பாஞ்சாலி சபதம்- 1.1.11

-மகாகவி பாரதி

‘சொந்த மகனை இகழ்ந்து பிறரது மகன்களைப் போற்றும் தந்தையர் உன்னைப் போல உலகில் யாருமில்லை” எறு தன தந்தையைத் தூற்றும் துரியன், சூதுக்கழைத்து பாண்டவரை வெல்ல விரும்புவதை வெளிப்படுத்துகிறான். மகாகவி இப்பாடலில் காட்டும் தர்க்க நயங்கள் கவனிக்கத் தக்கவை...

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.11. துரியோதனன் தீ மொழி

வேறு

பாம்பைக் கொடியென் றுயர்த்தவன்-அந்தப்
      பாம்பெனச் சீறி மொழிகுவான்-‘அட!
தாம்பெற்ற மைந்தர்க்குத் தீதுசெய்-திடும்
      தந்தையர் பார்மிசை உண்டுகொல்!-கெட்ட
வேம்பு நிகரிவ னுக்குநான்;-சுவை
      மிக்க சருக்கரை பாண்டவர், அவர்
தீம்புசெய்தாலும் புகழ்கின்றான்,-திருத்
      தேடினும் என்னை இகழ் கின்றான்.       86

”மன்னர்க்கு நீதி யொருவகை;-பிற
      மாந்தர்க்கு நீதிமற் றோர்வகை”-என்று
சொன்ன வியாழ முனிவனை-இவன்
      சுத்த மடையனென் றெண்ணியே,-மற்றும்
என்னென்ன வோகதை சொல்கிறான்;-உற
      வென்றும் நட்பென்றும் கதைக்கிறான்,-அவர்
சின்ன முறச்செய வேதிறங் கெட்ட
      செத்தையென் றென்னை நினைக்கிறான்;       87

‘இந்திர போகங்கள் என்கிறான்,-உண
      வின்பமும் மாதரின் இன்பமும் இவன்
மந்திர மும்படை மாட்சியும்-கொண்டு
      வாழ்வதை விட்டிங்கு வீணிலே-பிறர்
செந்திருவைக் கண்டு வெம்பியே-உளம்
      தேம்புதல் பேதைமை என்கிறான்;மன்னர்
தந்திரந் தேர்ந்தவர் தம்மிலே-எங்கள்
      தந்தையை ஒப்பவர் இல்லைகாண்!       88

‘மாதர்தம் இன்பம் எனக்கென்றான்;-புவி

.மண்டலத் தாட்சி அவர்க்கென்றான்,-நல்ல
சாதமும் நெய்யும் எனக்கென்றான்,-எங்கும்
      சாற்றிடுங் கீர்த்தி அவர்க்கென்றான்;-அட
ஆதர விங்ஙனம் பிள்ளைமேல் வைக்கும்
      அப்பன் உலகினில் வேறுண்டோ?-உயிர்ச்
சோதரர் பாண்டவர் தந்தைநீ-குறை
      சொல்ல இனியிட மேதையா!       89

‘சொல்லின் நயங்கள் அறிந்திலேன்,-உனைச்
      சொல்லினில் வெல்ல விரும்பிலேன்;-கருங்
கல்லிடை நாருரிப் பாருண்டோ?-நினைக்
      காரணங் காட்டுத லாகுமோ?-என்னைக்
கொல்லினும் வேறெது செய்யினும்,-நெஞ்சில்
      கொண்ட கருத்தை விடுகிலேன்;-அந்தப்
புல்லிய பாண்டவர் மேம்படக்-கண்டு
      போற்றி உயிர்கொண்டு வாழ்கிலேன்;       90

‘வாது நின்னோடு தொடுக்கிலேன்;-ஒரு
      வார்த்தை மட்டுஞ்சொலக் கேட்பையால்:-ஒரு
தீது நமக்கு வாராமலே-வெற்றி
      சேர்வதற் கோர்வழி யுண்டு,காண்!-களிச்
சூதுக் கவரை யழைத்தெலாம்-அதில்
      தோற்றிடு மாறு புரியலாம்;-இதற்
கேதுந் தடைகள் சொல் லாமலே-என
      தெண்ணத்தை நீகொளல் வேண்டுமால்.’       91

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s