங்கே யாதொரு குறைவுமில்லை. என்னுடைய அம்மானவர்கள் என்னை நன்றாகக் கவனித்து வருகிறார்கள். கூடிய சீக்கிரத்தில் என் தேகநிலைமை நன்றாகச் செளக்கியமாகி விடும். ஆனவுடன் வந்து அவர்களைப் பார்த்து எனக்கு உள்ள விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ள எண்ணியிருக்கிறேன். இதைத் தெரிவிப்பதோடு எனக்கு உள்ள இடைவிடாத ஞாபகத்தையும் தெரிவியுங்கள்” என்று சொன்னேன். அப்பால் மிகவும் அவசரமாக அவர்கள் செய்தி சொல்லுதற்குத் திருவாவடுதுறைக்குப் போய்விட்டார்கள். அவர்களால் என்னுடைய நிலையைத் தெரிந்துகொண்ட இப்புலவர் பெருமான் சில தினங்களுக்கு ஒருமுறை என்னைப்பார்த்து வரும்படி யாரையேனும் அனுப்பி வந்தார். எனக்கு அது மிகவும் ஆறுதலாக இருந்தது.

அடிக்குறிப்பு மேற்கோள்கள்:

19.  அந்த எழுத்தாணி இன்னும் என்பாலுள்ளது.
20.  சந்திரன் உமாதேவியாருக்குரிய இடப்பாகத்துக் கண்ணாதலாலும், சூரியன் சிவபிரானுக்குரிய வலப்பாகத்துக் கண்ணாதலாலும் நிலவையும் வெயிலையும் அவ்விநாயகர் ஏற்றருளினமை அவ்விருவரது பார்வையையும் ஒருங்கே ஏற்றதைத் தெரிவிக்குமென்பது கருத்து.
21.  அது முதற்கொண்டுதான் நூல் நுதல்பொருள் கடவுள் வாழ்த்தில் அமைந்திருத்தலைக் கவனித்து நாங்கள் ஆராய்ச்சி செய்யத் தொடங்கினோம்.
22.  இவ்வூர், திருச்சிராப்பள்ளி ஜில்லா பெரும்புலியூர்த் தாலுகாவில் உள்ளது.
23.  இவர் என்னுடைய சிறிய தந்தையார்.
24.  கடிதத்தில் சிதைந்துள்ள பகுதி இது.
25. மாமேவு வான்பிறை முடிப்பிறை யிரண்டென்ன வாய்க்கடைத் தோற்றியவிரும்-
மருப்பிரண் டென்னவங் கைக்கோ டிரண்டென்ன மார்பின்முத் தாரமென்னப், பாமேவு பேருதர பந்தமென வரைசூழ் படாமெனத் தாளின் முத்தம் – பதித்தகழ லெனவிரவ மேலோங்கு பேருருப் பண்ணவனை யஞ்சலிப்பாம், ஏமேவு ஞானசபை யிறைவர்தம் மேனியி னிணங்குற வெழுப்புலகெலாம் – என்னுமறை யாதியாக் கொண்டவ ருயிர்க்கருளும் இயல்பனைத் துந்தெரித்து, நாமேவு மம்முதலொ டொன்றவினை யுருபுதொக நான்கனடி யாதிசெய்து – நாற்சீரி னானெறி விளக்கியொளிர் சேக்கிழார் நற்றமிழ்க் கவிதழையவே.” (சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.)

26.  கம்பராமாயணம்.
27.  திருவிளையாடற் புராணம்.
28.  இதிலுள்ள காணிகள் இருபது; இருபது காணி கொண்டது காலென்னும் எண்; காலென்பது இங்கே பாதத்தைக் குறிக்கிறது.

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s