ஆரியரும் தமிழரும்: சுவாமி விவேகானந்தரின் சில குறிப்புகள்

-பெ.சு.மணி

கடந்த ஒரு நூற்றாண்டாக தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்திவரும் ஒரு மாபெரும் மாயை,  ‘ஆரிய- திராவிட இனவாதம்’. இந்த மாபெரும் பொய் தொடங்கிய காலத்திலேயே இதன் அபாயத்தை உணர்ந்து எச்சரித்திருக்கிறார் சுவாமி விவேகானந்தர். இது தொடர்பாக பாரதி ஆய்வாளர் அமரர் திரு. பெ.சு.மணி அவர்களின் கட்டுரை இங்கே....

வரலாற்றாய்வாளராகவும் கூடப் பொலிவுற்ற சுவாமி விவேகானந்தரின் ‘Aryans  and Tamilians’ எனும் கட்டுரை, ராமகிருஷ்ணர் இயக்க இதழ்களில் ஒன்றான ‘பிரபுத்த பாரதா’ எனும் ஆங்கில மாத இதழில் 1901 ஜனவரியில் வெளிவந்தது.  இந்தக் கட்டுரை  ‘ஆரியரும் தமிழரும்’  என்று தமிழாக்கம் செய்யப்பெற்று வெளிவந்துள்ளது.

இந்தத் தலைப்பில் சுவாமி எழுதியது ஏன் என்பது ஆய்விற்குரியது. பண்டிதர் டி.சவேரிராயன், எம்.ஆர்.ஏ.எஸ்.(1854-1923) என்பவர் அவர் காலத்தில் புகழ்பெற்ற தமிழ் இன, பண்பாட்டு ஆய்வாளராகத் திகழ்ந்தார்.  இவர் திருச்சிராப்பள்ளி அர்ச்.சூசையப்பர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.  ‘Tamil Archealogical Society’ எனும் தொல்பொருளாய்வுக் கழகத்தை நிறுவி அதன் சார்பில் ‘Tamil Antiquary’ எனும் மாத இதழையும் இரு மொழிகளில் (ஆங்கிலம், தமிழ்) 1902 முதல் நடத்தி வந்தார்.

இவர் ‘The Light of Truth or Siddanta Deepika’ எனும் ஆங்கில இதழில் ‘The Admixture of Aryans with Tamilian’ எனும் தலைப்பில் சில மாதங்கள் தொடர்ந்து எழுதி வந்தார்.  முதல் கட்டுரை 1900 அக்டோபரில் வெளிவந்தது.

இந்த ஆங்கில இதழைத் தொடங்கியவர் அக்காலத்தில் சைவ சித்தாந்தப் பெரும்புலவரான ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளை, பி.ஏ, பி.எல். (1864-1920). ஆங்கில இதழுடன் தமிழில் ‘உண்மை விளக்கம் அல்லது சித்தாந்த தீபிகை’ எனும் பெயரிலும் நடத்தினார்.  இவ்விரு இதழ்களும் 1897 பிப்ரவரி 9-ல் வெளிவந்தன.

பண்டைத் தமிழ், சைவ சமயத் தமிழ், சைவ சித்தாந்தம் முதலானவற்றிற்கு பேரியக்கமே நடத்தியவர் நல்லசாமிப் பிள்ளை.  இவர் 1897இல் திருவல்லிக்கேணியில் ‘கேசில் கர்னான்’ எனும் மாளிகையில் (ஐஸ் ஹவுஸ்- இன்றைய விவேகானந்தர் இல்லம்) சிகாகோ மாவீரரான சுவாமி விவேகானந்தரைச் சந்தித்து உரையாடியுள்ளார்.  சிகாகோ சர்வமத சபையில் சுவாமிஜி நிகழ்த்திய சாதனையைப் பாராட்டி சென்னையில் நடைபெற்ற  பொதுக்கூட்டத்தில் சுவாமிஜியை சைவ பக்தி இயக்கத்தைத் தொடக்கி வைத்த திருஞானசம்பந்த சுவாமிகளுடன் ஒப்பிட்டு மகிழ்ந்தார்.  கொழும்பு விவேகானந்தர் சொஸைட்டியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இவர், சுவாமி விவேகானந்தருக்கு ‘சித்தாந்த தீபிகை’ஆங்கில இதழ்களை அனுப்பியுள்ளார்.  அவ்வாறு அனுப்பப் பெற்ற 1900 அக்டோபர் மாத இதழில் முற்கூறிய சவேரிராயன் கட்டுரை வெளிவரத் தொடங்கியது.

‘சித்தாந்த தீபிகை’ பத்திரிகையையும், கட்டுரையையும், கட்டுரையாசிரியரைப் பற்றியும் சுவாமிஜி தமது கட்டுரையில் குறிப்பிட்டு எழுதியதாவது:

“அறிவற்ற இந்த ஆரவாரமும் பகையும் ஏற்பட்டுக்கொண்டு இருக்கும்போதே பண்டிதர் டி.சவேரிராயன் இப்பகையை ஒழிப்பதற்கு உரிய ஒரே ஒரு வழியை,  நியாயமான அறிவுள்ள வழியை கடைபிடித்து வருவது மகிழ்ச்சிக்குரியதாகும்.  அருமையான ஆற்றலை அறிவற்ற, பொருளற்ற, சச்சரவுகளில் வீணாக்குவதற்குப் பதிலாக மேல்நாட்டு மொழி நூல் ஆவேசத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள குழப்பத்தை விலக்குவற்கும், தென்னிந்தியாவிலுள்ள சாதிப் பிரச்னையை மிகவும் நல்ல முறையில் அறிவதற்கும் வேண்டிய வழியைக் காட்டுவதற்கும் ‘சித்தாந்த தீபிகை’ என்னும் பத்திரிகையிலே ‘தமிழரோடு ஆரியர் கலப்பு’ என்னும் தலைப்பில் வரும் கட்டுரைகள் வாயிலாக முயன்று வருகிறார்”.

ஆரிய – திராவிட இனவாதம், பிராமணர் –  பிராமணரல்லாதார் சாதிவாதம் தமிழகத்தில் பரவியதை சுவாமிஜி கண்டும் கேட்டும், இக்கட்டுரைக்கு முன்பும், தமது மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளார்.

1893-iல் திருவனந்தபுரம் கிளம்பிய தத்துவப் பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, சுவாமி விவேகானந்தரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பெற்றார்.  அப்பொழுது சுந்தரம்பிள்ளை, தம்மை இந்து சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரு திராவிடனாகக் கருதுவதாக சுவாமி விவேகானந்தரிடம் கூறியதாக ஒரு செய்தியுள்ளது.  மற்றொரு சமயத்தில் தனது நண்பர் பேரறிஞர் வெ.ப.சுப்பிரமணிய முதலியாருக்கு எழுதிய கடிதத்தில் ‘திராவிட இனத்தில் பூத்த நறுமலர், வேளாளர்’ என்று சுய சாதிப்பற்றுடன் சுந்தரனார் குறிப்பிட்டுள்ளார்.  சமஸ்கிருத மொழி எதிர்ப்பு, பிராமணீய எதிர்ப்பு முதலானவையும் சுந்தரனார் எழுத்துக்களில் வெளிப்பெற்றுள்ளன.

கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் எனும் அத்வைத வேதாந்தியை தனது குருவாகக் கொண்ட திருவனந்தபுரம் கல்லூரி தத்துவப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளையிடம் சுவாமி விவேகானந்தர் ஆரியர் – திராவிடர் இனப் பிரச்னையை அறிந்தார்.  பெரும் புலமை பெற்ற சுந்தரனார், இனப் பகையையுணர்விற்கு ஆட்பட்டுவிட்டாரே என்ற தமது வருத்தத்தை சுவாமி விவேகானந்தர் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

1897 -இல் சென்னை, திருவல்லிக்கேணி ‘கேசில் கர்னான்’ மாளிகையில் தன்னைச் சந்தித்த  சைவசிந்தாந்தப் பிரசார முரசாக விளங்கிய ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளையிடம்  சைவ சித்தாந்த இயக்கத்தைக் குறித்து சுவாமிஜி அறிந்து கொண்டார்.

1897  பிப்ரவரியில் சென்னையில் ‘எதிர்கால இந்தியா’ எனும் தலைப்பில் ஆற்றிய பேருரையில் தமிழகத்தில் பரவி வந்த ஆரியர் – திராவிடர் இனவாதம், பிராமணர் – பிராமணரல்லாதவர் வாதம் பற்றிய தமது கருத்துக்களை நடுநிலையில் நின்று சுவாமி விவேகானந்தர் சாற்றியுள்ளார்.  இந்த இரு வாதங்களினால், ‘சக்தி வாய்ந்த இந்தியாவின் படைப்பு பாதிக்கப்பட விடக் கூடாது’ என்று எச்சரித்துள்ளார் சுவாமி விவேகானந்தர்.

இத்தகையச் சிந்தனையோட்டத்தின் வீச்சுகளை சுவாமிஜியின் ‘ஆரியரும் – தமிழரும்’ எனும் கட்டுரையில் காண்கிறோம்.  இக்கட்டுரையில் கூறப்பெற்றுள்ள பின்வரும் கருத்து அந்த வீச்சுகளில் ஒன்றாகும்.

‘தெரிந்தோ தெரியாமலோ, ஆரிய இனத்தைச் சார்ந்த மக்கள் தங்களுக்கு அனுகூலமான பல உரிமைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள் என்பது  உண்மைதான்…  ஆரியரைப் பற்றிக் கூறப்படுகின்ற கொள்கையிலே இருக்கிற குற்றங்களையும் அக்கொள்கையால் விளைந்துள்ள தீமைகளையும் அமைதியோடு அறவே நீக்க வேண்டுவது தென்னிந்தியாவின் நலத்திற்கு மிகவும் அவசியமாகிறது”.

இவ்வாறு  வலியுறுத்திய சுவாமி விவேகானந்தர், அக்காலத்தில் தமிழர் பெருமை அங்கீகரிக்கப்பட எழுப்பப்பெற்ற குரலின் நியாயத்தை ஏற்றுக்கொண்டு குறிப்பிட்ட பின்வரும் கருத்து,  தமிழியல் ஆய்வாளர்கள் பலர் பார்வைக்கு புலனாகாமல் போய்விட்டது:

“அவ்வாறு நீக்கி, ஆரிய இனமே தோன்றுவதற்குக் காரணமான மிகச் சிறந்த தாய் இனங்களாய் விளங்கியவற்றிலே ஒன்றான, புகழ் படைத்த தமிழர்களது பழம் பெருமையை அறிவதால் விளையும் நியாயமான, தன் மதிப்பை ஏற்படுத்த வேண்டுவது மிகவும் அவசியமாகிறது”.

தமிழ் நாகரிகத்தின் தொன்மை பற்றிய பெருமிதத்தை இதே கட்டுரையின் தொடர்ச்சியில் சுவாமிஜி பின்வருமாறு பேசியுள்ளார்: 

“அறிந்த நாகரிகங்களில் மிகப் பழமையான நாகரிகத்தினரான தமிழ் பேசி வந்த முன்னோர்களைப் பற்றிப் பெருமைப்படுகிறோம்”.

சுவாமிஜியின் இந்தக் கருத்தின் உருவாக்கத்திற்கு பண்டிதர் சவேரிராயன் கட்டுரை ஒரு காரணமாகும்.  பண்டிதர் சவேரிராயன் பற்றிய பின்வரும் குறிப்பில் சுவாமிஜி கூறியதாவது:

“இந்திய நாகரிகத்தின் தந்தை வடமொழி பேசும் இனம் என்றால், அந்த இந்திய நாகரிகத்தின் சிறந்த தாயாகிய தமிழ் இனத்தின் கலாசாரத்தைச் சரியானபடி ஆராய்ந்து அறிவதற்கான ஆரம்ப வேலையை அவர் மேற்கொண்டிருப்பதாக நாம் மகிழ்ச்சி அடைகிறோம்”.

சவேரிராயன் தமது கட்டுரையில் “The Tamilians who were akin to the ancient Akkadians of Elam and Chaldes, the first and most civilized nation in the ancient world” என்று குறிப்பிட்டதை சுவாமி விவேகானந்தர் தமது கட்டுரையில் பின்வருமாறு அங்கீகரித்துள்ளார்.

“ஆதிகாலத்துத் தமிழர்கள் தான்  அக்காடோ சுமேரிய இனத்தைச் சார்ந்தவர்கள் என்ற கொள்கையை அவர் தைரியமாக முன்னணிக்குக் கொண்டு வருவதும் மிகுந்த மகிழ்ச்சிக்குரியது”.

இதன் தொடர்பாக சவேரிராயன் மேலும் கூறியதாவது: “Moreover the native house of the Tamilians was not in Central Asia but in Western Asia”.

சுவாமிஜி கூறியுள்ள பின்வரும் கருத்தும், சவேரிராயன் கருத்தைத் தழுவியதாகும்:

“எகிப்தியர் குறிப்பிடுகின்ற பண்ட் நிலம் நமது மலபார் நாடு தான்.  அதுமட்டுமல்ல, எகிப்தியர்கள் முற்றிலுமாக மலையாள நாட்டை விட்டு வெளியேறிக் கடல் கடந்து சென்று, நைல் நதியில் முகத்துவாரம் வழியாக வடக்கிலிருந்து தெற்கே சென்று குடியேறினர்; அவர்கள் தங்கள் பண்டைய இடத்தை ‘பாக்கியவான்களின் நாடு’ என்று கருதினார்கள் என்பதை நாம் குறிப்பிட விரும்புகிறோம்”.

சவேரிராயன் எழுதியதாவது: Neverthless, the Southern Bharata was also, in ancient days, named ‘pandu’ as recorded in the ancient Egyptian rulers believed themselves to have proceeded. The Egyptians held the Pandu a holy land “.

வேத கால ரிஷிகளான அத்தி, கன்வர், விசுவாமித்திரர் முதலானோர் ஆரிய இனத்தினர் அல்லர்.  தமிழ் இனத்தினர் என்று சவேரிராயன் கருதினார்.  இத்தகைய கருத்துக்களை சுவாமிஜி ஏற்காததை பின்வருமாறு அறிகிறோம்:

“வேதங்களில் உள்ள பெயர்கள் மற்றும் இனங்களைப் பற்றி அவர் மிகைபடக் கூறும் பல விளக்கங்களை நாம் ஒப்புக் கொள்ளவில்லை”.

வேதகால ஆய்வு சிக்கல்களும், பிரச்னைகளும் நிறைந்தது.  எனவே சுவாமி விவேகானந்தர், “பண்டிதர் சவேரிராயன் ஈடுபட்டிருப்பது சிரமமான பணி” என்பதையும் குறிப்பிடுகிறார்.

மனோன்மணீயம் சுந்தரம்பிள்ளை, ஜே.எம்.நல்லசாமிப் பிள்ளை ஆகியோரை சுவாமிஜி சந்தித்திருந்தாலும், அவர்கள் பெயர்களைக் குறிப்பிடாமல், பண்டிதர்  டி.சவேரிராயன் பெயரையும் அவருடைய ஆய்வையும் குறிப்பிட்டு மறு ஆய்வு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.  அது மட்டுமல்ல, சவேரிராயனின் முயற்சி மேலும் வளர்த்தெடுக்க வேண்டியது என்பதையும் பின்வருமாறு விளக்கியுள்ளார், சுவாமிஜி:

“இந்த முயற்சி சரியான வழியிலேயே செல்கிறது.  தமிழர்களது மொழிகளையும், சம்ஸ்கிருத,  இலக்கிய, தத்துவ, மத நூல்களில் காணும் தமிழ் அம்சங்களையும் இன்னும் நன்றாக ஆராய்வதான விளக்கமான, பொறுப்பு மிக்க வேலைகள் தொடரும் என்பது நிச்சயம்.  தமிழ் மரபில் சொற்களைத் தாய்மொழியாகப் பயில்பவர்களை விட வேறு யார் இந்த பணிக்குத் தகுதியானவர்கள்?”
  • நன்றி: பாரதி மணி – அக்டோபர் 2012

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s