பாஞ்சாலி சபதம் – 1.1.12

-மகாகவி பாரதி

பாண்டவரை சூதுக்கு அழைக்கலாம் என்ற மகனின் சொற்கேட்டு திகைத்த திருதராஷ்டிரன்,  ‘இது சந்திரகுலத்தில் உதித்த உனக்கு உகந்ததல்ல’ என்கிறார். சதி செய்து வெல்லுதல் வீரமல்ல என்றும் அறிவுரை கூறுகிறார்- செவிடன் காதில் ஊதும் சங்கு போல.

முதல் பாகம்

1.1. அழைப்புச் சருக்கம்

1.1.12. திரிதராட்டிரன் பதில்

வேறு

திரிதராட்டிரன் செவியில்-இந்தத்
      தீமொழி புகுதலுந் திகைத்து விட்டான்;
‘பெரிதாத் துயர் கொணர்ந்தாய்;-கொடும்
      பேயெனப் பிள்ளைகள் பெற்று விட்டேன்;
அரிதாக் குதல்போலே-அமர்
      ஆங்கவ ரொடுபொரல் அவலம் என்றேன்;
நரிதாக் குதல்போலாம்-இந்த
      நாணமில் செயலினை நாடுவனோ?       92

”ஆரியர் செய்வாரோ?-இந்த
      ஆண்மை யிலாச்செயல் எண்ணுவரோ?
பாரினில் பிறருடைமை-வெஃகும்
      பதரினைப் போலொரு பதருண்டோ!
பேரியற் செல்வங்களும்-இசைப்
      பெருமையும் எய்திட விரும்புதியேல்,
காரியம் இதுவாமோ?-என்றன்
      காளை யன்றோ?இது கருதலடா!       93

‘வீரனுக் கேயிசைவார்-திரு
      மேதினி எனுமிரு மனைவியர்தாம்,
ஆரமர் தமரல்லார்-மிசை
      ஆற்றிநல் வெற்றியில் ஓங்குதியேல்,
பாரத நாட்டினிலே-அந்தப்
      பாண்டவ ரெனப்புகழ் படைத்திடுவாய்;
சோரர்தம் மகனோ நீ?-உயர்
      சோமன்ற னொருகுலத் தோன்றலன்றோ?       94

‘தம்மொரு கருமத்திலே-நித்தம்
      தளர்வறு முயற்சி மற்றோர்பொருளை
இம்மியுங் கருதாமை-சார்ந்
      திருப்பவர் தமைநன்கு காத்திடுதல்,
இம்மையில் இவற்றினையே-செல்வத்
      திலக்கணம் என்றனர் மூதறிஞர்
அம்ம, இங்கிதனை யெலாம்-நீ
      அறிந்திலை யோ!பிழை யாற்றல் நன்றோ?       95

‘நின்னுடைத் தோளனையார்-இள
      நிருபரைச் சிதைத்திட நினைப்பாயோ?
என்னுடை யுயிரன் றோ?-எனை
      எண்ணிஇக் கொள்கையை நீக்குதியால்!
பொன்னுடை மார்பகத் தார்-இளம்
      பொற்கொடி மாதரைக் களிப்பதினும்
இன்னும்பல் இன்பத்தினும்-உளம்
      இசையவிட் டேஇதை மறந்திடடா!’       96

$$$

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s