-மகாத்மா காந்தி

ஐந்தாம் பாகம்
16. வேலைமுறைகள்
சம்பாரண் விசாரணையின் முழு விவரத்தையும் கூறுவதென்றால், சம்பாரண் விவசாயிகள் அச்சமயத்தில் இருந்த நிலைமையைப் பற்றிக் கூறுவதாகவே அது ஆகும். ஆனால் இந்த அத்தியாயங்களுக்கு அது பொருத்தம் இல்லாதது. சம்பாரண் விசாரணை, சத்தியம், அகிம்சை ஆகியவற்றில் ஒரு தைரியமான சோதனையேயாகும். அந்த நோக்கத்துடன் பார்க்கும்போது, எழுதத் தக்கவை என்று எனக்குத் தோன்றுகிறவைகளை மாத்திரமே நான் வாரந்தோறும் எழுதிக்கொண்டு வருகிறேன். இந்த விசாரணையைக் குறித்து மேலும் விவரமாக அறிய விரும்புவோர், ஹிந்தியில் ஸ்ரீ ராஜேந்திர பிரசாத் எழுதியிருக்கும் ‘சம்பாரண் சத்தியாக்கிரகம்’ என்ற நூலைப் பார்க்கவும். அதன் ஆங்கிலப் பதிப்பும் இப்பொழுது அச்சாகிக்கொண்டு வருகிறது என்பதை அறிகிறேன்.
இந்த அத்தியாயத்திற்கு உரிய விஷயத்தை இனிக் கவனிப்போம். கோரக் பாபு தம் வீட்டைக் காலிசெய்துவிட்டு, வேறிடத்திற்குச் செல்லும்படி செய்யாமல் அவர் வீட்டிலேயே இந்த விசாரணையை நடத்தி வருவது என்பது இயலாத காரியம். எங்களுக்குத் தங்கள் வீட்டை வாடகைக்குக் கொடுக்கும் அளவுக்கு மோதிகாரி மக்களுக்கு இன்னும் பயம் போய்விடவில்லை. என்றாலும், பிரஜ்கிஷோர் பாபு சாமர்த்தியமாக ஒரு வீட்டைப் பிடித்துவிட்டார். அதைச் சுற்றித் திறந்த இடம் நிறைய உண்டு. அவ்வீட்டிற்கு நாங்கள் மாறினோம்.
பணம் இல்லாமல் வேலையை நடத்திக்கொண்டு போவது என்பதும் சாத்தியமாக இல்லை. இது போன்ற வேலைக்குப் பண உதவி செய்யுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் வெளியிடும் வழக்கமும் இதுவரை இல்லை. பிரஜ்கிஷோரும் அவர் நண்பர்களும் முக்கியமான வக்கீல்கள். அவர்களே பணம் கொடுத்து வந்தார்கள். சமயம் நேர்ந்த பொழுதெல்லாம் நண்பர்களிடமிருந்தும் பெற்று வந்தனர். பணம் கொடுக்கக் கூடிய வசதியில் தாங்களும், தங்களைப் போன்றவர்களுமே இருக்கும்போது பண உதவி செய்யுமாறு பொதுமக்களை அவர்கள் எப்படிக் கேட்க முடியும்? அதுவே வாதம் என்று தோன்றியது. சம்பாரண் விவசாயிகளிடமிருந்து எந்தவிதமான பண உதவியையும் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று முடிவு செய்து கொண்டுவிட்டேன். ஏனெனில், தவறான அபிப்பிராயம் ஏற்படுவதற்கு அது நிச்சயம் இடம் கொடுத்துவிடும். இந்த விசாரணையை நடத்துவதற்காக என்று பண உதவி கோரிப் பொதுவாக தேச மக்களுக்கு வேண்டுகோள் வெளியிடுவதில்லை என்றும் உறுதி செய்துகொண்டேன். ஏனெனில், அவ்விதம் தேச மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தால், இது அகில இந்திய விஷயமாகவும், ராஜீய விஷயமாகவும் ஆகி விடக்கூடும். பம்பாயிலிருந்து நண்பர்கள் ரூ. 15,000 கொடுப்பதாகக் கூறினர். ஆனால், அவர்களுக்கு வந்தனம் கூறி, அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டேன். பிரஜ்கிஷோர் பாபுவின் உதவியைக் கொண்டு சம்பாரணுக்கு வெளியிலிருக்கும் பணக்காரர்களான பீகாரிகளிடம் இருந்து எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசூலித்துக் கொள்ளுவது, மேற்கொண்டும் தேவைப்பட்டால் ரங்கூனிலிருந்த என் நண்பர் டாக்டர் பி.ஜே.மேத்தாவிடம் கேட்பது என்று முடிவு செய்து கொண்டேன். எவ்வளவு தேவைப்பட்டாலும் அனுப்புவதாக டாக்டர் மேத்தா உடனே ஒப்புக்கொண்டார். இவ்விதம் பணத்தைப் பற்றிய கவலையே எங்களுக்கு இல்லாது போயிற்று. சம்பாரணில் வறுமை நிலைமைக்கு ஏற்ற வகையில் மிகவும் சிக்கனமாகவே செலவு செய்வது என்று நாங்கள் உறுதி கொண்டதால், பெருந்தொகை எங்களுக்குத் தேவைப்படுவதற்கும் இல்லை. உண்மையில், பெருந்தொகை எங்களுக்குத் தேவைப்படவில்லை என்பதையே முடிவிலும் கண்டோம். மொத்தத்தில் மூவாயிரம் ரூபாய்க்கு மேல் நாங்கள் செலவு செய்யவில்லை என்றே எனக்கு ஞாபகம். நாங்கள் வசூலித்ததில் சில நூறு ரூபாய்களை மீதப்படுத்தியும் விட்டோம்.
ஆரம்ப நாட்களில் என்னுடைய சகாக்கள் விசித்திரமான வகையில் வாழ்க்கையை நடத்தி வந்தனர். இதைக் குறித்து நான் இடைவிடாமல் அவர்களைப் பரிகாசம் செய்து வந்தேன். அந்த வக்கீல்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலைக்காரன், ஒரு சமையற்காரன் ஆகையால் ஒவ்வொருவருக்கும் தனித் தனிச் சமையல், இரவில் நடுநிசியில் கூடச் சாப்பிடுவார்கள். அவர்கள் தங்கள் செலவுக்குத் தாங்களே ஏற்பாடு செய்துகொண்ட போதிலும், கால நேர ஒழுங்கின்றி அவர்கள் நடந்துகொண்டு வந்தது எனக்கு ஒரே கவலையாக இருந்தது. நாங்கள் மிகவும் நெருங்கிய நண்பர்கள் ஆகிவிட்டதால், எங்களுக்குள் தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட்டுவிடும் என்பதற்கில்லை. நான் பரிகாசம் செய்ததை நல்ல உணர்ச்சியுடனேயே அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். முடிவில், வேலைக்காரர்களையெல்லாம் அனுப்பி விடுவது, எல்லாச் சமையல்களையும் ஒன்றாக்கிவிடுவது, குறிப்பிட்ட கால முறையை அனுசரிப்பது என்று ஒப்புக்கொண்டார்கள். அவர்கள் எல்லோருமே சைவ உணவு சாப்பிடுகிறவர்கள் அல்ல. ஆனால் இரண்டு வகைச் சமையல் என்றால் செலவு அதிகம் ஆகும். ஆதலால் சைவச் சமையலே வைத்துக் கொள்ளுவது என்றும் தீர்மானமாயிற்று. சாப்பாடு எளிமையாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவது அவசியம் என்றும் கருதப்பட்டது.
இந்த ஏற்பாடுகள், எங்கள் செலவை அதிக அளவுக்குக் குறைத்துவிட்டன. அதோடு ஏராளமான நேரமும் உழைப்பும் மீதமாயின. இவை இரண்டும் நாங்கள் மேற்கொண்டிருந்த வேலைக்கு மிகவும் தேவையாகவும் இருந்தன. எங்களிடம் வாக்குமூலம் கொடுக்க விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வந்தார்கள். அப்படி வந்தவர்களுடன் அவர்களுடைய தோழர்களும் ஏராளமாக வந்தனர். நாங்கள் இருந்த வீட்டைச் சுற்றியிருந்த திறந்தவெளியிலும் தோட்டத்திலும் இருக்க இடம் போதாத வகையில் பெருங்கூட்டம் இருந்து வந்தது. என்னைத் தரிசிப்பதற்கென்று வருபவர்களிடமிருந்து என்னைக் காப்பதற்காக என் சகாக்கள் எடுத்துக்கொண்ட முயற்சி அடிக்கடி பயன் பெறுவதில்லை. ஆகையால், குறிப்பிட்ட நேரத்தில் என்னைத் தரிசனத்திற்குக் காட்சிப் பொருள்போல் வைக்கவேண்டியிருந்தது. வாக்குமூலங்களை எழுதிக் கொள்ளுவதற்கு மாத்திரம் ஐந்து முதல் ஏழு தொண்டர்கள் வேண்டியிருந்தது. அப்படியும் வந்தவர்களில் சிலர் வாக்குமூலம் கொடுக்க முடியாமலே மாலையில் வீடு திரும்ப வேண்டியதாயிற்று. இந்த வாக்குமூலங்கள் எல்லாமே முக்கியமானவை அல்ல; முன்னால் சிலர் சொன்னவற்றையே சிலர் திரும்பத் திரும்பச் சொல்லியிருந்தார்கள். என்றாலும், தாங்களும் வாக்குமூலம் கொடுக்காவிட்டால், அம்மக்கள் திருப்தியடைய மாட்டார்கள். இவ்விஷயத்தில் அவர்களுடைய உணர்ச்சியை நான் பாராட்டினேன்.
வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொண்டவர்கள், சில விதிகளை அனுசரிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயியையும் சரியானபடி குறுக்கு விசாரணை செய்து, அந்தச் சோதனையில் திருப்திகரமாக இல்லாதவர்களின் வாக்குமூலங்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்விதம் செய்வதில் அதிகநேரம் செலவான போதிலும் பதிவான வாக்குமூலங்களில் பெரும்பாலானவை சிறிதும் ஆட்சேபிக்க முடியாதவைகளாயின.
இந்த வாக்குமூலங்களைப் பதிவு செய்யும் போது, ரகசிய போலீஸைச் சேர்ந்த ஓர் அதிகாரி எப்பொழுதும் அங்கே இருந்து கொண்டிருப்பார். அவர் அவ்விதம் அங்கில்லாதபடி நாங்கள் தடுத்திருக்க முடியும். ஆனால், ரகசிய போலீஸ் அதிகாரிகள் இருப்பதை நாங்கள் பொருட்படுத்தாமல் இருந்து விடுவதோடு, அவர்களை மரியாதையாகவும் நடத்தி, அவர்களுக்குத் தெரிவிக்கக்கூடிய தகவல்களையெல்லாம் தெரிவிப்பது என்றும் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் முடிவு செய்திருந்தோம். இதனால் எங்களுக்கு எந்தவிதமான தீங்கும் நேர்ந்து விடவில்லை. இதற்கு மாறாக, ரகசிய போலீஸ் அதிகாரிகளுக்கு முன்னாலேயே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது, குடியானவர்களை மேலும் பயம் இல்லாதவர்களாக்கியது. ரகசிய போலீஸைக் குறித்து விவசாயிகளுக்கு இருந்த அளவு கடந்த பயம் ஒருபுறத்தில் அவர்கள் மனத்தில் இருந்து விரட்டப்பட்டதோடு மற்றோர் புறத்தில் அந்த அதிகாரிகள் இருந்ததால் வாக்குமூலத்தை மிகைப்படுத்திக் கூறி விடாதிருப்பதற்கும் விவசாயிகளுக்கு அது இயற்கையாகவே ஒரு தடையாகவும் இருந்தது. மக்களை வலையில் சிக்கவைத்து விடுவது ரகசிய போலீஸ் நண்பர்களின் வேலை. ஆகவே, விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாயிற்று.
தோட்ட முதலாளிகளுக்கு எரிச்சலை உண்டாக்க நான் விரும்பவில்லை. ஆனால், கௌரவமாக நடந்துகொள்ளுவதன் மூலம் அவர்கள் மனத்தைக் கவர நான் விரும்பினேன். ஆகையால், எந்தத் தோட்ட முதலாளிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டனவோ அவர்களுக்கு எழுதுவது, அவர்களைச் சந்தித்துப் பேசுவது என்று வைத்துக் கொண்டேன். தோட்டக்காரர்கள் சங்கத்தினரையும் சந்தித்தேன். விவசாயிகளின் குறைகளை அவர்களுக்கு எடுத்துக் கூறியதோடு தோட்ட முதலாளிகளின் கருத்தையும் தெரிந்துகொண்டேன். இந்தத் தோட்ட முதலாளிகளில் சிலர் என்னை வெறுத்தார்கள்; சிலர் என்னை அலட்சியம் செய்தனர்; மற்றும் சிலரோ, என்னை மரியாதையுடன் நடத்தினார்கள்.
$$$
17. என் சகாக்கள்
பிரஜ்கிஷோர் பாபுவும் ராஜேந்திர பாபுவும் இணையே இல்லாத ஒரு ஜோடி. அவர்களுக்கு இருந்த அபார பக்தியின் காரணமாக, அவர்களுடைய உதவி இல்லாமல் நான் ஓர் அடியும் எடுத்துவைக்க முடியாமல் இருந்தது. அவர்களுடைய சீடர்கள் அல்லது சகாக்களான சம்பு பாபு, அனுக்கிரக பாபு, தரணி பாபு, ராம நவமி பாபு இவர்களும் மற்ற வக்கீல்களும் எப்பொழுதும் எங்களுடன் இருந்து வந்தனர். விந்தியா பாபுவும் ஜனக்தாரி பாபுவும் அப்போதைக்கப்போது வந்து எங்களுக்கு உதவி செய்வார்கள். இவர்கள் எல்லோரும் பீகாரிகள். இவர்களுக்கு இருந்த முக்கியமான வேலை விவசாயிகளிடமிருந்து வாக்குமூலங்களைப் பதிவு செய்துகொள்ளுவது.
பேராசிரியர் கிருபளானியும் எங்களோடு வந்து சேர்ந்து கொள்ளாமல் இருந்துவிட முடியாது. அவர் சிந்திக்காரர். என்றாலும், பீகாரில் பிறந்தவரை விட உண்மையான பீகாரியாக அவர் இருந்தார். வேறு மாகாணத்தில் குடியேறி, அந்த மாகாணத்திற்குத் தங்களை அர்ப்பணம் செய்துகொண்டு விடும் ஊழியர்கள் சிலரையே நான் கண்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்கள் சிலரில் ஆச்சாரிய கிருபளானியும் ஒருவர். வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று யாருமே உணரமுடியாதபடி அவர் செய்து வந்தார். என்னுடைய பிரதான வாசற்காப்பாளர் அவர். என்னைத் தரிசிப்பதற்கென்று வருபவர்களிடமிருந்து என்னைப் பாதுகாப்பதை அவர் அப்போதைக்குத் தமது வாழ்க்கையின் லட்சியமாகவும் முடிவாகவும் கொண்டிருந்தார். அவருக்கு வற்றாத நகைச்சுவை உண்டு. அந்த நகைச்சுவையின் உதவியைக் கொண்டும், சில சமயங்களில் தமது அகிம்சையோடு கூடிய மிரட்டல்களைக் கொண்டும் ஜனங்களைத் தடுத்து வந்தார். இரவானதும் அவர் தமது உபாத்திமைத் தொழிலை மேற்கொண்டு விடுவார். தமது சகாக்களுக்குத் தமது சரித்திரப் படிப்பையும் ஆராய்ச்சிகளையும் எடுத்துக் கூறி உற்சாகப்படுத்துவார். அங்கே வருகிறவர்களில் பயங்காளியாக இருக்கும் யாரையும் வீரர் ஆக்கிவிடுவார்.
எனக்கு அவசியமாகும்போது வந்து உதவி செய்வதாக வாக்குறுதி யளித்திருந்தவர்களில் மௌலானா மஜ்ருல் ஹக்கும் ஒருவர். மாதம் இரண்டொருமுறை அவர் வந்து எங்களைப் பார்த்துவிட்டுப் போவார். அவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஆடம்பர, ஆர்ப்பாட்ட வாழ்க்கைக்கும் இன்றுள்ள அவருடைய எளிய வாழ்க்கைக்கும் அதிக வித்தியாசம் உண்டு. அவர் எங்களுடன் பழகிய விதம், அவரும் எங்களில் ஒருவரே என்று நாங்கள் எண்ணும்படி செய்தது. ஆனால், புதிதாக வருபவர்களுக்கு அவருடைய நாகரிகப் பழக்கங்களைப் பார்த்துவிட்டு வேறு விதமான எண்ணமே ஏற்படும்.
பீகாரைப் பற்றிய அனுபவம் எனக்கு அதிகமானதும், கிராமக் கல்வி இருந்தாலன்றி நிரந்தரமான வகையில் வேலை எதுவும் செய்வது சாத்தியமில்லை என்ற உறுதியான முடிவுக்கு வந்தேன். விவசாயிகளின் அறியாமையோ மிகப் பரிதாபகரமாக இருந்தது. அவர்கள் தங்கள் குழந்தைகளை ஒன்று, இஷ்டம் போல் திரியவிட்டு வந்தார்கள்; இல்லையானால், காலையிலிருந்து இரவு வரையில், தினத்திற்கு இரண்டு செப்புக் காசுக்காக, அவுரித் தோட்டங்களில் உழைக்கும்படி செய்துவந்தார்கள். அந்த நாட்களில் ஓர் ஆண் தொழிலாளிக்கு இரண்டரை அணாவுக்கு மேல் இல்லை. நான்கு அணாச் சம்பாதிப்பதில் யாராவது வெற்றி பெற்று விடுவார்களானால், அவர் மிகுந்த அதிர்ஷ்டசாலி என்றே கருதப்படுவார்.
என்னுடைய சகாக்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டு ஆறு கிராமங்களில் ஆரம்பப் பாடசாலைகளை ஆரம்பிப்பது என்று முடிவு செய்தேன். கிராமத்தினருக்கு நாங்கள் விதித்த நிபந்தனைகளில் ஒன்று, உபாத்தியாயர்களுக்கு இருக்க இடத்திற்கும் சாப்பாட்டிற்கும் அவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும், மற்ற செலவுகளை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் என்பதாகும். கிராம மக்களிடம் பணம் என்பதே கிடையாது. என்றாலும், அவர்களால் உணவுப் பொருள்களைத் தாராளமாகக் கொடுக்க முடியும். உண்மையில் தானியங்களும் மற்றப் பொருள்களும் கொடுக்கத் தயாராயிருப்பதாக முன் கூட்டியே அவர்கள் தங்கள் சம்மதத்தைக் கூறி விட்டனர்.
ஆனால், உபாத்தியாயர்களுக்கு எங்கே போவது என்பதே பெரிய பிரச்னையாக இருந்தது. சம்பளம் என்பதே இல்லாமல் சாப்பாட்டுக்கு வேண்டியதை மாத்திரமே பெற்றுக்கொண்டு வேலை செய்ய, உள்ளூரில் உபாத்தியாயர்களைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருந்தது. சாதாரணமாக உபாத்தியாயர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்கவே கூடாது என்பது என் கருத்து. உபாத்தியாயர்களின் ஒழுக்க உறுதி தான் முக்கியமேயன்றி அவர்களுடைய இலக்கியத் தகுதி முக்கியம் அன்று.
ஆகவே, தொண்டு செய்ய முன்வரும் உபாத்தியாயர்கள் வேண்டும் என்று பொதுக்கோரிக்கை ஒன்றை வெளியிட்டேன். உடனே பலர் முன்வந்தார்கள். பாபா ஸாகிப் ஸோமன், புண்டலீகர் ஆகிய இருவரையும் ஸ்ரீ கங்காதர ராவ் தேஷ்பாண்டே அனுப்பினார். பம்பாயிலிருந்து ஸ்ரீமதி அவந்திகாபாய் கோகலே வந்தார். புனாவிலிருந்து ஸ்ரீமதி ஆனந்திபாய் வைஷம்பாயண் வந்தார். சோட்டாலால், சுரேந்திரநாத், என் மகன் தேவதாஸ் ஆகியவர்களை வருமாறு ஆசிரமத்திற்கு எழுதினேன். இதற்குள் மகாதேவ தேசாயும், நரஹரி பரீக்கும் தத்தம் மனைவியர்களுடன் என்னோடு இருந்து வேலை செய்ய வந்துவிட்டார்கள். கஸ்தூரிபாயும் இவ்வேலைக்காக அழைக்கப்பட்டாள். இவ்விதம் நல்ல தொண்டர் கூட்டம் சேர்ந்துவிட்டது. ஸ்ரீமதி அவந்திகா பாயும் ஸ்ரீமதி ஆனந்தி பாயும் போதிய அளவு படித்தவர்கள். ஆனால், ஸ்ரீமதி துர்க்கா தேசாய்க்கும் ஸ்ரீமதி மணிபென் பரீக்கும் குஜராத்தி மாத்திரமே எழுதப் படிக்கத் தெரியும். கஸ்தூரிபாய்க்கு அதுவும் தெரியாது. இப் பெண்கள் குழந்தைகளுக்கு ஹிந்தியில் எப்படிப் போதிப்பது?
இலக்கணமும், எழுதப் படிக்கவும், கணக்குப் போடவும் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது அவ்வளவு முக்கியமல்ல என்றும் சுத்தமாக இருக்க வேண்டியதையும், நல்ல பழக்க வழக்கங்களையும் அவர்களுக்குப் போதிப்பதே முக்கியம் என்றும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன். எழுத்துக்களைச் சொல்லிக் கொடுப்பதில் கூட, அவர்கள் நினைக்கிறபடி, குஜராத்தி, ஹிந்தி, மராத்தி மொழிகளின் எழுத்துக்களுக்கு வித்தியாசம் அதிகம் இல்லை. ஆரம்ப வகுப்புக்களைப் பொறுத்த வரையில், எழுத்துக்களையும் எண்களையும் சொல்லிக் கொடுப்பது கஷ்டமான காரியம் அல்ல என்றும் விளக்கினேன். இதன் பலன் என்னவென்றால், இந்தப் பெண்கள் சொல்லிக் கொடுத்த வகுப்புக்களே மிகவும் வெற்றிகரமானவைகளாக இருந்தன. இந்த அனுபவத்தினால் அவர்களுக்கு நம்பிக்கையும், வேலையில் சிரத்தையும் உண்டாயின. ஸ்ரீமதி அவந்திகா பாயின் பள்ளிக்கூடம், மற்ற பள்ளிக் கூடங்களுக்கு உதாரணமாக விளங்கியது. அவர் தமது வேலையில் முழு மனத்துடன் ஈடுபட்டார். தமக்கு இருந்த அரிய ஆற்றல்களை அவர் இவ்வேலையில் உபயோகித்தார். இப் பெண்களின் மூலம் கிராமப் பெண்களை நாங்கள் ஓரளவுக்கு அணுக முடிந்தது.
ஆனால், ஆரம்பக் கல்வியை அளிப்பதோடு நின்றுவிட நான் விரும்பவில்லை. கிராமங்களில் சுகாதாரம் மிகவும் சீர்கேடான நிலையில் இருந்தது; சந்துகளிலெல்லாம் ஒரே ஆபாசம். கிணறுகளைச் சுற்றிலும் ஒரே சேறும் கும்பி நாற்றமும். முற்றங்களோ சகிக்க முடியாத அளவுக்கு ஒரே ஆபாசமாக இருந்தன. சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் முதியவர்களுக்குப் போதனை மிகவும் அவசியமாக இருந்தது. எல்லோருமே பல வகையான சரும நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தனர். ஆகையால், சாத்தியமான வரையில் சுகாதார சம்பந்தமான வேலையைச் செய்து, மக்கள் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் புகுந்து வேலை செய்வது என்று முடிவு செய்தோம்.
இந்த வேலைக்கு டாக்டர்கள் தேவைப்பட்டனர். காலஞ்சென்ற டாக்டர் தேவின் சேவையைக் கொடுத்து உதவுமாறு இந்திய ஊழியர் சங்கத்தைக் கேட்டுக்கொண்டேன். நாங்கள் இருவரும் சிறந்த நண்பர்கள். ஆறு மாதங்கள் வந்திருந்து சேவை செய்வதாக உடனே ஒப்புக் கொண்டார். உபாத்தியாயர்களான ஆண்களும் பெண்களும் அவருக்குக் கீழிருந்து வேலை செய்ய வேண்டும்.
தோட்ட முதலாளிகளிடம் அம் மக்களுக்கு இருந்த குறைகள் சம்பந்தமாகவோ, ராஜீய விஷயங்களிலோ தலையிடவே வேண்டாம் என்று அவர்கள் எல்லோருக்கும் தெளிவாக அறிவித்திருந்தோம். ஜனங்களில் யாருக்காவது ஏதாவது குறை இருந்தால், அவர்களை என்னிடம் அனுப்பிவிட வேண்டும். தங்களுக்கு விதித்திருக்கும் வேலைக்கு அப்பாற்பட்டதில் தலையிடக் கூடாது என்றும் தெரிவித்திருந்தோம். இந்தக் கட்டளையெல்லாம் அற்புதமான விசுவாசத்துடன் அவர்கள் நிறைவேற்றி வைத்தார்கள். கட்டுத் திட்டங்களுக்கு மீறிய காரியம் ஒன்றாவது நடந்ததாக நினைவு இல்லை.
$$$
18. கிராமங்களுக்குள் பிரவேசம்
சாத்தியமான வரையில் ஓர் ஆண், ஒரு பெண் இவர்களின் மேற்பார்வையில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்தையும் வைத்தோம். இந்தத் தொண்டர்களே வைத்திய உதவி செய்து, சுகாதாரத்தையும் கவனித்துக் கொள்ள வேண்டும். கிராமப் பெண்களிடையே பெண்கள் மூலம் சேவை செய்ய வேண்டும்.
மிகவும் சாதாரணமானதே வைத்திய உதவி. விளக்கெண்ணெய், கொயினா, கந்தகக் களிம்பு ஆகியவையே தொண்டர்களிடம் கொடுத்த மருந்துகள். ஒரு நோயாளிக்கு அழலை படிந்திருந்தாலோ, மலச்சிக்கல் இருப்பதாக அவர் கூறினாலோ, அவருக்கு விளக்கெண்ணெய் கொடுக்க வேண்டும். ஜுரம் இருந்தால் முதலில் விளக்கெண்ணெய் கொடுத்துவிட்டுப் பிறகு கொயினா கொடுக்க வேண்டும். கட்டிச் சிரங்கோ, சொறி சிரங்கோ இருந்தால், பாதிக்கப் பட்டிருந்த இடத்தில் நன்றாக அலம்பிவிட்டு கந்தகக் களிம்பைத் தடவ வேண்டும். மருந்தை வீட்டுக்கு கொண்டுபோக நோயாளி யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. நோய் சிக்கலானதாக இருந்தால், டாக்டர் தேவ், வாரத்தில் குறிப்பிட்ட ஒரு நாளில் ஒவ்வொரு முக்கியமான கிராமத்திற்கும் போய் வருவார்.
இந்த எளிய வைத்திய உதவியை ஏராளமான மக்கள் பெற்று வந்தனர். கிராம மக்களுக்கு இருந்த நோய்கள் மிகச் சிலவே. நிபுணர்களின் உதவியின்றிச் சாதாரணமான சிகிச்சையினாலேயே குணமாகிவிடக் கூடியவை அவை. இதை நினைவில் வைத்துக் கொண்டால் எங்களுடைய வேலைத் திட்டம் விசித்திரமாகத் தோன்றுவதற்கில்லை. மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு இதனால் அற்புதமான வகையில் நன்மை ஏற்பட்டது.
சுகாதாரத்தைப் போதிப்பதே மிகவும் கஷ்டமாக இருந்தது. எதையும் தாங்களே செய்துகொள்ள மக்கள் தயாராயில்லை. வயல்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூட, தங்கள் குப்பைகளைத் தாங்களே கூட்டி எடுத்துச் சுத்தம் செய்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால், டாக்டர் தேவ் எளிதில் உற்சாகம் இழந்து விடக் கூடியவர் அன்று. மற்ற கிராமங்களுக்கெல்லாம் உதராணமாகும் வகையில் ஒரு கிராமத்தை அதிகச் சுத்தமாக வைத்திருப்பதில் அவரும் தொண்டர்களும் தங்கள் முழுச் சக்தியையும் உபயோகித்தனர். சாலைகளையும் வீட்டு வாசல்களையும் பெருக்கி சுத்தம் செய்தனர். கிணறுகளைச் சுத்தம் செய்து, அவற்றிற்குப் பக்கத்திலிருந்த குண்டு குழிகளையெல்லாம் மண் போட்டுச் சமப்படுத்தினார்கள். இவ்வேலைகளைச் செய்யத் தங்களுக்குள்ளே தொண்டர்களைத் திரட்டிக் கொள்ளுமாறு அன்போடு கிராமவாசிகளைத் தூண்டினர். சில கிராமங்களில் ஜனங்கள் வெட்கமடைந்து, தாங்களும் இவ்வேலையில் ஈடுபட்டு விடும்படி செய்தனர். மற்ற கிராமங்களிலோ, மக்கள் அதிக உற்சாகத்துடன் வேலை செய்தார்கள். என் மோட்டார் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குச் செல்லுவதற்கான சாலைகளைக் கூடப் போட்டுவிட்டார்கள்! இவ்விதமான இனிய அனுபவங்களுடன் மக்களின் அசிரத்தையினால் உண்டான கசப்பான அனுபவங்களும் இல்லாது போகவில்லை. இத்தகைய வேலைகளைச் செய்வது தங்களுக்கு அருவருப்பாக இருக்கிறதென்று கிராமவாசிகளில் சிலர் கூறிவிட்டதும் எனக்கு ஞாபகம் இருக்கிறது.
ஓர் அனுபவத்தைக் குறித்து இங்கே குறிப்பிடுவது மிகையாகாது. இதைப் பற்றி இதற்கு முன் நான் பல கூட்டங்களிலும் சொல்லி இருக்கிறேன். பீதிகர்வா என்பது ஒரு சிறிய கிராமம்; அங்கே எங்கள் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அதற்குப் பக்கத்திலுள்ள இன்னும் சிறிய ஒரு கிராமத்திற்கு நான் போயிருந்தபோது, சில பெண்கள் மிகவும் அழுக்காயிருந்த ஆடைகளை உடுத்தியிருந்ததைக் கண்டேன். அப் பெண்கள் தங்கள் ஆடைகளை ஏன் துவைத்துக் கட்டுவதில்லை என்று கேட்கும்படி என் மனைவியிடம் சொன்னேன். அவள் அவர்களோடு பேசினாள். அதில் ஒரு பெண் என் மனைவியைத் தனது குடிசைக்குள் அழைத்துச் சென்று பின்வருமாறு கூறினாள்: “வேறு ஆடைகள் வைத்திருக்கும் பெட்டியோ, அலமாரியோ இங்கே இருக்கிறதா பாருங்கள். எனக்கு இருப்பது நான் கட்டியிருக்கும் இந்தப் புடவை ஒன்றுதான்; இதை எப்படித் துவைப்பது? மகாத்மாவிடம் எனக்கு இன்னொரு புடவை கொடுக்கச் சொல்லுங்கள். அப்பொழுது தினமும் நான் குளித்துத் துணிகளைச் சுத்தமாக வைத்திருப்பதாக வாக்குறுதியளிக்க முடியும்.”
இந்தக் குடிசையிலிருந்த இந்த நிலைமை அபூர்வமானது அன்று. இந்தியக் கிராமங்கள் பலவற்றில் இதே போன்ற நிலைமையைக் காணலாம். இந்தியாவில் எண்ணற்ற குடிசைகளில் மக்கள், எந்த விதமான தட்டுமுட்டுச் சாமான்களோ, மாற்றிக் கட்டிக் கொள்ளுவதற்கு வேறு துணியோ இல்லாமல் தங்கள் மானத்தை மறைப்பதற்கு வெறும் கந்தையுடனேயே வாழ்ந்து வருகின்றனர்.
வேறோர் அனுபவத்தையும் இங்கே குறிப்பிடுகிறேன். சம்பாரணில் மூங்கிலுக்கும் நாணலுக்கும் குறைவே இல்லை. பீதிகர்வாவில் பள்ளிக்கூடத்திற்கு மூங்கிலையும் நாணலையுமே கொண்டே குடிசை போட்டிருந்தார்கள். யாரோ ஒருவர் – பக்கத்துத் தோட்ட முதலாளியின் ஆளாக இருக்கக்கூடும் – ஒரு நாள் இரவு குடிசைக்குத் தீ வைத்து விட்டார். எரிந்து போன குடிசைக்குப் பதிலாக மூங்கிலையும் நாணலையுமே கொண்டு மற்றோர் குடிசை கட்டுவது உசிதமன்று என்று கருதப்பட்டது. ஸ்ரீ சோமனும், கஸ்தூரிபாயுமே அப்பள்ளிக் கூடத்தை நடத்தி வந்தார்கள். பள்ளிக்கூடத்திற்குச் செங்கல் கட்டிடமே கட்டி விடுவதென்று ஸ்ரீ சோமன் முடிவு செய்தார். உழைப்பில் அவர் காட்டிய உற்சாகம் மற்றவர்களையும் தொற்றிக் கொண்டு விட்டதால், பலர் அவருடன் ஒத்துழைத்தார்கள். சீக்கிரத்திலேயே ஒரு செங்கல் வீடு தயாராகி விட்டது. இக்கட்டிடம் கொளுத்தப்பட்டுவிடும் என்ற பயமே பிறகு இல்லை.
இவ்விதம் தொண்டர்கள், தங்கள் பள்ளிக்கூடங்கள், சுகாதார வேலை, வைத்திய உதவி ஆகியவைகளினால் கிராம மக்களின் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றனர். அவர்களிடையே இத்தொண்டர்களுக்கு நல்ல செல்வாக்கும் ஏற்பட்டது.
ஆனால், இந்த ஆக்க வேலையை நிரந்தரமான அடிப்படையில் அமைத்துவிட வேண்டும் என்று எனக்கிருந்த நம்பிக்கை நிறைவேறவில்லை என்பதை வருத்தத்துடன் நான் ஒப்புக் கொள்ளவே வேண்டும். தொண்டர்கள் எல்லோரும் அங்கே கொஞ்ச காலத்திற்கே ஊழியம் செய்ய வந்தார்கள். ஊதியமின்றி நிரந்தரமாக அங்கிருந்து வேலை செய்ய பீகாரிலிருந்து தொண்டர்கள் கிடைக்கவில்லை. சம்பாரணில் என் வேலை முடிந்ததுமே, இதற்கு மத்தியில் எனக்காக உருவாகி வந்த வெளி வேலை, என்னை இழுத்துக்கொண்டு போய்விட்டது. என்றாலும், சம்பாரணில் சில மாதங்கள் செய்த வேலை ஆழ வேர்கொண்டு விட்டதால், அதன் பயனை இன்று கூட ஏதாவது ஒருவகையில் அங்கே காணலாம்.
$$$
19. கவர்னர் நல்லவராகும் போது
முந்திய அத்தியாயங்களில் நான் விவரித்திருப்பதைப் போல் ஒரு பக்கத்தில் சமூக சேவை நடந்துகொண்டிருக்க, மற்றொரு பக்கத்தில் விவசாயிகளின் குறைகளைப் பற்றிய வாக்குமூலங்களைத் தயார் செய்யும் வேலையும் வேகமாக நடந்துகொண்டு வந்தது. ஆயிரக்கணக்கான வாக்குமூலங்கள் பதிவாயின. இதனால், பலன் இல்லாது போகாது. வாக்கு மூலம் கொடுக்க விவசாயிகள் அதிகமாக வர வர, தோட்ட முதலாளிகளுக்குக் கோபம் அதிகமாயிற்று. என்னுடைய விசாரணைக்கு விரோதமாகத் தங்களால் ஆனதையெல்லாம் செய்ய அவர்கள் முற்பட்டனர்.
ஒரு நாள் பீகார் அரசாங்கத்தினிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. “உங்கள் விசாரணை நீண்ட காலத்திற்கு வளர்ந்துகொண்டு போய்விட்டது. அதை முடித்துவிட்டு, இப்பொழுது நீங்கள் பீகாரை விட்டுப் போய்விடலாமல்லவா?” என்ற முறையில் அக்கடிதம் இருந்தது. கடிதம் மரியாதையாகவே எழுதப் பட்டிருந்தாலும், அதன் பொருள் என்றும் தெளிவானதே.
இதற்கு நான் பதில் எழுதினேன். விசாரணை நீண்ட காலம் நடப்பதாகவே இருக்க முடியும் என்றும், மக்களுக்கு கஷ்ட நிவாரணம் அளிப்பதில் அது முடிந்தாலன்றி பீகாரை விட்டுப் போய்விடும் நோக்கம் எனக்கு இல்லை என்றும் அதில் கூறினேன். விவசாயிகளின் குறைகள் உண்மையானவை என்பதை ஒப்புக்கொண்டு, அவர்களுக்குக் கஷ்ட நிவாரணம் கிடைக்கும்படி அரசாங்கம் செய்யலாம். அல்லது சர்க்காரே உடனே இதில் விசாரணையை நடத்துவதற்கான அவசியத்தை விவசாயிகள் நிரூபித்துவிட்டார்கள் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ளலாம்; இவ்விதம் செய்வதன் மூலம் என் விசாரணையை அரசாங்கம் முடித்து விடலாம் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டேன்.
லெப்டினெட் கவர்னர் ஸர் எட்வர்டு கெயிட், தம்மை வந்து பார்க்குமாறு எனக்கு எழுதினார். விசாரணைக்கு ஏற்பாடு செய்ய விரும்புவதாக அவர் கூறியதோடு விசாரணை கமிட்டியில் ஓர் அங்கத்தினனாக இருக்கும்படியும் என்னை அழைத்தார். கமிட்டியின் மற்ற அங்கத்தினர்கள் இன்னார் என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். என் ஊழியர்களையும் கலந்து ஆலோசித்தேன். பிறகு ஒரு நிபந்தனையின் பேரில் கமிட்டியில் இருக்கச் சம்மதித்தேன். அந்த விசாரணை நடக்கும்போது என் சகாக்களைக் கலந்து ஆலோசித்துக் கொள்ள எனக்கு உரிமை இருக்க வேண்டும்; கமிட்டியில் அங்கத்தினனாக நான் இருப்பதனால், விவசாயிகளின் கட்சியை எடுத்துக் கூறி வாதிக்கும் உரிமையை நான் இழந்தவன் ஆக மாட்டேன் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இந்த விசாரணையின் பலன் எனக்குத் திருப்தியளிக்காது போகுமானால், பிறகு விவசாயிகள் என்ன நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு ஆலோசனை கூறவும், வழிகாட்டவும் எனக்கு உரிமை இருக்க வேண்டும். இவைகளே நான் கேட்ட நிபந்தனைகள். ஸர் எட்வர்டு கெயிட், இந்த நிபந்தனைகள் நியாயமானவை, சரியானவை என்று கூறி அவற்றை ஏற்றுக் கொண்டார். விசாரணையைக் குறித்தும் அறிக்கை வெளியிட்டார். காலஞ்சென்ற ஸர் பிராங்க் ஸ்லையை அக்கமிட்டியின் தலைவராக நியமித்தார்.
விவசாயிகளின் கட்சி நியாயமானது என்று கமிட்டியினர் கண்டனர். அவர்களிடமிருந்து தோட்ட முதலாளிகள் பணம் பறித்து வந்தது, சட்ட விரோதமானது என்று கமிட்டி கண்டு, அதில் ஒரு பகுதியைத் தோட்ட முதலாளிகள் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும் கமிட்டி சிபாரிசு செய்தது. சட்டத்தின் மூலம் ‘தீன் கதியா’ முறையை ரத்துச் செய்து விட வேண்டும் என்றும் கமிட்டி கூறியது. கமிட்டி, ஒருமனதான ஓர் அறிக்கையை வெளியிடும்படி பார்ப்பதிலும், கமிட்டியின் சிபாரிசுகளை அனுசரித்து விவசாயிகள் மசோதா நிறைவேறும்படி செய்வதிலும் ஸர் எட்வர்டு கெயிட் பெரும் பங்கு எடுத்துக்கொண்டார். அவர் உறுதியோடு இல்லாமல் இருந்திருந்தால், இவ்விஷயத்தில் தமது சாமர்த்தியம் முழுவதையும் உபயோகிக்காமல் இருந்திருந்தால், கமிட்டியின் அறிக்கை ஒரு மனதாக இருந்திருக்காது. விவசாயிகள் சட்டம் நிறைவேறியும் இருக்காது. தோட்ட முதலாளிகளுக்கிருந்த சக்தி அளவற்றது. கமிட்டியின் அறிக்கையையும் பொருட்படுத்தாமல், மசோதாவை விடாப்பிடியாக எதிர்த்து வந்தனர். ஆனால், ஸர் எட்வர்டு கெயிட் கடைசி வரையில் உறுதியுடன் இருந்தார். கமிட்டியின் சிபாரிசுகளை எல்லாம் நிறைவேற்றி வைத்தார்.
ஒரு நூற்றாண்டுக் காலம் இருந்துவந்த ‘தீன் கதியா’ முறை இவ்விதம் ஒழிக்கப்பட்டுவிட்டது. அதோடு, தோட்ட முதலாளிகளின் ராஜ்யமும் ஒழிந்தது. நெடுகவும் நசுக்கப்பட்டுக் கிடந்த விவசாயிகள், இப்பொழுது சுதந்திரமடைந்தனர். அவுரிக் கறையை அழித்து விடவே முடியாது என்ற மூட நம்பிக்கையும் பொய்யாகி விட்டது.
இன்னும் பல பள்ளிக்கூடங்களை வைத்து, சரியானபடி கிராமங்களில் புகுந்து வேலை செய்து, சில ஆண்டுகளுக்கு ஆக்க வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டு வரவேண்டும் என்பது என் ஆவல். இதற்கு வேண்டிய அடிப்படையும் போட்டாகிவிட்டது. ஆனால், இதற்கு முன்னால் அடிக்கடி நடந்திருப்பதைப் போல், என்னுடைய திட்டங்கள் நிறைவேறும்படி அனுமதிக்க கடவுளுக்கு விருப்பமில்லை. விதி வேறுவிதமாக முடிவுசெய்து, வேறிடத்தில் பணியை மேற்கொள்ள என்னை அங்கே விரட்டிவிட்டது.
$$$
20. தொழிலாளருடன் தொடர்பு
கமிட்டியில் என் வேலை முடிந்தும் முடியாமலும் இருக்கும்போதே ஸ்ரீ மோகன்லால் பாண்டியா, ஸ்ரீ சங்கர்லால் பரீக் இவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. கேடா ஜில்லாவில் விளைவு இல்லாது போய்விட்டது என்றும், நிலவரியைக் கொடுக்க முடியாமல் இருக்கும் விவசாயிகளுக்கு நான் வழிகாட்ட வேண்டும் என்றும் அவர்கள் எழுதியிருந்தார்கள். அந்த இடத்துக்கு நேரில் போய் விசாரிக்காமல் யோசனை கூறும் விருப்பமோ, ஆற்றலோ, தைரியமோ எனக்கு இல்லை.
அதே சமயத்தில் அகமதாபாத் தொழிலாளர் நிலைமையைக் குறித்து ஸ்ரீமதி அனுசூயா பாயிடமிருந்து ஒரு கடிதமும் வந்தது. தொழிலாளர் பெற்று வந்த கூலி மிகக் குறைவு; கூலி உயர்வு செய்யவேண்டும் என்று தொழிலாளர் நீண்ட காலமாகக் கிளர்ச்சி செய்துகொண்டு வந்தனர். முடிந்தால், அவர்களுக்கு வழிகாட்டி நடத்த வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. இந்தச் சிறு காரியத்தையும் அவ்வளவு தூரத்தில் இருந்துகொண்டு நடத்தும் துணிவு எனக்கு இல்லை. ஆகவே, முதல் வாய்ப்புக் கிடைத்ததுமே அகமதாபாத்துக்குப் போனேன். இந்த இரு விஷயங்களையும் சீக்கிரமாகவே முடித்துவிட்டு, சம்பாரணில் ஆரம்பிக்கப்பட்டிருந்த ஆக்க வேலையைக் கண்காணிக்க நான் அங்கே திரும்பிவிட முடியும் என்று நம்பியிருந்தேன்.
ஆனால், நான் விரும்பியவாறு காரியங்கள் துரிதமாக நடைபெறவில்லை. நான் சம்பாரணுக்குத் திரும்பவும் போக முடியாது போயிற்று. இதன் பலனாக பள்ளிக்கூடங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு விட்டன. என் சக ஊழியர்களும் நானும் எத்தனையோ ஆகாயக் கோட்டைகளைக் கட்டி வந்தோம். ஆனால் அவைகளெல்லாம் அப்போதைக்கு மறைந்து போய்விட்டன.
நாங்கள் கட்டிய ஆகாயக் கோட்டைகளில் ஒன்று, கிராம சுகாதாரத்துடன் கல்வியோடும் சம்பாரணில் பசுப் பாதுகாப்பு வேலையையும் கவனிப்பது என்பது. அங்கே பசுப் பாதுகாப்பும், ஹிந்திப் பிரச்சாரமும் மார்வாரிகளுக்கே தனி உரிமையான வேலையாக இருந்து வந்ததை என் பிரயாணங்களின் போது கண்டேன். நான் பேதியாவுக்குச் சென்றபோது, ஒரு மார்வாரி நண்பர், தமது தருமசாலையில் நான் தங்குவதற்கு இடம் கொடுத்திருந்தார். அவ்வூரிலிருந்த மற்ற மார்வாரிகள், தங்களுடைய கோசாலையை (பால் பண்ணையை) எனக்குக் காட்டி, அதில் எனக்குச் சிரத்தை ஏற்படும்படி செய்தனர். பசுப் பாதுகாப்பைக் குறித்து எனக்குத் திட்டமான எண்ணங்கள் அப்பொழுதே தோன்றிவிட்டன. இந்த வேலையைக் குறித்து அன்று ஏற்பட்ட எண்ணமே இன்றும் எனக்கு இருந்து வருகிறது. பசுப் பாதுகாப்பு என்பதில் கால்நடை வளர்ப்பு, பசுவின் இனத்தைச் சிறந்ததாக்குவது, காளை மாடுகளை ஜீவகாருண்யத்துடன் நடத்துவது, சிறந்த முறையில் பால் பண்ணைகளை அமைப்பது ஆகியவைகளையும் அடக்கியிருக்கின்றன என்பதே என் அபிப்பிராயம். இந்த வேலையில் தங்களுடைய முழு ஒத்துழைப்பையும் அளிப்பதாக மார்வாரி நண்பர்கள் வாக்களித்திருந்தார்கள். ஆனால் சம்பாரணில் நான் நிலைத்துத் தங்க முடியாது போய்விட்டதால், இத்திட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
பேதியாவில் கோசாலை இன்னும் இருக்கிறது. ஆனால், அது மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கக்கூடிய பால் பண்ணையாக இல்லை. சம்பாரண் காளை மாடுகளிடம் அவைகளின் சக்திக்கு மிஞ்சி, இன்னும் வேலை வாங்கியே வருகிறார்கள். ஹிந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுவோர், அப்பரிதாபகரமான பிராணிகளை இன்னும் அடித்துத் துன்புறுத்தித் தங்கள் மதத்திற்கே அவமானத்தை உண்டு பண்ணுகின்றனர்.
இந்த வேலை நிறைவேறாது போனது எனக்கு எப்பொழுதுமே மன வருத்தத்தை அளித்து வருகிறது. சம்பாரணுக்கு நான் போகும்போதெல்லாம் அங்குள்ள மார்வாரி, பீகாரி நண்பர்கள், கண்ணியமாக இதற்காக என்னைக் கண்டிக்கின்றனர். திடீரென்று கைவிட்டுவிட நேர்ந்த அவ்வேலைத் திட்டத்தை எண்ணி நானும் பெருமூச்சு விடுகிறேன்.
படிப்புச் சம்பந்தமான வேலை மாத்திரமே ஏதேனும் ஒரு வகையில் இன்னும் பல இடங்களில் நடந்துகொண்டுதான் வருகிறது. ஆனால், பசுப் பாதுகாப்பு வேலை நன்றாக வேர் கொள்ளவில்லை யாகையால், உத்தேசித்திருந்தபடி அவ்வேலை முன்னேறவில்லை.
கேடா விவசாயிகளின் பிரச்னை விவாதிக்கப்பட்டு வந்த சமயத்திலேயே அகமதாபாத் மில் தொழிலாளரின் விஷயத்தை நான் எடுத்துக்கொண்டு விட்டேன். நான் மிகவும் தரும சங்கடமான நிலையிலேயே இருந்தேன். ஆலைத் தொழிலாளரின் கட்சி மிகவும் நியாயமானது. ஸ்ரீமதி அனுசூயா பாய், தமது சொந்தச் சகோதரரும், மில் சொந்தக்காரர்களின் சார்பாக அப்போராட்டத்தை நடத்தி வந்தவருமான ஸ்ரீ அம்பாலால் சாராபாயை எதிர்த்துப் போராட வேண்டியதாயிற்று. ஆலை முதலாளிகளுடன் நான் சிநேகமாகப் பழகி வந்தேன். இதனாலேயே அவர்களுடன் போராடுவது அதிகக் கஷ்டமாக இருந்தது. அவர்களுடன் கலந்தாலோசித்தேன். இத்தகராறை மத்தியஸ்தர் முடிவுக்கு விட்டுவிடுமாறு அவர்களைக் கேட்டுக் கொண்டேன். ஆனால், மத்தியஸ்தர் முடிவுக்கு விடுவது என்ற கொள்கையை அங்கீகரிக்கவே அவர்கள் மறுத்துவிட்டார்கள்.
ஆகையால், வேலை நிறுத்தம் செய்யும்படி தொழிலாளருக்கு நான் ஆலோசனை கூற வேண்டியதாயிற்று. அப்படி அவர்கள் வேலைநிறுத்தம் செய்வதற்கு முன்னால், அவர்களுடனும் அவர்களுடைய தலைவர்களோடும் நான் மிகவும் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டேன். வேலைநிறுத்தம் வெற்றிகரமாவதற்கு உள்ள கீழ்க்கண்ட நிபந்தனைகளையும் அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்.
1. எந்த நிலைமையிலும் பலாத்காரத்தில் இறங்கிவிடவே கூடாது.
2. கட்டுப்பாட்டை மீறி வேலைக்குப் போகிறவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது.
3. பிறர் இடும் பிச்சையை எதிர்பார்த்திருக்கக் கூடாது.
4. வேலைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிப்பதாக இருந்தாலும் உறுதியுடன் இருக்க வேண்டும்.
யோக்கியமாக வேறு எந்த வகையிலாவது உடலை உழைத்து வேலைநிறுத்தக் காலத்தில் ஜீவனத்தை நடத்திக்கொள்ள வேண்டும்.
வேலைநிறுத்தத் தலைவர்கள், இந்த நிபந்தனைகளை நன்கு அறிந்துகொண்டு ஏற்றுக்கொண்டார்கள். தங்கள் கோரிக்கைகள் அங்கீகரிக்கப்படும் வரையில், அல்லது இத் தகராறை மத்தியஸ்தர் முடிவுக்கு விட மில்காரர்கள் சம்மதிக்கும் வரையில், தாங்கள் வேலைக்குத் திரும்புவதில்லை என்று தொழிலாளர்கள் பொதுக்கூட்டத்தில் பிரதிக்ஞை செய்துகொண்டனர்.
இந்த வேலைநிறுத்தத்தின் போதுதான் ஸ்ரீ வல்லபபாய் பட்டேலையும் ஸ்ரீ சங்கரலால் பாங்கரையும் நான் நன்றாக அறியலானேன். ஸ்ரீமதி அனுசூயா பாயை இதற்கு முன்னாலேயே எனக்கு நன்றாகத் தெரியும்.
சபர்மதி நதிக்கரையில் ஒரு மரத்தின் நிழலில் தினமும் வேலை நிறுத்தக்காரர்களின் பொதுக்கூட்டத்தை நடத்தி வந்தோம். இக்கூட்டங்களுக்குத் தொழிலாளர் ஆயிரக்கணக்கில் வருவார்கள். என்னுடைய பேச்சில், அவர்களுடைய பிரதிக்ஞையைக் குறித்தும், அமைதியையும் சுயமதிப்பையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பைப் பற்றியும் அவர்களுக்கு ஞாபகமூட்டி வந்தேன். இத்தொழிலாளர்கள் தினமும் நகரின் தெருக்களில், ‘பிரதிக்ஞையை அனுசரியுங்கள்’ என்று எழுதிய கொடியுடன் அமைதியாக ஊர்வலம் வருவார்கள்.
வேலை நிறுத்தம் இருபத்தொரு நாள் நடந்தது. வேலைநிறுத்தம் நடந்து கொண்டிருந்தபோது, அப்போதைக்கப்போது ஆலை முதலாளிகளைச் சந்தித்துத் தொழிலாளருக்கு நியாயத்தைச் செய்யும்படி கேட்டுக் கொண்டேன். “எங்களுக்கும் ஒரு பிரதிக்ஞை உண்டு” என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் மேலும் கூறியதாவது: “எங்களுக்கும் தொழிலாளருக்கும் இருக்கும் உறவு, பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உள்ள உறவைப் போன்றது. ஆகவே, மூன்றாமவர்கள் இதில் தலையிடுவதை நாங்கள் எவ்வாறு சகிக்க முடியும்? மத்தியஸ்தத்திற்குதில் எங்கே இடமிருக்கிறது?”
$$$